Wednesday, April 27, 2011

சத்ய சாயி பாபா

ஆங்கிலப் பத்திரிகைகள் ‘சத்ய சாயி பாபா மறைந்தார்’ என்று எழுத, தமிழ்ப் பத்திரிகைகள், ‘முக்தி அடைந்தார், சித்தி பெற்றார்’ என்றன. ஆந்திர மாநில அமைச்சர்கள் கண்ணில் நீருடன் பேசினர். மன்மோகன் சிங்(கே) நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

40,000 கோடி ரூபாய் என்றும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் அவரது அறக்கட்டளையின் சொத்து மதிப்பு பற்றித் தகவல்கள் வெளிவந்துள்ளன. சொத்தைப் பராமரிக்கப்போவது யார் என்ற கேள்வி ஒருபக்கம். ஆனால் அடுத்த ஆன்மிக வாரிசு யார் என்று இதுவரை கேள்விகளும் இல்லை; எனவே பதில்களும் இல்லை. எங்கோ கர்நாடக கிராமத்தில் அடுத்த சாயி பாபா பிறந்து வருவார் என்பதுடன் இப்போதைக்கு முற்றுப்புள்ளி.

சத்ய சாயி பாபா பெரும்பாலும் பொய், பித்தலாட்டம் போன்றவைமூலம் தன் ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தைக் கட்டினார். அற்புதங்கள் - அதாவது விபூதி, குங்குமத்தைக் காற்றிலிருந்து வரவழைப்பது, வயிற்றிலிருந்து லிங்கம், மோதிரம் போன்ற சிறு சிறு பொருள்களை வரவழைப்பது, தங்கத்தால் ஆன சங்கிலி போன்றவற்றைப் பக்தர்களுக்குத் தருவது - இவைதான் எளிய மக்களை அவரிடம் ஈர்த்தன. எளிய மக்கள் என்றால் அதில் காவஸ்கர், தெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள்முதல் பல சினிமா, அரசியல் பிரபலங்களும் அடக்கம்!

அரசியல்வாதிகளுக்கு சத்ய சாயி பாபாவிடம் வேறு பல ஆதாயங்களும் இருந்திருக்கலாம்.

கடந்த பல பத்தாண்டுகளில் இந்து மதப் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் உருவாக்கிய வெகு சிலரில் சத்ய சாயி பாபாவும் ஒருவர். ஹரே கிருஷ்ணா இயக்கத்தை உருவாக்கிய பக்தி வேதாந்த பிரபுபாதா, ‘செக்ஸ் சாமியார்’ என்று எளிதில் புறந்தள்ளிவிட முடியாத ரஜனீஷ், Transcendental Meditation என்பதைப் பிரபலமாக்கிய மகேஷ் யோகி ஆகியோர் வட்டத்தில் வருபவர் சத்ய சாயி பாபா. முதல் மூவர் வேதாந்தம்/கிருஷ்ண பக்தி, தத்துவம்/தாந்திரிகம், வேதம்/தியானம் ஆகியவற்றை முன்வைக்க, சத்ய சாயி பாபா அற்புதங்கள்/கூட்டு வழிபாடு ஆகியவற்றை முன்வைத்தார். இந்த நால்வருமே உருவாக்கிய அகில உலகத் தொண்டர் குழாம் இவர்களது காலத்துக்குப்பின் குலைந்துள்ளது, குலையப்போவது புரிந்துகொள்ளக்கூடியதே. இவர்கள் யாருமே வலுவான அடுத்த நிலைத் தலைவர்களை உருவாக்கவில்லை. சொத்துகளை மட்டும் எக்கச்சக்கமாகச் சேர்த்தார்கள்.

சத்ய சாயி பாபா அறக்கட்டளைமூலம் பல நல்ல காரியங்கள் (கல்வி நிலையங்கள், சென்னைக்குக் குடிநீர், சூப்பர் ஸ்பெசியாலிடி மருத்துவமனையில் நடக்கும் இலவச சிகிச்சைகள்) நிகழ்ந்தேறியுள்ளன என்றாலும் அடிப்படையில் தனியான ‘சாமியார்’ ஒருவர் கோடிக்கணக்கான சொத்துகளைச் சேகரிக்கும் நிலை நாட்டுக்கு நல்லதல்ல, பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல. இந்தியாவில் பொதுவாக சாமியார்கள் புனிதப் பசுக்களாகவே கருதப்படுகிறார்கள். அதிலும் அரசியல் லாகவம் தெரிந்தவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

இந்த நிலை மாறவேண்டுமானால் ஆன்மிக/மத அறக்கட்டளைகள் அனைத்தும் வலுவான கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்குக்கீழ் கொண்டுவரப்படவேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் பட்டியலிடப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் வரி வசூலிக்கப்படவேண்டும். கருப்புப் பணம் புரளாமல் இருக்க வகை செய்யப்படவேண்டும்., அந்நிய நாடுகளில் இந்த ஆசாமிகள் சொத்துகளைச் சேர்ப்பது கண்காணிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செய்வது, மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக ஆகாது. பணம் கொட்டும் வழியை ஓர் அரசு கவனமாகக் கண்காணிக்கத் தவறிவிட்டால் அதனால் நாட்டுக்குப் பெரும் கேடுதான் நிகழும்.

உதாரணத்துக்கு, பொதுமக்கள் கொடுத்துள்ள பல கோடி ரூபாய் பணம் இப்போது சத்ய சாயி அறக்கட்டளையை நிர்வகிக்கப்போகும் யாரோ சிலர் கையில். அந்தப் பணம் என்ன ஆகுமோ... மக்களுக்குப் பயன்படப்போகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதற்குமுன்பாவது சத்ய சாயி பாபா என்ற மனிதரால் தமக்கு ஏதோவிதத்தில் நிம்மதி என்று எண்ணிக்கொண்டு மக்கள் இந்தப் பணத்தை இந்த அறக்கட்டளைக்கு வழங்கினர். இப்போது அதுவும் கிடையாது.

எவ்வளவு விரைவில் இதுபோன்ற மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம் வருகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் இதனைக் கொண்டுவரக்கூடிய மனவலு இந்திய அரசியல்வாதிகளிடம் இப்போதைக்கு இல்லை என்றே நினைக்கிறேன். அடுத்த பத்தாண்டுகளிலாவது இது உறுதியாக ஏற்பட்டால் நல்லது.

Saturday, April 23, 2011

கேண்டீட் - வோல்ட்டேர்

வோல்ட்டேர் எழுதிய கேண்டீட் என்ற கடுமையான சட்டயர், தமிழில் என் மொழியாக்கத்தில். அச்சுப் புத்தகம் வேண்டுமெனில் கிழக்கு பதிப்பகத்தில் விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம். இங்கே மின் புத்தகமாக, இலவசமாக, புத்தக தினத்தை முன்னிட்டு.

Candide - Tamil Novel

ஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்

ஆர்தர் கோனான் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் முதலாவதான ‘A Study in Scarlet’ என்பதன் என்னுடைய தமிழாக்கம் - கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியானது. இப்போதும் அச்சுப் பதிப்பில் கிழக்கு வழியாகக் கிடைக்கும். இனி மின்புத்தகமாக, இலவசமாக scribd வழியாகவும் நீங்கள் இதனைப் படிக்கலாம். புத்தக தினத்துக்காக, உங்களுக்கே உங்களுக்காக!

