Monday, May 30, 2011

ப்ரூஸ் பெர்ண்ட்

தலைப்பாகை, மாலையுடன்
மகிழ்ச்சியில் ப்ரூஸ் பெர்ண்ட்
நவீன கணிதத்தில் மிக அதிகமாகச் சாதித்த இந்தியர் ஸ்ரீனிவாச ராமானுஜன். முறையான கல்வி இல்லாத நிலையிலும், தானாகவே கணிதத்தைக் கற்றுக்கொண்டு, ராமானுஜன் உருவாக்கியுள்ள நம்பர் தியரி உலகம் அளப்பறியது.

சென்ற வாரம், மூன்று தினங்கள், யுனிவர்சிடி ஆஃப் இல்லினாய், அர்பானா-ஷாம்பெய்ன் கணிதப் பேராசிரியர் ப்ரூஸ் பெர்ண்ட் என்பவருடன் நேரத்தைச் செலவிட்டேன். அவரது ரத சாரதியாக அவர் பேச இருக்கும் பல இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்வது என் வேலையாக இருந்தது. மொத்தம் ஆறு லெக்சர்கள். மேட்சயன்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் ஒரு லெக்சர், கணிதத்தில் தீவிர ஆராய்ச்சிகள் செய்பவர்களுக்கானது. ஐஐடி மெட்ராஸ் லெக்சர், ஒரு படி கீழே இறங்கி வந்து ஓரளவுக்குக் கணிதம் அறிந்தவர்களுக்கானது. மேட்சயன்ஸிலேயே நடந்த பொதுமக்களுக்கான லெக்சர், பை மேதமேடிக்ஸ் கிளப் என்ற கணித ஆர்வலர்கள் குழுமத்தில் நடந்தது, பிகேஎஸ் கணித நூலகத்தில் பள்ளி மாணவர்களிடம் உரையாடியது, அல்லாடி குடும்பத்தினர் வீட்டில் நடந்த பொது லெக்சர் ஆகியவை பெரும்பாலும் ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு; ஆனால் அத்துடன் கொஞ்சம் கணிதமும் உண்டு. அனைத்து லெக்சரிலும் உட்கார்ந்து, பொறுமையாக வீடியோ பிடித்துவைத்துள்ளேன். அது தவிர சில மணி நேரங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

பி.கே.எஸ் வீட்டில் பள்ளி மாணவர்கள் சிலருடன்
மேல்நிலைப் பள்ளி அளவில் நாம் அல்ஜீப்ரா, அனலிடிகல் ஜியாமெட்ரி, கால்குலஸ் ஆகியவற்றை நன்கு கற்றுக்கொள்கிறோம். ஆனால் நம்பர் தியரியின் அடிப்படைகளை நாம் பள்ளிக்கூடத்தில் பயில்வது கிடையாது. பி.எஸ்சி கணிதத்திலும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்தக் காரணத்தாலேயே ராமானுஜனின் சாதனைகளை நாம் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை.

ராமானுஜன் தன் கனவில் நாமகிரித் தாயார் வந்து சொன்னாள் என்றுதான் தன் கணிதச் சமன்பாடுகள் பற்றிக் குறிப்பிடும்போது சொல்லியிருக்கிறார். அப்படியும் இருக்கலாம் என்று விஷமமாகச் சொல்லிச் சிரித்தார் பெர்ண்ட். பிற கணித நிபுணர்களைப் போலத்தான் ராமானுஜனும் சிந்தித்தார் என்பது அவரது வாதம். ஆனால் அவருக்கு எந்த அளவுக்கு அடிப்படைக் கணிதம் தெரிந்திருந்தது?

லோனியின் Plane Trigonometry, காரின் Synopsis ஆகியவை தவிர வேறு என்னென்ன புத்தகங்களை ராமானுஜன் சிறு வயதில் படித்திருந்திருப்பார்? நிச்சயமாக Elliptic Functions பற்றி அவர் படித்திருந்திருப்பார் என்கிறார் பெர்ண்ட். கிரீன்ஹில்லின் The Applications of Elliptic Functions என்ற புத்தகம் 1890-களில் வெளியாகியிருந்தது. ஏ.எல்.பேக்கரின் புத்தகமும் அதேபோல. நிச்சயம் ஏ.எல்.பேக்கர் புத்தகத்தை ராமானுஜன் படித்திருக்கவேண்டும் என்பது பெர்ண்டின் கருத்து. கூடவே ராமானுஜனின் நோட்டுப் புத்தகத்தில் பெண்டுலம் பற்றிய ஒரேயொரு ‘அப்ளிகேஷன்’ வருகிறது. எனவே கிரீன்ஹில் புத்தகத்தையும் அவர் படித்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அவற்றிலிருந்து இந்த ஃபங்க்‌ஷன்கள் பற்றி அவர் தெரிந்துகொண்டாரே ஒழிய, அதைத் தாண்டி அவருக்கான கணித உலகத்தை அவரே படைத்துக்கொண்டார் என்பது பெர்ண்டின் வாதம். ராமானுஜன் உருவாக்கிய மாக்-தீட்டா ஃபங்க்‌ஷன் உலகம் மிக விசித்திரமானது. ராமானுஜன் இது தொடர்பாக உருவாக்கியிருந்த அனைத்துச் சமன்பாடுகளும் இன்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் எதன் காரணமாக மாக்-தீட்டா ஃபங்க்‌ஷன்களை ராமானுஜன் உருவாக்கினார் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. தன் கடைசிக் காலத்தில், சாகும் தருவாயில் ராமானுஜன் உருவாக்கிய தனி உலகம் இது.

ராமானுஜன் மூன்று நோட்டுப் புத்தகங்களை விட்டுச் சென்றிருந்தார். அதில் இரண்டு நோட்டுப் புத்தகங்கள் TIFR மூலம் நகலெடுத்து வெளியிடப்பட்டன. ப்ரூஸ் பெர்ண்டும் ஜார்ஜ் ஆண்டிரூஸும் சேர்ந்து அவற்றை எடிட் செய்து ஐந்து தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். எடிட் செய்வது என்றால் இங்கே, ராமானுஜனின் சமன்பாடு ஏதேனும் ஒன்று வேறிடத்தில் நிரூபணம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான சுட்டிகளைக் கொடுப்பது; நிரூபணம் ஆகாதிருந்தால் அவற்றை நிரூபணம் செய்து சேர்ப்பது; ஏதேனும் தவறு இருந்தால் அதனைச் சரி செய்ய முயல்வது; ராமானுஜனின் குறியீடுகளை இன்றைய கணிதக் குறியீடுகளாக மாற்றித் தருவது ஆகியவை.

