Saturday, May 29, 2004

வெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது

J.N.தீக்ஷித் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரஜேஷ் மிஸ்ரா பதவியை ராஜினாமா செய்ததும் இப்பொழுதைய அரசு இவரை நியமித்துள்ளது. வைகோ தீக்ஷித் பதவியில் அமர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எங்கோ செய்தி வெளியாகியுள்ளது போலும். இன்று தி ஹிந்துவில், வைகோ அப்படியொன்றும் தான் எதிர்ப்பை வெளியிடவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். இன்று வைகோ, இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.

[பிற்சேர்க்கை:] தி ஹிந்து செய்திப்படி வைகோ விடுதலைப்புலிகள் மீதான தடை இருக்கக்கூடாது என்பது தனது தனிப்பட்ட எண்ணம் என்றும், மத்திய அரசு தடையை நீக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். நாளடைவில் மத்திய அரசின் எண்ணம் மாற்றம் அடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு, இந்திய அரசு Multi Disciplinary Monitoring Agency (MDMA)யை நியமித்திருந்தது. ஜெயின் கமிஷனின் பரிந்துரையின் பேரில் MDMA ஆகஸ்டு 1998இல் நியமிக்கப்பட்டது. அவ்வப்போது அதன் காலம் முடிவடையும் நேரத்தில் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும். அதுபோல் வரும் மே 31 அன்று காலாவதியாகவிருந்த MDMAவை நீட்டிக்கக் கோரியிருந்தார் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங். MDMA நீட்டிக்கப்படுவதால் திமுகவுக்கு எந்த பயமுமில்லை என்கிறார் தயாநிதி மாறன். MDMAவை நீட்டிக்கக் கோரியதில் எந்த உள்ளெண்ணமும் கிடையாது, வருடா வருடம் நான், பிரனாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோர் அத்வானியிடம் இந்தக் கோரிக்கையை வைத்துக்கொண்டுதான் இருந்தோம் என்கிறார் அர்ஜுன் சிங்.

வைகோவுடனான இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்முகம்.

இந்தியாவின் இலங்கை தூதர் நிருபம் சென் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவால் தடை செய்யப்பட்டிருப்பதால் தாம் (தூதரகம்) நேரிடையாக புலிகளுடன் தொடர்பு கொள்ள மாட்டோம் என்றும், அதனால் வடக்கிலும், கிழக்கிலும் புணர்நிர்மான வேலைகள் இலங்கை அரசு மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் சொல்லியுள்ளார். ஆனால் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடங்களில் தங்கள் மூலமாக மட்டுமே புணர்நிர்மான வேலைகள் செய்ய அனுமதிக்க முடியும் என்று சொல்லியுள்ளனர்.

நட்வர் சிங் பற்றிய எனது முந்தைய பதிவு

தமிழ் செம்மொழியானால்?

நான் நேற்று கேட்டிருந்த கேள்விக்கு மெய்யப்பன் பதில் கொடுத்துள்ளார்.

எனக்கு இன்னமும் சில சந்தேகங்கள் வருகின்றன. மெய்யப்பன் பதிவில் பார்த்த மணவை முஸ்தஃபா பேட்டியிலிருந்து:

1. "முதலில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்படும். இதனால், தமிழ் பண்பாடு, இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அதிகம் நடக்கும்." - இந்திய அரசாங்கம் ஒரு மொழியை செம்மொழி என்று அறிவித்து விட்டால், உலகப் பல்கலைக் கழகங்களில் தானாகவே இவையெல்லாம் நடக்கத் தொடங்கி விடுமா? ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு. சில நாட்கள் முன்னர் யேல் பல்கலைக் கழகம் தமிழ்ப்படிப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் தமிழ் பற்றிய ஆராய்ச்சி நடக்கிறது. சமஸ்கிருதம் அளவிற்கு இல்லையென்றாலும், அதற்கடுத்த நிலையில் தமிழ் உள்ளது. நாளை இந்திய அரசு தெலுங்கை செம்மொழி என்று அறிவித்தால் அதனால் திடீரென்று யாரும் தெலுங்கை தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடப் போவதில்லை என்றே தோன்றுகிறது.

செம்மொழியாக அறிவித்தால் மட்டும் போதாது. (அல்லது, அறிவிக்கத் தேவையே இல்லை?) மனிதவள மேம்பாட்டுத் துறை (HRD) தமிழுக்கென பணத்தைச் செலவிட்டு, முக்கியமான உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் ஒரு தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவிக்கு endowment அளிக்களாம். தமிழக அரசும், தன் பங்குக்கு சில பல்கலைக்கழகங்களில் இந்த வேலையைச் செய்யலாம். ஒரு பல்கலைக் கழகத்திற்கு ஒரு பேராசிரியர் பதவிக்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட US$100,000 செலவாகும் என நினைக்கிறேன். உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் தன் செலவில் மத்திய அரசும், தமிழக அரசும் தமிழில் அச்சாகும் ஒவ்வொரு புதிய புத்தகத்தின் பிரதியையும் வழங்கலாம்.

வெளி நாட்டில் ஏதேனும் மாணவர் தமிழில் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்தால், அம்மாணவருக்கான அனைத்து உதவிகளையும் வழங்கலாம். அவர் தமிழகம் வந்துபோகத் தேவையான பண உதவிகளை வழங்கலாம்.

பணவசதி படைத்த தமிழ் ஆர்வலர்களும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

2. "இப்போது கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்றவை தொடர்பான ஆய்வுகள் சமஸ்கிருதத்தை அளவுகோலாகக் கொண்டு செய்யப்படுகின்றன. அளவுகோலைப் பொறுத்துதான் முடிவுகள் அமையமுடியும். தமிழ்நாட்டில் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களை வைத்து சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் வந்தது என்று அறிவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் செம்மொழி ஆக்கப்படும் போது தமிழ் அளவுகோலாக மாறும். இதனால், நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உருவாகும்." இது நம்பத்தகுந்ததாகவே இல்லை. இப்பொழுதிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் படிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் குறைபடவே செய்கின்றனர் என்னும் தொனி தெரிகிறது. 'தமிழ் செம்மொழி' எனும் ஓர் அறிவிப்பிலே இதெல்லாம் மாறிவிடும் என்றா நினைக்கிறார் முஸ்தஃபா?

===

மெய்யப்பனின் பதிவில் இதைவிட அதிகமான பல செய்திகள் உள்ளன. முக்கியமாக தமிழ் ஆராய்ச்சிக்கென அதிகத் தொகை செலவிடப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. மற்றபடி அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளுக்கு முன்னாலேயே தமிழ் தோன்றி, இன்றும் வழக்கத்தில் உள்ளது எனும் உண்மை தமிழ் செம்மொழியானாலும், இல்லாவிட்டாலும் எல்லோரும் அறிவர்.

நாம் வெறும் பட்டங்கள், பதவிகள் எனும் வெற்று விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்துகிறோமோ என்று நினைக்கிறேன். செம்மொழி என்று அறிவித்துவிட்டாலே போதுமா? நம் மொழி உலக அளவில் பேசப்பட என்ன செய்யவேண்டும் என்று விளக்கமாக யாராவது செயல்திட்டம் போடுகின்றனரா? தமிழக அரசும், மத்திய அரசில் இருக்கும் தமிழக உறுப்பினர்களும் இதுபற்றி விளக்கம் கொடுப்பார்களா, இல்லை சாதித்து விட்டோம் அன்று அடுத்த பிரச்சினையை நோக்கிப் போய்விடுவார்களா?

Friday, May 28, 2004

தமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்

United Progressive Alliance - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தம் குறைந்தபட்ச பொதுச்செயல்திட்டத்தை அறிவித்துள்ளது. அதில் தமிழ் செம்மொழியாக்கப்படும் என்று வருகிறது.

தமிழக அரசியலில் ஆளாளுக்கு இதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இனி ஆகி விடும். அதன்பிறகு, அதனால் என்ன நன்மை என்று தெரிந்து கொள்வோம்.

அடுத்து கன்னடர்களும், கவின் தெலுங்கர்களும் (தெலுங்கானாக்கர்களும் சேர்த்து!) எம்மொழியையும் செம்மொழியாக்குங்கள் என்று கேட்கப்போகின்றனரோ?

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் இந்திய கிரிக்கெட்டிற்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றி.

ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்

தி ஹிந்துவிலிருந்து செய்தி

கார்பன்-14 வழியாக காலக்கணிப்பு வரும்வரை பொறுத்திருப்போம் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

Wednesday, May 26, 2004

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகள்

செய்தி தி ஹிந்துவிலிருந்து

2,800 வருடங்களுக்கு முந்தைய மனித உடல்களும், எழுத்துக்களும் ஆதிச்சநல்லூரில் கிடைத்திருப்பதாக அகழ்வாராய்ச்சித் துறையினர் கூறியுள்ளனர்.

இதில் முக்கியமானது இந்த 'எழுத்துக்கள்' ஆகும். இவை தமிழ் பிராமி வடிவில் உள்ளன என்று சொல்கின்றனர்.

நான் முன்னர் ஐராவதம் மகாதேவனது பேச்சு ஒன்றைப் பதித்திருந்தேன். [ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு] மகாதேவன், இந்தியாவில் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்கள் அசோகர் காலத்துக்கு முந்தையதாக எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தார். மேலும் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகள் அசோகன் பிராமியிலிருந்து வடிவமைக்கப்பட்டது என்றும் சொல்லியிருந்தார். அசோகரின் காலம் 250 BC ஆகும். எனவே தமிழ் பிராமி அதற்குப் பிந்தையது என்றாகிறது.