Oru Mothiram Iru Kolaigal - Tamil Novel - Sherlock Holmes

Friday, April 22, 2011

கிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகள்

நாளை (23 ஏப்ரல் 2011) தொடங்கி சுமார் 10 நாள்களுக்கு கீழ்க்கண்ட இடங்களில் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகளை கிழக்கு நடத்துகிறது. இரண்டு மாதங்களுக்குமுன் செய்ததுபோல பழைய, அழுக்கான புத்தகங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. நீங்கள் செல்லவேண்டிய இடங்கள்:

மைலாப்பூரில்: தேஜா பவன்
மைலாப்பூர் தெப்பக் குளம் பஸ் ஸ்டாப் எதிரில்
ராமகிருஷ்ணா மிஷன் சாலை
அடையார் ஆனந்தபவன் அருகில்
மைலாப்பூர், சென்னை 600004
போன்: 95000-45608

***

ராயபுரத்தில்: ராசி மகால்
எண் 123, மன்னார் கோயில் தெரு
ராயபுரம், சென்னை 600013
போன்: 95000-45609

தி ஹிந்து குடும்பச் சண்டை

நான் ஆங்கிலம் கற்றுக்கொண்ட நாளிலிருந்து ஹிந்து செய்தித்தாள் படிக்கிறேன். இன்றும் அந்தச் செய்தித்தாளைத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறேன். இடையில் வெளிநாடு ஒன்றில் சில ஆண்டுகள் வசித்தபோதும் பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு வாரம் கழித்துக் கிடைக்கும் இந்தப் பத்திரிகையை விடாமல் வாசித்துவந்திருக்கிறேன்.

இந்தப் பத்திரிகைமீது குறைகள் இல்லாமல் இல்லை. எதோ ஒரு மாதிரியான ஆங்கிலத்தில் எழுதுவது இவர்கள் வழக்கம். ஆனால் அதன்மூலம்தான் நான் பல adjective-களைக் கற்றுக்கொண்டேன். சமீப காலங்களில் மொழியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்.ராம் எடிட்டர்-இன்-சீஃப் ஆவதற்குமுன் பெரும்பாலும் எஸ்டாபிளிஷ்மெண்ட் வழியைப் பின்பற்றும் கன்சர்வேடிவ் பத்திரிகை என்றே பெயர்பெற்றிருந்தது. ஆனால் என்.ராம் palace coup மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதும் எடிட்டோரியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கைப் பிரச்னையில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக, முதலில் சந்திரிகா குமரதுங்கவுக்கும் பின்னர் மகிந்த ராஜபக்‌ஷேவுக்கும் குரலாகவும், விடுதலைப் புலிகள் தரப்புக்கு முற்றிலும் எதிராக, பொய்க் கதைகளைப் பரப்பும் அளவுக்குச் சென்றது, முற்றிலும் சீன ஆதரவு நிலைப்பாடு, பொதுவான கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடு என்று தொடங்கி மேலும் பலவற்றைச் சொல்லலாம்.

அதனால் என்ன? பத்திரிகைகள் பக்கச் சார்புநிலை எடுப்பதில் என்ன தவறு என்று பலரும் கேட்கலாம். ஒன்றுமில்லை. என் பத்திரிகை எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்பது ஒரு பக்கம். சார்புநிலை தாண்டி பத்திரிகா தர்மம் என்பதிலிருந்து வழுவும் அளவுக்கு ஒரு செய்தித்தாள் போனால் அதைக் கண்டிக்கவேண்டிய தார்மிக நியாயம் ஒன்று மறுபக்கம்.

உதாரணமாக சமீபமாக நடக்கும் விக்கிலீக்ஸ் இந்தியா செய்திகளை எடுத்துக்கொள்வோம். ஏதோ, உலகையே உலுக்கும் செய்திகள் என்பதாக ஹிந்து வெளியிடும் இவற்றை இந்தியாவில் யாருமே கண்டுகொள்வதில்லை. ஆனால் அதில் எந்த அளவுக்கு உள்நோக்கத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்பது ஆத்திரத்தை வரவழைக்கிறது.

மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதையே அமெரிக்கா விரும்புகிறது என்று விக்கிலீக்ஸ் ஆவணங்களைக் காட்டி தி ஹிந்து செய்தி வெளியிடுகிறது. அமெரிக்க என்ன வேண்டுமானாலும் விரும்பிக்கொள்ளட்டும். ஆனால் மமதாவும் அமெரிக்காவும் உள்கை; மமதா அமெரிக்காவிடமிருந்து பணத்தை பெட்டி பெட்டியாகப் பெற்றார் என்று ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்றால் அப்படி ஏதும் இல்லை. இன்று ஹிந்துவில் வந்திருக்கும் கார்ட்டூனில் திரிணாமுலின் மூன்று இலைகள்மீது அமெரிக்கா ஸ்டார்ஸும் ஸ்டிரைப்ஸுமாக நீர் ஊற்றுவதுபோல உள்ளது. இதன் மறைபொருள் என்ன? திரிணாமுல் வளர அமெரிக்கா நீர் ஊற்றுகிறது என்கிறது தி ஹிந்து. இது அபாண்டம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. சரியாக இரண்டு பக்கங்கள் தள்ளி பிரகாஷ் காரத் குய்யோ முறையோ என்று குதிக்கிறார். ‘அய்யாமாருங்களே, அம்மாமாருங்களே, பார்த்தீங்களா, மமதாதான் ஜெயிக்கணும்னு இந்த அமெரிக்கா அசிங்கப்பய சொல்லுறான்’ என்று புலம்புகிறார். இப்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கிறது. இதைவிட அசிங்கமாக ஒரு பத்திரிகை நடந்துகொள்ளமுடியாது.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இன்றும் நேற்றும் நடந்ததால் இதனைப் பற்றி எழுதுகிறேன். ஈழப் பிரச்னையில் எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். ராஜபக்‌ஷே கூட அப்படி தன்னை டிஃபெண்ட் செய்திருக்க மாட்டார். என். ராம் தானே முன்னின்று பேட்டி எடுத்து அவரைக் காப்பாற்றுகிறாராம்!

***

இது இப்படி இருக்க, திடீரென என். ராம் கனவில் கார்ல் மார்க்ஸ் வந்து குடும்பத்தையும் பிசினஸையும் கலக்காதே என்று வழிகாட்டினாராம்! உடனே அவர் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வேலையிலிருந்து விலகி, professional எடிட்டர்களைக் கொண்டு பிசினஸை நடத்தவேண்டும் என்று போர்ட் மீட்டிங்கில் சாதித்துவிட்டார். விஷயம் வேறு என்று புலம்புகிறார் என். ராமின் சகோதரர் என். ரவி. அவர்கள் பிரச்னை எப்படி வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் ரவி, தன் கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் ராஜா விஷயம் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதையே சற்றே நீட்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி விவகாரத்தில் எந்த அளவுக்கு தன் செய்தித்தாளைத் தவறாகப் பயன்படுத்துகிறார் ராம் என்ற கேள்வியையும் நாம் கேட்கவேண்டும்.

***

நான் தொடர்ந்து ஹிந்து வாங்கப்போகிறேனா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் ஹிந்துவை தொடர்ந்து 132 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; இந்தியாவின் தேசியச் சொத்து என்று ராம் குறிப்பிடுவதுபோல நாமும் தொடர்ந்து குறிப்பிடவேண்டுமா என்பதுதான் கேள்வி.