1970-களில் ஜார்ஜ் ஆண்டிரூஸ், ராமானுஜனின் ‘தொலைந்த’ நோட்டுப் புத்தகம் எனப்படும் மூன்றாவது நோட்டுப் புத்தகத்தைக் கண்டுபிடித்தார். டிரினிடி கல்லூரி ஆவணக் காப்பகத்தில் வாட்சனின் தாள்களோடு கிடந்தது இது. சுமார் 38 பக்கம் உள்ள இந்தத் தாள்களில்தான் மாக்-தீட்டா ஃபங்க்‌ஷன் இடம் பெறுகிறது. இதிலிருந்த Circle Problem எனப்படும் கணிதச் சிக்கலைத் தீர்க்க தனக்கும் தன் சக பேராசிரியர் ஒருவருக்கும் மாணவர் ஒருவருக்கும் சேர்ந்து சுமார் ஏழு ஆண்டுகள் ஆயின என்றார் பெர்ண்ட். இந்த முறையைத்தான் மேட்சயன்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் விளக்கிச் சொன்னார்.

சோகம் என்னவென்றால் ராமானுஜனின் சொந்த நாட்டில் அவரது கணிதத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள் மிக மிகக் குறைவு. ஓரளவுக்கு சென்னையில், கொஞ்சம் மைசூரில், கொஞ்சம் சண்டிகரில், கொஞ்சம் தேஜ்பூரில் (அஸ்ஸாம்). அவ்வளவுதான் என்கிறார் பெர்ண்ட். ராமானுஜனின் ஆராய்ச்சித் துறையில் இருக்கும் மூன்று முக்கியமான பேராசிரியர்கள் (பெர்ண்ட், ஆண்டிரூஸ் சேர்த்து) அமெரிக்காவில் இதுவரையில் சுமார் 70 பிஎச்.டி ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டுமே இந்தியர்!

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியர்களைப் பொருத்தமட்டில் யாராவது ஒருவரை நாம் மதிக்கவேண்டும் என்றால் அவர்களுக்கு சிலை வைத்து, படமாக்கி, மாலை போட்டு, பூத் தூவி, பூஜை செய்துவிடுவோமே தவிர அவர்களது கருத்துகளை, கொள்கைகளைப் படிப்பதில் நேரத்தைச் செலவிடமாட்டோம். காந்தியோ, அம்பேத்கரோ, ராமானுஜனோ எல்லாம் ஒன்றுதான். சிலைகளாக அவர்களை வடித்துவிடுவதில் நமக்கு அவ்வளவு பேரார்வம். அதன்பின் சுண்டல் விநியோகித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவோம்.

என்னளவுக்கு ராமானுஜனின் கணிதத்தை நான் முழுமையாகக் கற்க முடிவுசெய்துள்ளேன். அதன்பின் சிறுவர்களுக்கு அது தொடர்பாக விளக்கிச் சொல்ல முடிவெடுத்துள்ளேன்.

ப்ரூஸ் பெர்ண்ட் ஐஐடி மெட்ராஸில் பேசிய நிகழ்வின் வீடியோ:


Monday, May 23, 2011

சமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் ஆரம்பம்

கருணாநிதியின் அனைத்துச் செயல்களையும் எப்படியேனும் மாற்றியே தீருவது என்ற முடிவுடன்தான் ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பிருந்தே இருந்தார். ஆனால் அவற்றைச் செயல்படுத்தும்போது பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் என்று யாரேனும் நினைத்திருந்தால், அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். பொதுமக்கள் எல்லாம் இந்த இடத்தில் collateral damage-தான்.

தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் இனி மீண்டும் கோட்டையில்தான் - என்பதில் தொடங்கியது இது. இதற்குச் சொன்ன காரணங்களை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளலாம். புதுக் கட்டடம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை. சரி, கட்டி முடிப்பது தீவிரப்படுத்தப்படுமா? கட்டி முடித்தபின்னாவது தலைமைச் செயலகமும் சட்டமன்றக் கூட்டங்களும் ஓமாந்தூரார் மாளிகையின் புதுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா? தெரியாது.

அடுத்து சமச்சீர் கல்வி. மூன்றாண்டுகள் கூட்டம் கூடி, தேவை என்று சொல்லி, கொண்டுவந்த புதிய பாடத்திட்டம். புதிய புத்தகங்கள். அவற்றை அச்சடிக்க 200 கோடி ரூபாய் செலவு. புத்தக விநியோகமே ஆரம்பித்தாயிற்று. முதலில் தமிழ் பாடப் புத்தகத்தை நிறுத்தி, அதில் செம்மொழி மாநாடு பற்றிய பகுதிகளை நீக்குவார்கள் என்று அறிவித்தது, அடுத்து சமச்சீர் கல்விக்கே தடா என்று முடிந்துள்ளது. இதனால் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் பாழ். புதிதாக அச்சடிக்க மேலும் 110 கோடி ரூபாய். பள்ளிகள் திறக்க 15 நாள்கள் தாமதம். ஏற்கெனவே 10-ம் வகுப்புப் பிள்ளைகளை படிக்கத் தொடங்கியிருப்பர்; அவர்களுக்கெல்லாம் திண்டாட்டம். இது தவிர, தனியார் பதிப்பகங்கள் பலவும் இந்த சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு அச்சிட்டிருக்கும் கோனார் தமிழ் உரை, கைடுகள், நோட்ஸுகள் எல்லாம் பாழ். அரசுப் பணம் பாழ் என்பதே கொடுமை. இதில் தனியார் பணம் பாழாவது கடுமையான கண்டனத்துக்கு உரியது!

ஆனால் இரண்டு பிரச்னைகளிலும் கருணாநிதிமீதும் குற்றம் சாட்டவேண்டியுள்ளது.

புதிய கட்டடம் என்று தன் ஆட்சியின் முதல் நாளே தீர்மானித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் இருந்திருக்கவேண்டும். ஆட்சி எப்போதும் நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு நான்காம் வருடம் ஆரம்பித்தால் இப்படித்தான் பொதுமக்கள் பணம் பாழ். ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் புதுவிதமான மாநில ஆட்சி நடைபெறுகிறது. இங்குமட்டும்தான் இரண்டு தனி நபர் பகை, கொள்கையாகவும் திட்டங்களாகவும் மாற்றம் பெறுகிறது. எம்.ஜி.ஆருக்கு கருணாநிதியைப் பிடிக்கவில்லை என்றால் மேலவை கலைக்கப்படும். எனவே கருணாநிதி அதை மீண்டும் கொண்டுவருவார். எனவே ஜெயலலிதா அதை அழிப்பார்.

