Friday, March 25, 2011

கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு

1. ஷோரூம் ஒருங்கிணைப்பாளர் (Showroom coordinator)

வேலை: தமிழகம் முழுவதிலும் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் நேரடி விற்பனை மையங்கள், ஃபிரான்ச்சைஸி கடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்; புதிய நேரடி மையங்களை நிறுவுதல்.

தகுதி: எதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழ் நன்றாகப் படிக்கவும் தமிழில் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். கணினியை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும்.

பணி இடம்: சென்னை; தமிழகம் முழுவதும் பயணம் செய்யவேண்டியிருக்கும்.

மாதச் சம்பளம்: ரூ. 10,000 - 12,000 (தகுதிக்கேற்ப) + இதரப் படிகள்.

2. இணைய மார்க்கெட்டிங் + விற்பனை பிரதிநிதி (Online Marketing & Sales Executive)

வேலை: இணையத்தளங்கள் மற்றும் கூகிள் வாயிலாக விளம்பரம் செய்தல்; ட்விட்டர், ஃபேஸ்புக், கூகிள் பஸ், வலைப்பதிவு, பிற சோஷியல் மீடியா நெட்வொர்க் ஆகியவை மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவித்தல்; கிழக்கு பதிப்பகத்தின் இணைய வர்த்தகத்தை நிர்வகித்தல்.

தகுதி: ஏதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். புத்தகம் படிப்பவராக இருத்தல் விரும்பத்தக்கது. கணினியை நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும். இணைய நுட்பங்கள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்.

பணி இடம்: சென்னை.

மாதச் சம்பளம்: ரூ. 10,000 (தகுதிக்கேற்ப)

தொடர்புகொள்ள: hp@nhm.in   /   95000-45611

Thursday, March 24, 2011

உணவு மானியம்

உணவுப் பொருள்கள் மானிய விலையில் கிடைத்துவருவது உங்களுக்குத் தெரியும். ரேஷன் கடைகள் எனப்படும் Public Distribution System (PDS) கடைகள் மூலமாகக் கிடக்கின்றன இந்தப் பொருள்கள். இவற்றுக்கு மத்திய அரசு அடிப்படை மானியத்தைத் தருகின்றன. மாநில அரசுகள் இந்த மத்திய மானியத்துக்குமேல் அதிகப்படி மானியத்தையும் தரலாம்.

மானியம் என்பதை அதிகம் விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. அரசு கொள்முதல் செய்யும் உணவுப்பொருள்களுக்கு ஓர் அடக்கவிலை உள்ளது. அந்த விலையையும்விடக் குறைவான விலையில் மக்களுக்கு உணவுப்பொருள்கள் கிடைக்குமாறு அரசு செய்கிறது. இந்த வித்தியாசம்தான் மானியம்.

அடக்கவிலை - விற்பனை விலை = மானியம்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசிக்கு என்ன வசூலிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாகத்தான் கேரள ரேஷன் கடைகளில் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் மானிய விலை உணவுப்பொருள்கள், தேவைப்படும் அனைவரையும் சென்றடைவதில்லை, அதில் பல ஓட்டைகள் உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இன்று மிண்ட் பத்திரிகையில் இது தொடர்பாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் இப்போதைக்கு மத்திய அரசிடம் இருக்கும் மூன்று திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ‘National Food Security Act’ சட்ட முன்வரைவு பற்றிய ஆலோசனைகள் தொடர்பானது.

1. தேசிய ஆலோசனைக் குழு - சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்டு செயல்படும் குழு. இது கொடுத்திருக்கும் திட்டம்:
  • 90% கிராமப்புற மக்கள், 50% நகர்ப்புற மக்கள் - ஆக மொத்தம் இந்திய மக்கள் தொகையில் 75%
  • இந்தக் குழுவிலிருந்து 46% கிராமப்புறத்தவர், 28% நகர்ப்புறத்தவருக்கு ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு 35 கிலோ உணவு தானியங்கள் மானிய விலையில் தரப்படும். அதாவது கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவை கிலோ 1 ரூபாய்க்கு. கோதுமை கிலோ 2 ரூபாய். அரிசி கிலோ 3 ரூபாய்.
  • 75%-ல் விடுபட்ட பிறருக்கு, உணவுப்பொருளின் அடக்கவிலையில் 50%-ல். அதாவது அரிசியை விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யும் குறைந்தபட்சக் கொள்முதல் விலையின்படிக் கணக்கிட்டால் கிலோவுக்கு அடக்கவிலை ரூ. 10 என்று வந்தால், இந்த மக்களுக்கு அரிசி கிலோவுக்கு ரூ. 5 என்று தரப்படும். ரூ. 12 என்று ஆனால், அரிசி விலை ரூ. 6-க்குத் தரப்படும். (இங்கு கொள்முதல் விலை ஏற ஏற, விற்பனை விலையும் ஏறும். ஆனாலும் மேலே உள்ள குழுவுக்கு விற்பனை விலை ஏறவே ஏறாது.
  • மிச்சமுள்ள 25%-னர், சந்தை விலைக்கு தனியார் கடைகளில் வாங்கிக்கொள்ளவேண்டும்.
2. ரங்கராஜன் குழு
  • சட்டப்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும்தான் மானியம். (சுமார் 25% பேர்?) பிறருக்கு சட்டப்படி மானியம் தருவதாக வைத்துக்கொள்ளக்கூடாது. வேண்டுமென்றால் ஆண்டாண்டுக்கு பட்ஜெட்டில் இடமிருந்தால் அரசாணையின்படி மானியம் தரலாம்.
3. அபிஜித் சென், ஹிமான்ஷு
  • குறிப்பிட்ட ஒரு குழுவைத்தவிர பிறருக்கு உணவு தானியத்தின் விலையை, குறைந்தபட்சக் கொள்முதல் விலையுடன் இணைக்கவேண்டும்.
  • அநாதைகள், கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்கு மட்டும் தேசிய ஆலோசனைக் குழு சொல்லியுள்ள மானியம்.
  • மொத்த மக்கள்தொகையில் 25%-பேர் தவிர்த்து அனைவருக்கும் குறைந்தபட்சக் கொள்முதல் விலையில் 75% விலைக்கு தலைக்கு, மாதத்துக்கு, 7 கிலோ உணவு தானியம். (அதாவது 25% மானியம்.)
  • வேண்டுமென்றால், அடிமட்டத்தில் இருக்கும் குழுவினருக்கு, முதல் 3.5 கிலோவில் தேசிய ஆலோசனைக் குழு குறிப்பிட்டுள்ள மானியம்.
***

அடிப்படையில் இவை எவையுமே சரியான செயல்களாக எனக்குத் தோன்றவில்லை. எந்த மானிய முறையுமே சிக்கல் இல்லாததாக, நடைமுறைப்படுத்த எளிதானதாக இருக்கவேண்டும். மேலே குறிப்பிட்டவற்றில் இரண்டு மாபெரும் குறைகள் உள்ளன.