சென்ற வாரம் [17 மே 2004], எழும்பூரில், இலங்கை அகழ்வாராய்ச்சித் துறையின் முன்னாள் இயக்குனர் செரான் தெரன்யகளே பேசினார். அதற்குப் போயிருந்தேன். அப்பொழுது இலங்கையில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் பற்றியும், அங்கு 2500 வருடங்களுக்கு முந்தைய எழுத்தாணி போன்ற எழுதுபொருள் கண்டெடுக்கப்பட்டதைப் பற்றியும் குறிப்பிட்டார். நேற்றைய கண்டுபிடிப்பைப் பற்றி தெரன்யகளே இவ்வாறு கூறுகிறார்: "ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்புகள் மிக மிக முக்கியமானவை. இலங்கையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிட்டத்தட்ட 75 மண்பானைத் துண்டுகள் எழுத்துக்களுடன் கிடைத்தன. ரேடியோ-கார்பன் முறையில் காலத்தைக் கணிக்கையில் அவை 600 BC க்கும் 500 BC க்கும் இடைப்பட்டது என்று தெரிய வந்தது. இப்பொழுதைய கண்டுபிடிப்பையும் சேர்த்துப் பார்க்கையில் தென்னாசியாவில் எழுத்துக்கள் எப்பொழுது ஆரம்பித்தன என்பது பற்றிய புதிய உண்மைகள் புலனாகும்."

அமைச்சரவை மாற்றங்கள்

தி ஹிந்து செய்தி

கருணாநிதி போராட்டத்திற்குப் பிறகு கப்பல் போக்குவரத்துத் துறையை TR பாலுவுக்கு வாங்கிக் கொடுத்து விட்டார். SS பழனிமாணிக்கம் நிதித்துறையில் வருமானத்திற்கான இணை அமைச்சராகிறார். இந்த இரண்டு துறைகளும் தங்களுக்கு மிகவும் அவசியமென கருணாநிதி சொல்கிறார்.

எலியும், பூனையுமான மணி சங்கர் அய்யரும், EVKS இளங்கோவனும் ஒரே துறையில் அடித்துக் கொண்டிருக்காமல் இளங்கோவனை பெட்ரோலியத்திலிருந்து வர்த்தகம்/தொழில் துறைக்கு மாற்றியுள்ளனர். இதை முதலிலேயே செய்திருக்கலாம்.

சந்தோஷ் மோஹன் தேவ், தஸ்லிமுத்தீன் ஆகிய இருவருக்கும் ஒரே அமைச்சரவையாக கனரகத் தொழில்துறை வழங்கப்பட்டிருந்தது. இதில் தஸ்லிமுத்தீன் மீது பல வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தஸ்லிமுத்தீன் விவசாயம், உணவுத் துறைகளுக்கான இணை அமைச்சர் ஆகிறார்.

முந்தைய அமைச்சரவை பற்றிய பதிவு

Tuesday, May 25, 2004

மின்மஞ்சரி இதழ் அறிமுகம்

உத்தமம் (INFITT) அமைப்பின் மின்னிதழாக மின்மஞ்சரி, மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. மேற்கண்ட சுட்டியில் இருப்பது 2004ஆம் ஆண்டிற்கான முதலாம் இதழ்.

Monday, May 24, 2004

புதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்

தி ஹிந்து செய்தி

நிதி அமைச்சர் - பி.சிதம்பரம்
உள்துறை - ஷிவ்ராஜ் பாடில்
பாதுகாப்பு - பிரணாப் முகர்ஜி
வெளியுறவு - நட்வர் சிங்
வர்த்தகம்/தொழில் துறை - கமல் நாத்
மனிதவள மேம்பாடு - அர்ஜுன் சிங்
பாராளுமன்ற விவகாரம் - குலாம் நபி ஆசாத்
மின்சாரம் - பி.எம்.சையீது
ரயில்வே - லாலு பிரசாத் யாதவ்
உணவு/உழவு - ஷரத் பவார்
தண்ணீர் வளம் - பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி
விமானப் போக்குவரத்து - பிரஃபுல் படேல்
தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு - தயாநிதி மாறன்
சட்டம் - H.R.பாரத்வாஜ்
பெட்ரோலியம், எரிவாயு - மணி சங்கர அய்யர்
ஒலி/ஒளிபரப்புத்துறை - ஜெய்பால் ரெட்டி
சுகாதாரம் - அன்புமணி ராமதாஸ்

===

பிரணாப் முகர்ஜி உள்துறை அமைச்சராகவும், ஷிவ்ராஜ் பாடில் பாதுகாப்புத் துறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறியுள்ளது. சிதம்பரம் பல நாட்களாக காங்கிரஸில் இல்லாதிருந்ததால் நிதி அமைச்சராக மாட்டார், வர்த்தகத் துறையில் இருப்பார் என்று எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் சோனியாவும், மன்மோகன் சிங்கும் சிதம்பரத்திடம் நம்பிக்கை வைத்து நிதியைக் கொடுத்துள்ளனர். கமல்நாத் வர்த்தகத்துறையில் இருப்பது சரியென்று படவில்லை எனக்கு. தமிழகக் காங்கிரஸ் விவகாரத்தை குழப்பியடித்துக் கொண்டிருந்தவர் இவர். சர்வதேச அளவில் WTO விஷயங்களில் எந்த அளவிற்கு திறமையாக நம் நாட்டின் குரலை ஒலிப்பார் என்று தெரியவில்லை.

அதேபோல் சையீதிடம் மின்சாரத் துறை வந்தது சரியல்ல என்று தோன்றுகிறது. இது மிக முக்கியமான துறையாகும். ரங்கராஜன் குமாரமங்கலம் அமைச்சராக இருந்தபோதுதான் இந்தியா இந்தத் துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்தது. தொடர்ந்து சிவ சேனையின் சுரேஷ் பிரபு திறம்படவே வேலை செய்தார். தாக்கரே அவரைத் தூக்கி எறிந்து விட்டு ஆனந்த் கீதே என்பவரை அமைச்சராக்கினார். இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு யாரையாவது இந்தத் துறையின் அமைச்சராக ஆக்கிப் பிரயோசனமில்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மிகுந்த மின்சாரப் பற்றாக்குறையில் இருக்கின்றன. இதில் பல விவசாயம் சார்ந்த மாநிலங்களில் 'இலவச மின்சாரம்' அவ்வப்போது - ஒரு சரியான கொள்கை அடிப்படையில் இல்லாது, வாக்கு வங்கிக்காகவே - வழங்கப்பட்டு வருகின்றது. மாநில மின்சார வாரியம் பணம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் சரியான மின்சாரம் மக்களுக்குக் கிடைக்காததால் ஆளும் கட்சிகள் தோற்றுப் போகின்றன. மத்திய அரசின் உதவி இல்லாமல் மாநில அரசுகள் தாங்களாகவே மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட முடியாது. இப்படிப்பட்ட மிக முக்கியமான துறைக்கு முன் அமைச்சரவை அனுபவம் இல்லாத சையீதைக் கொண்டு வந்திருக்க வேண்டாம். முடிந்த பாராளுமன்றத்தில் துணை அவைத்தலைவராக இருந்தவர் லட்சத்தீவுகளைச் சேர்ந்த சையீது.

மிக முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு அரசியல்/அமைச்சரவை கத்துக்குட்டி தயாநிதி மாறனிடம் கொடுக்கப்பட்டுள்ளது - அதுவும் கேபினெட் அந்தஸ்தில். இதுவும் மிக முக்கியமான துறை. அதிலும் convergence போன்ற விஷயங்கள் இந்த ஐந்தாண்டுகளில்தான் நிகழப்போகிறது. வீட்டிற்கான நேரடி செயற்கைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH), அதன்மூலமே இணையத் தொடர்பு ஆகியவையெல்லாம் ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன (எ.கா: DirecTV, Echostar's DishTV). அதைப்போலவே கேபிள் இணைப்பு வழியாக இணையம், தொலைபேசி இணைப்பு ஆகியவை பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ளது (எ.கா: NTL). மொத்தத்தில் ஒரு குழாய் அல்லது செயற்கைக்கோள் டிஷ் மூலம் ஒரு வீட்டிற்கு தொலைபேசி வசதி, இணைய வசதி, தொலைக்காட்சி சானெல்கள் என் எல்லாமும் குவிந்து வருவதே convergence ஆகும். இந்நிலையில் சன் டிவி மற்றும் சுமங்கலி கேபிள் விஷனின் முதலாளி கேபினெட் அமைச்சராக இருப்பது - conflict of interest ஆகுமல்லவா? அதுவும் முன்பின் அனுபவமில்லாத ஒருவர்?

இதுபோன்ற உயர்தர விழுமியங்கள் எதுவும் நம் நாட்டின் அரசியலில் கிடையாதுதான். ஆனாலும் எவ்வளவு காலத்திற்கு நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவது?

தண்ணீர் வளம் காங்கிரஸின் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியிடம் சென்றுள்ளது. நதிகள் இணைப்புக்கு ஒட்டுமொத்தமாக மங்களம் பாடிவிட்டு, உருப்படியாக குறைந்த செலவில் எங்கெல்லாம் கடல் நீரிலிருந்து குடினீரை உருவாக்க முடியுமோ அதைச் செய்யவும், மற்ற இடங்களில் தண்ணீரைச் சிக்கனமாக உபயோகிப்பது, பிற இடங்களிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து சேமித்து வைப்பது போன்றவற்றை கவனிப்பார் என்று எதிர்பார்ப்போம். மற்றொரு முக்கியமான இலாக்கா தரைவழிப் போக்குவரத்து; யாரிடம் போயுள்ளது என்று தெரியவில்லை. திமுகவின் A.ராஜாவுக்கு என்று நினைக்கிறேன். தே.ஜ.கூ அரசில் கந்தூரி மிகத் திறமையாகவும், நேர்த்தியாகவும் இந்த வேலையைச் செய்தார். வரும் அமைச்சர் அந்த அளவிற்கு தொடர்ந்து வேலை செய்வாரா என்று தெரியாது.

அதுபோல் முந்தைய அரசில் பாமகவின் மூர்த்தி ரெயில்வே இணை அமைச்சராக மிக நன்றாக வேலை செய்தவர். ஆனால் இம்முறை பாமக நிறுவனர் ராமதாஸ் திறமையை உடைப்பில் போட்டு விட்டு தன் மகனுக்கு ஒரு மந்திரி பதவியும், புதிதாக உள்ளே நுழைந்துள்ள வேலு என்னும் முன்னாள் IAS ஒருவருக்கு மற்றொரு மந்திரி பதவியும் வாங்கியுள்ளார்.

