டாடா குழுமத்தின் தகவல் தொடர்பு, மென்பொருள் நிறுவனங்கள்
பத்ரி சேஷாத்ரி, 25 ஆகஸ்டு 2004
சமாச்சார்.காம்
புதன் - 25 ஆகஸ்ட் 2004 - டாடா குழுமத்தின் ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சிஸ் சர்வீசஸ் (டி.சி.எஸ்) பங்குகள் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைக்கின்றன.

டாடா குழுமம் தகவல் தொடர்புத் துறையிலும், மென்பொருள் நிரலி எழுதுவது (software), ஐடி புறவூற்றுத் துறையிலும் (IT outsourcing) பல நிறுவனங்களைக் கையில் வைத்துள்ளது. தொலைபேசி, இணையம் வரிசையில் டாடா டெலிசர்வீசஸ் என்னும் பங்குச்சந்தையில் பட்டியலிடாத நிறுவனம் CDMA வழியாக வயர்லெஸ் தொலைபேசி இணைப்புகளையும், கம்பி வழித் தொலைபேசி இணைப்புகளையும் இந்தியா முழுமையிலும் அளிக்கிறது. டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்டிரா) என்னும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் இதே சேவையை மஹாராஷ்டிரா மாநிலத்தில் வழங்குகிறது. இதைத் தவிர ஐடியா செல்லுலார் என்னும் GSM வழியிலான செல்பேசி நிறுவனத்தில் முக்கியப் பங்குதாரராகவும் உள்ளது டாடா குழுமம். இந்திய அரசு வி.எஸ்.என்.எல் என்னும் தொலைதொடர்பு நிறுவனத்தின் பங்குகளை விற்றபோது அதனையும் டாடா குழுமம் வாங்கி, இப்பொழுது அந்த நிறுவனத்தையும் தன் கைக்குள் கொண்டுவந்து விட்டது. வி.எஸ்.என்.எல் நிறுவனமும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம்தான். வி.எஸ்.என்.எல் வெளிநாட்டுக்கான தொலைபேசி இணைப்புகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம். இந்தியாவின் முதன்மை இணைய நிறுவனமும் கூட. சில மாதங்களுக்கு முன்னர் வி.எஸ்.என்.எல் டிஷ்நெட் டி.எஸ்.எல் எனப்படும் இணைய நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது.

இதைத்தவிர டாடா பவர் போன்ற மின்சாரம் உற்பத்தி, விநியோகம் செய்யும் நிறுவனத்தின் கையிலும் பிராட்பேண்ட் வசதியுள்ள optic fibre cable கள் உள்ளன.

ஆக, டாடா குழுமத்தின் பிடியில் பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் உள்ளன. இப்படி பல்வேறுபட்ட தொழில்நுட்பங்களைக் கையில் வைத்திருப்பதில் பல பாதகங்களும் உள்ளன.

இதைப்போலவே இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிரலி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இதுநாள் வரை பங்குச்சந்தைக்கே வராமல் டாடா சன்ஸ் கையில் இருந்து வந்தது. பங்குச்சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, சத்யம் கம்பியூட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களையெல்லாம் விட டி.சி.எஸ் நிறுவனத்தின் விற்பனையும், நிகர லாபமும் அதிகம். இப்பொழுது இந்தியா முழுவதும் ஆவலோடு எதிர்பார்க்கும் டி.சி.எஸ் நிறுவனத்தின் IPO முடிந்து, அந்தப் பங்குகள் புதனன்று சந்தைக்கு வருகின்றன. ரூ. 1 மதிப்புள்ள ஒவ்வொரு பங்கும் IPO சம்யத்தில் ரூ. 850க்கு விலை போனது. ஆனால் சந்தைக்கு வந்த முதல் சில நாள்களில் இந்தப் பங்கின் மதிப்பு ரூ. 1,200 வரை போகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. டி.சி.எஸ் நிறுவனத்தின் 2002-03 வருடத்தைய மொத்த வருமானம் ரூ. 5,007.6 கோடிகள். அதாவது US$ 1 பில்லியனுக்கு மேல். இப்படி மென்பொருள் துறையில் 1 பில்லியன் டாலரைத் தாண்டிய முதல் நிறுவனம் டி.சி.எஸ் தான். இதைத் தொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ இருவருமே தாங்களும் 2003-04 இல் 1 பில்லியன் டாலரைத் தாண்டி விட்டோம் என்று அறிவித்துள்ளனர். [டாலர் மதிப்பும் இந்திய ரூபாய்களைப் பொருத்தவரை குறைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.] டி.சி.எஸ் அடைந்த நிகர லாபம் (வரிகளுக்குப் பிறகு) 2002-03இல் ரூ. 1,176 கோடிகள்.