1. குறைந்தபட்சக் கொள்முதல் விலை. நம் நாட்டில் சொந்த அரசாலேயே விவசாயிகள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களது விலைபொருளுக்கு சந்தை விலை என்று எதுவும் கிடையாது. அரசு நிர்ணயிக்கும் விலைதான். இதிலிருந்து நாம் முற்றிலும் வெளியேறவேண்டும். விவசாயிகளுக்கு அரசு வம்படியாகக் குறைந்த கூலி தருவதால், உண்மையான மானியம் என்ன என்பது வெளியே தெரிவதில்லை. இந்த விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள் மீண்டும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வந்து, மானிய உணவுப்பொருளை வாங்கிச் சாப்பிட்டு, வறுமையிலேயே உழலுகிறார்கள்.

அரசு குறைந்தபட்சக் கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் தவறில்லை. அனால் தான் கொள்முதலைச் செய்யும்போது வேறு எந்தத் தனியாரும் கொள்முதல் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதில்தான் சிக்கல் உள்ளது. பல சிறு விவசாயிகளால் பல மாதங்களுக்குக் காத்திருக்க முடியாது. எனவே கிடைத்த விலைக்கு அரசுக்கே விற்றுவிடுகின்றனர். அரசும் உடனடியாகப் பணத்தைத் தருவதில்லை. பணம் கைக்குக் கிடைக்க நாளாகிறது. ஆனால் அரசு கொள்முதல் செய்யும் அதேநேரம் தனியாரையும் சந்தையில் இறக்கினால் என்ன ஆகும்? தனியார் குறைந்த கொள்முதல் விலையை முன்வைத்தால் விவசாயி தனியாரிடம் செல்லவேண்டியதில்லை. தனியார் அதிகக் கொள்முதல் விலையைக் காட்டினால், அதுவும் கைக்குமேல் பணம் என்றால் விவசாயி தனியாரிடம் விற்றுவிடலாம். விவசாயி ஒவ்வொரு முறையும் அரசிடம் சென்று கொள்முதல் விலையை ஏற்றிக்கொடுங்கள் ஐயா என்று பிச்சை எடுக்கவேண்டாம். தனியார் நிறுவனங்கள் சந்தை நிலையைப் பொருத்தும் போட்டியைப் பொருத்தும், கொள்முதல் விலையை ஏற்றும். அதற்கு இணையாக அரசும் கொள்முதல் விலையை ஏற்றித்தான் ஆகவேண்டும். அதேபோல தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலையை அதலபாதாளத்துக்கு இறக்கவும் முடியாது. அரசின் குறைந்தபட்சக் கொள்முதல் விலை, அதற்குக்கீழ் விலைகள் போகாமல் பார்த்துக்கொள்ளும்.

இப்போது மத்திய அரசு கிட்டத்தட்ட கிழக்கிந்தியக் கம்பெனி போலத்தான் மக்களை ஏய்த்துப் பிழைப்பு நடத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி, நெசவுத்தொழில் புரிவோர் அனைவரும் தம்மிடம்தான் துணிகளை விற்கவேண்டும் என்று வலியுறுத்தியது. அதற்கு கம்பெனி கொடுக்கும் பணத்தைத்தான் அவர்கள் வாங்கிகொள்ளவேண்டும். விவாதமே கிடையாது. மறுப்போரின் விரல்கள் வெட்டப்படும். (கையைக் காலை வெட்டுவதை மட்டும்தான் நம் அரசுகள் செய்வதில்லை.)

முதலில் நாம் விடுவிக்கவேண்டியது விவசாயிகளை.

2. இப்போது மானியத்துக்கு வருவோம்.

ஒரு நாட்டில் 75% பேர் மானியத்தால் உணவை வாங்கி உண்கிறார்கள் என்றால் அதைவிட அசிங்கம் வேறெதுவும் இல்லை. இந்தியாவில் 25% ஆசாமிகள் தவிர மீது எல்லாரும் பிச்சைக்காரர்கள், மாதாமாதம் உணவு தானியம் வாங்க குடும்பத்துக்கு 560 ரூபாய்கூடச் செலவழிக்கமுடியாமல் வாடுபவர்கள் என்றால், பிரச்னை வேறு எங்கோ உள்ளது! (குடும்பத்துக்கு 4 பேர். ஆளுக்கு மாதம் 7 கிலோ. கிலோவுக்கு சந்தை விலை ரூ. 20. மொத்தம் = 4*7*20 = ரூ. 560.)

முதலில், மானியம் என்பது கடைசி 25% பேருக்கு மட்டும்தான் இருக்கவேண்டும். அதுவும், கன்னாபின்னாவென்று, இவனுக்கு 30%, அவனுக்கு 17.5%, இவனுக்கு பிங்க் வண்ண ரேஷன் கார்டு, அவனுக்கு பச்சை வண்ண ரேஷன் கார்டு என்றெல்லாம் இருக்கவேண்டிய அவசியமே இல்லை.

இன்னும் அதிரடியாக யோசிப்பதென்றால் உணவு கார்பரேஷன், குறைந்தபட்சக் கொள்முதல் விலை ஆகிய அனைத்தையுமே ஒழித்துவிடலாம். உணவு கார்பரேஷன் என்றில்லாமல், Stretegic Food Storage என்ற அமைப்பு, Stretegic Fuel Storage என்ற அமைப்பு ஆகியவை வேண்டிய அளவு பெட்ரோலியம், வேண்டிய அளவு உணவு தானியம் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். தனியார் நிறுவனங்கள் தனியார் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வார்கள். இங்கு குறைந்தபட்சக் கொள்முதல் விலை என்ற ஒன்றை நிர்ணயம் செய்து, கொள்முதல் அதற்குக்கீழ் போகக்கூடாது என்று வலியுறுத்தவேண்டும். எப்படி minimum wage என்ற கருத்து இருக்கிறதோ, அதைப்போல. இந்த உணவுக் கிடங்கும் எரிபொருள் கிடங்கும், சந்தை விலை விழுகிற நேரத்தில் வாங்கிச் சேகரிக்கவேண்டும். விலை ஏறுகிற நேரத்தில் விற்று சந்தை விலையைக் குறைக்கவேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. அர்த்தசாஸ்திரத்திலேயே சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம்தான்.

