2003இல் தமிழ் இணையம்
பத்ரி சேஷாத்ரி, 30 ¿ÅõÀர் 2003
(சிஃபி தமிழ் மின்னிதழில் வெளியானது)
நடந்து முடியும் 2003ஆம் ஆண்டு தமிழ் இணையத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டு. தத்தித் தவழ்ந்த தமிழ் இணையம் தாவிக்குதித்து பெருந்தூரத்தைக் கடந்த ஒரு ஆண்டு என்று சொல்லலாம்.

இந்த வருடம் ஆரம்பிக்கும் போது 'ஆங்கில இணையம்' எங்கிருந்தது? 'தமிழ் இணையம்' எங்கிருந்தது? என்பதிலிருந்தும், ஆண்டு முடியும்போது எங்கு வந்துள்ளோம் என்பதிலிருந்தும் நாம் கடந்துள்ள தொலைவு நமக்குப் புரியும்.

கணினியும், இணையமும் ஆங்கில உலகுக்காகவே படைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. கணினியின் இயங்கு தளம் ஆங்கிலத்தில். கணினியின் விசைப்பலகை ஆங்கில எழுத்துக்களையும் எண்களையும் மட்டுமே உள்ளடக்கியது. கணினிக்கு நாம் இடும் கட்டளைகள் ஆங்கிலத்தில். கணினியை ஆணையிட நாம் பயன்படுத்தும் மொழி ஆங்கிலத்தில் அமைந்தது. கணினி நம்மிடம் உரையாடுவது ஆங்கிலத்தில். கணினிகளைப் பற்றிய புத்தகங்கள் ஆங்கிலத்தில். இணைய தளங்களின் சுட்டிகள் ஆங்கிலத்தில். அதிகபட்ச இணைய தளங்கள் ஆங்கிலத்தில்.

1. எழுத்துக் குறியீடு, எழுத்துரு தரப்படுத்துதல்: வருட ஆரம்பத்தில் தமிழுக்கென பல எழுத்துக் குறியீடுகள் இருந்தன. வருட முடிவிலும் அப்படித்தான். ஆனால் பல குழப்பங்கள் நீங்கி உலகம் ஒருங்குறி என்னும் யூனிகோடு வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. தமிழக அரசு டாப், டாம் என்னும் இரண்டு எழுத்துக் குறியீடுகளை தரமாக வைத்திருந்தது. புலம்பெயர்ந்த தமிழர்கள் திஸ்கி என்னும் எழுத்துக் குறியீட்டினை முன்வைத்தனர். உத்தமம் (INFITT) என்னும் அமைப்பு தமிழக அரசின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலம் ஒருங்கிணைந்த ஒரு எழுத்துக் குறியீட்டினைக் கொண்டுவர பல முயற்சிகள் நடைபெற்றன. அதே சமயம், உலகெங்கிலும் உள்ள அனைத்து மொழிகளும் ஒன்று சேர்ந்து குழப்பமின்றி கணினியில் இயங்குமாறு செய்ய யூனிகோடு என்னும் அமைப்பு செயல்பட்டு வந்தது. கடந்த ஒரு வருடத்தில் இந்த யூனிகோடு குறியீடே பயனர்களின் தூண்டுகோலால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ் யூனிகோடில் ஒருசில பிரச்சினைகள் இருக்கின்றன. இப்பொழுதிருக்கும் குறியீட்டில் உள்ள குறைபாடுகளைக் களைந்து தமிழுக்கென இன்னமும் சிறந்த யூனிகோடு குறியீடு அவசியம் என்று சில அறிஞர்கள் உத்தமம் அமைப்பிற்குப் பரிந்துரை செய்திருந்தாலும், இப்பொழுது அமைந்திருக்கும் குறியீடே தொடரும் என்று தோன்றுகிறது.