எப்படி தொலைதொடர்புத் துறையில் பல நிறுவனங்களில் டாடா கையை வைத்துள்ளதோ, அதுபோலவே நிரலித்துறையிலும். இந்திய அரசு சி.எம்.சி என்னும் நிறுவனத்தின் பங்குகளை விற்க வந்தபோது அதை வாங்கியது டாடாதான். அதைத் தவிர பல்வேறு மென்பொருள் தொடர்பான துறையில் உள்ள டாடா கம்பெனிகள்:- டாடா இன்போடெக், டாடா எல்க்ஸி ஆகியவை.

சில நாள்களுக்கு முன்புதான் டெலிகாம் துறைக்குத் தேவையான மென்பொருள்கள் எழுதும் டாடா டெலிகாம் என்னும் நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை டாடா, அவயா என்னும் தன் கூட்டாளியிடமே விற்றுவிட்டது. அவயா நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம்.

இதற்குப் பிறகும் டாடா கையில் நிரலித்துறையில் ஈடுபடும் நான்கு நிறுவனங்கள் இருக்கும். அவையாவும் பங்குச்சந்தையில் வேறு இருக்கும். இவற்றில் டி.சி.எஸ் தான் மிகப்பெரியது. இதனால் மற்ற மூன்று கம்பெனிகளின் - சி.எம்.சி, டாடா இன்போடெக், டாடா எல்க்ஸி - பங்குகளும் இப்பொழுது சரசரவென ஏற ஆரம்பித்து விட்டன. கூடிய விரைவில் இந்த நான்கு கம்பெனிகளும் ஒன்றாக இணைக்கப்படலாம் (merger) என பங்குச்சந்தை வர்த்தகர்கள் எண்ணுவதே இதற்குக் காரணம்.

உண்மையில், இந்த நான்கு கம்பெனிகளும் இணைந்தால் விளைவு இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம். ஏற்கனவே மென்பொருள் துறையில் இந்திய நிறுவனங்கள் பெறக்கூடிய வருவாய் அடுத்த சில வருடங்களில் கிட்டத்தட்ட ஐந்துமடங்குக்கு மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நேரத்தில் பெரிய நிறுவனமான டி.சி.எஸ் இன்னமும் தன் லாபத்தை வெகுவாக அதிகரிக்கும்.

டி.சி.எஸ் நிறுவனத்தின் நிர்வாகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று பேசப்படுகிறது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமதுரை இந்தத்துறையில் உள்ள அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.

வரும் வருடங்களில் டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய மூன்று நிறுவனங்களின் போக்கையும், பங்குச்சந்தையில் பங்குகள் எவ்வாறு நகர்கின்றன என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

டாடாவின் மென்பொருள் நிறுவனங்கள் சக்கைப்போடு போட்டாலும், தொலை தொடர்புத் துறையில் அவர்களது பார்வை குழம்பியதாகவும் தொலைநோக்கற்றதாகவும் தோன்றுகிறது. மேலும் டாடா நிறுவனங்களோடு கடுமையாகப் போட்டி போட ரிலையன்ஸ், பார்தி ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