Saturday, April 16, 2011

சத்தீஸ்கர், மாவோயிஸம், பினாயக் சென்: ஓர் அரசு அதிகாரியின் பார்வையில்

சில மாதங்களுக்கு முன் சத்தீஸ்கர் சென்றிருந்தேன். பினாயக் சென் கைது செய்யப்பட்டு அவர்மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பெயில் மறுக்கப்பட்டிருந்த நேரம் அது. மிகக் குறைவான நேரங்களே அந்த மாநிலத்தில் செலவிட்டேன். தலைநகர் ராய்பூரில் கொஞ்ச நேரம், அருகில் இருந்த ஒரு மாவட்டத்தில் கொஞ்ச நேரம். அப்போது அங்கு இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம், அவர் பார்வையில் சத்தீஸ்கர் நக்ஸலைட்டுகள் பற்றி விளக்கச் சொன்னேன். அப்போதே இதனை வெளியிடலாம் என்றுதான் எழுதினேன். ஆனால் பொறுத்திருந்தேன். நேற்று உச்ச நீதிமன்றம் பினாயக் சென்னுக்கு பிணை கொடுத்தவுடன், இப்போதாவது வெளியிடவேண்டும் என்று பிரசுரிக்கிறேன். இது ஒருபக்கப் பார்வைதான் என்றாலும் சத்தீஸ்கர் பிரச்னையைப் புரிந்துகொள்ள உபயோகமாக இருக்கலாம். அந்த ஐ.ஏ.எஸ் அலுவலர் தன் வாய்மொழியாகச் சொல்லுவதாகக் கீழே உள்ளதை எழுதியிருக்கிறேன்.

***

இந்திய சுதந்தரத்துக்குமுன்னர் இன்றைய சத்தீஸ்கரில் நான்கு ராஜ சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றை ஆண்டவர்கள் பழங்குடிச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. அந்தப் பகுதிகளில் பெரும்பான்மையானவர்கள் காடுகளில் வசிக்கும் பல்வேறு பழங்குடியினத்தவர்களே. இந்த அரசர்கள் பழங்குடி வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவரவில்லை.

பழங்குடியினர் வாழ்க்கைமுறை அருந்ததி ராய் போன்ற சில எழுத்தாளர்களால் ரொமாண்டிக்காகப் பார்க்கப்பட்டு, அப்படியே எழுத்தில் வெளியாகிறது: அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள்; யாருக்கும் எந்தத் தீங்கையும் விளைவிக்காதவர்கள்; நாட்டில் வசிப்போர்தான் மாட்டின் மடியை ஒட்டக் கறந்துவிட்டு கன்றுக்குட்டிக்குச் சிறிதுகூடப் போகாமல் செய்வார்கள், ஆனால் பழங்குடிகள் கன்றுக்குட்டி குடித்து மீதி இருந்தால் மட்டுமே அதைக் கறப்பார்கள்; இத்யாதி, இத்யாதி...

ஆனால் உண்மை நிலை வேறு. பழங்குடிகள் காட்டைப் பெருமளவு அழிக்கிறார்கள். அவர்களது மக்கள்தொகையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விரைவில் அவர்களால் காடுகளை மட்டுமே நம்பி வாழமுடியாது. அவர்களது விவசாயம் என்பது வெட்டி-எரி வகை விவசாயம். குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் விளைந்துள்ள காட்டுத் தாவரங்களை வெட்டி அவை காய்ந்ததும் நெருப்பிட்டு எரிப்பார்கள். ஒரு மழைக்குப் பிறகு, அந்த மண்ணில் தானிய விதைகளைத் தூவுவார்கள். அது வளர்ந்து, பறவைகளும் விலங்குகளும் அழித்ததுபோக என்ன மிஞ்சியிருக்கிறதோ, அவற்றை எடுத்துச் சாப்பிடுவார்கள். முயற்சி என்று எதுவுமே கிடையாது. சோம்பேறிகள்.

நெல்லிக்காய் மரம் காட்டில் எத்தனையோ ஆண்டுகளாக வளர்ந்திருக்கும். அதன்மீது ஏறி பழங்களைப் பறிப்பதற்குபதில் மரத்தையே வெட்டித் தள்ளிவிடுவார்கள். விழுந்த மரத்திலிருந்து கனிகளைப் பறித்துக்கொள்வார்கள். மேலும் கனி வேண்டும் என்றால் அடுத்து எங்கே மரம் உள்ளது என்று தேடிப்போவார்கள்.

முயல் வேட்டை ஆடுவார்கள். கையில் அம்பையும் வில்லையும் எடுத்துக்கொண்டு முயலைத் துரத்திச் செல்வார்கள் என்று நினைக்காதீர்கள். காட்டின் ஒரு பகுதியை எரிப்பார்கள். அதில் சிக்கிச் சாகும் முயல்களை அப்படியே தின்றுவிடுவார்கள்.

இப்படியாக இவர்களால் காடு பெருமளவு அழிக்கவும் படுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாகக் காட்டில் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே; அப்போது அழிபடாத காடு இப்போது மட்டும் திடீரெனெ அழிவது ஏன் என்றால், நாட்டிலிருந்தும் காட்டின் ஓரங்களைக் கைப்பற்ற மக்கள் முயற்சி செய்வது ஒருபக்கம் (இதில் கணிமச் சுரங்கங்கள் அமைக்க விரும்பும் நிறுவனங்களும் அடக்கம்; பழங்குடி அல்லாதோர் காட்டு நிலங்களை விவசாய நிலங்களாக ஆக்குவதும் அடக்கம்); மற்றொரு பக்கம் பழங்குடியினர் மக்கள்தொகை வேகமாக அதிகரிப்பது.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்தபோது காடுகளைப் பராமரிக்க என்று கொண்டுவந்ததுதான் Indian Forest Act. 19-ம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகிறது. ஆனால் சத்தீஸ்கர் பகுதியின் முன்னாள் சமஸ்தானங்களுக்கு 1950-களிலிருந்துதான் நடைமுறைக்கு வந்தது. 1950-கள், 1960-களில் அப்போது மத்தியப் பிரதேசமாக இருந்த இந்தப் பகுதிகளில் வன அலுவலர்கள் யாரும் சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் 1970-களில் இந்திரா காந்தி காலத்தில் வனச் சட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு பழங்குடி இனத்தவர் அந்தக் காலங்களில் அரசுடன் கொள்ளும் தொடர்பு, மூன்று பேரைச் சார்ந்திருந்தது. பட்வாரி எனப்படும் கிராமத் தலைவர், வன அலுவலர், காவலர். இந்த மூவரும் பல இடங்களிலும் பழங்குடியினர்களைச் சுரண்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். கூடவே பழங்குடியினரும் நாட்டைச் சேர்ந்த மக்களும் சந்திக்கும் இடத்தில் எப்போதுமே சுரண்டல் இருக்கும். காரணம், பழங்குடியினர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது, பணம் என்ற கருத்துபற்றித் தெரியாது. சத்தீஸ்கர் பகுதிப் பழங்குடியினர், மஹுவா (இலுப்பைப்பூ), டெண்டு இலை (பீடி சுற்றும் இலை) போன்ற சில காட்டு விளைபொருள்களைச் சேகரித்துக்கொண்டு நகரச் சந்தைக்கு வந்து விற்பார்கள். ஆனால் பதிலாகப் பணம் பெறமாட்டார்கள். பண்டமாற்று முறையில் உப்பு, அரிசி ஆகியவற்றை வாங்கிக்கொண்டு போவார்கள்.

இந்தப் பண்டமாற்று முறையில் பழங்குடியினர் எப்போதுமே ஏமாற்றப்படுவார்கள். ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள அரிசியைக் கொடுத்துவிட்டு, அதற்கு இணையாக 10-15 ரூபாய் பெறுமானமுள்ள இலுப்பைப் பூவையோ, டெண்டு இலையையோ வாங்கிக்கொள்வார்கள். பணம், மதிப்பு ஆகியவை பற்றிய நுணுக்கங்கள் பழங்குடியினருக்குத் தெரியாது.

கூடவே பணம் கடன் கொடுக்கும் லேவாதேவிக்காரர்கள், சாராயம் விற்பவர்கள் ஆகியோரும் உள்ளே நுழையும்போது நிலைமை மோசமாகிறது.

