சென்ற வாரம் ஞாயிறு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா, நானா நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டிருந்தேன். இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிய விவாதம். சிலர் பார்த்திருப்பிர்கள். தொலைக்காட்சியில் பார்க்காதவர்கள் யூட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
என் கருத்து:
* இலவசங்கள் மிக மிக ஆபத்தானவை.
* உணவு மட்டும்தான், அதுகூட ஒருவித மனிதாபிமானத்தின்படி, இலவசமாக அல்லது மானியத்தில் வழங்கப்படவேண்டும். அதைக்கூட ‘உரிமை’ என்ற பெயரில், ‘நான் இந்த நாட்டில் குடிமகன், எனக்கு இந்த நாட்டு அரசு உணவு கொடுத்தே ஆகவேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு இருக்குமாறு செய்யக்கூடாது. அவரவர் உழைத்து உண்பதே சரியானது. ஆனால் வயதானோர், சிறு குழந்தைகள், உடல்/மன நலமற்றோர், ஆதரவற்ற அதே நேரம் உழைக்கும் திறனற்றவர்கள் போன்றோருக்கு மட்டும்தான் உணவு வழங்கப்படுதல் வேண்டும். ஏழைகள் என்று குறிப்பாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு உணவுக்கான மானியங்கள் தரப்படலாம். அதுவும் மிகக் கவனமாக, நேரடி மானியமாக இருத்தல் நல்லது.
* அப்படியானால் கல்வி? அப்படியானால் மருத்துவம்?
* என் கணிப்பில் இவற்றுக்கும் சேர்த்து இலவசங்கள் தரப்படவே கூடாது. இலவசத்துக்கு எதிராகப் பேசியவர்கள்கூட உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு இலவசங்களும் மானியங்களும் தரப்படலாம் என்றார்கள். ஆனால் இங்குதான் ஒருவித recklessness வந்துவிடுகிறது. அரசு கல்விக்கூடங்கள் நடத்தினாலும் அதற்கும் கட்டணம் வசூலிக்கவேண்டும். அப்படியானால் பணம் கட்டமுடியாத ஏழைகளுக்கு? அவர்களிடம் deferred payment என்ற வகையிலாவது வசூலிக்கப்படவேண்டும்.
* எங்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லையோ, அங்கு இரண்டு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒன்று தரமான சேவை அல்லது பொருள்கள் கிடைக்காது. (உ.ம்: இலவசக் கல்வி தரும் பள்ளிகளில் கல்வியின் தரம்.) இரண்டு, ஏகப்பட்ட பொருள்/சேவை வீணாகும். ஏழை, பணக்காரன் வித்தியாசமே இங்கு கிடையாது. இரண்டு உதாரணங்களைத் தருகிறேன். சென்னையில் பணக்காரர்களின் வீடுகளுக்கு flat rate கட்டணத்தில் குழாய் வழியாக நீர் கிடைக்கிறது. உண்மையில் மீட்டர் வைக்கப்பட்டு, மீட்டர் கணக்குக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். ஆனால் மெட்ரோ வாட்டர் அப்படிச் செய்வதில்லை. தண்ணீர் நன்றாக வரும்போது எங்கள் வீடுகளில் அனைவருக்கும் சந்தோஷம்தான். ஆனால் ஒரு நாள் தண்ணீர் வராமல் போனதும் நாங்கள் மெட்ரோ வாட்டர் லாரிமூலம் 9,000 லிட்டருக்கு ரூ. 600 என்று காசு கொடுத்து நீர் வரவழைத்தால் உடனே அத்தனை பேரும் தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்துவது பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்தடுத்து டாங்கர் வாங்குவதற்கு உடனே ஒப்புதல் தரமாட்டார்கள். எப்படியாவது ‘நிலத்தடி நீரை’ பயன்படுத்தமுடியுமா என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். மீட்டர் போட்டு அதற்கேற்ப வசூலிக்க ஆரம்பித்தால் இதே ஒழுங்கு அங்கேயும் வந்துவிடும். அடுத்த தெருவில் ஏழைகள் வசிக்கும் இடத்தில் தண்ணீர் டாங்கரில்தான் தரப்படுகிறது. ஒரு வீட்டுக்கு இத்தனை குடங்கள் என்பதுதான் கணக்கு. இலவசமாகத் தரவேண்டும் என்பதுதான் கணக்கு; ஆனால் குடத்துக்கு இத்தனை காசு என்று சிலர் ஓரத்தில் நின்று வசூல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இங்கு தண்ணீர் வீணாக்காமல் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், குறைவு என்றாலும் ஒவ்வொரு குடமும் காசு!
* யார்தான் உரிமையாளர் என்று தெளிவாக இல்லாத பொதுச்சொத்துகள் என்றுமே பாழாகத்தான் போகும். இதைத்தான்
Tragedy of the Commons என்று கட்டற்ற சந்தை ஆதரவாளர்கள் சொல்வார்கள். 9 அபார்ட்மெண்ட்கள் இருக்கும் எங்கள் கட்டடத்திலேயே பொதுச்சொத்துகள் வீணாவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு பெரிய நாட்டில் இதைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்!
* இலவசங்கள் அல்லது மானியங்களில் மற்றொரு மிகப்பெரிய பிரச்னையும் உள்ளது.
Moral Hazard என்று இதனைச் சொல்வோம். நீங்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களுக்கு தண்டனை கிடைக்காது என்றால் நீங்கள் reckless ஆக மட்டுமே நடந்துகொள்வீர்கள். கல்வி இலவசம், உணவு இலவசம், மருத்துவ வசதி இலவசம் என்று எல்லாமே இலவசமாகக் கிடைக்கிறது என்றால் திண்ணையில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டு, தன்னிஷ்டத்துக்குக் குழந்தைகளைப் பெற்று மக்கள் தொகையை அதிகப்படுத்துக்கொண்டுதான் மக்கள் இருப்பர். தன்னுடைய மக்கள் வளமாக இருக்கவேண்டும் என்பதற்காக வேண்டிய பல உதவிகளை ஓர் அரசு செய்யத்தான் வேண்டும். ஆனால் அதற்கென ஒரு cost உள்ளது; அந்தச் செலவை மக்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தையும் அரசுகள் விதிக்கவேண்டும். இல்லாவிட்டால் ‘ஊரான் நெய்யே, என் பொண்டாட்டி கையே’ என்றுதான் ஆகும். நம் அரசுகள் இலவசங்களை வாரி வழங்கும்போது இவை பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை.
* மெலிதான அரசு என்பதுதான் என் கொள்கை. பல்வேறு விஷயங்களை சந்தைதான் தீர்மானிக்கவேண்டும். சந்தை சரியாக, நியாயமாகச் செயல்படுகிறதா என்பதை மட்டுமே அரசுகள் கவனித்துக்கொள்ளவேண்டும். எதையெடுத்தாலும் அரசுதான் செய்துதரவேண்டும் என்ற எண்ணம் நம்முடைய தன்முனைப்பையும் நியாயமான வளர்ச்சியையும் கெடுத்துவிடும். அதனால் நாட்டுக்கும் நல்லதல்ல, நமக்கும் நல்லதல்ல.