Tuesday, September 24, 2013

பிரம்மகுப்தரின் நாற்கரம்

என் பெண்ணின் ஒன்பதாம் வகுப்புக் கணக்குப் புத்தகத்தில் ஒரு குட்டிச் செய்தி இருந்தது. ஒருவட்ட நாற்கரம் (Cyclic Quadrilateral) என்னும் வடிவத்தின் பரப்பளவைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பாட்டை பிரம்மகுப்தர் முதன்முதலில் கண்டுபிடித்திருந்தார் என்பதுதான் அது.
படம் - விக்கிபீடியாவிலிருந்து
ஒருவட்ட நாற்கரம் குறித்து என் பள்ளி வாழ்க்கையில் நான் படித்திருக்கவில்லை. அதன்பின் அதனை எதிர்கொள்ளவும் இல்லை. எனவே விக்கிபீடியாவில் இதனைப் பார்த்தேன்.

ஒருவட்ட நாற்கரம் என்றால் அந்த நாற்கரத்தின் ஒவ்வொரு முனையும் ஒரே வட்டம் ஒன்றில் அமர்ந்திருக்கும். ஒரே நேர்கோட்டில் இல்லாத மூன்று புள்ளிகள் இருந்தால், அவை அனைத்தின் வழியாகவும் செல்லக்கூடிய பிரத்யேக வட்டம் ஒன்றைக் கண்டுபிடிக்கலாம். இந்த மூன்று புள்ளிகளையும் கொண்டு நீங்கள் ஒரு முக்கோணம் வரைந்தால் அந்த முக்கோணம் அழகாக அந்த வட்டத்துக்குள் அடங்கியிருக்கும். அந்த வட்டம் Circumscribed Circle - சுற்றுத்தொடு வட்டம் எனப்படும்.

ஆனால் பொதுவான ஒரு நாற்கரத்தின் அனைத்து முனைகளையும் தொட்டுச் செல்லுமாறு ஒரு வட்டத்தை எப்போதும் வரைந்துவிட முடியாது. ஒருசில நாற்கரங்களில் மட்டுமே இது சாத்தியம். அவ்வாறான வட்டங்களுக்குள் சிக்கெனப் பொருந்திக்கொள்ளும் நாற்கரங்களே பிரம்மகுப்தரின் நாற்கரங்கள். அவற்றுக்குத்தான் பிரம்மகுப்தர் பரப்பளவைக் கண்டுபிடித்திருந்தார்.

இந்த பிரம்மகுப்தர் பொது யுகம் 598-ல் உஜ்ஜைனி நகரில் பிறந்தார். நீண்ட ஆயுளுடன் பொ.யு. 670 வரை உயிர் வாழ்ந்தார். கணிதம், வானியல் இரண்டுக்கும் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். அவை குறித்து எழுத இங்கே இடமில்லை.

ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் நீளமும் தெரிந்திருந்தால் அந்த முக்கோணத்தின் பரப்பு என்ன என்பதைக் கண்டுபிடிக்க ஹீரோவின் வாய்ப்பாடு (அல்லது ஹெரானின் வாய்ப்பாடு) என்ற ஒன்று உள்ளது. இது பொ.யு 60-ல் அலெக்சாண்ட்ரியாவின் ஹீரோ (அல்லது ஹெரான்) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னரேகூட இது பலருக்குத் தெரிந்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த வாய்ப்பாடு ஹீரோ (ஹெரான்) என்பவர் பெயரால்தான் அழைக்கப்பட்டுவருகிறது.

முக்கோணத்தின் மூன்று பக்கங்கள், a, b, c என்றால், அம்முக்கோணத்தின் பரப்பு

A = sqrt (s * (s-a) * (s-b) * (s-c))

இங்கே, s = (a+b+c)/2

பிரம்மகுப்தர் ஒருவட்ட நாற்கரத்தின் பரப்பாகச் சொன்னது இதேமாதிரியில் உள்ளது. ஒருவட்ட நாற்கரத்தின் நான்கு பக்கங்களும் a, b, c, d என்று வைத்துக்கொண்டால், அதன் பரப்பு

A = sqrt ((s-a)*(s-b)*(s-c)*(s-d))