இதற்கிடையே திமுக, மந்திரி பதவிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அதுபோலவே ராம் விலாஸ் பாஸ்வானுக்குக் கோபம்; பல காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம். இவர்கள் எல்லோரும் சற்றே சோனியா காந்தியை நினைவில் வைத்திருப்பது அவசியமாகும்.

Sunday, May 23, 2004

புது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு

K. நட்வர் சிங்தான் அடுத்த அயலுறவுத் துறை அமைச்சராக இருப்பார் என்று தெரிகிறது. இலங்கையைப் பற்றிய இவரது கொள்கைகள் எப்படி இருக்கும்?

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மேற்கோள்கள் (தமிழ்ப்படுத்தியது) காட்டுகிறேன்:

திரு கருணாநிதி தனது தவறுகளில் உழன்று கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழர்களையும், தமிழர் வரலாற்றையும் பற்றி அதிகம் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரது ஐரோப்பிய வரலாறு பற்றிய அறிவு மிகவும் வழுவானது. அறிவுடைய எவரும் இலங்கையையும் செக்கோஸ்லோவாக்கியாவையும் ஒன்றென ஒப்பிட்டுப் பேச மாட்டார்கள். தமிழக முதல்வர் அயலுறவுக் கொள்கை விவகாரங்களைப் பற்றி கண்டதையும் பேசக்கூடாது என்று பிரதமர் வாஜ்பாயி அவரிடம் சொல்ல வேண்டும். மாநில முதல்வர்கள் அயலுறவுக் கொள்கை பற்றி அறிக்கைகள் விடுத்தலைப் போன்ற பிரம்மாண்டமான கேடு வேறெதுவும் இருக்க முடியாது. - ஏசியன் ஏஜ், 9 ஜூன் 2000



இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க, இலங்கை அரசு ஏதேனும் உதவி - இராணுவ உதவியும் சேர்த்து - கோரினால், இந்தியா அதனை உடனடியாக நிராகரித்து விடாமல், கவனமாக ஆலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் செயற்குழு உறுப்பினருமான நட்வர் சிங் கேட்டுக்கொண்டார்.

இராணுவத் தலையீடோ, கப்பற்படைத் தலையீடோ அல்லது இராஜதந்திர உதவியோ - இலங்கை எதைக் கேட்டாலும் அதைத் தர இந்தியா தயாராயிருக்க வேண்டும் என்று நட்வர் சிங் நிருபர்களிடையே பேசுகையில் தெரிவித்தார். நட்வர் சிங் காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுக் கொள்கைக்கான குழுவை நடத்துபவர் ஆவார்.

[பாஜக தலைமையிலான தே.ஜ.கூ] அரசின் இலங்கை பற்றிய கொள்கைகள் புரிந்துகொள்ள முடியாததாகவும், நீர்த்துப்போனதாகவும் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். இதற்குக் காரணம் அரசின் செயல்பாடு திமுக, மதிமுக ஆகிய கட்சிகளின் விருப்பங்களுக்கேற்ப ஆடிக்கொண்டிருப்பதே என்றார்.

1987 ஆம் வருடத்தைய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால்தான் [ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் கையொப்பமிடப்பட்டது], இலங்கை பிரியாமல் காக்கப்பட்டது என்றும், இரு நாடுகளுமே இதுவரை இந்த ஒப்பந்தத்தை தூக்கி எறியவில்லை என்றும் அவர் கூறினார்.

செக்கோஸ்லோவாக்கியா போல இலங்கையையும் இரண்டாக, அமைதியாகப் பிரிக்கலாம் என்ற [தமிழக] முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையை அவர் கடுமையாக எதிர்த்தார். மேலும் கருணாநிதியின் பேச்சுக்கள், மாநில முதல்வர்கள் அயலுறவுக் கொள்கையில் கை வைக்கக்கூடாது என்ற பல காலமாக இருந்து வரும் எழுதப்படா விதிக்கு எதிராக உள்ளது என்றும் குறை கூறினார். இலங்கையின் நிலைமை செக்கோஸ்லோவாக்கியாவைப் போலில்லை என்றும் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு குடியாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை எதிர்க்கிறது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். - Indian Express, 16 July 2000



இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான பேச்சுக்களை கவனமாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன். இதன் மூலம் ஒரு நிலையான முடிவு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கும் பேரா. பெய்ரிஸ், பாலசிங்கம் இருவரையும் நான் நன்கு அறிவேன். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமான பிரச்சினையாக இருப்பது திரு. வே.பிரபாகரன் தான். 11 செப்டம்பர் 2001 க்குப் பின்னர் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்து வந்த பணமும் ஆயுதத் தளவாடங்களும் வற்றிப்போய் விட்டன. இதனால்தான் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கே உடன்பட்டுள்ளனர். எது நடந்தாலும் பிரபாகரனை இந்தியாவிற்குக் கொண்டுவருவதே இந்தியாவின் தலையாயக் கடமையாகும். இப்பொழுது நடக்கும் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் என்று நம்புவோம். வெகு நாட்களாக இலங்கை கஷ்டத்தில் துவண்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் நியாயமான உரிமைகளை கண்டுகொள்ளாமலும் இருக்க முடியாது. இந்தியா இலங்கையில் நடப்பதை கண்டும், காணாமலும் இருக்க முடியாது. ராஜீவ் காந்திதான் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்குக் கெடுதல் வராமல், ஈழம் என்னும் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக வலுவாக இருந்தார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். - Frontline, Nov 23-Dec 2, 2002

கருணாநிதி இப்பொழுது முதல்வராக இல்லாவிட்டாலும், சென்ற அரசை விட இந்த மத்திய அரசில் திமுகவின் நிலை இன்னமும் வலுவாகவே உள்ளது. அதன்மூலம் காங்கிரஸ் அரசின், நட்வர் சிங்கின் நிலையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? எனக்கென்னவோ இருக்காது என்றுதான் தோன்றுகிறது.


பிற்சேர்க்கை (24 மே 2004): விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை மே 14 அன்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 19, 2004

எஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2

எஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:

* 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது.

* 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான்.

* போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hollander - Dutch), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது.

* 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது.

* 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'The sovereignty and territorial integrity' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது.

* நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது.

* தமது தற்கால வரலாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864-1933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு]

* சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது.

* கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர் தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார்.

* தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம்.

[இதற்கடுத்து தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று எஸ்.பொ விளக்கியதை முதலாம் பதிவில் படியுங்கள்.]

தொடரும்.

Tuesday, May 18, 2004

பெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்

அமுதசுரபியில் வெங்கட் சாமிநாதன் தான் போயிருந்த ஒரு பெண்ணியக் கூட்டம் பற்றி எழுதுகிறார்.
இங்கே கூட சம்பந்தப்பட்ட [பெண்] கவிஞர்கள் யோனி என்ற, புழக்கத்தில் இல்லாத, தமிழ் அல்லாத வார்த்தையைத்தான் வலிந்து எழுதியிருக்கிறார்களே தவிர அதற்கான தமிழ் வார்த்தையை, ஒருதரப்பட்ட சமூகத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வசையான, ஆனால் எல்லாத் தமிழரும் அறிந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. தெரிந்தே பலத்த யோசனையின் பிறகே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. தம் வாழ்நாளில் ஒரு முறை கூட அந்தக் கவிஞர்கள் இத்தமிழ் வார்த்தையை உச்சரித்திருக்க மாட்டார்கள் என்பது சர்வ நிச்சயமான யூகம். அவர்கள் இக்கூற்றை மறுத்தால் நான் ஏதும் சொல்வதற்கு இல்லை.

ஆக, படிப்போரை, ஆண்களை, சமூகத்தை இவ்வாறு எழுதித் திடுக்கிட்டு ஆடவைத்து விடவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியத்தில் அவ்வாறு திடுக்கிட வைக்கும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கே தயக்கம் நிறைய இருந்திருக்கிறது. திடுக்கிட வைப்பது சொல்லப்பட்ட கருத்துதானே. இதுகாறும் திடுக்கிட வைத்த கருத்துகளைச் சொல்லி ஸ்தம்பிக்க வைத்த இக்கவிதாயினிகள், அந்த வார்த்தைகள் இல்லாமலேயே சொல்லி விட முடிகிறபோது, இப்போது ஏன் அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தியே ஆக வேண்டும் என்று வீம்பு பிடித்து, பின் தயங்கித் தடுமாறி, யோசித்து, யாரும் புழங்காத சம்ஸ்கிருத வார்த்தையில் தஞ்சம் புகுந்து ஏதோ கத்தி சுழற்றி விட்டதாகப் பூரித்துப் போகவேண்டும்?
ஆம். நானும் பெண் கவிஞர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்... யோனி என்னும் சம்ஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். ஆண்டாளும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாஸனம் பண்ணிக் கொடுத்த அல்குல் என்னும் சொல்லை இனிப் புழங்குங்கள். மற்றபடி வெங்கட் சாமிநாதன் இந்தக் கட்டுரையில் சொன்ன சில கருத்துகளுடன் உடன்படுகிறேன், பல கருத்துக்களுடன் உடன்பாடில்லை.

கிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்

முத்தையா முரளிதரன் - இப்பொழுதைக்கு டெஸ்டு போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்திருப்பவர் - 'தூஸ்ரா' எனப்படும் வெளியே செல்லும் பந்தைப் போடக் கூடாது என்று ஐசிசி அறிவித்திருந்தது. முரளி, என்னிடம் யாரும் சொல்லவில்லை, அதனால் நான் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அந்தப் பந்தைப் போடுவேன் என்று எதிர்ப்பேச்சு பேசினார். ஐசிசி மீண்டும், நாங்கள் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஏற்கனவே சொல்லிவிட்டோம், மீறி முரளி 'தூஸ்ரா'வை வீசினால் ஒரு வருடத்திற்கு அவரைத் தடை செய்வோம் என்றனர்.

