Monday, August 30, 2004

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

என் பெண் பள்ளியில் கற்றுக்கொண்டு வந்த ஒரு சிறுவர் பாடல் இங்கே:

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்

யானை மேலே ஊர்வலமாம்
ஒட்டகச் சிவிங்கி நாட்டியமாம்

[நடுவில் இரண்டு வரிகள் என் பெண்ணுக்கு சரியாகச் சொல்ல வரவில்லை. யாருக்காவது தெரியுமா?]

தடபுடலாகச் சாப்பாடு
தங்கத்தட்டில் தாம்பூலம்

தாலிகட்டும் வேளையிலே
மாப்பிள்ளைக் கூட்டம் காணோமாம்

பக்கத்து வீட்டுக்குச் சென்ற பூனை
பாலைத் திருடிக் குடித்ததாம்

பார்த்து விட்டார் பெண்ணின் தாயார்
பலத்த சத்தம் போட்டாராம்

வேணாம் இந்தச் சம்பந்தம்
வெட்கக் கேடு போய் வாரும்

சுஷில் குமார் ஷிண்டேயின் சென்னை விஜயம்

மஹாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே சனிக்கிழமை சென்னை வந்திருந்தார். பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் இட ஒதுக்கீடு பற்றி நடந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். திராவிடர் கழகத்தின் வீரமணியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் அன்புமணியும் மேடையில் இருந்தார். மஹாராஷ்டிராவில் தனியார் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியதற்காக ஷிண்டே பாராட்டுப் பெற்றார்.

ஆனால் உண்மையில் மஹாராஷ்டிராவில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததா இல்லை பாதியிலேயே திரும்பப் பெற்று விட்டார்களா என்ற சரியான தகவல் இல்லை.

ஷிண்டே முழுவதும் புரிந்து கொள்ள முடியாத மனிதர். பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர். காங்கிரஸ்காரர். சாவர்கர் மிகச்சிறந்த தேச பக்தர் என்று நினைப்பவர்! சாவர்காரின் கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ், பாஜக சரியாகப் பின்பற்றுவதில்லை என்று அவர்களை வம்புக்கிழுப்பவர்.

சென்னை வந்து வீரமணி, அன்புமணி ஆகியோரோடு கூட்டம் நடத்தி, மாலைகள் வாங்கிக் கொண்டு, நேராக காஞ்சி சங்கரமடத்துக்கு தன் மனைவியுடன் சென்று ஒரு மணிநேரம் பக்தியுடன் சங்கராச்சாரியார்களுக்கு மாலைகள் கொடுத்து ஆலோசனை செய்து விட்டு மீண்டும் மும்பை சென்றுள்ளார்.

Saturday, August 28, 2004

இலக்கியச் சிந்தனைத் தேர்வு

இந்த மாதம் இலக்கியச் சிந்தனைக்காக ஜூலை 2004இல் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்க என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.

ஆனந்த் ராகவ் எழுதி கலைமகளில் வெளியான 'டாக்ஸி டிரைவர்' என்னும் கதையைத் தேர்ந்தெடுத்தேன்.

கூட்டத்தில் நான் பேசியதன் எழுத்து வடிவம் இங்கே.

Friday, August 27, 2004

MOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவின் இந்தியத் தூதர்

காரைக்கால் காங்கிரஸ் தலைவர் MOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஃபரூக் மரைக்காயர் பாண்டிச்சேரி முதல்வராக இருந்தவர். பாராளுமன்றத்தில் பலமுறை பாண்டிச்சேரிக்கான் உறுப்பினராக இருந்தவர். காங்கிரஸ் மத்திய மந்திரி சபையில் ஒருமுறை இணையமைச்சராக இருந்தார் என்ற ஞாபகம்.

MOH என்ற பெயரில் காரைக்கால், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களை இணைக்கும் பல பேருந்துகளை இவரது குடும்பம் இயக்கி வருகிறது. காரைக்கால் பகுதியில் பல்வேறு தொழில்களையும் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.

சவுதி அரேபியாவில் உள்ள நண்பர்கள் தமிழ் பேசும் இந்தியத் தூதர் கிடைத்துள்ளாரென்று சந்தோஷப்படலாம் - இல்லையா கொஸப்பேட்ட குப்ஸாமி, கானா ஆசாத்?

சமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி

இந்த வாரம் சமாச்சார்.காம் இதழில் டாடாவின் ஐடி நிறுவனம் டி.சி.எஸ் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்திருப்பது, டாடா குழுமத்தின் ஐடி மற்றும் தொலைபேசி/இணையம் தொடர்பான தொழில்கள் பற்றி. யூனிகோடில் இங்கே.

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் ரேட்டிங் பற்றிய ஓர் அறிமுகம்.

Wednesday, August 25, 2004

சட்லெஜ்-யமுனா இணைப்புக் கால்வாய்

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே உள்ள காவிரிப் பிரச்சினை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பிரச்சினை பற்றித் தெரியுமா?

1960 வருடம் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதிகளின் தண்ணிரைப் பங்கு போடுவதற்கான ஒப்பந்தம் ஒன்று நிகழ்ந்தது. இதற்கு Indus Waters Treaty, 1960 என்று பெயர்.

சிந்து நதிகள் - சிந்து (Indus), ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் - ஆகியவை. இந்தியா பாகிஸ்தான் ஒப்பந்தப்படி கிழக்கில் உள்ள ஆறுகள் ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகியவற்றின் தண்ணீர் இந்தியாவிற்கும், மேற்கில் உள்ள சிந்து, ஜீலம், சீனாப் ஆறுகளின் நீரில் பெரும்பகுதி பாகிஸ்தானுக்கும், சிறுபகுதி இந்தியாவிற்கும் எனப் பிரிக்கப்பட்டது.

இந்தப் பிரிவினை நடக்கும்போதே இந்தியா தன் நாட்டில் உள்ள பல மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவையாக உள்ளது - முக்கியமாக ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளுக்கும் நீர் தேவை என்று விவாதம் செய்துதான் மேற்படி ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் நிறைவேற்றியது. அந்த நேரத்தில் பஞ்சாப், ஹரியானா இரண்டும் ஒன்றாக பஞ்சாப் என்ற பெயரில் இருந்தது. 1966இல்தான் பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பஞ்சாப், ஹரியானா என இரு மாநிலங்களானது. அப்பொழுது பாராளுமன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட Punjab Reorganization Act, 1966 பஞ்சாபுக்கும் ஹரியானாவுக்கும் எவற்றை எந்த விகிதத்தில் பிரித்துக் கொடுப்பது என்பதை உள்ளடக்கியது. 1976இல் மத்திய அரசு பஞ்சாபும், ஹரியானாவும் தண்ணீரை எந்த விகிதத்தில் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டது. இந்தத் தண்ணிரைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக சட்லெஜ் - யமுனா ஆறுகளை இணைக்கும் ஒரு கால்வாய் கட்டப்படவேண்டும் என்று முடிவாகி, வேலையும் 1978இல் தொடங்கியது. ஆயினும் பிரகாஷ் சிங் பாதலின் அப்பொழுதைய பஞ்சாப் அரசு 1978இல் இந்த விகிதத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. தொடர்ந்து ஹரியானாவும், ராஜஸ்தானும் உச்ச நீதிமன்றம் சென்றன.

சீக்கியத் தீவிரவாதம் வலுத்த போது நதிநீர்ப் பங்கீடும் கோபத்தை அதிகப்படுத்தும் ஒரு காரணமாக இருந்தது. 1981இல் இந்திரா காந்தியின் தூண்டுதலில் பேரில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் காங்கிரஸ் (ஐ) முதல்வர்கள் ஒன்று சேர்ந்து புது ஒப்பந்தம் (Water Sharing Agreement, 1981) ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து ஹரியானா, ராஜஸ்தான் இருவரும் உச்ச நீதிமன்றத்திலிருந்த தங்கள் வழக்குகளைத் திரும்பப் பெற்றனர்.

ஆயினும் பஞ்சாபில் மட்டும் பொதுமக்களிடையே இந்த ஒப்பந்தத்திற்கு வரவேற்பில்லை. இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு, ராஜீவ் காந்தி-லோங்கோவால் ஒப்பந்தத்திலும் (Punjab Accord, 1985) சட்லெஜ்-யமுனா இணைப்புக் கால்வாய் வேலைகள் தொடர்ந்து நடக்கும் என்றே முடிவு செய்யப்பட்டது.

ஆனால் வருடங்கள் பலவாகியும் பஞ்சாப் பகுதியில் வேலை தொடர்ந்து நடக்காததால் ஹரியானா உச்ச நீதிமன்றம் செல்ல, உச்ச நீதிமன்றம் 4 ஜூன் 2004 அன்று மத்திய அரசே இந்த வேலையை எடுத்துக்கொண்டு செய்து முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். உடனே பஞ்சாப் அமரீந்தர் சிங் அரசு சட்டசபையில் Punjab Termination of Agreement Act, 2004 எனும் சட்டத்தை இயற்றி இதற்கு முன்னால் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் செல்லாது என்று அறிவித்தது. என்னவோ அதற்காகவே காத்திருந்தது போல பஞ்சாப் கவர்னரும் அடுத்த நாளே இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டார். இது குழப்பம் நிறைந்தது என்றால் அவரே குடியரசுத் தலைவரிடம் ஒரு வார்த்தை பேசியிருந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

22 ஜூலை 2004 அன்று, 'இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தால் நிஜமாகவே முன்னால் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களெல்லாம் ரத்தாகி விடுமா என்ன' என்ற ஒரு கேள்வியை மத்திய அரசு குடியரசுத் தலைவர் கேட்பதாக உச்ச நீதிமன்றம் முன்னால் கொண்டுவந்தது. இந்த Presidential reference ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சிடம் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே பஞ்சாபும் தன் பங்குக்கு உச்ச நீதிமன்றம் போய், அதன் 4 ஜூன் 2004 தீர்ப்பை ரத்து செய்யுமாறு வேண்டிக்கொண்டது. ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 'அதெல்லாம் முடியாது, மத்திய அரசு அந்தக் கால்வாயைக் கட்டியே ஆக வேண்டும். 4 ஜூன் 2004 தீர்ப்பில் மாற்றம் இல்லை' என்று தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் அளவில் பல தர்மசங்கடமான கேள்விகள் வெளிவருகின்றன.

1. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் கலந்தாலோசிக்காமல் இந்தக் காரியத்தைச் செய்தாரா? அப்படியானால் அவர்மீது காங்கிரஸ் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை?

2. ஹரியானாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கொதித்துள்ளனர். உடனடியாக தங்கள் ராஜினாமாவை ஹரியானா காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் தலைமை தன் கட்சியின் பஞ்சாப், ஹரியானா மக்களை எப்படித் திருப்திப்படுத்தப் போகிறது?

3. ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, யமுனா வழியாக புது தில்லிக்குக் கொடுக்கும் தண்ணீரை நிறுத்தினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கிறார். தில்லியிலும், பஞ்சாபிலும் ஆள்வது காங்கிரஸ். ஹரியானாவில் காங்கிரஸ் எதிர்க்கட்சி. இப்படி ஆளாளுக்கு ஏற்கனவே கையொப்பமிட்டிருக்கும் ஒப்பந்தங்களை மீறினால் என்னாவது?

4. பாஜக காங்கிரஸின் அமரீந்தர் சிங் மீது புகார் சொல்கிறதேயொழிய தன் கூட்டாளியான அகாலி தள் தலைவர் பாதலைக் குறை கூறவில்லை. ஆனால் பாதல இந்த விஷயத்தில் அமரீந்தர் சிங்கை முழுமையாக ஆதரிக்கிறார். சொல்லப்போனால் தான் இந்த விஷயத்தைச் செய்திருக்ககூடாதா என்று வருத்தப் படுகிறார். பாஜக ஆட்சியில் இருந்தால் என்ன செய்திருக்கும்?

5. நம் நாட்டின் தலைவர்கள் எப்பொழுது குறுகிய சுயநலத்தை விடுத்து நாட்டின் முழு நலனை மனதில் வைத்து வேலை செய்யப்போகிறார்கள்?

Tuesday, August 24, 2004

தேர்தல் சீர்திருத்தங்கள் - 4

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றி நிறையப் பெருமை பேசினார். (தி ஹிந்து செய்தி பாருங்கள். அந்தச் செய்தியில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதைப் பற்றி மட்டும்தான் எழுதியுள்ளனர்.)


தொடர்ந்த கேள்வி பதில். சென்னையில் நடக்கும் எல்லா பேச்சுகளுக்கும் எப்பொழுதும் ஆஜராகும் ஒருசில உபயோகமற்ற ஆசாமிகள் இங்கும் வந்து ஒரு பிரசங்கம் செய்து எதோவொரு கேள்வியை எசகுபிசகாகக் கேட்டு, பெருமையுடன் அமர்ந்தனர். [அபத்தத்துக்கு உதாரணம்... "எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால், குடியரசுத் தலைவருக்கு என் வாக்கைப் போடலாமா?"]

ஒரு எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி மாணவி ஊனமுற்றவர்கள் வாக்களிக்க என்ன உதவிகளை ஆணையம் செய்கிறது என்று கேட்டார்.

கிருஷ்ணமூர்த்தியின் பதில்: வாக்குச் சாவடிகளில் சக்கர இருக்கை வண்டிகள் போகுமாறு சரிவல்கள் ஏற்படுத்தித் தர முயல்கிறோம். ஊனமுற்றுவர்கள் வாக்களிக்க வந்தால் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. வரிசையை முந்திக்கொண்டு நேரடியாக வாக்களிக்கப் போகலாம். கூடவே அவர்கள் ஒருவரைத் துணையாகக் கூட்டிக் கொண்டு வரலாம். கண் பார்வையற்றவர்களுக்கு பிரெயில் முறையில் வாக்களிக்கும் இயந்திரத்தில் அமைக்க முடியுமா என்று சிலர் கேட்டுள்ளனர். ஹைதராபாதில் இருக்கும் ஒரு அமைப்புடன் இதில் என்ன சாத்தியப்படும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். முன்னரே இருக்கும் தேர்தல் ஆணையத்தின் ஓர் ஆணைப்படி, கண் பார்வையற்றவர் தன்னுடன் வேறொருவரைக் கூட்டிக் கொண்டு வந்து வாக்களிக்கலாம். ஊனமுற்றவர்கள் தபால் வாக்களிக்க முடியுமா என்பதையும் யோசித்து வருகிறோம்.

மற்றொருவர் "மக்கள் குற்றவாளிகளுக்குத்தான் வாக்களிக்க விரும்புகிறார்கள் என்றால் விட்டுவிட வேண்டியதுதானே? அது மக்களின் உரிமை. ஏன் நீங்கள் குற்றவாளிகள் தேர்தலில் நிற்கக்கூடாது என்று கட்சி கட்டுகிறீர்கள்" என்று கிருஷ்ணமூர்த்தி மீது ஆவேசமாகக் குற்றம் சாட்டினார். கிருஷ்ணமூர்த்தி "உங்கள் கருத்து அது. என் கருத்து குற்றவாளிகள் அரசியலில் இருக்கக்கூடாது என்பது" என்பதோடு நிறுத்தி விட்டார்.

இறுதியில் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி தாளாளர் ஹரிதாஸ் நன்றி கூற, நிகழ்ச்சி நிறைவுற்றது.

தேர்தல் சீர்திருத்தங்கள் - 3

பிரதமர், பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தம் பற்றிய மனுவிலிருந்து ஒருசிலவற்றைப் பற்றிப் பேசினார்.

1. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பது: இப்பொழுது குற்றம் தீர்ப்பானால்தான் ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது என்றுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டிருந்தாலே, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை (chargesheet) தாக்கல் செய்யப்பட்டிருந்தாலே, இந்தக் குற்றங்களுக்கான தண்டனை 5 வருடத்திற்கும் மேற்பட்டிருக்கும் என்றால், அந்த நபர்கள் தேர்தலில் நிற்பது தடைசெய்யப்பட வேண்டும்.

கடந்த 57 வருடங்களில் நாட்டின் குற்றவியல் நீதித்துறையின் செயல்பாடு மோசமானதாகவே உள்ளது. குற்றங்கள் நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டு நீது வழங்குவதற்கு எக்கச்சக்க காலதாமதமாகிறது. குற்றவியல் நீதித்துறையின் செயல்பாட்டை சரி செய்வதற்கு முன், தாற்காலிகமாவது தேர்தல் ஆணையத்திடம் மேற்படி அதிகாரம் இருந்தால் அதன்மூலம் தேர்தலில் குற்றவாளிகள் கோலோச்சுவதைத் தடை செய்ய முடியும்.

அரசியல் கட்சிகள் சற்று விசாலமான மனதுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்.

2. அச்சு/தொலைக்காட்சி ஊடகத்தில் வரும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆளும் அரசு அந்நேரங்களில் வெளியிடும் ஒருசில விளம்பரங்களை முழுவதுமாகத் தடைசெய்ய வேண்டும்.

3. வாக்குச்சீட்டில் (வாக்கு இயந்திரத்தில்) "என் வாக்கு யாருக்குமில்லை" என்ற தேர்வும் இருக்க வேண்டும். இப்படி 50% மேற்பட்டோர் 'என் வாக்கு மேற்குறிப்பிட்ட யாருக்குமில்லை' என்றால் மறு தேர்தல் நடத்த வேண்டும்.

4. அரசியல் கட்சிகள் தங்கள் கணக்குகளை முறையாக ஆடிட் செய்ய வைப்பது.

5. பல அரசியல் கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டுகள் (Polling Agent) தங்கள் வேட்பாளர்களுக்கு விசுவாசமாக இருப்பதில்லை. ஏதோ பயத்தினால் வாக்குச் சாவடியில் கள்ள வாக்கு வரும்போது அவற்றைச் சுட்டிக்காட்டத் தயங்குகிறார்கள். மறு வாக்குப் பதிவு என்றாலே நடுங்குகிறார்கள். அரசியல் கட்சிகள் ஏஜெண்டுகளை நியமிக்கும்போது கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

6. சிறு கட்சிகள் பற்றிய நாடு தழுவிய விவாதம் தேவை.

7. வெற்றி பெற்ற பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரம் (recall). அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த recall பற்றிப் பேசினார். [ஆனால் தவறாக நியூ யார்க் என்று சொல்லிவிட்டார்.] அதுபோன்ற அதிகாரம் ஏதாவது ஒருவகையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

8. சுயேச்சைகளுக்கு பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் உரிமை கொடுக்கப்பட வேண்டுமா என்பது பற்றிய விவாதம். வேண்டுமானால் மாநில சட்டமன்றங்களுக்கு நிற்கும் உரிமை மட்டும் இருந்தாலே போதுமானது.

9. (பிரதமர் போன்ற) முக்கியப் பதவிகளுக்கு 'first past the post' முறையில் தேர்தல் நடத்தலாம். [இதைத்தான் சொன்னார் என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம்.]

தேர்தல் சீர்திருத்தங்கள் - 2

கிருஷ்ணமூர்த்தி பேசத் தொடங்கும்போது செழியன் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் தான் மேடையில் உட்கார்ந்தேன் என்று சொன்னார். இப்பொழுது பாராளுமன்றத்தில் நடக்கும் அமளியைப் பார்க்கும்போது இரா.செழியன் போன்ற பலர் பாராளுமன்றத்தில் இல்லையே என்பது வருத்தம் தருவதாக உள்ளது என்றார்.

இந்தியத் தேர்தலைப் பற்றிப் பேசும்போது உலகில் இத்தனை பெரிய தேர்தல் எங்கும் நடைபெறுவதில்லை, இந்த அளவிற்கு திறம்படவும் நடைபெறுவதில்லை, அதிகபட்சமாக கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னமும் சிறப்பாக நடைபெறலாம் என்று தான் கருதுவதாகச் சொன்னார். [பின்னர் வேறிடத்தில், ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும், மதிய நேரத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலிருந்தும் வாக்களிக்காத வாக்காளர்களை தொலைபேசியில் கூப்பிட்டு ஏன் இன்னமும் வாக்களிக்க வரவில்லை என்று விசாரிப்பார்கள் என்றும் அதுபோலெல்லாம் இந்தியா போன்ற பெரிய நாட்டில் முடியாது - சில பாராளுமன்றத் தொகுதியில் 15-20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் சொன்னார்.]

பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது ஆஸ்திரேலியாவின் தேர்தல் கமிஷனர் இந்தியாவில் இருந்ததாகவும், இந்தியாவில் நடந்த தேர்தலை வெகுவும் பாராட்டியதாகவும் சொன்னார்.

