இண்டர்நெட்டில் நிதிவசூல், அசத்தும் அமெரிக்க அரசியல்வாதிகள்
பத்ரி சேஷாத்ரி, 31 ஜனவரி 2003
(குமுதம் ரிப்போர்டர், 5.2.2004 இதழில் வெளிவந்த கட்டுரை)




நவம்பர் 2, 2004 இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ரிபப்ளிகன் கட்சி வேட்பாளராக மீண்டும் தேர்தலில் நிற்கப்போகிறார். அவரது கட்சிக்குள் புஷ்ஷை எதிர்க்க ஆளே கிடையாது. அதனால் போட்டியின்றியே ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளராக, அவர் பெயரை கட்சி முன்மொழியும்.

ஆனால், எதிர்க்கட்சியான டெமாக்ரடிக் கட்சியில் யார் புஷ்ஷை எதிர்த்து யார் நிற்கப்போவது என்று கடும் போட்டி. இந்த உட்கட்சித் தேர்தலை 'பிரைமரி' தேர்தல் என்பார்கள். அமெரிக்கக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட குடியாட்சி முறைப்படியே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்! ஒவ்வொரு தொகுதியிலும் மேற்சொன்ன இரண்டு கட்சிகளின் - ரிபப்ளிகன் கட்சி, டெமாக்ரடிக் கட்சி - சார்பாக யார் போட்டியிடுவது என்பதை அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் பிரைமரி தேர்தல் மூலம் முடிவு செய்வார்கள்.

டெமாக்ரடிக் கட்சியில் ஒன்பது பேர் தங்களுக்கு புஷ்ஷை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் இரண்டு முக்கியமான வேட்பாளர்கள்... கவர்னர் ஹோவர்ட் டீன், செனேடர் ஜான் கெர்ரி. ஹோவர்ட் டீன், வெர்மாண்ட் மாநிலத்தின் கவர்னராக இருக்கிறார். ஜான் கெர்ரி, மசாசூசட்ஸ் மாநிலத்திலிருந்து செனேட்டுக்குச் (மேலவை) செல்லும் இரண்டு உறுப்பினர்களில் ஒருவர்.

ஹோவர்ட் டீன், மருத்துவராகப் பணியாற்றியவர். இவர் அரசியலில் ஈடுபட்டு, 1982-1986 வெர்மாண்ட் மாநிலத்தின் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும், 1986இல் வெர்மாண்டின் துணை கவர்னராகவும், 1991 முதல் மாநிலத்தின் கவர்னராகவும் இருக்கிறார்.

ஜான் கெர்ரி, அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியவர். வியட்னாமில் அமெரிக்கப் படைகள் ஆக்ரமித்திருந்த போது, அங்கு சண்டை போட்டவர். ஆனால் அமெரிக்கா திரும்பியதும் வியட்னாமுக்கு அமெரிக்கப் படைகள் போனது தவறு என்று மனம் மாறியவர். மசாசூசட்ஸ் மாநிலத்தின் ஒரு மாகாணத்தில் அரசு வழக்கறிஞராகப் (District Attorney) பணியாற்றி, ரௌடி கும்பல்களை அடக்கி, சிறையில் போடுவதில் வெற்றி கண்டவர். 1982இல் மசாசூசட்ஸின் துணை கவர்னராகி, 1984 முதல் அமெரிக்க செனேட்டில் உறுப்பினராக இருப்பவர்.

இருவருமே புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சரி, இங்கு இணையம் எப்படி வந்தது? இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? இவர்களில் ஒருவராவது டெமாக்ரடிக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளராக புஷ்ஷை எதிர்ப்பாரா? எதிர்த்து வெற்றி பெறுவாரா? இந்தக் கேள்விகளையெல்லாம் விட முக்கியமானது இவர்கள் இருவரும், முக்கியமாக ஹோவர்ட் டீன், எப்படி தனது தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கிறார்கள்? எப்படி தேர்தலுக்குத் தேவையான நிதியைப் பெறுகிறார்கள்? எப்படி பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடைகிறார்கள்?

இதனைப் புரிந்துகொண்டோமானால், இந்தியாவிலும் பிற்காலத்தில் எப்படி தேர்தல் சார்ந்த ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெறும், எப்படி இணையத் தொழில்நுட்பம் இதற்கு இன்றியமையாததாக இருக்கும் என்பதை அறியலாம்.

ஹோவர்ட் டீனின் அட்டகாச ஐடியாக்கள்:

1. meetup.com என்கிற இணையத்தளத்தில் மூலம் ஆதரவாளர்களை ஒன்று சேர்த்ததுதான் டீனின் புத்திசாலித்தனத்தின் முதல் வெளிப்பாடு.

ஹோவர்ட் டீன், 2003 தொடக்கத்தில் இப்பொழுது இருக்கும் அளவுக்கு பாப்புலர் இல்லை. ஆனால் டீனின் ஒருசில ஆதரவாளர்கள் meetup.com என்னும் இணையத்தளத்தின் மூலம் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். இந்தியாவில் ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது, அல்லது ஒரு சிறப்புப் பேச்சாளர் வரப்போகிறார் என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்கிறோம்?

