Monday, February 27, 2006

நுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து

தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வை ஸ்டேட் போர்ட் மாணவர்களுக்கு மட்டும் நீக்கி பிற போர்ட் மாணவர்களுக்கு மட்டும் வைக்கும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் செல்லாது என்று இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்குப் பின்னணியில் மூன்று விஷயங்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் எடுத்து வைத்துள்ளனர். (தொலைக்காட்சிச் செய்தியிலிருந்து கேட்டதன்மூலம் எழுதுவது; அதனால் சில தவறுகள் இருக்கலாம்.)

1. இந்த மாதிரியான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநிலச் சட்டமன்றத்துக்குக் கிடையாது.
2. மேற்படிச் சட்டம் மெடிகல் கவுன்சில் ஆஃப் இந்தியா (MCI), ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிகல் எஜுகேஷன் (AICTE) ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு எதிரானது.
3. மேற்படிச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'அனைத்து மக்களின் சம உரிமைக்கு' எதிரானது.

-*-

திருப்பத்தூருக்கு அருகில் உள்ள மிட்டூர் என்ற கிராமத்தில் 'மனம் மலரட்டும்' என்ற அறக்கட்டளை அமைப்பை சரவணன் என்ற நண்பர் நடத்தி வருகிறார். சரவணனும் அவரது நண்பர்களும் கிராமப்புறங்களில் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் துறை நுழைவுத் தேர்வுப் பயிற்சியினை இலவசமாகச் அளித்து வருகின்றனர்.

நேற்று இந்த மாணவர்களைச் சந்திக்க நான் திருப்பத்தூர் சென்றிருந்தேன். 44 மாணவர்கள். பாதிக்குப் பாதி (22) பெண்கள். திருப்பத்தூரில் YMCA மேல் நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. இந்த மாணவர்கள் தற்போது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் நுழைவுத் தேர்வை உடைப்பதற்கான பயிற்சிகள் நடத்தும் பள்ளிகள் பல உள்ளன. இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் வருடத்துக்கு கிட்டத்தட்ட ரூ. 24,000 வரை கட்டுகிறார்கள். தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகிறார்கள். இங்கு படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நுழைவுத் தேர்விலும் சரி, ஆண்டிறுதித் தேர்விலும் சரி - அதிக மதிப்பெண்கள் பெற்று நிச்சயமாக மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த - அதுவும் குறிப்பாக தமிழ் மீடியத்தில் படிக்கும் - மாணவர்களால் இந்த ராசிபுரம்/நாமக்கல் மாணவர்களுடனோ, அல்லது சென்னையைச் சேர்ந்த மாணவர்களுடனோ போட்டி போட முடிவதில்லை.

சரவணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டால் கிராமப்புற மாணவர்களுக்குப் பலன் இருக்கும் என்றார். ஒரு சிலராவது பொறியியல் கல்ல்லூரிகளில் சேரும் அளவுக்கு ஆண்டிறுதித் தேர்வில் மதிப்பெண்கள் பெறுவார்கள் என்றார். நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் பயிற்சி இவர்களுக்குக் குறைவு என்றும் அதுபோன்ற பயிற்சியை எந்த அரசுப் பள்ளிக்கூடங்களாலும் கொடுக்க முடியாது என்றும் சொன்னார்.

நான் பேசிக்கொண்டிருந்த 44 மாணவர்களில் 8 பேர் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்படுவதாகச் சொன்னார்கள். அதில் 6 பேர் பெண்கள். ஆனால் வெறும் 1,000 இருக்கைகளே உள்ள மருத்துவப் படிப்பில் இவர்களில் யாராவது ஒருவருக்காவது இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஓரிருவர் வர வாய்ப்புள்ளது என்றார் நண்பர் சரவணன். பொறியியல் கல்லூரிகள் நிறைய இருப்பதால், முக்கியமாக சுயநிதிக் கல்லூரிகள் இருப்பதால், இந்த மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் கல்விக் கட்டணம் அதிகமாகும். இந்த மாணவர்கள் அனைவரும் மிகவும் பின்தங்கிய பொருளாதாரப் பிரிவினர். பின் தங்கிய சமூகப் பிரிவினரும்கூட. தத்தம் கிராமங்களிலிருந்து நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காக திருப்பத்தூர் வரையில் வரும் பஸ் கட்டணம்கூடக் கட்ட முடியாதவர்கள். அந்தக் கட்டணத்தையும் 'மனம் மலரட்டும்' அமைப்பே இவர்களுக்குக் கொடுக்கிறது.

ஆனால் இந்த மாணவர்களில் யாருக்கேனும் பொறியியல், மருத்துவம் இடம் கிடைத்தால் மேற்கொண்டு படிக்க ஸ்பான்சர்ஷிப் பணம் கொடுக்க அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக சரவணன் சொன்னார்.

-*-

'நுழைவுத் தேர்வு அவசியம் தேவை' என்று கொள்கையளவில் நினைப்பவன் நான். ஆனால் நேற்றைய சந்திப்புகள் என் கருத்தை நிறையவே மாற்றியுள்ளன.

Friday, February 24, 2006

Firefox 1.5.0.1, Thunderbird 1.5 பிரச்னை

கடந்த சில நாள்களில் ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பேர்ட் இரண்டையும் அதனதன் லேடஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்தேன். ஆனால் செய்தது முதல் தமிழில் உள்ளிடுவதில் பெரும் பிரச்னை. இந்தப் பிரச்னை நான் கடைசியாகப் பாவித்துவந்த 1.0.x வெர்ஷனில் இருந்ததில்லை.

நான் நேரடியாக முரசு அல்லது எ-கலப்பை கொண்டு தமிழில் தட்டும்போது இந்தப் பிரச்னை வருகிறது.

என்ன ஆகிறதென்றால் முதல் எழுத்து சரியாக வருகிறது. அடுத்த எழுத்து முதல் எழுத்தை அழித்துவிட்டு அதனிடத்தில் அமர்கிறது. அதற்கடுத்த எழுத்து முந்தைய எழுத்தை அழித்துவிடுகிறது. இப்படியே போனால் நான் "தமிழ்" என்று தட்டினால் எனக்குக் கிடைப்பது "மிழ்". "குரங்கு" என்று தட்டினால் "கு" மட்டும்தான் இருக்கும். (அதாவது கடைசி கு)

Complex unicode rendering is bust, I think.

இதைவிட மோசம் Microsoft Hindi IME, Microsoft Tamil IME ஆகியவற்றைப் பயன்படுத்துவது. இதைச் செய்தால் மென்பொருளே கிராஷ் ஆகிவிடுகிறது!

ஆனால் பிற எடிட்டர்களில் எழுதி (நோட்பேட்), வெட்டி ஒட்டினால் ஒரு தோலையும் இல்லை.

நான் Windows XP பயன்படுத்துகிறேன்.

பிறருக்கும் இதே தொல்லைகள் உள்ளனவா? இல்லை எனக்கு மட்டும் இந்தப் பிரச்னையா என்று யாராவது விளக்கினீர்கள் என்றால் மகிழ்வேன்.

நன்றி.

தொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு

இன்றைய தி ஹிந்துவிலிருந்து.

இன்றும் தொடரும் இந்த வழக்கின்மீதான விவாதங்கள்.