அடுத்து சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வி வேண்டும் வேண்டும் என்று அலைந்தது ஒருசில தன்னார்வலர்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே? எந்தப் பள்ளிக்கூடமும் இதை வேண்டும் என்று கேட்கவில்லை. மெட்ரிக் பள்ளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. ஆனால் இதைக் கொள்கை முடிவாக ஆக்கி, சட்டத்திருத்தம் கொண்டுவந்து, நீதிமன்றங்களில் கடுமையாகப் போராடி, இறுதியில் நடைமுறைப்படுத்த வந்தபோது கருணாநிதிக்கு ஆட்சி போயிற்று. இந்தப் புத்தகங்களில் செம்மொழி பாடலைப் புகுத்தவேண்டுமென்று யார் அழுதார்கள்? அதுதானே இந்தப் புத்தகங்களைக் கிடப்பில் போட ஒரு உந்துதல் ஆயிற்று? மெட்ரிக் பள்ளிகளை அரவணைத்துச் சென்றிருக்கலாம் அல்லவா? ஆனால் அரசியல் ஈகோ களத்தில் அப்படியெல்லாம் செய்வது ஏற்கமுடியாததே? எனவே மெட்ரிக் பள்ளிகள் சங்கம் என்னவெல்லாம் செய்தார்களோ, இன்று சமச்சீர் திட்டம் காலி. ஏகப்பட்ட பணம் நஷ்டம்.

வலுவான எதிர்க்கட்சியாக கருணாநிதியின் திமுக இவற்றை எதிர்கொள்ளவேண்டும். ஆனால் அப்படிச் செய்யமுடியாமல், துக்கத்தில் இருக்கிறார் தலைவர். அவரது இன்றைய கவலை, தன் பெண்ணைச் சிறையிலிருந்து மீட்கவேண்டும் என்பதே. எனவே எந்தவிதமான whimpering protest கூட இல்லாமல், ஜெயலலிதா தான் விரும்பியதைச் செய்துமுடிப்பார்.

***

விரைவில் மேலவைக்கு முட்டுக்கட்டை போன்ற இன்னபிற மிக முக்கியமான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லக்கூடிய திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பதை நாம் வரவேற்போம்.

[Disclaimer: சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு NHM நிறுவனம் கைடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் எதையும் அச்சிட்டு கையைக் கடித்துக்கொள்ளவில்லை. சுரா புக்ஸ், பழனியப்பா பிரதர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஏற்கெனவே கைடுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அவர்களுக்குக் கட்டாயம் நஷ்டம்தான்.]

Tuesday, May 17, 2011

குறுங்கடன் - 4

குறுங்கடன் பற்றி ஆரம்பித்த தொடர் மார்ச் மாதத்தில் அந்தரத்தில் நின்றுபோனது. அதன் தொடர்ச்சி...

சுய உதவிக் குழுக்கள் இந்தியாவில் குறுங்கடனை முன்னெடுத்துச் சென்ற அதே நேரம், 1990-களில் லாப நோக்குள்ள குறுங்கடன் கம்பெனிகள் இந்தியாவில் தோன்ற ஆரம்பித்தன என்று கடைசிப் பாகத்தில் எழுதியிருந்தேன்.

இந்தச் சோதனை பெரிய அளவில் ஆரம்பித்தது ஆந்திரப் பிரதேசத்தில். யார் முதலாவது கம்பெனி, யார் இரண்டாவது என்பது முக்கியமில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் குறுங்கடன் என்றாலே எல்லொரும் ஆந்திராவிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு, கர்நாடகம் என்று ஆரம்பித்து, மஹாராஷ்டிரம், குஜராத் என்று விரிந்தது. ஆனாலும் ஆந்திராவில்தான் பெருமளவு பரவல் இருந்தது.

லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனங்களைப் பொருத்தமட்டில் அவர்கள் நேரடியாகத் தாக்கியது கந்து வட்டி லேவாதேவிக் காரர்களை. பொதுவாக தெருவோரத்தில் இருக்கும் வட்டிக்கடை முதலாளிகள் மாதத்துக்கு 3 வட்டி (36%) என்று ஆரம்பித்து 5 வட்டி (60%) வரை போவார்கள். சில ஸ்பெஷல் தருணங்களில் 10 வட்டியெல்லாம் உண்டு. முதலைவிட வட்டி அதிகமாகி, அடகு வைத்த பொருள் அம்போவாவதும் நடக்கும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த வட்டிக்கடைகளை விட்டால் வேறு வழியே இல்லை. வீட்டில் திடீர் மருத்துவச் செலவு, கல்யாணம், ஊருக்குப் போகவேண்டும் என்றெல்லாம் வந்தால் வேறு எதுதான் போக்கிடம்?

லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனங்கள் 24% (2 வட்டி) என்று ஆரம்பித்து 36% என்றெல்லாம் வசூலிக்க ஆரம்பித்தனர். அடிப்படையில் லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனம் என்ன செய்கிறது? அவர்கள் முதலில் கொஞ்சம் மூலதனத்தை ஈக்விட்டி என்ற பெயரில் கொண்டுவருகிறார்கள். அந்த ஈக்விட்டியைக் கொண்டு இடத்தை வாடகைக்கு எடுத்து, ஆட்களை வேலைக்கு எடுத்து, ஒரு கடன் விநியோக நெட்வொர்க்கை உருவாக்குகிறார்கள். தம்மிடம் இருக்கும் ஈக்விட்டியைப் போல ஐந்து மடங்குவரை அவர்கள் வங்கிகளிடமிருந்து பணத்தைக் கடனாகப் பெறுகிறார்கள். இந்தப் பணத்தை குறுங்கடனாக ஏழைகளுக்குத் தருகிறார்கள். வங்கி என்ன வட்டிக்குக் கடன் தருகிறதோ அதற்கு மேல் இவர்கள் மக்களிடமிருந்து வசூலித்தால்தான் இவர்கள் கையில் பணம் மிஞ்சும். லாபமும் கிடைக்கும்.

ஆந்திராவில்தான் முதலில் சிக்கல் ஆரம்பித்தது. 2006-வாக்கில், இரண்டு குறுங்கடன் கம்பெனிகள் தம்மிடம் கடன் வாங்கியவர்களை மிரட்டிப் பணத்தைத் திருப்பித் தரச்சொல்லி நெருக்கடி தருவதாகவும் இதன் விளைவாகச் சில தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றும் செய்திகள் வெளியாயின. உடனே ஆந்திர அரசு அந்த இரண்டு குறுங்கடன் கம்பெனிகளையும் தடை செய்ததுடன், பிற குறுங்கடன் கம்பெனிகளையும் அடக்க முற்பட்டது. குறுங்கடன் கம்பெனிகள் மிக அதிக வட்டி கேட்பதாக ஆந்திர அரசு குற்றம் சாட்டியது. ஆனால் உண்மையில் கிரெடிட் கார்ட் வட்டி அல்லது தெருவோர கந்து வட்டியுடன் ஒப்பிட்டால் குறுங்கட்ன வட்டி குறைவுதான்.