பாராளுமன்றத் தேர்தல் நான்கு பாகங்களாக நடைபெறுவதாக இருந்தது, திரிபுராவில் ஏற்பட்ட சில காரணங்காளால் ஐந்து பாகங்களாக நடந்தது. தொடக்கத்திலிருந்து இறுதி வரை கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆயின. இதைப் பலர் குறை கூறினர். தானும் தேர்தல் முழுவதும் ஒரே நாளில் நடைபெற விரும்பியதாகவும், சுமுகமாக நடக்க வேண்டுமானால் அதற்கென தனக்கு 1,200 மத்தியக் காவல் படை கம்பெனிகள் தேவைப்பட்டதென்றும் உள்துறை அமைச்சகம் அதைத் தர மறுத்ததால் வேறு வழியின்றி நான்கு/ஐந்து பாகங்களாக நடத்த வேண்டியிருந்ததென்றும் சொன்னார்.

நாட்டின் சில இடங்களில் உள்ளூர் காவல்துறையை நம்பியிருந்தால் நேர்மையான தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லையென்றும் மத்தியக் காவல்படை (Central Paramilitary Forces) இல்லாவிட்டால் நாட்டில் ஒழுங்கான தேர்தல் நடந்திருக்காது என்றும் அவர் சொன்னது கவலையைத் தருகின்றது.

தேர்தல் நடத்தியதிலிருந்து தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது என்ன என்பதை விளக்கினார்.

1. வாக்காளர் பெயர் பதிவு சீர்படுத்தப் பட வேண்டும்
  • வாக்காளர் பெயர்ப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தது தெரிய வந்தது. சரியான வழிமுறைகள் இருந்தும் அதைச் சரிவரப் புரிந்து கொள்ளாத பணியாளர்களின் தவறுதலால் எக்கச்சக்க குழப்பங்கள் விளைந்தது என்றார்.
  • இனி யாருடைய பெயரையும் நீக்க ஒரு பணியாளருக்கு அதிகாரம் கிடையாது என்றும், இருவராவது அதனைச் சரிபார்த்தால்தான் பெயர்கள் நீக்கப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது என்றார்.
  • மஹாராஷ்டிரா, தமிழகம், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மொத்தமாக பல்லாயிரக்கணக்கானோர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது குறித்த பல்வேறு புகார்களை ஆணையம் தீவிரமாக விசாரித்தது. அதிலிருந்து கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன:
  • மஹாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 5 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. அவற்றைத் தீவிரமாகப் பரிசோதித்து ஒவ்வொரு புதிதாக எழுப்ப்பப்பட்ட கட்டிடங்களிலும் வசிப்பவர்களைச் சரியாகக் கவனித்து பெயர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
  • மிக அதிகமாகப் பேசப்பட்ட தமிழகத்தில் மொத்தமாக 84,000 பெயர்கள் விடுபட்டதாகப் புகார் வந்தது. அதைப் பரிசோதித்தபின் அதில் கிட்டத்தட்ட 75,000 நியாயமான புகார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 9,000 புகார்கள் பொய்யானவை என்று கண்டுபிடிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
  • மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், எந்த மாநிலத்திலும் அதிக பட்சமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் விடுபடவில்லை. அவையனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டன.
  • பரிசோதனை முயற்சியாக மஹாராஷ்டிரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பது இணையம் மூலமாக நடக்கிறது. தபால் அலுவலகங்கள் வழியாகவும் வாக்காளர் பெயர் சேர்ப்பு பரீட்சார்த்தமாக நடக்கிறது. இவ்விரண்டும் சரியாக நடந்தால் நாடு முழுவதும் இந்நிலை பின்பற்றப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பெயர்கள் சேர்க்கலாம் என்பது போய் வருடம் முழுதும் பெயர்களை எப்பொழுது வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்ற முறை இனி பின்பற்றப்படும்.
  • உதாரணத்திற்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 6 மில்லியன் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுப் போயுள்ளன. அத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆனால் போனால் போகட்டும் சில லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தால் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று விட்டுவிடாமல் செய்முறையைச் சீர்படுத்திக் கொண்டிருக்கிறோம். ("இப்படிப் பெயர்கள் விடுபட்டுப் போனதை அறிந்ததும் எனக்கு அந்த வாரம் முழுதும் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை")
  • வடகிழக்கில் தேர்தல் நடத்துவது சாதாரணமான வேலையில்லை. பல பழங்குடியினர் அவரவர்கள் மாநிலத்திலேயே வசிப்பதில்லை. அகதிகள் முகாமில் வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான வாக்குகள் வேறிடத்தில் உள்ளன. சரியாகக் கண்காணித்து அவர்களுக்குத் தேவையான வாக்களிக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பங்களாதேஷ் அகதிகள் [சக்மா] பலருக்கு [ஆசாம் அக்கார்ட் படி] குடியுரிமை, வாக்குரிமை உண்டு. இதற்கு பலத்த எதிர்ப்பிருந்தும் தேர்தல் கமிஷன் Citizenship Act படி நடந்துகொண்டு இப்படிப்பட்டவர்கள் வாக்களிக்கத் தேவையான வசதிகளைச் செய்து தருகிறோம்.
  • எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்காளர் பட்டியல் மீது எந்தவொரு அக்க்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. தேர்தல் நாளுக்கு வெகு முன்னதாகவே பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம், ஆனால் தேர்தல் நாளன்றுதான் 'என் பெயர் இல்லை' என்ற புகார்கள் வருகின்றன.
  • இப்பொழுதுள்ள சட்டப்படி யாரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கச் சொன்னதும் 7 நாள்கள் கழித்துதான் அவர்களது பெயரைச் சேர்க்க முடியும். அரசின் உதவியோடு இதைக் குறைக்க முடியுமா என்று பார்க்கிறோம்.
2. அரசியல் கட்சிகளின் நடத்தை
  • அரசியல் கட்சிகள் முதிர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்கின்றன.
    - அரசியல் விளம்பரங்கள் மிகக் கேவலமாக இருந்தன. ஒரு கட்சி எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு மோசமாகவும் நடந்து கொள்கிறது.
  • அரசியல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
  • ஏகப்பட்ட சின்னஞ்சிறு பிராந்தியக் கட்சிகள் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டிபோட அனுமதிக்கப்படலாமா என்று ஒரு விவாதம் தேவை. பிரிட்டனில் கிட்டத்தட்ட 150 கட்சிகளுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் தேசியத் தேர்தலில் போட்டியிடும்போது அவையனைத்தும் இணைந்து அதிகமாக நான்கு குழுக்களே போட்டியிட்டன. அதுபோல இந்தியாவிலும் சிறு கட்சிகள் ஒரு கூட்டமைப்பின் அங்கமாகத்தாண் போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.
  • அதுபோலவே சுயேச்சைகள் போட்டியிட அனுமதிக்கலாமா என்பதைப் பற்றிய விவாதமும் தேவை. மெக்சிகோவில் சுயேச்சைகள் போட்டிபோட முடியாது. கட்சித்தாவல் தடைச் சட்டம் சுயேச்சைகளுக்குப் பொருந்தாது. இதனால் அதிகக் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
  • இந்த விஷயங்களில் தேர்தல் ஆணையத்துக்கென எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. ஆனால் இது பற்றியெல்லாம் நாடு தழுவிய விவாதங்கள் தேவை.
3. தேர்தல் செலவுகள்
  • தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த அரசே வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்யலாம் என்றொரு எண்ணம் நிலவுகிறது. அப்படிச் செலவு செய்வதாக இருந்தால் அது நிதியாக - பணமாக - கொடுக்கப்படக் கூடாது. பொருளாகத்தான் - போஸ்டர் அடித்து போஸ்டர்களாகவே - கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பணத்தைப் பெறுவதற்கென்றே பல கட்சிகள் புதிதாகத் தோன்றும்.
  • கருத்துக் கணிப்பு, எக்ஸிட் கணிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க ஓர் அமைப்பு தேவை. இந்த opinion poll, exit poll நடத்தும் மீடியாவே கட்சிகளிடமிருந்து பேருமளவில் விளம்பரங்களையும் பெறுகின்றன. அதனால் ஒருசில கட்சிகளுக்குச் சாதகமாக வேண்டுமென்றே கருத்துக் கணிப்புகளின் முடிவை மாற்றியமைக்கலாம்.
4. தேர்தலில், மாநில நிர்வாகத்தின் (administration) பங்கு
  • பல நிர்வாகிகள் அரசியலில் தலையிடுகிறார்கள், அரசியல்வாதிகள் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்.
  • நிர்வாகத்துறையில் பெருமளவு சீர்கேடு நிகழ்ந்துள்ளது.
  • பல அரசுத்துறை நிர்வாகிகள் அரசியல்வாதிகளுக்குப் பணிந்துபோய் விடுகிறார்கள். இவர்கள் எழுந்து நின்றாலே, தேர்தல் நடத்துவது சுலபமாகிவிடும்.
  • ஒரு மாநிலத்தில், சில பணி மாற்றங்களைச் செய்யச் சொல்லியிருந்தோம். அந்தத் தலைமைச் செயலர் தன் முதலமைச்சரிடம் சொல்லாமல் இந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கினார். முதலமைச்சரிடம் சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள், ஆனால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றோம். அப்படி மீறி இந்த மாற்றங்களைச் செய்வதில் தாமதாகுமென்றால் வேறொரு தலைமைச் செயலரை நாங்கள் கொண்டுவர வேண்டியிருக்கும் என்றோம். அந்த அளவிற்கு ஆளும் கட்சியின் ஏஜெண்டுகளாகவே பல அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது எப்பொழுது மாறுமோ அப்பொழுதுதான் நேர்மையான தேர்தலைத் திறம்படச் செய்யமுடியும்.
  • இதுபோன்ற அதிகாரிகள் தலையீடு நடக்கும் இடங்களிலெல்லாம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் (Election Observers) மூலமாக, அவர்கள் தலையீட்டைக் குறைத்தோம்.
5. வன்முறை
  • ஒரே நாளில் தேர்தல் நடந்திருந்தால் வன்முறையை வெகுவாகக் குறைத்திருக்க முடியும்.
  • தேர்தலை யாராவது பகிஷ்கரிக்க விரும்பினால் பரவாயில்லை. ஆனால் பிறர் வாக்குச் சாவடிக்குப் போவதை தடுப்பதைத்தான் அனுமதிக்க முடியாது.
  • கடந்த தேர்தலில்தான் மிகக் குறைந்த அளவு வன்முறை இருந்தது. ஆயினும் தாங்க முடியாத அளவிற்கு பணமும், வன்முறையும் இருந்தது என்பதுதான் உண்மை.
  • வட இந்தியாவில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் எங்கெல்லாம் வன்முறை இருந்ததோ அதையெல்லாம் கண்டறிந்து மறு தேர்தல் நடத்தினோம்.
  • தீவிரவாதப் பிரச்சினைகள் இருக்கும் இடங்களை விட, மற்ற சில மாநிலங்களில்தான் வன்முறை அதிகமாக இருந்தது. [பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் இவர் பீஹாரைத்தான் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.]
6. நடத்தை விதிகளை மதிக்காதது
  • கட்சிகள் தேர்தல் நேரத்தில் நடந்துகொள்ள வேண்டும் என கட்சிகளே ஒன்றுநேர்ந்து நடத்தை விதிகள் (Code of conduct) என உருவாக்கியுள்ளன. இது சட்டமாக்கப்படாத, கட்சிகளாக ஒத்துக்கொண்டிருக்கும் விதிகள்.
  • இந்த விதிகளை எல்லாக் கட்சிகளும் மீறின.
  • இப்படிப்பட்ட விதிகளை மீறும் வேட்பாளர்களைத் தடை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்தால் இதனால் நல்ல பலன் இருக்கும் எனத் தோன்றுகிறது.