25% அல்லது அதற்கும் குறைவான ஏழைகளுக்கு நேரடி மானியம் என்ற முறையில் மாதாமாதம் உதவித்தொகையை அளித்துவிடலாம். உணவுக்கு அவர்களே பொதுச்சந்தையில் செலவு செய்துகொள்வார்கள்.

இதன்மூலம் பெருகும் அரசுச் செலவுகளைக் குறைக்கலாம். ஊழலை நிச்சயமாகக் குறைக்கலாம். பணம் நேரடியாக, தேவைப்படுவோருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். விவசாயிகளுக்கு நிச்சயமாக சரியான கூலி கிடைக்கும். அவர்கள் விவசாயக் கூலிகளுக்கு அதிகச் சமபளம் தருவர். இதனாலேயே பலர் வறுமைக்கோட்டுக்கு மேலே வருவர்.

மாறாக நமது முறையில், மாபெரும் குழுவான விவசாயிகள், விவசாயக் கூலிகளை அழுத்தி தரையில் வைத்துள்ளோம். பின் அவர்களுக்கு இலவசங்கள், மானியங்கள் ஆகியவற்றைத் தருகிறோம். இதனால் அரசுக்கு நிதிப் பற்றாக்குறை வருகிறது என்று புலம்புகிறோம். இவற்றை எல்லாம் முற்றிலுமாகத் தவிர்க்கலாம்.

Thursday, March 17, 2011

குறுங்கடன் - 3 - சுய உதவி

முகமது யூனுஸ் பங்களாதேசத்தில் அறிமுகப்படுத்திய குறுங்கடன் மாதிரிக்குப் பெயர் ‘கிராமின் மாதிரி’. யூனுஸ் ஒரு ‘லாப நோக்குள்ள’ நிறுவனத்தைத்தான் தொடங்கினார். லாபம் அவசியம் என்பது யூனுஸின் கருத்து. ஆனால் அந்த லாபம் அதிகமாக இருக்கக்கூடாது. லாபத்தை மீண்டும் மீண்டும் முதலீடு செய்து கொடுக்கக்கூடிய கடன்களை அதிகரிக்கவேண்டும். இதுதான் அவரது கருத்து.

கிராமின் ஆரம்பம் கடினமாகத்தான் இருந்தது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் என்பதை அவர்களது கணவர்கள் எதிர்த்தனர். பெண்ணுக்குக் கையில் பணம் கிடைத்தால் அவளுக்கு மதிப்பு கூடும். கணவர்களால் அடித்து நொறுக்கி ஆகாத்தியம் செய்யமுடியாது. ஆனால் நாளடைவில் ஆண்கள் வழிக்கு வந்தனர். முல்லாக்கள் வட்டியுள்ள கடனுக்கு எதிரான போராட்டத்தை முன்வைத்தனர். ஆனால் செயல்முறையில் மக்கள் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் குறுங்கடன் மெதுவாக, மிக மெதுவாகத்தான் பங்களாதேச மக்களுக்கு நன்மை செய்தது.

முதலில் கிராமின் வளரவேண்டியிருந்தது. உலக அளவில் பலரது நம்பிக்கையைப் பெறவேண்டியிருந்தது. பங்களாதேசம் இயற்கைப் பேரிடர்களால் எப்போதும் தாக்கப்படும் ஒரு தேசம். வெள்ளம், புயல், பயிர் நாசம். உணவுக்குக் கஷ்டம். அங்கு உருப்படியான அரசியலும் கிடையாது. எர்ஷாதின் சர்வாதிகார ஆட்சியை ஏறக்கட்டியபிறகு இரு பெண்கள் ஆக்ரோஷமான அரசியலை நடத்தினர் - இன்றும் தொடர்கின்றனர். ஒருவர் கொல்லப்பட்ட பங்களாதேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா; தற்போதைய பிரதமர். இன்னொருவர் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர், ஜெனரல் ஜியாவுர் ரஹ்மானின் மனைவி பேகம் காலிதா ஜியா. இன்றுவரை இரு பெண்களுக்கும் இடையில் வெட்டுக் குத்துப் பழி. எர்ஷாதைப் பதவியிலிருந்து இறக்கமட்டுமே இருவரும் ஒன்று சேர்ந்தனர்.

பங்களாதேசத்தில் படிப்பறிவு இந்தியாவைவிடக் குறைவு. ஏழைமை இந்தியாவைவிட அதிகம். தொழில் வளர்ச்சி இந்தியாவைவிடக் குறைவு. அரசியல் இந்தியாவைவிட மோசம். அதனால் பங்களதேசத்தின் வளர்ச்சி மிக மிக மெதுவாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று, யூனுஸின் குறுங்கடன் பல லட்சம் ஏழைகளின் வாழ்க்கையை சற்றேனுமாவது முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது என்பதுதான்.

ஆனால் யூனுஸுக்கு ஏகப்பட்ட எதிரிகள் உள்ளனர். இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது குறுங்கடன் என்பதையே எதிர்க்கும் உலகளாவிய இடதுசாரிகள். யூனுஸ் கார்பரேட் குழுமங்களின் கையாள் என்பதில் தொடங்கி, ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை என்பதுவரையில் இந்தக் குற்றச்சாட்டுகள் செல்கின்றன. பங்களாதேசத்துக்குள், மாற்று குறுங்கடன் நிறுவனர்கள் சிலரும் யூனுஸுக்குக் கிடைக்கும் உலகப் பெருமையைக் கண்டு பொருமுகிறார்கள். யூனுஸ்க்கு அமைதி நோபல் பரிசு கிடைத்ததும் அவர்மீது படியும் ஏச்சுகள் அதிகரிக்கவே செய்துள்ளன.