ஆனால் குறுங்கடன் நிறுவனங்கள் தவறே செய்யவில்லை என்று சொல்லமுடியாது. மூன்று தவறுகளைச் செய்தனர். ஒன்று, அமெரிக்காவில் நடந்த சப் பிரைம் பிரச்னைபோல. கடன் வாங்கினால் திருப்பித் தரமுடியாதவர்களையும் நெருங்கிச் சென்று கடன் வாங்கிகொள்ள வற்புறுத்தினர். திருப்பிக் கட்ட முடியாவிட்டால் மற்றொரு கடனை வாங்கி முதல் கடனைக் கட்டுமாறு ஆலோசனை கொடுத்தனர். இதெல்லாம் கடைமட்ட ஊழியர்கள் செய்த வேலை. அவர்கள் தம் டார்கெட்டை மட்டுமே மனத்தில் வைத்து இதில் ஈடுபட்டனர். இரண்டாவது, வட்டி என்று வசூல் செய்வது ஒருபக்கம் இருக்க, பிற செலவுகள் என்ற பெயரில் மேலும் கொஞ்சம் வசூலித்தது. (டாகுமெண்ட் சார்ஜ் என்ற ஒன்று இருக்கும். காப்பீட்டுத் தொகை என்று ஒன்று இருக்கும். இதைப் பற்றி எளிய மக்களுக்கு ஒன்றும் தெரியாது.) மூன்றாவது, கடன் தொகை திரும்ப வரவில்லை என்றால் முரட்டுத்தனத்தைப் பிரயோகிப்பது. அசிங்கமாகப் பேசுவது. மிரட்டுவது. இவற்றின் விளைவாகவே தற்கொலைகள் நிகழ்ந்தன.

ஆனால் இந்தக் குறைபாடுகளுக்காக இந்த நிறுவனங்களைத் தடை செய்வது நியாயமற்றது. கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கி, இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளவே கட்டுப்பாட்டு அமைப்புகள் முயற்சி செய்திருக்கவேண்டும்.

ஆனால் இந்த நிறுவனங்களை யார்தான் கட்டுப்படுத்துகிறார்கள்?

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

(தொடரும்)

தங்கம்மாள்புரம் தண்ணீர் சேகரிப்பு

வேம்பார் சென்றிருந்தபோது அருகில் இருந்த தங்கம்மாள்புரம் என்ற கிராமத்துக்கு அழைத்துச்சென்றனர். அந்தப் பகுதிகளில் பொதுவான தண்ணீர்ப் பிரச்னை ஒன்றுதான். ஆனால் இதை எப்படி எதிர்கொள்வது?

‘ஒரு காலத்தில் தரவைகளில் கிடைத்த தண்ணீரைக் கொண்டு நல்ல விளைச்சல் பார்த்தவர்கள் நாங்கள்’ என்றார் கிராமத்தில் இருந்த ஒருவர். இப்போது அங்கு மிளகாய் பயிர் செய்துள்ளார்கள். அது முழுவதும் மழையை மட்டுமே நம்பிப் பயிர் செய்யப்பட்டது. அதற்குப் பாசனம் செய்ய நீர் கிடையாது. மழை சற்றே குறைவாக இருந்ததால் அளவில் சிறியதாக இருந்தது காய்த்துக் குலுங்கும் மிளகாய்கள். ‘முன்பெல்லாம், நீட்ட நீட்டமாக, விரல் மாதிரி இருந்தன மிளகாய்கள்’ என்றார் ஒரு பெண்.

குடிக்கவே தண்ணீர் போதாத நிலையில் மிளகாய்ப் பயிருக்குத் தண்ணீர் கிடைப்பதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம். சுமார் 2006-ல் இந்த தண்ணீர்ப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று PAD என்ற தொண்டு நிறுவனம் அந்த கிராமத்து மக்களிடம் பேசியது. அரசுகளை நம்பிக் காத்திருக்காமல், மக்களாகவே நீர் நிலைகளை முன்னேற்றுவதில் ஈடுபடலாம் என்று முடிவானது.

அருகில் ஒரு கண்மாய் உள்ளது. தூரத்து மலைகளில் மழை பெய்யும்போது நீர் இந்தக் கண்மாய் வழியாக நிறைந்து ஓடி கடலில் கலக்கும். அந்த நீரை தடுப்பணை கட்டிச் சேகரித்து, ஒரு குளத்தில் பாய்ச்சினால், ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைக்கும் என்று சிந்தித்து முடிவெடுத்தனர். ‘திட்டத்துக்கு ஆகும் செலவில் PAD பெரும்பான்மை நிதியைக் கொண்டுவரும். ஆனால் கிராம மக்கள் ஏதேனும் பங்களிப்பு தரவேண்டும்’ என்றார்கள் தொண்டு நிறுவனத்தினர். கிராமத்தினர் குறைந்தது ரூ. 10,000 திரட்டித் தருவதாகச் சொன்னார்கள்.

‘இதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான். கிராமத்தார்கள் பணம் சேர்த்து ஒன்றும் நடக்கப்போவதில்லை. அப்படி நடக்காது என்று நான் ரூ. 1,000 பந்தயம் கட்டுகிறேன்’ என்று கிராமத்தில் வம்பு பேசுபவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். கிராமப் பெரியவர் ஒருவர் உடனே, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு ஒரு நன்கொடை நோட்டுப் புத்தகத்தில் வம்பர் பெயரை எழுதி, அதற்கு எதிராக ரூ. 1,000 என்று போட்டுத் தொடங்கிவிட்டார். விரைவில் 12,000 ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிட்டது. மொத்தத் திட்டத்துக்கு ஆகும் தொகை ரூ. 4 லட்சம்.

