Wednesday, June 08, 2011

Right to Education சட்டத் திருத்தம் - 3

பாகம் 1 | பாகம் 2

ஏழைகளின் கல்வி என்பது வேறு பிரச்னை. கையில் பணமே இல்லாதவர்கள் எப்படிக் கல்வி பெறுவது என்பதைத் தனியாகக் கவனிக்கவேண்டும். அவர்களுக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று: அரசின் இலவச கல்வி நிலையங்களில் கல்வி பெறுதல். இரண்டாவது, அரசு கட்டணம் செலுத்த, அந்தக் கட்டணத்தின் அடிப்படையில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி பெறுதல். ஆனால் அரசு தரும் இந்தக் கட்டணம் எப்படி இருக்கவேண்டும்? அந்தத் தனியார் நிறுவனம் எவ்வளவு வசூலிக்கிறதோ அதே அளவு இருக்கவேண்டும்.

ஏழைகளுக்கு நாளைமுதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உணவளிக்கவேண்டும் (25% பேருக்கு!), ஆனால் அதற்கு தட்டுக்கு 25 ரூபாய் என்ற கணக்கில் அரசு பணம் செலுத்திவிடும் என்று சொல்வது நியாயமாக இருக்குமா? 25% ஏழைகளுக்கு மளிகைக்கடைகள் பொருள்களை அளித்துவிடும், ஆனால் கடைக்காரர்களுக்கு நியாயவிலைக்கடை ரேட்டில் பணம் கொடுக்கப்படும் என்று அரசு சொல்லலாமா? அதை நாம் ஏற்றுக்கொள்வோமா? அதேபோலத்தான் தனியார் பள்ளிகளில் படிக்க வரும் ஏழைகளுக்கு குறைவான கட்டணம்தான் செலுத்தமுடியும் என்று அரசு சொல்வது.

இதனால் தனியார் பள்ளிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும். அவர்கள் வேறு வழியின்றி, பணம் கொடுத்துப் படிக்கும் மாணவர்களிடம் மேலும் அதிகக் கட்டணம் வசூலிக்க முற்படுவார்கள். அது பிற பெற்றோர்களைக் கடுமையாகப் பாதிக்கும். இந்நிலையில் கட்டணக் கட்டுப்பாட்டுக்கென சட்டம், குழு, ஓய்விபெற்ற நீதிபதி என்று அடுத்த மிரட்டலை விடுத்தால் கல்வி அளிப்போர் அனைவரும் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று ஓடுப்போய், தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துவிடுவார்கள். அதைத்தாண் நாம் விரும்புகிறோமா? அனைவருக்கும் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆரம்பித்த சட்டம் கல்வியாளர்களைத் துரத்துவதில்தான் போய் முடியவேண்டுமா?

அடுத்து ஆசிரியர்கள். இன்று தனியார் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பி.எட் படிக்காதவர்களே. ஆனால் அரசுப் பள்ளிகளில் கை நிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டு வம்பு பேசி அல்லது பள்ளிக்கே போகாத ஆசிரிய மாணிக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் பாவப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு இடுப்பொடிய வேலை செய்கிறார்கள். அவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் பி.எட் படித்தாகவேண்டும் என்கிறது இந்தச் சட்டத் திருத்தம். எப்படி? எத்தனி பி.எட் கல்லூரிகள் இருக்கின்றன? அவர்கள் எந்த அளவுக்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள்? அஞ்சல் வழியில் பி.எட் படிக்க எத்தனை இடையூறுகள் உள்ளன? இதையெல்லாம் அரசு கண்டுகொள்ளவில்லை.

இப்போது தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தேவையான பி.எட் கல்வியை அரசு தன் செலவில் கொடுக்கும் என்று சொல்லலாம் அல்லவா? அதுவல்லவா சரியான முறையாக இருக்கும்? அதை விட்டுவிட்டு, அதை ஆசிரியர்கள் தலையில் கட்டிவிடுகிறது அரசு. நிறையச் செலவு செய்து பி.எட் படித்தபின், அவர்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கப்போகிறது? அதே மோசமான சம்பளம்தான். ஏன்? ஏனெனில் அவர்களுடைய கல்வி நிறுவனம் அதிகக் கட்டணத்தை வசூலிக்க முடியாது? ஏன்? ஏனெனில் அது ‘கல்விக் கொள்ளை’!

