Wednesday, August 28, 2013

உணவுப் பாதுகாப்புச் சட்டம்

ட்ரீஸ்/சென் தங்கள் புத்தகத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து இவ்வாறு பேசுகிறார்கள்: (அடுத்தடுத்த பக்கங்களில் அவர்கள் கொடுத்துள்ள வாக்கியங்களைக் கோர்த்து மொழிமாற்றிக் கொடுத்துள்ளேன். இது ஒரு தொடர் பத்தியாக அந்தப் புத்தகத்தில் இடம்பெறவில்லை.)
டிசம்பர் 2011-ல் இந்திய நாடாளுமன்றத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டபோது நடந்த தீவிரமான விவாதத்தைக் கவனியுங்கள். செல்வாக்குமிக்க விமர்சகர்கள் உடனடியாக அந்த மசோதாவை, நிதிரீதியாகப் பொறுப்பற்ற ஒன்று என்று கடுமையாகத் தாக்கினார்கள். இந்த மசோதாவைச் செயல்படுத்த ஆண்டுக்கு 27,000 கோடி ரூபாய் (இந்திய ஜிடிபியில் சுமார் 0.3%) தேவைப்படும் என்று அதிகாரபூர்வமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தங்க, வைர இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு கொடுப்பதால் இழக்கப்படும் வருமானம் ஆண்டுக்கு ரூ. 57,000 கோடி என்று நிதி அமைச்சகத்தின் ‘இழக்கப்பட்ட வருமானம்’ என்பதன்கீழ், கணிக்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறிப்பிடும் அதிகப்படிச் செலவைப்போல இரண்டு மடங்கு இது.

அனைத்து ‘இழக்கப்பட்ட வருமான’த்தையும் சேர்த்தால், மொத்த பொது வருமான இழப்பு 2010-11-ல் ரூ. 480,000 கோடி என்றும் 2011-12-ல் ரூ. 530,000 கோடி (இந்திய ஜிடிபியில் 5%-க்கும் மேல்) என்றும் நிதி அமைச்சகம் கணக்கிடுகிறது.

இந்த அடிப்படையிலும் பிற தரவுகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, ‘நாடு மிகவும் ஏழையானது, பொது வருமானம் மிகவும் குறைவானது, எனவே உணவு கிடைக்காமல் திண்டாடுவோர் மிக அதிகமாக இருக்கும் இந்தியாவில் அம்மக்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோம்’ என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை.

---- Dreze, Jean; Sen, Amartya (2013-07-04). An Uncertain Glory: India and its Contradictions. Penguin Books Ltd. Kindle Edition.
மேலே சொன்னவற்றுக்கு இடையே இரண்டு இடங்களில் ட்ரீஸ்/சென் இவ்வாறும் சொல்கிறார்கள்:
  • தங்க, வைர இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கினால் 57,000 கோடி ரூபாய் இழப்பு என்றாலும், வரி விதித்தால் இறக்குமதி குறையும் என்பதையும் இந்த இறக்குமதியில் குறிப்பிட்ட அளவு, மேற்கொண்டு மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதற்காக என்பதையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், இழப்பின் மதிப்பு 57,000 கோடி ரூபாயைவிடக் குறைவாக இருக்கும்.
  • இழக்கப்பட்ட வருமானம் என்று நிதி அமைச்சகம் சொல்லும் எண்ணிக்கை அதீதமானது; அதற்கான திருத்தங்களைச் செய்தால், அளவு குறைந்தாலும் இது ‘ராட்சத’ அளிவில்தான் இருக்கும்.
ட்ரீஸ்/சென், அரசு முன்வைக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்ட செலவை 27,000 கோடி ரூபாய் என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அரசு முதலில் சொன்ன தொகை அது. ஆனால் அரசே இப்போது சொல்லும் எண் 27,000 கோடி ரூபாய் அல்ல; மாறாக 72,000 கோடி ரூபாய். வலதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கும் கணிப்பு 314,000 கோடி ரூபாய். (பார்க்க: சுர்ஜித் பல்லா) இதனை மறுத்து, இடது ஓரத்தவர்கள் முன்வைக்கும் எண் 85,000 கோடி ரூபாய். (பார்க்க கொத்வால் எட் ஆல்)

கொத்வால் கட்டுரையில் இறுதிப் பத்தி வேறு ஒரு பிரச்னையை முன்வைக்கிறது. அதைப் பற்றி இப்போது நான் பேசப்போவதில்லை. பிறகு பேசுவோம்.

இந்தியாவுக்குள் நுகரப்படும் தங்க/வைர இறக்குமதிமீது சுங்க வரி விதிப்பதை நான் ஆதரிக்கிறேன். அந்தப் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்குச் சோறிடவேண்டும் என்று சொன்னால் தங்கத்தை அள்ளிக் கழுத்திலும் காதிலும் மாட்டிக்கொள்ளும் அதே ஏழை மற்றும் நடுத்தரப் பெண்கள் ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் தங்க/வைர இறக்குமதியைக் குறைக்க கடுமையான வரிகளை விதிப்பதில் எனக்குச் சம்மதமே. இதனால் அந்நியச் செலாவணித் தேவை கொஞ்சமாவது குறையும். அதே நேரம், தங்கத்தையும் வைரத்தையும் இறக்குமதி செய்து, அதில் மதிப்பு கூட்டி, மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் நம் அந்நியச் செலாவணி வருமானம் பாதிக்கப்படும். இவ்வாறு வரி விதிப்பதன்மூலம் கிடைக்கும் மேலதிக வருமானம், அதிகபட்சம் 20,000 கோடி ரூபாயைத் தாண்டாது என்று நான் கணிக்கிறேன்.

அடுத்து, ‘இழக்கப்படும் வருமானம்’ என்ற கணிப்பை நிதியமைச்சகம் வருடா வருடம் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. அனைத்து இடதுசாரி நண்பர்களும் உடனே இதைப் பார்த்துவிட்டு, “பார்த்தீர்களா, பார்த்தீர்களா, பணக்காரர்களுக்கு எவ்வளவு சலுகைகள்!” என்று சொல்கிறார்கள். ட்ரீஸ்/சென் அதையே தொடர்கிறார்கள். அவர்கள் சொல்லவருவது இதைத்தான்: “நிதிப் பற்றாக்குறையைக் கொஞ்சம்கூட அதிகப்படுத்தாமல், சர்வ சாதாரணமாக சில லட்சம் கோடிகளை நம்மால் பொது வருமானத்தில் சேர்க்க முடியும்; ஆனால் அவ்வாறு செய்யாமல் பல லட்சம் கோடிகளை நாம் இழக்கிறோம்; இதனால்தான் நம் நாட்டில் பட்டினிச் சாவுகள் நடக்கின்றன.”

இது உண்மையா? யார் இம்மாதிரி அரசின் வருமானத்தை அபகரித்துச் செல்லும் திருடர்கள்? இதை முழுமையாகப் புரிந்துகொள்ள, ரோஹித் சின்ஹாவின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள். நான் கீழே கொடுத்துள்ள அட்டவணைகள் இரண்டும் இந்தக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவை.

2011-12-க்கான ‘இழக்கப்படும் வருமானம்’ சுமார் 530,000 கோடி ரூபாய் எப்படிப் பிரிகிறது என்று பாருங்கள். இதில் மிகப் பெருமளவு சுங்க வரி விலக்கு அளிப்பதில்தான் நடக்கிறது (236,852 கோடி ரூ). அடுத்து, கலால்/ஆயத்தீர்வை (195,590 கோடி ரூ). அடுத்து நிறுவனங்களுக்கான வருமான வரியில் அளிக்கப்படும் விலக்கு (61,765 கோடி ரூ). இறுதியாக தனி நபர் வருமான வரியில் அளிக்கப்படும் விலக்கு (39,375 கோடி ரூ).

Overview of Revenue Foregone 2011-12 (in Rs. Crore)
Tax Type
Revenue Foregone
Aggregate Tax Collection
Revenue Foregone as a %age of Aggregate Tax Collection
Corporation Tax
61765
322816
19.1%
Personal Income Tax
39375
170342
21.3%
Excise Duty
195590
145607
134.3%
Customs Duty
236852
149327
158.63%
TOTAL
533582
788092
67.7%

முதலில் தனி நபர் வருமான வரிக்கு அளிக்கப்படும் விலக்கை எடுத்துக்கொள்வோம். கட்டுமானக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தல், வரிவிலக்கு அளிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தல் ஆகிய காரணங்களால் அளிக்கப்படும் வரிவிலக்கு, பெண்கள், முதியோர்களுக்கு வருமான வரியில் அளிக்கப்படும் வரிவிலக்கு போன்ற பலவும் சேர்ந்து உருவாகும் எண்ணிக்கை இது. இந்த ஒவ்வொரு வரிவிலக்கும் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகத் தரப்படுகிறது. தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் நன்கொடைக்கு வரிவிலக்கு கிடையாது என்றால் கட்டாயமாக தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நன்கொடை குறையும். அதனால் விளையும் தீமைகள் யாருக்கு? பெண்கள், முதியோர்களுக்கு வருமான வரியில் அதிக விலக்கு கொடுப்பதன் காரணத்தை உங்களால் நியாயமாக எதிர்க்க முடியுமா? அப்படியே பார்த்தாலும் ஒரு தனி நபர் பெறும் வருமான வரி விலக்கு என்பது சில ஆயிரம் ரூபாய்களுக்குமேல் போகாது.

நிறுவனங்களின் வருமான வரிக்கு அளிக்கப்படும் விலக்கு 61,765 கோடி ரூபாய். இதில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்குத் தரப்படும் வரிவிலக்கு முதல் பல்வேறு வரிவிலக்குகள் அடக்கம். இங்கு அரசு கொஞ்சம் கடுமையாக நடந்துகொண்டு பல வரிவிலக்குகளைக் குறைக்கலாம். ஆனால் ஏற்கெனவே நசிந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தில், நிறுவனங்கள் இதனை எப்படி எதிர்கொள்ளும் என்று யோசியுங்கள்.

ஆயத்தீர்வையில் தரப்படும் விலக்குகளால் பொதுமக்களுக்கு அதிக நன்மை போய்ச்சேருவதில்லை என்கிறார் சின்ஹா. பெரும்பாலான வரிவிலக்கை நிறுவனங்கள் தம்மிடமே வைத்துக்கொண்டு, மிகக் குறைவான அளவையே மக்களுக்குத் தருகின்றன என்கிறார். இதில் வேண்டுமானால் கையை வைக்கலாம் அரசு. இதன் காரணமாக நிச்சயமாக பிஸ்கட் முதல் பல்வேறு பொருள்களுக்கு விலை அதிகமாகும்; அதனால் பணவீக்க அளவு சற்றே அதிகமாகும். தவறில்லை என்று தோன்றுகிறது. வரிச் சீர்திருத்தத்துக்கு உகந்த இடமாக இது உள்ளது.