இத்தனையும் நடக்கும்போது ஜிம்பாப்வே அணியில் உருப்படியான ஒரு ஆட்டக்காரருமே கிடையாது. [முன் விவரங்களை அறிந்து கொள்ள எனது இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.] முதல் இன்னிங்க்ஸில் ஜிம்பாப்வேக்காக ஒழுங்காக ஆடிய ஒரே ஆட்டக்காரர் டியான் இப்ராஹிம். முரளி அவருக்கு ஒரு லெக் பிரேக் பந்து வீசியுள்ளார். இப்ராஹிமும் வாயை சும்மா வைத்துக் கொண்டிராமல், முரளி வீசிய பந்துகளிலேயே அந்த லெக் பிரேக் ஒன்றுதான் 'எறியாது' வீசிய பந்து என்று ஒரு செவ்வியில் சொல்லி விட்டார். கடுப்பான இலங்கை அணியின் மேனேஜர் ஐசிசி மேட்ச் ரெஃபெரியிடம் புகார் கொடுக்க, அவர் டியான் இப்ராஹிமை ஒரு ஆட்டத்துக்குத் தடை செய்து விட்டார்.

இந்தக் குழப்பங்கள் போதாதென்று இரு நாட்டின் பிரதமர்கள் முரளியின் பந்துவீச்சு சமாச்சாரத்தில் களத்தில் குதித்துள்ளனர். இலங்கைப் பிரதமர் மஹிந்தா ராஜபக்ஸே, முரளியின் மீது அவதூறு சொன்னதற்காக ஐசிசி மீது வழக்குத் தொடுப்பேன் என்று கூக்குரல் விடுக்கிறார். முரளி இலங்கையின் சொத்தாம். ஆஸ்திரேயாவின் பிரதமர் ஜான் ஹாவர்ட் முரளி பந்தை 'chuck' செய்கிறார் (எறிகிறார்) என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி விட்டுள்ளார். முரளிதரன் உடனே நான் இனி ஆஸ்திரேலியா போக மாட்டேன் என்று அறிவித்துள்ளார். [இதனால் நஷ்டம் ஆஸ்திரேலியாவின் மட்டையாளர்களுக்குத்தான். தூஸ்ராவோ, தீஸ்ராவோ, முரளியை ஆஸ்திரேலிய மட்டையாளர்கள் இதுவரை கைமா பண்ணியுள்ளனர்!] இலங்கை அணி நிர்வாகமும், முரளி விரும்பவில்லையென்றால் அவர் ஆஸ்திரேலியா செல்ல வேண்டியதில்லை என்று அறிவித்து விட்டனர்.

பாடிலைன் (bodyline) தொடருக்குப் பின்னர் அரசுகளுக்கிடையில் பிரச்சினை வருமளவிற்கு சென்றுள்ளது முரளிதரன் விஷயத்தில்தான்!

Sunday, May 16, 2004

நம்பிக்கைத் தகர்வும், அழகுணர்ச்சியும்

சுந்தரவடிவேல் குமுதினி படகில் ஈழ மக்கள் கொல்லப்பட்டதை நினைத்துக் குமுறி எழுதிய கவிதை இங்கே. மறுமொழியாக நான் இப்படிச் சொல்லியிருந்தேன்:
கவிஞரின் கற்பனைக்குத் தேவையான உரிமைகள் இருக்கென்றாலும் tasteless கற்பனையாகவே எனக்குத் தோன்றுகிறது. எண்ணக் குமுறல்களை எடுத்துச் சொல்வதிலும் ஒரு அழகியல் தேவை.

கடவுளர்கள் புராணங்களில் நம்பிக்கையில்லையென்றால் அதனை விடுத்து நேரடியாக மோதவேண்டியவர்களிடத்தே மோதலாம். நாராயணன் டாய்லெட் போவதைப் பற்றியும் அதற்கு துடைத்துக் கொள்ள லட்சுமி டாய்லெட் பேப்பர் எடுத்துக் கொடுப்பதாகவும்தான் நான் கவிதை எழுதுவேன், ஏனெனில் நான், என் இனம் "பெரிதாக இழந்திருக்கிறது" என்று போக்குக் காண்பிப்பது அசிங்கம்.
நான் இதனைச் சொல்லும்போது இந்தக் கவிதை என் மனதைப் புண்படுத்தியுள்ளது என்று எங்கும் சொல்லவில்லை. எனக்கு மதத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. சடங்குகள் மீதும் எந்த நம்பிக்கையும் இல்லை.

கடவுள்கள் மீது நம்பிக்கையில்லாதவர்கள் அப்படி நம்பிக்கை இருப்பவர்களிடம் அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாகப் பேசவேண்டுமென்றால்தான் கடவுள்களைக் கேலி செய்வதும், தொன்மங்களை 'மீள்பார்வை' பார்ப்பதும் வேண்டும். பெரியார் அதைத்தான் செய்தார். அவரது கொள்கை கடவுளர்களும், புராணங்களும் புருடா, கட்டுக்கதை. அது தமிழர்களை முட்டாள்களாக்கி வைத்துள்ளது. அந்தக் கடவுளர்களைக் கேலி செய்வதால் நாக்கு வெந்துவிடாது, கண் குருடாகி விடாது என்பதைக் காட்டும் விதமாகவே கேலி செய்தார்.

ஆனால் இங்கு சுந்தரவடிவேல் குமுதினி கொலைகளைப் பற்றிக் குமுறுகிறார். எனவே முக்கிய நோக்கம் குமுதினி கொலைகள், அதையொட்டிய மனிதத்தின் இறப்பு பற்றிய ஆதங்கம் ஆகியவையே. கடவுளர்கள், புராணங்கள் ஆகியவை இங்கு தேவையற்ற கற்பனையாகத் தோன்றுகிறது. அந்தக் கற்பனையிலும் தேவையற்ற, தரக்குறைவான படிமங்கள்: இருக்கும் உலகங்கள் அடி, வெட்டு, குத்து என்று இருப்பதால் அதையெல்லாம் அழித்து விட்டு இன்னுமொரு உலகம் செய்வதாகச் சொல்லி வாயில் நீர் விட்டுக் கொப்புளிக்க, அந்த நீரில் மனிதக் கவிச்சி அடிக்க, திருமால் முகம் சுளிக்க, லெட்சுமி அது ஈழத்தண்ணீர் என, திருமால் வாயைக் குடைந்து ஓக்காளித்துத் துப்பியும் முந்தைய 'கமலப்பூ' மணம் வரவில்லையாம். சரி, போகட்டும் என்று விட்டுவிட்டு திருமகளின் கொங்கையைப் பற்றி, சிலமுறை புணர்ந்து தூங்கிப் போய் விட்டானாம்.

சரி, இதற்கும் சொல்லவந்த கருப்பொருளுக்கும் என்ன சம்பந்தம்?

எனது சுருக்கமான மறுமொழிக்குப் பின்னர் சுந்தரவடிவேல் எழுதிய பதிவு இது: நம்பிக்கைச் சாடலும், அழகியலும்

நம்பிக்கைத் தகர்வே முக்கியமான கருப்பொருள் என்றால் அதில் எந்தவிதக் கேள்வியும் இருக்க முடியாது. ஆனால் ஒரு துன்பியல் நிகழ்வைப் பற்றிப் பாடுகையில் வலியப் புகுத்திய கடவுளர் நம்பிக்கைத் தகர்வு அதிர்வைத் தருவதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. ஈழத்துத் துன்பத்தையும், உலகின் மற்ற துன்பங்களையும் திருமால் வந்து தீர்த்து விடுவார் என்று சத்தியஞ்செய்யும் கூட்டத்திடையே போய் "சும்மா கதைக்க வேண்டாம், உங்கள் கடவுள் ஒரு வெத்துவேட்டு" என்று பொருள் படச் சொல்வதென்றால் சரி. அவர்களோ உங்கள் இலக்கு?

'மனதைப் புண்படுத்தினால் வருந்துகிறேன்' என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. புண்படுத்த விழைவதுதான் குறிக்கோள் என்றால் "புண்படுத்தினேன், ஆம், அப்பொழுதுதான் உனக்குச் சொரணை வரும்" என்று சொல்லிவிட்டுப் போகலாம். திருமால் பக்தர்கள் நிச்சயமாக மேற்சொன்ன கவிதையைக் கண்டு துணுக்குறுவார்கள். அவர்கள் கொண்டுள்ள பக்திக்கும், அவர்களது மனிதநேயக் கருத்துகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஒருவனது மதந்தொடர்பான நம்பிக்கைகள் மூலம் ஒருவன் பிறருக்குத் துன்பம் விளைவிப்பானானால் அவனது மதத்தையே கேள்விக்குறியாக்கி எழுதலாம். எ.கா: இந்து மதம்-நான்கு வர்ணங்கள்-சாதியம்-இரட்டைக் குவளை. ஆனால் இங்கு குமுதினிப் படகு நிகழ்ச்சிக்கும், திருமால் நம்பிக்கையுடையோருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எதற்காக இந்தத் தேவையில்லாத தொடர்பை ஏற்படுத்த வேண்டும்?

அழகியல் பற்றி நான் அதிகமாகப் பேசப் போவதில்லை. இந்த கருப்பொருளைப் பற்றிப் பேசும்போது கையாண்டுள்ள அழகியல் தேவையற்றது என்று எனக்குத் தோன்றியது. அவ்வளவே.

மாடு கழுவலாம்
சூத்தும் கழுவலாம்
நாங்க மட்டுந்தான்
தண்ணி மொள்ளக் கூடாது

என்று ஒரு தலித் கவிதை எழுதும்போது அத்தனை சொற்களும் அவசியமாகத் தேவைப்படுகின்றன. கருப்பொருள் அப்படிப்பட்டது.

Friday, May 14, 2004

சுவர்க் கிறுக்கல்கள்

இந்த வாரத் திண்ணையில் மலேசிய எழுத்தாளர் ரெ.கா ஆக்கலும் அழித்தலும் என்றொரு சிறுகதை எழுதியுள்ளார்.

