இந்தக் குறைபாடுகளை எப்படிக் களைவது, எப்படி இந்திய மாணவர்களின் ஆராய்ச்சி
ஆர்வத்தை ஊக்குவிப்பது, அடிப்படை ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவிகளை
அதிகரிப்பது, இந்தியாவின் கணித/அறிவியல் ஆராய்ச்சிகளை எவ்வாறு உலகத்
தரத்துக்கு எடுத்துச் செல்வது ஆகியவை குறித்துத்தான் இந்திய அறிவியல்
மாநாடு பேசியிருக்கவேண்டும். மாறாக பண்டைய காலத்திலேயே இந்தியர்கள் அனைத்து
கணித/அறிவியல் கண்டுபிடிப்புகளையும் செய்திருந்தனர் என்று மார் தட்டுவது
அறிவீனமானது. நம்மைப் பின்னோக்கித் தள்ளும் ஒரு செயல் இது.
இந்தியக்
கைவினைஞர்கள் உலோகங்களை வார்த்துச் சிலைகள் வடிப்பது, நகை செய்வது
ஆகியவற்றில் நிச்சயம் சிறந்து விளங்கியிருக்கின்றனர். மிகவும் எழில்
வாய்ந்த செப்புச் சிற்பங்களை வடித்துள்ளனர். மாபெரும் கற்கோயில்களைக்
கட்டும் பொறியியல் திறன் படைத்திருந்தனர். இவற்றுக்கான எடுத்துக்காட்டுகள்
நாடு முழுவதும் விரவிக்கிடக்கின்றன. ஆனால் இன்றைய அறிவியல்
கண்டுபிடிப்புகளும் அவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள
தொழில்நுட்பங்களும் இதிலிருந்து பலபடிகள் முன்னே சென்றுவிட்டன. கணிதத்தில்
கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் மாபெரும் பாய்ச்சலைச்
செய்துள்ளனர். அந்தத் தரத்திலான இந்தியக் கணித விற்பன்னர் ஸ்ரீனிவாச
ராமானுஜன் ஒருவரே. இந்தியக் கணித மேதைகளான ஆர்யபடர், பாஸ்கரர்,
வராகமிகிரர், பிரம்மகுப்தர், இன்னும் பலர் உருவாக்கிய கணிதக்
கண்டுபிடிப்புகள் பிற இடங்களில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மேதைகளால்
கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் கடந்த முன்னூறு ஆண்டுகளின் ஐரோப்பியக் கணிதப்
பாய்ச்சலை உள்வாங்கி அவர்களோடு சேர்ந்து ஓடி, அவர்களை முந்துவதற்கான
நிறுவனங்களையும் நாம் உருவாக்கவில்லை, ஆராய்ச்சியாளர்களையும் நாம்
பெறவில்லை என்பதுதான் சோகமான உண்மை.
அரசு ஆணையிட்டோ அல்லது அரசு
நிறுவனங்களிலோ இவையெல்லாம் நடக்கப்போவதில்லை. புதுமையான, நவீனமான கல்வி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பணம் படைத்த தனி நபர்கள்
உருவாக்கவேண்டும். அவற்றிலிருந்துதான் நவீன இந்தியாவின் தலைசிறந்த அறிவியல்
அறிஞர்களும் கணித அறிஞர்களும் வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
இதற்கு ரோஸாவசந்த் உடனடியாக ஓர் எதிர்வினையும் சற்று நேரம் கழித்து ஓர் எதிர்வினையும் ஆற்றியிருந்தார். முதலாவது:
/இன்று
இந்தியாவில் கணிதம், அறிவியல் இரண்டிலும் பெரும் கண்டுபிடிப்புகள்
சாத்தியமே இல்லை./ /கணிதத்தில் கடந்த மூன்று நூற்றாண்டுகளில்
ஐரோப்பியர்கள் மாபெரும் பாய்ச்சலைச் செய்துள்ளனர். அந்தத் தரத்திலான
இந்தியக் கணித விற்பன்னர் ஸ்ரீனிவாச ராமானுஜன் ஒருவரே./ இதை எல்லாம்
எப்படி சொல்கிறீர்கள்? சாத்தியத்தை விடுங்கள். இல்லவே இல்லை என்று எப்படி
முடிவுக்கு வந்தீர்கள்? சும்மா சொல்கிறீர்களா? தகவல்களை வைத்து
சொல்கிறீர்களா?