அடுத்து பள்ளியின் உள்கட்டுமானம். அரசு குறைந்த கட்டணம்தான் தருவேன் என்று ஒவ்வொரு தனியார் பள்ளியின் 25% இடத்தை அபகரித்துக்கொள்கிறது. ஆனால் பதிலுக்கு இந்தத் தனியார் பள்ளிகளுக்கு ஒன்றும் செய்துதராது. கட்டுமானத்தை அதிகரிக்கவேண்டியது தனியார் பள்ளியின் கடமை. அதற்கு ஆகும் செலவில் ஒரு பைசா தராது அரசு. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானத்தை உயர்த்தாவிட்டால், உரிமம் ரத்தாகும். பள்ளிகளுக்கு கல்தா.

ஆனால் இந்தச் சட்டம் கொண்டுவருவதன் காரணமே பள்ளிகளை அதிகரிக்க வைப்பது! என்ன ஒரு முரண்?

மத்திய அரசும் மாநில அரசும் கல்விக்கான செலவுகளை அதிகரிக்கும்; பகிர்ந்துகொள்ளும். சொல்கிறது சட்டம். எந்த அளவுக்கு அதிக முதலீடுகளை இவர்கள் செய்யப்போகிறார்கள்? இவர்கள் சொல்லமாட்டார்கள். கட்டுப்பாடுகள் எல்லாம் பிறருக்குத்தான், தங்களுக்கல்ல.

மொத்தத்தில் நல்ல காரியம் செய்கிறேன் பேர்வழி என்று பிறர்மீது சுமையைத் தூக்கி வைத்துவிட்டு, தாங்கள் ஒய்யாரமாக, சுகமாக இருக்கின்றன அரசுகள்.

(தொடரும்)

Right to Education சட்டத் திருத்தம் - 2

பாகம் 1

இப்போது ‘கல்வி உரிமை’ சட்டத்தை எடுத்துக்கொள்வோம். அதன் முக்கியமான சில ஷரத்துகள் இவை:

1. தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்புக்கான (அல்லது எல்.கே.ஜிக்கான) 25% இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு என்று ஒதுக்கப்படும். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு வழங்கும். இந்த 25% இடங்களுக்கு லாட்டரி முறையில் மாணவர்கள் ஒதுக்கப்படுவர். அவர்களைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று தனியார் கல்வி நிறுவனங்கள் மறுக்கமுடியாது.
2. எல்லா கல்வி நிறுவனங்களிலும் வேலை செய்யும் ஆசிரியர்கள் ஐந்தாண்டுகளுக்குள்ளாக பி.எட் (அல்லது அதற்கு இணையான) படிப்பை முடிக்கவேண்டும்.
3. மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அனைத்துப் பள்ளிகளும் தம்முடைய உள்கட்டுமானத் தரத்தை உயர்த்தவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய உரிமம் ரத்து செய்யப்படும்.
4. கல்வியின் தரம் உயர்த்தப்படவேண்டும்.

அடிப்படையில் இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன. தமிழகத்தை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25% இடத்தை அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதற்கு என்ன கட்டணத்தை அரசு தரப்போகிறது? அரசு தானாக ஒரு கட்டணத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைத்தான் தரப்போகிறது. இதனை தில்லியில் உள்ள மாநில அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திவிட்டது. ஒரு பள்ளி ஆண்டுக்கு 25,000 ரூபாய் அல்லது 50,000 ரூபாய் கட்டணம் வசூலித்தாலும், அரசு அவர்களுக்கு 10,000 ரூபாய்தான் தரும்.

மக்களிடையே பரவலாக ஓர் எண்ணம் உள்ளது: ‘தனியார் பள்ளிகள் எல்லாம் கொள்ளைக்காரர்கள். கல்விக் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.’ அதன் விளைவாகத்தான் தமிழக அரசு கட்டணக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவந்தபோது மக்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். தனியார் கல்வி அமைப்புகள் அனைத்திலும் அடிப்படையாக ஒரு முரண் உள்ளது. இந்தியாவில் நிலவும் சட்டதிட்டங்களின்படி எந்தக் கல்வியும் லாபநோக்கில் தரப்படக்கூடாது. அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன்மூலம் மட்டும்தான் கல்வி தரலாம். மெட்ரிக், சி.பி.எஸ்.இ போன்ற பாடத்திட்டத்தை நீங்கள் வழங்கினால் அரசிடமிருந்து உங்களுக்கு எந்த நிதி உதவியும் கிடைக்காது. இடம், உள்கட்டுமானம், ஆசிரியர் சம்பளம் என அனைத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு.