கிராமின் வெறும் குறுங்கடனுடன் நிற்கவில்லை. இந்தியா போலன்றி பங்களாதேசத்தில் பெரிய அளவில் தொழில்துறை கிடையாது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? கிராமின் வங்கிதான் புதிய பல தொழில்களுக்கு அடி போட்டுக்கொடுத்தது. நார்வேயின் டெலிநாருடன் இணைந்து கிராமின் டெலிகாம் என்ற செல்பேசி நிறுவனத்தை ஆரம்பித்தது. அதன்மூலம் போன் லேடீஸ் என்ற ஐடியாவை முன்வைத்து கிராமங்களில் குறுங்கடன்கள் மூலமாக, பெண்கள் நடத்தும் செல்பேசியால் ஆன பொதுத் தொலைபேசி முறையைக் கொண்டுவந்தது. முதன்முதலில் பங்களாதேசத்துக்கு உருப்படியான இண்டர்னெட் சேவையைக் கொண்டுவந்ததும் கிராமின் வங்கியின் கிராமின் இண்டெர்னெட்தான். பிரான்ஸின் குரூப் டானோனுடன் இணைந்து விடமின் கலந்த தயிர் தயாரித்து, ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அவற்றை விற்க முனைந்தது கிராமின். இப்படி கிராமினின் பல்வேறு நிறுவனங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதனால்தானோ என்னவோ, யூனுஸுக்கு 70 வயது ஆகிவிட்டது என்று அவரை கிராமின் வங்கியின் தலைமைப் பதவியிலிருந்து பங்களாதேச அரசு தூக்கிவிட்டது!

சில ஆண்டுகளுக்குமுன் காலிதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் முடியைப் பிய்த்துக்கொண்டு சண்டை போட்டனர். தேர்தலுக்கு முந்தைய சண்டை இது. அப்போது யூனுஸ் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார். நோபல் பரிசு பெற்ற மிதப்பில் இருந்ததனாலோ என்னவோ, தானும் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அவர் முடிவு செய்தார். முன்னாள் பிரதமரும் இன்னாள் பிரதமரும் அடித்துக்கொள்ளும் சண்டை நாட்டு மக்கள் அனைவரையுமே வெறுப்பில் ஆழ்த்தியிருந்தது. தன்னை ஒரு மாற்றாக முன்வைக்க யூனுஸ் முன்வந்ததும் அரசியல்வாதிகள் அவருக்குக் கட்டம் கட்டினர். ஒருவிதமாக அரசியல் அமைதி வந்து, தேர்தல் நடத்தப்பட்டு, ஷேக் ஹசீனா ஜெயித்தார். அப்போதே யூனுஸுக்கு ஆப்படிப்பது என்று முடிவானது. ஹசீனா யூனுஸ்மீது பணம் கையாடல் குற்றச்சாட்டுகளை வைத்தார். பின்னர் இப்போது 70 வயதாகிவிட்டது; எனவே பதவியில் இருக்கமுடியாது என்ற சட்டப்படியான நடவடிக்கை.

யூனுஸ் இதனை எதிர்ப்பது எளிதல்ல. நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டுப் பார்த்தால், யூனுஸ் கட்சி வீக். அவர் பேசாமல் வேறு விஷயங்களில் இறங்கலாம். கட்சி பாலிடிக்ஸ் அவருக்குச் சரிப்படுமா என்று தெரியவில்லை.

***

இந்தியாவில் இதே நேரத்தில் வேறொரு சோதனை முயற்சி நடந்துகொண்டிருந்தது. சிட்பி, நபார்ட் போன்ற மத்திய அரசின் வங்கி அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் என்னும் முறையை ஊக்குவித்துக்கொண்டிருந்தன.

மக்களிடையே, குறிப்பாக, ஏழைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுதான் இதன் அடிப்படை. மக்கள் 20 பேர் கொண்ட குழுக்களாகக் கூடி, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை சேமிக்கவேண்டும். இவர்களுக்கு உதவ ஏதேனும் ஒரு தொண்டமைப்பு முன்வரும். இந்தப் பணத்தை ஏதெனும் ஒரு பொதுத்துறை வங்கியில் குழுக் கணக்காக எடுத்துக்கொள்வார்கள். இந்தப் பணத்திலிருந்து குழுவின் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட வட்டியில் கடன் கொடுக்கலாம். அவர் கடனைக் குறிப்பிட்ட தினத்துக்குள் கட்டிவிடவேண்டும். நாளடைவில் அந்த வங்கியே மேற்கொண்டு கொஞ்சம் பணத்தைக் குழுவுக்குக் கடனாகக் கொடுக்கும். அந்தப் பணத்தையும் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் கடனாகக் கொடுத்துக்கொள்ளலாம்.

பிரையாரிட்டி செக்டர் என்ற கணக்கில் இதுபோன்ற சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் தருவதை மத்திய அரசு ஊக்குவிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கியும் குறிப்பிட்ட அளவு கடன்களை இந்த வழியில் கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த சுய உதவிக் குழுக்களைக் கட்டமைத்து இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் தொண்டமைப்புக்கு மாநில அரசுகள் மானியத் தொகை கொடுத்தனர்.

லாபநோக்கற்ற அமைப்புகள் என்றாலும் இவற்றில் நிறைய ஊழல்களும் நிறைந்திருந்தன. இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களது பணம் பிறருக்குப் பயன்பட ஆரம்பித்தது. தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்த ஓட்டுவங்கியாக குறிப்பிட்ட பணம் கைமாறினால் வாக்களிக்கப்படும் என்பதாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எந்த ஒரு தொண்டமைப்பாலும் சராசரியாக, 10-20 சுய உதவிக்குழுக்களுக்குமேல் நடத்தமுடியாது. இவர்களிடம் தேவையான தகவல் தொடர்பு மென்பொருள்கள் இருக்காது.

பணப் பட்டுவாடா என்பதைத் தாண்டி, ஸ்கில் பில்டிங் என்னும் திறன் மேம்பாடு இவர்களுடைய ஆதாரத் தேவை. ஆனால் எவ்வளவு குழுக்களில் இது முறையாக, ஒழுங்காக நடந்தது என்பது தெரியவில்லை.

