Friday, August 31, 2012

குஜராத் தீர்ப்பு - உடனடி வினை

குஜராத் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து மாநிலமெங்கும் நடந்த வன்முறையில் மதவெறிக் கூட்டம், பல முஸ்லிம்களை வெட்டிக் கொன்றது. பல இடையூறுகளுக்கு இடையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் ஒன்று, நாரோடா பாடியா என்ற இடத்தில் 33 குழந்தைகள் உட்பட 97 பேர் கொல்லப்பட்ட வழக்கு.

இந்த வழக்கில் இரு முக்கியக் குற்றவாளிகள், பாஜக எம்.எல்.ஏவாக இருக்கும் மாயா கோட்னானி என்ற பெண் மருத்துவர். மூன்று ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்துள்ளார். மற்றொருவர் பாபு பஜ்ரங்கி என்ற பஜ்ரங் தளத் தலைவர்.

முஸ்லிம்கள்மீதான தாக்குதலில் பாஜகவினர், வி.எச்.பியினர், ஆர்.எஸ்.எஸ்காரர்கள், பஜ்ரங் தள்காரர்கள் என்று ஒரு பெரும் குழுவே ஒன்று சேர்ந்து, திட்டமிட்டு, கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது வழக்கின் தீர்ப்பில் தெளிவாகியுள்ளது.

இந்த இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் முக்கியமானது. மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் (இரண்டு தண்டனைகள் - ஒன்று 18 ஆண்டுகள், அடுத்தது 10 ஆண்டுகள்). பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் முழுதும் சிறையில் இருக்கவேண்டிய தண்டனை.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றமும், அடுத்து உச்சநீதிமன்றமும் செல்வார்கள் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஆனால் தீர்ப்பில் பெரும் மாறுதல் இருக்கச் சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.

இந்தத் தீர்ப்புகள் இந்தியாவுக்கும் இந்தியக் குடியாட்சிக்கும் மிக முக்கியமானவை. இந்தியாவில் பல இடங்களில் மதக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. இனி நடந்தால், சட்டம் மிகக் கடுமையாக நடந்துகொண்டு, சம்பந்தப்பட்ட ஆசாமிகளுக்கு, அவர்களுடைய மத, அரசியல் பின்னணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடுமையான, மிக மிகக் கடுமையான தண்டனையைத் தரும் என்ற precedent-ஐ இந்தத் தீர்ப்பு முன்வைக்கிறது.

நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன். ஆனால் இம்மாதிரியான கடுமையான சிறைத்தண்டனையை முழுதாக ஆதரிக்கிறேன். மேலும் பல்வேறு குற்றங்களுக்கும் இதைப்போன்ற கடுமையான, நீண்டகால ஆயுள் தண்டனையைப் பரிந்துரைக்கிறேன்.

அத்துடன், பல குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை தரும்போது அவை ஒரே நேரத்தில் (concurrently) இயங்கும் என்று பொதுவாக அளிக்கப்படும் தீர்ப்புகளுக்கு மாறாக, ஒன்றன்பின் ஒன்றாக (sequentially) இயங்கும் என்ற தீர்ப்பும் வரவேற்கத்தக்கது. இதையும் நீதிபதிகள் குறிப்பாகப் பின்பற்றத் தொடங்கினால், நீதியின்மீதுள்ள பயம், பொது வன்முறை குறைவதிலும், அறவே நீங்குவதிலும் எதிரொலிக்கும்.

Thursday, August 30, 2012

புத்தக அறிமுக/விமர்சன வலைப்பதிவு(கள்)

பல்வேறு செய்தித்தாள்களிலும் இதழ்களிலும் தமிழ்ப் புத்தகங்கள் பலவற்றையும் அறிமுகம் செய்கிறார்கள். அவற்றை ஒருசேரத் தொகுப்பது என்ற வேலையில் இறங்கியுள்ளோம். அவற்றை இந்த வலைப்பதிவில் காணலாம். இவை அனைத்தும் எங்களிடம் விற்பனைக்குக் கிடைக்கும் என்று சொல்லமுடியாது.