தேர்தல் சீர்திருத்தங்கள் - 1

ஞாயிறு (22 ஆகஸ்ட் 2004) மாலை 5.30 மணியளவில் உந்துநர் அறக்கட்டளை (Catalyst Trust) சார்பாக சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசினார்.

உந்துநர் அறக்கட்டளை சென்னையிலிருந்து நடைபெறும் மக்கள் விழிப்புணர்வு இயக்கம். குடியாட்சி முறை சிறப்பாக நடைபெற வேண்டுமானால் மக்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை விழிப்புடன் கண்காணிப்பது அவசியம் என்பதை வலியுறுத்துவதே உந்துநர் அறக்கட்டளையில் நோக்கம். 'குடிமக்கள் முரசு' என்னும் தமிழ் மாத இதழை நடத்தி வருகிறது இந்த அறக்கட்டளை.

இரா.செழியன் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

உந்துநர் அறக்கட்டளையின் தலைவர் B.S.ராகவன் (ஓய்வுபெற்ற இ.ஆ.ப) டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை வரவேற்றுப் பேசினார். டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 'இந்திய அரசியலின் கங்கோத்ரி' என்று பாராட்டினார். உலகின் எட்டாவது அதிசயம் இந்தியத் தேர்தல் - இதனை மிகவும் திறம்படச் செய்து காட்டியவர் கிருஷ்ணமூர்த்தி என்று புகழாரம் சூட்டினார். இந்தியாவில் 675 மில்லியன் வாக்காளர்கள் (இதில் 55-60% தான் வாக்களிக்க வருகிறார்கள்), 700,000 வாக்குச் சாவடிகள், 1 மில்லியன் மின்னணு வாக்கு இயந்திரங்கள், 500,000 தேர்தல் பணியாளர்கள், 5000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் என்று பிரம்மாண்டமான முறையில் நடைபெறுவது இந்தியப் பாராளுமன்றத்துக்கானப் பொதுத் தேர்தல், என்றும் இப்படிப்பட்ட தேர்தலை திறமையாக நடத்தியிருப்பவர் அமெரிக்காவில் மட்டும் இருந்துவிட்டால் அவர் மீது பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும், பல பெருமைகள் குவிந்திருக்கும், ஆனால் இந்தியாவில் நாம் இத்தகைய ஒரு மாபெரும் விஷயத்தைச் செய்தவரைப் பற்றி கண்டுகொள்வது கூட இல்லை என்றார் ராகவன்.

இந்தியாவில் மூன்று அமைப்புகள் அரசியல் நிர்ணயச் சட்டத்தை இயற்றியவர்கள் எதிர்பார்த்தமாதிரி இதுவரை நடந்துள்ளது. அவை இராணுவம், நீதித்துறை, தேர்தல் கமிஷன். இதில் கூட முதலிரண்டில் அவ்வப்போது சில தொல்லைகள் இருந்தாலும் தேர்தல் கமிஷனைப் பொருத்தவரை அப்பழுக்கற்றதாய் உள்ளது என்றார்.

கிருஷ்ணமூர்த்தி தேர்தல், அரசியல் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் வேண்டுமென்று கோரி பிரதமருக்கு 22 சிபாரிசுகள் அடங்கிய மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதுபற்றி அவர் தன் பேச்சில் விரிவாகப் பேசுவார் என்று முடித்தார் ராகவன்.

இரா.செழியன் பேசும்போது தான் ஓர் அரசியல்வாதி, ஆனால் இப்பொழுது எந்தக் கட்சியிலும் இல்லை என்றார். குடியாட்சியைப் பற்றிப் பேசும்போது அவர் சொன்னது: "குடியாட்சி என்பது நடக்கும் ஆட்சியை பயமின்றி விமர்சிக்கும் உரிமை, வன்முறையின்றி மாற்றும் உரிமை" என்றார். [இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது... ஆங்கிலத்தில் இரா.செழியன் சொன்னது - "Democracy is the right to criticise the Government without fear and the right to change the Government without violence". இது செழியனுடைய சொந்த சரக்கா, இல்லை வேறு ஏதோ அறிஞருடையதை மேற்கோள் காட்டுகிறாரா என்று தெரியவில்லை.]

அனைவருக்கும் வாக்குரிமை என்பதை சிலர் எதிர்க்கிறார்கள். ஒன்றும் படிக்காத முட்டாள்கள் ஓட்டுப்போடுவதால்தான் பொறுக்கிகள் ராஜ்ஜியம் நிலவுகிறது. இதை மாற்றி வாக்குரிமை குறைந்த பட்சம் ஓரளவு வரை படித்தவர்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் சில இடங்களில் நிலவுகிறது. அதனைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார் செழியன். இந்த நாடு சில நேரங்களில் வழி பிறழ்ந்தபோதெல்லாம் 'படிக்காதவன்' கூட்டமாக வந்து வாக்குச் சாவடியில் வாக்களித்துத்தான் நாட்டைக் காப்பாற்றியுள்ளான். அதனால் 'அனைவருக்கும் வாக்குரிமை' அவசியம் என்றார்.

தேர்தல் செலவுகள் பற்றிப் பேசும்போது கட்சிகள் audited accounts ஐ தேர்தல் ஆணையத்திற்குக் கொடுப்பதில் உள்ள கஷ்டங்களைப் பற்றிப் பேசினார். பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கு சரியான கணக்கு காட்ட முடியாது. அப்படி நன்கொடை யார் கொடுத்தது என்பதை ஓர் எதிர்க்கட்சி கணக்காகக் காட்டினால், அங்குள்ள ஆளும் கட்சி நன்கொடை கொடுத்தவர்களைத் துன்புறுத்தலாம் என்றார். மேலும் கிடைத்த பணமெல்லாம் பொதுமக்கள் பொதுக்கூட்டங்கள் அஞ்சு, பத்து என்று சில்லறையாகப் போட்ட பணம், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதற்குக் கணக்கில்லை என்றும் சொல்லி விடலாம் என்றார்.

[இதற்குப் பின்னால் பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு அரசியல் கட்சியும் வருமான வரி விலக்கு பெற வேண்டுமானால் audited accounts ஐ வருமான வரி அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும். மேலும் ரூ. 20,000க்கு மேல் நன்கொடை பெற்றால் கொடுத்தவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க்க வேண்டும் என்று இப்பொழுதே ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதைப் பற்றி ஆலோசனை செய்யும் என்றார்.]

Monday, August 23, 2004

அக்கு யாதவ் கொலை

13 ஆகஸ்ட் 2004, வெள்ளிக்கிழமை அன்று நாக்பூரில் ஒரு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அக்கு யாதவ் என்பவனை ஒரு பெண்கள் கூட்டம் நீதிமன்ற வளாகத்திலேயே கல்லால் அடித்தே கொலை செய்து விட்டது.

அக்கு யாதவ் நாக்பூரைச் சேர்ந்தவன். அவனை அடித்துக் கொலை செய்த கிட்டத்தட்ட 200 பெண்கள் கஸ்தூர்பா நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கஸ்தூர்பா நகரின் தாதாவாக வலம் வந்த அக்கு யாதவ் கடந்த 14 வருடங்களில் அந்த பஸ்தியின் பெண்களைக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளான் என்கிறார்கள் அந்தப் பெண்கள். கஸ்தூர்பா நகரில் வசிக்கும் தலித் மக்கள் நாள் கூலிக்கு வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள். கடந்த 14 வருடங்களில் அக்கு யாதவின் ஆட்கள் இந்த வீடுகளில் நுழைந்து அங்குள்ள ஆண்களை அடித்துப் போட்டுவிட்டு பெண்களை வன்புணர்வார்களாம். பிள்ளைகளைக் கடத்திச் சென்று, திருப்பிக் கொடுக்க பணயப் பணம் கேட்டு வசூலிப்பார்கள்.

கடந்த 12 வருடங்களில் அக்கு யாதவ் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றும் 43 வன்புணர்வுக் குற்றங்கள் பற்றி சாட்சியங்கள் இருந்தும் ஒரு வழக்கு கூடப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வழக்கில் ஜாமீன் வாங்கிக் கொண்டு யாதவ் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பான். இதனால் அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல மக்கள் தயங்கினர்.

பல குடும்பங்கள் இந்தச் சேரியை விடுத்து வேறு இடங்களுக்கு வசிக்க ஓடிப்போகலானார்கள். ஆனால் எத்தனை பேர்தான் ஓடிப்போக முடியும். கடைசியாக அக்கு யாதவ் 13 ஆகஸ்ட் அன்று நீதிமன்றம் வருவான் என்பதை அறிந்ததும் பெண்கள் ஒன்றுசேர்ந்து அங்கேயே அவனைத் தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்துள்ளனர். கூட்டமாகப் போய் அடித்துக் கொண்று விட்டனர்.

தங்களுக்கு காவல்துறை, நீதித்துறை மீது நம்பிக்கை இல்லை என்று இந்தப் பெண்கள் சொல்லியிருப்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது.