கடைசியாக சுங்க வரி விலக்கு. இதில் எதெதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று விளக்குகிறார் சின்ஹா. 

Contribution of Top 5 Commodity Groups contributing to Custom Duty Foregone 2011-12 (in Rs. Crore)
Sector
Revenue Foregone
% Share in Total Custom Duty Foregone
Diamond & Gold
65975
23%
Crude Oil and Mineral Oils
55576
19.5%
Vegetables Oils                                
32407
11.5%
Machinery
32386
11.5%
Chemicals & Plastics
20758
7%
TOTAL
207102
72.5%

தங்கம்/வைரம் முதலிடத்தில். நான் ஏற்கெனவே சொன்னதுபோல உள்நாட்டுப் பயனுக்கு என்று இறக்குமதி செய்யப்படும் தங்கம்/வைரத்தின்மீது வரிவிலக்கு தராமல் வரி விதிப்பது நியாயமாகத் தோன்றுகிறது. ஆனால் மதிப்புக் கூட்டி வெளிநாட்டுக்கு விற்கப்போகும் தங்க/வைர இறக்குமதிமீது வரி விதிப்பது பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வதற்குச் சமம். அதையும் சேர்த்துக் கணக்குக் காட்டியுள்ளதால் அதனை விடுத்துப் பார்ப்பதே சரியானது.

கச்சா எண்ணெய் மீதான வரிவிலக்கு அடுத்து. பெட்ரோல் விலை, சமையல் எரிவாயு விலையைக் கண்டு ஏற்கெனவே சமூகப் பீதி அடைந்துள்ளது. ஆனாலும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஆதரவாக இருப்போர்கள் பெட்ரோல் விலையைக் கண்டு பீதி அடையவேண்டியதில்லை. எனவே இந்த வரிவிலக்கை நீக்க நான் பரிந்துரை செய்கிறேன். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான மான்யங்களையும் முற்று முழுதாக நீக்க நான் பரிந்துரைக்கிறேன். இதனால் பணவீக்கம் கடுமையாக அதிகமாகும். ஆனால் வேறு வழியில்லை.

அடுத்து இயந்திரங்களை இறக்குமதி செய்வதன்மீதான வரிவிலக்கு. இதனைத் தொடருமாறு கோருவேன். இந்த இயந்திரங்கள் உள்ளே வருவதன்மூலம்தான் நாட்டில் வேலைகள் அதிகமாகும்.

இறுதியாக ரசாயனங்கள்/பிளாஸ்டிக். இதில் ரசாயனங்கள் என்பவதில் உரங்கள்மீதான வரிவிலக்குதான் பிரதானம் என்பது என் யூகம். அதன் அடிப்படையில் உணவுக்கு இந்த ரசாயனங்கள் மிக முக்கியத் தேவை என்பதால் இந்த வரிவிலக்கைத் தொடரலாம். அல்லது உரங்கள்மீதான மான்யத்தையும் வரிவிலக்கையும் முற்றிலுமாக நீக்கிவிட்டு, ஒரு கிலோ அரிசி ரூ. 100/150 என்று போனால் பரவாயில்லை என்று வைத்துக்கொள்ளலாம். எப்படியும் நாட்டில் 2/3 பங்கு மக்களுக்கு ரூ. 3-க்கு அரிசி கிடைத்துவிடும். எனவே மிச்சமுள்ள 1/3 கிராம மக்கள், 1/2 நகர மக்களுக்கு மட்டும்தானே இந்தச் சிக்கல்?

ஆகா, ஆனால் வேறு சில சிக்கல்கள் வந்ந்துவிடும். டீசல், மின்சாரம், உரம் ஆகியவற்றின் மான்யங்களை நீக்கிவிட்டால், விளைவிக்கப்படும் அரிசி/கோதுமை/தானியங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். அப்போதும் அவற்றை 3/2/1 ரூ. என்ற விலைக்கு விற்கவேண்டும் என்று சட்டம் சொல்வதால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்த ஆகும் மானியச் செலவு விண்ணைத் தொடும். அந்தப் பணத்தைத் திரட்ட மேலும் வரிகளை விதிக்கவேண்டும். இப்படியே போனால், நாடு நாசமாகப் போய்விடும்.

இந்த நெகடிவ் ஃபீட்பேக் லூப் பிரச்னையை ட்ரீஸ்/சென் போன்றோர் கண்டுகொள்வதில்லை. பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து அதிலிருந்து நியாயமாகப் பெறும் வரி வருமானம் அதிகரித்து, அந்த வருமானத்தைக் கொண்டு பட்டினிப் பிரச்னையைத் தீர்ப்பதா அல்லது ‘இழக்கப்படும் வருமானம்’ என்று சொல்லப்படும் ஒரு தொகையை உண்மை என்று கருதி, அதை இழக்காமல் அப்படியே கைப்பற்றி, அதிலிருந்து நாட்டில் உள்ள அனைவருக்கும் (சரி, கிட்டத்தட்ட அனைவருக்கும்) உணவை 3/2/1 ரூபாய்க்குத் தர முயற்சிப்பது உண்மையிலேயே நடைபெறுமா? அப்படி நடைபெற்றால் அதன் பொருளாதார விளைவுகள் என்னென்ன?

சிந்தியுங்கள்.

Friday, August 23, 2013

தமிழ் இணைய மாநாடுகள், பிற இந்திய மொழிகள் - 1

பன்னிரண்டு தமிழ் இணைய மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. தமிழ் மொழி இந்தியாவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளது. இது தவிர பல உலக நாடுகளில் தமிழ் மொழி பேசுவோர் வாழ்ந்துவருகின்றனர்.

தமிழ் சந்திக்கும் நுட்பியல் பிரச்னைகள் அனைத்தையும் பிற இந்திய மொழிகளும் சந்திக்கின்றன. அது தவிர்த்து, தமிழுக்கு சில பிரத்யேக அரசியல் பிரச்னைகளும் உள்ளன. தமிழ் மொழியின் எழுத்துகள், பிற இந்திய மொழிகளின் எழுத்துகளைவிடக் குறைவாக இருக்கும் காரணத்தால், சில தமிழ் அறிஞர்கள் தமிழைப் பிற இந்திய மொழிகள்போலக் கருதாமல் தனியாகக் கருதும்படிக் கோருகிறார்கள். தமிழில் சில வடமொழி எழுத்துகள் (கிரந்த எழுத்துகள் என இவற்றை வழக்குமொழியில் அழைப்பர்) புகுந்துள்ளதைக் காரணம் காட்டி அவற்றை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் முன்வைக்கிறார்கள். எழுத்து சீர்திருத்தம் தேவை என்பதைச் சிலர் முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவை அனைத்தும் தமிழைக் கணினியில் கொண்டுவருவதில், தெரியவைப்பதில் புதுப்புது சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

தமிழ் எழுத்து என்பதற்கு இனியும் தமிழர்கள் மட்டும் சொந்தக்காரர்கள் இல்லை. தமிழக அரசு, இந்திய அரசு, பன்னாட்டு கணினித் தர அமைப்புகள் (ஒருங்குறி சேர்த்தியம் போன்றவை), கணினி/கைப்பேசி தயாரிப்பாளர்கள், இயக்குதளம் உருவாக்குபவர்கள், நிரல் எழுதுபவர்கள் என்று பலரும் இன்று உலக மொழிகள் அனைத்துக்கும் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். ‘என் மொழி, நான் இப்படித்தான் செய்வேன்’ என்று இனியும் யாரும் தனியாக எதையும் செய்துவிட முடியாது. எது செய்தாலும் அதனை முறைப்படிச் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இத்துறையில் அரசியல் கலக்கும்போது, தமிழ் இன உணர்வு என்பது முன்வைக்கப்படும்போது பிரச்னை பெரிதாகிறது. வேண்டியபோது வடமொழி, இந்தி, நடுவண் அரசு, பார்ப்பனர்கள் ஆகியவற்றைப் பிடித்து இழுத்து சிக்கலை வேண்டிய அளவு விரிவாக்கிக்கொள்ளலாம்.

தமிழ்க் கணிமையின் ஆரம்ப சிக்கல், தரப்படுத்தப்பட்ட எழுத்துக் குறியீடு ஒன்றை உருவாக்குவதே. பன்னாட்டு அளவில் ஒருங்குறி (யூனிகோடு) சேர்த்தியம் உருவாவதற்கு முன்பிருந்தே டெஸ்க்டாப் பப்ளிஷிங் என்ற துறையின் வளர்ச்சி காரணமாக பல்வேறு தமிழ் எழுத்துருக்களும் அவை ஒவ்வொன்றுக்குமான பிரத்யேக எழுத்துக் குறியீடுகளும் உருவாகத் தொடங்கியிருந்தன. 1997 முதல் தமிழ் இணைய மாநாடு (அப்போது அதற்கு அந்தப் பெயரில்லை. உத்தமம் அமைப்பே அப்போது உருவாக்கப்பட்டிருக்கவில்லை. 2000-ல் உத்தமம் உருவாகி இணைய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டபோது 1997 சிங்கப்பூர் மாநாட்டை முதல் தமிழ் இணைய மாநாடு என்று குறிப்பது வழக்கமாகியது) நடந்தபோதிலிருந்தே இந்தச் சிக்கல் உணர்த்தப்பட்டது. விரைவாக உத்தமம் உருவாகி, தமிழக அரசின் ஈடுபாட்டுடன் எழுத்துக் குறியீடு தரப்படுத்தல் முயற்சி தொடங்கியது. தமிழக அரசு TAB, TAM என்ற எழுத்துக் குறியீடுகளை முன்வைக்க, உத்தமம் தரப்பு TSCII என்ற குறியீட்டை முன்வைக்க, இந்த மூன்று குறியீடுகளும் சேர்ந்து அரசுத் தரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. (ஆனால் கடைசிவரை அரசு அலுவலகங்களில் வானவில் என்ற எழுத்துரு/குறியீடு/தட்டச்சுப் பலகை முறையே பயன்பாட்டில் இருந்தது, இன்றும் பெரும்பாலும் இருக்கிறது என்பது பெரும் முரண்.)

இதையடுத்து தமிழில் தட்டச்சு செய்ய விசைப்பலகை தரப்படுத்துதல் என்பதும் உத்தமம், தமிழக அரசு இரண்டும் இணைந்து செயல்பட்டதால்தான் அமலுக்கு வந்தது. அதுதான் TamilNet99 அல்லது Tamil99 என்ற பலகைமுறை. இன்று தமிழக அரசின் தரமாக இது இருந்தாலும் நான் மேலே சொன்னபடி தமிழக அரசு அலுவலகங்கள் பல இடங்களிலும் வானவில்தான் கோலோச்சுகிறது. ஆனால் சிங்கப்பூரில் Tamil99 தட்டச்சுப் பலகைதான் அங்கீகரிக்கப்பட்ட முறை.