Thursday, February 23, 2006

நுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு

நுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் 2006 (Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act 2006) ஐ எதிர்த்து வழக்கு ஒன்று இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற பெஞ்ச் சில சுவாரசியமான தகவல்களை எடுத்துக் கூறியுள்ளது:

* இந்தச் சட்டம் தமிழக ஸ்டேட் போர்டில் படிக்கும் கிராம மாணவர்களை பிற போர்டுகளில் படிக்கும் மாணவர்களிடமிருந்து காப்பதற்காக என்று சொல்வது தவறானது. ஏனெனில் சென்ற ஆண்டு மருத்துவத் துறைக்குத் தேர்வானவர்களில் ஒருவர்கூட CBSE அல்லது பிற போர்டுகளிலிருந்து வரவில்லை.

* கிராம மாணவர்களை பிற போர்டுகளிலிருந்து காப்பதைவிட நகரங்களில் இருக்கும் ஸ்டேட் போர்டிலேயே படிக்கும் மாணவர்களிடமிருந்துதான் காக்க வேண்டும்.

* நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் டூ இறுதித் தேர்வு மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் இதே பிரச்னைதான் இருக்கும். [காலச்சுவடு இதழில் ரவிக்குமார் இதைப்பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.]

தி ஹிந்து செய்தி ஒன்று | இரண்டு

Sunday, February 19, 2006

சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்

தினமணி

இன்று சென்னை நாரத கான சபாவில் கூடிப் பேசியுள்ள சினிமா தயாரிப்பாளர் சங்கம் சில முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாம். அவை:

* கடந்த 12 வருடங்களாக சன் டிவியால் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டமாகியுள்ளன. எனவே சன் டிவிக்கு எதிராக ரூ. 2000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு முறையாகப் பிரித்துத் தரப்படுமாம். (அதாவது நஷ்ட ஈடு கையில் கிடைத்தே விட்டது என்பது போலக் கனவு காண்கிறார்கள்!)

* சன் டிவி குழுமம் ரூ. 8,000 கோடிக்கு வெளியிட உள்ள ஷேர்களில் எங்களையும் (சி.த.ச) பங்குதாரர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

சி.த.ச வினருக்கு நியாயமாகவே சில கோரிக்கைகள் இருக்கலாம். அதற்கு அவர்கள் செய்யவேண்டியது சன் டிவியுடனான சரியான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தில் புது சினிமாக்களின் விடியோ துண்டுகளை எந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் சன் டிவி மீதோ (பிற டிவிக்களின் மீதோ) வழக்கு தொடுக்க வேண்டும். அதைச் செய்யாமல் கடந்த 12 வருடங்களாக ... என்று புலம்புகிறார்கள்.

அடுத்ததாக "ட்ரெயிலருக்கு என்று வாங்கும் படக்காட்சிகளை அவர்கள் விருப்பத்துக்கேற்றவாறு காமெடி டைம், நீங்கள் கேட்ட பாடல் உள்ளிட்ட பல தலைப்புகளில் ஒளிபரப்புகிறார்கள்; அத்துடன் 'தயாரிப்பு சன் டிவி' என்று வேறு போட்டுக்கொள்கிறார்கள்" என்ற புலம்பல். ட்ரெயிலர் என்று காட்சிகளை சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்கிறார்கள்? அது ஓர் இலவச விளம்பரம் என்றுதானே? இனி ட்ரெயிலரே கொடுக்கப்போவதில்லை என்று முடிவு செய்யலாமே? விளம்பரம் வேண்டுபவர்கள் காசு கொடுத்து டிவிக்களில் விளம்பரம் செய்துகொள்ளட்டும்? மேலும் ட்ரெயிலரைக் கொடுக்கும்போது எதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு இப்படித்தான் அதனை உபயோகிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துகிறார்களா இல்லை சும்மா ஒரு கேசட்டை எடுத்துக் கொடுத்துவிடுகிறார்களா?

'தயாரிப்பு சன் டிவி' - இது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு. அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தயாரிப்பு சன் டிவி என்றுதான் அனைவருமே புரிந்துகொள்வார்கள்.

வானொலிகளில் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதற்கு ஒரு பாடலுக்கு ஒரு வருடத்துக்கு இவ்வளவு என்று ராயல்டி தொகையை The Indian Performing Rights Society Limited என்னும் நிறுவனத்துக்குக் கொடுக்கவேண்டும். இந்தத் தொகை யாருக்குப் போய்ச்சேரும் என்று தெரியவில்லை - சினிமா தயாரிப்பாளருக்கா அல்லது சினிமா இசையமைப்பாளருக்கா என்று எனக்குத் தெரியாது.

"நாங்கள் தயாரிக்கும் சினிமாக்களை வைத்துத்தான் சன் டிவி இந்தளவு வளர்ந்துள்ளது" - இது முழு அபத்தம். சன் டிவியின் வளர்ச்சியில் சினிமா முக்கியமான பங்கு வகித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சினிமாவுக்கும் சாடிலைட் உரிமம் என்று பணம் கொடுத்துதானே பெற்றுள்ளார்கள்? இப்பொழுது சன் டிவி பங்குச்சந்தைக்குச் செல்கிறது என்றவுடனேயே சினிமா தயாரிப்பாளர்களுக்கு தேவையில்லாத வயிற்றெரிச்சல்! 8000 கோடி ரூபாய் என்று எங்கிருந்து அவர்களுக்குத் தகவல் வந்துள்ளதோ தெரியவில்லை. சன் டிவி இந்த ஐ.பி.ஓவில் எதிர்பார்ப்பது 700-800 கோடி ரூபாய்களை. இதில் சினிமா தயாரிப்பாளர்களையெல்லாம் இஷ்டத்துக்கு பங்குதாரர்களாக்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.

ஆனால் இந்தப் பிரச்னை பெரிதானால் ஒரு நன்மையாவது இருக்கும். சினிமா தயாரிப்பாளர்கள் சினிமாத் துண்டுகளை சன் டிவியிடம் (பிற டிவிக்களுக்கும்தான்) கொடுக்க மாட்டார்கள் என்றால் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிதாகக் குறையும். அதைச் சரிக்கட்ட இன்னமும் சில சீரியல்கள் எடுக்கப்படும் என்றாலும் மிச்ச நேரங்களில் சில நல்ல நிகழ்ச்சிகளும் வரலாம்.

Thursday, February 16, 2006

சன் டிவி IPO

சன் டிவி லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தை மூலம் 10% பங்குகளை வெளியிட்டு முதலைப் பெருக்கிக் கொள்ள முடிவு செய்திருக்கிறது. இதற்கான draft prospectus-ஐ செபியின் இணையத்தளத்தில் காணலாம். (http://www.sebi.gov.in/ -> Reports/Documents -> Public Issues: Draft Offer Documents -> 14th February 2006, அங்கிருந்து Sun TV Limited என்பதைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் pdf கோப்பு.)

நவம்பர் 2005 சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன என்பதைப் பற்றி ஒரு பதிவை எழுதியிருந்தேன். என் ஆங்கில வலைப்பதிவில் சன் டிவி குழுமத்தின் draft prospectus-ல் கண்டதை வைத்து மேலும் சில கருத்துகளை எழுதியுள்ளேன்.

