Tuesday, March 26, 2013

எம்.ஏ வைணவம் மதிப்பெண்கள்

நான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்பு வழியாக எம்.ஏ வைணவம் படித்துக்கொண்டுவருவது குறித்து முன்னரே எழுதியுள்ளேன். முதலாம் ஆண்டு முடிவில் ஜூன் 2012-ல் பரீட்சைகளை எழுதமுடியவில்லை. அந்த நேரத்தில் இமயமலையில் பிரம்மி தால் என்ற இடத்துக்கு மலையேறச் சென்றுவிட்டேன். அடுத்து டிசம்பர் 2012 - ஜனவரி 2013-ல் தேர்வுகள் வந்தபோது, மீண்டும் ஷெட்யூல் கிளாஷ் காரணமாக முதல் இரு தேர்வுகளை எழுத முடியவில்லை. கடைசி மூன்று தேர்வுகளை மட்டும்தான் எழுத முடிந்தது. அந்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.

இன்று காலை தேர்வு மதிப்பெண்கள் வெளியாகியிருந்தன. நான் பெற்றுள்ள மதிப்பெண்கள்:

திருமங்கையாழ்வார் பாசுரங்கள் - 80 மதிப்பெண்கள்
இரகசிய இலக்கியம் - 75 மதிப்பெண்கள்
பல்வேறு வைணவ சம்பிரதாயங்கள் - 79 மதிப்பெண்கள்

வரும் ஜூன் 2013-ல் இரண்டாம் ஆண்டுக்கான ஐந்து தாள்களையும் முதல் ஆண்டில் இன்னும் எழுதாமல் இருக்கும் இரண்டு தாள்களையும் எழுதிவிடுவதாக முடிவெடுத்துள்ளேன்.

Monday, March 25, 2013

முதலைப் பண்ணை

சில ஆண்டுகளுக்குமுன் மிகவும் தொடர்ச்சியாக, ஒவ்வொரு வார இறுதியிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை சென்றுவருவேன். அங்கு முதலைகள் மட்டுமின்றி, உள்ளே நுழைந்ததுமே பாம்புகள் பராமரிப்பகம் ஒன்று இருக்கும். பானைகளில் நான்கு விதப் பாம்புகள். நாகம், விரியன் வகைகள்.

முதலைகளில் பல வகைகள் உண்டு. ஆலிகேட்டர், குரொகடைல் என இரண்டு பெரும் வகைகள். ஆலிகேட்டரின் முகப்பகுதி வடகலை நாமம் போல U மாதிரி இருக்கும். குரொகடைல் முகப்பகுதி தென்கலை நாமம் போல இருக்கும். (முதலைப் பண்ணையில் ஓரிடத்தில் படம் போட்டு விளக்கியிருப்பார்கள். இங்குதான் முதலை முட்டைகள், வளர்ந்துவரும் சிறு முதலைகள் ஆகியவை இருக்கும்.)

இந்திய இனமான மகர் முதலைகள் எண்ணற்றவை முதலைப் பண்ணையில் உள்ளன. அதேபோல கொஞ்சம் கரியால் முதலைகளும் உள்ளன. கரியாலுக்கு நீண்ட வாயும், அதில் ஊசிபோலப் பற்களும் இருக்கும். ஆண் கரியால்களுக்கு வாய்க்குமேல் முடிச்சு மாதிரி இருக்கும்.

முதலைகள் தவிர, பலவித ஆமைகள், மீன்கள், மலைப்பாம்புகளையும் இங்கு காணலாம். இவைதவிர பல்வேறு பறவைகள் தாமாகவே இங்கு வருகின்றன.

நேற்று அங்கு எடுத்த சில புகைப்படங்களையும் மூன்று வீடியோ துண்டுகளையும் மட்டும் இங்கே சேர்த்துள்ளேன்.

படங்கள்:


பாம்பிலிருந்து விஷம் எடுப்பது:


ஒரு முதலை (மகர்) ஆடி அசைந்து நடந்து வருவது.