ஹைதராபாத்திலிருந்து குழாய்கள் வந்து இறங்கின. சுமார் 750 மீட்டர் நீளத்துக்கு குழாய்களை, 3 மீட்டர் ஆழத்தில் தரையில் பதிக்கவேண்டும். அந்தக் குழாய்கள் செல்ல அப்பகுதியில் நிலம் வைத்திருந்தவர்கள் எழுத்துபூர்வமாக பத்திரத்தில் பதிவுசெய்து அனுமதி கொடுத்தனர். குழாய்கள் வந்திறங்கி ஜேசிபி இயந்திரம் வந்து சேர்ந்தது. கிராம இளைஞர்கள் குஷியில் ஹோதாவில் இறங்கினர். பெண்கள் தங்கள் பங்குக்கு காபி தயார் செய்து கொடுத்தனர். இயந்திரம் மண்ணைத் தோண்டத் தோண்ட, குழாய்கள் பதிக்கப்பட, மண் மேலே மூடப்பட, இரண்டே நாளில் குழாய் போடுதல் முடிந்தது. பிறகு அதே இயந்திரத்தைக் கொண்டு குளத்தைத் தூர்வாரி, ஓரத்தில் கற்கள் பதித்து, கம்பி வலைகள் போட்டு தயார் நிலைக்குக் கொண்டுவந்தாயிற்று.

மழைதான் உடனே வரவில்லை.

ஆனால் விரைவில் எங்கோ மழை பெய்ய, கண்மாயில் நீர் வர, குளம் நிறைந்தது. அன்றுமுதல் இன்றுவரை இந்தக் குளத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கிறது. மழை இல்லாத நேரங்களில் நீரில் மட்டம் குறைகிறதே ஒழிய முற்றிலும் வறண்டுவிடுவதில்லை.

செலவு செய்தது மக்கள். ஆனால் தூத்துக்குடி கலெக்டர் திறந்துவைத்தார் என்று கல்வெட்டு இருக்கிறது. அரசுத் தரப்பில் இதுபோல திறந்துவைக்கவாவது வருகிறார்களே என்று பாராட்டவேண்டும்.

*

இதில் பெரும் படிப்பினை நமக்கு உள்ளது. குறைந்தபட்சம் கிராமப்புறங்களில் தத்தம் பிரச்னைகளை மக்கள் ஓரளவுக்குத் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்குத் தேவையான பணத்தை பல வழிகளில் திரட்டமுடியும். இவற்றைச் செய்தபின், மக்கள் அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கலாம். ஏன் தமக்கான நலத்திட்டங்கள் நடைபெறவில்லை என்று அதிகாரத்துடன் கேட்கலாம்.

நான் அங்கே போன நேரம், சில பெண்கள் குடத்தில் நீர் மொண்டபடி இருந்தனர். மாலை நேரம் ஊராட்சிக் குழாயிலும் நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நீர் உப்புத்தன்மை கொண்டது. எனவே, குடிக்க, சமைக்கப் பயன்படாது. அதற்கு குளத்தில் சேர்ந்திருக்கும் மழை நீர்தான் சரிவரும். இந்தக் குளத்தில் Reverse Osmosis வசதிகள் செய்துள்ளனர். தேவைப்பட்டால் அதனை இயக்கி, மேலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பெறலாம். அதற்கு, குடத்துக்கு இத்தனை என்று பணம் தரவேண்டியிருக்கும்.

இது முழுமையான தீர்வல்ல. ஆனால் ஓர் ஆரம்பம்.

தங்கம்மாள்புரம் நீர்நிலை மேம்பாட்டுக்குப்பின், அருகில் பிற கிராமங்களில் இதேபோலச் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றுதான் தெரியவருகிறது. இவர்களது அடுத்த முயற்சி, இதே ஊரிலேயே மேலும் சில பொது நீர்நிலைகளை உருவாக்கி, அதன்மூலம் விவசாயத்தையும் மேம்படுத்துவது. மழை நீரைச் சேகரித்தே இங்கு நிறையச் சாதித்துவிடலாம். இதுபோன்ற முயற்சிகள் தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற வறண்ட பகுதிகளுக்கு பெரும் பயனுள்ளதாக ஆகிவிடும்.

Sunday, May 15, 2011

மன்னார் வளைகுடா வாழ்க்கை

கடந்த இரு தினங்களாக வேம்பார் என்னும் கிராமத்தில் People's Action for Development என்ற தொண்டு நிறுவன பணியாளர்களுடன் நேரம் செலவிட்டேன். அவர்களுக்கு இணையத் தொழில்நுட்பம், வலைப்பதிவுகள் தொடங்குதல், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பற்றியும் அவர்கள் பகுதி பிரச்னைகளை எப்படி வலைப்பதிவுகள்மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் விளக்கிச் சொன்னேன்.

அப்போது ‘மன்னார் வளைகுடா வாழ்க்கை’ என்ற வலைப்பதிவை அவர்கள் ஆரம்பித்தனர். சில பொதுவான பிரச்னைகள் பற்றி எழுதிய பதிவுகளை அதில் சேர்த்தனர். அவற்றைத் தொடர்ந்து படிக்க நீங்கள் செல்லவேண்டிய இடம்:

மன்னார் வளைகுடா வாழ்க்கை

தொடர்ந்து அவர்களது வலைப்பதிவைப் படிப்பதன்மூலம் மீனவர்/ பனைத்தொழிலாளர் பிரச்னைகளையும் மன்னார் வளைகுடா சூழல் பிரச்னைகளையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

வேம்பாரில் மீனவர்கள் பிடித்த மீன்களில் சில

மன்னார் வளைகுடாவில் கடலோர கிராமமான வேம்பாரில் (விளாத்திகுளம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம்) இரண்டு நாள்கள் தங்கியிருந்தேன். இன்று காலை கடலோரம் சென்றபோது மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களைக் கூடைகளில் கொட்டிக்கொண்டிருந்தபோது எடுத்த படங்கள்.
கடலில் மீன்பிடிப் படகுகள்
வலையிலிருந்து மீன்களை எடுக்கும் மீனவர்கள்
கூடையில் மீன்கள், நண்டுகள்
கொச்சாம்பாறை
ஓலக்கால் நண்டு
பால் சுறா
பாறை
முரல்
கணவாய்
விளமீன்
களவா / மூஞ்சான்

Tuesday, May 10, 2011

இலவசங்கள், மானியங்கள்

சென்ற வாரம் ஞாயிறு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா, நானா நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டிருந்தேன். இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிய விவாதம். சிலர் பார்த்திருப்பிர்கள். தொலைக்காட்சியில் பார்க்காதவர்கள் யூட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

என் கருத்து:

* இலவசங்கள் மிக மிக ஆபத்தானவை.

* உணவு மட்டும்தான், அதுகூட ஒருவித மனிதாபிமானத்தின்படி, இலவசமாக அல்லது மானியத்தில் வழங்கப்படவேண்டும். அதைக்கூட ‘உரிமை’ என்ற பெயரில், ‘நான் இந்த நாட்டில் குடிமகன், எனக்கு இந்த நாட்டு அரசு உணவு கொடுத்தே ஆகவேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு இருக்குமாறு செய்யக்கூடாது. அவரவர் உழைத்து உண்பதே சரியானது. ஆனால் வயதானோர், சிறு குழந்தைகள், உடல்/மன நலமற்றோர், ஆதரவற்ற அதே நேரம் உழைக்கும் திறனற்றவர்கள் போன்றோருக்கு மட்டும்தான் உணவு வழங்கப்படுதல் வேண்டும். ஏழைகள் என்று குறிப்பாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு உணவுக்கான மானியங்கள் தரப்படலாம். அதுவும் மிகக் கவனமாக, நேரடி மானியமாக இருத்தல் நல்லது.