தமிழக அரசு இன்னமும் தன் பரிந்துரைகளை மாற்றாமல் டாம், டாப் குறியீடுகள் உள்ள மென்கலன்களையே வாங்கி வருகிறது. இதனால் தமிழகக் கணினி நிறுவனங்கள் தங்கள் மென்கலன்களை டாம், டாப் வழியிலேயே செய்து வருகின்றனர். ஆகஸ்டு 2003இல் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் இது பற்றி சீரிய முடிவு அதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இன்னமும் ஒரு வருடத்திற்குள் தமிழக அரசு தன் நிலையை செவ்வனே மாற்றி, இப்பொழுதுள்ள யூனிகோடு குறியீட்டினை மேற்கொள்ளுதல் வேண்டும். மைக்ரோசாஃப்ட், லினக்ஸ் முதலிய இயங்கு தளங்கள் மற்றும் எண்ணற்ற செயலிகள் யூனிகோடு குறியீட்டில் மட்டுமே இயங்குகின்றன.

2003இல், பன்னாட்டுக் கணினி நிறுவனங்கள் மற்றும் பயனரைப் பொறுத்த அளவில், தமிழுக்கு, யூனிகோடு ஒரு கொடாநிலைக் குறியீடாக ஆகி விட்டது. இனி தமிழக அரசின் ஆசீர்வாதம் மட்டுமே தேவை.

2. இணைய தளங்களின் வளர்ச்சி: 2003 ஆரம்பிக்கும் தருவாயில் தமிழில் இணைய தளத்தை உருவாக்க பலத்த முயற்சி தேவைப்பட்டது. குறியீட்டுக் குழப்பத்தினால், ஒவ்வொரு தமிழ் செய்தித்தாள் நிறுவனமும், பிற ஊடக நிறுவனங்களும் ஆளுக்கொரு குறியீட்டினையும், அதற்கான ஒரு எழுத்துருவையும் பயன்படுத்தினர். தமிழ்ப் பயனர் ஒவ்வொருவரும் இந்த எழுத்துருவைத் தங்கள் கணினிகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டி வந்தது. மேலும் இந்த எழுத்துருக்கள் இலவசமாகக் கிடைக்காதவை. தமிழ்நாட்டிற்கு வெளியே (சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்) ஒரு சிலர் 2003க்கு முன்னரே திஸ்கி எழுத்துரு இலவசமாகக் கிடைத்ததால் அதன் மூலம் தமிழ் இணைய தளங்களை மற்றும் யாஹூ! குழுமங்களை அமைத்தனர். சில இணைய தளங்கள் இயங்கு எழுத்துருக்கள் மூலம் பயனர் தனியாக எந்த எழுத்துருவையும் கீழிறக்காமலேயே தமிழ் இணைய தளங்களைப் பார்க்கும் வண்ணம் அமைத்தனர். ஆனால் இது இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் என்னும் உலாவியில் மட்டுமே நிகழ்ந்தது.

2003இல் பெருவாரியாக இலவசமான தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள் கிடைக்க ஆரம்பித்தன. அத்துடன் இந்த யூனிகோடு குறியீட்டிற்கான இயங்கு எழுத்துருக்களும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்க ஆரம்பித்தன. யூனிகோடில் எழுத, இணைய தளம் அமைக்கத் தேவையான பல மென்கலன்களை இந்தத் தளத்தில் பெறலாம். இதன் மூலம் சாதாரணப் பொதுமக்களும் தரமுள்ள தமிழ் இணைய தளங்களை ஆரம்பிக்க முடிந்தது. வலைப்பதிவுகள் பற்றிக் கீழே பேசும்போது இதன் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.

இன்னமும் தமிழில் உள்ள பெரும்பான்மை செய்தித் தளங்களும், பல்சுவை இதழ்களும் பல்வேறு குறியீடுகளில் இயங்கி வருகின்றன. மாலனின் 'திசைகள்' என்னும் இணைய இதழ் முதன்முதலாக யூனிகோடில் வெளிவரத் தொடங்கியது. 2004இல், பெருவாரியான அத்தனை இணைய இதழ்களும், செய்தித் தளங்களும் யூனிகோடுக்கு மாறிவிடும்.