இந்தக் கொலையில் ஈடுபட்ட ஐந்து பெண்களை உடனே காவல்துறை கைது செய்து ஜெயிலில் போட்டுள்ளது. அந்த ஐவர் மீதான நீதிமன்றக் காவல் பற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடக்க இருக்கும்போது மேலும் 150 பெண்கள் கூட்டமாக நீதிமன்றம் வந்து தங்களையும் கைது செய்யுமாறு போராட்டம் நடத்த, கடைசியாக அந்த ஐந்து பெண்களுக்கும் பெயில் வழங்கப்பட்டுள்ளது.

200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அந்தப் பெண்களுக்காக இலவசமாக வாதாட முன்வந்துள்ளனர். தேசியப் பெண்கள் கமிஷனின் தலைவர் பூர்ணிமா அத்வானி இந்தப் பெண்களுக்காகப் பரிந்து பேசியுள்ளார்.

இனி என்ன நடக்க வேண்டும்? என்னதான் தற்காப்புக்கான கொலை என்றாலும் இது குற்றம்தான். அதுவும் திட்டமிட்டு நடந்த கொலை. இந்தப் பெண்களை அப்படியே விட்டுவிடுவதால் இது போன்ற கூட்டமாக மக்கள் ஈடுபடும் பல கொலைகள் நிகழலாம். எல்லாவற்றுக்கும் நீதித்துறையில் கையாலாகாத் தனம் காரணமாகச் சொல்லப்படும். குஜராத்தில் கூட சில வெறிக்கூட்டங்கள் (mobs) கூட்டமாகப் போய் பல முஸ்லிம் குடும்பங்களைக் கொன்று தள்ளியுள்ளது.

இந்தப் பெண்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த தண்டனையை மட்டும் அளித்து, அத்துடன் அந்த தண்டனையையும் குறைத்து, பெயிலும் வழங்கலாம்.

அத்துடன் முக்கியமாக காவல்துறை, நீதித்துறை களுக்கு தாங்கள் ஒருசில விஷயங்களைச் சரியாக கவனிக்காவிட்டால் பொதுமக்களே அவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள் என்பது நினைவில் இருக்க வேண்டும். அக்கு யாதவ் நிச்சயமாக அந்த சுற்றுப்புறத்தில் உள்ள அரசியல்வாதிகளையும், காவல் துறை உயரதிகாரிகளையும் தன் கையில் போட்டு வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 14 வருடங்கள் தப்பித்துக் கொண்டே இருந்திருக்க முடியாது.

பெருநகரங்களில் உள்ள தாதா கும்பல்களை - அக்கு யாதவ் போன்ற அக்கிரமக்காரக் கும்பல்களை - அழிக்க ஒவ்வொரு மாநில அரசும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதுபற்றிய அவுட்லுக் கட்டுரை.

Saturday, August 21, 2004

ஓர் ஓவரில் ஆறு நான்குகள்

நேற்று இரண்டு கிரிக்கெட் மேட்சுகள் நடந்து கொண்டிருந்தன. ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி. முதல் மூன்றிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று விட்டது. மற்றொன்று டென் ஸ்போர்ட்ஸில் இலங்கைக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி.

ரிமோட்டை மாற்றி மாற்றி இங்கும் அங்கும் போய்க்கொண்டிருந்தேன். டெஸ்ட் போட்டிதான் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இங்கிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மட்டையாளர்கள் தடுமாறிக் கொண்டிருந்தனர். பிரையன் லாரா மட்டும் பந்துகளை விளாசிக் கொண்டிருந்தார். அவரும் கூட ஹார்மிசனின் எழும்பி வரும் பந்துகளைச் சந்திக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். கடைசியாக 79 ஓட்டங்களுக்குப் பிறகு ஹார்மிசன் ஓவர் ஒன்றின் கடைசிப் பந்தில் எப்படியாவது ஒரு ரன்னைப் பெற்று அடுத்த மூலைக்குச் சென்று விட எண்ணினார்; ஆனால் கால் திசையில் எழும்பி வந்த அந்தப் பந்து விளிம்பில் பட்டு ஃபைன்லெக்கில் கேட்ச் ஆனது. மேற்கிந்தியத் தீவுகள் அணியால் ஃபாலோ-ஆனைத் தவிர்க்க முடியவில்லை.

தொடர்ந்து ஆடிய இரண்டாவது இன்னிங்சில் கிரிஸ் கெயில் மாத்தியூ ஹோகார்டின் ஓர் ஓவரில் ஆறு பந்துகளையும் வரிசையாக எல்லைக்கோட்டுக்கு அடித்தார். இதற்கு முன் சிலமுறை ஓர் ஓவரில் 24 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருக்கின்றனர். ஆனால் யாரும் ஆறு பந்துகளையும் பவுண்டரிகளாக அடித்ததில்லை. கபில்தேவ் எட்டி ஹெமிங்சின் ஓர் ஓவரில் நான்கு பந்துகளையும் ஆறுகளாக அடித்துத் தள்ளி இந்தியா ஃபாலோ-ஆனைத் தவிர்க்க உதவியுள்ளார். சந்தீப் பாடில் பாப் வில்லிஸின் ஓர் ஓவரில் ஏழு பந்துகளில் (ஒரு நோ-பால்) ஆறை நான்குகளாக அடித்துத் தள்ளியுள்ளார். ஓர் ஆறு-பந்துகள் அடங்கிய ஓவரில் மிக அதிக ரன்களைப் பெற்றுள்ளது பிரையன் லாராதான். தென்னாப்பிரிக்காவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பீட்டர்சனின் ஓர் ஓவரில் 4x4, 2x6 என்று அடித்து 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஹோகார்டின் ஓவருக்கு வருவோம்.

முதல் பந்து மிடில் ஸ்டம்பில் விழுந்தது. அதனை கெயில் மிட்விக்கெட் திசையில் அடித்து விளையாடினார். நான்கு ரன்கள். கால்திசையில் மூன்று பந்து தடுப்பாளர்கள்தான். அதனால் சுலபமாக இடைவெளி கிடைத்தது.

இரண்டாவது பந்து ஆஃப் ஸ்டம்பில் அளவு அதிகமாக விழுந்தது. இடது கை மட்டையாளர்களுக்கே உரிய முறையில் முன் காலில் வந்து அந்தப் பந்தை அதிவேகமாக செலுத்தி எக்ஸ்டிரா கவர் திசையில் அடித்தார். மூன்று பந்து தடுப்பாளர்களைத் தாண்டி பந்து எல்லைக்கோட்டுக்குப் பறந்தது.

மூன்றாவது பந்து ஸ்டம்பில் விழுந்தது. அதனை பின் காலில் சென்று நேராக பந்துவீச்சாளரை நோக்கி அடிக்க, பந்து லாங்-ஆன் திசையில் நான்கு ரன்கள்.

நான்காவது பந்து ஆஃப் ஸ்டம்பில் விழுந்தது. அதனையும் பின் காலில் சென்று கவர் திசையில் அடித்தார். நான்கு ரன்கள்.

ஐந்தாவது பந்து அளவு குறைவாக விழுந்தது. அப்படித்தான் அந்தப் பந்து வரும் என்று எதிர்பார்த்து பின் காலில் சென்று பந்தை 'புல்' செய்தார். லாங்-லெக் திசையில் நான்கு ரன்கள்.

இந்த நேரத்தில் ஹோகார்ட் ஆறாவது பந்தை வைடாகப் போட்டிருக்கலாம். ஆனால் அளவு குறைந்து ஆஃப் ஸ்டம்பிற்கு சற்று வெளியே வீசினார். அந்தப் பந்தை கெயில் கவர் - மிட்-ஆஃப் இடையே அடித்து இன்னுமொரு நான்கைப் பெற்றார்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இது முதல் முறை.

ஆனாலும் இன்று இங்கிலாந்து இந்த டெஸ்டையும் ஜெயித்து விடும்.

Thursday, August 19, 2004

vanishing post - சமாச்சார்.காம் கட்டுரை

இந்த வாரம் சமாச்சார்.காமில் இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் காண்பிக்கும் உரிமம் தொடர்பாக ஜீ (Zee) - இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (ESPN Star Sports) இடையேயான கடும் போட்டி, வெளியே தெரிய வராத சில விஷயங்களுடன். யூனிகோடில் படிக்க இங்கே.

[பி.கு: இந்தப் பதிவு இதுவரை இரண்டு முறை போடப்பட்டு காணாமல் போயுள்ளது. ரஜினிகாந்தின் சில ரசிகர்களைத் திட்டிய பாவம்தான் என்னைப் படுத்துகிறது என்று நினைக்கிறேன். இப்பொழுது மூன்றாவது முறையாக மீண்டும் போட்டுள்ளேன். அந்த ராகவேந்திரர்தான் இந்தப் பதிவைக் காப்பாற்ற வேண்டும்.]

Wednesday, August 18, 2004

வேலையத்த ஜப்பானியர்கள்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் லூசுகள் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்று ஜப்பான் காரர்கள்.

எட்டுத்திக்கும் சென்று அங்குள்ள நல்லவற்றையெல்லாம் கொண்டு வந்து சேர் என்பார் ஒரு மீசைக்காரர். ஜப்பான் காரர்கள் இந்தியாவிலிருந்து புத்த மதத்தைப் பெற்றார்கள். இப்பொழுது சில காலமாக மறை கழண்டு போய் ரஜினி படம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி என்னத்தைத்தான் கண்டார்கள் ரஜினியின் படத்தில் என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை.

ரஜினி ஒழுங்காக நடித்தது ரெண்டே ரெண்டு படங்கள்தான் - ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும். அதன் பிறகு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் திறமையையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒரே ஃபார்முலா படமாக போட்டுத் தள்ளினார். எம்ஜியாருக்குப் பின்னர் 'மினிமம் கேரண்டி' நடிகரானதும் தானே குப்பைகளைத் தயாரிக்கவும் தொடங்கினார். அது கடைசியாக 'பாபா' அபத்தத்தில் வந்து முடிந்தது. இப்பொழுது ஜக்குபாய், 'உதட்டைத் தச்சி அதில் ஐஷ்வர்யா ராய் வந்து இச்சு' என்று இவர்களது ஆசை தாங்க முடியவில்லை.