இங்கே, s = (a+b+c+d)/2

ஆகா! முதல் வேலையாக, பேப்பர், பேனா கொண்டு இந்த வாய்ப்பாட்டைத் தருவிக்க முடியுமா என்று பார்த்தேன். முடிந்தது. ஹெரான் வாய்ப்பாடு மிக எளிதானது. ஒரிரு நிமிடங்களுக்குள் செய்துவிடலாம். (பித்தகோரஸ் தேற்றம் தெரிந்திருந்தால் போதும்.) ஆனால், பிரம்மகுப்தர் வாய்ப்பாட்டை நிரூபிக்க இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும். (செய்ய முடியாவிட்டால் கூகிளில் தேடிக் கண்டுபிடித்துவிடலாம்.)

பிரம்மகுப்தரின் நாற்கரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு பக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறிதாக்கி அந்தப் பக்கமே இல்லாமல் போகும்படிச் செய்துவிடுங்கள். அதாவது அடுத்தடுத்து இருக்கும் இரு முனைகளை இழுத்து ஒட்டவைத்துவிடுங்கள். அதாவது d=0. இப்போது பிரம்மகுப்தரின் வாய்ப்பாட்டிலிருந்து ஹெரானின் வாய்ப்பாடு தொப்பென்று விழுந்துவிடும். சரி, நாற்கரத்திலிருந்து முக்கோணம் (முக்கரம்) எளிது. ஐங்கரம், அறுகரம்... n-கரம்?

ஒருவட்ட n-கரத்தின் (பலகோணம் - பலகரம்) பரப்பைக் கண்டுபிடிக்க ஏதேனும் மேஜிக் வாய்ப்பாடு இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். இல்லை என்று தெரியவந்தது. ஒழுங்குப் பலகோணம் என்றால் அதன் பரப்பை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ஒழுங்கற்ற ஒன்று (அதன் ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு அளவு கொண்டவை) என்றால் பிரம்மகுப்தர் வாய்ப்பாடுபோல மேஜிக் வாய்ப்பாடு ஏதும் கிடையாது.

ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு யாரும் இதுகுறித்துப் பெரிதாக ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. 1990-களில் டேவிட் ராபின்ஸ் ஒருவட்ட ஐங்கரம், ஒருவட்ட அறுகரம் ஆகியவற்றின் பரப்பைக் கண்டுபிடித்தார். இதுகுறித்து இகோர் பாக் என்பவரின் ஆராய்ச்சித் தாள் இணையத்தில் கிடைக்கிறது.

இதைப் பிடித்துக்கொண்டு போனால் டேவிட் ராபின்ஸ் என்ற சுவாரசியமான மனிதரின் வாழ்க்கை குறித்த தகவல் கிடைக்கிறது. (இந்தச் செய்தியில் சைக்ளிக் பாலிகன் என்று சொல்ல விட்டுவிட்டார்கள். “Dr. Robbins came up with formulas for pentagons and hexagons that he published to little notice in 1994. He now wants to find the answer for a heptagon.” ராபின்ஸ் கண்டுபிடித்தது சைக்ளிக் பெண்டகன், சைக்ளிக் ஹெக்சகன் ஆகியவற்றின் பரப்பு குறித்த வாய்ப்பாடுகளை.)

ராபின்ஸ் கேன்சர் நோயால் அவதிப்பட்டார். 2003-ம் ஆண்டில் இறந்துபோனார். அவர் ஒருவட்ட ஐங்கரம், ஒருவட்ட அறுகரம் ஆகியவற்றின் பரப்புகளுக்குக் கொடுத்த வாய்ப்பாடுகள் எளிமையானவை அல்ல. ஒருவட்ட ஐங்கரத்தின் பரப்பைக் கண்டுபிடிக்க இங்கே செல்லுங்கள். ஒருவட்ட அறுகரத்தின் பரப்பு இங்கே. ஒருவட்ட எழுகரத்தின் பரப்பைக் கண்டுபிடிக்கும் முன்பாகவே ராபின்ஸ் இறந்துவிட்டார்.

