Wednesday, November 27, 2013

சூரிய ஒளி மின்சாரம் - அப்டேட்

என் முந்தைய பதிவுக்கு இன்று வந்திருந்த ஒரு பின்னூட்டம் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

ஜூன் 2013-ல் சூரிய ஒளி மின்சார அமைப்பை என் வீட்டில் நிறுவினேன். இன்றுவரை பிரச்னை ஏதும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நடுவில் ஒருமுறை என் மகள் பல்ப்-வயர்-ஸ்விட்ச் மின் சர்க்யூட் ஒன்றை உருவாக்கி அதனை நேராக பிளக்கினுள் நுழைக்க, மொத்த மின் இணைப்பும் ட்ரிப் ஆகிப்போனது. அப்போது நான் விட்டில் இல்லை. ஏதோ பள்ளிக்கூடப் பரிசோதனையாம். யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் ரிஸ்க்கான ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறாள். அதன்பின், என் வீட்டில் சூரிய ஒளி மின் அமைப்பை நிறிவிய S & S Flow Engineering பொறியாளரைத் தொடர்புகொண்டு என் மனைவியே எந்தெந்த இடங்களில் இருக்கும் ட்ரிப்பரைச் சரி செய்வது என்று கேட்டு, சரி செய்துவிட்டார். மூன்று இடங்களில் ட்ரிப்பர் போட்டிருந்திருக்கின்றனர். அனைத்துமே ட்ரிப் ஆகியிருந்தன.

இதுவரை இரண்டு முழுக் கட்டணமும் ஓர் அரைக் கட்டணமும் கட்டியிருக்கிறேன். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இதுவரை சுமார் ரூ. 8,000-9,000 சேமிப்பு வந்துள்ளது என்று கணிக்கிறேன். ஓர் ஆண்டு முழுதும் பயன்படுத்தினால்தான் சரியாகத் தெரியவரும். இதுவரை ஒரே ஒருமுறை சோலார் பேனல்களைச் சுத்தம் செய்திருக்கிறோம்.

ஒரு கிலோவாட் சூரிய மின் அமைப்பு என் முழுத் தேவைக்குப் போதாது. தெரிந்துதான், சோதனை அமைப்பாக இது போதும் என்று நிறுவியிருந்தேன். சில நாள்கள் வானம் வேகமூட்டமாக இருக்கும்போது குறைந்த அளவு ஃபோட்டான்கள் மட்டுமே பூமியை அடைவதால் மின் உற்பத்தி குறைவாகவே இருக்கும். அப்போது மெயின்ஸிலிருந்து மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். பேட்டரியில் மின்சாரத்தைச் சேமிப்பது என்பதே திறன் குறைவானது. உற்பத்தியாகும் ஒவ்வொரு சொட்டு மின்சாரமும் பயனாவதில்லை. வேஸ்டேஜ் இருக்கிறது. நான்கைந்து நாட்கள் நாம் வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பினால் அந்த நாள்களில் உற்பத்தியாகும் மின்சாரமெல்லாம் வீண்தான். சில நாட்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும். அன்று நாம் குறைவாகப் பயன்படுத்துவோம். மறுநாள் வானம் மேகமூட்டமாக இருக்கும். அன்றுதான் எல்லா அறைகளிலும் லைட், ஃபேன், டிவி என்று ஓடிக்கொண்டிருக்கும். ஔவையாரின் ‘இடும்பைகூர் என் வயிறே’ என்ற பாடலைத்தான் மேற்கோள் காட்டவேண்டும்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, தன்னிறைவு என்ற நிலை இருப்பதால் திருப்தியாக இருக்கிறது.

இப்போது சென்னை தாண்டிய தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை இருப்பதாக அறிகிறேன். மத்திய அரசு ஏதோ தகிடுதத்தம் செய்கிறது என்பதுபோல் தமிழக முதல்வர் ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். உண்மை அதுவல்ல. நமக்குத் தேவையான மின்சாரத்தை நாம் தயாரிப்பதில்லை. வெகு தொலைவில் இருக்கிறோம். எனவே நம் மாநிலத்தைக் காக்க ஒரே வழிதான் இருக்கிறது. யாராலெல்லாம் 1.5 லட்ச ரூபாயை முதலீடு செய்ய முடியுமோ அவர்கள் எல்லாம் தத்தம் வீட்டுக்கு ஒரு கிலோவாட் சூரிய மின் அமைப்பைப் பொருத்திக்கொள்வதுதான் ஒரே வழி. கடைசியாக ஒரு நிறுவனத்திடம் பேசியபோது 1.2 லட்சத்தில் செய்துவிடலாம் என்றார்கள். எனக்கு 1.7 லட்சம் ஆனது (மானியம் இல்லாமல்).