அவரது பக்தர்கள் - டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் தான் முதல் பக்தர் - வார இதழ்களில் ஜக்கம்மா பற்றி சரடு விட ஆரம்பித்து விட்டார்கள். படத்தில் இது இருக்கும், அது இருக்கும்... நம் எல்லோருக்கும் தெரியும் அந்தப் படத்தில் எதுவுமே இருக்கப் போவதில்லை. வார இதழ்க்காரர்களுக்கும் வேறு வேலையில்லை. ரஹ்மான், வைரமுத்து, ரவிக்குமார், ரஜினி வீட்டு டிரைவர், நாய் என்று யாரையாவது பிடித்து நாலு கேள்வி கேட்டு எதையாவது எழுத வேண்டும். அப்பொழுதுதான் புத்தகம் விற்கும். பின்னர் படம் வந்ததும் கொஞ்சம் ஹைப் அடித்துவிட்டு, படம் ஊத்தியதும் இழுத்து மூடிக்கொண்டு போகலாம்.

ஜப்பானிலிருந்து இந்தியா வந்தோமா, நாலு கோவிலுக்குப் போய் புண்ணியத்தைத் தேடிக்கொண்டோமா என்றில்லாமல் 'அருணாசலா இன்', 'ராகவேந்திரா கல்யாண மண்டபம்', 'ஆஷ்ரம் ஸ்கூல்(??)' என்று புனித யாத்திரையைத் தொடங்குகிறார்கள். ரஜினியைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவரது மனைவியைப் பார்த்தோம், நம்ம ரஜினி ராம்கியைப் பார்த்தோம் என்று புளகாங்கிதப்பட்டு நம்மைப் புல்லரிக்க வைக்கிறார்கள். அவர்கள் போட்டிருக்கும் டீ-ஷர்ட்! அய்யோ கொடுமையே. "எங்களுக்கு உங்களை ஒரு நாள் ஜப்பானுக்கு வர வேன்டும்". எங்களுக்கு உங்களை ரஜினி படம் பார்க்காமல் இருக்க வேன்டும்!

தமிழ் கற்றுக்கொண்டிருப்பது ஒன்றுதான் அவர்கள் செய்வதில் பிடித்துள்ளது. தமிழை அப்படியே நன்றாகக் கற்றுக்கொண்டு, பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத் தமிழ் இலக்கியங்கள் என்று படிப்பதை விட்டு, மீனா, சவுந்தர்யா படத்துக்குப் பூ போட்டு வீணாகிப் போகிறார்களே என்று வருத்தமாக உள்ளது!

ரஜினி ராம்கியும் ஜப்பான் மக்காள்ஸும் பாஷா ஆட்டோக்காரன் டான்ஸ் ஆடும் படம் நெஞ்சை உருக வைக்கிறது. அதை தமிழ்த் திரை டிவி காண்பித்து புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள்.

ஏன்யா ரஜினி ராம்கி, ஜப்பான் பக்தர்கள்கிட்ட காவடி எடுக்கறது, அலகு குத்திக்கறது பத்தியெல்லாம் சொல்லிக் கொடுங்களேன்? ரஜினி பிறந்த நாள் அன்னிக்கு ஒசாகா தெரு முழுக்க நாக்குல அலகு குத்தி, காவடி எடுத்து, அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக்கட்டும் உங்காளுங்கெல்லாம்.

அப்புறம் ஜப்பான்ல கோவில் ஒன்னும் தொறக்கல்லியா நம்ம பக்தர்கள்? இதனாலதான்யா அந்த ஊர்ல எரிமலை இன்னமும் பொங்கி வழிஞ்சுகிட்டிருக்கு!

நாட்டு நடப்பு - மணிப்பூர்

மத்திய அரசின் மணிப்பூர் பற்றிய நிலை குழப்பமானதாகவே இருக்கிறது. ஏதோ ஒரு சின்ன மாநிலம், இதற்குப் போய்க் கவலைப்படுவானேன் என்ற எண்ணமா என்று புரியவில்லை. Armed Forces Special Powers Act என்பது கிட்டத்தட்ட TADA, POTA போன்ற கொடுமையான சட்டம். இதன்படி வாரண்ட் இல்லாமல் ஒருவரைக் கைது செய்யலாம். கீழ்நிலையில் உள்ள - அதாவது சாதாரண சிப்பாய் கூட - ஒரு குடிமகனைக் கைது செய்து விசாரணை செய்யலாம்.

மணிப்பூரில் ஜூலை 11, 2004 அன்று மனோரமா தேவி என்ற பெண்ணின் பிணம் வயலோரத்தில் கிடைத்துள்ளது. அவர் உடலில் வன்புணரப்பட்டதற்கான ஆதாரங்களும், துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஆசாம் ரைஃபிள்ஸ் எனப்படும் இராணுவ டிவிஷன்தான் இந்தக் கொடுமைக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் சந்தேகப்பட்டுக் கொதித்தெழுந்தனர். கிட்டத்தட்ட 12 பெண்கள் இராணுவத் தலைமயகத்திற்குச் சென்று தாங்கள் அணிந்திருந்த துணிகளை முற்றிலுமாகத் துறந்து 'எங்களை வன்புணருங்கள்' என்று கோஷம் போட்டுப் போராடினர். அங்கிருந்தே பிரச்சினை வலுக்க ஆரம்பித்தது. இராணுவம் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஆசாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டது. தேவையேற்பட்டால் இந்த இராணுவ டிவிஷனை விலக்கிக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாடில் அறிவித்தார்.

ஆனால் போராடும் மணிப்பூர் மாணவர்கள் மற்றும் அமைப்புகள் Armed Forces Special Powers Actஐ முற்றிலுமாக விலக்கிக்கொள்ள வேண்டும், இராணுவம் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்கின்றனர்.

இதற்கிடையில் மணிப்பூரின் காங்கிரஸ் முதல்வர் ஓக்ராம் ஐபோபி சிங் ஆகஸ்ட் 12 அன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலின் ஒருசில பகுதிகளில் AFSPAஐ விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். போராட்டக்காரர்களுக்கு இது போதுமானதாக இல்லை. ஷிவ்ராஜ் பாடிலோ, இந்த விலக்கு நடந்திருக்கக்கூடாது என்றும் மத்திய அரசின் அறிவுரைக்கு மாறாகவே மணிப்பூர் முதல்வர் நடந்து கொண்டுள்ளார் என்றும் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மணிப்பூர் முதல்வரோ தன் கைகள் கட்டப்பட்டுள்ளன, தன்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் ஒரு மாணவர் தலைவர் AFSPAவை விலக்கக் கோரி தன் உடலில் தீவைத்து இறந்து போய்விட்டார். இது நிலைமையை இன்னமும் கடுமையான கலவரத்தில் கொண்டுபோய் விட்டுள்ளது.

மன்மோகன் சிங், ஷிவ்ராஜ் பாடில் மற்றும் பிற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனடியாக நிலைமையை ஒழுங்காக்க முயல வேண்டும். இந்நேரத்தில் குறுகிய அரசியல் நோக்கோடு நடந்து கொள்ளக் கூடாது. மேற்படி சட்டம் AFSPA உடனடியாக விலக்கிக் கொள்ளப் பட வேண்டும். மாணவர் தலைவர்களோடும், பிற மணிப்பூர் அமைப்புகளோடும் மத்திய உள்துறை அமைச்சரும், மணிப்பூர் முதலமைச்சரும் இணைந்து பேச்சுக்களை நடத்த வேண்டும். மணிப்பூரில் எதற்கு இராணுவம் தேவை என்பதை மத்திய அரசு விளக்கிக் கூற வேண்டும்.

கடந்த இருபது வருடங்களில் பஞ்சாப், காஷ்மீர், ஆசாம் ஆகிய இடங்களில் இந்திரா காந்தியின் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தால் பெரும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளோம். பிரிவினைவாதிகள், பயங்கரவாதம், இராணுவ அடக்குமுறை, கொலைகள், பொதுமக்களிடையே பீதி என்று தாங்கமுடியாத கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இதில் பஞ்சாப் பிரச்சினை ஒன்றுதான் இப்பொழுது முழுவதுமாகத் தீர்க்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் இன்றும் ஆசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் ஆகிய இடங்களில் பிரிவினைவாதிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே பல பிரச்சினைகள் இருந்தவண்ணம் உள்ளன. மணிப்பூரை மற்றுமொரு காஷ்மீராகவோ, பஞ்சாபாகவோ ஆக்க வேண்டாம்!

நாட்டு நடப்பு - குஜராத்

தி ஹிந்து செய்தி

உச்ச நீதிமன்றம் குஜராத் கலவரங்களின்போது பாரபட்சமாக நடந்துகொண்ட நரேந்திர மோடி அரசை வழிக்குக் கொண்டுவரும் விதமாக உயரதிகாரிகள் அடங்கிய காவல் துறை கண்காணிப்புக் குழு ஒன்றை உருவாக்கி கிட்டத்தட்ட 2000 வழக்குகளை மீள்விசாரணை செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

இதில் மிக முக்கியமாக என்னைக் கவர்ந்தது நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பே: வழக்குகளை மீள்விசாரணை செய்து அந்த வழக்குகளை மீண்டும் மூடவேண்டுமானால் அதற்கான காரணங்களை இணையத்தளம் ஒன்றில் போடவேண்டும் என்பதே. இதனால் கலவர வழக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் அரசு-சாரா அமைப்புகளுக்கு முழு விவரமும் போய்ச்சேரும். நம்மைப் போன்ற பொதுமக்களுக்கும் முழு விவரமும் வந்து சேரும்.

இங்கு தொடங்கி, இனி மற்ற எல்லா வழக்குகளுக்கும், ஏன், அரசின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் முழுக் காரணங்கள் இணையம் வழியாக பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

Tuesday, August 17, 2004

காஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்

சில மாதங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் ஆளும் கூட்டணி (PDP + காங்கிரஸ்) பெண்கள் திருமணம் பற்றிய ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, பின்னர் காங்கிரஸ் எதிர்ப்பால் அதனைக் கைவிட்டது. இந்தச் சட்ட வரைவின்படி காஷ்மீரிப் பெண்கள், காஷ்மீரியல்லாத ஆண்களைத் திருமணம் செய்தால் ஜம்மு காஷ்மீரில் சொத்துக்களை வாங்கும் உரிமையையும், தேர்தலில் சில பதவிகளுக்க்கு நிற்கும் உரிமையையும் இழக்க வேண்டியிருக்கும். ஆனால் காஷ்மீரி ஆண்கள் வேற்று மாநில/நாட்டுப் பெண்களை மணந்தால் இந்த உரிமைகளை இழக்க வேண்டியிருக்காது.