செய்தித்தாளில் விளம்பரம் வருகிறது. தெருவெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். அரசியல் கூட்டங்களானால் லாரியில் ஆட்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டுவரப்படுகிறார்கள் (ஒரு வேளை சாப்பாடும், ரூ. 100 பணமும்?). இதற்கெல்லாம் நிறைய செலவாகும். ஆனால் meetup.com செலவில்லாமல், ஒவ்வொரு சிற்றூரிலும் நடக்கும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், யார் பேச வருகிறார்கள், எதைப்பற்றி, எப்பொழுது, எங்கு ஆகிய விவரங்களைத் தருகிறது. கூட்டம் நடத்துபவர்கள் இந்தத் தளத்திற்குப் போய் கூட்டங்கள்/நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களைச் சேர்க்கலாம். அதேபோல் உறுப்பினர்கள், தங்கள் விருப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அந்த உறுப்பினர்கள் வசிக்குமிடத்தையும், அவர்கள் விருப்பங்களையும் பரிசீலித்து இந்த இணையத்தளம் உறுப்பினர்களின் ரசனைக்கேற்ற கூட்டங்கள்/நிகழ்ச்சிகளைப் பற்றிய விவரங்களை அவர்களுக்குக் கொடுக்கும்.

இந்தத் தளத்தில், 2003-இன் தொடக்கத்தில் ஹோவர்ட் டீனின் ஆதரவாளர்கள் என்று 3,000 பேர்கள் இருந்தனர். இன்றைய தேதியில் இந்த எண்ணிக்கை 1,84,700ஐத் தொட்டுள்ளது! (பார்க்க: படம்) இப்படி http://dean2004.meetup.com/ மூலம், சாதாரணப் பொதுமக்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒரு இடத்தைத் தீர்மானித்து அங்கு இன்ஃபார்மலாகக் கூடி, கலந்து பேசி, எப்படி ஹோவர்ட் டீனை முதலில் இந்தப் 'டெமாக்ரடிக் பிரைமரி' தேர்தலில் ஜெயிக்க வைப்பது என்று பேசி, ஒருசில திட்டங்களைத் தீட்டி, அதைத் தாங்களாகவே வழி நடத்துகிறார்கள்!

தொடக்கத்தில் ஹோவர்ட் டீனின் தேர்தல் நிர்வாகிகள், ஒவ்வொரு ஊருக்குமான ஒருங்கிணைப்பாளர்களை இணையம் அல்லது தொலைபேசியின் மூலம் தேர்ந்தெடுக்க முயன்றனர். ஆனால் இதனால் கால தாமதமே ஆனது. அதனால் ஒரு தானியங்கி மென்பொருள் (automatic software) மூலம் இந்தக் காரியத்தைத் துரிதமாகச் செய்ய ஆரம்பித்தனர். இவ்வாறாக தேர்தல் பணியினை மையப்படுத்தாமல், ஒவ்வொரு சிற்றூரிலும் ஆதரவாளர்கள் தாங்களாகவே தேர்தல் பணியினைச் செய்யுமாறு தூண்டப்படுகிறார்கள்.

2. ஹோவர்ட் டீனின் நேரடி இணையத்தளத்தில் (http://www.deanforamerica.com/) அவரைப் பற்றிய சகல விஷயங்களும் கிடைக்கின்றன. அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்கள், விருந்துகள், அவரது கொள்கைகள், பேச்சுகள், ஆடியோ, வீடியோ, டிஜிட்டல் புகைப்படங்கள், இரண்டு பக்க கொள்கை விளக்கங்கள் ஆகியவை இந்த இணையத்தளத்தில் உள்ளன. அவரது தொண்டர்கள் இந்தக் கோப்புகளைத் தங்கள் கணினிகளில் சேமித்து, தாளில் அச்சிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுக்கலாம். நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம்.

3. ஹோவர்ட் டீன் தன்னுடைய வலைப்பதிவில் (http://www.blogforamerica.com/) தன் பேச்சுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்கிறார். அதற்கு பொதுமக்கள் (ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவருமே) தங்கள் எதிர்வினைகளை உடனடியாக, சூடாகப் பதிவு செய்யலாம். அதனைப் படிக்கும் டீனும், அவரது குழுவினரும், அடுத்த பேச்சை தேவையான முறையில் மாற்றி அமைக்கிறார்கள். இதனை டீனே ஒப்புக் கொள்கிறார். வயர்ட் என்னும் இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு சொல்லுகிறார் டீன்... "நாங்கள் மக்களின் எதிர்வினையை கவனிக்கிறோம். நான் ஒரு பேச்சை வலைப்பதிவில் ஏற்றியவுடன், படிப்பவர்கள் அதைப் பிடிக்கவில்லையென்று சொன்னால், அடுத்த முறை அந்தப் பேச்சை சற்றே மாற்றுகிறேன்."