டயல் ஃபார் புக்ஸ் சார்பில் நாங்கள் அவ்வப்போது ஒரு புத்தகத்தை எடுத்து அவற்றின் தகவல்களை விவரமாக வெளியிடுகிறோம். வாரம் மூன்று புத்தகங்களையாவது இப்படிச் செய்கிறோம். இவை அனைத்தும் எங்களிடம் கட்டாயம் கிடைக்கும். இந்தப் புத்தகங்கள் குறித்த தகவலைகளை இந்த இடத்தில் காணலாம்.

ஆம்னிபஸ் என்ற தளத்தில் புத்தகங்களை அறிமுகம் செய்து எழுதுகிறார்கள். அந்தத் தளத்துக்கான சுட்டி இங்கே.

அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் பல்வேறு இலக்கியவாதிகளை அறிமுகம் செய்து அவர்களுடைய சிறுகதைகளை முழுமையாகத் தருகிறார்கள். அந்தத் தளத்தின் சுட்டி இங்கே.

வலைப்பதிவுகள், இணைய இதழ்கள் என்று எங்களுக்குத் தெரியாத பல இடங்களில் தமிழ்ப் புத்தக அறிமுகம் அல்லது விமர்சனம் இருந்தால் அவை குறித்த தகவல்களை dialforbooks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். தம் புத்தகங்கள் குறித்த விமர்சனங்களை பதிப்பாளர்கள் மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால் அவற்றையும் தொகுத்து வைக்கிறோம். ஸ்கேன் செய்யப்பட்ட படங்களாக அல்லாமல், அனைத்தையும் யூனிகோடு குறியீட்டில் டைப் செய்து வைப்பதால், கூகிள்/பிற தேடுபொறிகள் மூலம் தேடுவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இது சார்ந்த வேறு கருத்துகள் இருந்தாலும் மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்பலாம்.

Monday, August 27, 2012

டயல் ஃபார் புக்ஸ் எண்கள் - சிறு தடங்கல்

[இந்தப் பதிவை எழுதியபின் அதனைப் படித்துவிட்டு பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் இதுவரையில் எங்களை அழைத்துப் பேசிவிட்டனர். என் பதிவில் நான் பி.எஸ்.என்.எல் மீது குற்றம் சாட்டுவதுபோலக் குறிப்பிட்டது எனக்குச் சரியான புரிதல் இல்லாமையால். நாங்கள் மென்பொருள் சேவையைப் பெறும் நிறுவனம் வேறு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் லைன்களைக் கொண்டு இயங்குகிறது. எங்களிடம் இருக்கும் பி.எஸ்.என்.எல் எண்களிலிருந்து நேராக மற்றோர் நிறுவன எண்ணுக்குத் தானாகவே அழைப்புகளை மாற்ற இயலாதாம். இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் பொருந்துமாம். எனவே எங்கள் வசதிக்காகவே பி.எஸ்.என்.எல் எண்ணை, மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றுகிறோம். கீழே எழுதியிருப்பதில் மாற்றங்களைச் செய்துள்ளேன். இணையப் பதிவுகளைப் படித்து உடனடியாக எங்களைத் தொடர்புகொண்டு விளக்கம் தந்தது கண்டு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின்மீது என் மதிப்பு அதிகரித்துள்ளது.]


டயல் ஃபார் புக்ஸ் என்னும் தொலைப்பேசிமூலம் புத்தகம் வாங்கும் சேவையை நாங்கள் கடந்த சில மாதங்களாகச் செய்துவருகிறோம். அதற்காக இரண்டு எண்களைப் பதிவு செய்திருந்தோம்: 94459-01234 மற்றும் 9445 979797 ஆகியவை. அழைப்பவர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது (நல்லதுதான்!). எனவே சேவையைச் சிறப்பாக்க, அழைப்புகளை முறையாகப் பதிவு செய்து, அழைப்போரை மீண்டும் தொடர்புகொள்ள வசதியாக சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. ஆனால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சில வசதிகள் கிடையாது என்று சொல்லிவிட்டனர். எனவே ஒவ்வோர் எண்ணாக மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மாற்றும் வேலையில் உள்ளோம்.

இன்னும் ஓரிரு நாள்களுக்கு 94459-01234 வேலை செய்யாது. (இப்போது இந்த எண் மீண்டும் வேலை செய்யத் தொடங்கிவிட்டது.) ஆனால் 9445 979797 எண் தொடர்ந்து வேலை செய்யும். முதல் எண் வேலை செய்யத் தொடங்கிய சில நாள்களில் இரண்டாம் எண்ணையும் மாற்றும் வேலை ஆரம்பித்துவிடும். ஓரிரு நாள் தடங்கலுக்குப் பின், அந்த எண்ணும் வேலை செய்யத் தொடங்கிவிடும்.