முன்னெல்லாம் நிறையப் பணம் சம்பாதித்த பெருவணிகர்கள் அறக்கட்டளை அமைத்து இலவச அல்லது குறைந்த கட்டண கல்வியை நிஜமாகவே பொதுச்சேவையாக அளித்தனர். ஆனால் கல்விக்கென மிகப்பெரும் சந்தை உருவாக ஆரம்பித்தபோது பல தனியார்கள் கல்வி வழங்கும் களத்தில் குதித்தனர். இவர்களில் சிலர் நல்லவர்களாகவும் நியாயவான்களாகவும் இருந்தாலும் பெரும்பாலானோர் கொள்ளைக்காரர்களாகவே இருந்தனர். மெட்ரிக் கல்விமுறை இவர்களுக்குச் சாதகமாக இருந்தது. அரசின் நேரடிக் கட்டுப்பாடு கிடையாது. ஆங்கிலக் கல்வியின் மோகம் அதிகரித்த நிலையில், இவர்கள் மக்களிடமிருந்து வேண்டிய கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்தனர். லாபம் இருக்கக்கூடாது என்று அரசுச் சட்டங்கள் சொன்னாலும், பல வகைகளிலும் பள்ளிகளிலிருந்து பெறும் லாபத்தை வெளியில் எடுத்து சொந்தமாக கார், பங்களா, நிலம், நீச்சு என்று தங்கள் சொத்தை அதிகரித்துக்கொண்டனர்.

அதே சமயம் நியாயமாகக் கல்வி வழங்கி அதன்மூலம் நியாயமான லாபம் ஈட்ட விரும்பியவர்கள் யாரும் கல்வித் துறைக்குள் நுழைய முடியாமல் போயிற்று. ஏனெனில் லாபம் எடுக்க முடியாது என்று சட்டங்கள் சொல்கின்றன. லாபம் எடுக்க விரும்பினாலேயே நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். ஆக, மோசமானவர்கள், அதாவது சட்டத்துக்குப் புறம்பானவர்கள் மட்டுமே இந்தத் துறைக்குள் நுழையமுடியும் என்று அரசு முடிவுசெய்துவிட்டது.

அதே நேரம், ஏற்கெனவே கல்வியை வழங்குபவர்கள் (அவர்கள் லாபத்தை வெளியில் எடுப்பது என்பது தவறாகவே இருந்தாலும்) பலவிதங்களில் சமூகத்துக்குப் பெரும் நன்மையைச் செய்துவருகிறார்கள் என்பதை நாம் மறுக்கவே முடியாது. அரசு கல்வியைக் கை கழுவிவிட்ட நிலையில், இந்தத் தனியார்கள் மட்டும் கல்வி நிலையங்களை ஆரம்பித்திருக்கவில்லை என்றால் இன்று நாம் சிங்கி அடித்துக்கொண்டிருந்திருப்போம். கல்வி மட்டுமல்ல, எந்த ஒரு நிறுவனத்தையும் கட்டி எழுப்பி, நடைபெற வைப்பது எளிதான செயலல்ல. வாய்ச்சொல் வீரர்களான நம் எத்தனை பேரால் நாம் செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு, நாளைக்கே ஒரு கல்வி நிறுவனத்தை - நியாயமாக, சட்டத்துக்குப் புறம்பில்லாமல் - உருவாக்க முடியும்?

இவர்கள் வாங்கும் கட்டணம் நியாயமா இல்லையா, வெளிப்படையாக உள்ளதா இல்லையா என்றெல்லாம் பெற்றோர்கள் பரிசீலிப்பதில்லை. கொடுக்க முடிந்தவர்கள் வாயைப் பொத்திக்கொண்டு கொடுத்துவிடுகிறார்கள். கொடுக்க முடியாதவர்கள் கூட்டமாகச் சென்று பள்ளி வாசலில் கோஷம் போடுகிறார்கள். பதிலுக்கு பள்ளி நிர்வாகம் எதிர்த் தாக்குதலில் இறங்குகிறது. இதனால் சூழல் விஷத்தன்மை அடைகிறது. அரசு இதனைக் கருணையோடு பார்ப்பதில்லை.

அரசு கட்டண விவகாரத்தில் இறங்குவதை எந்தத் தனியார் பள்ளியும் விரும்பாது. ஏனெனில் பெரும்பாலானோர் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதாவது கல்வி நிறுவனத்தை நடத்த எவ்வளவு தேவையோ அதற்கும் அதிகமாக வசூலிக்கிறார்கள். அந்த அதிகம்தான் அவர்களது லாபம். அது நியாயமான லாபமா, நியாயமற்ற லாபமா என்ற பேச்சுக்கே இடமில்லை; ஏனெனில் லாபம் என்பதே கூடாது என்கிறது சட்டம். ஆக பிரச்னை சட்டத்தில்தான்.