ராபின்ஸ் ஒருவட்ட பலகரங்களின் பரப்பு குறித்து சில ஊகங்களை முன்வைத்தார். அவற்றில் சிலவற்றை இப்போது நிரூபித்துவிட்டார்கள். ஆனாலும் ஒருவட்டப் பலகரத்தின் பரப்பைத் தரக்கூடிய ஓர் எளிமையான வாய்ப்பாடு கண்டறியப்படவில்லை. நம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் யாரேனும் ஒருவேளை இதனைச் செய்து முடிக்கலாம்.

Thursday, September 19, 2013

பபாசி தேர்தல் - வேட்பாளர்கள் வாக்கு விவரம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றவர்கள், அவர்கள் பெற்ற வாக்குகள், வெற்றிபெற்றோர் (in bold).

தலைவர்

மீனாட்சி சோமசுந்தரம், மணிவாசகர் பதிப்பகம்    253
ஆர். எஸ். சண்முகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்    104
   
துணைத்தலைவர் - ஆங்கிலம்

வி. சங்கர நாராயணன், ஏரீஸ் புக்ஸ்    231
கே. சங்கர நாராயணன், ஐ.பி.எச் புக்ஸ் அண்ட் மேகசின்ஸ்    140
   
துணைத்தலைவர் - தமிழ்

சி. அமர்ஜோதி, பாரி நிலையம்    210
பி. மயில்வேலன், வனிதா பதிப்பகம்    140
   
செயலாளர்

கே.எஸ்.புகழேந்தி, சிக்ஸ்த் சென்ஸ்    231
அர. வேங்கடாசலம், அறிவாலயம்    87
சுப்பையா முத்துக்குமாரசாமி, சைவ சிந்த்தாந்த நூற்பதிப்புக் கழகம்    24
   
இணைச் செயலாளர்

டி.ராமானுஜம், டி.ஆர்.பப்ளிகேஷன்ஸ்    205
எஸ்.கே.முருகன், நாதம் கீதம்    154
   
பொருளாளர்

ஜி. ஒளிவண்ணன், எமரால்ட் பப்ளிஷர்ஸ்    247
வி.ராஜசேகரன், பிரியா நிலையம்    96
   
துணைச் செயலாளர்கள்
 
ஆர். ஆடம் சாக்ரடீஸ், ராஜ்மோகன் பதிப்பகம்    239
எச்.பி.அஷோக் குமார், மெட்ராஸ் புக் ஹவுஸ்    200

எஸ். சுரேஷ் குமார், நக்கீரன் பப்ளிஷர்ஸ்    135
எம். சாதிக் பாஷா, ஃபார்வர்ட் மார்க்கெட்டிங்    115
   
செயற்குழு உறுப்பினர் - ஆங்கிலம்   

எஸ். சுப்ரமணியன், டைகர் புக்ஸ்    237
சி. ஜனார்தனன், தமிழ்நாடு புக் ஹவுஸ்    218
ஜி. சிவகுமார், எஸ். சாந்த்    214
நந்த் கிஷோர், டெக்னோ புக் ஹவுஸ்    205
கே.ஏ.ராய்மோன், ஓரியண்ட் பிளாக்ஸ்வான்    201
ஸ்ரீ பாலாஜி லோகநாதன், எஸ்.பி.ஏ புக் பேலஸ்    176

எம். பாலாஜி, ஸ்ரீ பாலாஜி புக் செல்லர்ஸ்    157
எம். சிராஜுதீன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன்    118
ஆர். மாசிலாமணி, ராம்கா புக்ஸ்    113
கே. ஸ்ரீராம், ரூபா அண்ட் கோ    99
எம்.எஸ். கௌரி சங்கர், நியூ ஸ்டூடண்ட்ஸ் புக் ஹவுஸ்    23
   
செயற்குழு உறுப்பினர் - தமிழ்   

ஏ. கோமதிநாயகம், சங்கர் பதிப்பகம்    244
எம். பழனி, முல்லை பதிப்பகம்    242
பத்ரி சேஷாத்ரி, நியூ ஹொரைசன் மீடியா    235
டி. சௌந்தரராஜன், சந்தியா பப்ளிகேஷன்ஸ்    227
கே. அப்துல் ரகுமான், பொதிகை பதிப்பகம்    222
எஸ். சரவணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்    222

வி. முனுசாமி, சிவகுரு பதிப்பகம்    138
கே. சிதம்பரம், ஆனந்த நிலையம்    134
ஆர். தேவகி, நிவேதிதா பதிப்பகம்    134
பி. கதிரேசன், வள்ளுவர் பண்ணை    124
   