நாம் ஏற்கெனவே சொன்னபடி, பட்வாரி, வன அலுவலர், காவலர் ஆகியோரும் பழங்குடிப் பகுதிகளில் நுழைந்து அவர்கள் சேகரித்துவைத்திருக்கும் காட்டுப் பொருள்களைத் தங்கள் உபயோகத்துக்காக எடுத்துச் செல்வதும் உண்டு. பெண்கள்மீதான பாலியல் சுரண்டல்களும் சில இடங்களில் நிகழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் சத்தீஸ்கர் பகுதியில், தெலுங்கானாவில் உள்ளது போன்ற நில உடைமைச் சுரண்டல்கள் அல்லது ஜார்க்கண்ட், பிகார், உத்தரப் பிரதேச மாதிரியிலான மேல்சாதி சார்ந்த சுரண்டல்கள் என்றெல்லாம் இல்லை. இன்றும் சத்தீஸ்கரில் நிறையவே நிலங்கள் உள்ளன. உத்தரப் பிரதேசக் கொள்ளைக்காரர்கள், கிரிமினல்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு கொடுத்தபோது அவர்களில் சிலர் சத்தீஸ்கர் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் தங்கள் சாதீய அணுகுமுறை, சுரண்டல்கள் ஆகியவற்றைக் கூடவே கொண்டுவந்தனர். என்றாலும் நக்ஸலைட்டுகள் இருக்கும் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சத்தீஸ்கரில் நக்ஸல் இயக்கம் தோன்றக் காரணமே இல்லை.

அப்படியானால் நக்ஸல் இயக்கம் இங்கு எப்படி ஆரம்பமானது?

1980-களில் தெலுங்கானா பகுதியில் தீவிரமாக இருந்த மக்கள் போர்க் குழுவின் சில தள உறுப்பினர்கள், சத்தீஸ்கர் பகுதியை ஒரு முகாமாக ஆக்க எண்ணி இங்கே நுழைந்தனர். அவர்களது முதல் நோக்கம், சத்தீஸ்கரில் நக்ஸல் புரட்சியை ஏற்படுத்துவதே அல்ல. அதற்காக மக்களைத் தீவிரப்படுத்த முனைந்தால் அது நடந்திருக்காது. ஏனெனில் அதற்கான அடிப்படைகள் இங்கு இல்லை.

அடர்ந்த சத்தீஸ்கர் காடுகளிலிருந்து எளிதாக ஆந்திரத்துக்குள் நுழையலாம். தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் சத்தீஸ்கருக்கு வந்துவிடலாம். இரு மாநிலங்கள் என்பதால் காவலர்களுக்கு இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கும். தப்பிப்பது சுலபம். (இங்கு சந்தனக் கடத்தல் வீரப்பனை நினைத்துப்பாருங்கள். மூன்று மாநிலங்கள் சேரும் இடம் என்பதால் சர்வ சாதாரணமாக ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் சென்றதால் வெகு காலத்துக்குத் தப்பிக்க முடிந்தது.)

ஆனாலும் பழங்குடியினரின் மதிப்பைப் பெறவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நக்ஸலைட்டுகளை உள்ளே விடமாட்டார்கள். அது எளிதாக இருந்தது. வன அலுவலர், காவலர் என்று சுரண்டும் ஆசாமிகளிடம் பழங்குடியினர்கள் பயத்துடனேயேதான் இருந்தார்கள். அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு அதுவரை இருந்ததில்லை. ஆனால் இதை நன்கு கவனித்த நக்ஸலைட்டுகள் செய்த முதல் காரியம் சுரண்ட வந்த அலுவலர்களைக் கட்டிவைத்து பழங்குடி மக்கள் பார்க்கும்போதே அவர்களை அடித்து உதைத்தது. அந்த ஆசாமிகளை அந்தப் பகுதிக்கே வரக்கூடாது என்று துரத்தியது.

இதனால் பழங்குடி மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி. நக்ஸலைட்டுகள்மீது மரியாதை கூடியது. அவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது.

அரசு நிர்வாகத்திடமிருந்து எதிர்வினை என்று எதுவுமே இல்லை. மத்தியப் பிரதேசம் மிகப் பெரிய மாநிலம். குறைந்த காவலர்கள். மோசமான நிர்வாகம். வலுவற்ற கட்சித் தலைமை. உட்கட்சிப் பூசல்கள். இதனால் யாரும் காடுகளைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. காடுகளுக்குச் செல்வதையே அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்.

எனவே நக்ஸலைட்டுகள் எளிதாக ஆந்திரத்திலிருந்து சத்தீஸ்கர் வந்து அமர்ந்துகொண்டார்கள். பழங்குடியினரில் ஒரே ஒரு குழுவினர்தான் வீரதீரச் செயல்களில் இறங்கக்கூடிய மார்ஷியல் பின்னணி கொண்டவர்கள். மூரியாக்கள் எனப்படும் இவர்களைத் தங்கள் வசம் இழுத்துக்கொள்வதில் மாவோயிஸ்டுகள் வெற்றிபெற்றனர். இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். ஆரம்பகாலத்தில் மாவோயிஸ்டுகளிடம் அதிகமாகத் துப்பாக்கிகள் இருக்கவில்லை. அந்தக் கட்டத்தில் மூரியாக்களின் பாரம்பரிய ஆயுதங்களே உதவின.
பழங்குடியினரிடம் சாதிப் பிரச்னைகள் அதிகமாக இல்லை. ஆனாலும் சில நேரங்களில், உதாரணமாக சாவு போன்ற நிகழ்வுகளின்போது, பிற பகுதிகளுக்குச் சென்று அந்தத் தகவல்களைச் சொல்ல என்று தனியான பழங்குடிப் பிரிவு இருந்தது. இந்தப் பிரிவைச் சேர்ந்த பழங்குடிகள் பிற பழங்குடிகளால் ஒருவிதத்தில் சுரண்டப்பட்டனர். மாவோயிஸ்டுகள் அந்தப் பழக்கத்தை நிறுத்தினார்கள். இதனால் அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நக்ஸலைட்டுகளுடன் சேர்ந்துகொண்டனர்.

அரசு ஆங்காங்கே நிறுவியிருந்த சில பள்ளிக்கூடங்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பவேண்டாம் என்று மாவோயிஸ்டுகள் தடுத்துவிட்டனர். மாறாக அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி ஆகியவற்றைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இன்று சத்தீஸ்கர் நக்ஸலைட் தலைவர்களாக இருப்போர் பலரும் படிப்பறிவு இல்லாதவர்களே.
1990-களின் இறுதியில் சத்தீஸ்கர் தனி மாநிலமாகப் பிரிக்கப்படுவதற்கான சட்டபூர்வமான வேலைகள் செய்யப்பட்டு, 2000-ல் தனி மாநிலம் உருவானது.

2003-ல், ஆந்திராவில் நக்ஸலைட்டுகள் ஒரு பெரிய தவறைச் செய்தனர். சந்திரபாபு நாயுடு சென்ற வண்டியைத் தகர்க்க அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்தக் கட்டம் முதற்கொண்டு ஆந்திரக் காவல்துறை ஆவேசத்துடன் நக்ஸலைட்டுகளைத் தாக்க ஆரம்பித்தது. அடுத்த சில வருடங்களில் ஆந்திர நக்ஸலைட்டுகள் அனைவரும் ஒட்டியுள்ள சத்தீஸ்கருக்குள் நுழைந்துவிட்டனர். இன்று சத்தீஸ்கர் நக்ஸலைட் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே ஆந்திராக்காரர்களே.