Tuesday, February 14, 2006

நுழைவுத் தேர்வு வழக்கு

இப்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் தொழில் கல்விக்கூடங்களுக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான சட்டத்தை எதிர்த்து வழக்கு ஒன்று நடைபெறுகிறது. இதைப்பற்றிய தி ஹிந்து செய்தி.

அசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்

விழா அழைப்பிதழ்

திருவல்லிக்கேணி ஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூல் வாசலில், ஞானக்கூத்தன் எழுத்தில் வரவேற்பு

ஞானக்கூத்தனின் வரவேற்புரை - Windows Media Audio, 581 kb, 4.40 minutes

அசோகமித்திரனின் ஓவியம், நல்லி குப்புசாமி செட்டியார் படத்தைத் திறந்துவைக்கிறார்.

மேடையில் அமர்ந்திருக்கும் மேன்மக்கள்!

கே.எஸ்.சுப்ரமணியத்தின் தலைமையுரை - Windows Media Audio, 2.64 mb, 21.59 minutes

திருப்பூர் கிருஷ்ணன் - Windows Media Audio, 1.47 mb, 12.14 minutes

சா.கந்தசாமி - Windows Media Audio, 616 kb, 4.57 minutes

ஆனந்த் நடராஜன் - Windows Media Audio, 822 kb, 6.37 minutes

திலகவதி - Windows Media Audio, 1.09 mb, 9.06 minutes

செவாலியே ஸ்ரீராம் - Windows Media Audio, 1.01 mb, 8.23 minutes

மணா - Windows Media Audio, 1.09 mb, 9.06 minutes

பழ. அதியமான் - Windows Media Audio, 1.33 mb, 11.04 minutes

பத்ரி சேஷாத்ரி - Windows Media Audio, 1.05 mb, 8.46 minutes

ஜெயராவின் க.நாசு. எழுதிய உயில் என்ற கவிதையின் மோனோ ஆக்டிங்

ரவி - நன்றியுரை - Windows Media Audio, 596 kb, 4.47 minutes

அசோகமித்திரன் - ஏற்புரை - Windows Media Audio, 1.30 mb, 10.49 minutes

Saturday, February 11, 2006

இந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை

நேற்று பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் இரண்டும் ஒரே சீரான எஸ்.டி.டி கட்டணச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி நாட்டில் எந்த இடத்துக்குப் பேசுவதாக இருந்தாலும் கட்டணம் நிமிடத்துக்கு ரூ. ஒன்றுதான். உள்ளூர் தொலைப்பேசிக் கட்டணம் மூன்று நிமிடத்துக்கு ஒரு ரூபாய்.

தூர அழைப்புகளுக்கு இப்படி ஒரே கட்டணம் ஏற்படும் என்பது நாம் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். ஆனால் அதை முதலில் அறிமுகப்படுத்துவது பி.எஸ்.என்.எல் என்பதுதான் ஆச்சரியம். இனி தனியார் நிறுவனங்கள் அவசர அவசரமாக இதே கட்டணத்தை ஏற்றுக்கொள்ளுவார்கள்.

[எனது 28 ஜூலை 2005 பதிவைப் பார்க்கவும். அதில் நான் சொல்லியிருந்த முதல் கணிப்பு இதுதான். இப்படி நாடு முழுவதும் ஒரே சீரான கட்டணம் இருப்பதால் நான்காவது கணிப்பு வெகு சீக்கிரமாகவே பலிக்கும். அதாவது மிகக்குறைந்த செலவில் toll-free எண் வசதிகள் கிடைக்கும். அதனால் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென கட்டணமில்லாத் தொலைபேசி எண்களை வைத்திருக்கும் - இப்பொழுது அமெரிக்காவில் இருப்பதைப் போல.]

தயாநிதி மாறனின் தொலைத்தொடர்பு சீர்திருத்தங்களுக்கு நமது பாராட்டுகள்!

நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு

தினமணி

தமிழக சட்டமன்றத்தின் கடைசி அமர்வில் தொழில் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். (ஆனால் அதே நாளில் கொண்டுவரப்பட்ட கேபிள் கையகப்படுத்தல் சட்டத்துக்கு ஆளுநர் இன்னமும் அனுமதி தரவில்லை.)

இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை மாணவர் நிஷாந்த் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் சென்றுள்ளார். வழக்கறிஞர் கே.எம்.விஜயன் இவருக்காக ஆஜர் ஆகிறார். வழக்கு பிப்ரவரி 13 திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Thursday, February 09, 2006

தனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு?

கடிதத்துக்கும் ஆவணத்துக்கும் (Document) உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா? இனி தெரிந்தாக வேண்டும். அத்துடன் அரைக்கிலோவுக்கு மேல் என்றால்தான் தனியார் சேவையை அணுக முடியும் என்பதாகச் சட்டங்கள் கொண்டுவரப் போகிறார்களாம்.

Rediff: Letters below 500 gm? Only India Post, please

தன் வருமானம் பாதிக்கப்படுவதால் தனியார் நிறுவனங்களின் குரல்வளையை நெரிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் அரசு இப்பொழுது கூரியர் நிறுவனங்களின் பக்கம் தன் பார்வையைத் திருப்பியுள்ளது.

500 கிராம்களுக்கு - அதாவது அரைக் கிலோவுக்கு - குறைவான "ஆவணங்களை (அ) கடிதங்களை" இனி தனியார் கூரியர்மூலம் அனுப்பக்கூடாது என்று Indian Postal Act 1898-ல் சில மாற்றங்களைச் செய்வதன்மூலம் சட்டம் இயற்றப்போவதாக மைய அமைச்சர் ஷகீல் அஹமத் கூறுகிறார்.

இன்று தனியார் கூரியர் சேவைகளை அதிகமாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் இதனால் திண்டாட வேண்டிவரும்.

எந்தவிதமான சேவையை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன? அவர்களது வேலையாள்களே நமது நிறுவனம் வரை வந்து கடிதங்களையோ, ஆவணங்களையோ, பொதிகளையோ எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். மாதம் ஒருமுறை பில் தருகிறார்கள். மாதத்துக்கு ஒருமுறை அவர்களுக்குப் பணம் கொடுத்தால் போதும். கிரெடிட் வசதி உண்டு.

ஆனால் இந்தியா போஸ்ட்டைத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற நிலை வந்தால் என்ன ஆகும்? ஆவணம் சென்று சேர்ந்த ரசீது வேண்டுமென்றால் ரிஜிஸ்தர் தபால் அனுப்ப வேண்டும். அதற்கு நாம் போஸ்ட் ஆஃபீஸ் போய் வரிசையில் நிற்க வேண்டும். உடனுக்குடன் பணத்தைக் கட்ட வேண்டும். சரியான சில்லறை இல்லாமல் இந்திய போஸ்ட் ஆஃபீஸ்களில் நின்றிருக்கிறீர்களா? இத்துடன் இன்றைய வேலை முடிந்தது என்று போர்டை இழுத்து மாட்டிவிட்டு நடையைக் கட்டிவிடுவார்கள். பாதி நேரம் பக்கத்தில் உள்ளவர்களுடன் அரட்டைக் கச்சேரி சுகமாக நடக்கும். அதாவது விகடன் குமுதம் படிக்கும் நேரத்தைத் தவிர.