அடுத்தது (https://www.facebook.com/Rozavasanth/posts/988605121152980)
(நாளை எழுதலாம் என்று இருந்தேன்; தூக்கம் வராததால் இப்பொழுதே; Badri Seshadri பதிவில் என் பின்னூட்டங்களை பார்க்கவும்.)
https://www.facebook.com/badriseshadri/posts/1000586579958745?pnref=story
பிஜேபி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திகிலூட்டும் பல கூத்துக்கள்
அரங்கேறும்; ஒப்பீட்டளவில் அவற்றில் ஆபத்து குறைந்ததாக பண்டைய இந்தியாவில்
இன்றய நவீன அறிவியல் அறிவுக்கூறுகளை கண்டுபிடிக்கும் அகழ்வாராய்ச்சிகளை
சொல்லலாம். 1999இல் அசோக் சென் என்ற (பத்ரிக்கு பிடித்த மாதிரி
சொல்லவேண்டுமானல் உலகத்தரத்தில்) முக்கியத்துவம் வாய்ந்த அறிவியலாளருக்கு
ஏதோ ஒரு பரிசு வழங்கும் விழாவில் முரளி மனோகர் ஜோஷி ̀ஏற்கனவே வேதங்களிலும்
உபநிதஷத்களிலும் சொல்லப்பட்டவைகளைதான் இன்றய விஞ்ஞானிகள் மறு
கண்டுப்பிடிப்பு செய்வதாக சொன்னார். மேடையில் இருந்த அசோக் சென்
எதிர்வினையாக ஒரு வார்த்தை சொல்லாதது (அல்லது சொல்லி பதிவாகாதது) பற்றி
அன்று ரொம்ப புலம்பிக்கொண்டிருந்தேன். இன்று இது போன்றவைகள் குறித்த
பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை என்று தோன்றுகிறது. யாரும் இந்த காமெடிகளை
சீரியசாக எடுக்க போவதில்லை. பண்டைய இந்தியாவின் நியா யமான
பங்களிப்புகளையும் பீலா என்று புறம்தள்ளவே இந்த மிகைப்படுத்தல்கள் உதவும்
என்று அவர்களுக்கு புரியவில்லை. ஆகையால் உண்மையான தேசாபிமானம் கொண்டவர்கள்
இந்த காமெடி மிகைப்படுத்தல்களைத்தான் எதிர்க்க வேண்டும். அந்த வகையில்
பி.ஏ.கிருஷ்ணன் தமிழ் இந்துவில் எழுதியுள்ள கட்டுரை சரியான எதிர்வினை. அதே
போன்ற நவீன மனதுடன் இந்திய அறிவியல் மீதான கரிசனத்துடன் பத்ரியும் பதிவு
எழுதியுள்ளார். ஆனால் அவர் தன் எல்லைக்குள் நிற்காமல் பல தடாலடி
தீர்ப்புகளையும் தீர்வுகளையும் தருகிறார், அதை நம் ஃபேஸ்புக்
பொதுஜனங்களும் அறிஞர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கண்டபின் இந்த
பதிவு.
பத்ரியின் இந்த பதிவும் அதற்கு வந்த நூற்றுக்கு மேற்பட்ட
லைக்குகளையும் பார்த்து ̀என்ன மாதிரி சூழலில் வாழ்கிறோம்' என்றுதான்
அங்கலாய்க்க தோன்றுகிறது. கணிதம் அறிவியல் துறைகளுக்கு வெளியே வேறு
தளத்தில் செயல்படும் ஒருவர் ஒரு பதிவில் கடந்த நூறு ஆண்டுகால இந்திய
அறிவியல் கணித சாதனைகள் பற்றி பல தீர்ப்புகளை சொல்லி, நம் கலிதீர சில
யோசனைகளையும் முன்வைக்கிறார். யார் வேண்டுமானாலும் எதை பற்றி
வேண்டுமானாலும் சிந்தித்து முடிவுக்கு வந்து அதை முன்வைக்கலாம். ஆனால்
முடிவுக்கு வந்த விதத்தை ஏதேனும் ஒரு வகையில் விளக்க வேண்டும். அப்படி
சொல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டுமெனில் அவர் அந்த குறிப்பிட்ட துறையில் ஒரு
வல்லுனர் என்று நிறுவி இருக்கவேண்டும். குறிப்பாக அந்த துறை சா ர்ந்த
ஒருவர் ̀இந்த முடிவுகளுக்கு எப்படி வந்தீர்கள்?; என்று கேள்வி எழுப்பினால்
பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. ̀ஜல்லியடிக்கிறார்' என்று நான்
குறிப்பிட்ட பிறகும் பத்ரியின் பதிவிற்கு சுமார் எண்பது லைக்குகள்
விழுந்திருக்கலாம். பத்ரி பதில் சொல்லப்போகிறாரா அல்லது செலிபிரிடி
வழக்கமாக ஏராளமான பின்னூட்டங்களுக்கு நடுவில் உள்ள அர்த்தபூர்வமான ஒரு
கேள்வியை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடப்போகிறாரா என்று தெரியவில்லை. 7 மணி
நேரம் ஆகிவிட்டதால் இதற்கு மேல் காத்திருக்காமல் என் கருத்தை பதிந்துவிட்டு
வேறு வேலைக்கு செல்கிறேன்.