இவையெல்லாம் உள்ளூர் மென்பொருள் தயாரிப்பாளர்களைத்தான் கட்டுப்படுத்தியது. அவர்கள், தத்தம் சொந்தக் குறியீடுகள், விசைப்பலகைகள் ஆகியவற்றுடன், TAM/TAB/TSCII/Tamil99 ஆகியவற்றுக்கான ஆதரவையும் தரவேண்டியிருந்தது. மைக்ரோசாஃப்ட் போன்றோர் இதுகுறித்துக் கவலை கொள்ளவில்லை. பெரும்பாலான பன்னாட்டுக் கணினி நிறுவனங்கள் ஒருங்குறியை நோக்கி நகரத் தொடங்கியிருந்தனர். விரைவில் மைக்ரோசாஃப்ட் இயக்குதளம் ஒருங்குறி ஆதரவைக் கொண்டுவந்தது. அத்துடன் அசிங்கமாகத்தெரியும் (நீங்கள் பெரும்பாலும் இப்போது படித்துக்கொண்டிருக்கும்) லதா எழுத்துருவையும் அறிமுகப்படுத்தியது மைக்ரோசாஃப்ட். அடுத்தடுத்து வரும் மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்கள் தமிழுக்கான ஆதரவை இயல்பிலேயே உள்ளே கொண்டிருந்தன. மேகிண்டாஷ் இயக்குதளமும் பின்னர் லினக்ஸ் இயக்குதளமும் தமிழ் யூனிகோட் ஆதரவை உருவாக்கிக்கொண்டன.

எனவே தமிழக அரசும் உத்தமம் அமைப்பும் தம் தர நிர்ணயத்தை மாற்றவேண்டியிருந்தது. TAM/TAB/TSCII ஆகியவை மறக்கப்பட்டு யூனிகோடு ஒன்றே தரம் என்ற நிலையை ஏற்கவேண்டும் என்று உத்தமம் கருத்தை முன்வைத்தது. அனைத்து தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கிய Complex Unicode rendering தேவைப்படாத TACE என்ற குறியீட்டுத் தரத்தை சிலர் அறிமுகப்படுத்த விரும்பினார்கள். இது தொடர்பாக பல கட்டுரைகள் தமிழ் இணைய மாநாடுகளில் முன்வைக்கப்பட்டன. யூனிகோடு எழுத்துக் குறியீட்டுக்கு இன்றுவரை பல மென்பொருள்களில் ஆதரவு கிடையாது. அடோபி பிடிஎஃப் ரீடர் தமிழ் யூனிகோடைக் காண்பிக்கும், ஆனால் தேடுதல் முடியாது; டெஸ்க்டாப் பப்ளிஷிங் மென்பொருள்கள் பலவும் தமிழ் யூனிகோடைக் கடித்துத் துப்பும். TACE குறியீட்டில் இந்தப் பிரச்னைகளையெல்லாம் சமாளிக்கலாம். ஆனால் இணையச் சேவைகள் என்று வந்தால் யூனிகோடு போதும். ஒரு சமரச முயற்சியாக உத்தமம் பணிக்குழு ஒன்று இந்த இரண்டு குறியீடுகளையும் தரமாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ய, அது குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை TACE என்ற குறியீடு Private Use Area என்ற இடத்தில்தான் உள்ளது., இந்த எழுத்துருக்களை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையத்தளத்திலிருந்துதான் நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். நீங்கள் வாங்கும் கணினியில் தொடக்கம் முதலே இந்த எழுத்துருக்கள் இருக்கா.

இது பெரிய பிரச்னை இல்லை. தொழில்முறை நிபுணர்களைத் தவிரப் பிறருக்கு TACE தேவையில்லை. (பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கும். இது என் கருத்து.) இன்று கணினியைப் பொருத்தமட்டில் உங்கள் கணினியில் தமிழ் வேலை செய்யும். படிக்கலாம். கொஞ்சம் முயற்சி செய்தால் எழுதலாம்.

இந்த மாற்றம் சுளுவாக, வேகமாக, அரசின் ஆதரவுடன், அரசாணை அடிப்படையில் செயல்படுவதற்கு உத்தமம் என்ற அமைப்பு பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. எண்ணற்ற சண்டைகள் நிகழ்ந்துள்ளன. பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, கணினி வல்லுனர்கள் பல்லாயிரக்கணக்கான நேரம் செலவு செய்து, முடிவுகள் எடுக்க உதவியுள்ளனர். இதுபோல் எதுவும் பிற மொழிகளுக்கு நடைபெறவில்லை.

ஏனெனில் உத்தமம் என்ற அமைப்புபோன்ற எதுவும் பிற மொழிகளுக்கு இல்லை. பல மாநில அரசுகளுக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாது. மத்திய அரசு அமைப்புகள் அனைத்து இந்திய மொழிகளுக்குமாக சில கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும். Inscript என்ற முறையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு விசைப்பலகை முறை உருவாக்கப்பட்டது. தமிழுக்கும் அவ்வாறு ஒரு விசைப்பலகை உள்ளது. ஆனால் தமிழர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. தங்களுக்கென சிறப்பான Tamil99 முறையை உருவாக்கிக்கொண்டனர். சில மாநில அரசுகளின் மொழிகள் இன்றும் கணினியில் சரியாகத் தெரிவதில்லை. அம்மாநிலங்கள் அவைபற்றிக் கவலை கொள்வதாகத் தெரியவில்லை.

கன்னட எழுத்தாளரும் ஞானபீடப் பரிசு பெற்றவரும் ஹம்பியில் கன்னடப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தவருமான முனைவர் சந்திரசேகர கம்பார, சென்ற ஆண்டு இவ்வாறு சொன்னார்:
"They say that in this Internet age, every three years amount to a 'yuga', so we are at least five yugas behind Tamil. Leave alone email, it's a pity we are not able to send even an SMS in Kannada," the Jnanpith awardee lamented, while speaking at a book release function.
கம்பார இதை வேறு இடங்களிலும் சொல்லியிருக்கிறார். கம்பாரவின் ஒப்பீட்டில் கொஞ்சம் பிழை இருக்கிறது. அவர் பேசிய காலகட்டத்தில் கன்னடத்தில் தமிழைப் போலவே மின்னஞ்சல் செய்ய முடிந்தது; சில கைப்பேசிகளில் கன்னடத்திலும் தமிழைப் போலவே குறுஞ்செய்திகளை அனுப்ப முடிந்தது. தமிழில் செய்யும் பலவற்றையும் கன்னடத்திலும் செய்ய முடிந்தது. ஆனால் தமிழில் நடைபெறும் அளவுக்கு ஆராய்ச்சிகளும் அடிதடிச் சண்டைகளும் கன்னட கணினி உலகில் நடந்திருக்கவில்லை. அரசிடமிருந்து ஆணைகள் ஏதும் வந்திருக்கவில்லை. அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ கன்னடக் கணிமை பற்றிக் கவலைகொண்டதாகத் தெரியவில்லை. ஆக, கல்வியாளராகவும் எழுத்தாளராகவும் தமிழ்க் கணிமையிலும் கணினி மொழியியலிலும் ஆராய்ச்சி செய்யும் சிலரை அறிந்தவராகவும் இருக்கும் கம்பார கவலைப்பட்டதில் நியாயம் இருக்கிறது.

இதனால் தமிழ் என்னவோ உலகிலேயே கணிமையில் மிகச் சிறந்த இடத்தில் இருக்கிறது என்று பொருள் கொள்ளக்கூடாது. தட்டிக் கொட்டி ஏதோ கொஞ்சம் வேலைகள் தமிழில் முன்னெடுக்கப்படுகின்றன என்றே இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்குப் பலருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் உத்தமம் என்ற அமைப்புடன் தொடர்புகொண்டவர்கள். இதில் சிலர் உத்தமத்துடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியிலிருந்து கடுமையாக எதிர்த்து, பின்னர் உத்தமம் அமைப்பை வழிநடத்துபவர்களாக ஆனவர்கள். வேறு சிலர் உத்தமத்தில் இயங்கியபின் கடும் மனவெறுப்படைந்து உத்தமம் அமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்கள். பிறகு ஒரு நியூட்ரல் நிலையில் தொடர்ந்து ஆதரவு தந்துகொண்டிருப்பவர்கள்.

மலேசியாவில் நடந்த 12-வது மாநாட்டின்போது அங்கு குழுமியிருந்த சில முக்கியமான உத்தமம் முன்னாள்/இந்நாள் நிர்வாகிகள்/ஆலோசகர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேரா. ஆனந்தகிருஷ்ணன், பேரா. பொன்னவைக்கோ, அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன், மணி மணிவண்ணன், வெங்கட்ரங்கன் ஆகியோருடன் இந்நாள் உத்தமம் செயற்குழுவினர்களான இளந்தமிழ், இளங்கோவன், மணியம், வாசு அரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் ஒரு ஓரத்தில் குறிப்பெழுதுபவனாக நானும் இருந்தேன். இந்தக் குழுவில் விடுபட்ட முக்கியமான ஒரு நபர் கல்யாணசுந்தரம். அவரால் மலேசியா மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை. மாநாடுகளை நடத்தியுள்ளனர். அரசுகளுடன் உறவாடியுள்ளனர். பணத்தைத் திரட்டியுள்ளனர். ஒருங்குறி சேர்த்தியம் போன்ற பன்னாட்டுக் கணினி அமைப்புகளுடன் போராடி, தமிழின் நிலையை எடுத்துச் சொல்லியுள்ளனர். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற கணினி நிறுவனங்களோடு தொடர்ந்து உறவாடி அவர்களை வற்புறுத்தி தமிழுக்கான ஆதரவைக் கூட்டியுள்ளனர். இவர்கள் தனியாக இத்தனையையும் செய்தார்கள் என்று நான் சொல்லவில்லை; இவர்கள் தலைமை வகித்த கடந்த பதினாறு ஆண்டுகளில் மேலும் பலர் செயற்குழுவிலும் பணிக்குழுவிலும் பணியாற்றியுள்ளனர்; தன்னார்வலர்களாகத் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

இதுபோன்ற முயற்சிகள் இந்திய மொழிகள் பிறவற்றில் எதற்கும் இல்லை என்பதை இங்கே குறிப்பிடுதல் அவசியம்.

(தொடர்வேன்)

Thursday, August 22, 2013

12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு - கோலாலம்பூர்

ஆகஸ்ட் 15-18 தேதிகளில் மலேசியா நாட்டின் கோலாலம்பூர் நகரில் உத்தமம் (INFITT) அமைப்பின் சார்பில், மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

1997 முதல் இன்றுவரை 12 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதில் கடந்த ஐந்து வருடங்களாக, வருடத்துக்கு ஒன்று என்று இம்மாநாடு நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது மாநாடு 1997-ல் சிங்கப்பூரில் நடைபெற்றபோது தமிழ் இணையம் சந்தித்த சவால்கள் வேறு, இன்று தமிழ் இணையம் சந்திக்கும் சவால்கள் வேறு. இதற்கிடையில் உத்தமம் என்ற அமைப்பு சந்தித்த சவால்களும் பலப்பல. அனைத்தையும் தாண்டி, தமிழ்க் கணிமை மற்றும் இணையத்தின் தொழில்நுட்பச் சவால்களைப் பெருமளவு எதிர்கொள்வதற்கு உத்தமம் அமைப்பு உதவியுள்ளது.