நாங்கள் தபால் துறையையும் உபயோகிக்கிறோம் - வேண்டும் என்றால் மட்டும்தான். மணி ஆர்டர், வி.பி.பி, பதிவுத் தபால் என்று அவ்வப்போது. ஆனால் தனியாருக்கு இடமில்லை, அதனால் பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ஏதேனும் தொல்லைகள் வந்தால் அதைப்பற்றிக் கவலையில்லை என்று அகங்காரமாக சட்டம் இயற்றுகிறார்கள்.

அரசுக்கு வருமானம் போவதற்கு முக்கியமான காரணம் தபால் துறையில் சீர்திருத்தங்களையும் நல்ல நுகர்வோர் சேவையையும் அவர்கள் கொண்டுவராததே. அதைவிடுத்து தனியாரின் சேவைகளை நிறுத்தும்விதமாகக் கொண்டுவரப்படும் மேற்படிச் சட்ட மாற்றத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

அசோகமித்திரன் பவளவிழா

திருவல்லிக்கேணி கலாசாரக் கழகம், சென்னை-5
கஸ்தூரி ஸ்ரீநிவாஸன் நூலகம், சென்னை-5
தமிழ் இலக்கியக் கழகம், சென்னை-5


இணைந்து வரவேற்று நடத்தும்

எழுத்தாளர் அசோகமித்திரன்
அவர்களுக்கு
பவளவிழா தொடக்கக் கூட்டம்.


இடம்: ஸ்வாமி விவேகானந்தா அரங்கம்,
ஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூல்,
பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.

நாள்: 12.2.2006 ஞாயிறு மாலை 6.00 மணி

தலைமை: டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்

வரவேற்புரை: ஞானக்கூத்தன்

உரை:
ஆனந்த் நடராஜன், ஆசிரியர் - இந்தியா டுடே (தமிழ்ப் பதிப்பு)
சா.கந்தசாமி, எழுத்தாளர்
மணா, ஆசிரியர் - புதிய பார்வை
திலகவதி, ஐ.பி.எஸ்., எழுத்தாளர்
திருப்பூர் கிருஷ்ணன், ஆசிரியர் - அமுதசுரபி
செவாலியே ஸ்ரீராம்
பழ. அதியமான், கட்டுரையாளர்
பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர் - கிழக்கு பதிப்பகம்

நாடக வாசிப்பு: ஜெயராவ் - தியேட்டர் லேப்

ஏற்புரை: அசோகமித்திரன்
நன்றி உரை: அமைப்பாளர்

Wednesday, February 08, 2006

தமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்

தென் மாநிலங்களுக்கான பண்பலை வானொலி அலைவரிசை ஏலம் சென்றவாரம் முடிவடைந்தது. தமிழகம், புதுவையில் மொத்தமாக ஏழு நகரங்களில் (பாண்டிச்சேரி + ஆறு தமிழக நகரங்கள்) அலைவரிசை ஒதுக்கப்படவுள்ளது. இவற்றுள் மூன்று இடங்களில் ஏற்கெனவே தனியார் வானொலிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை: ஏற்கெனவே இருக்கும் சூர்யன் எஃப்.எம், ரேடியோ மிர்ச்சியுடன் புதிதாக ஏலத்தில் வென்றவர்கள் - ரேடியோ மிட்-டே, அனில் அம்பானியின் ஆட்லேப்ஸ் ஃபில்ம்ஸ், ரேடியோ சிட்டி, தினமலர், குமுதம், முத்தூட் ஃபைனான்ஸ்.

கோவை: ஏற்கெனவே இருக்கும் சூர்யன் எஃப்.எம்முடன் புதிதாக ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, தினமலர்

மதுரை: புதிதாக வென்றவர்கள் - சூர்யன் எஃப். எம், ரேடியோ மிர்ச்சி, தினமலர்

திருச்சி: சூர்யன் எஃப்.எம், தினமலர்

திருநெல்வேலி: ஏற்கெனவே இருக்கும் சூர்யன் எஃப்.எம்; புதிதாக ஆட்லேப்ஸ் ஃபில்ம்ஸ், தினமலர், செஞ்சுரி கம்யூனிகேஷன்ஸ்

தூத்துக்குடி: புதிதாக சூர்யன் எஃப்.எம், தினமலர், செஞ்சுரி கம்யூனிகேஷன்ஸ்

பாண்டிச்சேரி: புதிதாக சூர்யன் எஃப்.எம், தினமலர், ஆட்லேப்ஸ் ஃபில்ம்ஸ்

ஆக ஏழு இடத்திலும் சூர்யன் எஃப்.எம், தினமலர் அலைவரிசைகள் இருக்கும். இதில் தினமலர் Worldspace Radio செயற்கைக்கோள் வானொலியில் ஏற்கெனவே ஒரு நிலையத்தை இயக்கி வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பல மாநிலங்களிலும் அந்தந்த ஏரியா செய்தித்தாள் தாதாக்கள் அலைவரிசைகளைப் பெற்றுள்ளனர். கேரளத்தில் மலையாள மனோரமா, மாத்ருபூமி இருவரும்; வட மாநிலங்களில் தைனிக் பாஸ்கர், தைனிக் ஜாக்ரன் இருவரும். ஆனால் இந்தியா முழுமைக்கும் என்று பார்க்கும்பொது சன் குழுமம், ஆட்லேப்ஸ் ஃபில்ம்ஸ் இரண்டும்தாம் முன்னிலையில். தொலைக்காட்சியில் இல்லாவிட்டாலும் ரேடியோவில் national footprint சன் குழுமத்துக்குக் கிடைக்கப்போகிறது. வாழ்த்துகள்.

Tuesday, February 07, 2006

டென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்

நேற்று 'தி ஹிந்து'வில் ஹசன் சுரூர் எழுதிய கட்டுரை படிக்கப்படவேண்டியது. அதிலிருந்து ஒரு பத்தி:
The row became public only when the cartoons were reproduced last month, first by a Norwegian newspaper and then other European papers to assert their right to free speech. Saudi Arabia recalled its Ambassador from Denmark, a boycott of Danish goods started and public protests were held.

Much has been made of the boycott of Danish goods in some Arab countries but is a boycott not part of legitimate protest? When Americans can boycott French wine and cheese because of the French Government's refusal to support the invasion of Iraq, why can't people in another part of the world do the same to register their protest?
டென்மார்க்கைச் சேர்ந்த ஆர்லா என்ற நிறுவனம் வருடத்துக்கு கிட்டத்தட்ட 1/2 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வியாபாரத்தை இழந்துள்ளது.

Sunday, February 05, 2006

காஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்

நேற்று NDTV-யில் ஒரு கலந்துரையாடலைப் பார்க்க நேரிட்டது. NDTV மட்டுறுத்துனர் ஒருவர், அவருடன் கலந்துகொண்டவர்கள் நான்கு பேர். அந்த நால்வரில் ஒருவர் இந்திய பத்திரிகையாளர், ஒருவர் இந்திய ஜம்மு காஷ்மீர் பார் கவுன்சில் தலைவர், ஒருவர் பாகிஸ்தான் PPP கட்சிப் பிரமுகர், கடைசியாக பாகிஸ்தான் காஷ்மீரின் வடக்குப் பகுதியின் (Northern Areas) தலைவர் ஒருவர்.