சுவற்றில் கிறுக்கும் சின்னக் குழந்தை, கோபத்தில் குழந்தையை அடிக்கும் அம்மா, கடிந்து கொள்ளும் அப்பா, ஆனால் குழந்தையை அரவணைக்கும் தாத்தா. பெற்றோருக்கு தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்து ஆக்கிய வீட்டின் அழகை, குறும்புக் குழந்தை அழிக்கிறாளே என்ற ஆதங்கம்.

தள்ளி நின்று பார்க்கும் தாத்தாவுக்கு ஒரு சிறு குழந்தை கிரேயானால் தன் ஆக்கும் திறனை வெளிக்கொணர்வதைப் பார்க்கையில் சந்தோஷம். சிறு குழந்தையைக் கடிந்து கொள்ளும் பெற்றோரைப் பார்த்துக் கேட்கிறார்: "ஏம்மா சத்தம் போட்றிங்க? இப்ப என்ன ஆச்சி? குழந்தைக்குக் கற்பனை பெருக்கெடுத்து வரும்போது தடுக்கக் கூடாது. முளையிலேயே கிள்ளின மாதிரி ஆயிடும்." அதற்காக புது வீட்டின் சுவற்றை அசிங்கமாக்குவதா என்கிறார்கள் பெற்றோர்கள். தாத்தா சொல்கிறார்: "குழந்தை எழுத்து அசிங்கம் இல்ல. பாசத்தோட பார்த்தா அதுவும் அழகுதான்."

பின்னர் ஈரத்துணியால் கிரேயான் 'கிறுக்கலை' அழித்துக் காட்டி, "பாருங்கள், சுவர் எவ்வளவு பளிச்சென்று இருக்கிறது" என்று அறிவினை புகட்டுகிறார்.

கதையில் வரும் மல்லியைப் போல எனக்கு ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை பிரியா. அவள் தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்தது முதல், வீட்டின் அத்தனை சுவர்களிலும் கிறுக்கும் அதிகாரம் கொடுத்திருந்தோம். இன்று ஐந்து வயதாகும்போதும் அவ்வப்போது கிறுக்குகிறாள். அத்தனை கிறுக்கல்களும் அப்படியே இருக்கின்றன. இன்னும் ஒரு வருடத்தில் சுவரில் கிறுக்கும் ஆசை விட்டுப்போகலாம். அதுவரை சுவர் பெயிண்டை மாற்றப்போவதில்லை. பிரியாவின் கையில் மாட்டுவது ரெ.கா கதையில் வரும் அழிந்துபோகும் கிரேயான்கள் மட்டும் இல்லை. பென்சில்கள், பலவகை பேனாக்கள், வாட்டர் கலர், போஸ்டர் கலர், கறுப்பு மை, நகச்சாயம் என்று பல. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவற்றில் கிறுக்கி விட்டு யானை வரைந்துள்ளேன், பாம்பு வரைந்துள்ளேன் என்பாள். கேட்கச் சிரிப்பாக இருக்கும். 'அருமை, 'சூப்பர்' என்று பாராட்டி விடுவோம். எத்தனை வரைபுத்தகங்கள் வாங்கிக் கொடுத்தாலும் அவளுக்கு சுவற்றில் கிறுக்குவதே பிடித்துள்ளது போல. ஒரு பெரிய கான்வாஸ் தேவைப்படுகிறது போல. அத்தனைச் சுவற்றிலும் கிறுக்கி வைத்துள்ளாள். எட்ட முடியாத இடங்களிலெல்லாம் நாற்காலியைப் போட்டு ஏறி நின்று கையெட்டும் இடம் வரை கிறுக்கல்தான்.

அது அவளைப் பொறுத்தவரையில் கிறுக்கல்கள் இல்லை. தனியுலகம். அவளால் குறிப்பிட்டு ஒவ்வொன்றையும் என்ன உருவம் என்று சொல்ல முடியும். எதை வரைய எத்தனித்தாள் என்பது அவளிடம் பேசினால் நமக்குத் தெரிந்துவிடும்.

இதுபோன்ற உரிமைகள் சிறுவயதில் எனக்குக் கிடைத்தது கிடையாது. எந்தவித கலைகளிலும் எனக்கு ஆர்வமும் இருந்தது கிடையாது.

பார்க்கலாம், என் மகளின் கலைத்திறன் பிற்காலத்தில் எப்படிப் பரிணமிக்கிறது என்பதை.

கர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை

மத்தியில் பாராளுமன்றத் தேர்தல் பிரமாதமாகப் போய்க்கொண்டிருப்பதால் யாரும் கர்நாடகம், ஒரிஸ்ஸா, சிக்கிம் சட்டமன்றத் தேர்தல்களை சரியாகக் கவனிக்கவில்லை. ஆந்திரா சட்டமன்ற முடிவுகள் இரண்டு நாட்கள் முன்னதாக வெளிவந்து விட்டதால் அனைவரும் கவனித்தனர்.

நாயுடுவின் மடிக்கணினி பிம்பத்தைப் போலவே கர்நாடகத்திலும் காங்கிரசின் SM கிருஷ்ணா இருந்து வந்தார். கர்நாடகத்தில் ஐடி வளர்ச்சி இந்தியாவிலேயே மிக அதிகம். அதற்கு அங்குள்ள அரசாங்கம் எதுவும் அவ்வளவு காரணமில்லை, பெங்களூரின் மக்கள்தான் காரணம். கர்நாடகத்திலும் வறட்சி (ஆம்) ஒரு பெரிய பிரச்சினை. பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் கட்சி காங்கிரசுக்கு பெரிய அடி. பாராளுமன்றத் தேர்தல் அடி மிகவும் பலம். சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மைப் பலமின்றி தொங்கு சட்டமன்றம் நிகழ்ந்துள்ளது.

மொத்த இடங்கள் = 224
பாரதிய ஜனதா கட்சி = 79
காங்கிரஸ் = 64
ஜனதா தள் (S) = 57 (தேவ கவுடா)
ஜனதா தள் (U) = 5

மற்றவை உதிரிகள்.

காங்கிரசும், தேவ கவுடாவும் இணைந்தால்தான் அரசமைக்க முடியும். இருவரும் பாஜகவை எதிர்ப்பவர்கள். அதனால் பாஜகவுக்கு தனிப்பெரும் கட்சியாக இருந்தும் அரசமைக்க சாத்தியங்களே இல்லை.

தேவ கவுடா இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் நின்று ஒன்றில் தோற்று, ஒன்றில் வென்றுள்ளார். அதனால் மத்தியில் காங்கிரசிடம் பேரம் பேசி தனக்கென ஒரு மந்திரி பதவியும் (விவசாயத்துறை?) மாநிலத்தில் சரிபாதி மந்திரிகள் + துணை முதல்வர் பதவியும் கொடுத்தால் போதும் என்று ஒரு சுமுகமான முடிவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரிஸ்ஸாவில் ஆளும் பிஜு ஜனதா தள் + பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சிக்கிமில் மொத்தம் 32 தொகுதிகள். அதில் 31இல் வெற்றி பெற்று ஆளும் கட்சி சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது! மெஜாரிட்டி என்று பேசுபவர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்! எதிர்க்கட்சி காங்கிரசுக்கு ஒரே ஒரு இடம்தான்! SDFஇல் முதல்வர் பவன் சாம்லிங் போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்படுள்ளார். இவரைத்தவிர இந்தக்கட்சியின் இன்னமும் மூன்று பேர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்கள்.

தமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்

* தமிழகத்தின் 39 தொகுதிகளில் மூன்று தவிர மீதி அனைத்திலும் வெற்றி பெற்றவர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். [ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள்: பெரியகுளம், சிதம்பரம், திண்டிவனம்]

* மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் பெரியகுளத்தில் காங்கிரசின் ஆரூண் ரஷீத் (பெற்ற வாக்குகள்: 3,46,851). தோற்றவர் அதிமுகவின் TTV தினகரன் (3,25,696). வாக்குகள் வித்தியாசம் 21,155.

* மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் வட சென்னையில் திமுகவின் C.குப்புசாமி (5,70,122). தோற்றவர் பாஜகவின் சுகுமாரன் நம்பியார் (3,16,583). வித்தியாசம் 2,53,539. வட சென்னை தொகுதிதான் தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டது (20,00,866). மொத்தம் பதிவான வாக்குகள் 9,15,865. தென் சென்னையில் பதிவான வாக்குகள் இதைவிட சற்று அதிகம் 9,34,548. தென் சென்னை வாக்காளர் எண்ணிக்கை 19,49,904.

* பதிவான வாக்குகளிளேயே மிக அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர் காங்கிரசின் கார்வேந்தன். தொகுதி பழனி. மொத்த வாக்குகள் 10,88,931. பதிவான வாக்குகள் 6,95,442. கார்வேந்தன் பெற்ற வாக்குகள் 4,48,900. சதவிகிதம் 64.55%.

* பதிவான வாக்குகளிலேயே மிகக் குறைந்த சதவிகித வாக்குகளைப் பெற்று வென்றவர் பாமகவின் பொன்னுசாமி, சிதம்பரத்திலிருந்து. மொத்த வாக்குகள் 11,25,487, பதிவான வாக்குகள் 7,43,410, பொன்னுசாமி பெற்ற வாக்குகள் 3,43,424 (46.20%). ரஜினி எஃபெக்ட்? ஆனால் இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மூன்றாம் இடத்தைத்தான் பெற்றார். இரண்டாம் இடத்தைப் பெற்றது விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன் (2,55,773). பாஜகவின் 'தடா' பெரியசாமி பெற்ற வாக்குகள் 1,13,974 மட்டுமே.

* ரஜினி எஃபெக்ட்: பாமக போட்டியிட்ட இடங்களில் வெற்றிக்கான வாக்கு வித்தியாசங்கள்: செங்கல்பட்டு 1,48,724 (19.6%); அரக்கோணம் 1,02,196 (13.1%); திண்டிவனம் 91,164 (12.5%); சிதம்பரம் 87,651 (11.8%); தர்மபுரி 2,16,090 (30.4%); பாண்டிச்சேரி 69,181 (14.3%).

பிராக்கெட்டில் கொடுத்திருப்பது பதிவான வாக்குகளில் இந்த வித்தியாசம் எத்தனை சதவிகிதம் என்பது.