நிரந்தரப் புத்தகக் கண்காட்சி உறுப்பினர் - ஆங்கிலம்   

வி. ஸ்ரீதர், ஓம் சக்தி புக் ஹவுஸ்    242
எஸ். சுவாமிநாதன், சாம்ஸ் பப்ளிஷர்ஸ்    204

பி.எம். சிவகுமார், ஸ்ரீ சிவா புக்ஸ்    130
வி.டி.எஸ் ஸ்ரீனிவாசன், எவர்கிரீன் புக் ஹவுஸ்    104
   
நிரந்தரப் புத்தகக் கண்காட்சி உறுப்பினர் - தமிழ்   

ஜி. முத்துசாமி, கீதம் பப்ளிகேஷன்ஸ்    241
கே. பூபதி, தோழமை வெளியீடு    239

பி.எல்.முத்துக்கருப்பன், ஸ்ரீ செல்வ நிலையம்    121
ஜி. தங்கதாசன், கங்காராணி பதிப்பகம்    72

***

நன்றி.

Tuesday, September 17, 2013

பபாசி தேர்தல் - எங்கள் அணி

19  செப்டெம்பர் 2013 வியாழன் அன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகிறது. அத்தேர்தலில் கீழ்க்கண்டோர் போட்டியிடுகின்றோம். சங்க உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் வாக்குகளை எங்கள் அனைவருக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 

தலைவர்: மெ. மீனாட்சி சுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்)

துணைத்தலைவர் (தமிழ்): செ. அமர்ஜோதி (பாரி நிலையம்)

துணைத்தலைவர் (ஆங்கிலம்): வி. சங்கர நாராயணன் (ஏரீஸ் புக்ஸ்)

செயலாளர்: கே.எஸ்.புகழேந்தி (சிக்ஸ்த் சென்ஸ்)

இணைச் செயலாளர்: டி.ராமானுஜம் (டி.ஆர்.பப்ளிகேஷன்ஸ்)

பொருளாளர்: ஜி. ஒளிவண்ணன் (எமரால்ட் பப்ளிஷர்ஸ்)

துணைச் செயலாளர் (தமிழ்): ஆர். ஆடம் சாக்ரடீஸ் (ராஜ்மோகன் பதிப்பகம்)

துணைச் செயலாளர் (ஆங்கிலம்): எச்.பி.அஷோக் குமார் (மெட்ராஸ் புக் ஹவுஸ்)

செயற்குழு உறுப்பினர்கள் (தமிழ்): ஆ. கோமதிநாயகம் (சங்கர் பதிப்பகம்), மு. பழனி (முல்லை பதிப்பகம்), டி. சௌந்தரராஜன் (சந்தியா பதிப்பகம்), எஸ். சரவணன் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), கே. அப்துல் ரகுமான் (பொதிகை  பதிப்பகம்). இவர்களுடன்கூட நானும் - பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்).

செயற்குழு உறுப்பினர்கள் (ஆங்கிலம்): எஸ். சுப்ரமணியன் (டைகர் புக்ஸ்), ஜி. சிவகுமார் (எஸ். சாந்த்), கே.ஏ.ராய்மோன் (ஓரியண்ட் பிளாக்ஸ்வான்), சி. ஜனார்த்தனன் (தமிழ்நாடு புக் ஹவுஸ்), நந்தன் கிஷோர் (டெக்னோ புக் ஹவுஸ்), ஸ்ரீ பாலாஜி லோகநாதன் (எஸ்.பி.ஏ. புக் பேலஸ்)

நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்கள் (தமிழ்): ஜி. முத்துசாமி (கீதம் பப்ளிகேஷன்ஸ்), கே. பூபதி (தோழமை வெளியீடு)

நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்கள் (ஆங்கிலம்): வி. ஸ்ரீதர் (ஓம்சக்தி புக் ஹவுஸ்), எஸ். சுவாமிநாதன் (சாம்ஸ் பப்ளிஷர்ஸ்)

தேர்தலில் நிற்கிறேன்!

நாடாளுமன்றத் தேர்தல் அல்ல!