* அப்படியானால் கல்வி? அப்படியானால் மருத்துவம்?

* என் கணிப்பில் இவற்றுக்கும் சேர்த்து இலவசங்கள் தரப்படவே கூடாது. இலவசத்துக்கு எதிராகப் பேசியவர்கள்கூட உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு இலவசங்களும் மானியங்களும் தரப்படலாம் என்றார்கள். ஆனால் இங்குதான் ஒருவித recklessness வந்துவிடுகிறது. அரசு கல்விக்கூடங்கள் நடத்தினாலும் அதற்கும் கட்டணம் வசூலிக்கவேண்டும். அப்படியானால் பணம் கட்டமுடியாத ஏழைகளுக்கு? அவர்களிடம் deferred payment என்ற வகையிலாவது வசூலிக்கப்படவேண்டும்.

* எங்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லையோ, அங்கு இரண்டு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒன்று தரமான சேவை அல்லது பொருள்கள் கிடைக்காது. (உ.ம்: இலவசக் கல்வி தரும் பள்ளிகளில் கல்வியின் தரம்.) இரண்டு, ஏகப்பட்ட பொருள்/சேவை வீணாகும். ஏழை, பணக்காரன் வித்தியாசமே இங்கு கிடையாது. இரண்டு உதாரணங்களைத் தருகிறேன். சென்னையில் பணக்காரர்களின் வீடுகளுக்கு flat rate கட்டணத்தில் குழாய் வழியாக நீர் கிடைக்கிறது. உண்மையில் மீட்டர் வைக்கப்பட்டு, மீட்டர் கணக்குக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். ஆனால் மெட்ரோ வாட்டர் அப்படிச் செய்வதில்லை. தண்ணீர் நன்றாக வரும்போது எங்கள் வீடுகளில் அனைவருக்கும் சந்தோஷம்தான். ஆனால் ஒரு நாள் தண்ணீர் வராமல் போனதும் நாங்கள் மெட்ரோ வாட்டர் லாரிமூலம் 9,000 லிட்டருக்கு ரூ. 600 என்று காசு கொடுத்து நீர் வரவழைத்தால் உடனே அத்தனை பேரும் தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்துவது பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்தடுத்து டாங்கர் வாங்குவதற்கு உடனே ஒப்புதல் தரமாட்டார்கள். எப்படியாவது ‘நிலத்தடி நீரை’ பயன்படுத்தமுடியுமா என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். மீட்டர் போட்டு அதற்கேற்ப வசூலிக்க ஆரம்பித்தால் இதே ஒழுங்கு அங்கேயும் வந்துவிடும். அடுத்த தெருவில் ஏழைகள் வசிக்கும் இடத்தில் தண்ணீர் டாங்கரில்தான் தரப்படுகிறது. ஒரு வீட்டுக்கு இத்தனை குடங்கள் என்பதுதான் கணக்கு. இலவசமாகத் தரவேண்டும் என்பதுதான் கணக்கு; ஆனால் குடத்துக்கு இத்தனை காசு என்று சிலர் ஓரத்தில் நின்று வசூல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இங்கு தண்ணீர் வீணாக்காமல் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், குறைவு என்றாலும் ஒவ்வொரு குடமும் காசு!

* யார்தான் உரிமையாளர் என்று தெளிவாக இல்லாத பொதுச்சொத்துகள் என்றுமே பாழாகத்தான் போகும். இதைத்தான் Tragedy of the Commons என்று கட்டற்ற சந்தை ஆதரவாளர்கள் சொல்வார்கள். 9 அபார்ட்மெண்ட்கள் இருக்கும் எங்கள் கட்டடத்திலேயே பொதுச்சொத்துகள் வீணாவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு பெரிய நாட்டில் இதைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்!

* இலவசங்கள் அல்லது மானியங்களில் மற்றொரு மிகப்பெரிய பிரச்னையும் உள்ளது. Moral Hazard என்று இதனைச் சொல்வோம். நீங்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களுக்கு தண்டனை கிடைக்காது என்றால் நீங்கள் reckless ஆக மட்டுமே நடந்துகொள்வீர்கள். கல்வி இலவசம், உணவு இலவசம், மருத்துவ வசதி இலவசம் என்று எல்லாமே இலவசமாகக் கிடைக்கிறது என்றால் திண்ணையில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டு, தன்னிஷ்டத்துக்குக் குழந்தைகளைப் பெற்று மக்கள் தொகையை அதிகப்படுத்துக்கொண்டுதான் மக்கள் இருப்பர். தன்னுடைய மக்கள் வளமாக இருக்கவேண்டும் என்பதற்காக வேண்டிய பல உதவிகளை ஓர் அரசு செய்யத்தான் வேண்டும். ஆனால் அதற்கென ஒரு cost உள்ளது; அந்தச் செலவை மக்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தையும் அரசுகள் விதிக்கவேண்டும். இல்லாவிட்டால் ‘ஊரான் நெய்யே, என் பொண்டாட்டி கையே’ என்றுதான் ஆகும். நம் அரசுகள் இலவசங்களை வாரி வழங்கும்போது இவை பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை.

* மெலிதான அரசு என்பதுதான் என் கொள்கை. பல்வேறு விஷயங்களை சந்தைதான் தீர்மானிக்கவேண்டும். சந்தை சரியாக, நியாயமாகச் செயல்படுகிறதா என்பதை மட்டுமே அரசுகள் கவனித்துக்கொள்ளவேண்டும். எதையெடுத்தாலும் அரசுதான் செய்துதரவேண்டும் என்ற எண்ணம் நம்முடைய தன்முனைப்பையும் நியாயமான வளர்ச்சியையும் கெடுத்துவிடும். அதனால் நாட்டுக்கும் நல்லதல்ல, நமக்கும் நல்லதல்ல.

Thursday, May 05, 2011

கிழக்கு மொட்டைமாடி: அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள்

(சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன)

14 மே 2011, சனிக்கிழமை அன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் மாலை 6.30 மணிக்கு பி.சந்திரசேகரன் ‘அம்பேத்கர் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆதரித்தவரா?’ என்ற தலைப்பில் பேச உள்ளார்.