ஒரு பெரும் இடைவெளிக்குப் பிறகு 2009-ம் ஆண்டு, 8-வது மாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு 2010-ல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9-வது மாநாடு நடைபெற்றது. 2011-ல் அமெரிக்காவில் 10-வது மாநாடு நடைபெற்றது. டிசம்பர் 2012-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 11-வது மாநாடு நடத்தப்பட்டது. இப்போது மலேசியாவில் 12-வது மாநாடு நடந்து முடிந்துள்ளது.

அனைத்திலும் இல்லாவிட்டாலும், முதல் சில மாநாடுகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 1997-ல் நடந்த சிங்கப்பூர் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அதன்பின் இந்தியாவில் நடந்த மாநாடுகள் அனைத்திலும் தலையைக் காட்டியிருக்கிறேன். ஒரு மலேசியா மாநாட்டுக்கும் ஒரு அமெரிக்க மாநாட்டுக்கும் செல்லவில்லை. பின்னர் சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் கடந்த ஐந்து மாநாடுகளிலும் ஏதோ ஒருவிதத்தில் அதிகமான பங்களிப்பைச் செய்திருக்கிறேன். கடந்த ஐந்து மாநாடுகளுக்கும் இதழ்களை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மலாயா பல்கலைக்கழகத்திலும் நடந்த (கடந்த இரு) மாநாடுகளில், மாநாட்டு நிகழ்ச்சிக் குழுவின் தலைவராக இருந்துள்ளேன். கோவையில் நடந்த மாநாட்டில் நிர்வாக வேலைகள் பலவற்றைப் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

இந்த மாநாடுகளின் பயன் என்ன, இவற்றால் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து விரிவாக, தனியான பதிவு ஒன்றை எழுதுகிறேன். கடந்த ஐந்து மாநாடுகளை வைத்துப் பார்க்கும்போது கல்விப்புலத்தவர்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர் என்பது தெளிவுபடுகிறது. ஆனால் மென்பொருள் துறையில் உள்ளவர்கள் பங்கேற்பு அந்த அளவுக்கு அதிகமாகவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் தங்கள் ஆராய்ச்சிகளைப் பதிப்பிப்பது அவசியமாகிறது. ஆனால் மென்பொருள் துறையினருக்கு, அது பெரிய நிறுவனத்தில் வேலை செய்வோராக இருந்தாலும் சரி அல்லது ஒற்றை நபர் மட்டுமே இருக்கும் சிறு நிறுவனத்தவராக இருந்தாலும் சரி, முறையான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதுவது கடினம். மேலும், அவ்வாறு பதிப்பித்து என்ன ஆகப்போகிறது என்பதும் அவர்கள் கருத்தாக இருக்கிறது. தொழில் ரகசியத்தை வெளியே விடக்கூடாது என்ற எண்ணமும் உள்ளது. இந்நிலை மாறவேண்டும்.

இம்மாநாட்டில் பொதுவாக கீழ்க்கண்ட துறைகளில் கட்டுரைகள் வருகின்றன: கணினி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு, மென்பொருள்கள், இணையச் சேவைகள், குறுஞ்செயலிகள், இணைய/கணினி/கைப்பேசி வழி தமிழ்க் கல்வி.

இதில், கணினி/இணையம்/கைப்பேசி வழியாகப் போதிப்பது குறித்து வரும் பெரும்பாலான கட்டுரைகள் நுட்பத்தை அதிகமாக முன்னெடுத்துச் செல்பவையாக இல்லை. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் முதன்மைத் தேவை, கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தித் தமிழைப் போதிப்பதுதான். ஆனால் தமிழகத்திலோ (இலங்கையிலும்கூட) தமிழ் வழியத்தில் அனைத்துப் பாடங்களையும் போதிப்பது அவசியமாகிறது. ஆனால் இதுகுறித்து நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை இல்லை என்பதுதான் உண்மை.

மாநாட்டுக்கு வந்த ஒரு சிலரது கருத்து, இந்த ‘கல்வி’ குறித்த கட்டுரைகளை இம்மாநாட்டில் ஓர் அங்கமாகச் சேர்க்கவேண்டுமா என்பதே. இதுவும் விவாதிக்கப்படவேண்டிய ஒன்றுதான்.

மற்ற தலைப்புகளை எடுத்துக்கொள்வோம். கணினி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு ஆகியவற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைய முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவை ஒரு பயனரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவு ஒரு மென்பொருளின் உருவாக்கத்தில் இன்னும் போய் முடியவில்லை. உதாரணமாக, ஒரு செம்மையான இலக்கணப் பிழைதிருத்திக்காக நாம் இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறோம். மறுபக்கம், மென்பொருள்களைப் பொருத்தமட்டில் பல பயனுள்ளவை நம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. தமிழில் எழுதுவது, எழுத்துக் குறியீடுகளை மாற்றுவது, கைப்பேசிகளில் தட்டும்போது வார்த்தைகளை ஊகித்துச் சிறுசிறு பிழைகளைத் திருத்துவது போன்றவையெல்லாம் இன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால் இவ்வளவு மாநாடுகளுக்கும்பிறகு இவை மட்டும்தானா என்ற கேள்வியும் எஞ்சி நிற்கிறது. எழுத்துணரி, பேச்சிலிருந்து எழுத்து, கையெழுத்தைப் புரிந்துகொண்டு இலக்க எழுத்துகளாக மாற்றுதல், எழுத்திலிருந்து பேச்சு, ஓரளவுக்குச் செம்மையான மொழிமாற்றி, ஏற்கெனவே நான் குறிப்பிட்ட பிழைதிருத்தி போன்றவையெல்லாம் இன்னும் எட்டாக்கனிகளாகவே உள்ளன. கூடவே, பத்திச் சுருக்கம், ஒரு பத்தியிலிருந்து அது சொல்லவரும் உணர்வைப் பெறுதல் போன்ற பலவற்றைக் குறித்தும் நிறையச் செய்யவேண்டியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான கருவிகள் பலவும் செய்யப்படவேண்டியுள்ளது. சென்ற ஆண்டு இதில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாண்டு நான் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை. தமிழிலேயே ‘நிரலிகள் எழுதும் முறை’ பற்றி இவ்வாண்டு ஓரிரு கட்டுரைகள் வந்துள்ளன; ஆனால் எதிர்பார்த்த வேகம் இல்லை. ஆனால் இன்றைய நிலையில் இவையெல்லாம் கையெட்டும் தூரத்தில்தான் உள்ளன. அடையவே முடியாத கடின இலக்குகளல்ல.

ஒரு பக்கம், புதிய புதிய கருவிகளில் தமிழைப் படிக்க முடியுமா, தமிழில் எழுத முடியுமா என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, அங்கு ஏற்படும் சிக்கல்களை எதிர்கொண்டபடியே, மறு பக்கம் மேலே சொன்ன அனைத்து நுட்பியல் பிரச்னைகளையும் நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனைச் சாத்தியப்படுத்த உத்தமத்தின் மாநாடுகள் மிக மிக அவசியமாகின்றன.

அடுத்த ஆண்டு (2014), 13-வது மாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது. இதுவரை இல்லாத அளவு பெரும் பாய்ச்சல் இந்த மாநாட்டின்போது நிகழும் என்று நம்புவோம்.

Tuesday, August 13, 2013

அடிப்படைக் கல்வியில் பிரச்னை

ட்ரீஸ், சென் எழுதியுள்ள An Uncertain Glory புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வோர் அத்தியாயமும் என்னை மிகவும் தொல்லை செய்கிறது. 66-வது சுதந்தர தினத்தை நெருங்கியுள்ளோம். இத்தனை ஆண்டுகளில் உருப்படியாக ஒன்றையுமே சாதிக்கவில்லை. நம்மைவிட ஏழை நாடுகளெல்லாம், நமக்குப் பிறகு சுதந்தரம் வாங்கியவர்களெல்லாம் பல விஷயங்களில் நம்மைத் தாண்டிச் சென்றுவிட்டார்கள். மிக மிக அடிப்படையான விஷயங்கள் இவையெல்லாம். அதில் ஒன்று கல்வி.

நம்மளவுக்குக் கல்வியில் பின்தங்கிய நாட்டைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். ஒருபக்கம் ஐஐடி, ஐஐஎம் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் படிப்பறிவற்றோர் எண்ணிக்கை மிக மிக அதிகம் நம் நாட்டில். அரசுப் பள்ளிக்கூடங்களில் பல ஆசிரியர்கள் பல நாட்களுக்கு வேலைக்கே வருவதில்லை. ஒருசில திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பலவற்றில் தலைமையாசிரியர்களே பள்ளிக்கு வருவதில்லை. மறுபக்கம், உணவு, சீருடை, புத்தகம் ஆகியவற்றை இலவசமாகக் கொடுத்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலும் குறைபாடு. ஓராண்டில் 200 நாள்கள் பள்ளிக்கூடம் நடத்தப்படவேண்டும் என்றால் ஆசிரியர்/மாணவர் வருகை தராததைக் கணக்கில் எடுத்தால் பாதிக்குப் பாதி நாள்கள் வீணாகிவிடுகின்றன என்கிறார்கள் ட்ரீஸ், சென். அதிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தும் பாடம் நடத்தாததைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 50 நாள்கள்கூட மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுவதில்லை என்கிறார்கள்.

ஆனால் உலகிலேயே ஒரு நாட்டின் பெர் கேபிடா ஜிடிபி (தலைக்கு இவ்வளவு வருமானம்) என்பதை வைத்துப் பார்க்கும்போது, மிக அதிகமான சம்பளம் இந்திய அரசுப்பணி ஆசிரியர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் (OECD Countries) ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் ஜிடிபி பேர் கேபிடாவுடன் ஒப்பிடும்போது 1.2 மடங்கு. சீனாவில் 0.9 மடங்கு. ஜப்பானில் 1.5 மடங்கு. பாகிஸ்தானில் 1.9 மடங்கு. இந்தியாவில் 3 மடங்குக்குமேல். மாநிலத்துக்கு மாநிலம் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவின் 9 பெரிய மாநிலங்களில் (தமிழகம் சேர்த்து), 3.0 மடங்கு. உத்தரப் பிரதேசத்தில் 6.4 மடங்கு, பிகாரில் 5.9 மடங்கு.