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தேர்தலில்தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பபாசி எனப்படும் தெ.பு.வி.ப.சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தல் செப்டெம்பர் 19-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

2009-ம் ஆண்டு நான் இந்தத் தேர்தலில் ‘செயற்குழு உறுப்பினர் - தமிழ்’ என்ற இடத்துக்கு நின்றேன். தோல்வி அடைந்தேன். மொத்தம் 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஆறு பேர் தமிழ்ப் பதிப்பாளர்கள் அல்லது புத்தக விற்பனையாளர்கள். ஆறு பேர் ஆங்கிலப் பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள். அப்போது எனக்கு பபாசி தேர்தல்கள் பற்றி முழுமையான புரிந்தல் இருந்திருக்கவில்லை. தேர்தல் என்று வந்தால் அணி திரண்டு நிற்பார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.

பபாசி தேர்தலில் சுமார் அறுநூற்று சொச்சம் உறுப்பினர்கள் வாக்களிக்கவேண்டும். ஒரு தலைவர், இரு துணைத்தலைவர்கள், ஒரு செயலர், ஓர் இணைச் செயலர், இரு துணைச் செயலர்கள், ஒரு பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள், 4 நிரந்தர புத்தகக் கண்காட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

2011-ல் தேர்தலில் மீண்டும் நிற்க விரும்பினேன். அப்போதுதான் நாங்கள் அலுவலகம் மாற்றிக்கொண்டிருந்தோம். எனவே தேர்தல் விண்ணப்பத்துக்கான காலம் முடிவடைந்த பின்னரே ஆண்டறிக்கை அஞ்சலும் தேர்தல் தேதியும் அங்கும் இங்கும் சுற்றி என் கைக்குக் கிடைத்தது.

இம்முறை தேர்தலில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன். உயிர்மை மனுஷ்யபுத்திரனுடன் ஒருமுறை பேசியிருந்தேன். நல்லோர் அடங்கிய ஓர் அணியைத் திரட்டி, பபாசிக்குப் புது ரத்தம் பாய்ச்சவேண்டும் என்று சொன்னார். ஆனால் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டு பலரையும் சந்தித்துத் திரட்டக்கூடிய அளவு என்னிடம் நேரம் இல்லை. மாறாக யாரேனும் என்னைத் தொடர்புகொண்டால் அந்த அணியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுடன் சேர்ந்து நிற்பது, அல்லது தனியாக ‘அடிமட்ட’ இடமான செயற்குழு-தமிழ் என்ற இடத்தில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன்.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தி தொடர்புகொண்டார். மணிவாசகர் பதிப்பகத்தின் மீனாட்சி சுந்தரம் தலைவர் பதவிக்கும் புகழேந்தி செயலர் பதவிக்கும் நிற்பதாகவும் அந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நான் நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் உடனே ஒப்புக்கொண்டேன். இவர்கள் இருவர்மீதும் எனக்கு மரியாதை உண்டு.

இந்தப் பதிவைக் காணும் பபாசி உறுப்பினர்கள், ஏற்கெனவே யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றால் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் போட்டியிடும் அணியில் வேறு யார் யார் உள்ளனர் என்பதை விவரமாக ஓரிரு மணிக்குள் பதிகிறேன்.

Friday, September 13, 2013

ஸ்லிப்

நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருக்கும்போது அதிகாலை எழுந்து பாடம் படிக்க ஒரேயொரு காரணம் மட்டுமே இருந்தது. ஆஸ்திரேலிய வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்க முடியும் என்பதுதான் அது. ஆஸ்திரேலியா யாருடன் விளையாடினாலும் அந்த ஆட்டங்களின் வர்ணனையைக் கேட்பது என் வழக்கம்.