3. தமிழிலே கணினி இயங்குதளங்கள், உலாவி மென்கலன்: தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழிலேயே லினக்ஸ் இயங்குதளத்தை இயக்கத் தேவையான வேலைகளைச் செய்துவருகின்றனர். 2003க்கு முன்னமேயே இதற்கான வேலைகள் நடந்து வந்தாலும் 2003இல் தான் பெருவாரியான அளவு யூனிகோடையும் இணைத்து முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. 2003இல் தான் மாண்டிரேக் என்னும் லினக்ஸ் தொகுப்பு யூனிகோடு தமிழில் வெளிவந்தது. இந்தத் தொகுப்பில் ஒருசில சிறு குழப்பங்கள் களையப்பட வேண்டும், அவையனைத்தும் 2004இல் களையப்பட்டு சிறந்த பல தமிழ் லினக்ஸ் தொகுப்புகள் வெளிவரும் என்று நம்புவோம்.

மற்றதொரு மிக முக்கியமான 2003இன் நிகழ்வு மொசில்லா என்னும் உலாவியின் தமிழாக்கமான தமிழா என்னும் உலாவி மென்கலன். உலாவி மென்கலன் மூலமாகத்தான் ஒருவரால் இணைய தளங்களைப் படிக்க முடிகிறது. மைக்ரோசாஃப்ட் இயங்குதளக் கணினிகளில் இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் எனப்படும் உலாவி மென்கலன் இருக்கும். ஆனால் மொசில்லா எனப்படும் மென்கலன் இண்டெர்நெட் எக்ஸ்புளோரரை விட மிகவும் சக்தி வாய்ந்த, அதே சமயம் திறந்த ஆணைமூலச் செயலி (open source software) எனச் சொல்லப்படும் செயலியாகும். அதாவது இந்த மொசில்லா மென்கலனை உருவாக்கியவர்கள் அந்த மென்கலனின் முழு ஆணைமூலத்தையும் வெளிப்படையாக இணையத்தில் வைத்துள்ளனர். மென்கலன் எழுதுவோர் இந்த ஆணைமூலத்தை எடுத்து மாற்றியமைக்க முடியும். அப்படித்தான் தமிழா என்னும் தமிழ்ப்படுத்தப்பட்ட மொசிலா உலாவி உருவானது. இது தமிழ்க் கணினித் துறையில் ஏற்பட்ட மிக முக்கியமானதொரு நிகழ்வு.

4. வலைப்பதிவுகள்: 1979களில் அமெரிக்காவில் ஆரம்பித்த இணையமும் (internet), 1980களில் முதலில் ஸ்விட்சர்லாந்தில் தோன்றிய வலையும் (world wide web), இந்தியாவிற்கு வந்தது 1996இல். அப்பொழுதும் இது ஆங்கில வடிவிலேயே இருந்தது. 1998 முதலே வலைப்பதிவு (weblogs) என்னும் கருத்து இயங்கி வந்திருக்கிரது. தனிப்பட்ட மக்கள் தங்கள் கருத்துக்களை, தங்களுக்கென தனித்தனி இணைய தளங்களை உருவாக்கிப் பதிப்பதுதான் வலைப்பதிவு. வலைப்பதிவின் முழு வரலாற்றைப் பார்க்க இங்கு செல்லவும். 1998இல் தொடங்கினாலும் ஆங்கில உலகில் வலைப்பதிவு ஊதிப் பெரிதானது 2000இல்தான். தமிழில் வலைப்பதிவு உலகம் ஆரம்பித்தது 2003இல். இதற்கு மிக முக்கியக் காரணம் தமிழ் யூனிகோடும், இலவசமாகக் கிடைக்கும் யூனிகோடு இயங்கு எழுத்துருக்களுமே. இன்றைய தேதியில் 75க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் இருக்கின்றன. இதிலும் முக்கியமாக நோக்க வேண்டியது, இந்திய மொழிகளிலேயே இன்றைய தேதியில் வலைப்பதிவுகள் இருப்பது தமிழில் மட்டுமே. ஹிந்தியில் முழுக்க முழுக்க வலைப்பதிப்பது ஒருவர் மட்டுமே! மற்ற இந்திய மொழிகளுக்கென்று சொல்லிக் கொள்ளுமாறு ஒரு வலைப்பதிவு கூடக் கிடையாது!