இந்தத் தடங்கலுக்காக முன்கூட்டியே வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள்.

Friday, August 17, 2012

அனந்தபத்மநாபனுடன் ஒரு சந்திப்பு (வீடியோ)

ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இந்தியாவின் இயக்குநர் அனந்தபத்மநாபனுடன் நான் எடுத்த வீடியோ நேர்காணல் இங்கே. இதில் டெஸோ மாநாடு, இலங்கையில் தமிழர்கள் நிலை, இந்தியாவில் மனித உரிமைகள், காஷ்மீர் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசுகிறோம்.


அஹோம் (அஸ்ஸாம்) பிரச்னை இந்தியப் பிரச்னை ஆகிறதா?

அஸ்ஸாம் என்று நாம் அழைக்கும் பகுதியை அப்பகுதி மக்கள் அஹோம் என்றுதான் அழைக்கிறார்கள் என்றார் அப்பகுதியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் ஒருவர். அவரைப் போன வாரம் சந்தித்தேன்.

அஹோமில் போடோ பழங்குடி மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் வெடித்துள்ளது. இது ஒரு பகுதிக்குள்ளாக இருக்கவேண்டிய பிரச்னை. இதனை இந்து-முஸ்லிம் பிரச்னையாகப் பார்க்க நினைக்கின்றன ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்றவை. அப்படிப்பட்டதாக இருந்திருப்பின், பிற அஹோமிய இந்துக்களும் களத்தில் இறங்கியிருப்பார்கள். அப்படி இல்லை. இது இரு குழுக்களுக்கிடையேயான நிலம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னை.

போடோக்கள் தங்கள் பாரம்பரிய நிலத்தில் பிற இடங்களிலிருந்து வரும் முஸ்லிம்கள் கடை பரப்புகிறார்கள் என்று கோபம் கொண்டதின் விளைவுதான் இப்போது நடந்துள்ள கலவரம். இந்த முஸ்லிம்கள் மேற்கு வங்கத்திலிருந்து வந்தாலும் சரி, வங்கதேசத்திலிருந்து வந்தாலும் சரி, போடோக்களைப் பொருத்தமட்டில் அவர்கள் அந்நியர்களே.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எளிதல்ல. வடகிழக்குப் பழங்குடியினரைப் பொருத்தமட்டில் நிலம் சார்ந்த உரிமை என்பதில் உள்ள குழப்பங்கள் மிகச் சிக்கலானவை. ஒவ்வொரு குழுவும் தம் பாரம்பரிய இடம் என்று காண்பிக்கும் பகுதியில் வேறு பல பழங்குடியினரும் பிறரும் வசிக்கத்தான் செய்கிறார்கள். நாகா, மிசோ தொடங்கிப் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் பிரச்னையே.

போடோ, முஸ்லிம்கள் ஆகிய இரு குழுக்களிடையேயான இந்தப் பிரச்னை அஹோமுக்குள் மட்டும் இருந்தால் அதனைத் தீர்க்க முயற்சிகளையாவது செய்யலாம். ஆனால், அங்கிருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இதனை எடுத்துச் செல்வது பிரச்னையைத் தீவிரமாக்குகிறது. முக்கியமாக மும்பையில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஊர்வலம் கலவரமாக மாறியது. இந்த முஸ்லிம்கள் அஹோமிலும் மியான்மரிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்து இந்த ஊர்வலத்தை நடத்தினர்.

மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம்கள் என்ற சிறுபான்மையினர், ராக்கைன் என்ற மாகாணத்தில் உள்ளனர். அந்த மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். இவ்விரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பெரும் கலவரமாக ஆனது. அதில் பல ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் அகதிகளாக வங்கதேசத்துக்கும் தாய்லாந்துக்கும் சென்றுள்ளனர்.

வங்கதேசம் வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்குத் தங்களால் அடைக்கலம் தரமுடியாது என்று அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகிறார். இது மியான்மரின் பிரச்னை என்கிறார். ஒருவிதத்தில் போடோ-முஸ்லிம் பிரச்னையும் ரோஹிங்யா-ராக்கைன் பிரச்னையும் ஒன்றுதான்.