மலைப்பாம்பு ஒன்று அலைபாய்கிறது.



Thursday, March 14, 2013

பணச்சலவை

கோப்ராபோஸ்ட் என்ற புலனாய்வு இணைய இதழ் கருப்புப் பணத்தைச் சலவை செய்யும் வேலையை ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய மூன்று வங்கிகளும் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதற்குச் சான்றாக, அதன் நிருபர்கள் ரகசியமாகப் பிடித்த ஒளிப்பதிவுகளைக் காட்டியுள்ளது.

இந்த வங்கிகள் மட்டுமல்ல, பெரும்பாலான அல்லது அனைத்துத் தனியார் வங்கிகளுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். பொதுத்துறை வங்கிகள் இச்செயலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது குறைவாக இருக்கலாம். அல்லது ஒருசில அரசியல்வாதிகளுக்காக மட்டும் பொதுத்துறை வங்கிகளின் கதவுகள் இதற்கெனத் திறந்திருக்கலாம்.

நம் நாட்டில் எக்கச்சக்கமான கருப்புப் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது. (1) ரியல் எஸ்டேட் துறை, (2) அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பெறும் லஞ்ச, ஊழல் பணம், (3) கடத்தல், திருட்டு, கஞ்சா, கொலை, சூதாட்டம் போன்ற கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கப்படும் கருப்புப் பணம், (4) சினிமாத் துறையில் புழங்கும் பெருமளவு பணம், (5) தொழில் நிறுவனங்கள் இரண்டு கணக்குகள் வைத்துச் சம்பாதிக்கும் கருப்புப் பணம் என்று பலதைச் சொல்லலாம்.

ரிசர்வ் வங்கி இந்தக் கருப்புப் பணத்தின்மீது அழுத்தம் தரத் தர, இதனை வெள்ளையாக ஆக்குவதற்கு யாராவது முன்வரத்தான் வேண்டும். அதைத்தான் இந்தத் தனியார் துறை வங்கிகள் செய்கின்றன.

இந்தக் கருப்புப் பணம் நாட்டைவிட்டு வெளியே போய், பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்னும் முறை வழியாக இந்தியாவிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்று சுப்ரமணியன் சுவாமி கூறுகிறார். இந்த முறையைக் கொண்டுவந்தது பாஜக ஆட்சியின்போது யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்த காலத்தில் என்று ஞாபகம்.

இதற்கெல்லாம் முன்னர் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்து ஒருமுறை அரசுக்கு வரி கட்டிவிட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளையாக ஆக்கிக்கொள்ளலாம் என்றார். அதன்படிக் கொஞ்சம் பணம் வெளியே வந்தது. ஆனால் மிகப் பெரும் தொகை வெளியே வரவே இல்லை.

சில அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது. கருப்புப் பணம் இருக்கும்வரையில் கருப்பை வெள்ளையாக்கும் ஆசாமிகள் வந்துகொண்டே இருப்பார்கள்.

என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம்?

1. ரியல் எஸ்டேட் டிரான்சாக்‌ஷனில் ஸ்டாம்ப் கட்டணத்தையும் லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரியையும் கடுமையாகக் குறைக்கலாம். அதன்பிறகும் பொய்யாகப் பணத்தைக் குறைத்துச் சொல்பவர்களுக்குச் சிறை தண்டனை என்று சட்டத்திருத்தம் செய்யலாம். உதாரணமாக ஸ்டாம்ப் கட்டணத்தை வெறும் 1% என்றோ அல்லது 0.5% என்றோ ஆக்கிவிடலாம். தமிழகத்தில் 12% என்று இருந்தது இப்போது 8% என்று ஆகியுள்ளது. இதுவே மிக அதிகம். அதேபோல வீடு விற்றுக் கிடைக்கும் லாபத்துக்கு 2% வருமான வரி கட்டினால் போதும் என்று சொன்னால் பெருமளவு கருப்புப் பணம் ஒழிந்துவிடும். இன்று கேபிடல் கெயின்ஸ் வரி (இண்டெக்சேஷனுக்குப் பிறகு) 20% என்று உள்ளது. (அல்லது உடனேயே அந்த லாபத்தை இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்யவேண்டும், அல்லது குறிப்பிட்ட சில கடன்பத்திரங்களை வாங்கி வரித்தொல்லையிலிருந்து மீளலாம்.) காசோலை, வரைவோலை வாயிலாக மட்டும்தான் ரியல் எஸ்டேட் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யமுடியும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

2. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழலை என்ன செய்வது என்று ஒரு வரியில் சொல்வது மிகக் கடினம். எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெளிவாகத் தெரியவில்லை.

3. அரசியல் கருப்புப் பணம் போலவே, கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கும் பணமும் கருப்பாகவே பெரும்பாலும் இருக்க வாய்ப்புள்ளது. வரி கட்டி, வெள்ளையாகப் பணம் வைத்திருக்கும் கெட்ட காரியர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலர் லெஜிடிமேட் கம்பெனிகளையும் கூடவே வைத்து பணத்தை உள்ளே வெளியே செய்துகொண்டிருக்கலாம். அனைத்துவித கிரிமினல் தண்டனைகளுடன் அந்தக் கெட்ட காரியங்களைச் செய்பவர்களுடைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் இங்கு நல்ல பலன் கிடைக்கலாம்.

4. சினிமாத் துறையை நிஜமாகவே ஒழுங்குபடுத்த முடியும். அரசு மனது வைத்தால். இதுதான் உள்ளதிலேயே மிகவும் எளிதான ஒன்று. ஆனால் சினிமாத் துறையினரின் பலம் காரணமாக அவர்களுக்கு எந்தச் சிக்கலும் நேர்வதில்லை. தனிப்பட்ட முறையில் நடிகர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடப்பதாக ஒரு செய்தி வரும். அப்புறம் எல்லாம் அடங்கிவிடும். ஒவ்வொரு படக் கம்பெனியும் செய்யும் ஒவ்வொரு துண்டு துணுக்குச் செலவையும் ஒழுங்காக ஆடிட் செய்தாலே போதும். தவறு செய்பவர்களைத் தண்டிக்க என்று தனியான வருமான வரி தீர்ப்பாயங்கள் இருந்தாலே பிரச்னை ஓவர்.

5. கொஞ்சம் கஷ்டமான இடம் இது. ஏனெனில் இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் - சிறு கடைகள் முதல் அம்பானி வரை - மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வருமான வரித் துறையில் பல லட்சம் பேரை வேலைக்கு எடுத்தால்தான் இங்கு உருவாகும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும். இதன் சாத்தியக் கூறுகள்மீதும் எனக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது.

வங்கிகளை நெருக்கிப் பிடிப்பதன்மூலம் அவர்கள் பணச்சலவை செய்வதை நிறுத்தலாம். அப்படியானால், அந்தக் கருப்புப் பணம் அதற்கான தனியான பொருளாதாரச் சுற்றில் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். கருப்புப் பணத்தின் ஊற்றையே ஒழிப்பதுதான் (அல்லது குறைப்பதுதான்) சரியான தீர்வு.

Friday, March 08, 2013

திருக்குறள் வழியில் தலைமைப்பண்பு

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை மாதாமாதம் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒருவர் பேசுவார். இந்தப் பேச்சு இலக்கியம், இலக்கணம், ஓவியம், இசை, சிற்பம், கோவில் கட்டுமானம், வரலாறு, அல்லது தொடர்புடைய ஏதேனும் ஒன்றாக இருக்கும்.

பொதுவாக மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் நடைபெறும். இந்த மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை (நாளை மாலை) நடைபெறுகிறது.