பத்ரியின் தற்போதய சார்புகள், எதிர்கால
உதிர்ப்புகள் இந்துத்வத்துடன் என்ன தொடர்பு கொண்டிருந்தாலும் அவர் ஒரு
பழைமைவாதி கிடையாது. அதனால்தான் பழம் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை, நவீன
வளர்ச்சிகளுக்கேற்ப அறிவை புதுப்பித்துக்கொண்டு நாம் உலக தரத்திற்கு உயர
முயற்சிக்க வேண்டும் என்கிறார். சரியான அணுகுமுறைதான். அத்தோடு
நின்றிருக்கலாம்; ஆனல் தனக்கு தெரியாத இந்திய அறிவியல் கணிதத்துறைகளில்
உலகத்தரத்தில் எந்த சாதனையும் நிகழவில்லை என்கிறார்; அது மட்டுமல்ல சாதனை
நிகழ சாத்தியமே இல்லை என்றும் சொல்கிறார். கடந்த மூன்று நூற்றாண்டுகளில்
ஐரோப்பிய தரத்திலான ஒரே கணித விற்பன்னர் ஸ்ரீனிவாச ராமானுஜன் ஒருவரே
என்கிறார். ஐரோப்பிய தரத்திலான ஆராய்ச்சியாளர்களை உருவாக்க ̀புதுமையான,
நவீனமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பணம் படைத்த தனி நபர்கள்
உருவாக்கவேண்டும்' என்கிறார். இதுதான் அவர் தீர்வு. அவர் தீர்ப்புகளை விட
தீர்வுகள் இன்னும் பலத்த அதிர்ச்சியை தருகிறது. கேள்வி கேட்காமல் 160 பேர்
லைக் செய்கிறார்கள். நாளை ஜெயமோகன் இதை மேற்கோள் காட்டி பதிவு போட்டால் கூட
ஆச்சர்யம் வராது.
கணிதம், அறிவியல் என்று பத்ரி பேசுவது
தியரிடிகலான விஷயங்கள்தான் என்று தெரிகிறது. CERNஇல் இருப்பது போன்ற
ஆய்வுகூடம் எதுவும் அதற்கு தேவையில்லை. இதற்கு தேவை முக்கிய புத்தகங்களும்,
ஆய்வு இதழ்களும் உள்ள நூலகம், உட்கார்ந்து வேலைசெய்ய நாற்காலி மேஜையுடன்
அலுவலக அறைகள் கொண்ட கட்டிடம், கணினிகள், மிக முக்கியமாக
ஆராய்சியாளர்களுக்கு சம்பளம். இது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட
ஐஐடிகளில், IMSc, HRI, TIFR, IISc, ISIக்களில் ஏற்கனவே உள்ளதே. புதிதாக
ஒரு பணக்காரர் செய்யப்போவது என்ன? என்ன லாபத்திற்காக ஒரு பணக்காரர் பற்பல
கோடிகள் செலவாகும் இந்த வேலையை அறிவியல் கணித கண்டுபிடிப்புகள்
நிகழவேண்டும் என்ற அக்கரையில் செய்யப்போகிறார்? (மாணவர்கள்
பேராசியர்களுக்கு ஒரு மாதசம்பளம் மட்டும் ஒரு கோடிக்கு மேல் போகும்). நிதி
உதவி மட்டும் செய்ய வேண்டும் என்றால் அதைத்தான் ஏற்கனவே டாடா, இன்ஃபாசிஸ்
தொடங்கி ஸ்பிக்வரை செய்துள்ளனரே. இதில் எதை அரசு நிறுவனம் சாராமல் ஒரு
பணக்காரர் புதிதாக என்னத்தை செய்து அறிவியலை உய்விக்க யோசனை தருகிறார்
என்று தியரிடிகலாகவும் பிராக்டிகலாகவும் எதுவும் புரியவில்லை.