அம்பேத்கர் ஒரு வழக்கறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் முக்கியப் பங்கு வகித்தவராக ஆவதற்குமுன்பே ஒரு பொருளாதார நிபுணராக இருந்தவர். இன்று அவர் ஒரு தலித் தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறார். ஆனால் பலரும் அவரை (தலித் சமூகத்தில் பிறந்த) பொருளாதார நிபுணர் என்று அவரைப் பார்ப்பதில்லை. அவரது பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப் பேசும் சிலர்கூட அவர் முதலாளித்துவத்துக்கு எதிரானவர் என்றும் சோசலிசம் பக்கம் சாய்ந்தவர் என்றுமே குறிப்பிடுகிறார்கள். அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் சோசலிச அரசியலுக்கு எதிராக இருக்கும் காரணத்தால், மைய நீரோட்டவாதிகள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை; தலித்துகளோ அவற்றைத் தவறாகத் திரித்துவிடுகிறார்கள்.

பொருளாதாரச் சீர்திருத்தம் வேகமாக நடைபெற்றுவரும் இந்தியாவில் அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகளை நாம் மீண்டும் படிப்பது அவசியமாகிறது. முக்கியமாக கட்டற்ற சந்தைக் கொள்கை, மையக்குவிப்பில்லாத வளர்ச்சிக்கான திட்டமிடுதல், சமூகம் எதிர்கொள்ளும் அறிவுசார் பிரச்னைகள், நாடுகளுக்கு இடையேயான நிதி தொடர்பான பிரச்னைகள் ஆகியவை கவனம் பெறத்தக்கவை.

இது தொடர்பான பல கருத்துகளை மையமாகக் கொண்டு பி. சந்திரசேகரன் சென்ற மாதம், லுட்விக் ஃபான் மீசஸ் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆஸ்திரியன் நிபுணர்கள் மாநாடு 2011-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை, அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய தவறான கருத்துகள் பலவற்றையும் தகர்க்கிறது.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சந்திரசேகரன் இந்தக் கருத்துகளை விரித்துப் பேச இருக்கிறார். பேச்சு தமிழில் இருக்கும்.

சந்திரசேகரன் விழுப்புரம் அருகில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ, எம்.ஏ பட்டங்களைப் பெற்றவர். 2005-ல், மோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சமூக அறிவியலுக்கான தேசியக் கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். இவர் எழுதிய ‘வளரும் நாடுகளிலும் இந்தியாவிலும் உலகமயமாதலின் தாக்கம்’  என்ற கட்டுரை 2004-ம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான மொஃபாட் பரிசுக்காக (The 2004 Moffatt Prize in Economics (USA)) பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாக இருந்தது. 2006-ம் ஆண்டில் அதிகம் படிக்கப்பட்ட 10 பொருளாதாரக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்று டாக்டர் மொஃபாட்டால் குறிப்பிடப்பட்டது.

தேசிய, சர்வதேச மாநாடுகள் பலவற்றில் பங்குபெற்றுள்ள இவர், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அம்பேத்கர், ஹயெக், லுட்விக் ஃபான் மீசஸ், அம்பிராஜன் ஆகியோரின் எழுத்துகளின் தாக்கம் இவரிடம் உள்ளது. http://hayekorder.blogspot.com/ என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார்.

பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் விருதுகள் 2011

15-வது மக்களவை சிறந்த சாதனையாளர்கள்

1. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் (பாஜக, சந்திரபுர், மஹாராஷ்டிரம்): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 70 விவாதங்கள், 17 தனி நபர் மசோதாக்கள், 499 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார்.

2. ஆனந்தராவ் அட்சுல் (சிவசேனை, அமராவதி, மஹாராஷ்டிரம்): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 23 விவாதங்கள், 3 தனி நபர் மசோதாக்கள், 545 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார். (14-வது மக்களவையில் மொத்தமாக 1,333 கேள்விகளை எழுப்பி முதலிடத்தில் இருந்தாராம்.)

3. எஸ்.எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ், திருநெல்வேலி, தமிழ்நாடு): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 60 விவாதங்கள், 0 தனி நபர் மசோதாக்கள், 472 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார்.

வெளியில் தெரியாத சாதனையாளர்கள் - சமூகப் பங்களிப்புக்காக

1. மனம் மலரட்டும்: 1999 முதல் நடந்துவரும் அறக்கட்டளை. சரவணன் என்பவர் தலைமையில். கிராமப்புற இளைஞர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர உதவி புரிந்துவருகிறது. பள்ளிக்கூடங்களுக்கு வெளியே தனிப் பயிற்சி கொடுக்கப்பட்டு இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்துள்ளனர். இதுவரையில் சுமார் 1,000 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சுமார் 70 பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்கள். இப்போதைக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 250 கிராமங்களில் 1,200 மாணவர்களுக்கு 10, 12-ம் வகுப்புகளுக்கான சிறப்புப் பயிற்சி நடத்துகிறார்கள்.

[சரவணனை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் பயிற்சி நடத்தும் மாணவர் குழுக்களிடம் திருப்பத்தூரில் நான் உரையாடியுள்ளேன். ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு தனிப் பயிற்சி அளிப்பதில் இப்போது ஈடுபட்டுள்ளார். இவரது தொண்டார்வ நிறுவனம், வருமான வரி விலக்கு பெற்றது. பழங்குடி மற்றும் இதர கிராம மாணவர்களுக்கான கல்விக்கு பொதுமக்களிடமிருந்து நிதியுதவி தேவைப்படுகிறது. அது தொடர்பாகத் தனியாக ஒரு பதிவு இடுகிறேன்.]

2. Build Future India: அயலக இந்தியர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம். மணி என்பவர் தலைமையில் நடக்கிறது. 60 பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை, புத்தகங்கள் ஆகியவற்றை வழங்குகிறார்கள். தென் தமிழ்நாட்டில் 6 பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக நடத்தும் பணியில் இருக்கிறார்கள். ஆலத்தூர் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியில் அரசு அமைப்புகளுடன் ஈடுபட்டுள்ளனர். அந்த கிராமத்தில் இதுவரை 180 கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். மரம் நடுவதில் ஈடுபடுகின்றனர்.

