முரளியின் 'தூஸ்ரா', ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் அரசியல்
பத்ரி சேஷாத்ரி, 22 ஏப்ரல் 2004
தமிழோவியம்
இன்னமும் இரண்டு மாதங்களுக்கு இந்திய கிரிக்கெட் பற்றிப் பேச வேண்டியதில்லை! ஆனால் கிரிக்கெட் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பொழுது இலங்கை அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது.

போன மாதம் வரை ஆஸ்திரேலிய அணி இலங்கையில் ஒருநாள், டெஸ்டு போட்டிகள் விளையாடியது. டெஸ்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு 3-0 என்ற கணக்கில் வெற்றி கிடைத்தது. இந்தப் போட்டிகளில்தான் லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் போதை மருந்து விவகாரத்திற்குப் பின்னதாக முதலாவதாக விளையாடினார். தொடரின் நாயகன் விருதையும் பெற்றார். இலங்கையின் முத்தையா முரளிதரனும் நிறைய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் பிராட் என்னும் மேட்ச் ரெஃபரீ முரளியின் 'தூஸ்ரா' என்று செல்லப்பெயரிடப்பட்ட பந்து 'எறியப்படுவது' போல் உள்ளது என்றும் அதனை சர்வதேச கிரிக்கெட் வாரியமும் (ஐசிசி), இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமும் கண்காணிக்க வேண்டும் என்றார்.

இந்தப் பிரச்சினை பற்றி உங்களில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். முரளிதரன் வலதுகை ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர். சுழற்பந்து வீசும்போது இருவகைகளில் பந்து வீசலாம் - ஒன்று விரலால் சுழற்சியைக் கொடுப்பது (finger spin). இது வலக்கை மட்டையாளருக்கு வலது கையால் ஆஃப் ஸ்பின் (off spin) வீசுவது, அல்லது இடது கையால் லெக் ஸ்பின் (இதைச் சாதாரணமாக slow left arm orthodox - SLA - என்று குறிப்பிடுவது வழக்கம்) வீசுவது. பந்துக்கு சுழற்சியை வழங்க விரல்களால் பந்தைப் இறுக்கிப் பிடித்து, விரல்களை கட்டை விரலிலிருந்து சுண்டு விரலை நோக்கிச் சுழற்றுவதன் மூலம் பந்திற்குச் சுழற்சியைக் கொடுப்பது. மற்றொரு முறை மணிக்கட்டு மூலம் சுழற்சியைக் கொடுப்பது (wrist spin). இந்த வகையில், பந்தை விரல்களால் பிடித்து, மணிக்கட்டை சுண்டு விரலிலிருந்து கட்டை விரலை நோக்கிச் சுழற்றுவதன் மூலம் பந்திற்கு சுழற்சியை அளிப்பது. வலது கை மட்டையாளருக்கு வலது கை மூலம் லெக் ஸ்பின் (leg spin) வீசுவது, அல்லது இடது கை மூலம் ஆஃப் ஸ்பின்னாக வீசுவது (இதை சைனாமேன் - chinaman என்று சொல்வோம்).