முதலில் டாடா குழுமம் தன் உள்குழப்பங்களைத் தெளிவு படுத்த வேண்டும். ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் இப்பொழுது டாடா, ஏ.வி.பிர்லா குழுமங்களும், அமெரிக்காவின் சிங்குலார் என்னும் நிறுவனமும் பங்குகளை வைத்துள்ளன. இன்சூரன்ஸ் கம்பெனி AIGயும் மிகக் குறைந்த அளவில் சில பங்குகளை வைத்துள்ளது. சிங்குலார் வைத்திருக்கும் பங்குகளை மலேசியாவின் டெலிகாம் மலேசியா மற்றும் சிங்கப்பூரின் ST டெலிமீடியா ஆகிய நிறுவனங்கள் வாங்க முடிவு செய்துள்ளன. ஐடியாவும் பங்குச்சந்தைக்கு வரத் தீர்மானித்துள்ளது. டாடா நிறுவனம் முதலில் ஐடியாவிலிருந்து விலகி தன் பங்குகளை விற்றுவிட வேண்டும். ஏனெனில் ஐடியாவும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனமும் ஒன்றுக்கொன்று போட்டி போடும் நிறுவனங்கள். டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் முழுமையாக டாடா கையில் உள்ளது. எனவே அதை விரிவுபடுத்துவதுதான் டாடாவுக்கு நல்லது. அத்துடன் வி.எஸ்.என்.எல் பற்றிய சரியான சிந்தனையும் வேண்டும். வி.எஸ்.என்.எல் டாடா கைக்கு வரும்போதே அதன் வருமானமும், லாபமும் வெகுவாகக் குறைய ஆரம்பித்து விட்டன. அதுநாள் வரை தனிக்காட்டு ராஜாவாக இஷ்டத்துக்கு விலை வைத்து வெளிநாட்டுக்கான தொலைபேசிச்சேவையை அளித்து வந்த வி.எஸ்.என்.எல் போட்டி வந்ததும் விலையை வெகுவாகக் குறைக்க வேண்டியதாயிற்று. அதனால் இப்பொழுது வி.எஸ்.என்.எல் இணையம், அகலப்பாட்டை என்று தன் பார்வையைச் செலுத்தத் தொடங்கியுள்ளது.

அதன் விளைவுதான் டிஷ்நெட் டி.எஸ்.எல் லை விலைக்கு வாங்கியிருப்பது. வி.எஸ்.என்.எல் கையில் நிறையப் பணம் உள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டுமானால் முதலில் வி.எஸ்.என்.எல்லில் அரசு மீதம் வைத்திருக்கும் பங்குகளை வாங்கி மத்திய அரசை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் வி.எஸ்.என்.எல் நிறுவனத்தை டாடா டெலிசர்வீசஸ், டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்டிரா) ஆகியவற்றுடன் இணைத்து ஒரு பெரிய நிறுவனமாக்க வேண்டும். ஐடியா பங்குகளை விற்று வரும் பணத்தையும் இந்த மெகா நிறுவனத்தில் முதலீடு செய்து இந்தியாவின் மிகப்பெரிய தொலைபேசி, இணைய நிறுவனத்தை டாடா குழுமத்தால் உருவாக்க முடியும்.

மேலும் டி.சி.எஸ் நிறுவனத்தின் IPO மூலம் கிடைத்த பணத்தில் பெரும்பங்கு டாடா சன்ஸ் கைக்குத்தான் போய்ச்சேருகிறது. இந்தப் பணத்தில் பெரும்பங்கு டாடாவின் தொலைபேசி, இணைய நிறுவனங்களின் விரிவாக்கல் திட்டத்திற்குத்தான் போகப்போகிறது என எல்லோரும் சொல்கின்றனர்.

ஆக இப்பொழுதைக்கு இந்தியாவில் அதிவேகமாக வளரும் இரு துறைகளிலும் - மென்பொருள் துறை, தொலபேசித் துறை - டாடா குழுமம் மிக முன்னணியில் இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. சிறு முதலீட்டாளர்களும் இந்த முன்னேற்றத்தில் பங்குபெற்று, பயன்பெற வாய்ப்புமுள்ளது.


எண்ணங்கள் வலைப்பதிவு