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் அது. ஆட்டம் எங்கே நடந்தது என்ற ஞாபகமெல்லாம் இப்போது இல்லை. கார்ல் ராக்கமென் என்ற ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர். அவர் பந்து வீசும்போது தடுப்பாளர் வியூகத்தில் எழு ஸ்லிப் வைக்கப்பட்டுள்ளது என்றார் வர்ணனையாளர். இது எனக்குப் புரியவில்லை. எதற்கு ஒரு பந்துவீச்சாளருக்கு ஏழு ஸ்லிப் வேண்டும்? தொலைக்காட்சி பார்க்காத காலகட்டம் என்பதால் என்னால் ஆட்ட நிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் நேரில் பார்த்த எந்த ஆட்டத்திலும் (அதாவது நாகப்பட்டினம் அவுரித் திடல் அல்லது வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் அல்லது உப்பாற்றுத் திடல்) ஒரு ஸ்லிப்புக்கே வேலை இருக்காது. இந்தியா விளையாடும் ஆட்டங்களில் கபில் தேவ் பந்துவீசும்போது முதல் சில ஓவர்களில் அல்லது புதுப்பந்து எடுக்கும்போது மூன்று ஸ்லிப்புகள்வரை வைத்திருப்பார்கள். இப்படி விக்கெட்கீப்பர் பக்கத்தில் ஏழு பேர் நின்றால் மிச்சம் இரண்டு பேர்தான் பாக்கி. அவர்களில் ஒருவர் ஆஃப் சைடிலும் ஒருவர் ஆன் சைடிலும் முன்பக்கம் நிற்கிறார்கள் என்றால் ரன்களை எப்படித் தடுப்பது?

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியபின்னும் இந்தக் கேள்வி மண்டையைக் குடைந்துகொண்டே இருந்தது. உண்மையிலேயே ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு எத்தனை ஸ்லிப்புகள் வேண்டும்? வேகம் மட்டும்தான் இதனை முடிவு செய்கிறதா அல்லது பந்தின் ஸ்விங் இதில் சேர்த்தியா? சும்மா மட்டை பிடிப்பவரைப் பயமுறுத்த என்றே ஸ்லிப்புகளை அதிகப்படுத்துகிறார்களா? நான்கு ஸ்லிப், ஒரு கல்லி என்று ஃபீல்டிங் செட் அப் வைத்துவிட்டால், வீசுபவர் பயங்கர வேகத்தில் வீசப்போகிறார் என்று பேட்ஸ்மேன் பயந்து நடுங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கிறார்களா?

நான் கிரிக்கெட்டை உன்னித்துப் பார்க்கும் காலத்தில் இந்தியா நோஞ்சான் அணியாகவே இருந்தது. காவஸ்கர், கபில் தேவ் என்ற இருவர்தான் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்றும் பிறர் எல்லாம் 11 பேர் வேண்டுமே என்பதற்காக அணியில் இருக்கிறார்கள் என்றுமே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கிரிக்கெட்டைக் கவனிக்கத் தொடங்கி சீக்கிரமே விஸ்வநாத் ரிட்டயர் ஆகிவிட்டார். வெங்க்சர்க்கார் அப்போது பெரிய பெயர் பெற்றிருக்கவில்லை. இன்று இந்தியப் பொருளாதாரத்தைப் பார்க்கும்போது ஏற்படும் பயம்தான் அப்போது இந்திய கிரிக்கெட் அணியைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்டு வந்தது. அப்போது பெரும் வயிற்றெரிச்சலே பாகிஸ்தான் அணி மீதுதான். அதுவும் அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள்மீது. மாமிச உணவு, இஸ்லாம் தரும் முரட்டுத்தனம் என்றெல்லாம் ஏதேதோ கற்பனைகள் இருந்தன. அதுவும் மிகக் கடுப்பாவது அவர்கள் வியூகத்தில் இருக்கும் ஸ்லிப்புகளின் எண்ணிக்கை. ஸ்லிப்புகளின் எண்ணிக்கை ஏதோ ஒருவிதத்தில் ஆண்மையின் அடையாளம் என்பதாகவே எனக்குப் பட்டது.

அதனாலேயே கார்ல் ராக்கமென் ஏழு ஸ்லிப் வைத்து பாகிஸ்தானியர்களுக்கு எதிராகப் பந்து வீசி அவர்களைக் கதற அடித்தது உள்ளூர சந்தோஷமாக இருந்தது. அதையே ஓர் இந்தியப் பந்துவீச்சாளர் செய்திருந்தால் இன்னமும் அதிகமாக மகிழ்ந்திருப்பேன்.