அடுத்து உலகத்தரமான ஆராய்ச்சி என்று எதை கற்பனை செய்து வைத்திருக்கிறார்
என்று தெரியவில்லை. (விரல் விட்டு எண்ணகூடியதானாலும்) இந்தியாவின் கணித
அறிவியல் நிறுவனங்களில் நிகழும் ஆய்வுகள் உலகத்தரமானவைதான். ராமானுஜன்
போன்ற பெரும் மேதை எப்பொழுதாவது நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் தோன்றமுடியும்.
உலகத்தரம் எனப்படும் ஐரோப்பிய அமேரிக்க ஆய்வாளர்கள், சாதனை புரிந்தவர்கள்
எல்லாம் கூட ராமானுஜன் தரத்தில் இல்லவும் இல்லை. மற்றபடி தற்போது
உலகத்தரமாக பங்களிப்பை செய்தவர்களாக ஒரு நூறு ஆய்வாளர்களாவது கணிதத்தில்
மட்டும் இந்தியாவில் இருப்பார்கள். அறிவியலில் இன்னும் சில மடங்கு
இருப்பார்கள். கடந்த ஒரு நூற்றாண்டில் எனக்கு சரியாக கணக்கு சொல்ல
வராவிட்டாலும் இதைவிட இன்னும் ஒரு மடங்கு நிச்சயம் இருக்கும். பலர் இங்கு
தொடங்கி வெளிநாட்டில் குடியேறி இருக்கலாம்; வெளிநாட்டில் ஆராய்ச்சி தொடங்கி
இங்கே வேலையுடன் குடியேறி இருக்கலாம். எல்லாவற்றையும் இந்திய
பங்களிப்பாகத்தான் கருத வேண்டும். இதை எழுதிக்கொண்டிருக்கும் என்
பங்களிப்புகளும் உலகத்தரமானவைதான். உலகத்தரமான ஆய்வு இதழ்களில்
வெளிவருபவைகளை உலகத்தரமானவை எனறுதான் சொல்ல முடியும். எதை வைத்து இங்கே
உலகத்தரமான ஆய்வு வேலைகள் குறிப்பாக கணிதத்தில் நிகழவில்லை என்று
நினைக்கிறார் என்று புரியவில்லை. இங்கே நாம் உருவாக்கும் மாணவர்கள்
வெளிநாட்டிற்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்கு செல்வது வழமைதான். ஜப்பான் போன்ற
நாடுகளிலும் யாரும் உள்ளூரில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதில்லை. (நம்மூரில்
இருந்து செல்ல லௌகிக காரணங்களும் இருக்கலாம்.) ஆகையால் பத்ரி சொன்ன
அத்தனையும் முழுமையாக தவறான தகவல்கள்.
ஆனால் எண்ணிக்கையில் தரமான
ஆய்வாளர்கள் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் -அதுவும் நம்
மக்கள் தொகைக்கு- மிகக்குறைவு என்பது உண்மைதான் (பத்ரி சொல்வது மிக
மிகைப்படுத்துதல் என்று மட்டுமே சொல்கிறேன்). அதன் அடிப்படை பிரச்சனை நமது
பல்கலை கழகங்கள் எந்த ஆய்வும் நடைபெறாத ஒப்புக்கு சப்பாணியாக இருப்பதுதான்.
இது ஏன் என்பது என் பார்வையில் மிக சிக்கலான பிரச்சனை. பல்கலைகழகங்களின்
உதவாக்கரை நிலைகளுக்கு கல்வி நிறுவன விதிகள், அமைப்புகள், அரசியல்
தலையீடுகள், உள்ளரசியல்கள், நமது சமூகத்தின் சாதிய அமைப்பு ஆகிய
பலவற்றிற்கும் பங்கு உள்ளதாக நினைக்கிறேன். இதை இப்போதைக்கு சரி செய்வதை
பற்றிய ஒரு திறந்த உரையாடலை கூட நிகழ்த்த முடியும் எனக்கு தோன்றவில்லை. அது
குறித்து வேறு சந்தர்ப்பத்தில்தான் பேசவேண்டும்.