***

மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்னும் அமைப்புகள் ஆங்காங்கே தோன்றி, மையமான தலைமை இல்லாமல் நடப்பதால், சில நன்மைகள் உண்டு, பல தீமைகள் உண்டு. பெயர் சொல்லும்படியாக ஓரிரு அமைப்புகளையே சொல்லலாம். ஆனால் ஸ்கேலபிலிடி கிடையாது. இவை அனைத்தும் அடிப்படையில் சேமிப்பையும் அதற்குப்பின் கடனையும் முன்வைக்கின்றன. ஆனால் பெரும்பாலான ஏழை மக்களுக்கு, சேமிக்கக் கையில் ஒன்றுமே இல்லை. அவர்களுக்குத் தேவை முதலில் கடன். பின் அதிலிருந்து வரும் வருமானத்தில் சேமிப்பு. பின் ஒழுங்கான குறுமுதலீடு, குறுங்காப்பீடு...

இங்குதான் மீண்டும் கிராமின் மாதிரி இந்தியாவுக்குள் புகுந்தது.

(தொடரும்)

Wednesday, March 16, 2011

குறுங்கடன் - 2 - எல்லோருக்கும் கடன்

கடன் பற்றி பல்வேறு கலாசாரங்களிலும் மதங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இஸ்லாம், வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிப்பதில்லை. யூதர்களும் ஆரம்பத்தில் வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிக்கவில்லை. ஆனால் நாளடைவில், யூதர் அல்லாதோருக்கு யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரம்பகாலக் கிறிஸ்தவமும் வட்டிக்குக் கடன் கொடுத்தலைக் கடுமையாக எதிர்த்தது. எனவே இயல்பாகவே ஐரோப்பா முழுமையிலும் கிறிஸ்தவர்கள் கடன் வாங்குபவர்களாகவும் யூதர்கள் அவர்களுக்குக் கடன் கொடுப்பவர்களாகவும் ஆனார்கள்! பின்னர் வங்கித் தொழில் என்ற ஒன்று ஐரோப்பாவில் ஆரம்பித்ததும், யூதக் குடும்பங்களே அதில் முதன்மையாக இருந்தன. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு அங்கு குடியேற்றங்கள் நடந்தபின்னும் இதுவே தொடர்ந்தது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் பற்றியும் அதற்கான விதிகள் பற்றியும் நாரத தர்மசாஸ்திரம் விரிவாகவே பேசுகிறது. பாஸ்கராசார்யா போன்றோரின் கணிதப் புத்தகங்களில் வட்டியைக் கணக்கிடுவது எப்படி என்றெல்லாம் கணக்குகள் வருகின்றன. தமிழ்க் காப்பியங்களில் வருவோர், வட்டிக்குக் கடன் வாங்கி, பொருள் வாங்கி, வாணிபம் செய்து பொருள் ஈட்டுதல் அல்லது பொருள் இழத்தல் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம். கம்ப ராமாயணம், கடன் பெற்றார் நெஞ்சம் போல ராவணன் கலங்கியதைச் சொல்வதிலிருந்து கடன் வாங்கினவர் கடனைத் திருப்பச் செலுத்த முழுமையான முயற்சிகளை மேற்கொள்வதை அறியலாம். இந்தியாவில் சில குறிப்பிட்ட சாதியினர் கடன் தருதலில் ஈடுபடுவதைப் பார்த்துள்ளோம்.

நெதர்லாந்தில் தொடங்கிய நவீன வங்கிச் சேவை இங்கிலாந்தை அடைந்து, அங்கிருந்து ஐரோப்பாவில் பரவி, பிரிட்டிஷார் மூலமாக இந்தியாவுக்கும் வந்தது. சென்னையில் ஆர்பத்நாட் வங்கி மூழ்கியதை அடுத்து இந்தியர்கள் தங்களுக்கென சுதேசி வங்கி ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டே இந்தியன் வங்கி, சில செட்டியார்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியா சுதந்தரம் பெறுவதற்குமுன்னரேயே பல வங்கிகள் செயல்பாட்டில் இருந்தன. சுதந்தரத்துக்குப் பிறகு, இந்திரா காந்தி காலத்தில் பல பெரிய வங்கிகள் கட்டாயமாக தேசியமயமாக்கப்பட்டன. இந்தியன் வங்கியும்கூட அப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1990-களின் தாராளமயமாக்கலின்போது தனியாரும் வங்கிகள் தொடங்கலாம் என்று உரிமம் தரப்பட்டு சில தனியார் வங்கிகள் உருவாகின. முற்றிலும் அந்நிய நாட்டின் வங்கிகளும் இந்தியாவில் சேவையைத் தர முடியும். இந்திய வங்கிகளில் அந்நிய நாட்டு அமைப்புகள் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்திருக்கமுடியும்.

பெருமளவு வங்கிச் சேவைகள் வளர்ந்தாலும் இவை ஏழைகளைச் சென்றடைவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். காரணம், இந்த வங்கிகள் அனைத்துமே, கடன் பெறத் தகுதியானோர் என்போருக்கே கடன் தரலாம். யாருக்குக் கடன் பெறத் தகுதி உண்டு என்பதை எப்படித் தீர்மானிப்பது என்பதற்கான சில விதிமுறைகள் (norms) உள்ளன. இதில் பெரும்பாலான மக்கள் விலக்கப்பட்டுவிடுவார்கள்.

வீட்டுக்கு எதிராகக் கடன், தங்கம் அல்லது பிற மதிப்புள்ள சொத்துகளுக்கு எதிராகக் கடன் என்பது கால காலமாக நிகழ்ந்துவரும் ஒன்று. வீடு கட்டக் கடன், வாகனம் வாங்கக் கடன் ஆகியவை கடந்த இருபது ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்தன. கிரெடிட் கார்டுகள், என்ன ஏது என்று கேள்வி கேட்காமல், ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கக்கூடிய அளவுக்குத் தனிநபர் கடன்களை அளித்தன. இதற்கான வட்டி அதிகம். பின்னர் வங்கிகள் நேரடியாகவே பெர்சனல் லோன் என்ற தனிநபர் கடன்களை எந்தவித பாதுகாப்பும் வைத்துக்கொள்ளாமல் தர ஆரம்பித்தன. ஒரு முறை கடன் வாங்கி சரியாகத் திருப்பிக் கட்டியிருந்தால் தானாகவே அடுத்தமுறை அதிகக் கடன் தர வங்கிகள் தயாராக இருந்தன.