இந்தச் சட்ட வரைவு கொண்டுவரப்பட்ட போது சோனியா காந்தி நேரடியாகத் தலையிட்டதனால் பெண்களுக்கு எதிரான இந்தச் சட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுபோன்ற பிரிவினைச் சட்டங்கள் முட்டாள்தனமானவை. தேவையற்றவை.

இப்பொழுது எதிர்க்கட்சியான நேஷனல் கான்பரன்ஸ் கட்சி இந்தச் சட்ட வரைவை தனி நபர் மசோதாவாகத் தாக்கல் செய்ய நினைத்துள்ளது என்று அந்தக் கட்சியின் தலைவர் ஒமார் அப்துல்லா கூறியுள்ளார்.

இதன்மூலம் ஆளும் கட்சிக்குப் பெருத்த தலைவலியை ஏற்படுத்தலாம் என்பது அப்துல்லாவின் நோக்கம். குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, கேவலமாக நடந்துகொள்வது இந்திய அரசியலில் சகஜம்தான் என்றாலும் ஒமார் அப்துல்லா போன்ற படித்த, இளைய தலைமுறைத் தலைவர்களிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை.

காஷ்மீரில் பலர் இந்திய அரசை எதிர்ப்பவர்கள். தனியாகப் போவது, அல்லது பாகிஸ்தானுடன் இணைவது ஆகியவை அவர்களது கொள்கைகள். ஆனால் தற்போது மேற்படி பிரிவினைச் சட்டத்தைக் கொண்டுவர முயல்பவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. இந்தியாவுடன் இணைந்திருக்க விரும்பும், இந்தியத் தேர்தல் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியினர்.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த போதிலிருந்தே (அல்லது இணைக்கப்பட்ட போதிலிருந்தே) காஷ்மீருக்கென தனிச்சட்டங்கள் இருந்து வருகின்றன. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் ஆர்டிகிள் 370 என்பதே அது. இத்துடன் Delhi Agreement 1952 என்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். காஷ்மீரின் அரசியல் கட்சிகள் முட்டாள்தனமான சட்டங்களை உருவாக்க முனைந்தால் இந்திய அரசு ஆர்டிகிள் 370ஐ முழுவதுமாக நீக்கி, ஜம்மு காஷ்மீரை மற்ற மாநிலங்களுக்கு ஒப்பாக ஆக்க முயல வேண்டும்.

Friday, August 13, 2004

சமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொள்கை

இந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் இணையம் இந்தியாவில் வளர அரசு என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய TRAIஇன் சிபாரிசுகள். யூனிகோடில் படிக்க இங்கே.

களம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை

தமிழோவியத்தில் நாகூர் ரூமி தேர்தலில் ஈடுபடும் ஒரு கற்றுக்குட்டி தேர்தல் அதிகாரியின் மனநிலையை மிக அருமையாக சிறுகதையாகப் பதிவு செய்துள்ளார்.

இணையத்தில் படிக்கக் கிடைத்த கதைகளில் அற்புதமாக அமைந்த ஒரு கதை இது. கதையைப் படிக்க இங்கு தொடங்குங்கள்.

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியம் பத்தியில் இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி.

Thursday, August 12, 2004

கிரிக்கெட்டின் கதை

பிபிசி தமிழ் இணையத்தளத்தில் 12-பாகங்களாக கிரிக்கெட்டின் கதை சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் உருவாக்கியவர் ஜோனதன் ஆக்னியூ. தமிழாக்கம் அன்பரசன்.

'போடா' வாபஸ்

POTA சட்டம் நீக்கப்பட இருக்கிறது. முந்தைய பாஜக அரசினால் POTO என்று ஓர் அவசரச்சட்டமாகக் கொண்டுவரப்பட்ட இந்த ordinance, பின்னர் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒன்று கூட்டி சட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்பொழுதே காங்கிரஸ் இந்தச் சட்டத்தை எதிர்த்தது. ராஜ்ய சபையில் மண்ணைக் கவ்வி விடும் என்பதால்தான் இரு அவைகளையும் ஒன்றாகக் கூட்டினர். அப்பொழுது இந்தச் சட்டத்தை கருணாநிதியின் திமுகவும், வைகோவின் மதிமுகவும், ராமதாசின் பாமகவும் ஆதரித்தனர். ஜெயலலிதாவின் அஇஅதிமுகவும் ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது கேபினெட் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது என்று முடிவு செய்துள்ளனர். வரவேற்க வேண்டியதுதான். POTAவில் பல குறைகள். முக்கியமாக இரண்டு: (1) போடாவின் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடுக்கும் சுயவாக்குமூலம் ஒரு சாட்சியமாகக் கருதப்படும். (2) நீதிமன்றக் காவலுக்கு ஒருவரைக் கொண்டுவராமல் - ஜட்ஜ் ஒருவர் கண்ணில் காண்பிக்காமலேயே ஒருவரை போலிஸ் காவலில் ஒரு வருடம் வரை வைத்திருக்கலாம். இந்த இரண்டும் எந்தவொரு நாகரிகமான நாட்டிலும் இருக்கக்கூடாத சட்டங்கள். என்னதான் தீவிரவாதிகளால் தொல்லை என்றாலும் இப்படிப்பட்ட சட்டங்களால் சிறுபான்மையினருக்கும், வாயில்லாப்ப் பூச்சிகளுக்கும்தான் தொல்லை. NDTVயில் நடந்த ஒரு விவாதத்தில், போடாவை ஆதரிக்கும் ஒருவர் வட அயர்லாந்தில் கூட இம்மாதிரியான சட்டத்தை பிரித்தானிய அரசு விதித்திருந்தது என்றார். அதெல்லாம் ஒத்துக்கொள்ளக் கூடிய வாதமே இல்லை.

நம் நாட்டில் எம்மாதிரியான சட்டங்கள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நாம்தான். கொடுமையான சட்டங்களினால் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியாது. அதற்கு காவல்துறைக்கு அதிகப் பயிற்சிதான் கொடுக்க வேண்டும். புதிய, கொடுமையான சட்டங்களை அல்ல. ஒரு குற்றம் செய்தவர் மீது சரியான சாட்சியங்கள் தேவை. வெறும் ஒப்புதல் வாக்குமூலத்தினாலும், அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்வதாலும் குற்றங்களைத் தடுக்க முடியாது. ஒரு பாவமும் அறியாதவர்கள்தான் இந்தச் சித்திரவதையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இன்று மணிப்பூரில் மக்கள் கொந்தளித்துப் போயிருக்கின்றனர். இப்பொழுதைய காங்கிரஸ் அரசாங்கம் Armed Police Special Powers Actஐ திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று பேசுகின்றனர். மக்கள் விரும்பினால் 'Assam Rifles'ஐத் திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்கிறார் ஷிவ்ராஜ் பாடில். அந்தப் பேச்சிற்கே இடமில்லை என்றார் பிரணாப் முகர்ஜி நேற்று.

ஆசாம் ரைஃபிள்ஸ் மீது தவறோ இல்லையோ, ஒரு மாநிலத்தின் மக்களைக் கொந்தளிக்க வைத்த காரணத்தாலேயே அவர்களை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் மத்திய அரசு. அத்துடன் உடனடியாக தேவையற்ற 'Special Powers Act'ஐ தூக்கியெறிந்து விட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

முக்கியமாக இந்திய காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு பொதுமக்களிடம் எப்படி முறையாக நடந்து கொள்வது என்பதைப் பற்றி சீரிய பாடங்களை நடத்த வேண்டும். பெண்களிடம் முறைகேடாக நடந்து கொள்வது கொடுமையானது. விசாரணை என்ற பெயரில் பெண்களைக் கொண்டுவந்தால் பெண் காவலர்கள் மட்டுமே அந்த விசாரணையில் ஈடுபட வேண்டும். கைது செய்து வந்த பெண்ணுடைய உறவினர்கள் யாரையாவது, அல்லது அவரது வக்கீல் ஒருவரை விசாரணையின் போது எப்பொழுதும் கூட இருக்குமாறு அனுமதிக்க வேண்டும். நம் நாட்டின் மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையைத் தருகின்றன.

Friday, August 06, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் ஹாலந்த் கோப்பைக்கான இந்திய டீம் செலக்ஷன் பற்றி, ஆசியக் கோப்பையில் இந்தியா தோற்ற காரணம், அடுத்து 2007 உலகக்கோப்பையை எதிர்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்பன.

தினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்

மூன்று நாள்கள் முன்னதாக (3 ஆகஸ்ட் 2004 அன்று) பாமகவினர் எனச் சந்தேகப்படும் சிலர் தினமலரின் கடலூர் அலுவலகத்தில் புகுந்து கணினிகள், ஸ்கேன்னர்கள், ஏ.சி, கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி இந்த சம்பவத்தை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி யைப் பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது, என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

பாமகவின் வன்முறைப் பின்னணி எல்லோருக்கும் தெரிந்ததே. அப்படியிருந்தும் அந்தக் கட்சிக்கு வடகிழக்குத் தமிழ்நாட்டில் வன்னியச் சாதி சார்ந்த தீவிர பலம் உள்ளது. இந்த ஒரு காரணத்தால்தான் திமுகவும், அஇஅதிமுகவும் மாறி மாறி பாமகவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். வன்னியர் சங்கமாக இருந்தபோதகிட ஒதுக்கீட்டுக் கொள்கையை முன்வைத்து மரங்களை வெட்டித் தெருவெங்கும் எறிந்து கூத்தடித்தவர்கள் இன்று 'பசுமைத் தாயகம்', 'மரம் வளர்ப்போம்' என்று பாவமன்னிப்பு கோருகின்றார்கள். நாளையே ரஜினிகாந்த், விஜயகாந்த், தினமலர் தொடர்பான வன்முறைகளைத் தாண்டி, 'அஹிம்சையே ஆயுதம்', 'மனிதநேயம்' என்பதைக் கூடத் தங்கள் கொள்கைகளாக ஏற்றுக் கொள்ளலாம்.

திமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகள் கூட இன்று இதுபோன்ற அப்பட்டமான வன்முறைகளில் ஈடுபடாத போது, பாமக மட்டும் தொடர்ச்சியாக தனக்குத் தோன்றிய போதெல்லாம் வன்முறையில் ஈடுபடுவதன் காரணம் என்ன? இப்பொழுதைக்குத் தனக்கு எதிராக இருக்கும் ஜெயலலிதா கூட தன் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என்ற எண்ணமா? வைகோவை தேவையின்றி பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதா, ராமதாஸ் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை மர்மமாகவே வைத்துள்ளார்.