இந்த மாதத்துக்கான தலைப்பு ‘திருக்குறள் வழியில் தலைமைப் பண்பு’. இதைப் பற்றி பேச இருக்கும் கண்ணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர். இளைஞர். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, எச்.சி.எல் சிஸ்டம்ஸ், எம்பசிஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர். இப்போது திருக்குறளின் அடிப்படையில் தலைமைத்துவத்தைச் சொல்லித் தரும் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார்.

தமிழர்கள் அனைவருக்கும் பெயரளவிலாவது நன்கு தெரிந்திருக்கும் திருக்குறளிலிருந்து நாம் நவீன நிர்வாகவியல் கருத்துகளாக என்ன தெரிந்துகொள்ளமுடியும்?

கண்ணன் இதுபற்றி நாளை ஒரு காணொளி உரையை அளிக்க உள்ளார். அனைவரும் தவறாமல் வாருங்கள்.

மேலும் விவரங்களுக்கு

எதிர்காலம் இந்தப் பெண்கள் கையில்

நுங்கம்பாக்கம் அரிமா சங்க (லயன்ஸ் கிளப், நுங்கம்பாக்கம்) உறுப்பினரும் என் நண்பருமான ஆர்.கே ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று என்னை அழைத்திருந்தார். அவர்களுடைய சங்கம் ஆண்டுதோறும் 50 பெண்களுக்கு ஸ்பான்சர் செய்து மருத்துவச் செவிலியர் பணியைக் கற்றுத் தருகிறது. ஓராண்டுப் பயிற்சி முடிந்ததும் அவர்களுக்கு வேலை வாங்கித் தருகிறது. இந்தப் பெண்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்தவர்கள். அனைவரும் கிராமங்களில் வசிப்பவர்கள். பெரும்பாலும் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழக எல்லையின் ஆந்திரப் பகுதியிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.

இவர்களுடைய வீடுகளில் இவர்களை இதற்குமேல் படிக்க வைக்கமாட்டார்கள். கிராமத்திலேயே இருந்தால் இந்தச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்தும் விடுவார்கள். இவர்களுக்கு மேல் படிப்புக்கான வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்காது.


இந்த செவிலியர் பயிற்சி என்பதும்கூட செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் சேர்த்து அல்ல. சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வேலையில் இருந்தபடியே பெறும் பயிற்சி. பயிற்சி முடிந்ததும் சென்னையில் வெகுவேகமாக வளர்ந்துவரும் தனியார் மருத்துவமனைகளில் இவர்களை அரிமா சங்கத்தினரே வேலைக்குச் சேர்த்துவிடுகிறார்கள். இதுவரையில் ஐந்து ஆண்டுகள் இதேபோல் பயிற்சிகள் தரப்பட்டு, இப்போது ஆறாவது பேட்ச். இவர்களுக்கு ஆரம்பத்தில் மாதச் சம்பளமாக ரூ. 4,500 கிடைக்குமாம். சென்னையில் இந்தச் சம்பளத்தில் உயிர்வாழ்தல் கடினமானதே. ஆனால் அதிலும் இந்தப் பெண்கள் மாதம் 2,000 ரூபாய் வரை சேமித்துவிட முடியும் என்றனர். கஷ்டம் என்று நினைக்கிறேன். முயற்சி செய்தால் 1,000 ரூபாய் வரை மாதம் சேமிக்கலாம்.

சென்ற ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் திருவள்ளூரின் ஜமின் கொரட்டூர் என்ற கிராமத்துக்கு முகாமுக்குச் சென்றிருந்தது குறித்து இந்த பெண்களிடம் விளக்கமாகப் பேசினேன். அவரவர் கிராமங்களில் பொதுச் சுகாதாரம் எப்படி உள்ளது என்பது குறித்தும் கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் பேசினேன்.


