Wednesday, April 27, 2011

சத்ய சாயி பாபா

ஆங்கிலப் பத்திரிகைகள் ‘சத்ய சாயி பாபா மறைந்தார்’ என்று எழுத, தமிழ்ப் பத்திரிகைகள், ‘முக்தி அடைந்தார், சித்தி பெற்றார்’ என்றன. ஆந்திர மாநில அமைச்சர்கள் கண்ணில் நீருடன் பேசினர். மன்மோகன் சிங்(கே) நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

40,000 கோடி ரூபாய் என்றும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் அவரது அறக்கட்டளையின் சொத்து மதிப்பு பற்றித் தகவல்கள் வெளிவந்துள்ளன. சொத்தைப் பராமரிக்கப்போவது யார் என்ற கேள்வி ஒருபக்கம். ஆனால் அடுத்த ஆன்மிக வாரிசு யார் என்று இதுவரை கேள்விகளும் இல்லை; எனவே பதில்களும் இல்லை. எங்கோ கர்நாடக கிராமத்தில் அடுத்த சாயி பாபா பிறந்து வருவார் என்பதுடன் இப்போதைக்கு முற்றுப்புள்ளி.

சத்ய சாயி பாபா பெரும்பாலும் பொய், பித்தலாட்டம் போன்றவைமூலம் தன் ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தைக் கட்டினார். அற்புதங்கள் - அதாவது விபூதி, குங்குமத்தைக் காற்றிலிருந்து வரவழைப்பது, வயிற்றிலிருந்து லிங்கம், மோதிரம் போன்ற சிறு சிறு பொருள்களை வரவழைப்பது, தங்கத்தால் ஆன சங்கிலி போன்றவற்றைப் பக்தர்களுக்குத் தருவது - இவைதான் எளிய மக்களை அவரிடம் ஈர்த்தன. எளிய மக்கள் என்றால் அதில் காவஸ்கர், தெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள்முதல் பல சினிமா, அரசியல் பிரபலங்களும் அடக்கம்!

அரசியல்வாதிகளுக்கு சத்ய சாயி பாபாவிடம் வேறு பல ஆதாயங்களும் இருந்திருக்கலாம்.

கடந்த பல பத்தாண்டுகளில் இந்து மதப் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் உருவாக்கிய வெகு சிலரில் சத்ய சாயி பாபாவும் ஒருவர். ஹரே கிருஷ்ணா இயக்கத்தை உருவாக்கிய பக்தி வேதாந்த பிரபுபாதா, ‘செக்ஸ் சாமியார்’ என்று எளிதில் புறந்தள்ளிவிட முடியாத ரஜனீஷ், Transcendental Meditation என்பதைப் பிரபலமாக்கிய மகேஷ் யோகி ஆகியோர் வட்டத்தில் வருபவர் சத்ய சாயி பாபா. முதல் மூவர் வேதாந்தம்/கிருஷ்ண பக்தி, தத்துவம்/தாந்திரிகம், வேதம்/தியானம் ஆகியவற்றை முன்வைக்க, சத்ய சாயி பாபா அற்புதங்கள்/கூட்டு வழிபாடு ஆகியவற்றை முன்வைத்தார். இந்த நால்வருமே உருவாக்கிய அகில உலகத் தொண்டர் குழாம் இவர்களது காலத்துக்குப்பின் குலைந்துள்ளது, குலையப்போவது புரிந்துகொள்ளக்கூடியதே. இவர்கள் யாருமே வலுவான அடுத்த நிலைத் தலைவர்களை உருவாக்கவில்லை. சொத்துகளை மட்டும் எக்கச்சக்கமாகச் சேர்த்தார்கள்.

சத்ய சாயி பாபா அறக்கட்டளைமூலம் பல நல்ல காரியங்கள் (கல்வி நிலையங்கள், சென்னைக்குக் குடிநீர், சூப்பர் ஸ்பெசியாலிடி மருத்துவமனையில் நடக்கும் இலவச சிகிச்சைகள்) நிகழ்ந்தேறியுள்ளன என்றாலும் அடிப்படையில் தனியான ‘சாமியார்’ ஒருவர் கோடிக்கணக்கான சொத்துகளைச் சேகரிக்கும் நிலை நாட்டுக்கு நல்லதல்ல, பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல. இந்தியாவில் பொதுவாக சாமியார்கள் புனிதப் பசுக்களாகவே கருதப்படுகிறார்கள். அதிலும் அரசியல் லாகவம் தெரிந்தவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

இந்த நிலை மாறவேண்டுமானால் ஆன்மிக/மத அறக்கட்டளைகள் அனைத்தும் வலுவான கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்குக்கீழ் கொண்டுவரப்படவேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் பட்டியலிடப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் வரி வசூலிக்கப்படவேண்டும். கருப்புப் பணம் புரளாமல் இருக்க வகை செய்யப்படவேண்டும்., அந்நிய நாடுகளில் இந்த ஆசாமிகள் சொத்துகளைச் சேர்ப்பது கண்காணிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செய்வது, மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக ஆகாது. பணம் கொட்டும் வழியை ஓர் அரசு கவனமாகக் கண்காணிக்கத் தவறிவிட்டால் அதனால் நாட்டுக்குப் பெரும் கேடுதான் நிகழும்.