முரளிதரன் சற்றே வித்தியாசமான பந்து வீச்சாளர். இவர் வலது கையால் மணிக்கட்டின் மூலம் ஆஃப் ஸ்பின் வீசுபவர். என்ன? குழப்பமாக இருக்கிறதா? பந்தை கீழ் நோக்கிப் பிடிக்காமல் மேல் நோக்கிப் பிடித்து வலது மணிக்கட்டை சுண்டுவிரலிலிருந்து கட்டை விரல் நோக்கி சுழற்றுங்கள். பந்து ஆஃப் ஸ்பின் ஆகும். சாதாரணமாக 'நல்ல கை' உள்ள மனிதரால் கிரிக்கெட் விதிகளின் படி இம்மாதிரி பந்து வீச முடியாது. அவ்வாறு வீசினால் அது chucking - அதாவது கையை தோள்பட்டையிலிருந்து ஒரே சுழற்சியில் வீசாமல், கையை நிறுத்தி வீசி எறிவது என்றாகும். அவ்வாறு பந்தை வீசுவது தடை செய்யப்பட்ட ஒன்று. இதுவரை இரு ஆஸ்திரேலிய நடுவர்கள் முரளிதரன் பந்தை 'எறிகிறார்' என்று குற்றம் சாட்டி அவரை சர்வதேசப் போட்டிகளில் பந்து வீச முடியாமல் செய்திருந்தனர். அதனை அடுத்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் பிரம்மப் பிரயத்னம் செய்து, முரளிதரனின் கை மற்றவர்கள் கையை விட வித்தியாசமானது, சற்றே வளைந்தது என்றெல்லாம் பயோ மெக்கானிக்ஸைக் காட்டி, அவரது பந்து வீச்சு விதிமுறைக்குட்பட்டதே என்று ஒருவாராக ஐசிசியை ஒத்துக்கொள்ளச் செய்து விட்டனர். அவ்வப்போது பிஷன் சிங் பேடி போன்றோர் மட்டும் விடாது முரளிதரனைக் கிண்டல் செய்து ("ஜாவெலின் த்ரோ செய்ய வேண்டியவர் பந்து வீச வந்து விட்டார்") வந்தாலும், முரளியும் பந்து வீசுகிறார், விக்கெட்டுகளை சாய்க்கிறார்.

சரி, இந்த தூஸ்ரா என்றால் என்ன? ஹிந்து/உருதுவில் 'இரண்டாவது' என்று பொருள். இது பாகிஸ்தானிலிருந்து வெளியான சொல். பாகிஸ்தானின் ஆஃப் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் இந்த பந்தை முதலில் சர்வதேச அரங்கில் போட ஆரம்பித்தார். இந்தப் பந்து லெக் ஸ்பின்னரின் கூக்ளிக்கு ஒப்பாகும். ஆஃப் ஸ்பின்னர் ஒருவர் கிட்டத்தட்ட தான் எப்பொழுதும் பந்து வீசும் அதே தோரணையில் பந்தை நேராகவோ அல்லது வலதுகை மட்டையாளருக்கு வெளியே போகுமாறோ வீசுவது. எப்பொழுதும் வீசும் வெளியிலிருந்து உள்ளே வருமாறு போடப்படும் பந்து - முதலாவது. அப்படியில்லாமல் மட்டையாளரை ஏமாற்றக் கூடிய 'மற்றுமொரு', அல்லது 'இரண்டாவது' பந்து உள்ளே வராமல் வெளியே போவது. கிறிஸ் பிராட் முரளி இப்படி வீசும் பந்து விதிக்குப் புறம்பானது போல் தோன்றுகிறது என்று சொல்லி விட்டார். உடனே முரளிதரனின் உடலில் ஈசிஜி எடுப்பது போல அங்கங்கே பல எலெக்டிரோடுகளைப் பொருத்தி, அவரைப் பந்து வீசச் செய்து 3D படங்களை உருவாக்கி, கணினியில் மாடலிங் செய்து ஒரு கலக்கு கலக்கி எல்லியட் என்பார் ஒரு அறிக்கையையும் கொடுத்து விட்டார். அதன்படி ஐசிசி இப்பொழுது முரளி தனது தூஸ்ராவை இப்பொழுதைக்குப் போடக்கூடாது என்றும், மீறி ஆட்டத்தில் அப்பந்தை வீசினால் அவரை ஒரு வருடத்திற்கு விளையாட முடியாமல் செய்து விடுவோம் என்றும் சொல்லியுள்ளனர். அதாவது முரளிதரன் ஆட்டங்களில் விளையாடலாம். முதல்வகைப் பந்தை வீசலாம். தூஸ்ரா மட்டும் கூடாது.

இதற்கிடையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கிறிஸ் பிராட் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் ஒன்று சேர்ந்து 'தண்ணியடித்தார்'. அதனால் அவர்கள் சொற்படி, வேண்டுமென்றே முரளியை 'போட்டுத்தள்ளிவிட்டார்' என்றெல்லாம் புகார் கொடுக்க, கடுப்பான ஐசிசி இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஓர் அடிப்படையும் இல்லை என்று சொல்லி விட்டது. இனி வரும் நாட்களில் இந்த விவகாரத்தில் நமக்கு மெல்ல நிறையவே அவல் கிடைக்கும்.