முதலாவதாக இவர்கள் அனைவருடைய கிராமங்களிலும் - ஒன்று விடாமல் - யார் வீட்டிலும் கழிப்பறைகள் கிடையாது. இதுதான் ஜமின் கொரட்டூரிலும் நான் பார்த்தது. இதனால் பெண்களுக்கு எவ்வளவு வாழ்க்கைச் சிக்கல் என்பதைப் பெண்கள் மட்டுமே அறிவார்கள். யார் கண்ணிலும் படாமல் ஒதுங்குவது, இரவு நேரம், போதிய தண்ணீர் இல்லாமல் திண்டாடுவது, மாதவிலக்கு காலங்கள், பூச்சி பொட்டு கடித்தால் என்ன செய்வது என்று பல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஜமின் கொரட்டூரில் அரசுப் பணத்தில் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் ஒன்றைக் கட்டியுள்ளனர். ஆனால் ஒருமுறை கூடப் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். பொதுக் கழிப்பிடம் என்பது அபத்தமான கருத்து. அவசரமாகப் போகவேண்டும் என்றால் அரை கிலோமீட்டர் நடந்தா செல்வீர்கள்?

ஒரு கிராமப் பஞ்சாயத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுப்பதில் பெண்களுக்கான பங்கு மிகக் குறைவாக உள்ளது; சொல்லப்போனால் ஆண் மைய இந்திய கிராமங்களில் பெண்களுக்குக் குரலே இல்லை. ஜமின் கொரட்டூரில் நாங்கள் இருந்த காலம் வரை அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் என்று ஓர் ஆண் எங்களுக்கு அறிமுகமானார். கடைசிவரை நாங்களும் அவர்தான் அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் என்று நினைத்திருந்தோம். அந்த ஊரில் உள்ள அனைவருமே அவரைத்தான் பஞ்சாயத்துத் தலைவர் என்று அடையாளம் காட்டினர். ஊர்க் கூட்டம் ஒன்று நடைபெற்றபோதும் அவர்தான் உட்கார்ந்திருந்தார். கடைசியில் நாங்கள் எழுதவேண்டிய ஆவணத்துக்காக அவரைப் படம் எடுக்க முனைந்தபோது, “ஐயோ, நான் இல்லிங்க, என் மனைவிதான் பஞ்சாயத்துத் தலைவர்” என்றார். அந்தத் தொகுதி, ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலித் பெண் தொகுதி. ஆனால் நடைமுறையில் பெண்ணுக்கும் மதிப்பில்லை. தலித்துக்கும் மதிப்பில்லை. விரைவில் இதுகுறித்து என்.எஸ்.எஸ் மாணவர்கள் எழுதியுள்ள ரிப்போர்ட்டை வெளியிடுகிறேன்.


செவிலியர் பயிற்சி முடித்ததும் இந்தப் பெண்கள் சென்னைவாசிகள் ஆகிவிடுவார்கள். இது ஒருவிதத்தில் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நன்மை பயக்கலாம். ஆனால் அவர்களுடைய கிராமங்களுக்கு நேரடியாக நன்மை ஏதுமில்லை. ஆனாலும் இங்கிருந்தபடியே அவ்வப்போது அவர்களுடைய கிராமங்களுக்குச் சென்று கீழ்க்கண்டவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த முற்படவேண்டும் என்று பேசினேன். அவ்வாறு செய்ய அரிமா சங்கம் அவர்களுக்குத் துணையிருப்பதாக சங்கத்தினர் உறுதியளித்தனர்.
  1. அனைத்து வீடுகளிலும் சுகாதாரமான கழிப்பறைகள் உருவாக்கப்படுவதற்கான அழுத்தம். கழிப்பறை இல்லாத வீடுகளில் வசிக்கமாட்டோம் என்று பெண்கள் போராடவேண்டிய கட்டாயம்.
  2. சுத்தமான குடிநீர் வீட்டருகே கிடைப்பதற்கான வசதிகள். கிராமப் பஞ்சாயத்தின் பணம் இதற்குத்தான் முன்னுரிமையாகச் செலவு செய்யப்படுதல் வேண்டும். ஏனெனில் தண்ணீர் நிர்வாகம் என்பது வீட்டில் பெண்களிடம் விடப்படுகிறது. அவர்கள் படும் கஷ்டத்தைப் பற்றிப் பெரும்பாலும் ஆண்களுக்குக் கவலை இல்லாமல் இருக்கிறது.
  3. பெண்களுக்கான சத்துணவு. அனீமியாவால் (சோகை) பாதிக்கப்படும் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும் சிக்கல்களுடனும் பிறக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் பெண்களாக இருக்கும்போது இந்தச் சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
  4. பெண்களைப் பாதிக்கும் நோய்கள், பெண்களுக்கான பிரத்யேக சுகாதாரம், வயதான பெண்களுக்கு வரும் உடல் உபாதைகள் ஆகியவை பற்றி அவரவர் கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம்.
இவற்றை முன்வைத்து மேற்கொண்டு பேச உள்ளோம். ஓரிரு இடங்களில் சோதனைமுறையில் ஈடுபடப்போகிறோம்.