[காஷ்மீர் பிரச்னை பற்றி சசி ஆறு பாகங்களாக அவரது வலைப்பதிவில் எழுதியது உதவியாக இருக்கும்: ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து | ஆறு]

அக்டோபர் 2004-ல் இஃப்தார் விருந்தின்போது முஷாரஃப் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார். அவரது கோணத்தில் காஷ்மீர் மொத்தம் ஏழு பகுதிகளால் ஆனது. அவற்றுள் இரண்டு தற்போது பாகிஸ்தான் கையில் உள்ளன. மற்ற ஐந்து பகுதிகளும் இந்தியா கையில் உள்ளன. இந்த ஏழு பகுதிகளிலும் சிறிது சிறிதாக படைக்குறைப்பு செய்து, இந்தப் பகுதிகளுக்கு அதிக சுதந்தரத்தைக் கொடுத்து, மெதுவாக அவற்றின் ஆட்சி நிலையில் மாற்ற்ம் செய்யலாம் என்பது முஷாரஃப் திட்டம்.

பாகிஸ்தான் வசம் இருக்கும் இரண்டு பகுதிகள்: வடக்குப் பகுதி (Northern Areas) - கில்கிட் நகரைத் தலைநகராகக் கொண்டது மற்றும் ஆஸாத் காஷ்மீர் (Azad Kashmir) - முஸாஃபராபாத்தைத் தலைநகராகக் கொண்டது. இதைத்தவிர ஒரு பகுதியை பாகிஸ்தான் அரசு சீனாவுக்குக் கொடுத்துவிட்டது (அக்ஸாய் சின்). இந்தியா இந்தப் பெயர்களை எற்றுக்கொள்வதில்லை. மொத்தமாக இந்தப் பகுதிகளுக்கு "பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர்" (Pakistan Occupied Kashmir - POK) என்று பெயரிட்டு அழைக்கிறது (அதாவது சீனாவுக்குக் கொடுத்த பகுதியையும் சேர்த்து).

பாகிஸ்தானில் இருக்கும் இரண்டு காஷ்மீர் பகுதிகளும் பாகிஸ்தான் தேர்தலில் ஈடுபடுவதில்லை. இரண்டும் தனியாக பாகிஸ்தான் ஆளுநர் ஒருவரால் ஆளப்படுகின்றன. மேலும் இங்குள்ள மக்களின் மொழி காஷ்மீரி கிடையாது. வடக்குப் பகுதி மக்கள் பேசும் மொழி உர்தூ, பஷ்டூன் ஆகியவை. NDTV உரையாடலில் கலந்துகொண்ட இந்தப் பகுதி அரசியல்வாதி தங்களுக்கு காஷ்மீரிகளோடு எந்த ஒற்றுமையும் கிடையாது, பாகிஸ்தானின் பிற மக்களோடுதான் ஒற்றுமை அதிகமாக உள்ளது என்றார்.

இந்தியாவின் கையிலிருக்கும் காஷ்மீரில் - ஜம்மு & காஷ்மீர் - மூன்று பெரிய பகுதிகள். காஷ்மீரி மொழி பேசும் முஸ்லிம்கள் இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி, காஷ்மீரி மொழி பேசும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜம்மு பகுதி, புத்த மதத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் லடாக் பகுதி. இந்த லடாக் பகுதியில் திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றும், லடாக்கி மொழி பேசுபவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கேயே பால்டி மொழி பேசும் பல ஷியா முஸ்லிம்களும் உள்ளனர்.

முஷாரஃப் பார்வையில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியை மூன்றாகப் பார்க்கிறார் போல. அதனால்தான் இந்தியாவின் கையில் உள்ள காஷ்மீரில் ஐந்து பகுதிகள் உள்ளது என்கிறார் என்று நினைக்கிறேன்.

-*-

இனி நேற்றைய விவாதத்துக்கு வருவோம். வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர் சொன்னது என்னை யோசிக்க வைத்தது. "பாகிஸ்தானும் இந்தியாவும் தத்தம் கதைகளையே பேசுகின்றனர். ஆனால் ஹரி சிங் கையிலிருந்த காஷ்மீரில் ஏகப்பட்ட இன/மத/மொழிக் குழுக்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே முடிவையே விரும்புவார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்கலாம்" என்பதே அவரது வாதம். பல மொழிகளைப் பேசுபவர்கள் (காஷ்மீரி, உர்தூ, லடாக்கி, பால்ட்டி, ஹிந்த்கோ +++++ என்று பல மொழிகள் அந்தச் சிறு பகுதிக்குள்), பல மதங்கள் (சன்னி - ஷியா இஸ்லாம், ஹிந்து, புத்த, சீக்கிய மதங்கள்), இனப் பின்னணிகள் காஷ்மீரில் உள்ளன.

ஆனால் இந்தியப் பெரும்பான்மை ஆதிக்கத்தை எதிர்க்கும் காஷ்மீரி முஸ்லிம்களே அதே ஆதிக்கப் பார்வையுடன்தான் லடாக்கி புத்த மதத்தவரையும் கில்கிட் பால்டிஸ்தான் மக்களையும் காஷ்மீரி இந்து பண்டிட்களையும் பார்க்கின்றனர்.

எனவே ஓரளவுக்கு முஷாரஃப் சொல்வதுபோல காஷ்மீரை ஏழாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக plebiscite நடத்தலாம். அப்படி நிஜமாகவே நடந்தால் வடக்குப் பகுதி பாகிஸ்தானுடன் சேரவே முடிவெடுக்கும். ஜம்மு, லடாக் பகுதிகள் இரண்டும் இந்தியாவுடன் சேர முடிவெடுக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஜம்மு, லடாக் இரண்டு பகுதிகளிலுமே காஷ்மீரி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் வேறு எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் மிகவும் பிரச்னையான பகுதி: AK/POK காஷ்மீர் + இந்திய காஷ்மீர் பள்ளத்தாக்கு. இவர்கள் மூன்று முடிவுகளில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் - பாகிஸ்தானுடன் சேர்வது, இந்தியாவுடன் சேர்வது, தனித்து இருப்பது. ஏனெனில் இந்தப் பகுதியில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு, தனித்து இருப்பதற்கான நிலைப்பாடு என மூன்றுமே ஓரளவுக்கு இருக்கிறது. குறைந்த காலத்துக்காவது இந்தப் பகுதிக்கு அதிகபட்ச சுதந்தரம் கொடுத்து ஐ.நா பாதுகாப்பு அதிகாரத்தின்கீழ் கொண்டுவரலாம்.

குறைந்தது வடக்குப் பகுதி, லடாக், ஜம்மு போன்ற பகுதிகளிலாவது சீரான நிலைமை சீக்கிரம் வர வாய்ப்புள்ளது.

நேற்றைய NDTV கலந்துரையாடலைக் கேட்டபிறகு முஷாரஃப் திட்டம் அவ்வளவு ஒன்றும் மோசமானதாகத் தெரியவில்லை. ஆனால் அக்டோபர் 2004க்குப் பிறகு இத்தனை நாள்களில் இந்தியா இந்தத் திட்டத்தைச் சற்றும் கண்டுகொள்ளாமல் முழுதாக எதிர்க்கிறது. இது வருத்தம் தரக்கூடியது!

கல்வி வவுச்சர் முறை

சென்ற வாரம் தில்லியில் இருந்தபோது Centre for Civil Society என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நானும் சத்யாவும் சென்றிருந்தோம்.