இதனோடு
ஒப்பிடக்கூடிய இன்னொரு விஷயமும் உண்டு. நியூட்டனுக்கு சில நூறு வருடங்கள்
முன்னால் கேரளாவில் கால்குலஸ் சார்ந்த (வேறுவகை) அறிவு இருந்தது என்பது
இன்று ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் அது ஏன் இந்தியாவில் ஒரு
கல்விப்புலமாக பரவவும் இல்லை, காலப்போக்கில் பல்வேறு கணித கருத்தாக்கங்களாக
வளரவும் இல்லை என்பது முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட மக்கள் மட்டும்
குறிப்பிட்ட வேலையை செய்த நம் சாதிய அமைப்பு அதற்கு ஒரு காரணம் என்பது
எளிமையான விடை (கடினமான விடையாக வேறு ஏதாவது கூட இருக்கலாம்)யாக
தோன்றுகிறது. ஒரு தொடர்ச்சியான பார்ம்பரியம் இங்கே இல்லாதன்
காரணங்களுக்கும், நம் பல்கலை கழகங்கள் வெத்தாக இருப்பதற்கும் கூட
தொடர்பிருக்கலாம். இந்த பிரச்சனைகள் குறித்து புரிந்துகொள்ள முயற்சிப்பதும்
நம் பல்கலைகழகங்களை ஆய்வுக்குரிய இடமாக மாற்ற முயல்வவதும்தான்
தீர்வாகமுடியும். யாரோ சில பணக்காரர்கள் (இன்னொரு) ஆராய்ச்சி நிறுவனம்
தொடங்கி இதை தீர்க்க முடியாது.
பின் குறிப்பு: வசந்த கந்தசாமி
போன்ற திறமையாளர்களை ஒதுக்கும் பார்பனிய சூழல்தான் கணிதம் அறிவியல்
வளராததற்கு காரணம் என்று ஒருவர் பின்னூட்டியிருந்தார். பலமுறை சொன்னதை
மீண்டும் சொல்கிறேன். பர்ப்பனிய அரசியல் சார்ந்த பிரச்சனை ஐஐடிகளில் மிக
தூக்கலாகவும், மற்ற இடங்களில் ஓரளவும் இருக்கிறது என்பதுதான் என் கருத்து.
ஆனால் வசந்த கந்தசாமி போலியானவர்.அவரது பக்களிப்புகளுக்கு ஆய்வுலகில்
குப்பைகளுக்கான மதிப்பு மட்டுமே உள்ளது. அவர் உண்மையில் தன்னை மாபெரும்
கணித மேதை என்று சொல்லி பெரியாரிஸ்டுகளையும் சாதி எதிர்ப்பாளர்களையும்தான்
ஏமாற்றி வருகிறார்.
இதற்கான எனது பதில்:
இந்தியாவில்
கணிதத்திலும் அறிவியலிலும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள் நடைபெறுவதில்லை
என்று நான் சொன்னது கொஞ்சம் அதீதம்தான். உலகத்தரம் என்பதன் பொருள் என்ன
என்பதை வைத்து இது மாறுபடும். உதாரணமாக, உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி
இதழ்களில் ஒரு கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்தக் கட்டுரை உலகத்தரம்
வாய்ந்தது என்று வைத்துக்கொண்டோமானால் நிச்சயமாக இந்தியாவிலிருந்து
ஆராய்ச்சி செய்வோர் பலரது கட்டுரைகள் தினம் தினம் இந்த இதழ்களில்
வெளியாகின்றன. (ரோஸாவசந்த் மற்றும் என் பல நண்பர்கள் எழுதும் பல
ஆராய்ச்சிக் கட்டுரைகள் இவ்வகையானவை.) Citation index படிப் பார்த்தால்
இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் மிக உயரமான இடத்தில்
இருக்கும்.
நான் கணித, அறிவியல் துறையைச் சேர்ந்தவன் கிடையாது.