நக்ஸலைட்டுகளால் பழங்குடியினர் அனைவருக்கும் ஆதாயம் என்றில்லை. முக்கியமான சில பழங்குடித் தலைவர்கள் வாய்ப்பை இழக்க ஆரம்பித்தனர். உதாரணமாக, பழங்குடிப் பூசாரிகள். நக்ஸலைட்டுகள் நாத்திகத்தைப் புகுத்தினர். பூசாரிகள் கேட்கும் கோழியைக் கொடுக்காதே என்றனர். சில பூசாரிகளின் குடுமியை அறுத்தனர். இதனால் நக்ஸலைட்டுகள்மீது ஒருசில பழங்குடியினருக்காவது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் நக்ஸலைட்டுகள் சில பழங்குடியினரைத் தண்டிக்க ஆரம்பித்தனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நிச்சயமாக தங்கள் கைகளில் வலுவாக அதிகாரம் இருப்பதும் நக்ஸலைட்டுகளின் இந்தச் செயலுக்குக் காரணம். இந்தப் பழங்குடிகள் அனைவரும் சாலைகளில் வந்து அமர்ந்துகொண்டனர். இதனால் நிர்வாகம் தலையிடவேண்டியிருந்தது.

சில பழங்குடியினரிடையே இருந்த மாவோயிஸ்டுகள்மீதான எதிர்ப்பை அரசு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து, சல்வா ஜுதும் என்று பெயரிடப்பட்ட அமைப்பைத் தோற்றுவிக்க உதவியது. இவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டு, இவர்கள் சிறப்புக் காவலர்கள் என்று அழைக்கப்பட்டனர். இது 2005-ல் ஆரம்பித்தது.

தொடர்ந்து நக்ஸலைட்டுகளுக்கும் சல்வா ஜுதும் குழுவினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் நக்ஸலைட்டுகள் 40-50 பேர் கொண்ட சல்வா ஜுதும் குழுவை வெட்டிக் கொன்றனர். இந்த அளவுக்கு வன்முறை சத்தீஸ்கரில் அதற்குமுன் நடந்ததில்லை.

இப்போது இந்த இரு குழுக்களுக்கு இடையேயான வன்முறை கிட்டத்தட்ட நின்றுவிட்டது. சில இடைப்பட்டவர்களால் ஒருவித சமாதானம் ஏற்பட்டுள்ளது. சல்வா ஜுதுமில் பங்கெடுத்த பழங்குடிகள் காட்டுக்குத் திரும்பி வந்தால், அவர்களைத் தாக்கமாட்டோம் என்று நக்ஸலைட்டுகள் உறுதி அளித்துள்ளனர்.

இப்போதைக்கு நக்ஸலைட்டுகள் குறி காவல்துறைமீதும் பாரா-மிலிட்டரி அமைப்புகள்மீதும்தான். சத்தீஸ்கர் காவல்துறை வலுவானதல்ல. கடுமையாகச் சண்டைபோடும் குணம், பயிற்சி என்று எதுவும் அவர்களிடம் இல்லை. பாரா-மிலிட்டரி அமைப்புகளும் அப்படித்தான் உள்ளன. இதனால் நக்ஸலைட்டுகள் எளிதில் தப்பிவிடுவதோடு, கடுமையான சேதத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

பழங்குடிகள் இன்றும் சுரண்டப்படுகிறார்கள். ஆனால் யாரால் என்று நினைக்கிறீர்கள்? நக்ஸலைட்டுகளால்! உதாரணத்துக்கு டெண்டு இலை வியாபாரத்தை எடுத்துக்கொள்வோம். ஒவ்வோர் ஆண்டும் டெண்டு இலைகளை விற்க ஒரு சந்தை கூடும். இப்போது அந்தச் சந்தையை மாவோயிஸ்டுகள் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். டெண்டு இலைக்கான விலையை உயர்த்தித்தருகிறோம் என்று வியாபாரிகளின் இடைத்தரகர்களுடன் ஆந்திராவில் பேரம் நடக்கிறது. இதன் பலன் சத்தீஸ்கர் பழங்குடியினருக்கு முழுமையாகச் செல்வதில்லை. சுளையாக 300 கோடி ரூபாய் ஆண்டுக்கு மாவோயிஸ்டுகளுக்குக் கப்பமாகப் போய்விடுகிறது.

சத்தீஸ்கரின் சுமார் 2 கோடி மக்கள்தொகையில் 1.25 கோடி பேர் பழங்குடியினர். 1990-கள் வரை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு என்று பெரிதாக எதுவும் அரசிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனால் 2000-க்குப் பிறகு, மத்திய அரசிடமிருந்து அதிகமான அளவு நிதி வருவது ஆரம்பித்தது. இதன் விளைவுகள் மக்களை நேரடியாகப் போய்ச் சேருகின்றன. நக்ஸலைட்டுகள்தான் இன்று மிகப் பெரிய பிரச்னையே. பல இடங்களில் நக்ஸலைட்டுகள் பள்ளிக் கட்டடங்களை இடிக்கிறார்கள். கேட்டால், அங்குதான் காவலர்கள் முகாம் அமைப்பார்கள் என்று சொல்லி பழங்குடி மக்களைக் குழப்பிவைத்துள்ளார்கள். பழங்குடிப் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் நடக்காமல் பார்த்துக்கொள்வதில்தான் தங்கள் வாய்ப்புகள் அடங்கியுள்ளன என்று நக்ஸலைட்டுகள் நினைக்கிறார்கள். தங்கள் ஆட்சி வரும்வரை மக்கள் பொறுத்திருக்கவேண்டும் என்பதே நக்ஸலைட்டுகள் நோக்கம்.

பினாயக் சென் போன்றோர் நல்ல பிள்ளைகளாக உலவிவருகின்றனர். உண்மையில் வளர்ச்சிக்கு எதிராக இருப்பது இவர்கள்தான். அரசின் நலத்திட்டங்கள் பலவும் மக்களுக்குப் போய்ச் சேரவிடாமல் தடுப்பது இவர்கள்தான். பினாயக் சென் கட்டாயமாக நக்ஸலைட்டுகளுடன் உறவு வைத்துள்ளார். அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். அவர்களுக்கு ஆலோசனைகள் தருகிறார். அதற்குமேலும் பலவற்றைச் செய்யக்கூடும். ஆனால் அவருக்கு எதிராக எதையும் செய்யமுடியாத அளவுக்கு நாடு முழுவதிலும் அவருக்கு அறிவுஜீவிகளின் ஆதரவு இருக்கிறது.

ராணுவம் ஒன்றுதான் நக்ஸலைட்டுகளை ஒடுக்க ஒரே வழி. ஆனால் ராணுவத்தை இந்தப் பகுதிக்கு அனுப்பவிடாமல் நாட்டின் இடதுசாரி ‘அறிவுஜீவிகள்’ தங்களது பிரசாரத்தை முடுக்கிவிடுகின்றனர். நக்ஸலைட்டுகளை முற்றிலுமாக அழித்து, அவர்களுக்கு ஆதரவு தரும் அறிவுஜீவிகளை அடக்கினால் ஒழிய, சத்தீஸ்கர் பழங்குடிகளின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வாய்ப்பே இல்லை.

Friday, April 15, 2011

ஏப்ரல் 13 தேர்தல்

சென்னையில் நான் வாக்களிக்கும் மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் இது. (இருமுறை நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களித்துள்ளேன்.) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வந்ததும் இந்தக் காலகட்டத்தில்தான். அதற்குமுன் ஸ்ரீரங்கத்தில் வாக்குச்சீட்டு வாயிலாக வாக்களித்துள்ளேன்.

இந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும் சேர்த்துப் பார்க்கும்போது இம்முறை ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் தெரிந்தது.