சிதம்பரத்தில் கடுமையான போட்டி இருந்துள்ளது. இதற்குக் காரணம் திருமாவளவன் களத்தில் இருந்தது, மற்றும் மூன்று முக்கியமான போட்டியாளர்கள் இருந்தது. திண்டிவனத்தில் ஒருவேளை ரஜினி எஃபெக்ட் கொஞ்சம் இருந்திருக்க வேண்டும். பாண்டிச்சேரி வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்துக்கும் கீழ் இருந்தாலும் அந்தத் தொகுதி சிறியது - மொத்த வாக்குகள் 6,36,667, பதிவான வாக்குகள் 4,83,816.

Thursday, May 13, 2004

சுப்ரமணியம் சுவாமி

மதுரை பாராளுமன்றத் தொகுதியில் சுப்ரமணியம் சுவாமி பெற்ற வாக்குகள் 12,009. வெற்றி பெற்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் P.மோகன் பெற்ற வாக்குகள் 4,14,433. அதிமுக வேட்பாளர் A.K.போஸ் பெற்ற வாக்குகள் 2,81,593.

சுவாமியை விடவும் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார் ஜனதா தள் (U) வேட்பாளர் P.சக்திவேல் (12,093). இனிமேலும் வெத்துவேட்டு சுவாமி நாங்கள் ஐந்து தொகுதிகளில் ஜெயிப்போம், இத்தைச் செய்வோம், அத்தைச் செய்வோம் என்று பேசாமல் நடையைக் கட்டிவிடலாம்.

இவர் கட்சிக்காரர்கள் (!) ஆந்திராவில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஜெயித்து விட்டார்கள் (எப்படியென்று தெரியவில்லை). உடனே சுவாமி அறிக்கை விட்டு விட்டார் - இவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் சட்டமன்றம் ஆரம்பித்ததும் முதல் வேலையாக 'தெலுங்கானா தனியாகப் பிரிக்கப்பட வேண்டும்' என்ற தனி உறுப்பினர் மசோதா ஒன்றைக் கொண்டுவருவார்களாம். அதை யாரும் சட்டை செய்யவில்லையென்றால் போராட்டம் நடத்துவார்களாம்!

What a joker!

தேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்

பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை இழந்து விடும் என்பது இப்பொழுது முடிவாகி விட்டது. இன்னமும் நிலைமை தெளிவாகவில்லை எனினும் தே.ஜ.கூட்டணிக்கு 190 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

இப்பொழுது காங்கிரஸ் நிச்சயமாக ஆட்சியை அமைக்க முடியும் என்று தோன்றுகிறது. அதற்கு சோனியா காந்தியும் அவரது ஆலோசகர்களும் கொஞ்சம் அரசியல் விளையாட்டுகள் விளையாட வேண்டும். பலரை சரிக்கட்ட வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்:

* காங்கிரஸுக்குக் கிடைக்கும் இடங்கள்: 140-150

* காங்கிரஸ் கூட்டணியில் முக்கியமான கட்சிகள்: சரத் பவாரின் நேஷனலிஸ்ட் காங்கிரஸ் (10-12), கருணாநிதியின் திமுக (+மதிமுக = 20), லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரியா ஜனதா தள் (10-15), ராமதாஸின் பாமக (6), மற்ற சிறு கட்சிகள் (20-25).

* காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத முக்கியமான கட்சி முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி (30).

* இடதுசாரிகள் (50)

மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இடதுசாரிகள் எக்காரணம் கொண்டும் பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டார்கள். ஆகவே இடதுசாரிகளிடம் 50 இடங்கள் இருந்தாலும் அவர்களிடம் சமரசம் பேச வேண்டிய அவசியமேயில்லை. இடதுசாரிகளை 'வெளியிலிருந்து' ஆதரவு தரச் சொல்லலாம்.

முலாயம் சிங் யாதவுடன், சோனியா நேரடி ஒப்பந்தம் செய்து கொண்டால் அதுவே போதுமானது. முலாயம் சிங் துணைப்பிரதம் மந்திரி பதவி கேட்டால் அதைக் கொடுத்து விடலாம். அதைத் தொடர்ந்து திமுக/மதிமுகவையும் அரசமைப்பதில் சேர்ந்து கொள்ள வைக்க வேண்டும்.

சரத் பவார், சோனியாவின் வெளிநாட்டுப் பிறப்பை முன்வைத்து கட்சியிலிருந்து வெளியேறியவர் என்றாலும் 10-15 ஆட்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அடுத்து மஹாராஷ்டிராவில் தேர்தல் வரப்போகிறது. அங்கு சிவ சேனை/பாஜகவை எதிர்த்துப் போராட காங்கிரஸின் உதவி தேவை. லாலு பிரசாத் யாதவிற்கு சோனியா பிரதமராவதில் எந்தவொரு தயக்க்கமும் இல்லை. ஆனால் முலாயம் சிங் உள்ளே வருவதில் நிறைய எதிர்ப்பு இருக்கிறது. அப்படியே லாலு அதை எதிர்த்தால் சோனியா லாலுவைக் கழட்டி விட்டுவிடலாம். காங்கிரஸுக்கு திமுக+மதிமுக வின் 20 இடங்களும் அவசியம் தேவை. பாமக ஒரு/இரு மந்திரி பதவி கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு முழு ஆதரவைத் தந்து விடுவார்கள். ஆனால் கருணாநிதி குட்டையைக் குழப்பும் விதமாக அரசில் இணையமாட்டேன் என்கிறார். அவரை அரசில் இணையவைக்க வேண்டியது காங்கிரஸின் இரண்டாவது முக்கியமான வேலை.

1. முலாயம் சிங்குடன் 'டீல்'.
2. கருணாநிதியுடன் 'டீல்'
3. இடதுசாரிகளின் வெளியிலிருந்து ஆதரவு

இம்மூன்றையும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டியது சோனியாவின் அதிமுக்கியமான வேலை.

இன்றைக்குள் வாஜ்பாயி ராஜினாமா செய்து விடுவார். இனி இவர் பிரதமராகப்போவதில்லை. இருந்தவரையில் முக்கியமான பல காரியங்களைச் செய்தவர் என்று பாராட்டுவோம். பாஜக எப்பொழுதெல்லாம் தோல்வியில் இருக்கிறதோ, அப்பொழுது கட்சிக்குத் தெம்பூட்டுபவர் அத்வானி. அடுத்த ஐந்து வருடத்தில் அத்வானி, வெங்கையா நாயுடு, பிரமோத் மஹாஜன், சுஷ்மா சுவராஜ், அருன் ஜெயிட்லி ஆகியோருடன் சேர்ந்து கட்சியை எவ்வாறு பலப்படுத்துகிறார் என்று பார்ப்போம்.

தமிழகத்தில் அஇஅதிமுக வாங்கிய அடி அம்மையாருக்கு மறக்காது என்று நம்புவோம். அடுத்த அடி சட்டமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக விழும்.

Wednesday, May 12, 2004

எஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1

ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் தேசியம் எவ்வாறு தடம்புரண்டுள்ளது ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.

என் பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் வரிசையை சிறிது மாற்றியமைத்துள்ளேன். முதலில் எஸ்.பொ தேசியத்தையும், (ஈழத்)தமிழ்த் தேசியத்தையும் எவ்வாறு வரையறுக்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே காண்போம்.
தமிழ்த்தேசியம் என்றால் என்ன? 'தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று தொண்டை வரளக் கோஷிப்பது அல்ல தேசியம். அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம். அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது. அது தமிழர் சமூகத்திற்கு உயிர்த்துவம் அளித்து, புதிய பொற்பங்கள் சாதிக்கப் புதிய திசையும் திறனும் அருளுவது. பிறரைக் காலில் விழுந்து வணங்காத வீரத்தை அளிப்பது. தமிழ் விரோதச் செயல்களை வேருடன் அறுக்கும் மறத்தை அருள்வது. அதுவே வாழ்வின் அனைத்து அறங்களின் ஊற்றாய் நிற்பது.

இந்தத் தமிழ்த் தேசிய உணர்வு ஈழத்தமிழர் நிகழ்த்தும் விடுதலைப் போருடன் இணைக்கப் பட்டதினால், பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று. ஓர் இனம் தன் அடையாளத்தினை எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ அதுதான் அந்த இனத்தின் தேசியம். ஈழத் தமிழர்கள் இன்று தங்களை தமிழ்மொழி பேசும் ஓர் இனம் என்றே அடையாளப்படுகிறார்கள். அந்தத் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு இறைமை உள்ள ஓர் அரசை நிறுவப் போராடுகிறார்கள். போரின் பல்வேறு பட்ட இழப்புகளினாலும் இத்தேசியம் தனித்துவமான மூர்க்கம் பெற்றுள்ளது.

யாக்கை திரி காதல் சுடர்

காலையில் காரில் வந்துகொண்டிருக்கும்போது தெரியாத்தனமாக வானொலியில் மேற்படி பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கும் பண்பலை வரிசைக்கு வந்துவிட்டேன். வெங்கலக் கடையில் யானை புகுந்தது போன்ற கர்ணகடூரமான இசையில் நடுநடுவே ஒருசில சொற்கள் காதில் விழுந்தன.

தலைவலி தாள மாட்டாமல் வேறு அலை வரிசைக்கு 'தப்பித்தேன்-பிழைத்தேன்' என்று எடுத்தேன் ஓட்டம்!

இந்தப்பாடலைக் கேட்கும் எத்தனை பேர் 'யாக்கை' என்னும் சொல்லுக்குப் பொருள் தேடி அலைவர் என்று நினைக்கிறீர்கள்?

Tuesday, May 11, 2004

காங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை

ராஜசேகர ரெட்டியின் NDTV செவ்வி கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. எதையெடுத்தாலும் 'கட்சி மேலிடம் கவனித்துக் கொள்ளும்' என்று சொல்லி மானத்தை வாங்கினார்.