எந்தத் தனி மனிதனும் லாபம் இன்றிச் செயல்பட விரும்பமாட்டான். மருத்துவர்கள் லாபமின்றி ஊசி போடவேண்டும்; உணவகங்கள் லாபமின்றி உணவளிக்கவேண்டும் என்று நாம் கேட்கிறோமா? இவை எல்லாமும் சேவைகள்தானே? ஆனால் கல்வியை மட்டும் லாபமின்றி ஒருவர் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையில் நியாயம்?

(தொடரும்)

Right to Education சட்டத் திருத்தம் - 1

2009-ல் இயற்றப்பட்ட 86-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் மூலம், இப்போது கல்வி, நம்முடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது பள்ளிக் கள்வி - 10-ம் வகுப்பு வரையிலான கல்வி. 6 வயது முதல் 14 வயதுவரையிலான மாணவர்களுக்கான கல்வி.

இந்தச் சட்டம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும்தான் இங்கு விவாதப் பொருள் ஆக்கப்போகிறேன்.

6-14 வயதுள்ள மாணவர்கள் யாருக்கும் கல்வி கிடைக்காமல் இருந்துவிடக்கூடாதே என்ற நல்ல எண்ணத்திலும் இந்தியாவில் படிக்காதவர்களே இருக்கக்கூடாது என்ற உயர்ந்த கொள்கையின் அடிப்படையிலும்தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இன்று ஏன் மாணவர்கள் கல்விக்கூடங்களுக்குப் போவதில்லை என்று பார்ப்போம்.

1. போதுமான அளவில் கல்வி நிலையங்கள் இல்லாமை.
2. கல்வி நிலையங்கள் இருந்தாலும் அதில் சேர்ந்து படிக்கும் அளவுக்குக் கையில் பணம் இல்லாமை.
3. குடும்பச் சூழ்நிலை காரணமாக, வறுமை காரணமாக, படிப்பதற்குபதில் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை.
4. கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சிறுவர்கள் சுரண்டப்படுதலால் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை.
5. படிப்பு ஏறுவதில்லை என்பதால் படிக்கப் பிடிக்காமல் கெட்ட காரியங்களில் சிறுவர்கள் ஈடுபடுதல்.
6. கல்வி என்பது மதிக்கத்தக்கதாக, அவசியமானதாகக் கருதப்படாத பழங்குடிச் சமுதாயங்களின் சிறுவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமை.
7. அனாதைகள், பிச்சை எடுப்போர், உடல்/மன நலமற்றோர், தெருக்குழந்தைகள் - இப்படி சமுதாயத்தின் மிக மிக விளிம்பு நிலையில் இருப்போர் பள்ளிகளுக்குச் செல்லாமை.
8. வேறு ஏதேனும்?

இது மாநிலத்துக்கு மாநிலம், ஒரு மாநிலத்திலேயே மாவட்டத்துக்கு மாவட்டம், கிராமத்துக்கு கிராமம் மாறுபடும்.

கடந்த 64 வருடங்களில் பள்ளிகளின் படிப்போர் எண்ணிக்கை எப்படி அதிகமானது? தமிழகத்தில் எண்ணற்ற அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க முடிவு செய்தது. 1980-களில் அரசு நிதியுதவி ஏதும் பெறாத, முற்றிலும் ஆங்கில மீடியத்தில் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதியைத் தந்தது. அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மதிய உணவு (பின்னர் சத்துணவு என்று பெயர் மாறியது) தந்தது. கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இலவசச் சீருடை, காலணிகள், இலவசப் புத்தகங்கள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் என்று அளிக்கத் தொடங்கியது. இலவச பஸ் பாஸ், ஒரு பெரும் வசதியானது. இதனால் சிறு கிராமங்களில் இருக்கும் மாணவர்களும் அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று படிக்க முடிந்தது. இதில் அஇஅதிமுக, திமுக என்று மாற்றம் இல்லாமல் இரு கட்சிகளும் மிகப் பெரும் சேவை செய்துள்ளன. அவர்களுக்குப் பாராட்டுகள்.