Wednesday, March 06, 2013

டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கண்காட்சி (விளம்பரம்)

டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில்

புத்தகக் கண்காட்சி 

044 - 4261 5044

மார்ச் 7 முதல் 17 வரை

சிறப்புத் தள்ளுபடி 10%


திநகர் ராமேஸ்வரம் தெருவில் டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடை உள்ளது. ரங்கநாதன் தெருவுக்கு அருகில் இருப்பதால், இக்கடைக் குச் செல்வது மிகவும் எளிதான ஒன்று.

இக்கடையில் 4000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. பல முக்கிய பதிப்பகங்களின், எழுத்தாளர்களின் அரிய பொக்கிஷங்கள் இக்கடைகளில் கிடைக்கும். முக்கியமான புத்தகங்களைப் பார்த்து விற்பனைக்கு வைத்திருப்பதால், பலதரப்பட்ட புத்தக வாசகர்களுக்கு இக்கடை ஒரு சொர்க்கமாகவே திகழ்கிறது.

 குளிரூட்டப்பட்ட கடை (ஏசி) என்பதால், இக்கடையில் புத்தகம் வாங்குவதே ஒரு நல்ல அனுபவமாகிவிடுகிறது. கடையில் கழிப்பறை வசதியும் உண்டு. இதனால் எத்தனை நேரமானாலும் பொறுமையாகக் கடையில் புத்தகங்களைப் பார்வையிடலாம்.

பார்வையிடுவது மட்டுமல்ல. கடையில் ஓரமாக அமர்ந்து புத்தகங்களைப் படிக்கவும் செய்யலாம். புத்தகத்தைப் படித்துவிட்டு அதனை வாங்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தினமும் வந்து புத்தகங்களைப் படித்து விட்டுக்கூடச் செல்லலாம். மொத்தத்தில் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கான சிறந்த இடமாகப் புத்தகக் கடைகள் திகழ வேண்டும் என்பதை மனத்தில் வைத்துச் செயல்படும் புத்தகக் கடைதான் டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடை.

புத்தகக் கண்காட்சி நடைபெறும் இந்த நாள்களில் (மார்ச் 7 முதல் 17 வரை) மட்டும் 10% தள்ளுபடி கிடைக்கும். மற்ற நாள்களில் தள்ளுபடி கிடையாது.

ரங்கநாதன் தெரு அருகில் உள்ள ராமேஸ்வரம் தெருவில், ஹோட்டல் கிரீன் ஹவுஸுக்கு எதிரே, ஜெயச்சந்திரன் பர்னிச்சர்ஸ்க்கு அருகில் உள்ளது இந்த டயல் ஃபார் புக்ஸ் கடை.

புத்தகக் கடையின் ஃபோன் நம்பர்: 044-4261 5044.