இதற்கிடையில் ஜிம்பாப்வேயில் நடக்கு கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. ஜிம்பாப்வேயை ஆளும் ராபர்ட் முகாபே கறுப்பினத்தவர். அந்த நாட்டின் பெரும்பான்மையினர் கறுப்பினத்தவர். ஆனால் காலனியாதிக்க நாட்களிலிருந்தே பெரும்பான்மை நிலங்கள், சிறுபான்மை வெள்ளையரிடையே இருந்து வந்தது. முகாபேயின் கட்சியினர், பல குண்டர்களுடனும், அரசின் காவல் துறையின் உதவியோடும் வெள்ளையரின் நிலங்களைக் கையகப்படுத்தியும் முகாபேயின் எதிர்ப்பாளர்களை கறுப்பு/வெள்ளை என்று இனம் பிரிக்காமல் தாக்கியும் வருகின்றனர். ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் அணியில் பெரும்பான்மையாக இருந்தது வெள்ளையர்களே. பல வெள்ளையர்கள் அந்நாட்டின் அரசியலை வெறுத்து கிரிக்கெட்டிலிருந்து சன்யாசம் வாங்கிக் கொண்டு வெளிநாடு சென்று விட்டனர். ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியமும் கொஞ்சம் கொஞ்சமாக அணித் தேர்வில் பாரபட்சம் காட்டி வந்திருக்கிறது. இந்நிலையில், ஜிம்பாப்வேயின் அணித்தலைவராக இருந்த ஹீத் ஸ்டிரீக் (வெள்ளையர்) ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தனது சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாவிட்டால் தான் அணியை விட்டு வெளியேறுவேன் என்று அறிவிக்க, 'சரி, போய்த் தொலை' என்று வாரியம் சொல்லிவிட்டு, 19 வயதான தாதேந்த தாய்பு (கறுப்பர்) என்பவரை அணித்தலைவராக நியமித்தது. இவர் அணியின் விக்கெட் கீப்பருமாவார். இதனை எதிர்த்தும், ஹீத் ஸ்டிரீக்கை மீண்டும் நியமிக்கவும் கோரி, அணியின் அத்தனை வெள்ளைக்கார வீரர்களும் ஒட்டுமொத்தமாக விலக, ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் சற்றும் அதிராமல் தன் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் கறுப்பர்களால் அணியை நிரப்பியது.

இப்பொழுது இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இதுவரை நடந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வேக்கு தோல்வி. இப்பொழுதுள்ள ஜிம்பாப்வே அணியை பங்களாதேஷ் கூட எளிதாகத் தோற்கடித்து விடும்!

இதுவரை இப்படி இனப்பிரச்சினைக்காக ஒரு நாட்டின் அணி முழுமையாக மாற்றப்பட்டதில்லை. பணப்பிரச்சினையால் ஆஸ்திரேலியாவில் இம்மாதிரி ஒருமுறை நடந்துள்ளது (கெர்ரி பேக்கர்). இலங்கைக்கு அடுத்து ஜிம்பாப்வேக்கு பயணம் செல்லவிருப்பது ஆஸ்திரேலியா. இப்பொழுதே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிலர் ஜிம்பாப்வே போகமாட்டேன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து ஜிம்பாப்வே செல்ல இருப்பது இங்கிலாந்து. ஜிம்பாப்வேயின் எல்லாப் பிரச்சினைக்கும் காரணமே இங்கிலாந்து (பிரிட்டன்) தான். ஏன், உலகின் முக்கால்வாசிப் பிரச்சினைகளுக்குக் காரணமே பிரிட்டனின் காலனியாதிக்கம்தானே? இங்கிலாந்து வெகு நாட்களாக பிகு பண்ணிக்கொண்டே ஜிம்பாப்வே போகவே மாட்டேன் என்று சொல்லி வந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் ஒருவழியாக ஜிம்பாப்வே போக ஒத்துக் கொண்டது. ஆனால் அதற்குள் இந்தப் பிரச்சினை. இது ஜிம்பாப்வேக்கு சிறிதும் நல்லதில்லை.


எண்ணங்கள் வலைப்பதிவு