இந்தக் காரணங்களால், தமிழகத்தில் மிகக் குறைவான சிறுவர்கள்தான் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னிடம் சரியான புள்ளிவிவரங்கள் கைவசம் இல்லை. மீதம் உள்ள மாணவர்களுக்கும் சரியான வழியைக் காட்டவேண்டியது அவசியம். அதே சமயம், பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தரமான கல்வியைத் தருதல், மேற்படிப்பை நோக்கிச் செல்ல மாணவர்களுக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாடு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

நல்ல கல்வியின் மூலமே ஏழைமையை ஒழிக்கமுடியும்.

(தொடரும்)

Monday, June 06, 2011

இலங்கைக்கு ஒரு கலாசாரப் பயணம்

சில மாதங்களுக்குமுன் அஜந்தா குகைகளுக்குச் சென்றதைப் பற்றி எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து, ஒரு மூன்று நாள் இலங்கையில் சில புத்த பாரம்பரிய இடங்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

நான் தேர்ந்தெடுத்த இடங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்கள் உள்ள நகரங்கள்: அநுராதபுரம், பொலனறுவ, சிகிரியா, தம்புள்ள, கண்டி.

அநுராதபுரம்தான் சிங்கள அரசர்களின் தலைநகரமாக இருந்துவந்தது. அவர்களது பெரும்பாலான கட்டுமானங்கள் இங்கேதான் இருந்தன. இரு மாபெரும் செங்கல் ஸ்தூபிகள், பல விகாரைகள், இரட்டைத் தடாகம் என்று பார்க்க இங்கு பல விஷயங்கள் உள்ளன. மகா போதி மரம் இங்குதான் இருக்கிறது. புத்தர் ஆன்ம ஞானம் பெற்ற போதி மரத்தின் (அரச மரம்) சிறு கிளை ஒன்றை சுமார் கி.மு 300 வாக்கில் அசோகரின் மகள் சங்கமித்திரை இலங்கைக்குக் கொண்டுவந்து கொடுத்தார் என்பது இவர்களது நம்பிக்கை. அந்த மரம் அநுராதபுரத்தில் நடப்பட்டு அது இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.

ஜேதவனரமய ஸ்தூபி, அநுராதபுரம்
மகா போதி, அநுராதபுரம்

சிகிரியா என்பது சிறு குன்று. காஷ்யபன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இவன் தந்தை தாதுசேனன் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். தாதுசேனனின் முதல் மகன்தான் காஷ்யபன் என்றாலும் அவனது தாய் பட்டத்து அரசி கிடையாது. இரண்டாவது மகன் முகிலன், பட்டத்து ராணிக்குப் பிறந்தவன். தந்தை தனக்கு ராஜ்ஜியத்தைத் தரப்போவதில்லை என்பதை உணர்ந்த காஷ்யபன், தந்தையைக் கொன்றுவிட்டு நாட்டை எடுத்துக்கொண்டான். முகிலன் இந்தியாவுக்கு ஒடிச் சென்று படை திரட்டுவதில் ஈடுபட்டான். தம்பி வந்து தன்னுடன் போர் புரிவான் என்பதால் காஷ்யபன் சிகிரியா என்ற குன்றைத் தன் கோட்டையாக ஆக்கிக்கொண்டான். இரண்டு அகழிகள், மூன்று சுற்றுச் சுவர்கள் என்று பலமான கோட்டை. உள்ளே பல தோட்டங்கள், குளங்கள் என்று கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான இடம். இங்குதான் சில சுவர் ஓவியங்கள் உள்ளன. அஜந்தா பாணியைப் பின்பற்றி வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் வெறும் எச்சங்களே. ஒரு காலத்தில் இங்கு எண்ணற்ற பல ஓவியங்கள் இருந்திருக்கவேண்டும். இங்கு பழைமையான சில பிராமி கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