எல்லாவற்றையும் கட்சி மேலிடம் (அப்படின்னா யாருங்க?) முடிவு செய்யுமானால் 'நீ எதுக்குய்யா?' என்று கேட்கத் தோன்றுகிறது. காங்கிரஸ் பாரம்பர்யத்தில் மாநில முதல்வர்களெல்லாம் முதுகெலும்பில்லாத முட்டாள்களாக இருக்க வேண்டும் போல. ஷீலா தீக்ஷித் போன்ற திறமையான, சாதித்த முதல்வர் அமுத்தப்படுகிறார். S.M.கிருஷ்ணாவிடம் ஒரு நிருபர் நீங்கள் பிரதமராக ஆசைப்படுகிறீர்களா என்றால் அவர் உடனே 'வயிறு கழிந்து', "அய்யய்யோ, எனக்கெல்லாம் அந்தத் தகுதியே கிடையாது" என்று கதறுகிறார். சந்திரபாபு நாயுடு போன்ற பெரும் பிம்பத்தை தேர்தலில் நொறுக்கிய ராஜசேகர ரெட்டி தான் முதலமைச்சராவோமா என்பதை 'மேலிடம்'தான் முடிவு செய்யும் என்கிறார். தெலுங்கானா உருவாக்க முயற்சிப்பீர்களா என்று கேட்டால் அதற்கும் மேலிடம் முடிவு செய்யும் என்கிறார்.

மேலிடத்தைப் பார்த்து எள்ளி நகையாடும் ஒருவர் காங்கிரஸில் இருக்கிறாரா என்று கேட்கிறீர்களா? ஆம். கேரளாவின் கருணாகரன்.

ஆந்திராவில் நாயுடு என்னதான் செய்து வந்தார் என்பதைப் பற்றிய செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வருகின்றன. பார்க்க: இந்தியன் லிபரல் குழுவின் செய்தி

மொத்தக் கடனாக அன்னார் விட்டுப்போயிருப்பது ரூ. 50,638 கோடிகள் (மார்ச் 2003 அன்று). மார்ச் 2001இல் இது ரூ. 35,651 கோடிகளாக இருந்தது. மத்திய அரசுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி நாயுடு தான் விரும்பியதையெல்லாம் செய்து வந்திருக்கிறார். இத்தனைக்கும் நாயுடு தோற்றதுக்கு இதுமாதிரியான நிதிநிர்வாகக் குறைபாடு காரணமல்ல. ஏனெனில் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தவேயில்லை.

இந்தப் பற்றாக்குறையைத் தீர்க்கவும், ஆந்திராவின் திருவோடு ஏந்தும் நிலையை மாற்றவும் 'மேலிடம்'தான் வரவேண்டியிருக்குமா?

தேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகு தேசம் செம அடி வாங்கியுள்ளது. இது கருத்துக்கணிப்பில் ஏற்கனவே தெரிந்திருந்ததுதான். தோற்றுப்போனது ஏன் என்று நாயுடுகாரு கண்டறியும் முன்னர், ஆந்திராவில் அடுத்த ஒரு வருடத்தில் என்ன நடக்கும் என்ற என் கணிப்பு இதோ:

1. ராஜசேகர ரெட்டி சோனியாதான் முதல்வரைத் தேர்ந்தெடுப்பார் என்று சொல்வார்.
2. சோனியா ஒன்றிரண்டு கண்காணிப்பாளர்களை ஆந்திரா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு அனுப்பி, ராஜசேகர ரெட்டியை முதல்வராகத் தேர்ந்தெடுக்குமாறு செய்வார். சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் கூடி, சோனியா காந்தி யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்து முழு உரிமையையும் அவருக்கே கொடுத்து விடும். இப்படி முன்னும் பின்னும் முடிவெடுத்தபின், ராஜசேகர ரெட்டி ஒருவழியாக முதல்வராவார்.
3. நான்கே மாதத்தில் ரெட்டிக்கு எதிராக நான்கு பேர் கோஷ்டிப்பூசல் செய்ய முற்படுவர். இரண்டு புது ஆசாமிகளாவது முதல்வர் பதவி வேண்டும் என்று சண்டை போடுவர்.
4. காங்கிரஸ் தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிய அனுமதிக்காது. அதற்காக நிறையப் போராட்டங்கள் வரும்.
5. நக்சலைட்டுகள் ரெட்டி போகும் காருக்குக் கண்ணி வெடி வைப்பர். யார் முதல்வரானாலும், எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் நக்சலைட் பிரச்சினையை சமாளிக்கக் கூடிய திறமை இருக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
6. ரெட்டி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பார். கஜானா காலியாகும். ஆனால் விவசாயிகள் என்னவோ தற்கொலை செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
7. சந்திரபாபு நாயுடு வாங்கிவைத்துவிட்டுப் போன கடன் சுமையை ரெட்டியால் தாங்க முடியாது. அதனாலும், மேற்படி இலவச மின்சாரத்தாலும், ஆந்திராவின் fiscal deficit கொடுமையாக இருக்கும். ஆந்திராவின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும். இதற்கிடையில் தெலுங்கானா பிரிவு என்று வந்தால் எந்த விகிதத்தில் கடன்களைப் பிரித்துக் கொள்வார்கள் என்பது பார்க்க சுவையாக இருக்கும்.

8. அடுத்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு மீண்டும் பதவிக்கு வருவார்.

Monday, May 10, 2004

நதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்

ரீடிஃப்.காம் தளத்தில் சங்கீதா ஸ்ரீராம் என்பவர் நதிநீர் இணைப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது பற்றிய எனது பதிவு இங்கே.

சங்கீதா ஸ்ரீராமின் கட்டுரைக்கு எதிர்வினையாக திட்டக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதிலளித்துள்ளார். அது நான் பதிந்துள்ள அவர்களது மின்னஞ்சல் பட்டியலின் வழியாக எனக்கு வந்துசேர்ந்தது. அதன் சுட்டி இங்கே.

பதில் எதுவும் ஆணித்தரமாக இல்லை. முக்கிய சாரம் இங்கே:

* டாஸ்க் ஃபோர்ஸின் முந்தைய தலைவர் (சுரேஷ் பிரபு) கேரளா தவிர்த்து அனைத்து முதல்வர்களுடன் பேசியுள்ளாராம். அந்த முதல்வர்களும் தங்கள் மாநிலங்களுக்கு நன்மை ஏற்படும் என்றால் தாங்கள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொல்லியுள்ளனராம். அதாவது திட்டவட்டமாக யாரும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, ஒவ்வொருவரும் தனக்கென்ன ஆதாயம் என்று தீர்மானித்துத்தான் ஆதரவளிக்கப்போகிறார்கள். திட்டமே முடிவு பெறாத நிலையில் (அதாவது யாருக்கு எத்தனை எதிகத் தண்ணீர் கிடைக்கும் என்று முடிவு செய்யாத நிலையில்) தமிழகம், ஹரியானா தவிர யாருமே ஆதரவளிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதில் கேரளா ஏன் ஈடுபடவே இல்லை என்பது புரியவில்லை. கேரளா/தமிழகம் தண்ணீர் பிரச்சினை பற்றி காலச்சுவடு இதழில் வந்த ஒரு கட்டுரையைப் பற்றிய பதிவை பின்னர் இடுகிறேன்.

* இதுவரை டாஸ்க் ஃபோர்ஸ் சுற்றுச்சுழல் பாதிப்பு பற்றியும், இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியமா (feasibility study) என்பது பற்றியும் எந்தவித சுற்றறிக்கையையும் வெளியிடவில்லை. அதாவது சாத்தியக்கூறுகள் உண்டா என்றே யாருக்கும் தெரியாது. அரசுக்குத் தெரியாது. உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியாது.

* திட்டத்திற்கான செலவு ரூ. 560,000 கோடி என்பது தோராயமான ஒரு கணக்காம். அதாவது திட்டத்திற்கான செலவு மேற்சொன்ன எண்ணிக்கையிலிருந்து வெகு விலகியும் இருக்கலாம். நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும் (ஊழல் தொகை சேர்த்து). இதில் மிகவும் ஆச்சரியகரமான விளக்கம் "Nevertheless the Task Force has looked at funding options for the programme and is of the view that the resources available within the domestic financial sector should be able to provide the funding needs of the programme." என்பதுதான்! அமைச்சர் அருண் ஷோரி மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதின் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ. 100,000 கோடி ஈட்டலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தவருடம் இதுவரை சாதித்தது வெறும் ரூ. 15,000 கோடிகளே, அதுவும் ONGC மூலமாக வந்தது. தன்னிடம் உள்ள அனைத்து நிறுவனங்களை (முக்கியமாக ONGC, BSNL) விற்றாலும் இத்தனை பணத்தை ஈட்ட முடியுமா என்று தெரியவில்லை. கடன் பத்திரங்கள் வழங்குவதன் மூலம் எத்தனை ஆயிரம் கோடிகள் ஈட்ட முடியும்? அனைத்தும் இந்தியாவிற்குள்ளேயே ஈட்டிவிடலாம் என்று மார்தட்டுவது தேவையற்றது என்று தோன்றுகிறது. இதுவரை அரசு எடுத்து நடத்தியுள்ள மிகப்பெரிய திட்டமான தங்க நாற்கோணச்சாலைத் திட்டத்தின் மொத்த திட்டச்செலவு ரூ. 54,000 கோடி. அதுவே போக வேண்டிய தூரம் வெகு அதிகம்! நதிநீர் இணைப்புத் திட்டத்தின் திட்டச் செலவு அதைப் போலப் பத்து மடங்கு! (உண்மையில் இருபது மடங்காகலாம்.)

இத்தனையிலும், மக்களை இடம்பெயர்க்கும்போது அவர்களிக்களிக்கும் நஷ்ட ஈடு பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லையாம். ஒருவேளை அது அவசியமே இல்லை என்று நினைக்கிறார்களோ என்னவொ!

* 2016க்குள் முடித்து விடலாம் என்று நினைக்கிறார்களாம். ஆனால் அது நடைபெற வேண்டுமென்றால் அனைத்து மாநில அரசுகள், பக்கத்து நாடுகள் ஆகியவற்றின் அனுமதி தேவையாம். அது எப்படி கிடைக்கப்போகிறதென்று தெரியவில்லையே?