1. ஊடகப் பிரசாரம்: அய்யா டிவிக்களும் அம்மா டிவியும் மாறி மாறி ஞாபகம் வருதே என்று பிணங்களைக் காண்பித்து ஓட்டுகளை வாங்கப் பார்த்தனர். கூடவே காங்கிரஸ் டிவி (வசந்த், மெகா), கேப்டன், இமயம், தமிழன், விண் என்று பலவும் அரசியல் அதிரடி நிகழ்ச்சிகளைக் காண்பித்தனர். ஆனால் பொதுவில் பார்க்கும்போது ‘நடுநிலை’ இமயம் டிவியின் தேர்தல் களம் சிறப்பாக இருந்தது. (சுதாங்கன் என்னையும் அழைத்தது ஒரு காரணமாக இருக்கலாம்:-) தவிர்த்துவிட்டுப் பார்த்தால், போரடித்தது.

2. இணையப் பிரசாரம்: கட்சி அனுதாபிகள் தத்தம் வலைப்பதிவுகளிலும் பஸ், ஃபேஸ்புக் என்றும் வாக்கு வேடை நடத்தினார்களே ஒழிய, நான் நினைத்த அளவு கட்சிகள் இணையத்தை ஸ்வீகரிக்கவில்லை. இது வருத்தமே. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இணையம் பெரும் இடத்தைப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

3. தெருப் பிரசாரம்: நரேஷ் குப்தா இதனை விளக்கினார். இது தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல்பாட்டால் அல்ல. The Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959, as amended vide Act of 1992 என்று ஒரு சட்டம் உள்ளது. இந்தச் சட்டங்கள் இதுநாள்வரை மீறப்பட்டு வந்துள்ளது. ஆனால் இப்போது கடுமையாகப் பின்பற்றப்படுவதால், ஏனோ இன்றுதான் தேர்தல் தன்னிச்சையாக இதனைச் செயல்படுத்துவதுபோல உள்ளது. ஆனால் உண்மையில் இந்தச் சட்டத்தை இயற்றியது தமிழக சட்டமன்றமே! மொத்தத்தில் பலர் தேர்தலே நடைபெற்றதுபோலத் தெரியவில்லை என்றனர். இப்போதைய நடைமுறை சிறப்பானது என்பதே என் எண்ணம்.

4. வாக்களிக்க ஆர்வம்: ‘எல்லாருமே திருடர்கள்தான்!’ என்று புலம்பிக்கொண்டு வாக்களிக்காமல் வீட்டிலேயே அதிகம் பேர் உட்கார்ந்திருப்பது வாடிக்கை. ஆனால் இந்தத் தேர்தலில் அதிகமானோர் வாக்களிக்க முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியானது. இனி வரும் தேர்தல்களிலும் கிட்டத்தட்ட 80% வாக்குப்பதிவு இருந்தால் பிரமாதமாக இருக்கும்.

5. 49-ஓ: இம்முறை தேர்தல் ஆணையம் அருமையாகச் செய்திருந்தது. எல்லா வாக்குச் சாவடிகளிலும் 49-ஓ குறித்த போஸ்டர்கள் இருந்தன. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களே சுமார் 4 பேர் 49-ஓ பயன்படுத்தினர். இதனால் என்ன புரட்சி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தேர்தலுக்குத் தேர்தல் 49-ஓ எண்ணிக்கையும் இனி கவனிக்கப்படும். அது கணிசமாக ஆகும்போது கட்சிகளின் செயல்பாடும் மாறத்தொடங்கும்.

*

இந்தத் தேர்தலில் யார் ஜெயித்தாலும் சரி, தேர்தலை மக்கள் அணுகும் முறையில் மாற்றங்கள் தென்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. தேர்தலை அரசியல் கட்சிகள் அணுகும் முறையில்தான் அடுத்து மாற்றங்கள் தேவைப்படும்.

Friday, April 08, 2011

அண்ணா ஹஸாரே + (ஜன்) லோக்பால் மசோதா

ஹஸாரே மரியாதைக்குரியவர். மஹாராஷ்டிரத்தில் அவர் நிறைய சாதித்திருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் தவித்த வாய்க்குகூடத் தண்ணீர் தர நீர் இல்லாத காலம் இருந்தது. அந்த இடத்தை முற்றிலுமாக மாற்றி, மழைநீர் சேமிப்பை முன்னெடுத்து, வேண்டிய அளவுக்கு நீர் கிடைக்கச் செய்தார். ஊழலை எதிர்த்துப் பல போராட்டங்கள், பல உண்ணாவிரதங்கள். அரசுகளை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் பாடு பட்டவர்.

இப்போது ஊழலை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். லோக்பால் என்ற Ombudsman பதவியை உருவாக்கி, அதன்மூலம் மத்தியில் ஆளும் வர்க்கத்தினர் - அரசியல்வாதிகள், அதிகாரிகள் - செய்யும் ஊழலைத் தடுத்து நிறுத்த பல ஆண்டுகளாகவே முயர்சிகள் நடந்துவந்துள்ளன. ஆனால் தேர்தல் சீர்திருத்தம்போலவே ஆட்சியாளர்கள் இந்தச் சீர்திருத்தம் வரவிடாமல் எத்தனையோ எத்து வேலைகளைச் செய்தனர். இன்றுவரை மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் அதைவிட மோசம், அந்த மசோதாவே வெறும் சோதா. லோக்பால் ஒரு டம்மி பீஸாக மட்டுமே இருப்பார்.

லோக்பால் என்ற ஓர் அமைப்பின்மூலம் ஊழலைப் பெரிதும் குறைக்கலாம் என்று நினைத்துவந்த ஆர்வலர்கள் - அண்ணா ஹஸாரே போன்றவர்கள் - விரக்தி அடைந்தது நியாயமே. எனவே இவர்களாகவே ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற சட்ட முன்வரைவை உருவாக்கினர். நிச்சயமாக இதனை அரசு ஏற்காது என்பது தெரிந்ததே. அதேதான் நடந்தது. அதற்குமேல் அரசும் சரி, ஹஸாரே அண்ட் கோவும் சரி, சந்திக்கக்கூட முடியவில்லை. தாளமுடியாத விரக்தியில்தான் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு அண்ணா ஹஸாரே உண்ணாவிரதத்தில் இறங்கினார். இன்று ஊடகங்கள் அனைத்தும் அவர் பக்கம். இளைஞர்கள் பலரும் அவர் பக்கம். பொதுமக்கள் பலரும் அவர் பக்கம். சென்னையிலும்கூட மெரீனாவில் மக்கள் அமைதியாக ஹஸாரேவுக்கு ஆதரவு தந்து கூடுகிறார்கள். தக்கர் பாபா பள்ளியில் திரள்கிறார்கள். அங்கு சென்று எட்டிப்பார்த்துவிட்டு வந்துதான் இதனை எழுதுகிறேன். பிரச்னை முடியும்வரை மக்கள் போராட்டமும் அமைதியான வழியில் தொடரும் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

*

இப்போது விஷயத்துக்கு வருவோம். அரசின் சட்ட முன்வரைவு படுமோசமானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஹஸாரே அண்ட் கோ சட்ட முன்வரைவிலும் ஏற்கமுடியாத பல அம்சங்கள் உள்ளன. ஒரு நல்ல காரியத்துக்காகப் போராடும்போது சிக்கலே இல்லாத முன்வரைவைத்தான் நாம் முன்வைக்கவேண்டும். மேலும் அரசில் உள்ளவர்களையும் நம் பக்கம் இழுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் கொஞ்சம் வளைந்துகொடுத்துத்தான் ஆகவேண்டும்.

அரசில் உள்ளவர்கள் நம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்களையே நாம் விரும்பும் சட்ட மசோதாவை எப்படி ஏற்கவைப்பது? அவர்கள் நம்பிக்கை அற்றவர்கள்தான். ஆனாலும் நம் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறிச் செல்லவேண்டும்.

