வலையில் விழலாம் வாங்க!
பத்ரி சேஷாத்ரி, 15 ¿ÅõÀர் 2003
(இலக்கியப்பீடம், நவம்பர் 2003 இதழில் வெளிவந்த கட்டுரை)
தமிழ்ப் பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள், இணையத்தில் வெளிவரும் விவாதக்குழுக்கள், மற்றும் இதழ்கள் ஆகியவற்றை அறிந்துகொண்டு அதிலும் எழுதிப் பயன்பெறலாமே என்ற நோக்குடன் எழுதப்படும் கட்டுரை இது.

இணையம் என்றால் என்ன?

இண்டெர்நெட் என்பதன் தமிழாக்கம்தான் இணையம் என்பது. இணையம் கணினிகளையெல்லாம் ஒருங்கிணைத்த ஒரு பெரிய பின்னல் போன்றது. இணையத்தில் இணைக்கப்பட்ட ஒரு கணினியினால் (கம்ப்யூட்டர்) மற்ற கணினிகளோடு தொடர்பு கொள்ள முடியும். அந்தக் கணினியைப் பயன்படுத்தும் பயனர் மற்றவர்களுடன் எழுத்துத் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்; புகைப் படங்களை பரிமாறிக் கொள்ள முடியும்; வாய்க்குரல் மூலம் பேசிக் கொள்ளவும் முடியும்; ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே அசையும் படத்தோடு பேசவும் கேட்கவும் முடியும்.

கணினியைப் பல்லூடகக் கருவி (மல்டி-மீடியா டிவைஸ்) என்பர். இதில் எழுத்து, அசையாப் படம், ஒலி, அசையும் படத்துடன் கூடிய ஒலி என்று பலவற்றைப் பரிமாறிக் கொள்ளலாம். பலகாலமாக அச்சு ஊடகத்தில் பல்சுவை இதழ்கள் எழுத்து, கோட்டோ வியம், அசையாப் படங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வந்து கொண்டிருக்கின்றன. இவ்விதழ்கள் அச்சிட்ட தாள்கள் மூலம் உங்களை வந்தடைகிறது. இதைப்போன்றே கணினி மூலம் இதழ்களைத் தயாரித்து, இணையம் மூலம் உலகம் முழுதும் பரவியிருக்கும் தமிழர்கள் படிக்குமாறு செய்யலாம்.

இணையத்தை எப்படிப் பெறுவது?

தமிழகத்தில் இணையத்தில் சேர உங்களுக்குத் தேவை ஒரு புதுக் கணினி, ஏதேனும் நிறுவனம் வழங்கும் இணைய இணைப்புச்சேவை ஆகியவையே. புதுக் கணினி இப்பொழுது ரூ. 18,000 இலிருந்து கிடைக்கிறது. வலுவான கணினியாக வாங்கினால் ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை ஆகலாம். இணைய இணைப்பு வழங்க தொலைதொடர்பு நிறுவனமான பீ.எஸ்.என்.எல், சிஃபி, டிஷ்நெட், வீ.எஸ்.என்.எல் என்று பல நிறுவனங்கள் உள்ளன. இதற்குக் கணினியோடு மோடம் என்னும் கருவியும் தேவைப்படும். இந்த மோடம் தொலைபேசி வயரோடு இணைக்கப்பட்டிருக்கும். இவ்வகை இணைய இணைப்புக்குப் பெயர் டயலப் இணைப்பாகும். ரிலையன்ஸ் செல்பேசி அல்லது வயர்லெஸ் தொலைபேசி மூலமும் இணைய இணைப்பைப் பெறலாம். இந்த வயர்லெஸ் மூலமான இணைய இணைப்பிற்கு மோடம் தேவையில்லை.

சொந்தத்தில் கணினி வாங்கியேதான் ஆக வேண்டும் என்பதில்லை. தமிழகம் முழுதும் சைபர் கஃபே என்று சொல்லப்படும் கணினி மையங்கள் ஆங்காங்கே தோன்றியுள்ளன. சின்னச் சின்ன கிராமங்களில் கூட இப்பொழுது இணைய இணைப்புடன் கூடிய கணினிகள் முளைக்க ஆரம்பித்து விட்டன. இடத்தைப் பொறுத்து, ஒரு மணி நேரம் பயன்படுத்த ரூ 20-30 ஆகலாம்.

சரி, கணினியும், இணையமும் கிடைத்து விட்டது, அடுத்து என்ன?

முதலில் அறிந்து கொள்ள வேண்டியது இணைய-உலாவி, வலை-உலாவி என்றெல்லாம் பெயரிடப்பட்ட Internet Browser. இந்த உலாவி மூலமாகத்தான் இணைய தளங்களைப் (வெப்சைட்) பார்க்க முடியும். இந்த உலாவி மென்பொருள் எல்லா புதுக் கணினியிலும் (கணினி மையங்களிலும் கூட) இருக்கும். இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் என்ற உலாவி மென்பொருள்தான் கிட்டத்தட்ட எல்லாக் கணினியிலும் இருக்கும். இந்த உலாவியில் இணையத்தளங்களின் முகவரியை (சுட்டி என்றும் ஆங்கிலத்தில் யூ.ஆர்.எல் என்றும் சொல்வர்) உள்ளிட்டால் அந்த இடத்துக்கு உலாவி உங்களை அழைத்துச் செல்லும்.