மேற்படி வன்முறை சம்பவத்திற்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமிருந்தும் நேரடியாக எந்த அறிக்கையும் வரவில்லை.

தினமலர் மீதான் வன்முறைச் சம்பவம் ஜெயலலிதா, 'தி ஹிந்து' மீது கட்டவிழ்த்துவிட்ட அதிகாரத்துடன் ஒப்பிடப் படுகிறது. அதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஜெயலலிதா கட்டவிழ்த்துவிட்டது அடிதடி வன்முறை அல்ல. அதிகார துஷ்பிரயோகம். அவதூறு வழக்குகள். அதையொட்டி சபாநாயகர் பிறப்பித்த வாரண்டுகள். அதைத் தொடர்ந்து காவல்துறை தி ஹிந்து அலுவலகம் உள்ளே நுழைந்து கலாட்டா செய்தது. பெங்களூர் வரை காரில் சென்று தி ஹிந்து மேலதிகாரிகளை வழிமறித்தது போன்றவை. ராமதாஸ் கட்சியினருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இதற்கு எவ்வளவு நாள்கள் ஆகும்? கையில் மாநில போலீஸ் அதிகாரம் வேண்டும். அதனால் நேரடியாக உருட்டுக் கழிகளையும், அரிவாள்களையும் எடுத்து விட்டனர்.

இரண்டு தலைவர்களின் நடைமுறையையும் எதிர்க்கும் நாம், ராமதாஸ் பிராண்ட் வன்முறையை அதிகமாக எதிர்க்க வேண்டும். இது சட்டத்துக்குப் புறம்பானது. சபாநாயகர் பிறப்பித்த வாரண்டுக்கு எதிராக தி ஹிந்து பத்திரிகைக்காரர்கள் உச்ச நீதிமன்றத்துக்காவது போக முடிந்தது. ராமதாஸ் பிராண்ட் வன்முறையில் ஆஸ்பத்திரிக்கோ, சுடுகாட்டுக்கோ போகவேண்டிய நிலை.

இப்பொழுதைக்கு தமிழகத்தின் அரசியலிலிருந்து களையெடுக்கப் படவேண்டியவர்கள் ராமதாசும் அவரது கட்சியினரும். பாமகவோடு கூட்டணி வைப்பவர்கள் மீண்டும் ஒருமுறையாவது யோசனை செய்துவிட்டு கூட்டணி அமைப்பது நல்லது.

பி.கு: தினமலர் ஒழுக்கசீலமான பத்திரிகை இல்லை. பாமக - ரஜினி விவகாரத்தில் தேவையற்று, பொய்யாக, சிண்டுமுடிந்து குழப்பத்தை விளைவித்துள்ளனர் என்பதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

Thursday, August 05, 2004

சமாச்சார்.காம் கட்டுரை

இந்த வாரம் முதற்கொண்டு தொலைதொடர்பு, இணையம், தொலைக்காட்சி ஆகிய பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒன்றாகக் குவிவதைப் பற்றியும், இந்தியாவில் மேற்படித் துறைகளில் உள்ள நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள், அவை கொண்டுவரும் புதுமைகள், அதனால் மக்களுக்கு என்ன நன்மை ஆகியவற்றைப் பற்றி எழுத இருக்கிறேன்.

முதலாவதாக இந்தியாவில் செல்பேசிகள் - அடுத்த கட்டம் பற்றி.. யூனிகோடில் இங்கே.

Wednesday, August 04, 2004

நிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்

நவீன சினிமாவுக்கான களம் என்று மாத இதழாக வெளிவருகிறது 'நிழல்'. ஆசிரியர், வெளியிடுபவர் ப.திருநாவுக்கரசு.

ஆகஸ்ட் மாத இதழில்
  • இரா.மதுவந்தியின் நியூ ஜெர்சி தமிழ்க்கலைப்படவிழா குறிப்புகள்
  • பத்ரியின் மேற்படி விழாவின் பரிசளிப்பு நிகழ்ச்சி பற்றிய கட்டுரை (ஏற்கனவே திண்ணையிலும், இந்த வலைப்பதிவிலும் வெளியானது)
  • டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைப்படங்கள் எப்படி உருவாக்கப்படும், திரையிடப்படும் என்பது பற்றிய பா.கலைச்செழியனின் அறிமுகக் கட்டுரை
  • திரைச்சொல் அகராதி - சில சினிமா தொடர்பான ஆங்கிலக் கலைச் சொற்களுக்கான விளக்கங்கள்
  • தமிழ்த்திரையில் நகைச்சுவை நடிகர்கள் பற்றிய திருநின்றவூர் டி.சந்தானகிருஷ்ணனின் கட்டுரை - சில தமிழ்ப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளைக் கட்டமிட்டு விவரித்துள்ளார்
  • நியூ படம் பற்றிய விமரிசனம் - கலையாளன்
  • நான்கு புது இயக்குனர்களின் குறும்படங்களை மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து'டன் ஒப்பிட்டு "'அ' விலிருந்து 'ஃ' வரை" என்ற க்ருஷ்ணாவின் கட்டுரை
  • ரோகாந்தின் 'மோனலிசா' என்னும் இதுவரை படமாக்கப்படாத முழுநீளப் படத்தின் கதை, வசனம், திரைக்கதை (unproduced script). இந்த இதழிலிருந்து இதுபோன்ற முழு கதை, திரைக்கதை, வசனத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளார்களாம்.
  • scriptnet 2002-04 - யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திரைக்கதை உருவாக்கல் பயிற்சி முகாமில் உருவான ஏழு குறும்படங்களின் கதைகள் பற்றிய குறிப்புகள்
  • மும்பை திரையுலகத்திலும், உருது இலக்கியத்திலும் இயங்கி வந்த இஸ்மத் சுக்தாய் என்பவர் சாதத் ஹஸன் மண்ட்டோ பற்றி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் - ராமாநுஜம்
  • 'விடை தேடும் குரலும், முடியாத கூந்தலும்' என்னும் நாடகம் பற்றிய கோ.பழனியின் விமரிசனம் [பாஞ்சாலி சபதம் நிகழ்வு தற்காலச் சூழலில் மாற்றம் பெறுகிறது...]
  • நூல்கள் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள், ஒருசில புது குறும்படங்கள் பற்றிய குறுகிய அறிமுகங்கள்
  • திருச்சியிலிருந்து ஜம்புநாதன் என்னும் வாசகர் எழுதிய 'பேரழகன்' படம் பற்றிய காட்டமான விமரிசனம்

தனி இதழ் ரூ. 30, ஆண்டு சந்தா ரூ. 200. தமிழ் நவீன சினிமா மீது அக்கறையுள்ள, விருப்பமுள்ளவர்கள் அவசியம் வாங்க வேண்டிய இதழ்.

முகவரி: நிழல், 31/48 இராணி அண்ணாநகர், கே.கே.நகர், சென்னை 600 078, தொ.பே: 044-2472-8326, மின்னஞ்சல்: nizhal_2001@yahoo.co.in

Tuesday, August 03, 2004

ஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்

ஜெயமோகனின் காடு நாவல் படித்து விட்டீர்களா? இந்த மாதம் காலச்சுவடு, உயிர்மை இதழ்களில் இந்த நாவலுக்கான விமரிசனங்கள் வந்துள்ளன.

காலச்சுவடு விமரிசனம் எழுதியவர் அரவிந்தன். உயிர்மையில் பி.ஏ.கிருஷ்ணன்.

புது காலச்சுவடு இன்னமும் சிஃபியில் சேர்க்கப்படவில்லை. பி.ஏ.கிருஷ்ணனின் விமரிசனம் இங்கே.

அத்துடன் வெங்கடேஷ் 'நேசமுடன்' எழுதிய விமரிசனம்.

அரவிந்தனின் விமரிசனம் காடு ஒரு தோல்வியுற்ற நாவல் என்கிறது. பி.ஏ.கிருஷ்ணன் "[காடு போன்ற] இத்தகைய நாவல்கள் அரிது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை" என்கிறார்.

வேறு ஏதாவது விமரிசனங்களை யாராவது முன்வைக்கிறீர்களா?

என் விமரிசனம் வாரக்கடைசியில்.

Sunday, August 01, 2004

மாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு

நேற்று நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2004இல், மாலன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு கிழக்கு பதிப்பகம்** சார்பாக வெளியிடப்பட்டது.

மாலன் சிறுகதைகள் வெளியீடு


மாலன் சிறுகதைகள் புத்தகத்தை விழுப்புரம் சரகக் காவல்துறை DIG சஞ்சய் அரோரா வெளியிட, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் திட்டத்துறை இயக்குனர் A.R.அன்சாரி பெற்றுக்கொண்டார்.

திருப்பூர் கிருஷ்ணன்மாலன் சிறுகதைகளைப் பற்றியும் தமிழ் இலக்கிய உலகில் மாலனின் இடம் பற்றியும் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார். இந்தப் பேச்சின் விரிவான எழுத்து வடிவம் கூடிய விரைவில் இணையத்தில் வெளியாகும்.

மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு, மாலன், கிழக்கு பதிப்பகம், ஜூன் 2004, பக்: 448, விலை ரூ. 180

நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த எழுத்தாளரையும், ஒரு பதிப்பாளரையும் கவுரவிக்கிறார்கள். அதன்படி நேற்று சு.வேணுகோபால் என்னும் அற்புதமான எழுத்தாளருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. சு.வேணுகோபால் நுண்வெளிக் கிரணங்கள், கூந்தப்பனை போன்ற நாவல்களை எழுதியவர். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது போல குள்ளமான உருவத்திற்குள் கூர்ந்த எழுத்துத் திறமை வாய்ந்தவர். இவரைப் பற்றி அதிகமாக வெளியே எதிவும் தெரிவதில்லை. தற்பொழுது இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நவீன இலக்கியத்துறையில் ஆசிரியராக உள்ளார்.

சு.வேணுகோபாலுக்குப் பாராட்டுப் பத்திரம்


[கிழக்கு பதிப்பகம், நியூ ஹொரைசன் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் கம்பெனியுடையது. இந்த கம்பெனியில் எனக்கு பெரும்பான்மைப் பங்குகள் உண்டு. கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளராக நான் செயல்படுகிறேன்.]