பிறரைவிட இவ்வளவு அதிகமாகச் சம்பளம் கிடைக்கிறது என்பதாலேயே ஆசிரியப்பணியில் நாட்டமில்லாதவர்களும் ஆசிரியர் வேலைக்கு வருகிறார்கள். அதனைப் பெறுவதற்காக எத்தனை லஞ்சத்தைக் கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. வேலையில் சேர்ந்ததும் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள்; பள்ளிகளுக்கு வருவதில்லை; வந்தாலும் பாடம் நடத்துவதில்லை.

மேலும் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கட்டுப்படியாவதில்லை என்பதால் அரசுகள் மேற்கொண்டு ஆசிரியர் நியமனங்களைச் செய்வதில்லை. மாறாக மிகக் குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கிறது. இப்படி நியமிக்கப்படுவோர், அதிகச் சம்பளம் வாங்குவோருடன் சேர்ந்து ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள்.

இதே நிலைதான் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் நடக்கிறது. மறுபக்கம் தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்கிறார்கள் ஆசிரியர்கள். இதையே ட்ரீஸ், சென் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
The result of all this is an oddly dualistic teaching cadre, where professional but often laid-back ‘permanent teachers’ work side by side with informal but more active ‘contract teachers’ hired at a fraction of the former’s salary.

--Dreze, Jean; Sen, Amartya, An Uncertain Glory: India and its Contradictions, Penguin
எவ்வாறு ஊதியக்குழு, தன்னிஷ்டத்துக்கு அரசு ஊழியர் ஊதியங்களை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறது என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஆசிரியர்கள் இவ்வளவு சம்பளத்தை வாங்குகிறார்களே, வேலையாவது ஒழுங்காகச் செய்து தொலைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. விளைவு, பெரும்பான்மை மாணவர்களுக்கு எழுத, படிக்க, எளிமையான கணக்குகளைப் போடத் தெரிவதில்லை. எட்டாம் வகுப்பு வரை பாஸ் போட்டுக்கொண்டே வந்து, ஒன்பதாம் வகுப்பில் விட்டுவிடுகிறோம்.

இதற்கு மாற்று தனியார் பள்ளிகள் அல்ல என்கிறார்கள் ட்ரீஸ், சென். என் வலதுசாரி மனோபாவத்தைத் தாண்டி இங்கு நான் ட்ரீஸ், சென்னுடன் உடன்படுகிறேன். கல்வியிலும் உடல்நலத்திலும் முழுமையான தனியார் துறையால் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். அரசின் தலையீடு மிக மிக அவசியம். ஆனால் அரசு ஆசிரியர்கள் இப்போது நடந்துகொள்ளும் விதத்தை வைத்துப் பார்த்தால் அரசுப் பள்ளிகளால் பிரயோஜனம் இல்லை என்றும் புரிகிறது.

என் நண்பர்கள் சிலர் (சத்யா உட்பட) வவுச்சர் முறை என்பதை முன்வைக்கிறார்கள். ட்ரீஸ், சென் வவுச்சர் முறையில் குறைபாடு உள்ளது என்கிறார்கள். அதுகுறித்து ஒரு சிறிய விவாதமும் உள்ளது. (எழுதினால் இந்தப் பதிவு நீண்டுவிடும்.)

பிற ஏழை நாடுகளில்கூட ஓரளவுக்குச் சிறப்பாக இயங்கும் கல்விமுறை என் இந்தியாவில் இப்படி ஆகிப்போயுள்ளது? இது நம்மை மிகவும் வருத்தமுறச் செய்யவேண்டும். இன்று பல குடும்பங்களில், உணவுச் செலவைவிடக்  கல்விக்கான செலவுதான் அதிகமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டால் மந்திர வித்தைபோல பிள்ளைகள் சிறப்பான கல்வியைக் கற்றுத் தேர்ந்து வாழ்வில் உயர்ந்துவிடுவார்கள் என்று பல கீழ்நடுத்தர மக்களும் ஏழை மக்களும் நினைக்கிறார்கள். இது உண்மையே அல்ல. இவர்கள் போகும் பல தனியார் பள்ளிகளிலும் மிகக் குறைவாகச் சம்பளம் வாங்கும் தரமற்ற ஆசிரியர்கள்தான் உள்ளனர். அவர்கள் சொல்லித்தரும் அரைகுறை ஆங்கிலக் கல்வி படுமோசமானதும்கூட.

***

ட்ரீஸ், சென் எடுத்துக்காட்டும் பிரச்னைகள் அனைத்தும் மிக முக்கியமானவை. ஆனால் அவர்கள் முன்வைக்கும் வழிமுறைகளை நான் ஏற்கவில்லை. உதாரணமாக எந்தவித ஆய்வும் இல்லாமல், கல்வியுரிமைச் சட்டம் கல்விப் பிரச்னைகள் பலவற்றையும் தீர்த்துவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் என் பார்வையில், கல்வியுரிமைச் சட்டம், ஏற்கெனவே பிரச்னைகள் நிரம்பியுள்ள ஒரு துறையில் பிரச்னைகளை அதிகப்படுத்தியுள்ளது.

ஒரு வாரத்துக்குப்பின், இதுகுறித்து விவரமாக எழுதுகிறேன்.

Thursday, August 08, 2013

சேது சமுத்திரத் திட்டம் பற்றி கே.ஆர்.ஏ.நரசய்யா

சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று என்று திமுக கட்சி வலுவாக முன்வைக்கிறது. அதற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்பும் உள்ளது. ஒரு தரப்பினர் சேதுவில் ராமர் கட்டிய பாலம் உள்ளது, அது சேது சமுத்திரத் திட்டத்தால் பாதிக்கப்படும் என்று சொல்பவர்கள். இன்னொரு தரப்பினர், இந்தத் திட்டத்தால் எதிர்பார்க்கப்படும் பொருளாதார நன்மைகள் கிடைக்காது என்பவர்கள். மூன்றாம் தரப்பினர், இதுபோன்ற திட்டங்களால் சூழல் பாதிக்கப்படும், மீனவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்பவர்கள்.

எனக்கு சேது சமுத்திரத் திட்டம் குறித்துத் தீர்மானமான கருத்து கிடையாது. அதன் தேவை குறித்துச் சொல்லப்படும் காரணங்கள்மீது இதுவரை அதிக நம்பிக்கை வந்ததில்லை. சற்றுமுன், நரசய்யா எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். நரசய்யா ஒரு மரைன் எஞ்சினியர். பல ஆண்டுகள் கப்பல்களில் பணியாற்றியுள்ளார். துறைமுக நிர்வாகத்தில் இருந்திருக்கிறார். (அவர் கடந்த இரு மாதங்கள் வழங்கிய சொற்பொழிவின் சுருக்கத்தை விரைவில் எழுத உள்ளேன். செங்கடலின் பெரிப்ளஸ் என்பவர் கிரேக்கத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த கடல் பயணம் பற்றியது முதலாவது சொற்பொழிவு. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியக் கப்பல்துறை எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது இரண்டாவது சொற்பொழிவு.)

சேது சமுத்திரத் திட்டம் பற்றி நரசய்யா முன்வைக்கும் கருத்துகளை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம்.

1. இந்தத் திட்டம் தமிழர்களின் கனவு என்று சொல்லவே முடியாது. எந்தத் தமிழரும் இதனை முன்வைக்கவில்லை. 1860 முதல் 1922 வரை பல்வேறு ஆங்கிலேயர்கள்தாம் இந்தத் திட்டத்தை முன்வைத்துள்ளனர்.

2. ஒரு கடற்பொறியாளராக, பல கப்பல்களில் உலகம் முழுதும் பயணம் செய்தவராக, NEERI அமைப்பு முன்வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் பலவும் செயல்படுத்த முடியாதவை என்று நரசய்யா கருதுகிறார்.

3. தூரம், காலம் ஆகியவற்றில் ஏற்படும் சேமிப்பு என்று திட்டத்தினர் சொல்வதை நரசய்யா மறுக்கிறார். மாற்றுக் கணக்கைக் காண்பிக்கிறார். மேலும் 30,000 டன் கப்பலைப் பொருத்தமட்டில், சேதுக் கால்வாயைப் பயன்படுத்தினால், செலவு அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார். (இதெல்லாம் எனக்கு முழுமையாகப் புரியாத விஷயங்கள்.)

இந்தக் காரணங்களால் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். விரும்புவோர் அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள். மேலே சுட்டி கொடுத்துள்ளேன்.

Wednesday, August 07, 2013

பத்தாவது பொதுத்தேர்வு தேவையா?

சமீபத்தில் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், சமச்சீர் கல்வியைப் பொருத்தமட்டில் இந்த ஆண்டு நடப்பதுதான் கடைசி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்றார். ஏற்கெனவே சிபிஎஸ்ஈ பத்தாம் ஆண்டு பொதுத்தேர்வை ஆப்ஷனலாக மாற்றிவிட்டது. விரும்புவோர் பொதுத்தேர்வை எழுதலாம். மீதம் உள்ளோர் பள்ளிக்கூடமே நடத்தும் தேர்வை எழுதலாம். பத்தாம் வகுப்புக்குப் பிறகு வேறு போர்டுக்கு மாற்றிக்கொள்ள விரும்புவோர் மட்டும் பொதுத்தேர்வு எழுதினால் போதும். அதே பாணியைத் தமிழகம் பின்பற்றப் போகிறது என்று வதந்திகள் கசிகின்றன.

சிபிஎஸ்ஈ, சமச்சீர் இரண்டுக்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. சிபிஎஸ்ஈ படிப்போர் கிட்டத்தட்ட அனைவருமே மேற்கொண்டு 11, 12 படித்து, அதற்குமேற்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள். தமிழ்நாட்டில் சிபிஎஸ்ஈ படிப்பில் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 99%-க்கும் மேல்.

ஆனால் சமச்சீர் பொதுத்தேர்வில் படிப்போர் பலதரப்பட்டவர்கள். இதில் பலர் பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட நினைப்பவர்கள். உடனே வேலை தேடிக்கொண்டு செல்ல விரும்புபவர்கள். அரசு வேலைகளின் அடிமட்டத்தில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். பாலிடெக்னிக்கில் சேர விரும்புவோர், பத்தாவது படித்திருந்தால் போதும். அதேபோலத்தான் ஐடிஐ படிப்பும். இப்போது பத்தாவது முடித்துவிட்டு ஓரிரு ஆண்டுகள் வேலை செய்தபின் பிரைவேட்டாக 12-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம் என்று முடிவெடுப்போர் பலர்.

இதற்கெல்லாம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடந்தால்தான் சரியாக இருக்கும். அதனை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவது சரியான செயலாகத் தெரியவில்லை.

மேலும் இதுபோன்ற முக்கியமான நிகழ்வுகள் குறித்துப் பொது விவாதம் ஒன்று தேவையல்லவா? அப்படி ஏதும் நடப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இது குறித்து ஏதோ தகவல் சென்றுள்ளது என்று தெரிகிறது. தமிழக கல்வித்துறையில் வேலை செய்வோர் யாராவது இதுகுறித்து விளக்கம் அளிக்க முடியுமா?