உதாரணத்துக்கு, பொதுமக்கள் கொடுத்துள்ள பல கோடி ரூபாய் பணம் இப்போது சத்ய சாயி அறக்கட்டளையை நிர்வகிக்கப்போகும் யாரோ சிலர் கையில். அந்தப் பணம் என்ன ஆகுமோ... மக்களுக்குப் பயன்படப்போகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதற்குமுன்பாவது சத்ய சாயி பாபா என்ற மனிதரால் தமக்கு ஏதோவிதத்தில் நிம்மதி என்று எண்ணிக்கொண்டு மக்கள் இந்தப் பணத்தை இந்த அறக்கட்டளைக்கு வழங்கினர். இப்போது அதுவும் கிடையாது.

எவ்வளவு விரைவில் இதுபோன்ற மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம் வருகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் இதனைக் கொண்டுவரக்கூடிய மனவலு இந்திய அரசியல்வாதிகளிடம் இப்போதைக்கு இல்லை என்றே நினைக்கிறேன். அடுத்த பத்தாண்டுகளிலாவது இது உறுதியாக ஏற்பட்டால் நல்லது.

Saturday, April 23, 2011

கேண்டீட் - வோல்ட்டேர்

வோல்ட்டேர் எழுதிய கேண்டீட் என்ற கடுமையான சட்டயர், தமிழில் என் மொழியாக்கத்தில். அச்சுப் புத்தகம் வேண்டுமெனில் கிழக்கு பதிப்பகத்தில் விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம். இங்கே மின் புத்தகமாக, இலவசமாக, புத்தக தினத்தை முன்னிட்டு.

Candide - Tamil Novel

ஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்

ஆர்தர் கோனான் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் முதலாவதான ‘A Study in Scarlet’ என்பதன் என்னுடைய தமிழாக்கம் - கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியானது. இப்போதும் அச்சுப் பதிப்பில் கிழக்கு வழியாகக் கிடைக்கும். இனி மின்புத்தகமாக, இலவசமாக scribd வழியாகவும் நீங்கள் இதனைப் படிக்கலாம். புத்தக தினத்துக்காக, உங்களுக்கே உங்களுக்காக!

Oru Mothiram Iru Kolaigal - Tamil Novel - Sherlock Holmes

Friday, April 22, 2011

கிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகள்

நாளை (23 ஏப்ரல் 2011) தொடங்கி சுமார் 10 நாள்களுக்கு கீழ்க்கண்ட இடங்களில் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகளை கிழக்கு நடத்துகிறது. இரண்டு மாதங்களுக்குமுன் செய்ததுபோல பழைய, அழுக்கான புத்தகங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. நீங்கள் செல்லவேண்டிய இடங்கள்:

மைலாப்பூரில்: தேஜா பவன்
மைலாப்பூர் தெப்பக் குளம் பஸ் ஸ்டாப் எதிரில்
ராமகிருஷ்ணா மிஷன் சாலை
அடையார் ஆனந்தபவன் அருகில்
மைலாப்பூர், சென்னை 600004
போன்: 95000-45608

***

ராயபுரத்தில்: ராசி மகால்
எண் 123, மன்னார் கோயில் தெரு
ராயபுரம், சென்னை 600013
போன்: 95000-45609

தி ஹிந்து குடும்பச் சண்டை

நான் ஆங்கிலம் கற்றுக்கொண்ட நாளிலிருந்து ஹிந்து செய்தித்தாள் படிக்கிறேன். இன்றும் அந்தச் செய்தித்தாளைத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறேன். இடையில் வெளிநாடு ஒன்றில் சில ஆண்டுகள் வசித்தபோதும் பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு வாரம் கழித்துக் கிடைக்கும் இந்தப் பத்திரிகையை விடாமல் வாசித்துவந்திருக்கிறேன்.

இந்தப் பத்திரிகைமீது குறைகள் இல்லாமல் இல்லை. எதோ ஒரு மாதிரியான ஆங்கிலத்தில் எழுதுவது இவர்கள் வழக்கம். ஆனால் அதன்மூலம்தான் நான் பல adjective-களைக் கற்றுக்கொண்டேன். சமீப காலங்களில் மொழியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்.ராம் எடிட்டர்-இன்-சீஃப் ஆவதற்குமுன் பெரும்பாலும் எஸ்டாபிளிஷ்மெண்ட் வழியைப் பின்பற்றும் கன்சர்வேடிவ் பத்திரிகை என்றே பெயர்பெற்றிருந்தது. ஆனால் என்.ராம் palace coup மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதும் எடிட்டோரியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கைப் பிரச்னையில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக, முதலில் சந்திரிகா குமரதுங்கவுக்கும் பின்னர் மகிந்த ராஜபக்‌ஷேவுக்கும் குரலாகவும், விடுதலைப் புலிகள் தரப்புக்கு முற்றிலும் எதிராக, பொய்க் கதைகளைப் பரப்பும் அளவுக்குச் சென்றது, முற்றிலும் சீன ஆதரவு நிலைப்பாடு, பொதுவான கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடு என்று தொடங்கி மேலும் பலவற்றைச் சொல்லலாம்.