வலைப்பதிவு என்றால் வெறும் வீணர்கள் நேரத்தை விரயமாக்குதல் என்று கருதக் கூடாது. இதுநாள் வரை வெறும் படிப்பதற்காக மட்டுமே இணையம் என்று இருந்த நிலையில் இணையம் என்பது, படிப்பதற்கும், தன் கருத்துகளைப் பதிப்பதற்கும் என்று ஆனது வலைப்பதிவுகளினால். தமிழில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள் தோன்றும்போது, தமிழ் ஊடகங்கள் பெருமாற்றம் அடையும். நான்கைந்து ஊடக நிறுவனங்கள், நாற்பது இணைய தளங்கள் கொடுப்பதை நான்கு கோடு மக்கள் படிப்பது போக, நாற்பதாயிரம் மக்கள் பதிக்கும் வலைப்பதிவிலிருந்தே நம்பிக்கையான, ஆழமான கருத்தாடல்களும், உரைகளும், விமரிசனங்களும் வர ஆரம்பிக்கும். RSS செய்தியோடைகள், உடனடிக் கருத்துப் பரிமாற்றங்கள், வழிச்சுவடறிதல் (trackback) போன்றவைகள் மூலம் வலைப்பதிவுகளால் புதியதொரு தகவல் பரிமாற்ற உலகைப் படைக்க முடியும்.

நல்ல செய்தி என்னவென்றால் இப்பொழுது தமிழ் இணைய உலகு, ஆங்கில உலகிற்குச் சற்றும் குறைபடாமல் நடந்து கொள்ள முடியும். 2003இல்தான் இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 2003இல் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டினை நேரடி வர்ணனையை என்னுடைய வலைப்பதிவில் நான் பதித்தேன்.

5. கூகிள் போன்ற தேடியந்திரங்களில் தமிழ்த் தளங்களில் தேடல்: ஒரு சாதாரண பயனர் இணையத்திற்கு வந்ததும் செய்யும் முதல் வேலை கூகிள் போன்ற தேடியந்திரம் மூலம் தனக்குத் தேவையானவற்றைத் தேடுவதுதான். இதுநாள் வரை ஒருவரால் ஆங்கில தளங்களை மட்டும்தான் தேட முடிந்திருந்தது. தமிழ் யூனிகோடு தளங்கள் பெருகப் பெருக, இப்பொழுது தமிழில் நேரடியாகவே தேட முடிகிறது.

இனி என்ன நடக்கும்?

1. மைக்ரோசாஃப்ட் ஹிந்தியில் இயங்கு தளத்தை வெளியிடவிருக்கிறார்கள். அத்துடன் தமிழில் இதுபோன்ற முயற்சியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிய வருகிறது. இது வெளிவருவதற்குள் தரமான தமிழ் லினக்ஸும் வெளியாகியிருக்கும்.

2. தமிழா உலாவி போல ஓப்பன் ஆஃபீஸ் எனப்படும் இலவச அலுவல் செயலி தமிழ்ப்படுத்தப்பட உள்ளது.

3. தமிழ் இணைய தளங்கள் அனைத்தும் யூனிகோடிலேயே அமைக்கப் படும். இதனால் இணையத் தேடுதல் தமிழர்களுக்கும் கைகூடும்.

4. தமிழிலேயே கணினி இயங்கு தளமும், மென்கலன்களும், யூனிகோடு எழுத்துருவில் வடிவமைக்கப்படும். இதனால் தமிழ் மட்டுமே அறிந்த பயனர்கள் - சாதாரண மக்கள் மற்றும் சிறுதொழில் புரிவோர் பெரும்பயன் அடைவர்.

5. தமிழக பஞ்சாயத்துகள், மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் யூனிகோடு தமிழில் தளங்கள் அமைத்து மின்-ஆட்சியை நிலைப்படுத்துவர். இரண்டாண்டுகளுக்குள் இது நிகழ ஆரம்பித்து விடும் என்று தோன்றுகிறது.

புத்தாண்டு பிறக்கட்டும், தமிழ் கணினி சிறக்கட்டும், தமிழர்கள் வளம் பெறட்டும் என்று வாழ்த்துவோம்.

--*--

எண்ணங்கள் வலைப்பதிவு