இங்கு மைக்ரோ அளவில் என்ன நடக்கிறது என்பது குறித்து எழுத நான் தகுதியானவன்
கிடையாது. ஆனாலும் நான் மேற்கண்ட பதிவில் எழுதியதை ஓரளவுக்கு defend செய்ய
முடியும். அதற்கான சில அடிப்படைகளைக் கீழே தருகிறேன்.
மைக்ரோ
அளவில் என்ன நடந்தாலும், மேக்ரோ அளவில் விளைவுகள் என்ன என்பதைத்தான்
என்னைப் போன்ற பொதுஜனங்களால் பார்க்க முடியும். அப்படியான சில மேக்ரோ
குறியீட்டெண்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
(1) அறிவியல்
துறையில் நம் நாட்டில் ஆராய்ச்சி செய்த ஒரே ஒருவருக்குத்தான் நோபல் பரிசு
கிடைத்துள்ளது (சி.வி.ராமன்). மற்றவர்களுடைய ஆராய்ச்சி நடைபெற்றது அந்நிய
நாடுகளில். அறிவியலில் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு நடப்பதற்கும் நோபல் பரிசு
கிடைப்பதற்குமான காலம் இயற்பியல், வேதியியல், உயிரியல்/மருத்துவம் ஆகிய
துறைகளில் முறையே 30, 25, 23 ஆண்டுகள் என்கிறது ஒரு கட்டுரை. [1]
அப்படியானால் பெரும்பாலும் அடுத்த 25-30 ஆண்டுகளில் நோபல் பரிசு
வாங்கவேண்டுமானாலும் இதற்குள்ளாக ஒருவர் தன் கண்டுபிடிப்பைச்
செய்திருக்கவேண்டும். அப்படி இந்தியாவில் ஒருவர்கூடத் தற்போது இருக்கிறார்
என்று நான் கருதவில்லை. அப்படி ஏதேனும் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள்
நிகழ்ந்து எதிர்காலத்தில் அவருக்கு நோபல் பரிசு வாய்ப்பு உள்ளது என்று
யாரேனும் நம்பினால் அது குறித்த விவரங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
சொல்லப்போனால், மேலே சொன்ன 25-30 வருடக் காத்திருப்பின் அடிப்படையில்,
அடுத்த 25 ஆண்டுகளில்கூட இந்தியாவில் நோபல் தகுதி ஆராய்ச்சியைச்
செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை நான் எழுப்புவேன்.
குறைந்தபட்சம் அறிவியலின் மூன்று துறைகளில் நாமினேட் செய்யப்படத்
தகுதியானவர்கள் தற்போது உள்ளனரா என்ற கேள்வியையே நாம்
எழுப்பவேண்டியிருக்கிறது. மீண்டும், நான் உள்ளிருந்து இதனைச் சொல்லவில்ல.
வெளியிலிருந்து சொல்கிறேன். நான் சொல்வது ஓர் ஊகம் மட்டுமே.
(2)
கணிதத்தில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை தரப்படும் ஃபீல்ட்ஸ் மெடலைப்
பெறுவதற்குத் தகுதியானவர்கள், அந்தத் தளத்தில் ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள்
இந்தியாவில் இருக்கிறார்களா என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். இதையும்
வெளியிலிருந்தே எழுப்புகிறேன். எவ்வித கணித ஆராய்ச்சி இதழையும் நான்
படித்துப் புரிந்துகொள்ளும் தகுதி படைத்தவன் அல்லன். இன்று இந்தியாவில்
இந்த வட்டத்துக்குள் வரக்கூடிய கணித விற்பன்னர்கள் எத்தனை பேர்
இருக்கிறார்கள் என்று நீங்கள் ஓர் ஊகத்தை முன்வையுங்கள்.
(3)
Millennium Problems [2] என்று சொல்லக்கூடிய பெரும் புதிர்களைத் தீர்க்கும்
அளவுக்கான ஆராய்ச்சிகள் இந்தியாவில் எத்தனை இடங்களில் உள்ள கணித
ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு வருகிறது? இதுபோன்ற ‘யானை பிழைத்த வேல்’
சிக்கல்களைத் தம் வாழ்நாள் வேலையாக எடுத்துக்கொண்டு உழைப்பவர்கள்
இந்தியாவில் எத்தனை பேர்?