இப்போது ஜன் லோக்பால் மசோதா வரைவில் உள்ள குறைகளாக நான் கருதுவதைப் பார்ப்போம்:

1. லோக்பாலுக்கு போலீஸ் அந்தஸ்து வேண்டும் என்று ஹஸாரே வரைவு கேட்கிறது. அதாவது ஒருவர்மீது குற்றம் சாட்டி, கைது செய்து, அவர்கள்மீது வழக்கு தொடுப்பது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டு அமைப்புகளிடம்தான் இந்த அதிகாரம் உள்ளது. ஒன்று: மாநில காவல்துறைகள். இரண்டாவது: மத்திய சிபிஐ. (தீவிரவாதக் குற்றங்களைத் தடுக்க தேசிய போலீஸ் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற கருத்து உள்ளது; அது வந்தால் அதற்கும் போலீஸ் அந்தஸ்து இருக்கும்.) லோக்பால் மூன்றாவது அமைப்பாக ஆகும். இது சிக்கல் மிகுந்தது என்று நான் கருதுகிறேன்.

அடுத்து, சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அங்கிருந்து நகர்த்தப்பட்டு லோக்பால் அடியில் வரவேண்டும் என்பது. இப்படிச் செய்தால்தான் ஊழலைத் தடுக்கமுடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்தின் பணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீதிமன்றம் சிபிஐ அமைப்பை வேண்டிய நேரத்தில் அழைத்து, அவர்களைக் கொண்டு வழக்குகளைப் பதிவு செய்கிறது. வழக்கைக் கண்காணிக்கும் உரிமையைத் தானே கையில் எடுத்துக்கொள்கிறது. இதுபோன்ற ஊழல் வழக்குகள் என்றால் அரசுகள் அதில் இயங்காதபோது உச்ச நீதிமன்றத்திடம் செல்வதற்கு பதிலாக லோக்பால் அமைப்பிடம் செல்லலாம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது லோக்பால் அமைப்புக்கு போலீஸ் அதிகாரம் என்பது தேவையில்லை. அது சிபிஐ-ஐ அழைத்து வழக்கு பதிவு செய்யச் சொல்லி, வழக்கை விசாரித்து, தீர்ப்பளிக்கலாம். லோக்பால் அளிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கக்கூடிய அதிகாரம் இருக்கவேண்டும். இந்த நாட்டில் உச்ச நீதிமன்றத்துக்கு மேற்பட்ட நீதி அமைப்பு இருக்கக்கூடாது.

2. லோக்பால் எதனைக் கண்காணிக்கவேண்டும்? ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றால், பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்றால், போலீஸ் வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறது என்றால், லோக் ஆயுக்தா (மாநில அளவில் லோக்பாலுக்கு இணையான அமைப்பு) அல்லது லோக்பாலிடம் முறையிடலாம் என்று என்டிடிவி தளத்தில் போட்டிருக்கிறார்கள். இது பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. நாட்டில் எல்லா அமைப்புகளுமே உடைந்துபோய்விட்டதாகவும் தனி மனிதனுக்கு ரேஷன் கார்டு வாங்கித்தரத்தான் அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதாகவும் இந்தக் கதை போகிறது. சாதாரண ஊழல் குற்றங்களை எதிர்கொள்ள Prevention of Corruption Act உள்ளது. இதனைச் செய்ய, லோக்பால் தேவை இல்லை. நமக்குத் தேவை உள்ளூர் அளவில் வலுவான என்.ஜி.ஓ அமைப்புகள். ஒவ்வொருவரும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்று லோக்பாலிடமோ லோக் ஆயுக்தாவிடமோ சென்றால், அத்தோடு அவர்களது பணி முடிவுற்றது என்று வைத்துக்கொள்ளலாம். வேலைப் பளு தாங்கமுடியாமல் அவர்கள் ஓடிவிடுவார்கள்.

அமைச்சர்கள், முதல்வர், பிரதமர், எம்.எல்.ஏ/எம்/எல்.சி, எம்.பி ஆகியோர், ஐ.ஏ.எஸ் அலுவலர்கள், காவல்துறை உயரதிகாரிகள் (ஐ.பி.எஸ்) ஆகியோர்மீதான ஊழல் வழக்குகளை மட்டும்தான் லோக்பால் / லோக் ஆயுக்தா எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த வழக்குகளை நடத்த இவர்கள் யாரிடமும் மேற்கொண்டு அனுமதி பெறவேண்டியதில்லை. பொய் வழக்குகளாக இருப்பின் வழக்கு போட்டவர்மீது கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படவேண்டும். லோக்பால், தானாகவே (suo motu) வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணையில் ஈடுபட அனுமதி வேண்டும். ஆனால் இந்த வழக்கு நடைபெறும்போது சம்பந்தப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படக்கூடாது. வழக்கின் முடிவின்படிதான் தண்டனை தரப்படுதல் ஆகியவை நடைபெறவேண்டும். மேலும் லோக்பால் வழக்கு நடத்துகிறது என்பதாலேயே அவர் பதவி விலகவேண்டும் என்றெல்லாம் கேட்கக்கூடாது. (அதெல்லாம் தார்மீக அடிப்படையில் வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் சட்டபூர்வமாக அப்படிக் கேட்பது நியாயமாக இருக்காது.)

3. நீதித்துறை மீதான லோக்பால் அதிகாரம். இதனை நான் ஏற்கமாட்டேன். நீதித்துறை தன்னைத் தானேதான் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு, அதற்குக் கீழுள்ள நீதிமன்றங்களை முழுமையாகச் சரிபடுத்தும் அதிகாரம் ஏற்கெனவே உள்ளது. வேண்டுமென்றால் அதனை மேலும் வலுப்படுத்தலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விசாரித்து நீக்கும் உரிமை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு சிறு குழுவுக்கு இருக்கவேண்டும். (இங்கும் சட்ட மாற்றங்கள் தேவை.). உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிமீதான குற்றச்சாட்டை விசாரித்து அவரைப் பதவியிலிருந்து விலக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் அதிகாரம் தரப்படவேண்டும். அதையும் செயல்படுத்துவது ஜனாதிபதியாகவே மட்டுமே இருக்கவேண்டும். எந்த நிலையிலும் நீதித்துறையை லோக்பாலின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவே கூடாது.

4. லோக்பாலை யார் தேர்ந்தெடுப்பது என்பதில் ஜன் லோக்பால் மசோதா சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இதில் சீஃப் எலெக்‌ஷன் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், சர்வதேச விருதுகள் வாங்கியோர் எல்லாம் இருக்கவேண்டும் என்று கேட்பது அபத்தம். அப்படி இருந்தால்தான் லோக்பால் நியாயமாக இருப்பார் என்று சொல்வது பேத்தல். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் ஒருமனதாக யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் லோக்பால் ஆவார். இவரை நியமிப்பது ஜனாதிபதி. நீக்குவது இம்பீச்மெண்ட் வாயிலாக. இவரது தகுதியைப் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் (சிவிசி மாதிரி!). உச்ச நீதிமன்றம் இவரது நியமனத்தைச் செல்லாது என்று சொன்னால் இவர் போகவேண்டும். ஆக, இவர் எந்தவிதத்தில் பார்த்தாலும் உச்ச நீதிமன்றத்தின்கீழ் இருக்கவேண்டுமே தவிர இவர்கீழ் உச்ச நீதிமன்றம் இருக்கக்கூடாது.