Centre for Civil Society - CCS என்பது லிபரல் (எழுவரல்) சிந்தனையுள்ள ஓர் ஆராய்ச்சி மையம். தனி மனிதனின் தளையற்ற வாழ்க்கையை வரவேற்கும் இந்த அமைப்பு தாராளமயமாக்கப்பட்ட சந்தைகளின் தேவையை வலியுறுத்துவதோடு மக்கள்மீதும் சந்தைமீதும் குறைந்த கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசையும் வரவேற்கிறது.

தில்லியில் அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் அரசு மாதாமாதம் எவ்வளவு செலவு செய்கிறது என்று தெரியுமா? ரூ. 100? ரூ. 200? ரூ. 500? ரூ. 1,000?

உண்மையில் அரசு மாதத்துக்கு ஒரு குழந்தைக்கு ரூ. 1,200க்குமேல் செலவு செய்கிறது. அரசின் கல்விக்கூடங்களுக்கான வருடாந்திர பட்ஜெட்டை எடுத்துக்கொண்டு மொத்தமாக அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது வருடத்துக்கு சுமார் ரூ. 15,000! ஆனால் அரசுப் பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் கல்வி?

பல பள்ளிகளில் ஆசிரியர்களே வருவதில்லை. வரும் ஆசிரியர்கள் கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை. குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. குழந்தைகள் குடிக்கத் தண்ணீர் இல்லை. இந்தப் பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் பொருளாதார அடிமட்டத்திலிருந்து வருபவர்கள். சரியான கவனிப்பு இன்றி இந்தக் குழந்தைகள் பாதி நேரம் பள்ளிக்குச் செல்லாமல் விளையாடுகிறார்கள். கெட்ட பழக்கங்களை எளிதில் பெற்றுக்கொள்கிறார்கள். மிகக்குறைவான தேர்ச்சி சதவிகிதமே இந்தப் பள்ளிகளில் நேர்கிறது. மாணவர்கள் வாழ்க்கை மொத்தத்தில் பாழ். அடுத்தடுத்த தலைமுறையினரும் தொடர்ந்து இதே புதைகுழிக்குள் மாட்டிக்கொள்ள நேர்கிறது.

(தனியார் பள்ளிகள் எல்லாமே உயர்வா என்று நீங்கள் கேட்கலாம். பல தனியார் பள்ளிகளும் சரியான வசதிகளின்றியே உள்ளன. ஆனால் காசைக் கொடுத்துக் கல்வியைப் பெறும் பெற்றோர்கள் கல்விக்கூடத்தை மாற்றும் உரிமை பெறுகிறார்கள். அரசுப் பள்ளிக்கூடத்தில் இலவசக் கல்வியை பெறும் குழந்தைகளில் பெற்றோர்கள் தம் விதியை நொந்துகொள்கிறார்கள்.)

ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு என்று வருடா வருடம் செலவழிக்கப்படும் பணம் எங்கே போகிறது? தெரியவில்லை.

ரூ.15,000க்கு உலகத்தரத்தில் நம் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் பாடம் சொல்லித்தரலாமே? இதை எப்படிச் செய்வது?

CCS, சிக்ஷா என்னும் அமைப்புடன் சேர்ந்து தில்லியின் குடிசைப்பகுதி ஒன்றில் ஒரு மேடை நாடகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் பஸ்தியில் வசிக்கும் மக்கள் தினக்கூலிகளாக வேலை செய்பவர்கள். பெற்றோர்களின் படிப்பு என்பதே மிகவும் குறைவு, அல்லது ஏதுமில்லை. இவர்களது பிள்ளைகள் அருகில் இருக்கும் சில அரசுப்பள்ளிகளில் படிக்கின்றன.

இந்தப் பிள்ளைகளும் பெற்றோர்களும் நாடகத்தைக் காண அமர்ந்திருந்தனர். நாடகத்தில் பல்வேறுவிதமான பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அதற்காகும் செலவுகள், இந்தப் பள்ளிகளில் என்ன கற்றுத்தரப்படுகின்றன ஆகியவை பேசப்பட்டன. கடைசியில் தில்லி அரசு அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வருடத்துக்கு ரூ. 15,000 செலவு செய்கிறது என்ற தகவலைப் பெற்றோர்களால் நம்ப முடியவில்லை. அப்படியானால் ஏன் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை, குடிநீர் இல்லை, ஆசிரியர்கள் இல்லை என்று பல கேள்விகளை எழுப்பினர். நாடக நடிகர்கள் மேடையிலிருந்து இறங்கிவந்து மக்களிடையே கலந்து அவர்களது கருத்துகளைக் கேட்டனர். பிள்ளைகளும் பெற்றோர்களும் வெளிப்படையாக தங்களுக்கு அரசுப் பள்ளிகள்மீது இருக்கும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினர். பணம் இருந்தால் நல்ல தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதையே விரும்புவதாகச் சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சி முழுமையாக விடியோ செய்யப்பட்டது. இதைப்போல பல பஸ்திகளில் 'ஜன் சுன்வாயி' நிகழ்த்தி அதன்மூலம் அரசை 'கல்வி வவுச்சர்களை' தரவைப்பது CCS-ன் நோக்கம். அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 15,000 செலவு செய்கிறது என்பது உண்மையானால் அந்த மதிப்புக்கான வவுச்சர்களை பெற்றோர்களுக்குக் கொடுக்கலாம். பெற்றோர்கள் அந்த வவுச்சர்களை எடுத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டிய பள்ளிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

(இந்த வவுச்சர் முறை ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் சமீபத்தில் ஃபுளோரிடா மாகாணத்தில் வவுச்சர் முறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று அந்த மாகாண உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1999-ல் கொண்டுவரப்பட்ட இந்த வவுச்சர் முறையில் ஃபுளோரிடா அரசுப் பள்ளிகளில் படிக்கும் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் விரும்பினால் அரசின் வவுச்சர்களைப் பெற்றுக்கொண்டு தனியார் பள்ளிகளில் சேரலாம். எனக்கு இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மேலும் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை படு மோசமானது.)

வவுச்சர்கள் கொடுத்தால் பொதுமக்கள் அனைவரும் அரசுப் பள்ளிக்கூடங்களை விடுத்து தனியார் பள்ளிக்கூடங்களுக்கு ஓடிவிடுவார்கள், அதனால் மிச்சமுள்ள மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியாமல் அரசுப் பள்ளிகள் மொத்தமாக இழுத்து மூடிவிடவேண்டியிருக்கும் என்று வவுச்சர்களை எதிர்ப்பவர்கள் கூறலாம். ஆனால் பொதுமக்கள் ஏன் இந்தப் பள்ளிக்கூடங்களை விட்டு ஓடவேண்டிய நிலை இருக்கிறது என்று அவர்கள் சொல்லவேண்டும்.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் அரசு (மாநில அரசு, பஞ்சாயத்துகள், நகராட்சிகள்) எந்தப் புதுப் பள்ளிக்கூடத்தையும் திறக்கவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தோடு அரசு பள்ளிக்கூடம் கட்டுவதை நிறுத்திவிட்டது என்று நினைக்கிறேன். அதேபோல அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளும் எண்ணிக்கையில் அதிகரிக்கவில்லை. ஆனால் வருடா வருடம் பள்ளிக்கூடம் சென்று படிப்போர் தொகை அதிகரிக்கிறது. இந்த மாணவர்களுக்கான கல்விகளை வழங்குவது தனியார் பள்ளிக்கூடங்களே.