அரசின் மானியம் பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். (நானாவது இதைச் சொல்லவேண்டுமல்லவா?) நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாம், நமக்காக மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறோம். அவ்வளவுதான். பொதுப் பிரச்னைகளுக்குத் தனித் தீர்வுகளை உருவாக்கிக்கொள்வதில் நாம் வல்லவர்கள். அதையே மின் உற்பத்திக்கும் நீட்டித்துக்கொள்வோம். சென்னையைவிட வெளி இடங்களில் இதனை வசதியாகச் செய்யலாம். ஏனெனில் சென்னையில் அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் அவரவர்க்குத் தேவையான கூரை கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் பிற நகரங்களில் தனி வீட்டில் வசிக்கும், கையில் காசு உள்ள மக்கள் இதனைச் செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்தாத ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் எங்கோ ஒரு தொழிற்சாலைக்குப் போய்ச் சேரும். டீசல் ஜென்செட் மின்சாரத்தைவிட சூரிய ஒளி மின்சாரம் செலவு குறைந்தது, பொல்யூஷன் (பெரும்பாலும்) அற்றது.

இதுகுறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு எழுதவும். பதில் சொல்கிறேன்.

Friday, November 22, 2013

NHM Reader - தற்போதைய நிலை

கடந்த சென்னை புத்தகக் காட்சியின்போது (ஜனவரி 2013) NHM Reader என்ற எங்களுடைய மின் புத்தக platform-ஐ அறிமுகப்படுத்தியிருந்தோம். மிகக் குறைவான பேர்களே பார்த்திருப்பீர்கள், பயன்படுத்தியிருப்பீர்கள். அதனை முன்னெடுத்துச் செல்வதில் நிறையத் தொழில்நுட்பச் சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. குறைவான மூலதனம், குறைந்த புரோகிராமர்கள் என்ற நிலையில் இதைவிட வேகமாக எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

இப்போதைய நிலை:

1. ஆண்டிராய்ட் ஆப்: ஓரளவுக்குத் திருப்தியாகவே வேலை செய்கிறது. இலவசப் புத்தகங்களை டவுன்லோட் செய்யலாம்; கூகிள் பிளே வழியாகப் பணம் கொடுத்து புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம். இப்போதைய பெரிய குறை, முதல் பக்கத்தில் விற்பனைக்கான புத்தகங்கள் சிலவற்றை மட்டுமே காட்ட முடிகிறது. கிண்டில் போல வரிசையாகப் புத்தகங்களை நகர்த்தி நகர்த்திப் பார்க்கும் வழிமுறை இல்லை. இது விரைவில் வந்துவிடும்.

2. ஐஓஎஸ் ஆப்: இங்கே நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் ஆப்பிள் உள்ளே நாங்கள் மற்றுமொருமுறை லாகின் செய்யுமாறு கேட்கக்கூடாது என்றனர். முதல் சில வெர்ஷன்களில் அவர்கள் இந்தப் பிரச்னையை எழுப்பவில்லை. நடுவில் திடீரென்று இவ்வாறு செய்யச் சொன்னார்கள். அதாவது ஆப்பிள் லாகின் போதும், அதில் வாடிக்கையாளர் ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டால் அவர் அதனை எப்போதுவேண்டுமானால் படிக்குமாறு இருக்கவேண்டும் என்றார்கள். ஆனால் அப்படி ஆப்பிள் மூலம் வாங்கிவிட்டு, அதே புத்தகத்தை வாடிக்கையாளர் ஆண்டிராய்ட் டிவைஸில் படிக்கமுற்பட்டால் அப்போதும் புத்தகம் அவருக்குக் கிடைக்கவேண்டும் அல்லவா? வாடிக்கையாளர் எங்களுடைய லாகின்னில் இருந்தால்தான் அது சாத்தியம். இதுகுறித்து ஆப்பிள் கவலைப்படவில்லை.