5. யார் லோக்பாலாக இருக்கலாம்? ஜன லோக்பால் மசோதா, 10 பேர் கொண்ட இந்தக் குழுவில், நான்கு பேர் சட்டப் பின்னணியுடனும் (அவர்கள் நீதிபதியாக இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறது) மீதிப் பேர் எந்தப் பின்னணியிலும் இருக்கலாம் என்றும் சொல்கிறது. நான் ஏற்கமாட்டேன். இவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகளாகவோ அல்லது பணியில் இருக்கும் நீதிபதிகளாகவோ மட்டும்தான் இருக்கவேண்டும். இது ஒரு சட்டப் பணி. சட்டம் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். எவிடென்ஸ் ஆக்ட் பற்றியும் பிரிவென்ஷன் ஆஃப் கரப்ஷன் பற்றியும் ரெப்ரசெண்டேஷன் ஆஃப் பீப்பிள்ஸ் ஆக்ட் பற்றியும், பல்வேறு ஊழல் வழக்குகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். சும்மா ஆலமரத்தின்கீழ் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து வேலை அல்ல இது. நல்ல, தரமான, நியாயமான நீதிபதிகள்தான் இந்தப் பணியைச் செய்யவேண்டும்.

நீதிபதிகள் கெட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால், அதை எப்படிச் சுத்தம் செய்வது என்ற வேலையில் இறங்கவேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, அதில் அரசியல்வாதிகள் எப்படி ஈடுபடவேண்டும் என்ற மசோதாவைச் சரிசெய்யவேண்டுமே தவிர, லோக்பால் எல்லாவற்றையும் சுத்தமாக்கிவிடுவார் என்று அவர் கையில் துடைப்பக் கட்டையைத் தரும் வேலையைத் தவிர்க்கவேண்டும்.

***

இன்னும் தனித்தனி பாயிண்டுகளை எடுத்து அலசலாம். ஆனால் அடிப்படையில் ஹஸாரேவின் போராட்டம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. வரைவுதான் மாற்றப்படவேண்டும். அப்படி ஒரு வரைவை உருவாக்க அமைக்கப்படும் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கவேண்டும், குழுவின் தலைமைப் பொறுப்பு ஹஸாரேவுக்குத் தரப்படவேண்டும் என்றெல்லாம் அர்விந்த் கேஜ்ரிவால் போன்றோர் கேட்பது தவறு. சட்டம் இயற்றும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு. அது நமக்கு விரும்பிய சட்டமாக இருக்கவேண்டும் என்று கேட்கும் உரிமை நமக்கு உண்டு. நமக்கு ஏற்புடையதல்லாத சட்டத்தை அரசு தேர்வடையச் செய்வதை எதிர்க்கும் உரிமை நமக்கு உண்டு. நாம் விரும்பிய ஷரத்துகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தவைக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்தச் சட்டத்தை நானே தயாரித்துத் தருவேன், நீ சும்மா ஒப்புக்கு ரப்பர் ஸ்டாம்ப் போடு என்று சொல்ல உரிமை இல்லை. அப்படியென்றால், தேர்தலில் நில், ஜெயித்து வந்து அதனைச் செய் என்றுதான் நாம் தன்னார்வலர்களிடம் சொல்லவேண்டும்.

முதலில் சட்ட முன்வரைவை அனைத்து மக்களையும் (என்னையும் சேர்த்து) ஏற்றுக்கொள்ள ஜனநாயக முறையில் ஹஸாரே அண்ட் கோ முயற்சி செய்யவேண்டும். அதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய அவர்கள் முன்வரவேண்டும்.

Monday, April 04, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட்

கடந்த சில வருடங்களில் கிரிக்கெட் ஆட்டம் முழுவதையும் பார்ப்பது குறைந்துபோயிருந்தது. வெகு நாள்களுக்குப் பிறகு ஒரு பந்து விடாமல், இந்திய-பாகிஸ்தான் அரையிறுதி, இந்திய-இலங்கை இறுதி ஆட்டத்தைப் பார்த்தேன். இந்திய-ஆஸ்திரேலிய கால் இறுதி ஆட்டத்தின் இரண்டாம் பாதியைத்தான் முழுதாகப் பார்த்தேன்.

இந்த ஆண்டு ஏதேனும் உலகக்கோப்பை போட்டியை நேரில் பார்க்கச் செல்லலாமா என்று யோசித்தேன். ஆனால் நேரமின்மை காரணமாகச் செல்லவில்லை. 2015-ல் கட்டாயம் ஆஸ்திரேலியா சென்று பார்த்தே தீரவேண்டும்! Defending champions அல்லவா?

2003 தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டங்கள் இரண்டை நேரில் பார்த்த அனுபவம் பிரமாதம். டர்பனில் நடந்த இந்திய-இங்கிலாந்து ஆட்டம், செஞ்சுரியனில் நடந்த இந்திய-பாகிஸ்தான் ஆட்டம். அந்த ஆட்டங்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாது இந்த உலகக்கோப்பையில் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் இருந்தது. முக்கியமாக கால், அரை, முழு இறுதி ஆட்டங்களின்போது.

குறிப்பிட்டுச் சொல்ல என்று ஏதும் இல்லை. ஜகீர் கானின் பந்துவீச்சு. யுவராஜ் சிங்கின் கான்ஃபிடன்ஸ். கௌதம் கம்பீர், விராட் கோலி ஆகியோரின் மன உறுதி. தோனியின் அபார ஆட்டம். ரெய்னா, யுவராஜ், கோலி ஆகியோரின் சிங்கம் போன்ற ஃபீல்டிங்.

எதிரணிகளில் குறிப்பிட்டுச் சொல்ல பல விஷயங்கள். லசித் மலிங்காவின் மிக அற்புதமான பந்துவீச்சு. முரளிதரன் மட்டும் முழுத் திறனுடன் இருந்து, பந்து வீசி, ஓரிரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தால் இந்த இறுதி ஆட்டத்தில் சுக்காகியிருப்போம். பாகிஸ்தான் என்னை அதிகம் பயமுறுத்தவில்லை. அவர்களது பேட்டிங் உடைந்து நொறுங்கக்கூடியது. ஜயவர்தனா, சங்கக்காரா, தில்ஷன் ஆகியோரின் பேட்டிங் பிரமாதம். அவற்றையும்மீறி இந்தியா ஜெயித்தது நிஜமாகவே அபாரம்.

கால் இறுதியில் பிரெட் லீ என்னமாகப் பந்துவீசினார்! நிச்சயமாக மலிங்காவும் லீயும் டேல் ஸ்டெய்னும்தான் இப்போதைய வேகப் பந்து வீச்சாளர்களில் முன்னணியில் உள்ளனர். இந்தியாவிடம் அப்படிப்பட்ட ஒருவர் இல்லை. ஆனால் அவர்கள் அளவுக்கு எஃபெக்டிவாகப் பந்துவீசிய ஜாகீர் கான் ஒரு மாபெரும் மேட்ச் வின்னர்.

அஷ்வினின் பந்துவீச்சும் எனக்குப் பிடித்திருந்தது. அவருக்கு இறுதி ஆட்டத்தில் வாய்ப்பளித்திருந்திருக்கலாம்.

ஹர்பஜன் ஏமாற்றம்தான். அவர் தன்னை மீண்டும் கண்டடையவேண்டும். இல்லாவிட்டால் வரும் நாள்களில் திண்டாடிப்போய்விடுவார்.

டெண்டுல்கர் ரிடயர் ஆகவேண்டுமா கூடாதா என்பது பற்றி இனி நான் பேசிப் பிரயோஜனம் இல்லை.

இந்த இந்திய அணியிடம் மேலும் மேலும் நிறைய சாதிக்கக்கூடிய ஒரு உட்கரு உள்ளது. சேவாக், கோலி, கம்பீர், யுவராஜ், ரெய்னா, தோனி, ஜாகீர் கான், அஷ்வின் ஆகியோர் இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார்கள். இந்தியாவின் பந்துவீச்சு சுமார்தான். அங்குதான் அதிக கவனம் செலுத்தவேண்டும்.