இணைய தளம் என்பதை ஒரு புத்தகம் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தப் புத்தகத்தின் முகப்புப் பக்கம்தான் (முதல் பக்கம்) சுட்டியை உள்ளிட்டவுடன் உலாவியில் தெரியும். ஆனால் அச்சுப் புத்தகத்தில் அடுத்த பக்கம் என்று வரிசையாக இருப்பது போலன்றி முதல் பக்கத்திலிருந்து பல இடங்களுக்குச் செல்லுமாறு இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு இணைப்பதை ஆங்கிலத்தில் ஹைப்பர் லிங்க் என்று சொல்கிறோம். ஒரு இணைய இதழின் முகப்புப் பக்கத்தில் அந்த இதழில் வெளிவந்திருக்கும் அத்தனை கட்டுரை, கதை, கவிதை, கடிதங்கள் ஆகியவற்றின் சுட்டியும் அளிக்கப்பட்டிருக்கலாம். அதில் உங்களுக்கு விருப்பமான சுட்டியைத் தேர்ந்தெடுத்து மௌஸைச் (mouse) சொடுக்கினால் அந்த சுட்டி காண்பிக்கும் பக்கத்துக்கு உலாவி செல்லும். மீண்டும் முகப்புப் பக்கத்துக்கு வருவதற்கு உலாவியில் உள்ள "Back" என்னும் பொத்தானை அழுத்த வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

இணைப்பு பெற்றவுடன் அடுத்து பெற வேண்டியது மின்னஞ்சல் இணைப்பு. எப்படி நமக்கு வீட்டு முகவரி ஒன்று இருக்கிறதோ, அது போல் ஒவ்வொருவருக்கும் ஒரு மின்-முகவரி தேவை. அதன் மூலம்தான் மற்றவர்கள் நம்மைத் தொடர்பு கொள்ள முடியும். நாமும் மற்றவர்களுக்கு அஞ்சல் அனுப்ப முடியும். உங்களுக்கு இணையச் சேவையை வழங்கும் நிறுவனமே ஒரு மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து அதனை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்றும் சொல்லியிருப்பார்கள். அப்படி இல்லாவிட்டாலும், இலவசமாக உலாவியின் மூலம் உபயோகிக்கக்கூடிய மின்னஞ்சல் முகவரியையும் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். சொந்தக் கணினி இல்லாது, கணினி மையத்தில் கணினியைப் பயன்படுத்தினால் இப்படித்தான் மின்னஞ்சல் முகவரியைப் பெற வேண்டும்.

யாஹூ (www.yahoo.co.in), எம்.எஸ்.என் (www.msn.co.in), ரீடிஃப் (www.rediff.com), சிஃபி (www.sify.com) என்னும் பல இணைய தளங்கள் இலவசமான மின்னஞ்சல் சேவையினை அளிக்கிறார்கள். இந்தத் தளங்களுக்குச் சென்று உங்கள் பெயர், நுழைவுப்பெயர் (user ID), கடவுச்சொல் (password) ஆகியவற்றினைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்தால் உங்களுக்கென்றே ஒரு மின்னஞ்சல் முகவரி கிடைத்து விடும். நீங்கள் விரும்பும் நுழைவுப்பெயர் கிடைக்காவிட்டால் மாற்றுப் பெயர்களைத் தேர்வு செய்ய நேரிடும். உங்கள் பெயர் ராமன், கிருஷ்ணன், பெரியசாமி, நிர்மலா என்றெல்லாம் இருந்தால் நிச்சயமாக அந்தப் பெயரில் வேறு யாராவது நுழைவுப் பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பர். அதனால் நீங்கள் nirmala2003, en_peyar_nirmala என்றெல்லாம் நுழைவுப் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யாஹூவில் தேர்ந்தெடுத்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரி nirmala2003@yahoo.co.in என்று இருக்கும். இந்த முகவரியை உங்கள் நண்பர்களுக்குக் கொடுக்கலாம்.

தமிழ் இணைய தளங்களை எப்படிப் படிப்பது?

