கனிமொழி (எம்.பி), ரவிக்குமார் (எம்.எல்.ஏ), வேறு சிலர் சேர்ந்து "நாம்" என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளனர் (போலும்). அந்த அமைப்பின் சார்பில் இன்று சென்னையில் (இமேஜ் ஆடிட்டோரியம்) 'Limits of Judicial Authority' என்ற தலைப்பில் விவாதம் (A discussion in the background of recent judicial contempt proceedings) நடந்தது.
நிகழ்ச்சிக்கு திமுகவின் மத்திய அமைச்சர் A.ராஜா தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் பிரிந்தா காரத் (எம்.பி), ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி A.K.ராஜன், தி ஹிந்துவின் என்.ராம், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மனோஜ் மிட்டா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்த நிகழ்வை ஒலிப்பதிவு செய்துள்ளேன். ஆனால் வலையேற்ற பத்து நாள்களுக்கு மேல் ஆகலாம்.
கலந்துகொண்டவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் "recent judicial contempt proceedings" என்றால் என்ன என்பதைச் சரியாக விளக்கவில்லை. பிரிந்தா காரத் தில்லி 'மிட்-டே' வழக்கு பற்றி ஒரு வார்த்தை பேசினார். மற்றபடி அக்டோபர் 1 தமிழ்நாடு பந்த் பற்றியும், பொதுவாக நீதித்துறை எப்படி பிற துறைகள்மீது தனது ஆக்கிரமிப்பை அதிகமாக்கியுள்ளது என்பது பற்றியும் பேசினார். மனோஜ் மிட்டா முழுக்க முழுக்க மிட்-டே வழக்கு பற்றி மட்டுமே பேசினார். ராம் இரண்டையும் எடுத்துக்கொண்டார். ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன், நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் சுட்டாமல், எந்தெந்த வழக்குகளின்போது நீதித்துறை கொஞ்சம் கொஞ்சமாக எக்சிக்யூட்டிவின் நிர்வாக அதிகாரத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தது என்று கோடிட்டுக் காட்டினார்.
நிறைய உபயோகம் இருந்தாலும் இந்தக் கூட்டம் சற்றே குழப்பமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது போல இருந்தது. 5.00 மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்த கூட்டம் 5.45க்குப் பிறகுதான் தொடங்கியது. திமுக அமைச்சர்கள், பிரமுகர்கள் பலரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். நிறைய திமுக தொண்டர்கள் வண்டிகளில் அழைத்துவரப்பட்டிருந்தனர். ஆனால் அமைச்சர் ராஜா தவிர அனைவரும் ஆங்கிலத்தில் பேசினர்.
பல்வேறு காரணங்களுக்காக பொதுக்கூட்டங்கள் ஆங்கிலத்தில் நடைபெற வேண்டியிருக்கும். (பிரிந்தா காரத், மனோஜ் மிட்டா ஆங்கிலத்தில்தான் பேசியிருக்க முடியும். ராம், ஏ.கே.ராஜன் ஆகியோர் மேடையில் தமிழில் பேசிப் பழக்கமில்லாதவர்கள்.) கூட்டத்தில் பலர் ஆங்கிலத்தில் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்று தெரிந்தது.
இதுபோன்ற முக்கியமான விஷயங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க, முழுக்க முழுக்க தமிழில் (பிற மாநிலங்களில் அந்தந்த மொழிகளில்) நடக்கும் விவாதக் கூட்டங்கள் தேவை. "நாம்" என்னும் அமைப்பின் பின்னணி, நோக்கம் ஆகியவை எத்தகையதாக இருப்பினும் நீதித்துறை பற்றிய விவாதம் பொதுமக்களிடையே நடந்தாக வேண்டும்.
-*-
அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்களின் மெத்தனம், ஊழல் ஆகிய காரணங்களால், பெரும்பான்மை மத்திய தர மக்கள், மாதச் சம்பளக்காரர்கள் நீதித்துறையின்மீது பெருமதிப்பு வைக்க ஆரம்பித்தனர்.
நெருக்கடி நிலையின்போது தரம் தாழ்ந்திருந்த/காயடிக்கப்பட்ட நீதித்துறை, அடுத்த சில பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நாயகன் என்ற நிலைக்கு உயர்ந்து, இன்றோ சர்வாதிகாரத் தன்மையை எட்டப் பார்க்கிறது. பல வழக்குகளில் நீதித்துறை தரும் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. அதையும் விடக் கொடுமை, அவ்வப்போது பல நீதிபதிகள் உதிர்க்கும் கருத்துகள். கொஞ்சம் கொஞ்சமாக நீதித்துறை, நிர்வாகக் கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாகவும் மாறத்தொடங்கியுள்ளது. இதற்கு மோசமாக இயங்கும் அரசாங்கமும் ஒரு காரணம் என்றாலும், நீதித்துறை தன்னிச்சையாக கமிட்டிகளை நியமித்து, மத்திய மாநில அரசுகளுக்குத் தொல்லை கொடுப்பதில் தொடங்கி, பள்ளியில் குழந்தைகளை அனுமதிக்க இன்னின்ன வரைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பது வரை நடந்துகொள்வது அனுமதிக்க முடியாத ஒன்று.
அடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என்ற அபத்தம்.
அரசியல் கட்சிகள், மக்களின் கருத்தைக் கேட்டறிந்து, நீதித்துறையின் வரம்பு என்ன என்பதை நிர்ணயித்து அதை நீதித்துறை மீறாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்யவேண்டும். அத்துடன், நீதித்துறை மீதான அவமதிப்பு என்றால் என்ன, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் குற்றங்களை, தவறுகளை, ஊழல்களை யார் தண்டிப்பது ஆகியவற்றையும் சட்டமாக்கவேண்டும்.
அதற்கு, மேலும் பல விவாதங்கள் தேவை.
பாலையில் முளைத்தல்
3 days ago