ஆழம் மார்ச் இதழ்

கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளிவரும் ஆழம் மாத இதழில் வந்திருக்கும் கட்டுரைகள்:
  • கமல்-இஸ்லாம்-அரசியல்: பேராசிரியர் ஜவாஹிருல்லாவுடன் ஒரு மிக சுவாரஸ்யமான நேர்காணல். ஆர். முத்துக்குமார் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்.
  • சி.சரவணகார்த்திகேயனின் விஸ்வரூபம் திரை விமர்சனம்
  • பாலச்சந்திரனின் இறுதி நிமிடங்கள் - தீபச்செல்வன்
  • நரேந்திர மோடிக்கு எதிராக மார்க்கண்டேய கட்ஜுவின் கட்டுரையின் தமிழாக்கம்.
  • பாலகுமாரனின் பேட்டி, வித்தகன் எடுத்தது.
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில நிர்வாகி எஸ். சம்பத், டீசல் விலை உயர்வு பற்றி எழுதியுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இது எம்மாதிரியான நெருக்கடியைத் தரும் என்று விளக்குகிறார்.
  • கொல்கத்தா புத்தகக் கண்காட்சி பற்றி மருதன்
  • பிராமணியம் பற்றி அருணனின் நீண்ட கட்டுரை
  • தமிழகத்தின் காதல் கொலைகள் - புள்ளிவிவரங்களுடன் - முல்லை
  • டேவிட் பட விமர்சனம் - அரவிந்தன் சச்சிதானந்தன்
  • ஆஷிஸ் நந்தி ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பற்றித் தெரிவித்த கருத்தை ஆராயும் வினய் லாலின் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.
  • ராஜஸ்தான் பறவைகள் சரணாலயம் ஒன்றில் கழுகுகள் வேட்டை பற்றிப் படங்களுடன் எழுதப்பட்டுள்ள கே.பி.கிருஷ்ணனின் கட்டுரை.
  • ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் குறித்து ரமணன்
  • விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழா தொடர்பாக அவரது சிந்தனைகளின் தாக்கம் குறித்து நா.சடகோபன்
  • சென்ற இதழில் அதியமான சுதந்தரச் சந்தைப் பொருளாதாரம் குறித்து எழுதியதற்கு மறுப்புக் கட்டுரை, சித்ரகுப்தன்.
  • மார்ச் 8 மகளிர் தினச் சிறப்பாக பாலினச் சமநிலை குறித்து பெ.சுப்ரமணியனின் கட்டுரை
  • இந்திய உளவுத்துறை ரா அலுவலராக இருந்த பி.ராமன் எழுதியுள்ள புத்தகத்தின் தமிழாக்கமான ‘நிழல் வீரர்கள்’ - புத்தக விமர்சனம் : ஆர். முத்துக்குமார்
மரண தண்டனை பற்றிய சிறப்புப் பகுதி
  • அப்சல் குரு தூக்கு தண்டனையை முன்வைத்து பின்னணித் தகவல்களுடன் இம்மானுவேல் பிரபு
  • வழக்கறிஞர் எஸ்பி சொக்கலிங்கம், கருணை மனு தொடர்பாக எழுதுகிறார்
  • வண்ண நிலவன் கருத்து, மரண தண்டனை குறித்து
  • ஜவாஹிருல்லாவின் கருத்து, அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து
அஞ்சலிக் கட்டுரைகள்
  • எழுத்தாளர் மலர்மன்னன் குறித்து அசோகமித்திரன்
  • காந்தியவாதி ஜகந்நாதன் குறித்து அருண்
====

ஆழம் இதழ் மிகச் சில இடங்களில்தான் கிடைக்கிறது. 94459-01234 டயல் செய்து உங்கள் பிரதியை எப்படிப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆண்டுச் சந்தா எடுப்பது நல்ல விஷயம்.

Tuesday, March 05, 2013

விஸ்வரூபம் 1 + 1

சனிக்கிழமை மாலை இரா. முருகனின் விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா மைலாப்பூர், ஆர்க்கே மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.