அதனால் என்ன? பத்திரிகைகள் பக்கச் சார்புநிலை எடுப்பதில் என்ன தவறு என்று பலரும் கேட்கலாம். ஒன்றுமில்லை. என் பத்திரிகை எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்பது ஒரு பக்கம். சார்புநிலை தாண்டி பத்திரிகா தர்மம் என்பதிலிருந்து வழுவும் அளவுக்கு ஒரு செய்தித்தாள் போனால் அதைக் கண்டிக்கவேண்டிய தார்மிக நியாயம் ஒன்று மறுபக்கம்.

உதாரணமாக சமீபமாக நடக்கும் விக்கிலீக்ஸ் இந்தியா செய்திகளை எடுத்துக்கொள்வோம். ஏதோ, உலகையே உலுக்கும் செய்திகள் என்பதாக ஹிந்து வெளியிடும் இவற்றை இந்தியாவில் யாருமே கண்டுகொள்வதில்லை. ஆனால் அதில் எந்த அளவுக்கு உள்நோக்கத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்பது ஆத்திரத்தை வரவழைக்கிறது.

மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதையே அமெரிக்கா விரும்புகிறது என்று விக்கிலீக்ஸ் ஆவணங்களைக் காட்டி தி ஹிந்து செய்தி வெளியிடுகிறது. அமெரிக்க என்ன வேண்டுமானாலும் விரும்பிக்கொள்ளட்டும். ஆனால் மமதாவும் அமெரிக்காவும் உள்கை; மமதா அமெரிக்காவிடமிருந்து பணத்தை பெட்டி பெட்டியாகப் பெற்றார் என்று ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்றால் அப்படி ஏதும் இல்லை. இன்று ஹிந்துவில் வந்திருக்கும் கார்ட்டூனில் திரிணாமுலின் மூன்று இலைகள்மீது அமெரிக்கா ஸ்டார்ஸும் ஸ்டிரைப்ஸுமாக நீர் ஊற்றுவதுபோல உள்ளது. இதன் மறைபொருள் என்ன? திரிணாமுல் வளர அமெரிக்கா நீர் ஊற்றுகிறது என்கிறது தி ஹிந்து. இது அபாண்டம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. சரியாக இரண்டு பக்கங்கள் தள்ளி பிரகாஷ் காரத் குய்யோ முறையோ என்று குதிக்கிறார். ‘அய்யாமாருங்களே, அம்மாமாருங்களே, பார்த்தீங்களா, மமதாதான் ஜெயிக்கணும்னு இந்த அமெரிக்கா அசிங்கப்பய சொல்லுறான்’ என்று புலம்புகிறார். இப்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கிறது. இதைவிட அசிங்கமாக ஒரு பத்திரிகை நடந்துகொள்ளமுடியாது.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இன்றும் நேற்றும் நடந்ததால் இதனைப் பற்றி எழுதுகிறேன். ஈழப் பிரச்னையில் எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். ராஜபக்‌ஷே கூட அப்படி தன்னை டிஃபெண்ட் செய்திருக்க மாட்டார். என். ராம் தானே முன்னின்று பேட்டி எடுத்து அவரைக் காப்பாற்றுகிறாராம்!

***

இது இப்படி இருக்க, திடீரென என். ராம் கனவில் கார்ல் மார்க்ஸ் வந்து குடும்பத்தையும் பிசினஸையும் கலக்காதே என்று வழிகாட்டினாராம்! உடனே அவர் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வேலையிலிருந்து விலகி, professional எடிட்டர்களைக் கொண்டு பிசினஸை நடத்தவேண்டும் என்று போர்ட் மீட்டிங்கில் சாதித்துவிட்டார். விஷயம் வேறு என்று புலம்புகிறார் என். ராமின் சகோதரர் என். ரவி. அவர்கள் பிரச்னை எப்படி வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் ரவி, தன் கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் ராஜா விஷயம் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதையே சற்றே நீட்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி விவகாரத்தில் எந்த அளவுக்கு தன் செய்தித்தாளைத் தவறாகப் பயன்படுத்துகிறார் ராம் என்ற கேள்வியையும் நாம் கேட்கவேண்டும்.

***

நான் தொடர்ந்து ஹிந்து வாங்கப்போகிறேனா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் ஹிந்துவை தொடர்ந்து 132 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; இந்தியாவின் தேசியச் சொத்து என்று ராம் குறிப்பிடுவதுபோல நாமும் தொடர்ந்து குறிப்பிடவேண்டுமா என்பதுதான் கேள்வி.