கணினி என்பது ஆங்கிலத்தில் எழுதப் படிக்க உருவாக்கப்பட்டது. கணினித் திரையில் தமிழ் எழுத்துக்கள் தெரியுமா? தமிழ் எழுத்துக்கள் தெரிய வேண்டுமானால் தமிழ் எழுத்துருக்களை (font) உங்கள் கணினியில் சேர்க்க வேண்டும். பல தமிழ் எழுத்துருக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அதே நேரத்தில் பல எழுத்துக் குறியீடுகளும் தமிழ் இணையத்தில் உபயோகிக்கப்படுகிறது. திண்ணை, திசைகள், தமிழோவியம் ஆகிய மூன்று வெவ்வேறு இதழ்கள் வெவ்வேறு குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. இதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல் ஒவ்வொரு எழுத்துக் குறியீட்டுக்கும் ஒரு எழுத்துரு வீதம் உங்கள் கணினியில் சேர்த்து விட்டால் வெவ்வேறு தமிழ் இணைய தளங்களைப் படிப்பது எளிதாகும். தமிழில் வெளிவரும் பல செய்தித்தாள்களும், இதழ்களும் (தினமலர், தினகரன், தினமணி, விகடன், குமுதம்) பல்வேறு விதமான குறியீடுகளையும், எழுத்துருக்களையும் பயன்படுத்துகின்றன. இதில் முக்கால்வாசித் தளங்கள் இயங்குவார்ப்புகள் (dynamic fonts) என்னும் தொழில்நுட்பம் கொண்டு இயங்குவதால், இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி மூலம் பார்ப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.

மற்ற தளங்களில் பெரும்பான்மை திஸ்கி (TSCII) என்னும் குறியீட்டில் இயங்குவது. எனவே இந்தக் குறியீட்டு எழுத்துருக்களை உங்கள் உலாவியின் user-defined font என்னும் பண்பில் சேர்த்தால் அதன் மூலம் திஸ்கி இணைய தளங்களைத் தடங்கலின்றிப் பார்க்க முடியும். தமிழில் நடக்கும் யாஹூ குழுமங்கள் அத்தனையும் திஸ்கி குறியீட்டில்தான் இயங்குகின்றன.

சரி, தமிழில் எப்படி எழுதுவது?

கணினியின் கீ போர்டும் ஆங்கில எழுத்துக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் இதை வைத்து எப்படி ஒருவர் தமிழில் எழுத்துக்களை உள்ளிடுவது? இதற்கு எ-கலப்பை அல்லது முரசு அஞ்சல் என்னும் இலவச மென்பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றில் எதாவது ஒன்றைக் கணினியில் சேர்த்தவுடன், ஆங்கிலக் கீ போர்டை வைத்துக் கொண்டே தமிழில் எழுத்துக்களை உள்ளிடலாம். தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் அந்த முறையிலும், தட்டச்சு தெரியாதவர்கள் உயிர்+மெய் எழுத்துக்களை அடித்தும் எழுதலாம். இந்தக் கட்டுரையே இரண்டாவது விதமாகத் தயாரானதுதான். ஒவ்வொரு உயிரெழுத்துக்கும் ஒரு (அல்லது இரண்டு) பட்டன்; ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் ஒரு (அல்லது இரண்டு) பட்டன்.

அ = a; ஆ = A; இ = i; ஈ = I; உ = u; ஊ = U; ஐ = ai; ஒ = o; ஓ = O; ஔ = au; ஃ = q
க் = k; ச் = c; ட் = t; த் = th; ப் = p; ற் = R
ங் = ng; ஞ் = nj; ண் = N; ந் = w; ம் = m; ன் = n
ய் = y; ர் = r; ல் = l; வ் = v; ழ் = z; ள் = L
மெய்க்கான ஆங்கில எழுத்துக்களை அடித்து, உடனடியாக பக்கத்தில் வரும் உயிருக்கான ஆங்கில எழுத்தை அடித்தால் சரியான உயிர்மெய் வந்து சேரும். அதாவது 'கொ' வரவேண்டுமானால் ko என்று அடிக்க வேண்டும். அவ்வளவுதான், தமிழில் தட்டச்சு செய்வது வெகு எளிது.

எங்கெல்லாம் பங்கு பெறலாம்?

யாஹூ குழுமங்கள், இணைய இதழ்கள் என்று பல வாய்ப்புகள் உள்ளன நீங்கள் பங்கு பெற. நீங்களே சொந்தமாக வலைப்பதிவுகள் கூட வைத்துக் கொள்ளலாம், உங்கள் சொந்த டயரி மாதிரி.

தொகுப்பு:

  1. சொந்தத்தில் கணினி, இணைய இணைப்பு பெறுதல் வேண்டும், அல்லது கணினி மையங்களுக்குச் சென்று பயன்படுத்தலாம்
  2. மின்னஞ்சல் முகவரி தேவை.
  3. புதுக் கணினியாக இருந்தால், இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி மூலம் பெரும்பான்மைத் தமிழ் இணைய தளங்களை எந்தவொரு முயற்சியுமின்றிப் படிக்கலாம். மற்றவைகளைப் படிக்க பல்வேறு தமிழ் எழுத்துருக்களை கணினியில் சேர்க்க வேண்டும்.
  4. தமிழில் திஸ்கி (TSCII) குறியீட்டில் எழுத எ-கலப்பை அல்லது முரசு அஞ்சல் என்னும் மென்பொருள் தேவை.
எழுத்துருக்களையோ, மென்பொருள்களையோ ஒரு கணினி மையத்தில் உள்ள கணினியில் சேர்க்க, அந்த மையத்தின் நடத்துனரைத் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கும்.

--*--

எண்ணங்கள் வலைப்பதிவு