இந்தியக் கிரிக்கெட் அணித் தேர்வில் லஞ்சமும், ஊழலுமா?
பத்ரி சேஷாத்ரி, 23 ¿ÅõÀர் 2003
(தமிழோவியம் மின்னிதழில் வெளியானது)
18 நவம்பர் 2003 அன்று இந்திய அணித் தேர்வாளர்கள் இருவர் - கிரன் மோரே, பிரனாப் ராய் - மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிஜித் கலே என்பவர் தன்னை ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுத்தால் ஆளுக்குத் தலா ரூ. பத்து லட்சம் லஞ்சம் கொடுப்பதாகச் சொன்னார் என்று இந்தியக் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்தனர். 20 நவம்பர் அன்று இந்த விஷயம் வெளியே கசிந்தது. இந்த விஷயம் முதலில் வெளியே வந்தபோது இந்திய-ஏ அணிக்குத் தேர்ந்தெடுத்தால் லஞ்சம் கொடுப்பதாகச் சொன்னார் என்று வந்தது. இது நம்புவதற்குக் கடினமாக இருந்தது. பின்னர், மோரேயும் ராயும் எழுத்தில் புகாரை உறுதி செய்த போது இது இந்திய அணிக்குத் தேர்வு செய்வதற்கு என்று தெரிய வந்தது.

இந்தியக் கிரிக்கெட் சந்திக்கும் இரண்டாவது பெரிய சங்கடம் இது. முதலாவதாக கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் ஆட்டத்தின் முடிவுகளை முன்னதாகவே நிர்ணயிக்கும் மேட்ச்-பிக்ஸிங் விவகாரம் பெரிதாக வளர்ந்து அதன் பின்னணியில் இந்தியாவின் அப்பொழுதைய முன்னணி ஆட்டக்காரர்களான அணித்தலைவர் மொஹம்மத் அசாருதீன், அஜய் ஜாடேஜா ஆகிய இருவரையும் இந்தியக் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாடத் தடை செய்தது. இப்பொழுது ஜாடேஜா மீண்டும் ரஞ்சிக் கோப்பை விளையாட ஆரம்பித்து விட்டார். அது தனிக் கதை.

அபிஜித் கலே மீதான குற்றச்சாட்டு வெளிவந்த அடுத்த நாள் (21 நவம்பர்) இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் தால்மியா கலே மீது விசாரணை முடியுமுன்னர் அவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் இந்தியக் கிரிக்கெட் வாரியம் நடத்தும் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது என்று தடை அறிவித்தார். இந்திய பார் கவுன்சிலின் தலைவர் BV சுப்பாராவ் தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு அபிஜித் கலேயை விசாரணை செய்து பதினைந்து நாட்களுக்குள் தீர்ப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மஹாராஷ்டிரக் கிரிக்கெட் குழுமமும் கலே மீது விசாரணை நடத்த ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இந்த விவகாரம் பற்றிப் புரிந்து கொள்ள நிறைய இதுவரை வெளியே பரவலாகத் தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

1. இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் டெஸ்டு மற்றும் ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்தியக் கிரிக்கெட் அணியில் பதினைந்து வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் ஆட்டம் நடக்கும் நாள் அன்று இந்தப் பதினைந்து பேரில் எந்தப் பதினொருவர் விளையாடுவர் என்று அணித்தலைவரும், பயிற்சியாளரும் முடிவு செய்வார். ஆனால் இந்தப் பதினைந்து பேருக்கும் ஒரு டெஸ்டு போட்டியில் விளையாட சம்பளமாக ரூ. 1.25 லட்சம் கிடைக்கிறது. ஒருநாள் சர்வதேசப் போட்டி என்றால் ரூ. 1 லட்சம் சம்பளம்.

வீட்டில் நடக்கும் டெஸ்டு அல்லது ஒருநாள் போட்டித் தொடராக இருந்தால் ஒவ்வொரு டெஸ்டு போட்டிக்கும் இந்தப் பதினைந்து ஆட்களை மாற்றிக் கொண்டே இருக்கலாம். ஆனால் வெளி நாட்டில் நடக்கும் தொடர்களுக்கு முன்னதாகவே முடிவு செய்து பதினைந்து அல்லது பதினாறு வீரர்களை அனுப்புவது வழக்கம். இப்படி ஒரு வெளிநாட்டுப் பயணம் செல்லும் வீரர் ஒரு ஆட்டத்திலும் விளையாடாமல், அத்தனை ஆட்டத்திலும் விளையாடுபவர் பெரும் அதே சம்பளத்தைப் பெறலாம். அதைத் தவிர போக, வர, தங்குமிடத்திற்கான செலவுகள் கிரிக்கெட் வாரியத்துடையது. சாப்பாடு, சலவை செலவிற்காக என்று தினக்கூலியும் உண்டு. அதிலும் மிச்சம் பிடிக்கலாம்.

இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளிலெல்லாம் இம்மாதிரியான நிலை கிடையாது. ஒரு ஆட்டக்காரரின் திறமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறு வேறு தொகை சம்பளமாக அளிக்கப்படுகிறது.