ஆனால் இந்தப் பிரச்னைகளில் முஸ்லிம்கள் பக்கம் மட்டுமே நியாயம் இருப்பதுபோலவும் எதிர்த்தரப்பினர் நியாயமற்றவர்கள் என்பதாகவுமே இந்திய முஸ்லிம்கள் பார்ப்பதாகத் தெரிகிறது. உலகில் எல்லா இடத்திலும் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்பதாகப் பிரச்னை மாற்றப்படுகிறது. போடோக்களும் ராக்கைன்களும் என்ன சொல்கிறார்கள், அவர்கள் தரப்பு நியாயம் என்ன என்று கேட்பதற்கு யாரும் இல்லை. அவர்களுக்கு சர்வதேச அளவில் பரிந்துபேச ஒருவரும் இல்லை.

சரி, முஸ்லிம்கள் எல்லோரும் ஒருவித சகோதரத்துவத்தை முன்வைக்கவேண்டும் என்று எடுத்துக்கொண்டாலும்கூட மும்பையில் அமைதியாக அந்த ஊர்வலத்தை நடத்தியிருக்க முடியாதா?

அடுத்து இதனைப் பெரிதாக்கியது ஹைதராபாத் எம்.பியும் மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவருமான ஆசாதுதீன் ஒவாய்சி மக்களவையில் பேசிய பேச்சு. பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் ஆகியவைபோல், இப்போது நடந்துள்ள அஹோம் கலவரம் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையில் சென்றுவிடுவார்கள் என்றார் இவர். இதனையே போடோக்களும் சொல்லலாம் அல்லவா?

பூனாவில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.
மைசூரில் திபெத்தியர் ஒருவர், வடகிழக்கு மாநிலத்தவர் என்ற சந்தேகத்தின்பேரில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, பூனா, ஹைதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் யாரோ பரப்பிய வதந்தி தீயெனப் பற்றிக்கொண்டது. ‘ரம்ஜானுக்குமுன் இங்கிருந்து போய்விடுங்கள். அதன்பின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்’ என்பதாக வடகிழக்கிலிருந்து வந்து இம்மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு எஸ்.எம்.எஸ் பரவியுள்ளது. இதனைப் பரப்பியது முஸ்லிம் சமூக விரோதிகளா அல்லது முஸ்லிம்களுக்குச் சிக்கல் வருவதை வரவேற்கும் இந்து சமூக விரோதிகளா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் பெரும் எண்ணிக்கையில் இம்மாநிலங்களிலிருந்து மக்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தில்கூட இது நடக்கிறது! இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பார்த்ததில் அஹோமைச் சேர்ந்த ஒருவர் பேசினார். ‘எங்களுக்குச் சென்னையில் பிரச்னை ஒன்றுமில்லை. ஆனால் அங்கே வீட்டிலிருந்து கூப்பிடுகிறார்கள். அதனால் போகிறேன்’ என்றார் அவர்.

தென் மாநிலங்களில் முஸ்லிம்களால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயந்து வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்வது ஒருபுறம். அஹோமில் இருக்கும் தங்கள் குடும்பப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆபத்து வந்துவிடும், அதனைத் தடுக்கவேண்டும் என்று போவது இன்னொன்று. கலவரத்தில் ஈடுபட்டு தங்கள் வீரத்தைக் காண்பிக்கவேண்டும் என்பதற்காகவும் சிலர் போகலாம்!

மொத்தத்தில், அஹோம் மாநிலத்தில் சிறிய பகுதி ஒன்றில் நடந்துள்ள ஒரு விபரீதம் இந்தியா முழுமைக்குமாக விரிவடைகிறது. இதற்கு முஸ்லிம் தலைவர்களின் பொறுப்பற்ற செயலும் ஒரு காரணம் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களைக் கண்டித்தாகவேண்டும். மும்பை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள், அதைக் கவனமாகக் கையாண்டிருக்கவேண்டும். ஒவாய்சி போன்றவர்கள் பொறுப்புடன் பேசவேண்டும்.