வசூல்! வசூல்!

இந்தப் புதுமைதான் ஹோவர்ட் டீனின் 'மாஸ்டர் ஸ்டிரோக்' என்று சொல்ல வேண்டும். அமெரிக்கத் தேர்தல்களில் பொதுமக்கள், நிறுவனங்களிடமிருந்து நிதி வசூலிப்பவர்கள் தங்கள் தேர்தல் செலவை 45 மில்லியன் டாலருக்குள் (கிட்டத்தட்ட ரூ. 202 கோடி) வைத்துக் கொள்வதாக உறுதி கொடுத்தால் அரசாங்கமே மக்களின் வரிப்பணத்திலிருந்து 18.5 மில்லியன் டாலர் (ரூ. 83.25 கோடி) கொடுக்கும். ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் பெரும் நிறுவனங்களிலிருந்து பணம் வசூலிப்பார்கள். புஷ்ஷின் தேர்தல் நிதி கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலரைத் (ரூ. 900 கோடி) தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீனுக்கு இதுபோன்ற நிதி திரட்டும் வசதி கிடையாது. பெரும் நிறுவனங்களுக்கு டீன் புதியவர், டெமாக்ரடிக் கட்சியின் தீர்மானிக்கப்பட்ட வேட்பாளராக இவரால் வரமுடியுமா என்பதே சந்தேகம். அதனால் டீன், நேரிடையாக இணையத்தின் மூலம் சாதாரணப் பொதுமக்களிடமிருந்து தேர்தல் நிதியை வசூலிக்க ஆரம்பித்தார். அவரது இணையத்தளத்தில் மக்கள் தங்களது கிரெடிட் கார்டுகளின் மூலம் பணம் கொடுக்க முடியும். இப்படியே 25.4 மில்லியன் டாலர் (ரூ. 114.3 கோடி) சேர்த்துள்ளார். இதில் அதிக அளவு இணையத்தின் மூலம் வந்துள்ளது! இதைப்பார்த்து செனேடர் ஜான் கெர்ரியும் தன் இணையத்தளத்தின் மூலம் பணம் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்!

ஜான் கெர்ரியும் தனக்கென ஒரு இணையத்தளத்தை வைத்துள்ளார் (http://www.johnkerry.com/). ஒரு வலைப்பதிவையும் (http://blog.johnkerry.com/) வைத்துள்ளார். இணையம் வழியாகப் பணம் சேர்க்கவும் செய்கிறார். ஆனால் இது அத்தனையிலும் ஹோவர்ட் டீனை விட சற்றே பின்தங்கியுள்ளார். இணையம் வழியே ஆதரவாளர்களை சேர்ப்பதில் பின்தங்கியிருந்தாலும் பிரைமரி தேர்தல் வாக்கெடுப்பில் ஜான் கெர்ரி முன்னணியில் இருக்கிறார். இதுவரை அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இரண்டில் பிரைமரி தேர்தல்கள் முடிந்துள்ளன. அயோவா மாநிலத்தில் ஜான் கெர்ரி முதலாவதாகவும், ஹோவர்ட் டீன் மூன்றாவதாகவும் வந்துள்ளனர். நியூ ஹாம்ப்ஷயரில் ஜான் கெர்ரி முதலாவதாகவும், ஹோவர்ட் டீன் இரண்டாவதாகவும் வந்துள்ளனர். இதனால் கெர்ரியே டெமாக்ரடிக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று சொல்லிவிட முடியாது.

ஆனால் ஒன்று மட்டும் சொல்லிவிடலாம். யாருமே எதிர்பார்க்காத ஹோவர்ட் டீன் எங்கிருந்தோ வந்து, இணையத்தின் வழியாக இப்பொழுது இரண்டாவது இடத்தை நெருக்கிப் பிடிக்கப் போகிறார். முதலாவதாகவும் வரலாம். எப்படியோ இவ்விருவரும் இணையத்தின் துணை கொண்டு அமெரிக்கா என்னும் மிக்க வல்லமை பொருந்திய நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பெருத்த தலைவலியைத் தரப்போகிறார்கள்.

பிரச்சாரம் மட்டுமில்லாமல், நிதி வசூலுக்கும் இணையத்தைப் பயன்படுத்தலாம்; அதில் அமர்க்களமான வெற்றியையும் காணலாம் என்கிற விஷயம் இதுவரை இந்திய அரசியல்வாதிகள் யாரையும் எட்டியதாகத் தெரியவில்லை. ரத்தத்தின் ரத்தங்கள், உடன்பிறப்புகள் ஆகிய அத்தனைபேரும் கம்ப்யூட்டரும், இண்டர்நெட் கனெக்ஷனும் வைத்திருக்கும் காலம் வந்தால்தான் இங்கே அது சாத்தியம்!

--*--

எண்ணங்கள் வலைப்பதிவு