நான் நாகப்பட்டினத்தில் படித்த சமயத்தில் (1975-1987) அங்கு மொத்தம் இருந்தவை ஐந்து உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள். அவற்றில் ஒன்றே ஒன்றுதான் முழுமையான அரசு கல்விக்கூடம். நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி. இரண்டு கிறித்துவ மிஷனரிகளில் பள்ளிகள் (ஒன்று கத்தோலிக்கம், ஒன்று புராடெஸ்டண்ட்). ஒன்று நாகை - நாகூர் இரண்டு இடங்களிலும் இருக்கும் ஹிந்து-முஸ்லிம் அறக்கட்டளை. மற்றொன்று தனியார் அறக்கட்டளை ஒன்று. ஆனால் இந்தத் தனியார் பள்ளிகள் அனைத்துக்குமே அரசு ஆசிரியர் சம்பளத்தை ஏற்றுக்கொண்டது. இன்று இருபது வருடங்களுக்குப் பிறகு நாகையில் இன்னமும் 5-6 பள்ளிக்கூடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அனைத்துமே தனியார் பள்ளிகள் - மெட்ரிக் சிலபஸ். எந்தப் பள்ளியிலுமே மாணவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

தனியார் யாரும் கல்விக்கூடங்களைக் கட்டாவிட்டால் என்ன ஆகியிருக்கும்? நான் படித்தபொழுது அரசு மான்யம் பெறும் ஒரு பள்ளியில் மிகக்குறைந்த கல்விக்கட்டணத்தில் படித்தேன். ஆனால் இன்று பெரும்பான்மையான மத்தியதர வகுப்பினர் சொந்தச் செலவில் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

மொத்தத்தில் இன்று பாதிக்கப்படுவது ஏழைகள் மட்டும்தான். அவர்களுக்கு அவசியம் தேவை கல்வி வவுச்சர்.

கல்வி வவுச்சர் முறை வந்தால் அரசுப் பள்ளிகள் நாளடைவில் இழுத்து மூடப்படும். ஆனால் அதில் வருந்தத்தக்க அம்சம் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் பலவும் தோன்றி வவுச்சர் பணத்தில் நல்ல கல்வியைக் கொடுக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அரசால் இனியும் கல்வி விஷயத்தில் மக்களுக்கு நல்ல சேவையைக் கொடுக்கமுடியும் என்று தோன்றவில்லை.

அதிகபட்சமாக பாடத்திட்டத்தை நிர்ணயம் செய்வது, தனியார் பள்ளிகளை மேற்பார்வை பார்ப்பது ஆகியவை மட்டுமே அரசின் வேலையாக இருக்கவேண்டும்.

Saturday, February 04, 2006

புத்தகக் கண்காட்சி செய்திகள்

கொல்காதாவில் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள்களில் கூட்டம் அலைமோதி, பக்கத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் வரை வரிசைகள் நின்றதாகச் செய்தி: The Statesman

அரங்குகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன என்று முன்னமே சொல்லியிருந்தேன். ஆனால் ஏன் இப்படி அலங்கரிக்கிறார்கள் என்று எனக்கு முதலில் புரியவில்லை. சிறப்பான அலங்காரத்தைக் கொண்ட அரங்குக்கு என்று தனியாகப் பரிசுகள் கொடுக்கின்றார்களாம். அதனால்தான்!


தில்லி புத்தகக் கண்காட்சிக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வந்தனராம். விற்பனை எவ்வளவு என்று சரியான கணிப்பு இல்லை. UNI News

விற்பனை கொல்காதா அளவுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் சென்னையைவிட நிச்சயம் அதிகமாக இருக்கவேண்டும்.

விமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து

எதிர்பார்த்ததுபோலவே நான்கு நாள்கள் வேலைநிறுத்தத்துக்குப் பிறகு இடதுசாரிகள் தலைமை பின்வாங்கியுள்ளது. குருதாஸ் தாஸ்குப்தா "நாம் வெற்றி பெற்றுவிட்டோம்" என்று ஆவேசமாகப் பேசினார். ஆனால் மத்திய அரசு திட்டவட்டமாக மும்பை, தில்லி விமான நிலையங்களைத் தனியார்வசம் ஒப்படைப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பிற விமான நிலையங்கள் தனியார்மயமாக்கல் பற்றிய விவாதங்கள் நடைபெறும்போது ஊழியர்களின் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது. அவ்வளவுதான்.

முக்கியமாக இந்தத் தனியார்மயமாக்கலில் ஊழியர்களின் நலன்கள் எந்தவிதத்திலும் பாதிக்க்கப்படும் என்று ஊழியர்கள்கூட நினைக்கவில்லை. இடதுசாரித் தலைவர்கள் தங்களது தனியார்மயமாக்கல் எதிர்ப்பை வெளிக்காட்ட இந்த நான்கு நாள்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவ்வளவே. இதனால் பலருக்கும் ஏகப்பட்ட பிரச்னைகள். மும்பை விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர் இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளுக்காக தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இடதுசாரித் தலைவர்கள் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை.

முந்தைய பதிவு

Friday, February 03, 2006

இலங்கைத் தமிழர் தேசியம்

இப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்: Sri Lankan Tamil Nationalism, A. Jeyaratnam Wilson, Penguin Books India, Rs. 250. ISBN 0143027891. (Fabmall Page)

இது இந்தியா ரீபிரிண்ட். வெளிநாட்டில் இருக்கும் வாசகர்கள் University of British Columbia Press பதிப்பில் இந்தப் புத்தகத்தை வாங்கலாம். விலை $22.95. ISBN: 0774807601. (Amazon Page) பிரிட்டனிலும் ஒரு பதிப்பு வெளியாகியுள்ளது. கைவசம் உடனடியாகத் தகவல் இல்லை. அதுவும் கிட்டத்தட்ட இதே விலைதான் இருக்கும்.

இது சற்றே அகடெமிக் ஆன புத்தகம். எளிதாகப் படிக்க முடியாது. ஆனால் கவனமாக, மெதுவாகப் படித்தால் நிறையப் புரிந்துகொள்ளலாம். இலங்கை பிரச்னையின் அடிப்படை வரலாற்றைப் புரிந்துகொள்ள மிகவும் உதவும்.

Thursday, February 02, 2006

விமான நிலைய ஊழியர் போராட்டம்

தி ஹிந்து

தில்லி, மும்பை விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை இடதுசாரிகளும் அவர்களது தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன.

இடதுசாரிகளின் நிலைப்பாடு தனியார்மயத்தை எதிர்ப்பது. ஆனால் தனியார்மயத்துக்கு எதிராக அவர்களால் எந்தவித மாற்று முறையையும் வைக்க முடியவில்லை.