ஏற்கெனவே கையில் கம்புகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள், வடகிழக்கு மக்களைக் காப்பதற்காக பெங்களூரு ரயில் நிலையத்தில் சுற்றத் தொடங்கிவிட்டார்களாம். அடுத்து வேறுவிதமான மதக்கலவரங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒவாய்சியின் கூற்றின்படி முஸ்லிம் இளைஞர்கள் radicalise ஆகிறார்களோ இல்லையோ, வடகிழக்கு இந்துக்கள் radicalise ஆவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

இது நல்லதற்கில்லை.

Sunday, August 05, 2012

உடுமலை புத்தகக் கண்காட்சி

உடுமலைப்பேட்டை முனிசிபல் பத்மஸ்ரீ திருமண மண்டபத்தின் உடுமலை புத்தகக் கண்காட்சி நேற்று (4 ஆகஸ்ட் 2012) தொடங்கியது. மொத்தம் 27 ஸ்டால்கள். கிழக்கு பதிப்பகம் ஸ்டால் எண் 12-13-ல் உள்ளது. கண்காட்சி 13 ஆகஸ்ட் 2012 வரை நடைபெறும்.

புத்தகக் கண்காட்சி நடக்கும் திருமண மண்டபம்
தெருவில் அலங்கார வளைவு
தொடக்க விழா நிகழ்வு. உடுமலை எம்.எல்.ஏ ஜயராமன்,
மடத்துக்குளம் எம்.எல்.ஏ சண்முகவேலு ஆகியோர்.
கிழக்கு பதிப்பகம் அரங்கில் முதன்மை விருந்தினர்கள்
கிழக்கு அரங்கில் வாசகர்கள்
கிழக்கு அரங்கின் முழுமைப் படம்
கிழக்கு அரங்கின் மற்றொரு தோற்றம்
மக்கள் கூட்டம்

Friday, August 03, 2012

ஈரோடு புத்தகக் கண்காட்சி

இன்றுமுதல் (3 ஆகஸ்ட் 2012) ஈரோடு புத்தகக் கண்காட்சி தொடங்கியுள்ளது. 14 ஆகஸ்ட் 2012 வரை உள்ளது.

கிழக்கு புத்தகங்கள் கிடைக்கும் இடம்: கடை எண் 175-176

ப்ராடிஜி புத்தகங்கள், என்.எச்.எம் விநியோகிக்கும் பிற புத்தகங்கள் கிடைக்கும் இடம்: கடை எண் 75-76

மொத்தம் 200 கடைகள். ஆங்கிலப் புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் 46.

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தவர்: ஆர். நட்ராஜ் (முன்னாள் ஐ.பி.எஸ்), தற்போதைய டி.என்.பி.எஸ்.சி தலைவர்.

கிழக்கு பதிப்பகம்
ப்ராடிஜி, பிற புத்தகங்கள்
ஸ்டாலின் குணசேகரன், ஆர். நட்ராஜ்
கிழக்கு பதிப்பகம் உள்ளே
அரங்கின் வெளிவாயில்

Thursday, August 02, 2012

மின் கட்டுமானத்தின் சிதைவு

இந்த வார ஆரம்பத்தில் வட இந்தியாவில் மின் இணைப்புப் பின்னலில் சிக்கல் ஏற்பட்டு சுமார் 20 மாநிலங்களில் இரண்டு நாள்கள் மின்சாரம் முற்றிலுமாக நின்றுபோனது.

மின்சாரம் ஒரு மாநிலத்தின் பொறுப்பு. ஒவ்வொரு மாநிலமும் தனக்கான மின் தேவையை எப்படியோ உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். ஆனால் மின்சாரத்தின் அருமை கருதி மத்திய அரசு இதில் தலையிட்டு சில வேலைகளைச் செய்கிறது. தன் கட்டுப்பாட்டில் உள்ள என்.டி.பி.சி, என்.எல்.சி போன்ற நிறுவனங்கள்மூலம் மின் உற்பத்தி செய்கிறது. மாநிலங்களை இணைக்கும் பவர் கிரிட் எனப்படும் மின் வலைப்பின்னலை நடத்துகிறது. அணு மின்நிலையங்களை இயக்குகிறது. மாநில அரசுகள் மின் நிர்வாகத்தை மேம்படுத்த மானியம் தருகிறது.