ஆர்க்கே மாநாட்டு அரங்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மிக அற்புதமான இடம். கச்சேரிகள் நடத்தத் தோதான இடம். மிக அற்புதமான ஒலித் தன்மை கொண்ட அரங்கு. சுமார் 125 பேர் வரை உட்காரலாம். பெரும்பாலான புத்தக நிகழ்வுகளுக்கு அதற்குமேல் கூட்டம் வரப்போவதில்லை. நல்ல ஏசி. நல்ல டாய்லெட். அருகில் ஒட்டிய இடத்தில் காஃபி, டீ தர இடம் உள்ளது. நல்ல மேடை. நின்று பேசும் இடத்துக்கு நேராக மிக நல்ல விளக்குகள்/வெளிச்சம். உள்ளே வை-ஃபை இணைய வசதி. புரொஜெக்டர் வசதி. வீடியோ எடுத்து திரையில் லைவாகக் காண்பிக்கிறார்கள். லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் வசதி உண்டு. இனி புத்தக வெளியீட்டு விழாக்கள் மட்டுமல்ல, கிழக்கின் அனைத்து விழாக்களையும் இந்த இடத்தில்தான் நடத்துவதாக முடிவெடுத்துள்ளேன். 150 பேருக்குமேல் வரப்போகிறார்கள் என்றால்தான் வேறு இடத்தைப் பார்க்கவேண்டும்.

இரா. முருகன் புத்தகத்தை பி.ஏ.கிருஷ்ணன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். க்ரேஸி மோகன், சுப்ரபாரதி மணியன், ராஜகுமாரன் ஆகியோர் பேசினர். இரா. முருகன் ஏற்புரை. அனைத்தையும் முழுதாக வீடியோவில் இங்கே பார்க்கலாம்.


சனி இரவே ஒரு ‘நீயா, நானா’ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது தகவல் சொல்கிறேன். ஷூட்டிங் ஆரம்பித்தது இரவு 11.30 மணிக்கு. நிகழ்ச்சி முடிந்தது அடுத்த நாள் அதிகாலை 3.00 மணிக்கு. வீடு சென்று சேர்ந்தபோது ஞாயிறு காலை 3.40 மணி.

ஞாயிறு காலை 9.00 மணிக்கு சத்யம் தியேட்டரில் விஸ்வரூபம் சினிமா பார்க்க டிக்கெட் வாங்கியிருந்தேன். அதிகம் தூங்காமல் கிளம்பிப் படம் பார்க்கச் சென்றேன்.

படத்தின் அடிப்படை லாஜிக் ஓட்டையைத் தவிர்த்துவிட்டு (ரா ஏஜெண்டு(களு)ம் எம்.ஐ 6 ஏஜெண்டும் அமெரிக்க சி.ஐ.ஏவுக்குத் தெரியாமல் அமெரிக்காவைக் காப்பாற்ற முயற்சி செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்...) பார்த்தால், நன்றாகத்தான் இருந்தது. அமெரிக்க ஆதரவுப் படம், முஸ்லிம் எதிர்ப்புப் படம் என்றெல்லாம் என் மண்டைக்குத் தோன்றவில்லை. இரண்டாம் பாதியில் படத்தை ஸ்லோவாக்கியிருப்பது ரசிகர்களுக்குப் புரியாவிட்டால் என்ன ஆவது என்ற பயம்தான் என்று நினைக்கிறேன். இந்த பயம் இருக்கும்வரை கோலிவுட்டால் ஹாலிவுட் ரேஞ்சுக்குப் படம் எடுக்கவே முடியாது. சின்னச் சின்ன சொதப்பல்களையெல்லாம் தாண்டி, தொழில்நுட்ப அளவில் உச்சத்தை எட்டியுள்ள தமிழ்ப் படம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். படம் பல இடங்களில் பா. ராகவனின் பல புத்தகங்களை நினைவுபடுத்துகிறது என்று யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

படம் பார்த்துவிட்டு வந்து தூக்கம், தூக்கம், தூக்கம்.