3. அரவிந்த் தியாகராஜன்: கண்டுபிடிப்பாளர். 30 வயதுக்குள் 40 காப்புரிமங்கள் (Patents) பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் உந்தப்பட்டு, ஒரு கண்டுபிடிப்பாளராகத் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துவருகிறார். (மறைந்த) சத்ய சாயி பாபாவை இவர் சந்தித்தபோது, இவரை இந்தியாவிலேயே இருக்குமாறு சாயி பாபா கேட்டுக்கொண்டாராம். அதன் விளைவாக பட்டப் படிப்புக்குப் பின் அமெரிக்காவில் தனக்குக் கிடைத்த வேலையை உதறிவிட்டு இந்தியாவில் தன் பணியை இவர் தொடர்கிறார். கடைசியாக இவர் கண்டுபிடித்தது ஸ்டெதாஸ்கோப் போன்ற ஒரு கருவி - இதனைக் கொண்டு இதய ஓசைகளைக் கேட்டறியலாமாம். இதன்மூலம் செலவேதும் இல்லாமலேயே இதய நோய்களைக் கணிக்க முடியுமாம்.

***

இந்த ஆறு பேருக்கும் விருதுகள் சென்னையில் (எங்கு என்று தெரியவில்லை) சனிக்கிழமை 7 மே 2011 அன்று வழங்கப்படும்.

Tuesday, May 03, 2011

ஒபாமா - ஒசாமா

சற்றும் எதிர்பார்த்திராத நிகழ்வுகளில் இது ஒன்று. கிட்டத்தட்ட உலகமே அவரை மறந்துவிட்ட நிலையில், அமெரிக்க சிறப்புப்படை ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் தேடிக் கண்டுபிடித்து, சுட்டுக் கொன்று, பழிதீர்த்துள்ளனர்.

செய்தித்தாள்களில் பல பக்கங்கள், தொலைக்காட்சிகளில் பல மணி நேரங்கள் அலசப்பட்ட ஒரு விஷயம். நேற்றே இணையத்தில் முழுவதுமாகப் படித்துவிட்டதால் இன்று காலை செய்தித்தாள்களைப் பார்க்கும்போது ஏன் இத்தனை லேட் என்றுதான் தோன்றியது.

எனக்குத் தோன்றும் சில கருத்துகள்:

1. அல் காயிதாவுக்கு இது பலத்த அடி. ஒசாமாதான் அதன் மிகவும் அறியப்பட்ட முகம். அவருடைய சொந்தப் பணம், அவரை நோக்கி உலகெங்கிலிமிருந்து குவியும் பணம் இப்போது குறையத்தொடங்கும். மற்றொரு கவர்ச்சிகரமான, பணக்கார ஆசாமி மீண்டும் அல் காயிதா போன்ற கொடுந்தீவிரவாதக் குழுவுக்குத் தலைமை தாங்குவாரா என்பது சந்தேகமே. அய்மன் அல் ஸவாஹிரி இருக்கும்வரை பயங்கரமான மூளைவீச்சுடன் சில அதியற்புதத் தாக்குதல்கள் நிகழலாம். அதன்பின் அதிலும் சுணக்கங்கள் ஏற்படலாம்.

2. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்கள் தெஹ்ரீக்-இ-தாலிபன் போன்றவை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு (மட்டும்) தலைவலி கொடுத்துக்கொண்டிருக்கும். ஒசாமா இருந்தவரையாவது பாகிஸ்தானுக்கு அமெரிக்காவிடமிருந்து பணமாகவும் பிற வழியிலும் உதவிகள் வந்துகொண்டிருந்தன. இது பெருமளவு குறையக்கூடும்.

3. ஆஃப்கனிஸ்தானில் பாகிஸ்தான் சாதிக்க விரும்பும் எதையும் சாதிக்கமுடியாது. ஆஃப்கனின் பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம் பாகிஸ்தானே என்ற எண்ணம் ஆஃப்கனில் உள்ள பலரிடம் உள்ளது.

4. உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக பாகிஸ்தான் காஷ்மீரில் செய்ய நினைக்கும் விஷமங்களைச் செய்வது ஏற்கெனவே குறைந்துள்ளது. ஆனால் மும்பை தாக்குதல் போன்ற சில அதீதமான விஷயங்களை பாகிஸ்தானின் சில விஷமிகள் செய்ய நினைக்கலாம். அதனை இந்தியாவால் எதிர்கொள்வது மிகக் கடினம். இங்குதான் இந்தியா மிகக் கவனமாக இருக்கவேண்டும். ராணுவத் தளவாடங்களுக்கு அதிகம் செலவு செய்வதைவிட, உளவு வேலைகளுக்கு அதிகம் செலவு செய்வது பலனளிக்கும்.

5. ஒபாமா அடுத்த அதிபர் தேர்தலிலும் ஓஹோவென்று ஜெயித்துவிடுவார். ரிபப்ளிகன் கட்சியில் சொல்லிக்கொள்ளும்படி ஒருவரும் இல்லாதது ஒரு பக்கம். ஒசாமா ஒழிப்புக்குப்பின் பாபுலாரிடி ரேட்டிங்கில் ஒபாமா கிடுகிடுவென மேலே ஏறிவிடப்போவது மறுபக்கம். டெமாக்ரடிக் கட்சியிலேயே எந்த எதிர்ப்பும் இன்றி, ஒபாமா ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். ஒசாமா மீதான தாக்குதல் நடக்கும் நேரத்த்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற சிந்தனை நமக்கு வருவது தடுக்கமுடியாத ஒன்று.

6. பாகிஸ்தான் கதியை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. ஒருபக்கம் சர்வதேச அளவில் அவமானம். மிலிட்டரி அகாடெமிக்கு அடுத்த வீட்டிலேயே ஒசாமா இருந்திருக்கிறான், உனக்கு அதுகூடத் தெரியாதா என்று ஏளனம். மற்றொரு பக்கம், தெரிந்தேதான் இந்த பாகிஸ்தானிகள் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் என்று வெறுப்பு ஏற்படுவதற்கான வழி. பாகிஸ்தானிய ராணுவ, சிவிலியன் அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள அவமானம் ஒரு பக்கம். பாகிஸ்தான் ராணுவ உதவி இல்லாமல் அமெரிக்கா இந்தத் தாக்குதலைச் செய்திருக்கமுடியாது என்று ஒசாமா ஆதரவாளர்களிடமிருந்து வரப்போகும் கடுமையான எதிர்ப்பு, எதிர்த்தாக்குதல்கள். பாகிஸ்தானுக்கு நாலு பக்கத்திலிமிருந்து இடிதான். இத்துடன், குலைந்துபோயுள்ள குடியாட்சி முறை, மோசமான நிர்வாக அமைப்பு, தினமொரு குண்டுவெடிப்பு, கல்வி போதாமை, பணப் பற்றாக்குறை என்று அனைத்தையும் சேர்த்தால் இதிலிருந்து எப்படி மீண்டுவரப்போகிறார்கள் என்பதே தெரியவில்லை.

***

ஒசாமா கொலை பற்றி சல்மான் ரஷ்டி