2. இந்திய அணிக்கான தேர்வுக் குழு (selection committe) என்பது மற்ற கிரிக்கெட் வாரிய வேலைகளைப் போல கௌரவ வேலை. அதாவது தேர்வுக் குழு உறுப்பினராகவோ, தலைவராகவோ இருப்பதற்கு ஒரு பைசா சம்பளம் கிடையாது. போக வரச் செலவு, மற்றும் தேர்வில் உட்காருவதற்கு என்று ஒரு நாளைக்கு இத்தனை என்று சிறிய அளவில் பணம் கிடைக்கும். (கிட்டத்தட்ட ரூ. 5,000 என்று நினைக்கிறேன்).

இந்தத் தேர்வுக்குழுவுக்கு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? அதுவும் தேர்வு முறையிலும், கோட்டா முறையிலும். இந்தியாவை ஐந்து பகுதிகளாகப் பிரித்து - வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மையம் - ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் தேர்வு முறையில் அரசியல் தலைவிரித்தாடும். ஒரு காசு கூடப் பார்க்க முடியாத இந்த உறுப்பினர் பதவிக்கு இதுவரை கிரிக்கெட் ஆடியவர்களைத்தான் கொண்டுவருகிறார்கள், ஆனாலும், இந்தப் 'பதவிக்கு' அவ்வளவு போட்டி! ஏன்?

ஒவ்வொரு பகுதியின் உறுப்பினரும் தன் பகுதி ஆட்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதை முன்வைப்பார்களே தவிர ஒரு திறமையான, ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்கக் கூடிய அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இரண்டாம் பட்சம்தான். கடந்த இரண்டு வருடங்களாக நிலைமை ஓரளவுக்குத் தேவலாம் - இப்பொழுதெல்லாம் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தேர்வுக்குழு செய்யும் குழப்படிகளை வெளியே கொண்டுவந்து பேசிச் சண்டை போட ஊடகங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

இனி ஊழல், லஞ்சம் ஆகியவை ஏன் நடைபெறுகிறது என்று உங்களுக்கே தெரிந்து விடும்.

ஆஸ்திரேலியா போய் ஒரு மேட்ச் கூட விளையாடாத ஒருவர் கிட்டத்தட்ட ரூ. 20 லட்சம் சம்பாதித்து விட முடியும். அதற்காக ஒருவர் அந்த மொத்தப் பணத்தையும் லஞ்சமாகக் கொடுப்பாரா என்பது சந்தேகம்தான்! ஆனால் நிச்சயமாக அதில் பாதியை லஞ்சம் கொடுக்கப் பலர் தயாராக இருக்கலாம். தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேரில் மூன்று பேர் ஒரு ஆசாமியைத் தேர்வு செய்ய நிச்சயித்தால் போதும், உள்ளே வந்து விடலாமே? தேர்வுக் குழு உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்க இது ஒரு வழியாகவும் அமைகிறது.

இந்த விவகாரத்தில் யார் மீது தவறு? அபிஜித் கலே வில்லனா, இல்லை கிரன் மோரேயும், பிரனாப் ராயும் பொய் சொல்கிறார்களா என்பது விசாரணையில் தெரிய வரலாம், வராமலும் போகலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் வரலாம், வரும். எப்படி இதிலிருந்து இந்தியக் கிரிக்கெட்டைக் காப்பாற்றுவது?

1. ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தகுதி, அனுபவம், மற்றும் அவர் எடுக்கும் ஓட்டங்கள், விக்கெட்டுகள் ஆகியவற்றை வைத்துத்தான் சம்பளம் என்று தீர்மானிக்க வேண்டும். இப்படித்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளில் நடக்கிறது.

2. அணியில் இடம்பெற்று ஆட்டத்தில் இடம் பெறாத வீரருக்குக் கொடுக்கப்படும் பணம் மிகக் குறைவானதாகவே இருக்க வேண்டும். விளையாடுபவருக்கு ரூ. 1.25 லட்சம் என்றால், வெளியே தண்ணீர் எடுத்துக் கொண்டு வருபவருக்கு அதில் 10% மட்டும்தான் இருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் இந்த வீரர் ஒரு வருடத்திற்கு அணியில் இருக்கிறார் என்றால் அதற்கான வருட ஊதியத் தொகை என்ன நிச்சயிக்கப்படுகிறதோ அதுவாக இருக்கலாம்.

3. தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் ஒரே பகுதியில் இருந்து வந்தாலும் (உதாரணத்திற்கு அனைவரும் வடக்கு இந்தியாவிலிருந்து) பரவாயில்லை. அவர்கள் அனைவருக்கும் வருட ஊதியம் நிச்சயிக்கப்பட வேண்டும். அந்த ஊதியமும் அவர்கள் ஆற்றும் பணிக்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

4. தேர்வுக்குழு யாரையெல்லாம் இந்திய அணிக்கு விளையாடத் தகுதி பெற்றவர்கள் என்று பட்டியலிடுவதோடு மட்டுமல்லாமல் என்ன காரணத்தால் அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், என்ன காரணத்தால் மற்றவர்கள் விடுபட்டார்கள் என்பதை விளக்குவது கட்டாயம்.

இப்பொழுதிருக்கும் நிலையில் இந்த லஞ்சப் புகார்கள் ஏன் இதற்கு முன்னாலேயே வெளியே வரவில்லை என்பதுதான் அதிசயம்.

--*--

எண்ணங்கள் வலைப்பதிவு