எனவே ஆப்பிள் ஒன் டச் வழியாகப் புத்தகங்கள் வாங்கும் சேவையை நாங்கள் நீக்கவேண்டியிருந்தது. ஆனால் வேறு எப்படிப் புத்தகங்கள் வாங்கமுடியும்? இப்போதைக்கு ஆண்டிராய்டில் புத்தகங்கள் வாங்கலாம். விரைவில் இணையம் வழியாக நேராகவே புத்தகங்கள் வாங்கமுடியும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதுவரை நீங்கள் ஆப்பிள் டிவைஸில் இதுவரை வாங்கியுள்ள புத்தகங்களை மட்டுமே படிக்கமுடியும்.

3. இணையக் கடை: அடுத்த பத்து நாட்களுக்குள் இது வழக்கத்துக்கு வந்துவிடும். இணையத்தில் வேண்டிய மின் புத்தகத்தை வாங்கிவிட்டு, ஐஓஎஸ் அல்லது ஆண்டிராய்ட் டிவைஸில் NHM Reader App கொண்டு அவற்றைத் தரவிறக்கிப் படிக்கலாம்.

இப்போது ஒரு வாடிக்கையாளராக உங்களுக்குப் பல குறைகள் தென்படலாம். தேடுதல் ஒழுங்காக வேலை செய்யாது. ஒரு புத்தகத்தைத் தொட்டுவிட்டு ஒரு சில விநாடிகள் நீங்கள் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். டிசைன் இப்போது இருப்பதைவிடப் பல மடங்கு மேலானதாக இருக்கலாம். புத்தகங்களின் ஃபார்மட் மிகச் சாதாரணமாக இருக்கும். (Bold, italics, centering போன்ற எதுவும் இருக்காது. ஒரேயொரு ஃபாண்ட் மட்டும்தான்.) இவற்றையெல்லாம் சரி செய்வது அடுத்த கட்டம். அவை குறித்து அவ்வப்போது உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

Wednesday, November 06, 2013

ஏன் தேசங்கள் தோற்கின்றன?

அமெரிக்கா 2008-ல் பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. நிதி நிறுவனங்கள் வரலாறு காணாத சரிவைச் சந்தித்தன. சில நிறுவனங்கள் திவாலாயின. சில நிறுவனங்கள் இணையவேண்டி வந்தன. கிட்டத்தட்ட அனைத்து நிதி நிறுவனங்களுமே அரசிடம் சென்று பிச்சை கேட்டன. பங்குச்சந்தைகள் சரிந்தன. இனி இத்துடன் அமெரிக்காவின் சரிவு ஆரம்பம் என்றே பலரும் நினைத்தனர்.

ஆனால் அதே ஆண்டுதான் அமெரிக்கா மீண்டும் உயரக்கூடிய அளவு ஒரு தொழில்நுட்ப மாற்றம் நிகழத் தொடங்கியது.

பூமிக்கு அடியில் பெட்ரோலியம் இருப்பதுபோல எரிவாயுவும் உள்ளது. இதில் ஒருவகை, ‘ஷேல் கேஸ்’ எனப்படும் படிவப்பாறை எரிவாயு. மண்ணுக்கு அடியில் உள்ள, படல் படலாகப் பிய்யக்கூடிய ஷேல் எனப்படும் படிவப் பாறைக்கு மேலாக எரிவாயுச் சேகரிப்பு பல இடங்களில் உள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் பெரும் தொழில்நுட்பப் பாய்ச்சலைச் செலுத்தி 2008-லிருந்தே இந்த எரிவாயுவை லாபகரமான முறையில் வெளியே எடுக்கத் தொடங்கின. நீரைப் பாய்ச்சி எரிவாயுவை வெளியே எடுக்கும் இந்தத் தொழில்நுட்பம் இன்றைய தேதியில் அமெரிக்காவிடம்தான் வலுவாக உள்ளது.

இதனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மாபெரும் மாற்றம் நிகழ ஆரம்பித்துள்ளது. பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்துவந்த அமெரிக்கா இப்போது ஷேல் எரிவாயு ஏராளமாகக் கிடைப்பதால் இப்பொருள்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா எங்கும் தொழிற்சாலைகள் அதிகமாக ஆகும் வாய்ப்புகள் இப்போதே தொடங்கிவிட்டன. இதனால் நிறையச் சம்பளம் தரக்கூடிய வேலைகள் அமெரிக்காவில் அதிகமாகும் என்று கணிக்கிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்முனைதலை ஊக்குவிக்கும் அரசு, லாபகரமான தொழில்களை நோக்கிக் குவியும் பணம் ஆகியவை காரணமாக, ஒரு நாட்டின் தலையெழுத்தே மாறப்போகிறது.

***

இந்தியாவிலும், குஜராத்தின் காம்பே வளைகுடா, கிருஷ்ணா-கோதாவரி, காவேரி, தாமோதர் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இந்த ஷேல் எரிவாயு பெருமளவு இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

சொந்தக் காலில் நின்று இந்த எரிவாயுவை எடுத்து நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் திறன் ஓ.என்.ஜி.சி, கெயில் போன்ற இந்திய அரசு நிறுவனங்களுக்குக் கிடையாது. அவை வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. மறுபக்கம் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக எரிவாயுவுக்கு அரசு அதிக விலை கொடுக்கத் தீர்மானித்துள்ளது என்று குற்றம் சாட்டுகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். இதில் உண்மையும் உள்ளது.

ஆக, எரிவாயு வெளியே வருவதற்குபதில் சர்ச்சைகள்தான் பற்றி எரிகின்றன.

இந்த எரிவாயுவால் இந்தியப் பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நாம் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலியத்தை இறக்குமதி செய்துகொண்டிருப்போம். கச்சா எண்ணெய் பேரல் என்ன விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு என்ன என்று பார்த்துக்கொண்டே இருப்போம். இரண்டு மூன்று நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை இரண்டொரு ரூபாய் ஏறிக்கொண்டே இருக்கும். என்றாவது ஒருநாள் ஒரு ரூபாய் குறையும். பிறகு மூன்று ரூபாய் அதிகரிக்கும்!

ஒரு வாயு. இரு நாடுகள். இரு வேறு பாதைகள்.

***

இதற்குக் காரணம் என்ன? இந்தியாவும் குடியாட்சி முறையைக் கொண்ட நாடு; அமெரிக்காவும் அப்படிப்பட்டது. இரு நாடுகளும் முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள். இந்தியா அவ்வப்போது சோஷலிசம் என்று பேசினாலும் இப்போதைக்கு அடிப்படையில் முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் ஒரு நாடுதான்.

காரணம், இந்தியப் பொருளாதார அமைப்புகளிலும் இந்திய அரசியல் அமைப்புகளிலும் உள்ள குறைபாடுகளே.

(அ) பெரும் வருமானத்துக்கான வாய்ப்பு உள்ளது என்றால் அமெரிக்க வென்ச்சர் முதலீடுகள் படுவேகமாக அங்கே பாயும். மக்களிடம் உள்ள படைப்புத் திறன் பெருமளவு ஊக்குவிக்கப்படும். தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தயாராகப் பல பொறியாளர்கள் முன்வருவார்கள். அவர்களுக்குத் தேவையான ஊக்கமும் முதலீடும் உடனே கிடைக்கும். தோல்வி அடைய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்றாலும் வெற்றி பெற 1% வாய்ப்பாவது இருக்கிறதே என்ற எண்ணத்தில் ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் களத்தில் இறங்குவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து இதனைப் பார்த்துக்கொண்டிருக்கும். பெரும் ஏகபோகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றுமட்டும்தான் அதன் வேலை.

(ஆ) இந்தியா போலல்லாது, தன் நிலத்தின்கீழ் என்ன கிடைத்தாலும் அது அந்த நில உரிமையாளருக்குச் சொந்தம் என்பதுதான் அமெரிக்காவின் சட்டம். எனவே தனியார் நிறுவனங்கள், தனி நில உடைமையாளர்களிடம் நியாயமான சந்தைப் பணத்தைக் கொடுத்து நிலத்தை வாங்குவார்கள். நிறைய ஸ்பெகுலேஷன் இருக்கும். சிலருக்கு அதிக லாபம், சிலருக்குக் குறைந்த லாபம். நல்ல விலை கிடைத்தால் நிலத்தை விற்கப் பலரும் தயாராக இருப்பார்கள்.