அரசு வேலையில் இருப்போருக்கு பொதுத்துறை வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தன. தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கு, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கௌரவத்துக்குப் பொருந்தினாற்போல கடன் கிடைத்தது. சுயதொழில் புரிவோருக்குக் கடன் பெறுதலில் சிக்கல் இருந்தது. ஆனால் இப்போது ஆண்டாண்டுக்குச் சரியாக வருமான வரி கட்டுவோருக்கு நல்ல கடன்கள் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு கிளினிக்கில் கருவிகள் வாங்கக் கடன் கிடைக்கிறது. சுயதொழில் புரிவோர் சில பல லட்சங்களுக்கு அல்லது கோடிகளுக்கு ஆலைக்கான கருவிகளை வாங்கக் கடன் கிடைக்கிறது.

ஆனால் தெருவோர ஏழைக்கு கையேந்தி பவன் வைக்கத் தேவையான 10,000 ரூபாய் அல்லது இஸ்திரி வண்டி அமைக்கத் தேவையான 5,000 ரூபாய்தான் கடனாகக் கிடைப்பதில்லை. இவர்கள் பெரும்பாலும் வட்டிக் கடைகளை நம்பி, வாழ்க்கையை அழிக்கவேண்டியுள்ளது.

***

பங்களாதேசத்துக்காரர் முகமது யூனுஸ். அது கிழக்கு பாகிஸ்தானாக இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பிஎச்.டி முடித்துவிட்டு அங்குள்ள ஒரு கல்லூரியில் வேலை செய்துவந்தார் அவர். முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டு, மேற்கு பாகிஸ்தான் துருப்புகள் கிழக்கு பாகிஸ்தானில் அட்டகாசம் செய்து, அதன் விளைவாக அகதிகள் இந்தியாவுக்கு வந்ததும் இந்தியா தன் படைகளை அனுப்பி பங்களாதேசத்துக்கு விடுதலை பெற்றுத்தந்தது. உடனேயே தாய்நாட்டை முன்னுக்குக் கொண்டுவர என்று யூனுஸ் தன் வேலையை விட்டுவிட்டு பங்களாதேசத்துக்குத் திரும்ப வந்தார்.

அங்கே பல்கலைக்கழக வேலை ஒன்றை எடுத்துக்கொண்டு பொருளாதாரப் பாடத்தை நடத்தினார். ஆனால் வகுப்பறை பொருளாதாரமும் தெருவின் பொருளாதாரமும் ஒத்துப்போகாததைக் கண்டார். தன் மாணவர்களுடன் அருகில் இருந்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களின் தினசரி வேலை என்ன, எப்படி வருமானம் பெறுகிறார்கள் என்று பார்வையிட்டார். அந்த கிராமத்துப் பெண்கள் பிரம்பு பிளாச்சால் கூடை முடைபவர்கள். கையில் காசு இல்லாத காரணத்தால் தரகர்களிடமிருந்தே மூலப்பொருளை வாங்கி, கூடை முடைந்ததும் அவற்றை தரகர்களிடமே அவர்கள் சொன்ன காசுக்கே விற்றுவந்தார்கள். நாள் முழுதும் வேலை செய்தாலும் கையில் கிடைப்பதோ சில டாக்காக்கள் மட்டுமே. சொந்தமாகக் கொஞ்சம் பணம் இருந்தால் தாங்களே மூலப்பொருள்களை வாங்கி, கூடைகளை முடைந்து நல்ல விலைக்கு விற்கமுடியும் என்றும் தங்கள் அதே உழைப்பை அதிக வருமானமாக மாற்றமுடியும் என்று அந்தப் பெண்கள் சொன்னார்கள்.

உடனேயே யூனுஸ் தன் கையிலிருந்து அவர்களுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்தார். அடுத்த சில நாள்களில் அந்தப் பெண்கள் பெறும் வருமானம் அதிகமானது. இதே செயலை நாடு முழுவதும் ஏன் செய்யக்கூடாது என்று அவருக்குத் தோன்றியது.

அப்போதுதான் இது எளிதான செயல் அல்ல என்பதை அவர் உணர்ந்தார். முதலில் வங்கிகள் இந்த மக்களுக்குக் கடன் தர விரும்பவில்லை. தானே சொந்தமாக அவர்களுக்கு ஜவாப்தாரியாக இருப்பதாக யூனுஸ் சொன்னதும் ஒரு வங்கி கடன் தர முன்வந்தது. ஆனால் ஒவ்வொரு கடன் விண்ணப்பத்திலும் யூனுஸ் கையெழுத்திடவேண்டியிருந்தது. வங்கிகளுக்கு அதிக விருப்பம் இல்லாத காரணத்தால் தானே ஒரு வங்கியை உருவாக்கிவிட யூனுஸ் நினைத்தார்.

அப்போது ஜெனரல் எர்ஷாத், ராணுவப் புரட்சி மூலம் பங்களாதேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தார். அவரது நிதியமைச்சராக இருந்தவர் யூனுஸின் நண்பர். அவர்மூலமாக எர்ஷாதின் அனுமதியுடன் கிராமின் வங்கி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அரசு 60% பங்கும் கடன் பெறும் மக்கள் மீதம் 40% பங்கும் கொண்டதாகத் தொடங்கப்பட்ட வங்கியில் பின்னர் அரசின் பங்கு 40%-கக் குறைக்கப்பட்டது.

கிராமின் வங்கி குறுங்கடன் என்ற முறையைக் கொண்டுவந்தது. கொடுக்கப்படும் கடன் தொகை மிகக் குறைவானது. 2,000 டாக்கா அல்லது அதைப்போலத் தொடங்கி, பின்னர் 5,000 டாக்கா என்றுதான் ஆரம்பக் கடன் இருந்தது. இந்தத் தொகைக்கு வட்டி உண்டு. Equated Weekly Instalments எனப்படும் வாரா வாரத் தொகை மூலம் முதல், வட்டி இரண்டும் சேர்த்து அடைக்கப்படும். கிராமின் வங்கி தொடங்குவதற்கு முன்னமேயே யூனுஸ் நேரடி அனுபவமாக சிலவற்றைக் கண்டுகொண்டார்.

1. பெண்கள்தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள். ஆண்கள் பணத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். அவர்களை நம்பிக் கடன் கொடுப்பது உருப்படாது.
2. விவசாயத்துக்குக் கடன் கொடுப்பது உபயோகமானதல்ல. ஏனெனில் எப்படியும் அரசு விவசாயத்துக்கு கொடுக்கும் கடனை அவ்வப்போது தள்ளுபடி செய்துகொண்டே இருக்கும். எனவே தனியாரிடம் வாங்கும் கடனையும் திருப்பிச் செலுத்த விவசாயிகள் விரும்புவதில்லை.