கொஞ்சம் கிரிக்கெட் புரிய ஆரம்பித்தபின்னரும் ஸ்லிப் மீதிருந்த மோகம் போகவில்லை. இப்போதும் ஒரு டெஸ்ட் மேட்ச் ஆரம்பித்து முதல் ஓவரில், நான்கு அல்லது ஐந்து ஸ்லிப், ஒரு கல்லி, ஒரு பாயிண்ட், ஒரு கவர் என்று வைத்து சும்மா ஒப்புக்கு ஆன் சைடில் ஒரேயொரு மிட்விக்கெட் அல்லது மிட் ஆன் வைத்து, புத்தம் புது சிகப்புப் பந்துடன் வேகப் பந்துவீச்சாளர் ஓடிவந்து பந்துவீசும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படும். இந்த மைதானமே உன் முன்னால் இருக்கிறது; தெம்பு இருந்தால் காலை முன்னேயோ பின்னேயோ மாற்றி வைத்து நேராக அடித்துப் பார் என்று வேகப் பந்துவீச்சாளர் விடும் அறைகூவல் அது. என் வேகத்தையும், துல்லியத்தையும், பந்தின் வளைவையும் உன்னால் கணிக்கவே முடியாது; அப்படியே கணித்தாலும் அந்தப் பந்தை விட்டுவிடுவதுதான் உனக்கு நல்லது; ஏனெனில் தொட்டால் உன்னைக் கவ்வ ஆறு பேரை நியமித்திருக்கிறேன் என்கிற அகங்காரம் அது. மிஞ்சி மிஞ்சிப் போனால் உன் மட்டையின் விளிம்பைத் தொட்டு ஸ்லிப்பின் தலைக்குமேல் எகிறிச் சென்று நான்கு ரன்கள் கிடைக்கலாம்; ஆனால் உன்னைத் தவறு செய்ய வைத்துவிட்டேன் என்ற வெற்றியும் எனக்குத்தான் என்கிற கர்வம்.

இந்த மாதிரி எதிரணியினரை வெகுசில இந்தியப் பந்துவீச்சாளர்களே பயமுறுத்தியுள்ளனர். ஜவகல் ஸ்ரீநாத், கொஞ்சம் இஷாந்த் ஷர்மா. நம் வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் மிதவேகத்துக்குமேல் செல்வதில்லை. அப்படியே வேகமாக வீசுபவர்களையும் அணிப் பயிற்சியாளர் கீழே இறக்கிவிடுகிறார்போல.

சுழல்பந்தா, வேகப்பந்தா எது நமக்கு ஏற்றது என்ற பட்டிமன்றங்களையெல்லாம் நாம் இப்போது தாண்டி வந்துவிட்டோம். அனைத்திலும் ஒரு சமச்சீர் வேண்டும் என்பதை நன்கு அறிந்துவைத்துள்ளோம். அதற்கு ஏற்றாற்போல இன்று பல வேகப்பந்து வீச்சாளர்கள் கண்ணுக்குத் தென்படுகின்றனர்.

இன்றும் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவர் வீசுவதை ஆர்வத்துடன் பார்க்க முனைகிறேன். குறைந்தபட்சம் கிரிக்கின்ஃபோவிலாவது வர்ணனையைப் படித்துவிடுகிறேன். ஐந்து ஸ்லிப், ஒரு கல்லி, மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசும் அந்தப் பந்துவீச்சாளருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

Wednesday, September 11, 2013

மதுரத்வனி: மகாகவி பாரதி நினைவு



நாள்: 11-09-2013
நிகழ்வு: மகாகவி பாரதி நினைவு
நேரம்: 5.30 மணி. பாரதி இசை

கல்கத்தா சகோதிரிகள்  திருமதி  சித்ரா & திருமதி கலா
திருமதி நீலா ஜெயகுமார்  வயலின்
திரு வி.ஆர். ஜெயகுமார்  மிருதங்கம்

நேரம்: 6.45 மணி: சிறப்புச் சொற்பொழிவு

“பாரதி என்னும் மகாகவி”
திருப்பூர் கிருஷ்ணன்

நிகழ்விடம்: ஆர்கே கன்வென்சன் சென்டர்,146, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை

இந்நிகழ்ச்சியை  நேரடியாக இணையத்தில் காண  http://www.arkayconventioncenter.in/live.aspx

அனைவரும் வருக