உபரி மின்சாரத்தைச் சேமித்து வைக்க முடியாது. மின்சாரம் என்பது ஓடும் பொருள். சேமக்கலங்களில் (பேட்டரி) அதிகம் சேர்த்து வைக்க முடியாத பொருள். வீடுகளில் இன்வெர்ட்டர் போன்றவற்றில் நாம் கொஞ்சமாகச் சேமித்து வைக்கிறோம். ஆனால் மாநில அளவில் இது சாத்தியமில்லாத ஒன்று. நீர் மின் நிலையங்களில் இது கொஞ்சம் சாத்தியம். உபரி மின்சாரம் இருந்தால் அதனைக்கொண்டு மோட்டார்களை இயக்கி கீழிருந்து மேலே உள்ள அணைக்கு நீரைக் கொண்டுபோய் வைக்கலாம். பின் மீண்டும் மின்சாரம் தேவைப்படும்போது அந்த நீரைக் கீழ் நோக்கிக் கொட்டவைத்து ஜெனெரேட்டர்களை இயக்கி மின்சாரத்தைப் பெறலாம். ஆனால் நீர் மின்சாரம் உற்பத்தி அளவே இன்று மிகக் குறைவானது. கரியை எரித்துப் பெறும் மின்சாரத்தைச் சாம்பலில் செலுத்தி அதனை மீண்டும் கரி ஆக்கமுடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

மின் வலைப்பின்னலின்மூலம் சில மாநிலங்களை ஒன்று சேர்க்கும்போது ஒரு மாநிலத்தின் உபரி மின்சாரம் பிற மாநிலங்களுக்குச் செல்லுமாறு செய்யமுடியும். சில மாநிலங்களுக்குப் பொதுவான ஒரு மின் நிலையம் (உதாரணம்: நெய்வேலி) தயாரிக்கும் மின்சாரத்தை குறிப்பிட்ட அளவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பமுடியும்.

வட இந்தியாவில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காரணம், ஒரு சில மாநிலங்கள், முக்கியமாக உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்றவை தாம் ஒப்புக்கொண்ட மின்சார அளவைவிட அதிகமாக மின் வலைப்பின்னலிலிருந்து உருவியதுதான். இதன் காரணமாக ஒட்டுமொத்த மின் கட்டுமானம் பாதிக்கப்பட்டு, கிரிட் செயல் இழந்தது. இதனால் அனைத்து மின் நிலையங்களும் தானாகவே வேலை செய்வதை நிறுத்திக்கொண்டன. ஏனெனில் அவை உருவாக்கும் மின்சாரத்தை கிரிட்டுக்குள் செலுத்த முடியாது. இப்படி ஒவ்வொன்றாக மின் நிலையங்கள் வேலை செய்வதை நிறுத்த, ஒட்டுமொத்த வட இந்தியா இருளில் மூழ்கியது.

நின்றுபோன அனல் மின் நிலையங்களை உடனடியாக மீண்டும் தொடங்கிவிட முடியாது. பெரும்பாலும் வெளியிலிருந்து கொஞ்சமாக மின்சாரம் உள்ளே வந்தால்தான் இவை மீண்டும் இயங்கத் தொடங்கும். ஒவ்வொன்றாக மின் நிலையங்களை இயக்கி, அவை கொஞ்சம் ஓடியபின், அவை தயாரிக்கும் மின்சாரம் சரியான ஃப்ரீக்வன்சிக்கு வந்தபின்னரே அவற்றை மீண்டும் கிரிட்டில் இணைக்க முடியும்.

ஒருமாதிரியாக இது நேற்று நடந்து, மீண்டும் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பு கிடைத்துள்ளது.

இது எஞ்சினியரிங் பழுது என்பதைவிட, அரசியல் கொள்கை பழுது என்றுதான் சொல்லவேண்டும். வேண்டிய அளவு மின்சாரம் தயாரிக்கும் கட்டுமானங்களில் முதலீடு செய்யாமல் இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு மாநில அரசும் பொதுமக்களை ஏமாற்றிவந்துள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா இருவரைவிடவும் மோசமான அரசியலைத்தான் மாயாவதி, முலாயம்/அகிலேஷ் யாதவ் கோஷ்டி செய்துள்ளது. நாட்டில் பெரும் மாநிலங்கள் என்று எடுத்துக்கொண்டால் யாருமே வேண்டிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. கொஞ்சம் அளவு குறைந்த மாநிலங்களில் குஜராத் உபரி மின்சாரம் தயாரிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் உபரி மின்சாரம். அவ்வளவுதான்.