Tuesday, August 06, 2013

பொதுத்துறையின் பொறுப்புடைமை

சமீபகாலம்வரை பொதுத்துறையின் பொறுப்புடைமையை மீட்டெடுத்தல் குறித்துப் பேச யாருமே இல்லை. இடதுசாரி அரசியல்வாதிகள், இந்தப் பிரச்னையை ஏற்றுக்கொள்ளவே விரும்புவதில்லை. இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தமட்டில் அரசு ஊழியர்கள்தாம் அவர்களுடைய பெரும்பான்மைத் தொகுதியினர். அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்கு எதிரானவர்களாக இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுக்கின்றன. வலதுசாரி அரசியல்வாதிகளைப் பொருத்தமட்டில் பொதுத் துறை என்பதே ஒழித்துக்கட்டப்படவேண்டிய ஒன்று. எனவே கொஞ்சம் திறனின்மை, அதிகம் திறனின்மை என்று பிரித்துப் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. வலதுசாரிகளின் நோக்கம் பொதுத்துறையை முன்னேற்றுவது அல்ல; மாறாக அவற்றை ஒழித்துக்கட்டித் தனியார்மயமாக்குவது. இந்தக் காரணங்களால் விநோதமாக, பொதுத்துறையின் பொறுப்புடைமையைக் கண்டுகொள்ளாத வலது-இடது கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.

    - ழான் ட்ரீஸ், அமர்த்ய சென், An Uncertain Glory.
ட்ரீஸ், சென் புத்தகத்தில் பல சுவாரசியமான கருத்துகள் உள்ளன. நிறையப் புலம்பலும் உள்ளது. (பிசினஸ் ஸ்டாண்டர்ட் புத்தக விமரிசனத்தில் இந்தப் புத்தகமே ஒரு வேஸ்ட் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது நியாயமற்ற கருத்து.) நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிக்கவேண்டும். உங்களுக்கு சென்னிடம் மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட.

மேலே சொல்லப்பட்ட கருத்தை எடுத்துக்கொள்வோம். பொதுத்துறை ஊழல் நிரம்பியதாக இருக்கிறது. இங்கு பொதுத்துறை என்று ட்ரீஸ், சென் சொல்வது அரசு அலுவலகங்கள், பொதுத்துறை கம்பெனிகள் என இரண்டையும் சேர்த்து. அதாவது பொருள்கள் வாங்கும் ரேஷன் கடை, ஓட்டுனர் உரிமம் வாங்கும் ஆர்.டி.ஓ ஆபீஸ், நிலம் பதிவு செய்யும் ரிஜிஸ்திரார் ஆபீஸ், கரண்ட் பில் கட்டும் மின்சார வாரியம், போஸ்ட் ஆபீஸ், பி.எஸ்.என்.எல், சாதிச் சான்றிதழ் வாங்கும் அலுவலகம், பென்ஷன் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் - இப்படி எல்லாமே.

இங்கு பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட சேவையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த நேரத்துக்குள் அது நடப்பதில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் சேவைகளும் பொருள்களும் கிடைப்பதில்லை. ஏச்சு பேச்சுகளைக் கேட்கவேண்டியிருக்கிறது. இன்று போய் நாளை வா என்று துரத்தப்படுகிறார்கள். லஞ்சம் எதிர்பார்க்கப்படுகிறது. கொடுப்பவர்களுக்குக் காரியம் சுளுவாக நடைபெறுகிறது. கொடுக்காதவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் இடதுசாரிகள், அவர்களுடைய முக்கியத் தொகுதியான அரசு ஊழியர்களின் படுமோசமான நடத்தை பற்றி மட்டும் பேசுவதே இல்லை. போராடிப் போராடி ஃபைனான்ஸ் கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு, போனஸ், விடுமுறைச் சலுகை என்று எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் வாங்குகிற காசுக்கு வஞ்சகமில்லாமல் உழைக்கிறார்களா என்று பார்ப்பதில்லை; குறைந்தபட்சம் அப்படி உழைக்கவேண்டும் என்று குரல் கொடுப்பதுகூட இல்லை.

பொதுத்துறை ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளுக்குப் போகிறார்கள்? பொதுத்துறை மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் எல்லாம் பணிவுடனும் கனிவுடனும் பண்புடனும் நடந்துகொண்டால் யார் தனியார் மருத்துவமனைக்குப் போகப்போகிறார்கள்? அரசு அலுவலகங்களில் ஏன் எரிந்து விழுகிறார்கள்? ஏன் சில அசிங்க நிழல் ஆசாமிகள், ‘இங்க வாங்க சார், நான் முடிச்சுத் தரேன்’ என்று டீல் போட அனுமதிக்கப்படுகிறார்கள்?

இதைப் பற்றி ஒரு மதிய உணவின்போது பேசிக்கொண்டிருக்கையில் தோழர் மருதன், ‘எல்லாத் தொழிலாளர்/ஊழியர் சங்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கங்கள் கிடையாது; பல சங்கங்கள் பிற கட்சிகளுடையவை’ என்றார். எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும் குறை சொல்லக்கூடாது என்றார். நியாயமான கருத்து. ஆனாலும் தனியார்மயத்தைக் கடுமையாக எதிர்க்கும் தோழர்கள், ஏன் வலதுசாரிகள் தனியார்மயத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து, அதனைத் தணிக்க அரசு ஊழியத் தோழர்களை ஒழுங்காக உழைக்குமாறு கேட்டுக்கொள்வதில்லை? என் இதற்கென ஒரு பிரசாரத்தை ஆரம்பித்துத் தங்கள் செயல்பாட்டை முன்னெடுப்பதில்லை?

வலதுசாரிகளைப் பொருத்தமட்டில், அரசு ஊழியர்கள் எக்காலத்திலும் பணிவான, கனிவான சேவையைத் தர மாட்டார்கள் என்பதே கருத்து. (அதுதான் என் கருத்தும்கூட.) ஏனெனில் நியாயமாக நடந்துகொள்ளவேண்டிய உந்துதல் அவர்களுக்கு இல்லை. அவர்களை ஒழுங்காகக் கண்காணித்து நியாயமாக நடந்துகொள்ளும்படி வலியுறுத்தும் விருப்பம் ஆட்சிப் பதவியில் இருப்போருக்கு இல்லை. தவறுபவர்களைத் தண்டிக்கும் போக்கு கொஞ்சம்கூட இல்லை. தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் திராணி அரசிடம் இல்லாததற்குக் காரணம் தொழிற்சங்கங்களின் வலு. அதே நேரம், அரசியல் ஆதாயங்களுக்காக துர்கா சக்தி நாக்பால் போன்ற நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தூக்கிப் பந்தாட இந்த அரசியல்வாதிகள் தயங்குவதில்லை.

எனவே முடிந்தவரை மிகக் குறைந்த செயல்பாடுகள் மட்டுமே அரசிடம் இருக்கவேண்டும் என்கிறார்கள் வலதுசாரிகள்.
தனியார் மட்டும் என்ன ஒழுங்கா என்ற கேள்விக்கு என்ன பதில்? சட்டங்கள் வலுவாக இருக்கும்பட்சத்தில், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒழுங்காக இருக்கும்பட்சத்தில் தனியாரைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சந்தைப் போட்டியே நிறுவனம்-வாடிக்கையாளர் உறவில் ஒழுங்கான பண்பைப் பெருமளவு கொண்டுவந்திருக்கிறது. ஆனால் பொதுத்துறை ஊழியர்கள், தாம் வாங்கும் சம்பளத்துக்கு நியாயமாக, நேர்மையாக, பொதுமக்களை ஏமாற்றாமல், விரைவாக, செயலூக்கத்துடன் செயல் புரிவார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை.

ட்ரீஸும் சென்னும் பொதுத்துறையினர் சரியான அழுத்தம் கொடுத்தால் நியாயமாகப் பணி புரிவார்கள் என்று நம்புகிறார்கள். அதை நம்புவதற்குத் தேவையான சான்றுகளை அவர்கள் புத்தகத்தில் காட்டுவதில்லை. ஆம் ஆத்மி கட்சி, லோக்பாலுக்கான போராட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சிலவற்றைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் நம்பும்படியாக இல்லை.

கம்யூனிஸ்ட் தோழர்கள் கொஞ்சம் இந்தத் துறையில் கவனம் செலுத்தி பொதுத்துறையில் ஊழலை ஒழித்து செயல்திறனை ஊக்கப்படுத்தினால், நான் என் கருத்தைச் சற்றே மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

சாப்பாட்டுச் செலவு (மன்னிக்கவும்!)

இன்று படித்த ஒரு கட்டுரையில் சில முக்கியமான வரிகளை மொழிமாற்றிக் கீழே கொடுத்திருக்கிறேன். சுர்ஜித் பல்லாவின் மூலக் கட்டுரை இங்கே.
ஒரு நபரால் ஒரு நாளைக்கு 30 ரூபாயில்  பிழைக்க முடியுமா? (ஏழைமை குறித்த தகவல்கள் எடுக்கப்பட்ட NSS கணிப்பிலிருந்து) 2011-12 ஆண்டில் பல்வேறு வீடுகளில் உணவுக்கு ஆகும் செலவு குறித்த தகவல் இங்கே: கிராமப்புற இந்தியர்களில் மேல் 10% மக்கள் அடிப்படை உணவுக்கு நாள் ஒன்றுக்கு 30.50 ரூபாய் என்று செலவழிக்கிறார்கள். 20-லிருந்து 25 பெர்செண்டைலில் இருக்கும் சுமாரான ஏழை மக்கள் ஒரு நாளைக்கு வெறும் 12 ரூபாய்தான் உணவுக்கெனச் செலவழிக்கிறார்கள். இடைப்பட்ட மக்கள் இதைவிட நான்கு ரூபாய் அதிகம் (அதாவது ரூ. 16) செலவழிக்கிறார்கள். (அடிப்படை உணவுச் செலவு என்பது மொத்த உணவுச் செலவில் பானங்கள், பேக்கேஜ்ட் உணவு (சிப்ஸ் போன்றவை), உணவகங்களில் உண்ணும் உணவு ஆகியவற்றுக்கான செலவை விலக்கிக் கணிப்பது).

(கபில்) சிபால், ழான் ட்ரீஸ், (அமர்த்ய) சென், தொலைக்காட்சி நிருபர்கள், ஆங்கர்கள் ஆகியோர் வசிக்கும் பணக்கார நகரப் பகுதியிலும்கூட அடிப்படை உணவுக்கு ஓர் ஆளுக்கு ஒரு நாள் ஆகும் செலவு ரூ. 40. அதே அளவு உணவு கிராம விலையில் பார்த்தால் (22% குறைவு) ரூ. 33 என்று ஆகிறது. கிராமப்புற உயர்மட்டத்தவர் செய்யும் செலவும் கிட்டத்தட்ட இதேதான்.  ஏழைகள் ஏதோ ஜீவித்தபடி இருக்கிறார்கள். ஆனால் அவர்களையும் நகர உயர்மட்டத்தவரையும் பிரிப்பது உணவுக்கான செலவு அல்ல. எனவே ஏழைகளுக்கு விலையுயர்ந்த உணவு தரவேண்டும் என்று வெறுங்கனவு காண்பதால் ஏழைகளுக்கு எந்தவிதத்திலும் நன்மை இல்லை; ஏழைமைப் பிரச்னைக்கும் தீர்வு இல்லை.