சிகிரியா குன்று
சுவர் ஓவியம், சிகிரியா
மலை உச்சியில் ஒரு நேர்த்தியான குளம்

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கையின் பெரும்பகுதி சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போதே பொலனறுவ நகர்தான் சோழர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் சோழர்கள் ஆதிக்கம் குறைய, விஜயபாகு என்ற அரசன் ஆட்சியைக் கைப்பற்றினான். அவனும் அவனது சந்ததியரும் வெகு காலம் பொலனறுவவைத்தான் தலைநகராகக் கொண்டிருந்தனர். இங்கு இவர்கள் கட்டிய சில புத்தக் கோயில்களும் ராஜராஜன் கட்டிய சிவனுக்கான கோயில்களும் உள்ளன. கல் விகாரை எனப்படும் கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் நான்கு இங்குதான் உள்ளன. அடுத்தடுத்துக் காணப்படும் நான்கு புடைப்புச் சிற்பங்களில், முதலாவதில் புத்தர் தவ நிலையில் அமர்ந்திருக்கிறார்; இரண்டாவதில் தூஷித சொர்க்கத்தில் அவர் இருக்கிறார் (அப்போதுதான் மாயாவதிக்கு மகனாகப் பிறக்குமாறு அவரை தேவர்கள் வேண்டுகிறார்கள்); மூன்றாவதில் இந்த உலக மக்களின் துக்கத்தை நினைத்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறார்; நான்காவதில் பரிநிர்வாணம் (உலகை விட்டு நீங்குகிறார்). இரண்டாவது புடைப்புச் சிற்பம் மட்டும் ஒரு மண்டபக் கட்டுமானத்துக்குள் உள்ளது. மற்ற மூன்றும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பங்கள்.

கல்வெட்டு - சுமார் 12-ம் நூற்றாண்டு, பொலனறுவ
ராஜராஜ சோழன் கட்டிய 11-ம் நூற்றாண்டு சிவன் கோயில், பொலனறுவ
மகா பரிநிர்வாணம், பொலனறுவ

தம்புள்ள மலையில் குடைந்து ஐந்து மண்டபங்கள் உள்ளன. காலத்தால் சில முற்பட்டிருந்தாலும் அவற்றின் உள்ளே சில சிற்பங்கள் கல்லிலும் சில சுதையிலும் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இவை பராமரிப்பில் இருந்துவருவதால் இங்குள்ள சிற்பங்கள் எவையுமே காலத்தால் முற்பட்டது என்று சொல்லமுடியாது. சுவரிலும் மேல் கூரையிலும் பல ஓவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் எல்லாமே தரத்தில் குறைவானவை. நாயக்கர் கால தமிழக ஓவியங்கள் போன்ற ஒற்றுமை காணப்படுகிறது. பெரும்பாலும் 17, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கவேண்டும்.

ஐந்து குகைக் கோயில்கள், தம்புள்ள
மேற்கூரை ஓவியம், தம்புள்ள (நாயக்கர் பாணி)

கண்டியில்தான் புகழ்பெற்ற பல் கோயில் உள்ளது. புத்தரின் பல் என்று நம்பப்படுகிறது. இது அநுராதபுரத்தில் தொடங்கி, பொலனறுவ சென்று மேலும் பல இடங்களைத் தாண்டி இறுதியில் கண்டி வந்து இப்போதுள்ள கோயிலில் இருக்கிறது. வரலாற்றுப் பழமை என்று இந்தக் கோயிலில் எதையும் சொல்லவிடமுடியாது. இந்தப் பல் எப்படி இந்தியாவிலிருந்து இலங்கை வந்தது என்ற ஐதீகம் சுவாரசியமானது.

கண்டியின் பல் கோயில்
திரைக்குப் பின் பல்

மேலே உள்ள இடங்களும் கதைகளும் இலங்கையின் மத வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளவை. இந்த நூலை முழுமையான வரலாறாகக் கொள்ளமுடியாது. ஏகப்பட்ட இடைச் செருகல்கள், வரலாற்றுக்கு முரணானவை என்று பல இதில் உள்ளன. ஆனாலும் பல இடங்களில் மகாவம்சத்தில் உள்ள கதைகளுக்கு தொல்லியல் சின்னங்கள் சான்றுகளாகவும் உள்ளன. மேலே சொன்ன இடங்களில் எல்லாம் பல முக்கியமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பொலனறுவ சிவன் கோயிலில்தான் ராஜராஜனின் தமிழ் கல்வெட்டும் காணக் கிடைக்கிறது.

விரிவான சில பதிவுகளையும், வீடியோக்களையும், படங்களையும் பின்னர் சேர்க்கிறேன். இது ஒரு டீசர் பதிவு மட்டுமே.

Wednesday, June 01, 2011

கிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு,  கிழக்கு பதிப்பகத்தின் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி தொடர்கிறது. இம்முறை தி. நகரில்.

ஏப்ரலில் நடந்த கண்காட்சியின்போது இல்லாத பல புத்தகங்கள் இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். எனவே ஏற்கெனவே சென்றிருந்தாலும் இப்போதும் ஒருமுறை சென்று பார்த்துவிடுவது நல்லது.

இடம்: எல்.ஆர்.ஸ்வாமி ஹால், சிவா விஷ்ணு கோவில் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில், தி. நகர்.
நாள்: 3 ஜூன் முதல்.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.