கடந்த சில வருடங்களில் அரசு நிறுவனங்களின் தனியாதிக்கத்தை மாற்றி தனியாரையும் அந்தந்தத் துறைகளில் அனுமதித்ததனால் பல நன்மைகள் மக்களுக்குக் கிட்டியுள்ளன. தொலைத்தொடர்பு ஒரு முக்கியமான உதாரணம். இப்பொழுது ரயில் பாதைகளில் தனியார்கள் சரக்கு ரயில்களை ஓட்டலாம் என்று மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த முடிவு மிக முக்கியமானது. அரசால் வேண்டிய அளவு சரக்கு ரயில்களை விடமுடியவில்லை. வேகமாக வளரும் பொருளாதாரத்தில் கட்டுமானத்தை விரிவாக்க ஏகப்பட்ட தனியார் முதலீடு தேவைப்படுகிறது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் தனியாரை அனுமதித்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று விமானச்சேவை இந்தியாவில் வெகுவாக முன்னேறிவருகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் சிறப்பான சேவை கிடைத்துவருகிறது. அதிகமான விமானங்கள், பல சிறு நகரங்களுக்கு இணைப்பு விமானச் சேவை ஆகியவையெல்லாம் தனியார் வரத்தால் மட்டும்தான் சாத்தியமாகியுள்ளன. ஆனால் இப்படி அதிகமான வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளை விமான நிலையங்களால் வழங்க முடிவதில்லை. ஓரளவுக்குத் தொடர்ச்சியாக விமானப் பயணம் மேற்கொள்பவன் என்ற முறையில் கடந்த ஓரிரு வருடங்களில் விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நேரடியாகச் சந்தித்துள்ளேன். அரசால் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவால் - முதலீடுகளைச் செய்து வசதிகளைப் பெருக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தனியாரை அழைத்து கூட்டு நிறுவன முறையில் வசதிகளைப் பெருக்க முடிவு செய்தனர். அதுவும் நெருக்கடி அதிகமான தில்லி, மும்பை நகர விமான நிலையங்களில் மட்டும்தான்.

இதன்படி அரசும் தனியாரும் பங்குதாரராக உள்ள கம்பெனி ஒன்று தில்லி, மும்பை விமான நிலையங்களைப் பராமரிக்கும். ஆக இது முழுமையான தனியார்மயமாதல் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதி அரசுக்கு வருமானப் பங்காக அளிக்கப்படும். நிலம் அரசின் பெயரில்தான் இருக்கும். இந்த கம்பெனிக்கு நீண்டகால வாடகைக்கு வழங்கப்படும்.

ஏற்கெனவே வேலையில் இருக்கும் அனைவருக்கும் வேலை தொடர்ந்து இருக்கும். மாருதி உத்யோகில் இது நடக்கவில்லையா? பெரிதாக வளரும் எல்லா நிறுவனங்களிலுமே மேலும் அதிகமாகத்தான் வேலையாள்கள் எடுக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு மேல்முதலீடு எதுவும் செய்யாமலேயே வருமானத்தையும் பெறும், பொதுமக்களுக்கும் விமானச் சேவை நிறுவனங்களுக்கும் வசதிகள் பெருகும். ஆனால் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இந்தத் தனியார்மயமாக்கத்தால் வேலைகள் போய்விடும் என்று எதைவைத்துக்கொண்டு சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

முன்னொரு காலத்தில் வங்கிகள் கணினிமயமானபோதும்கூட அதைக் குருட்டுத்தனமாக எதிர்த்து வேலை நிறுத்தத்தில் இறங்கியவர்கள் இந்த இடதுசாரித் தொழிற்சங்கங்கள். இன்று ஒவ்வொரு வங்கியும் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டு அதனால் மக்களுக்குப் பெருத்த பயன் கிட்டியுள்ளது. அதே நேரம் வங்கித்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகமாகியுள்ளன.

குருட்டு எதிர்ப்பு இடதுசாரிகளின் கொள்கை முடிவு.

ஆனால் பிற இடங்களில் நடந்ததுபோலவே இடதுசாரிகளின் வேலை நிறுத்த முடிவு சில நாள்களில் மறக்கப்படும். தோழர்கள் வேலைக்குத் திரும்புவார்கள். அவர்களது வேலை பறிபோகாது. ஆனால் இந்த வேலை நிறுத்தம் நடக்கும்போது பல ஆயிரம் மக்களது நேரமும் பணமும் இதற்கிடையில் விரயமாகும். அதைப்பற்றியெல்லாம் இடதுசாரிகள் கவலைப்படுவதில்லையே?

Wednesday, February 01, 2006

கேபிள் கையகப்படுத்தல் சட்டம்

தி ஹிந்து

தமிழ்நாட்டில் உள்ள சில Multi-System Operator-களது நிறுவனங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அவசர அவசரமாக ஒரு மசோதாவைத் தயார் செய்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியும் உள்ளது.

சன் டிவி குழுமத்தில் எஸ்.சி.வி நிறுவனத்தின்மீது புகார்கள் இருந்தால், MSOக்கள் முறையாக நடந்துகொள்ளவில்லை என்றால் அதற்குத் தேவை Cable Service Providers Regulation Act. அதற்கு பதில் தான்தோன்றித்தனமாக, எந்தவித விவாதமும் இல்லாமல் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது தவறான செய்கை.

திமுக, பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்யாமல் இதன் தவறை சட்டமன்றத்திலேயே சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தான் 'தேசியமயமாக்கலை' எப்பொழுதுமே வரவேற்பதாகச் சொல்கிறார்.

தேசியமயமாக்கலை வைத்து எத்தனையோ வருடங்களாக நம் நாடு நாசமாகியுள்ளது. கேபிள் டிவியை நடத்துவது டாஸ்மாக் சாராய விற்பனை போல் அல்ல. தனி மனித விருப்பு வெறுப்புகளை, அரசை நடத்துவதிலும் சட்டமன்றங்களை நடத்துவதிலும் காண்பித்து, தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவிலேயே தம்மை விடத் தரம் தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்று தினம் தினம் நிரூபித்துவருகிறார்கள்.

தயாநிதி மாறன் ராஜ் டிவி விவகாரத்திலும் சரி, ஜெயா பிளஸ் விவகாரத்திலும் சரி, நியாயமாக நடந்துகொள்ளவில்லை. ராஜ் டிவியை harass செய்வதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்றே அவர் நடந்துகொண்டிருக்கிறார். அதே போல தினமலர் நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைக்கு அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்றும் கேள்விப்படுகிறேன்.

இதுபோன்ற திமுக மந்திரியின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால் மட்டுமே இன்று ஜெயலலிதா செய்திருப்பதை நியாயம் என்று சொல்ல முடியாது. "சபாஷ், சரியான போட்டி!" என்று எட்டி நின்று பார்த்து ரசிக்கக் கூடாது.

MSO கையகப்படுத்துதல் கவர்னரின் கையெழுத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது. கவர்னர் தன்னால் முடிந்தவரை தாமதப்படுத்தலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டுசெல்லவேண்டும். சட்டமன்றம் சரியான அடிப்படைக் காரணம் இல்லாமல் இந்த சட்டத்தை இயற்றியுள்ளதாக எனக்குப் படுகிறது. இதையே நீதிமன்றங்களும் ஊர்ஜிதம் செய்யும் என்றே நினைக்கிறேன். ஆனால் அதற்குள்ளாக தன் எதிரியைக் காயப்படுத்திவிட்ட அற்ப சந்தோஷம் மட்டுமே ஜெயலலிதாவுக்கு மிஞ்சும். மக்கள் வரிப்பணம் வழக்கை நடத்த வீணாகும்.