தெலங்கானா விவகாரம்

கடந்த ஒரு வாரம் அவ்வப்போது தொலைக்காட்சி பார்த்ததில் தெலங்கானா விவகாரம் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை என்பதுதான் எனக்குப் புரிந்தது.

இந்த ஹைதராபாத் மட்டும் தெலங்கானாவின் நடு மத்தியில் இல்லாமல் சீமாந்திரப் பகுதியில் இருந்திருந்தால் பிற ஆந்திர சிங்கங்கள் ‘எங்களுக்குத் தேவை ஒன்றிணைந்த ஆந்திரம்தான்’ என்று சொல்லியிருக்க மாட்டார்கள். கடந்த மூன்று மாநிலப் பிரிவினையிலும் பிரிந்துபோன குட்டி மாநிலம் தனக்கென ஒரு நகரைத் தேர்ந்தெடுத்து அதனைத் தலைநகராக வளர்த்தெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இங்குதான் பிரிந்துபோகும் குட்டிப் பகுதிக்குள் இணைந்திருந்த மாநிலத்தின் பெரும் தலைநகரம் மாட்டிக்கொண்டிருக்கிறது. பிரச்னைக்கு ஒது ஒன்று மட்டும்தான் காரணம் என்று தோன்றுகிறது.

அப்படி ஒரு நகரின்மீது சாதாரண மக்களுக்கு அவ்வளவு தீவிர ஆர்வம் எல்லாம் இருக்க முடியாது. அந்நகரில் எக்கச்சக்க முதலீடுகளை சீமாந்திரர்கள் சிலர் செய்திருக்கிறார்கள் என்றால் அதில் என்ன பிரச்னை? தமிழர் தலைவர்கள் பெங்களூரிலும் ஹைதராபாதிலும் ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்வதில்லையா? இல்லை எல்லாமே ‘ஒருமாதிரியான’ அத்துமீறிய முதலீடுகளா?

இன்னொரு பக்கம், சந்திரசேகர ராவ் போன்ற கொக்கு மண்டையர்கள் மாநிலம் பிரிக்கப்பட்டதும் சீமாந்திர மக்களை வேலையை விட்டுத் துரத்திவிடுவோம் என்றெல்லாம் உளறுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதெல்லாம் சாத்தியமில்லை. எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் ஏற்கெனவே இருக்கும் அரசு வேலையை விட்டெல்லாம் தூக்க முடியாது. புதிதாக உருவாகும் காலியிடங்களுக்கு யாரை வேலைக்கு வைப்பது என்பதை வேண்டுமானால் இருப்பிட முகவரியை வைத்து முடிவு செய்யலாம். அதே நேரம் சீமாந்திர மக்கள் தெலங்கானாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் தெலங்கானா மாநிலத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதில் பிரச்னை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்.

இதைப் போன்ற அசிங்கமான சண்டை தமிழகத்தில் என்றுமே வராது என்று தோன்றுகிறது.

Thursday, August 01, 2013

இந்தியப் புவியியலின் வரலாறு

சில மாதங்களுக்குமுன் சென்னை சிட்டி செண்டர் லாண்ட்மார்க்கில் அமீஷ் திரிபாதி கலந்துகொண்ட ஒரு நிகழ்வு நடந்தது. அமீஷ் திரிபாதி, சிவா ட்ரைலாஜி என்று மூன்று கதைப் புத்தகங்களை எழுதியுள்ளார். இம்மூன்றும் விற்பனையில் பிரம்மாண்டச் சாதனை புரிந்துள்ளன. அடுத்த மூன்று புத்தகங்களின் இந்திய உரிமைக்காக மட்டுமே அவருக்கு முன்பணமாக ஐந்து கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வுக்கு இந்தப் புத்தகங்களின் வாசகியான என் மகளை அழைத்துச் சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சியோ அதில் அமீஷ் பேசியதோ அவ்வளவு முக்கியமல்ல. அவரிடம் கேட்கப்பட்ட பல அபத்தமான கேள்விகளுக்கிடையே, ‘நீங்கள் சமீபத்தில் ரசித்துப் படித்த புத்தகம் ஒன்றின் பெயரைச் சொல்லுங்கள்’ என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அவர் சொன்ன புத்தகத்தின் பெயர், சஞ்சீவ் சான்யால் எழுதிய The Land of the Seven Rivers: History of India's Geography.

இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயம் பற்றியும் கீழே.

(1) முதலில் இந்தியா என்ற நிலப்பரப்பு வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் எவ்வாறு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தது என்பதை ‘கண்ட நகர்வு’ என்ற கருத்தின்மூலம் விளக்குகிறார். அடுத்து இந்தியர்கள் என்ற இனம் எப்படி உருவாகியிருக்கும், அதன் மரபணுப் பின்புலம் என்ன என்பது குறித்து மிக லேசாக விளக்குகிறார். வர்ணம், சாதி முதலியவற்றைத் தொட்டுச் செல்லும் சான்யால், இவ்வாறு சொல்கிறார்:
In order to appreciate the messiness of the Jati system of castes, note the distribution of the R1a1 genetic haplogroup, the genes many Indians share with Eastern Europeans. Their distribution in India across region and caste is telling. It is present in high concentration among high-caste Brahmins of Bengal and Konkan as well as in Punjabi Khatris, but it also shows up in tribes such as the Chenchus of Andhra Pradesh. In other words, a Chenchu tribesman is closely related to an upper-caste Bengali ‘bhadralok’ and a blond Lithuanian. You never know where you will bump into relatives.
சாதி என்பது மிக மிகச் சமீபமானது, அதாவது இரண்டாயிரம் வருடத்துக்கும் குறைவான காலகட்டம் கொண்டது. புதிய கற்கால மனிதர்கள் தொடங்கி இந்திய நிலப்பகுதியில் மனித இனம் புழங்கிவந்துள்ளது. வட நிலப்பகுதி வழியாகவும் தென் கடல்பகுதி வழியாகவும் மனிதர்கள் இந்தியப் பகுதிக்கு வந்தவண்ணம் இருந்துள்ளனர். கலப்பு நிகழ்ந்துள்ளது. மொழி, பண்பாடு வளர, வளரத்தான் பல்வேறு பிரிவினைகள் தோன்றியுள்ளன. இன்று மரபணு ஆராய்ச்சிகளைக் கொண்டு எம்மாதிரியான கலாசார மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

(2) இரண்டாவது அத்தியாயம், சரசுவதி ஆற்று நாகரிகம் பற்றியது. சரசுவதி என்ற ஓர் ஆறு இமயமலையிலிருந்து தொடங்கி இன்றைய குஜராத்தின் கட்ச் பகுதியில் கடலில் கலந்தது. அதன் கரையில் தோன்றிய ஒரு நகர நாகரிகம், பின்னர் சரசுவதி ஆறு வற்ற வற்ற சிந்து நதியையும் கங்கை நதியையும் நோக்கி நகரத் தொடங்கியது.

சிந்துவெளி நாகரிகம் என்று அழைக்கப்படும் இந்த நாகரிகத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் சில இடங்களிலும் இந்தியாவின் பலப்பல இடங்களிலும் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மொகஞ்சதரோ, ஹரப்பா பெயர்களைத்தான் நாம் அதிகம் கேள்விப்பட்டுள்ளோம். லோத்தல், தோலாவிரா போன்ற நகரங்கள் இந்தியப் பகுதியில் உள்ளன. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பல மாநிலங்களிலும் (ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான்), பாகிஸ்தான் மாகாணங்களிலும், ஆஃப்கனிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லை வரையிலும்கூட இந்த நாகரிகத்தின் புதையுண்ட நகரங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நாகரிகம் பற்றிய மிக அருமையான ஒரு புத்தகம் - இதுவரை எழுதப்பட்டதிலேயே மிக எளிமையானதும் சிறந்ததும் - மிஷல் தனினோ எழுதியதுதான். கிழக்கு பதிப்பகத்திலிருந்து இதன் தமிழாக்கம் வந்துள்ளது. (சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு).

அடுத்து எழும் கேள்வி, வேதங்களை இயற்றியவர்கள் பற்றிய காலகட்டம்.

1. வேதங்கள் எங்கோ இயற்றப்பட்டு, இங்கே உள்ளேவந்த ‘ஆரியர்கள்’ கொண்டுவந்ததா?
2. வேதங்களை இயற்றியவர்கள்தாம் சரசுவதி நதிக்கரையில் வாழ்ந்த மக்களா?
3. சரசுவதி நதி நாகரிகம் அழிந்தபின், கங்கைக் கரைக்குக் குடிபெயர்ந்த மக்கள் உருவாக்கியவைதான் வேதங்களா?

உங்கள் சாய்வுகளைப் பொருத்து நீங்கள் இவற்றுக்கு எப்படி வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். தனினோவின் கருத்து இரண்டாவது.

சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்ற கருத்து பற்றி சான்யால் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் அதைத்தான் பலர் முன்வைக்கிறார்கள்.

(3) கங்கைக்கரை நாகரிகம், இதிகாச காலகட்டம். இந்தியா முழுதும் பல்வேறு முடியாட்சி நாடுகள் நிலவுகின்றன. இதன் இறுதிக்கட்டத்தில்தான் புத்தர் வருகிறார். அசோகர் வருகிறார். கல்வெட்டுகள் நாடு முழுதும் தோன்றுகின்றன. எழுத்து பிறக்கிறது.

ராமாயணத்தின் பாதை என்பது வடக்கு தெற்கானது என்கிறார் சான்யால். கங்கைக் கரையில் மத்திய இந்தியாவிலிருந்து தொடங்கி, தெற்கில் கன்யாகுமரி வரை செல்லும் வழி இது. மகாபாரத்தின் பாதை என்பது கிழக்கு-மேற்கு. ஆஃப்கனிஸ்தானத்திலிருந்து பஞ்சாப், கங்கைச் சமவெளி வழியாக வங்காளத்தின் கடற்கரை வரை செல்லும் பாதை. இதனை இந்திய வரைபடத்தில் குறித்து, ராமர் சென்ற பாதை என்ற ஒரு பாதையையும் குறித்துக் காட்டுகிறார்.