நம் உண்மையான மின் தேவை நன்கு கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய சுமார் 5 கோடி ரூபாய் முதலீடு செய்யவேண்டும். எனவே தேவையான முதலீட்டு அளவும் தெரியும். ஆனால் செயல்படுத்துவது எளிதல்ல. இடம் வேண்டும். இந்தியாவில் இடத்தை மக்களிடமிருந்து பெறுவது எளிதல்ல. அதற்காகத்தான் Ultra Mega Power Projects (UMPP), Special Purpose Vehicles (SPV) ஆகியவற்றை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால் இது பெருமளவு முன்னேற்றம் காணவில்லை. எஸ்.பி.வியில் அரசே இடத்தைக் கையகப்படுத்தி, ஒரு கம்பெனியை உருவாக்கி, அதனை ஏலம் விடும். தனியார் நிறுவனங்கள் அந்த கம்பெனியை வாங்கி, அந்த இடத்தில் சட் சட்டென்று மின் நிலையங்களை அமைத்து மின்சார உற்பத்தியை மூன்று வருடத்துக்குள் ஆரம்பித்துவிடவேண்டும். ஆனால் ரிலையன்ஸ் பவர், டாடா பவர் போன்றோரே இந்த எஸ்.பி.விக்களை வாங்கி இயக்குவதில் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்தம் 16 யு.எம்.பி.பிக்கள், ஒவ்வொன்றும் சுமார் 4,000 மெகாவாட் (மொத்தம் 64,000 மெகாவாட்) என்று மிகப் பேராசையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டங்களில் ஒன்றே ஒன்று குஜராத்தில் டாடா பவரின் ஒரு பகுதி மட்டுமே இப்போது இயங்குகிறது. மீதியில் மூன்று திட்டங்கள் ரிலையன்ஸ் பவருக்குக் கிடைத்தன. அவர்கள் இரண்டில் மட்டும் கட்டுமானங்களை ஆரம்பித்துள்ளனர். மீதி எல்லாம் எடுப்பதற்கே ஆள் இல்லாமல் திண்டாட்டம். ரிலையன்ஸ் பவரின் பணக் கையிருப்பையும் அவர்கள் இதுவரையில் வாங்கியுள்ள கடனையும் வைத்துப் பார்த்தால் அவர்கள் எடுத்துக்கொண்ட வேலையே ஒழுங்காக முடியுமா என்று சந்தேகமாக உள்ளது.

மத்திய அரசு முழுமூச்சுடன் இறங்கியுள்ள இந்தத் திட்டத்தின் நிலையே இதுதான். முழுமையான நிலை பற்றி அறிந்துகொள்ள இங்கே செல்லவும்.

அணு மின்சாரம் பற்றிப் பேசவே வேண்டாம். அதற்கு எதிர்ப்பாளர்கள் எங்கு பார்த்தாலும் உள்ளனர். சூரிய ஒளி மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் அப்படியே நம்மைக் காப்பாற்றிவிடப் போவதாக இவர்கள் நினைக்கிறார்கள்.

மக்களின் மின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. மின் விசிறி இல்லாமல் தூங்க முடிவதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் ஏசி இல்லாமல் தூங்க முடியாது என்றாகிவிடும். ஃப்ரிட்ஜ் இல்லாமல் குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைக்காது. தோசை மாவு கெட்டுவிடும். தயிர் புளித்துவிடும். பாக்கெட் பால் வீணாகிவிடும். செல்பேசி, கம்ப்யூட்டர், டிவி என்று பிறவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதுதவிர, பொதுச் சேவைகள் - ரயில், டிராஃபிக் விளக்குகள் - என அனைத்துக்கும் மின்சாரம் தேவை. இந்த மின்சாரம் எங்கிருந்து கிடைக்கப்போகிறது?

அடுத்த கவலை, மேலே சொன்ன 64,000 மெகாவாட் யு.எம்.பி.பி வந்தால், அதற்குத் தேவையான கரி எங்கிருந்து வரப்போகிறது? அந்தக் கரியின் விலை தொடர்ந்து குறைவாகக் கிடைக்குமா? இல்லை கரி அலாட்மெண்டில் பிரதமர் 2 லட்சம் கோடி ரூபாய் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டார் என்று அபத்தமாகக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்போமா?