எனவே பெண்களுக்குக் கடன் கொடுத்து, அவர்கள் ஏதேனும் சிறு தொழில் செய்வதுமூலம் அவர்கள் வாழ்க்கையை மாற்றலாம் என்று யூனுஸ் முடிவுசெய்தார்.

பெண்கள் கடனைத் திருப்பிக்கொடுப்பார்கள் என்றாலும் அவர்கள் கட்டாயமாகக் கடனைத் திருப்பிக்கொடுக்க என்ன செய்வது என்று யோசித்ததில் உருவானதுதான் குழுக்கடன். மொத்தம் ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களை கிராமின் வங்கி உருவாக்கும். இந்தக் குழுவில் ஒவ்வொருவர் வாங்கும் கடனுக்கும் மற்றவர்களும் சேர்ந்து பொறுப்பு. ஒருவர் கடனைக் கட்டாவிட்டாலும் மற்றவர்கள் கட்டவேண்டும். ஆனால் எந்தவித ஆவணமும் கிடையாது. அப்படி இருக்கும்போது மக்கள் ஏன் கடனைத் திரும்பச் செலுத்தவேண்டும்?

ஒரு குழுவில் இருக்கும் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கடன் கிடைக்காது. இருவருக்கு மட்டும்தான். அவர்கள் ஒழுங்காகக் கட்டினால்தான் மற்ற இருவருக்குக் கொடுக்கப்படும். நால்வரும் கட்டி முடித்தால்தான் குழுத் தலைவருக்குக் கடன் கிடைக்கும். அவர் ஒழுங்காகக் கட்டினால்தான் மீண்டும் அடுத்த கடன் குழுவின் பிற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். கடன்மூலம்தான் வாழ்க்கை உயருகிறது என்னும்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டியாகவேண்டிய கட்டாயமாகிறது.

இந்த முறையில் பிரச்னையே இல்லையா? மக்கள் எல்லாம் வளம் பெற்று பங்களாதேசம் உலகிலேயே முதன்மை நாடானதா? கடனுக்கு எதிரான இஸ்லாமிய முல்லாக்கள் நிறைந்த பங்களேதேசம் யூனுஸை எப்படி எதிர்கொண்டது? அரசியல் உலகில் அவருக்கு எந்த மாதிரியான சிக்கல்கள் எழுந்தன?

அடுத்த பாகத்தில் இவற்றைப் பார்ப்போம்.

(தொடரும்)

Tuesday, March 15, 2011

குறுங்கடன் - 1

பொதுவாக வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படாத ஒரு செய்தி குறுங்கடன் (microfinance).

பின்தங்கியுள்ள ஒரு நாட்டில் நவீன பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கும்போது, அந்த வளர்ச்சி சீராக அனைத்து மக்களுக்கும் போய்ச் சேராது.

நிலத்தையும் கைவினைப் பொருள்களையும் மட்டுமே நம்பியிருந்த, இயந்திரமயமாதலுக்கு முந்தைய, சமுதாயத்தில் தனி ஒருவர் தன் வருமானத்தைத் தடாலடியாகப் பெருக்கச் சாத்தியங்கள் குறைவாக இருந்தது. அவர் முரட்டுத்தனமாகப் பிறரது நிலங்களைக் கையகப்படுத்தினாலோ அல்லது பல அடிமைகளைக் கொண்டு அவர்களது உழைப்பில் தன் செல்வத்தைப் பெருக்கினாலோதான் சாத்தியம். இயந்திரமயமானதும், மூலதனம்தான் முக்கியமான செல்வம் என்றானது. பொருள்களுக்கான பெரும் தேவை இருந்தது. பொருள்களும் எளிதானவை. எனவே மூலதனம் இருந்தால், அதனைக் கொண்டு ஆலை ஒன்றை ஏற்படுத்தி, அதில் பலரை வேலைக்கு வைத்து, அவர்கள் உருவாக்கும் உற்பத்தியைக் கொண்டு லாபம் ஈட்டலாம்.

ஆனால் இன்றைய நவீன பொருளாதாரம் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. வெறும் மூலதனம் மட்டும் போதாது. மூளை நிறைய வேண்டும். ஒரு தொழிலை ஆரம்பித்தால் லாபம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. இதை கம்யூனிஸ்டு சித்தாந்திகள் புரிந்துகொள்வதே இல்லை. சொல்லப்போனால், இன்று மூளை மட்டும் இருந்தாலே போதும். மூலதனத்தைக் கொடுக்க வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களும் தனிப்பட்ட பணக்காரர்களும் உள்ளனர். மூளை என்றால் என்ன? ஒரு நல்ல ஐடியா. இந்தக் குறிப்பிட்ட சந்தையில், இந்தவிதமான பொருளை, இந்தத் தரத்தில் உற்பத்தி செய்து, இந்த விலைக்கு விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஐடியா. மூலதனத்தைவிட இதுபோன்ற ஐடியாக்களே முக்கியமானவை என்பதை நிதியுடையோர் புரிந்துகொண்ட காரணத்தால் உருவானவையே வென்ச்சர் கேபிடல் அமைப்புகள். இந்தத் தொழில்கள் பொருள் உற்பத்தியாக இருக்கலாம், சேவை வழங்குதலாக இருக்கலாம்.

நவீன பொருளாதாரத்தில் இப்படி எண்ணற்ற நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை உருவாக்குபவர்களால் நிறைய லாபம் சம்பாதிக்க முடிகிறது; இந்த நிறுவனங்களில் வேலை செய்வோரும் நிறையச் சம்பளம் பெற முடிகிறது. ஆனால் இந்த வாய்ப்புகளை அனைவரையும் சென்றடைவதில்லை.

