என்னைப் பற்றி ஓர் அவசர அறிமுகம்
பத்ரி சேஷாத்ரி, 31 ஜனவரி 2005
1970இல் பிறந்தேன். நாகப்பட்டிணத்தில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பு வரை படித்தேன். முதலில் தென்னிந்தியத் திருச்சபை நடுநிலைப் பள்ளியில் ஐந்தாவது வரை (தமிழ்மொழியில் கல்வி) படித்தேன். அடுத்து தேசிய மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாவது வரை (ஆங்கில மொழியில் கல்வி) படித்தேன். ஐஐடி சென்னையில் இயந்திரப் பொறியியல் துறையில் (mechanical engineering) இளநிலைப் பட்டம் பெற்றேன். அதன்பின் கார்னல் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சி செய்தேன்.

1980களில் தொடங்கி அமெரிக்காவில் உள்ள இந்திய, பாகிஸ்தானிய, பிரிட்டன் மக்களிடையே கிரிக்கெட் தகவல்கள் பெற ஆர்வம் இருந்தது. அப்பொழுது பரவலாக இணையம் கிடையாது என்பதை நினைத்துப் பார்க்கவும். 1990களின் தொடக்கத்தில் பல்வேறு இணையப் பரிசோதனைகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. IRC, Mailserver, Gopher போன்ற சேவைகள் வழியாக கிரிக்கெட் தகவல்கள் பரிமாறப்பட்டன. பல்வேறு தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து இதைச் செயல்படுத்தினர். 1993-ல் சைமன் கிங் என்பவர் முயற்சியால் கிரிக்கின்ஃபோ என்ற IRC bot உருவானது. இது பின்னர் பலரது முயற்சியால் Gopher database ஆனது. அப்பொழுது நானும் பிற தன்னார்வத் தொண்டர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விவரங்களை இந்தத் தரவுத்தளத்தில் சேர்க்கத் தொடங்கினேன்.

1994ல் இருந்து world wide web என்னும் சேவை வழியாக கிரிக்கின்ஃபோ பல்லாயிரக்கணக்கானோரைச் சென்றடைந்தது. 1996இல் சைமன் கிங்கும், நானும் சேர்ந்து கிரிக்கின்ஃபோவை இங்கிலாந்தில் ஒரு கம்பெனியாக நிறுவினோம். 1996 செப்டெம்பரில் சென்னை திரும்பியதிலிருந்து நான் கிரிக்கின்ஃபோவில் தொடர்ந்து வேலை செய்து வருகிறேன். கிரிக்கின்ஃபோவும் விஸ்டன் என்னும் நிறுவனத்தின் இணையக் கிளையும் ஒன்றிணைந்து பெப்ரவரி 2003-ல் விஸ்டன் கிரிக்கின்ஃபோ என்னும் நிறுவனத்தை உருவாக்கின. நான் இந்த நிறுவனத்தின் இந்தியக் கிளைக்கு நிர்வாக இயக்குனராக இருக்கிறேன்.

பிப்ரவரி 2003-ல் வலைப்பதிவுகள் (blogs) என்றால் என்ன என்பதை அறிந்ததும், தமிழில் இவற்றைச் செய்யமுடியுமா என்று முயற்சி செய்தேன். அதன் தொடர்ச்சியாக அப்பொழுதிலிருந்து தமிழில் வலைப்பதிவு ஒன்றை பராமரித்து வருகிறேன். அப்பொழுதிலிருந்தே தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் நிறையத் தொடர்பு ஏற்பட்டது. நிறைய தமிழ்ப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். ராயர் காபி கிளப் என்ற யாஹூ குழுமம் பற்றித் தெரிந்து கொண்டேன். அங்கு உரையாடும்போது தமிழ்ப் பதிப்புத்துறை பற்றியும் நிறையத் தெரிந்து கொண்டேன்.

பல்வேறு ஊடகங்களின் வழியாக அறிவு, தகவல், கேளிக்கை ஆகியவற்றைப் பரப்புவதன்மீது அதிக நாட்டம் சில காலமாகவே ஏற்பட்டிருந்தது. புத்தகங்கள் அச்சிடுவதன் மூலம் பரவலாக்கப்பட்ட அறிவும், நுண்கலைகளும், பின்னர் வானொலி, தொலைக்காட்சிகள் வழியாக வெகுவேகமாகப் பரவி, இப்பொழுது இணையத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இந்தத் துறையில் ஈடுபடுவது பிடித்தமானதால் பிப்ரவரி 2004-ல் New Horizon Media Private Limited என்னும் நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். இந்நிறுவனம் வழியாக 'கிழக்கு பதிப்பகம்' என்ற பெயரில் தமிழில் அச்சுப் புத்தகங்கள் வெளியிடுகிறோம். நாளடைவில் பல்வேறு துறைகளிலும் தரமான புத்தகங்கள் வழங்குவதுடன், குரல் புத்தகங்கள், குறுந்தகடுகள், இணையக் களஞ்சியம் ஆகியவற்றையும் அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரித்து வழங்குவது எங்கள் குறிக்கோள்.

காமதேனு.காம் என்னும் தளம் வழியாக தமிழ்ப் புத்தகங்களை இணையம் வழியாக விற்பனை செய்யும் பிரிவும் மேற்படி நிறுவனத்தின் ஓர் அங்கம்.

தற்போதைய வாசம் சென்னையில், மனைவியுடனும், ஒரு மகளுடனும்.

--*--

எண்ணங்கள் வலைப்பதிவு