பின்னர் இதே ராமாயண, மகாபாரத்ப் பாதையைத்தான் ஷேர் ஷா சூரி, முகலாயர்கள், பிரிட்டிஷ்காரர்கள் ஆகியோர் விரிவாக்கிப் பராமரித்தனர். அதுதான் வாஜ்பாயியின் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் வரை தொடர்கிறது என்கிறார் சான்யால்.

இந்த அத்தியாயத்தின் பெரும்பகுதி ராமாயண, மகாபாரத இடங்களைக் குறித்தானது. அடுத்த பகுதி சிங்கம் பற்றியது.

சிங்கம் ஓர் ஆச்சரியம். உலகின் பல இலக்கியங்களில் பேசப்படுகிறது. சிங்கமே காணப்படாத நிலப்பகுதியின் இலக்கியங்களிலும் சிங்கம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. உதாரணமாக தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்களில் சிங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் சிங்கம் மருந்துக்கும் இல்லை; ஆனால் அங்கும் சிங்கம் பற்றி உயர்வாக வருகிறது. சிங்கம்தான் இலங்கையின் மகாவம்சத்தில் முக்கியமான பாத்திரம். (ஆனால் கிழக்கு இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, சிங்கம் எக்காலத்திலும் இருந்தது கிடையாது!)

சரி, இதற்கும் இந்தியப் புவியியலுக்கும் வரலாறுக்கும் என்ன உறவு? சமீபத்தில் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், ரோஜா முத்தையா நூலகத்தில் அளித்த சொற்பொழிவில் இன்று குஜராத்தில் மட்டும் இருக்கும் சிங்கத்தைப் பற்றிய நுண்ணிய, தெள்ளிய விவரணை சங்க இலக்கியத்தில் வருகிறது, ஆனால் வேதத்தில் காணப்படுவதே இல்லையே என்ற கேள்வியை எழுப்பினார். ரிக் வேதத்தில் சிங்கம் பற்றி ஒன்றும் இல்லை (அல்லது ஓரிரு இடங்களில் இருக்கலாம்). ஆனால் இதிகாச காலகட்டத்தில் சிங்கம் மிக உயர்வாகப் பேசப்படுகிறது. அப்படியானால் வேதம் சிங்கம் இல்லாத ஓரிடத்தில் உருவானதா? அல்லது வேத காலத்தில் சிங்கமே இந்தியாவில் இல்லாதிருந்து, பின்னர் வந்ததா? சங்க இலக்கியத்தை எழுதியவர்களுக்கு சிங்கம் மட்டுமல்ல, ஒட்டகம் குறித்துமான நுண்ணிய தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன? (இதைப்பற்றி மேற்கொண்டு எழுத இது சரியான இடமல்ல.)

அலெக்சாண்டர், சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர், அசோகர், அசோகரின் கல் தூண்கள், கட்டளைகள் என்ற பல்வற்றைத் தொட்டுச் செல்கிறார். அசோகர் நிறுவிய தூண்கள் அனைத்திலும் சிங்கத்தைச் சின்னமாக்கினார். அது இன்றைய சுதந்தர இந்தியாவின் சின்னமாக எதிரொலிக்கிறது. (இந்தமாதிரி அசோகர் என்ற ஒருவர் இருந்தார் என்பதும் அவர் தூண் தூணாக நிறுவி பலவற்றை எழுதிவைத்தார் என்பதும் இந்தியர்களிடமிருந்து காணமலே போனது. எழுத்தையும் ஒருவராலும் படிக்க முடியவில்லை. யார் இந்த எழுத்துகளைப் படித்தார், எப்படி அசோகர் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டார் என்பது பற்றி கோபுவின் அற்புதமான உரை இங்கே.)

(4) வணிகர்களின் காலம். இந்த அத்தியாயத்தில்தான் தமிழ்நாடு பேசப்படுகிறது. சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், கடல்வழி வாணிகம், செங்கடலின் பெரிப்ளஸ் (இதைப்பற்றி ஜூலையின் ஆரம்பத்தில் நரசய்யாவின் அற்புதமான உரை), இந்தியர்கள் வாணிபத்துக்கெனச் சென்ற இடங்கள், தென்கிழக்கு ஆசியாவின் இந்தியத் தொடர்புகள், இந்தியாவின் கப்பல்கள், இந்தியாவுக்கு வந்த புத்தத் துறவிகள், அவர்கள் எழுதிவைத்தவை, குப்தர்களின் காலம், அப்போது உருவான இலக்கியங்கள், சோழர்களின் கடற்படையெடுப்பு போன்றவற்றை இந்த அத்தியாயத்தில் காணலாம்.

(5) அந்நியப் படையெடுப்புகள். பத்தாம் நூற்றாண்டு தொடங்கி இந்தியாமீதான இஸ்லாமியப் படையெடுப்புகள். இவற்றை விளக்கும்வகையில் தில்லி என்ற நகரம் எப்படியெல்லாம் இந்தக் காலகட்டத்தில் மாற்றம் அடைந்தது என்பதை எடுத்துக்கொள்கிறார். இது மிகவும் சுவாரசியமாக உள்ளது. இப்ன் பதூதாவின் குறிப்புகள் பற்றிச் சொல்கிறார். இந்த அத்தியாயம் முகலாயர்கள் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதுவரை செல்கிறது.

(6) வரைபடங்களும் ஐரோப்பிய காலனி ஆதிக்கமும். போர்ச்சுக்கீசியர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை இந்தியா வருதல். அவர்கள் ஒவ்வொருவரும் வரைபடங்களை எப்படிக் கையாண்டனர் என்பது. விஜயநகரப் பேரரசு. முகலாயர்களின் இறுதிக் கட்டம். ராபர்ட் கிளைவ் சிராஜ் உத் தௌலாவைத் தோற்கடித்து, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அமைய வழிகோலுவது.

(7) ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கும் இந்தியாவில் முழுமையான வரைபடம் தயாரிக்கும் திட்டம். (இது சென்னையில்தான் தொடங்கியது!) வில்லியம் லாம்ப்டன் என்பவர் எவ்வாறு இந்தியாவின் பரப்பு முழுவதையும் முக்கோணங்களால் பரப்பி வரைபடத்தை உருவாக்க ஆரம்பித்தார் என்னும் கதை. அவர் பயன்படுத்திய கனமாக கருவியான தியோடோலைட். (அது எப்படி தஞ்சைப் பெரிய கோவில்மீது ஏற்றப்பட்டு கீழே விழுந்து உடைந்துபோனது; பின் அதனை அவர் எப்படிச் சரி செய்தார், எவ்வாறு இன்னொரு கருவியையும் இங்கிலாந்திலிருந்து வரவழைத்தார்...) லாம்ப்டனுக்கு அடுத்து இந்த வேலையைத் தொடர்ந்தவர்தான் ஜார்ஜ் எவரெஸ்ட். அவருடைய பெயரைத்தான் இமயமலையின் உயர்ந்த சிகரத்துக்கு வைத்துள்ளார்கள்.

இதே அத்தியாயத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வளர்ச்சி, இந்திய ரயில்வே உருவாவது, சிப்பாய் கலகம், கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வருவது, தில்லி மீண்டும் தலைநகர் ஆவது ஆகியவை வருகின்றன.

(8) இறுதியாக சுதந்தர இந்தியா, இந்தியப் பிரிவினை, சமஸ்தான இணைப்பு, மொழிவாரி மாகாணங்கள் பிரிப்பு, கோவா, பாண்டிச்சேரி போன்ற பகுதிகள் இணைப்பு, இந்திய-பாகிஸ்தான் போர்கள், இந்திய-சீனப் போர், பங்களாதேச உருவாக்கம் என்று இந்தியாவின் வரைபடம் சார்ந்த விஷயங்கள் பற்றிய கதைகள் வருகின்றன.

===

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். ஆனாலும் ஒருசேரப் படித்தது நன்றாக இருந்தது. ஆனால் புத்தகம் கொஞ்சம் ஃபோகஸ் இல்லாமல் தடுமாறியதாகவும் உணர்ந்தேன். அது எடுத்துக்கொண்டிருக்கும் பரப்பு மிகவும் விரிவானது என்பது ஒரு காரணம். அதன் எழுத்து முறைமை மற்றொரு காரணம். பொதுவாக சோழர்கள் அல்லது பல்லவர்கள் அல்லது குப்தர்கள் வரலாறு என்று எடுத்துக்கொண்டால், அதற்கு ஓர் ஆரம்பமும் ஒரு முடிவும் இருக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த சாம்ராஜ்ஜியத்தில் எல்லைகள் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும். அவற்றைத் தெளிவாக வரையறுக்க முடியும். போர்கள், நண்பர்கள், பகைவர்கள், உறவுகள் என்று அனைத்தையும் தெளிவாகச் சுட்டிக் காட்ட முடியும். கலை, எழுத்து, கட்டடங்கள் என்று அந்த நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் நடந்தவற்றை முழுமையாகச் சொல்ல முடியும். ஆதாரங்களாக, கல்வெட்டுகள், இலக்கியங்கள் ஆகியவற்றைச் சுட்ட முடியும். வரிசையாக வந்த அரசர்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுகளிலிருந்து கிடைத்துவிடும்.

எனவே படிக்கும்போது ஏதோ ஒருவிதத்தில் ஒரு முழுமை இருக்கும்.

ஆனால் சான்யாலின் புத்தகத்தில் இந்தியா என்ற ஒரு தெளிவற்ற பிரதேசத்துடன் ஆரம்பிக்கிறார். அதற்கு என்று காலத்திலும் தெளிவான எல்லை கிடையாது, நிலத்திலும் தெளிவான எல்லை கிடையாது. இந்த நிலப்பரப்பில் பலர் உள்ளே வருகிறார்கள், வெளியே போகிறார்கள். அவர்களைப் பற்றி முழுமையாகவும் சொல்ல முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. எல்லைப் பகுதிகள் மாறும்போது அனைத்தையும் தெளிவாகக் குறிப்பிடுவதும் சாத்தியமில்லை. இந்தியப் பரப்பில் இருந்த பல்வேறு நாடுகளை, அரச சாம்ராஜ்ஜியங்களை முழுமையாகச் சுட்டவும் முடியவில்லை. ஒரு சில நகரங்களைத்தான் பேச முடிகிறது, ஆனால் அதுவும் முழுமையாக இல்லை. (உதாரணம்: தில்லி. இதைப் பற்றி எழுதவேண்டும் என்றாலே பல தொகுதிகள் தேவைப்படும்.)

அதனால்தான் புத்தகத்தை சமீபத்தில்தான் படித்து முடித்தும் எனக்கு ஒரு வரியில் புத்தகத்தை விளக்குவது சிரமமாக இருக்கிறது. ஆனாலும் சுவாரசியம் குன்றாமல் எழுதப்பட்டுள்ள புத்தகம்.

Land of the Seven Rivers: A Brief History of India's Geography
Sanjeev Sanyal
Hardcover: 352 pages
Publisher: Penguin India (12 November 2012)
Language: English
ISBN-10: 0670086398
ISBN-13: 978-0670086399