(4) உலக அளவில் (கவனிக்க: உலக அளவில்)
இளநிலை, முதுநிலை மாணவர்கள் கட்டாயம் படித்தே ஆகவேண்டிய பாடப்புத்தகம்
என்று அறிவியல், கணிதத் துறைகளில் இந்தியாவிலிருந்து ஆராய்ச்சி செய்யும்
எத்தனை பேரின் புத்தகங்கள் முன்வைக்கப்படுகின்றன?
(5) ஸ்ரீனிவாச
ராமானுஜன் போன்ற இந்தியாவின் ஒற்றைச் சொத்தின் ஒட்டுமொத்த உழைப்பைத்
தெளிவானதாக்கி, அவருடைய நோட்டுப் புத்தகங்களில் காணப்படும் ஒவ்வொரு
சமன்பாட்டையும் நிரூபித்துத் தொடர் புத்தகங்களாகக் கொண்டுவரும் ஆண்டிரூஸ்,
பெர்ண்ட் போன்றவர்கள் இந்தியாவில் இத்தனை ஆண்டுகளில் உருவாகாதது ஏன்? சரி,
இதேமாதிரியான வெளிநாட்டுக் கணித மேதைகளின் ஒட்டுமொத்த உழைப்பை எடிட் செய்து
தொடர் புத்தகங்களாகக் கொண்டுவரக்கூடியவர்கள் இந்தியாவில் எத்தனை பேர்
இருக்கிறார்கள்?
(6) நான் படிப்பதெல்லாம் popular science, math
புத்தகங்கள்தான். உதாரணமாக, Prime Obsession: Bernhard Riemann and the
Greatest Unsolved Problem in Mathematics, John Derbyshire புத்தகத்தை
நேற்றுத்தான் வாங்கினேன். Fermat's Last Theorem, Simon Singh; The Music
of the Primes: Why an unsolved problem in mathematics matters, Marcus du
Sautoy போன்ற சில புத்தகங்களைப் படித்துள்ளேன். ரிச்சர்ட் டாக்கின்ஸ்,
ஸ்டீவன் ஹாக்கிங், ஜான் கிரிபின் போன்ற அறிவியலாளர்கள், சித்தார்த்தா
முகர்ஜி, அதுல் கவாண்டே போன்ற மருத்துவர்கள் எழுதியுள்ள பாப்புலர்
புத்தகங்களைப் படித்துள்ளேன். உயர் ஆராய்ச்சிகள் செய்வோர்தான் இம்மாதிரியான
புத்தகங்களை எழுத முடியும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இம்மாதிரியான
பாப்புலர் புத்தகங்களைச் சிறப்பாக எழுதுவேண்டுமென்றால் ஒருவர் தன் துறையில்
சீரிய புலமையும் பொதுமக்களுக்கும் இளம் மாணவர்களுக்கும் இத்துறை குறித்த
ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற பரிவும் இருந்தாகவேண்டும் என்று
நம்புகிறேன். உலகத்தரத்திலான இதுபோன்ற புத்தகங்களை எழுதும் திறன்
இந்தியாவில் எத்தனை பேரிடம் உள்ளது, அல்லது அம்மாதிரியான திறன் கொண்ட
எத்தனை பேர் இம்முயற்சியில் இறங்கியுள்ளனர்? இந்திய மொழிகளை விடுங்கள்,
அவற்றில் காசு கிடையாது. ஆனால் ஆங்கிலத்தில் இம்மாதிரியான புத்தகங்களை
எழுதலாம் அல்லவா? உலகச் சந்தை இருக்கிறதே?
இதுபோன்ற பல சிந்தனைகள்
மனத்தில் ஓடிக்கொண்டிருந்ததால்தான் நான் மேற்கண்டவாறு எழுதினேன். நான்
முதல் வரியிலேயே ஒப்புக்கொண்டதைப் போல அது கொஞ்சம் அதீதமான கருத்துதான்.
300 ஆண்டுகாலம் பின்னால் இருக்கிறோம் என்று நான் சொன்னதின் கருத்து வேறு.
நிச்சயமாக உயர் கணிதம், அறிவியல் படிக்கும் ஓர் இந்திய ஆராய்ச்சி மாணவர்,
கடந்த கால அறிவியல், கணித முன்னேற்றங்களை என்ன என்று புரிந்துகொண்டு,
அத்துறையில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படைப்பார். ஆனால் நான்
சொன்னது, அதுபோன்ற புதுத்துறையை உருவாக்கக்கூடிய செமினல்
கண்டுபிடிப்புகளைச் செய்வதில் நாம் அத்துணை ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம்
என்பதைத்தான்.