(இ) ஆனால் இந்தியாவில் நிலத்துக்கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் ஓர் அரசுக்கு மட்டுமே சொந்தம். உங்கள் வீட்டின் அடியில் வைரம் கிடைக்கிறது என்று தெரிந்தால் இந்திய அரசு உங்களைத் துரத்திவிட்டு (ஏதோ கொஞ்சம் பணம் கொடுப்பார்கள் - அதுவும் சந்தை மதிப்பல்ல) உங்கள் வீட்டை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொள்ளும். உங்களிடம் கையகப்படுத்தும் நிலத்துக்கு நியாயமான விலை, லாபம் ஆகியவை பொதுவாகக் கிடைக்காது. உங்கள் நிலத்தை வாங்க முனையும் தனியார் நிறுவனங்கள் அரசு வழியாக அதனை அடைவதுதான் எளிது என்பதைப் புரிந்துகொண்டு, லஞ்சம், லாபியிங் ஆகிய வழிகளில் அதனைச் சாதித்துக்கொள்ள முனைவார்கள்.

(ஈ) நிலம் கையகப்படுத்துதலிலிருந்தே பிரச்னை. இதற்குமேல் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முதலீடு, லாபம் கிடைக்குமா என்று தெரியாததால் ஏற்படும் ரிஸ்க் என்று அனைத்தையும் பார்க்கும்போது பெரும்பாலான நிதி நிறுவனங்கள் தரையைத் தோண்டும் வேலைகளில் ஈடுபட மறுப்பார்கள்.  சிறு தொழில்முனைவோரால் இந்தத் துறையில் ஈடுபடவே முடியாது. அதைமீறி ஈடுபடுவோர், அரசியல்வாதிகளுடன் பிரத்யேகத் தொடர்பு வைத்திருக்கும் பெருமுதலாளிகளாக மட்டுமே இருப்பார்கள். நாளை அரசியல் பிரச்னை ஏற்பட்டால் அதனை எவ்வாறு சரிக்கட்ட முடியுமோ அப்படி சரிக்கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். (கரி அகழ்தல் விவகாரத்தையும் கார்னெட் மணல் அள்ளுதல் விவகாரத்தையும் கவனியுங்கள்.) இது நல்ல லாபகரமான விஷயமாக இருப்பதால், இந்திய அரசியல்வாதிகளுக்கும் இதை இப்படியே நீட்டிப்பதுதான் நல்லது என்று தோன்றும். எனவே சீர்திருத்தமே நிகழவே நிகழாது.

இதனால்தான் அமெரிக்காவில் எண்ணற்ற குட்டி குட்டி நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களும் ஷேல் வாயு ஃப்ராக்கிங்கில் வெற்றிகரமாக ஈடுபடும்போது இந்தியாவில் ஒரேயொரு ரிலையன்ஸ் கிருஷ்ணா கோதாவரி விஷயத்தைப் பிரச்னையாக்கிக்கொண்டிருக்கிறது.