* அண்டை நாடுகளுடன் உள்ள ஒப்பந்தங்கள் மீறப்படாது என்று உறுதி அளிக்கிறார்கள். நேபாள், பூடான், பங்களாதேசம் ஆகியவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றவே ஒழிய பாகிஸ்தானின் பெயரைக் காணோம். சிந்து நதிகள் எதுவும் திட்டத்தில் சேர்க்கப்படப்போவதில்லையா என்ன?

இந்த டாஸ்க் ஃபோர்ஸ் திக்குத்தெரியாமல் அல்லாடுவதைப் போலத்தான் தோன்றுகிறது.

ஜனநாயகக் கடமை

சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களித்து முடித்தேன்.

வாக்களித்தாயிற்று!காலை 8.10 மணிக்கு, நானும் என் மனைவியும் சென்றபோது கோபாலபுரம் கணபதி அய்யர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி வெறிச்சோடி இருந்தது. கூடவே எங்கள் ஐந்து வயது மகளையும் அழைத்துச் சென்றிருந்தோம். காவலர் ஒருவர் சிறு குழந்தைகளை அனுமதிக்க முடியாது என்றார். ராப்ரி தேவி தன் வாக்களிக்கும் வயசுடைய மகளுடன் உள்ளே செல்லலாமாம், ஐந்து வயதுக் குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்ல தாய்க்கு அனுமதி இல்லையாம். நான் முதலில் உள்ளே நுழைந்தேன். எனக்கு சற்று முன்னதாக ஒரு தம்பதியினர் கையில் எந்தவித அடையாளச் சீட்டும் இல்லாது வந்திருந்தனர். நன்கு படித்தவர்கள் போலத்தான் தெரிந்தனர். தேர்தல் அலுவலர் அவர்களை வாக்களிக்க அனுமதிக்க மறுத்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் தேர்தல் ஏஜெண்டுகள் அனைவரும் ஒரே குரலில் "பரவாயில்லை, அவர்களை வாக்களிக்க அனுமதியுங்கள், நாங்கள் அனைவரும் ஒருமனதாக அவர்களை அனுமதிக்கிறோம்" என்றனர். ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதற்குச் சம்மதிக்கவில்லை. ரேஷன் அட்டையை எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டனர்.

ஒரு தேர்தல் ஏஜெண்டு "சார், இப்ப வுட்டிட்டீங்கன்னா, நிச்சயமா திரும்பி வரமாட்டாங்க, வாக்குப்பதிவு குறைஞ்சிடுமே" என்று வருத்தப்பட்டார். ஆனால் தேர்தல் அதிகாரிகள் விடாப்பிடியாக இருந்தனர். அவ்விருவரும் திரும்பச் செல்லும்போது குடும்பத்தலைவர் "இனி நான் வரப்போவதில்லை" என்பது போல முனகிக்கொண்டே சென்றார்.

அடுத்து நான் என் பெயரைக் கண்டறிந்து, என் ஓட்டுநர் உரிமத்தை சரிபார்த்தவுடன், என் வாக்காளர் எண்ணை வாக்குச்சாவடி அதிகாரி சத்தமாகச் சொல்ல, தேர்தல் ஏஜெண்டுகள் என்னத்தையோ சரிபார்த்தனர். அந்தத் தேர்தல் ஏஜெண்டுகளை நான் இதுவரை பார்த்ததில்லை, அவர்களும் நிச்சயமாக என்னைப் பார்த்திருக்க மாட்டார்கள். அடுத்து வாக்குச்சாவடி அதிகாரி என்னிடம் ஒரு துண்டுச்சீட்டைக் கொடுக்க, அதை நான் அடுத்துள்ள ஒரு அதிகாரியிடம் வழங்க, அவர் எனக்கு கையில் அழியா மையிட்டார். அதன்பிறகு அடுத்துள்ள அதிகாரியிடம் என் துண்டுச்சீட்டை வழங்க அவர் தன்னிடமுள்ள EVM controllerஇன் பொத்தானை அழுத்தினார். பின்னர் நான் மறைவான இடத்தில் சென்று நான் வாக்களிக்க வேண்டிய வாக்காளரைத் தேடிப்பிடித்து பொத்தானை அழுத்தி, சத்தம் வந்ததும் என் வாக்கு பதிவானது என்று உறுதி செய்து கொண்டு கிளம்பினேன்.

இதற்கிடையில் வாசலில் என் மனைவியுடன் இருந்த மகள் செய்த ரகளையில் காவலர் இருவரையும் உள்ளே சென்று வாக்களிக்க அனுமதித்தார். என் மனைவி வாக்களிக்கும்போது என் மகள் தான் உடனிருந்து என்ன நடக்கிறது என்று பார்க்க அனுமதிக்கப்பட்டாள். இருவரும் வாக்களித்து வெளியில் வரும்போது புதிதாக உள்ளே யாரும் வரவில்லை. சுற்றிலும் கூட்டம் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை.

வாக்களிப்போரின் ஈடுபாடின்மை மேலோங்கித் தெரிகிறது.

[மேலே காண்பது என் விரல்தான்.]

Saturday, May 08, 2004

பெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்

புதுவீடு புகுந்துள்ள வெங்கடேஷ் சித்தரிப்புக் குழப்பங்கள் என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடர்களிலும் விளம்பரங்களிலும் பெண்கள் சித்தரிக்கப்படுவது பற்றி எழுதியுள்ளார்.

விளம்பரங்களில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி நான் முன்னம் எழுதிய பதிவு இதோ: விளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்

அன்னையர் தின வாழ்த்துகள்

 

அன்னையும், பிள்ளையும்


நாளைய அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து அன்னையர்க்கும் என் வாழ்த்துகள்.

Friday, May 07, 2004

முத்தையா முரளிதரனை வாழ்த்துவோம்!

முரளிதரன் வால்ஷின் 519 விக்கெட்டுகளைத் தொட்டுவிட்டார். இந்த ஜிம்பாப்வேயுடனான டெஸ்ட் முடிவதற்குள் வால்ஷின் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கும்.

முரளியின் 'தூஸ்ரா' பற்றியும், ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் குழப்பம் பற்றியும் நான் எழுதியிருந்த தமிழோவியம் கட்டுரை இதோ.

முரளியின் சாதனைக்கு வாழ்த்துகள். ஆனால் அவர் மீதுள்ள பழி விலகப்போவதில்லை.

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் கிரிக்கெட் பெட்டிங் தொடர்ச்சி. இத்துடன் பெட்டிங் முடிவடைந்தது!

அயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைகோ

1. இந்தியா-சீனா சுமுக உறவுக்குப் பின்னர் சீனா அதிகாரபூர்வமாக சிக்கிம் இந்தியாவைச் சேர்ந்தது என்று தான் ஒத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. [தி ஹிந்து செய்தி] இது நடப்பதற்காக திபெத் விஷயத்தில் தனது நிலையை எந்த விதத்தில் மாற்றிக்கொண்டுள்ளது என்று இந்தியா அதிகாரபூர்வமாக இதுவரை தெரிவிக்கவில்லை.

மே 1975இல்தான் சிக்கிம் இந்திய யூனியனில் இணைந்தது. அதுவரையில் இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த ஒரு முடியரசாகத்தான் அந்நாடு இருந்து வந்தது. அந்த நாட்டை ஆண்டு வந்தவர் க்யால்சே பால்டென் தோண்டுப் நாம்கியால் என்னும் மன்னராவார். [இந்த பரம்பரை மன்னர்களுக்கு சோக்யால் என்று பெயர்.] இந்திரா காந்தியின் எமர்ஜென்சி நேரத்தில் சற்றே இராணுவ மிரட்டல்களுடன் சிக்கிமில் புது அரசியல் நிர்ணயச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதைத் தொடர்ந்து ஒரு ரெபெரண்டம் (referendum) நடைபெற்று சிக்கிம் மக்கள் "ஒருமனதாக" இந்தியாவுடன் இணையச் சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக ஏப்ரல் 1975இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்திரா காந்தி சிக்கிமை இந்தியாவுடன் இணைப்பதில் காட்டிய அவசரம், சீனா சிக்கிமைத் தன்னுடன் இணைத்துவிடக் கூடாதே என்ற பயம்தான். சீனாவும் போன வருடம் வரை சிக்கிமைத் தனி நாடாகவே கருதி வந்தது.

ஆனால் சிக்கிம், பிற வட கிழக்கு மாநிலங்கள் அனைத்துமே தங்களை இந்தியாவுடன் முழுவதுமாக இணைந்தவர்களாக இதுவரை நடந்துகொண்டதில்லை. அவ்வாறு நடக்க இந்தியாவின் முக்கியக் கட்சிகளும் அனுமதிக்கவில்லை, பெரும்பான்மைப் பொதுமக்களும் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. சிக்கிமைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

2. நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இலங்கையின் புது அரசைப் பற்றிய கருத்தாகச் சொன்னதாக தி ஹிந்துவில் வெளியானது:

" Talking to mediapersons at Cumbum, Mr. Vaiko said that the newly-formed Sri Lankan Government would not be able to find an amicable solution to the Tamils problem, as Chandrika Kumaratunga destroyed the peace process by advancing the general elections.

Also, the government would not last long, he said."

Thursday, May 06, 2004

நீண்ட இடைவெளிக்குப் பின்

கடந்த நான்கு நாட்களாக கோடைக்கானலில் விடுமுறை. நான் வெக்கையிலிருந்து தப்பிக்க கோடைக்கானல் சென்றால் சென்னை முதல் கன்யாகுமரி வரை மழை. கோடைக்கானலிலும் மழை, குளிர் அதிகம். மேற்கொண்டு நான் நம்பி எடுத்துச் சென்ற என் ரிலையன்ஸ் செல்பேசி (அதன்வழியே இணையத்தில் தொடர்பு கொள்ளலாம்) சேவை கோடைக்கானலில் கிடைக்கவில்லை.

என் பதிவுகள் இன்றுமுதல் மீண்டும் தொடரும்.