அடுத்து, இதற்கு என்ன மாற்று என்பது குறித்த என் ஒரே
ஒரு கருத்தை மட்டும் வெளியிட்டேன். உயர் ஆராய்ச்சிகளில் தனியாரின் தீவிரப்
பணப் பங்களிப்பு ஒன்று மட்டுமே மாற்றாக இருக்க முடியும் என்று
சொல்லியிருந்தேன். பால் டிராக், லைனஸ் பாலிங், ஃபெய்ன்மான், ஐன்ஷ்டைன்
இன்னபிறர் வாழ்கை வரலாறுகளைப் படிக்கும்போது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
(பெரும்பாலும் தனியார்) இவர்களைத் தங்களை நோக்கி ஈர்க்க எத்தனை பணம்
வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்திருக்கிறார்கள். இம்மாதிரியான
ஆராய்ச்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல் ஆராய்ச்சிச்சாலைகளை
உருவாக்கித் தந்திருக்கிறார்கள். வேண்டிய அளவு மாணவர்களையும்
ஆராய்ச்சியாளர்களையும் சேர்த்துக்கொள்ள பட்ஜெட் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சாத்தியங்கள் இந்தியாவில் உள்ளதா? ஒரு ரேங், ஒரு சாலரி -
அதுதான் இந்திய நிறுவனங்களின் நிலை. அதைத்தாண்டி அதில் உள்ள அரசியல்.
இதையெல்லாம் தாண்டித்தான் இந்தியாவில் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால்
அவற்றால் ஒருக்காலும் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய ஆராய்ச்சிச்சாலைகளைத்
தாண்டிவிட முடியாது என்று கருதுகிறேன். அரசு அமைப்புகளில் கைவைக்க
முடியாது. புரட்சிதான் வெடிக்கும். உயர் ஆராய்ச்சிகள் ஏன் தேவை?
மக்களுக்குச் சோறு போடு முதலில் என்றுதான் நம் இடதுசாரிப் புரட்சியாளர்கள்
நம்மைக் கேள்வி கேட்பார்கள்.
ஆனால் கொழுத்த, பணம் படைத்த தனி
நபர்களால் இந்நிலையை மாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள்
செய்வார்களா, அப்படிச் சிலரையாவது வற்புறுத்தி வழிக்குக் கொண்டுவர முடியுமா
என்பது வேறு விஷயம்.
கணித, அறிவியல் உயர் கல்வி ஆராய்ச்சிக்கென
நம்மிடம் மிகச் சில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களே உள்ளன. ஐஐடிகள்,
ஐஐஎஸ்சி, ஐஐஎஸ்இஆர், டிஐஎஃப்ஆர், மேட்சயன்ஸ், சிஎம்இ (இன்னும் சில
இருக்கலாம். எனக்குத் தெரிந்தது இவ்வளவே.) போன்ற 20 இடங்களைத் தாண்டி,
விண்ணைத் தொட முயற்சி செய்யலாம் என்பதுகூடத் தெரியாதவர்கள்தான்
இருக்கிறார்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். இப்படி மேலே குறிப்பிட்டுள்ள
நிறுவனங்களில் explosive ஆராய்ச்சிகள் நடப்பதைவிட அதிகமாக மிகச் சாதாரண
தரத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலேயே நடந்துகொண்டிருக்கலாம்.
நானும் ஒரு காலத்தில் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் சுமாராகச் சில
வேலைகளைச் செய்திருந்தேன். ஒருநாள் வேலையற்றுப்போய் கூகிள் ஸ்காலரில் போய்
என் ஆராய்ச்சிக்கட்டுரையை மேற்கொண்டு யாராவது ஏதாவது
செய்துகொண்டிருக்கிறார்களா என்று பார்த்தேன். ஒரு பத்துப் பதினைந்து பேர்
நான் செய்ததை எடுத்துக்கொண்டு எங்கேயோ போய்விட்டார்கள். ஆனால்
இந்தியாவிலிருந்து ஒருவர் பெயர்கூட அதில் இல்லை. மிகச் சாதாரணமான ஒரு
துறையில், மிகச் சாதாரணமான ஓர் ஆராய்ச்சியிலேயே இதுதான் நிலை!
இதுதான் என் ஆதங்கம்.