***

இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் "Why Nations Fail: The Origins of Power, Prosperity, and Poverty" by Daron Acemoglu and James Robinson என்ற புத்தகம் இதுபோன்ற விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. 20%-தான் இதுவரை படித்துள்ளேன். ஆனால் இணையத்தில் இந்தப் புத்தகத்துக்கான விமரிசனங்கள், எதிர்வினைகள், எதிர்வினைக்கு ஆசிரியர்களின் எதிர்-எதிர்வினைகள் என்று அவற்றையெல்லாம் படிக்கவே நேரம் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட ஓர் எதிர்வினையில், நல்ல அரசியல் முறை (குடியாட்சி) இருந்தும் இந்தியா ஏன் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளது என்ற கேள்விக்கு அசிமோக்லு/ராபின்சன் இவ்வாறு பதில் அளிக்கிறார்கள்:
We go to pains in the book to emphasize that electoral democracy isn’t the same as inclusive political institutions. This becomes particularly binding when it comes to India. India has been democratic since its independence, but in the same way that regular elections since 1929 don’t make Mexico under PRI control an inclusive society, Congress-dominated democratic politics of India doesn’t make India inclusive. Perhaps it’s then no surprise that major economic reforms in India started when the Congress Party faced serious political competition. In fact, the quality of democracy in India remains very low. Politics has not only been  dominated by the Congress party but continues to be highly patrimonial, and as we have been discussing recently, this sort of patrimonialism militates against the provision of public goods. Recent research by Toke Aidt, Miriam Golden and Devesh Tiwari (“Incumbents and Criminals in the Indian National Legislature”) shows there are other very problematic aspects of the Indian democratic system: a quarter of the members of the Lok Sabha, the Indian legislature, have faced criminal charges, but alarmingly, such politicians are more likely to be re-elected than those without criminal charges, reflecting the fact that Indian democracy is far from being an inclusive ideal.
அதாவது:
  • இந்தியாவில் குடியாட்சி இருக்கிறது என்பதாலேயே அதன் அரசியல் அமைப்புகள், அனைவரையும் உள்ளடக்கியது என்று நினைத்துவிடக்கூடாது.
  • காங்கிரஸ் கட்சிக்குத் தீவிரமான போட்டி வந்ததால்தான் சில பொருளாதாரச் சீர்திருத்தங்களாவது நிகழ்ந்தன.
  • இப்போதைய இந்திய அரசியலில் குடும்ப உறுப்பினர்களுக்கே முன்னுரிமை கிடைக்கிறது.
  • குற்றம் புரிந்தவர்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஆகவே இந்தியக் குடியாட்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக இல்லை. இது மாறினால்தான், பொருளாதார அமைப்புகள் சீர்பெறும். அதற்குப் பிறகே, இந்தியப் பொருளாதாரத்தில் வேகமான மாற்றம் நடைபெறும்.

Tuesday, November 05, 2013

‘மங்கள்யான் ஒரு வேஸ்ட்டா?’

இன்று ஹலோ எஃப்.எம் வானொலியில் ஒலிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சிக்காக மங்கள்யான் குறித்த என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். அப்போது ‘மங்கள்யானுக்காக இத்தனை ரூபாய் செலவு செய்யவேண்டுமா? அதனால் என்ன பயன்? இந்தியாவில் இத்தனை ஏழை மக்கள் இருக்கும்போது இந்த ஆடம்பரம் தேவையா?’ என்பதுபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இன்று Firstpost தளத்தில் இந்தக் கட்டுரை கண்ணில் பட்டது.

அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஓர் அரசு செய்யும் முதலீடுகள் அனைத்துமே பயனுள்ளவைதாம். அவற்றால் மட்டுமே ஒரு நாடு முன்னேற முடியும். நாட்டில் உள்ள ஏழைகளுக்காக ஓர் அரசு எவ்வளவோ செய்துகொண்டிருக்கிறது. ஏழைகளுக்கு உணவு, இருப்பிடம், பள்ளிகள் என்பவற்றை மட்டுமே கட்டிக்கொண்டிருப்பதுதான் ஓர் அரசின் கடமைகள் என்று நினைப்பது சரியல்ல. கடந்த இத்தனை வருடங்களாக அரசு அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடு செய்தது சொற்பமே.

இஸ்ரோவின் செயற்கைக்கோள்களால்தான் நாம் துல்லியமான பருவநிலைத் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் இன்று கடும் புயல் அடிக்கும்போதும் எண்ணற்ற உயிர்களைக் காக்கமுடிகிறது. இஸ்ரோ செயற்கைக்கோள்களால்தான் வீட்டில் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. தொலைத்தொடர்பு சாத்தியமாகிறது. இன்று உலகிலேயே செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திலும் ராக்கெட் ஏவுவதிலும் திறன் கொண்ட ஆறேழு நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். அனைவரையும்விடக் குறைந்த செலவில் இதனைச் செய்யக்கூடியவர்களாக உள்ளோம்.

அரசுகள் செய்யும் வீண் செலவுக்குக் கணக்கு வழக்கே இல்லை. தலைவர்களுடைய அல்லது அரசுகளுடைய சாதனைகள் என்று சொல்லி முழுப்பக்கக் குப்பை விளம்பரங்கள். பிறந்த நாள், இறந்த நாள் என்று ஒரு சில மறைந்த தலைவர்களுக்காகப் பல கோடி ரூபாய் வரிப்பணம் நாசமாகிறது. அமெரிக்கப் பத்திரிகைகளில் இவ்வாறு வாஷிங்டன், ஜெஃபர்சன், லிங்கன், ரூஸ்வெல்ட் பிறந்த/இறந்த தினங்களுக்காகக் கோடிக்கணக்கில் அந்நாட்டு அரசுகள் விளம்பரம் செய்வதில்லை.