முதலில் வேலை வாய்ப்புகளை மட்டும் பார்ப்போம். பெரும்பாலான அதிக சம்பளம் தரக்கூடிய நவீன வேலைகளை எடுத்துச் செய்ய ஒருவர் அதி புத்திசாலியாக எல்லாம் இருக்கவேண்டியதே இல்லை. அடிப்படையான சில திறன்கள் பெற்றவராக இருந்தாலேயே போதும். நுகர்வோர் சேவையை வழங்க, நன்கு பேசத் தெரிந்தவராக இருக்கவேண்டும். ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் நன்கு உரையாடத் தெரிந்தவராக இருக்கவேண்டும். விற்பனைத் துறையில் இருந்தால் நைச்சியமாகப் பேசி, எதிராளியை நிறையப் பொருள்களையோ சேவைகளையோ வாங்குமாறு செய்யவேண்டும். நன்கு பேச்சுவார்த்தை நடத்தத் தெரிந்தவராக இருக்கவேண்டும். எதிராளி பேசுவதைச் சட்டென்று புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்கவேண்டும். கணினிப் பயன்பாட்டுத் திறன் அவசியம். இன்னும் பலப் பல திறன்கள் உள்ளன. இந்தத் திறன்களுக்கும் பள்ளி, கல்லூரி பாடங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பெரும்பாலும் நகர்வாழ் மாணவர்கள், மத்தியதரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வேலைகளைப் பெறுகிறார்கள். அவர்களது குடும்பங்கள் வேகமாக முன்னேறவும் செய்கின்றன.

இந்த வாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இவர்களுக்கு குறைந்த சம்பளத்திலேயே வேலைகள் கிடைக்கின்றன. உள்ளார்ந்த திறன்கள் எவை என்பதை அறிந்துகொள்ளாமல், தவறாக, ஆங்கிலப் படிப்பு மட்டுமே போதும் அல்லது எஞ்சினியரிங் படிப்பு மட்டுமே போதும் என்று நினைத்துக்கொண்டு நிறையப் பணம் செலவுசெய்து தரமற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து, எதையும் கற்றுக்கொள்ளாமல் வேலை தேட வந்து, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

தீர்வுதான் என்ன? அடிப்படையில் நம் கல்வி முறையைப் பெரிதும் மாற்றவேண்டும். என் கணிப்பில் பாடத்திட்டம் என்பது முக்கியமே அல்ல. சிலபஸ் என்ற பெயரில் ஏகப்பட்ட விஷயங்களைப் புகுத்தி, அதைச் சரியாகச் சொல்லித்தரத் தெரியாத ஆசிரியர்கள் கையில் மாட்டிக்கொண்டு பெரும்பாலான மாணவர்கள் நாசமாகப் போகிறார்கள். கல்விமீதே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்னைப் பொருத்தமட்டில், 90% மாணவர்களின் தேவை, படிக்க, புரிந்துகொள்ள, எழுத, பேசக் கற்றுத்தருவதே. ஆங்கிலமும் தாய்மொழியும் அவசியம். முடியாவிட்டால் தாய் மொழியிலாவது மேலே சொன்ன நான்கையும் நன்றாகச் செய்யத் தெரியவேண்டும். அவை தாண்டி, ஏதேனும் ஒரு துறையை அவரவர் விருப்பம் சார்ந்து படித்துக்கொள்ளலாம். கணக்கு, அறிவியல், கணினி புரோகிராமிங், வரலாறு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதற்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான திறன் வருமாறு செய்தல் வேண்டும். இதைப்பற்றி இங்கே மேலும் எழுதுவது இந்தக் கட்டுரைத் தொடரை வேறு திசையில் இழுத்துச் செல்லும் என்பதால் இத்தோடு விட்டுவிடுகிறேன்.

***

வேலைகளுக்கு வெளியே, சுயதொழில் புரிவதில் வேறொரு பிரச்னை உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கே கிடையாது. வங்கிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்கள். வளரும் நாட்டில் எண்ணற்ற சிறுதொழில் வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவது: ஓரளவுக்கான படிப்பு அல்லது சுய சிந்தனை. இரண்டாவது: கொஞ்சம் சொந்த மூலதனம், மீதம் கடன்.

நீங்கள் தெருவோரத்தில் ஒரு பெட்டிக்கடை வைக்க விரும்பலாம். அல்லது சில கோழிகளை வாங்கி முட்டை போடச் செய்து அவற்றை விற்க விரும்பலாம். இறால் வளர்க்க விரும்பலாம். தையல் தைத்துச் சம்பாதிக்க விரும்பலாம். கையேந்தி பவன் திறந்து சுடச்சுட சோறு விற்க விரும்பலாம். பரோட்டாக் கடை திறக்கலாம். சாண்ட்விச் விற்கலாம். பூ விற்கலாம். மொபைல் சிம் கார்டு விற்கும் பிசினஸ் செய்யலாம். ஒரு கார் வாங்கி, கால் டாக்ஸி நெட்வொர்க்கில் இணைந்துகொள்ளலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை மேலே சொன்ன இரண்டும். அடிப்படை வரவு செலவுக் கணக்கு தெரிந்திருக்கவேண்டும். லாபம் எது, நஷ்டம் எது என்று தெரிந்திருக்கவேண்டும். பணத்தை இழந்துவிடக்கூடாது. மற்றொரு பக்கம், மூலதனம் தேவை.

இந்த மூலதனம் எங்கிருந்து வரும்? தேவையான மூலதனம் அனைத்தையும் சொந்தமாகவே சேர்த்துவிட முடியுமா? பெரும்பாலானோருக்கு இது முடியாது. சொந்தக்காரர்களிடம் பெறமுடியுமா? அவர்களுக்கே சோற்றுக்கு வழி இல்லை. அப்போது ஓர் ஏழைக்கு வழிதான் என்ன?

அதுதான் தெருவுக்குத் தெரு வங்கிகள் உள்ளனவே?

ஆனால் இந்த வங்கிகளுக்குத் தினம் செல்வோர் யார் என்று பாருங்கள். நகரின் மக்கள் தொகையில் கீழே இருக்கும் 80% பேர் வங்கிக்குச் செல்லவே மாட்டார்கள். அவர்கள் சீட்டு கட்டிப் பணம் சேர்த்து, ஏலம் எடுப்பார்கள். பயங்கர வட்டிக்குக் கடன் வாங்கி அதில் மூழ்குவார்கள். மொத்தத்தில் அவர்களது தேவைக்கு ஏற்ப பணம் அவர்களுக்குக் கிடைக்காது. மறுபக்கம், பிசினஸ் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு 15,000 கோடி ரூபாய் கடன் பணம் திரட்டியது என்று செய்தி வரும். இங்கே இவர்களுக்கோ 15,000 ரூபாயைப் புரட்டுவது கடினம்.

இவர்கள் வளம் பெற வழியே இல்லையா?

(தொடரும்)