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் இந்தச் செலவை மட்டும் நீக்கிவிட்டால் ஏழைகளுக்கு வயிறார உணவளித்துவிடலாம் என்பதுபோலப் பேசுவது அபத்தம். ஏழைகளுக்கு இப்போது சில லட்சம் கோடிகளில் உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை யார் கொடுக்கப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த மசோதா வந்தவுடனே அனைவருக்கும் வயிறார உணவு கிடைத்துவிடப்போகிறதா என்றால் இல்லை. அவ்வளவு ஓட்டைகள். திருட்டு, லஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம். பணம் இல்லாததால் ஒன்றும் ஏழைகள் திண்டாடுவதில்லை. பணத்தைச் சரியாக சென்றுசேர்க்கவேண்டிய இடத்துக்குச் சென்று சேர்க்க வக்கில்லாத சிஸ்டத்தினாலும் அதிலிருந்து கொள்ளையடிக்கக் காத்திருக்கும் கயவர்களாலும்தான் ஏழைகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. யூனிக் ஐடெண்டிடி எண் என்ற பெயரில் சில ஆயிரம் கோடிகள் செலவாகியுள்ளன. ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் சில லட்சம் கோடிகள் செலவாகியுள்ளன. மங்கள்யான் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 450 கோடி ரூபாய்.

மாறாக விண்கலம் அனுப்பும் முயற்சி வெற்றியில் முடிந்தால் அது எண்ணற்ற மாணவர்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுக்கும். ஏழை மாணவர்களுக்கும் சேர்த்துதான். நம் நாட்டினர் அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்துள்ளனர்; நானும் நாளை நாடுபோற்றும் விஞ்ஞானியாக, பொறியாளராக ஆவேன் என்று எண்ணம் பெறும் மாணவர்கள் பலர், அதனைச் சாதிக்கவும் செய்வார்கள்.

இந்தத் திட்டத்துக்கு எதிராகப் பேசும் ஆசாமிகளைக் கணக்கில் எடுங்கள் - rogues gallary-தான்.

ஜான் ட்ரீஸ்: “part of the Indian elite’s delusional quest for superpower status”
ஹர்ஷ் மந்தர்: “I think it’s so strongly symbolic of an extremely unequal society”
மனு ஜோசப்: “How can India talk about mining Mars when the fact is that it depends on exploitative foreign companies to mine its own real estate on Earth for minerals in the first place?”

இன்னும் தமிழக அறிவுஜீவிகள்தான் திருவாய் மலரவில்லைபோல. பொறுப்பற்ற புல்லர்கள்!

Monday, November 04, 2013

மங்கள்யான்

நாளை (செவ்வாய்க்கிழமை) செவ்வாய் கிரகம் நோக்கிப் பயணப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) மங்கள்யான் என்ற விண்கலம் தன் இலக்கை வெற்றிகரமாக அடைய வாழ்த்துகிறேன். நாளை விண்ணில் ஏவப்பட்டதும் இந்த விண்கலம் பூமியைச் சுற்றத் தொடங்கும். அப்படியே வேகம் பெற்று, ஒரு கட்டத்தில் பூமியின் ஈர்ப்பு விசையை மீறிக்கொண்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பிக்கும். சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து செவ்வாயை நெருங்கும் இந்த விண்கலம், செவ்வாயின் ஈர்ப்பால் பிடிக்கப்பட்டு அந்தக் கிரகத்தைச் சுற்றத் தொடங்கும்.

2008-ல், சந்திரயான் விண்கலத்தை இஸ்ரோ சந்திரனை நோக்கிச் செலுத்தியபோது ஒரே பரபரப்பில் சந்திரயான் குறித்துப் பல பதிவுகளை எழுதியிருந்தேன். (அவையெல்லாம் இங்கே).

இப்போது அதிகம் பதிவுகள் எழுதுவதில்லை. ஆனால் மங்கள்யான் பாதையை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். மங்கள்யான் இந்தியத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இதனை வெற்றிகரமாகச் செய்துமுடித்தால் நாம் சட்டை காலரை தைரியமாகத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். இந்தியாவை உலக அரங்கில் நிறுவப்போவது அதன் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள் மட்டுமே.