இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொள்கை
பத்ரி சேஷாத்ரி, 11 ஆகஸ்டு 2004
சமாச்சார்.காம்
இணையம் வழியாக பொருட்களை வாங்கினால் விற்பனை வரி கிடையாது. இணையம் வழியாக சினிமா பார்த்தால் கேளிக்கை வரி கிடையாது. ஒவ்வொரு நிறுவனமும் தன் அலுவலர்களுக்கு இணைய அலவன்ஸாக ரூ. 6,000 தர வேண்டும். அப்படிக் கொடுக்கும் பணத்திற்கு நிறுவனம் வரி கட்ட வேண்டாம், அதைப் பெறும் அலுவலர்களும் அந்தத் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டாம்.

இதெல்லாம் என்ன, கனவா, இல்லை நிஜமா?

தயாநிதி மாறனும், மன்மோகன் சிங்கும் மனது வைத்தால் நிஜமாகலாம்.

அடுத்த இரண்டு வாரத்திற்குள் தகவல் தொடர்பு, ஐடி அமைச்சர் தயாநிதி மாறன் அரசின் இணைய அகலப்பாட்டை - Internet Broadband - பற்றிய கொள்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போகிறார். அப்பொழுது மேற்கண்ட கனவுகள் ஒருவேளை பலிக்கலாம். ஏனெனில் அரசின் தொலைதொடர்புத் துறை அமைச்சகத்திற்கு மேற்படி சிபாரிசுகளைச் செய்திருப்பது TRAI எனப்படும் இந்தியாவின் தொலைதொடர்புத் துறைக் கட்டுப்பாட்டு வாரியம்.

சரி, இந்த இணைய அகலப்பாட்டை என்றால் என்ன? எதற்காக ஓர் அரசு வெற்றிலை பாக்கு வைத்து ஊரில் உள்ளவர்களை அழைத்து வரிவிலக்கெல்லாம் கொடுக்க வேண்டும்?

இணையம் பற்றி உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் சமாச்சார்.காம் வந்து இந்தக் கட்டுரையைப் படித்திருக்க மாட்டீர்கள். இந்தியாவில் 1995இலிருந்து இணையம் பொதுமக்களுக்குக் கிடைத்து வந்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்த்த அளவு அதிகமாகவோ, வேகமாகவோ, பரவலாகவோ இணையத்தின் பயன்கள் போய்ச்சேரவில்லை. இணைய இணைப்பு கொடுக்க லைசென்சு வாங்கியவர்கள் ஆயிரத்துக்கும் மேல். இருநூறு பேர்களாவது கடையைத் திறந்தனர். இப்பொழுது ஐந்து பெரிய நிறுவனங்கள், பத்துப் பதினைந்து சில்லறை நிறுவனங்கள்தான் எஞ்சியுள்ளன. ஒவ்வொரு நாளும் புதிதாக சிலர் இணைய ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இந்த growth rate - வளர்ச்சி விகிதம் சரசரவென ஏறமாட்டேன் என்கிறது. நடுவில் சில மாதங்களில் வளர்ச்சி விகிதம் குறைந்து கூடப்போயுள்ளது.

போனவாரம் நாம் மொபைல் செல்பேசிகள் பற்றி பார்த்தது போல ஒரு பரபரப்பான விற்பனை இல்லை. ஏன்?

ஒரு கணினியும், அதற்கு ஜோடியாக நல்ல வேகமான இணைய இணைப்பும் இருந்தால் என்னென்ன செய்யலாம்? உங்கள் வங்கிக் கணக்கு வழக்குகளை அதிலேயே கவனித்துக் கொள்ளலாம். வீட்டுக்குத் தேவையான அரிசி, உப்பு, புளி, மிளகாய் முதல் படிக்க புத்தகங்கள் வரை இணையம் வழியாக எளிதாக ஆர்டர் செய்து வரவழைத்துக் கொள்ளலாம். ரயில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கடுப்பாக வேண்டாம். வீட்டுக்கே நேரடியாக வந்து சேரும். மின்சாரக் கட்டணத்தைக் கட்டலாம், தண்ணீரே வராவிட்டாலும் மெட்ரோ வாட்டர் வரி கட்டலாம். பாதி அடுப்பு பற்றவைத்ததும் நிதானமாக ஓர் இணையதளம் போய் 'ரெசிபி' பார்த்து அன்றைய சமையலைக் கவனிக்கலாம். அமெரிக்காவில் இருக்கும் உறவுகளோடு நிதானமாக பேசிக்கொண்டேயிருக்கலாம். வெப்கேம் வைத்து முகமும் பார்க்கலாம். சனி, ஞாயிறு தொலைக்காட்சிகள் போரடிக்கும்போது வேண்டிய சினிமாவை வேண்டிய நேரத்தில் on-demand பார்க்கலாம். ராத்திரி பத்து மணிக்கு குழந்தைக்கு வயிற்று வலியென்றால் இணையம் மூலமாகவே டாக்டரிடம் ஆலோசனை கேட்கலாம். குக்கிராமத்தில் இருந்து கொண்டு சென்னையில் இருக்கும் டாக்டர்களிடம் பேசி, சென்னை டாக்டர் எக்ஸ்ரேயை சியாட்டிலில் இருக்கும் டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை செய்து என்ன வியாதி என்பதைத் தீர்மானிக்குமாறு செய்யலாம். வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை அழுது, எங்கேயோ புறநகர்ப் பகுதி எஞ்சினியரிங் காலேஜில் இருக்கும் திராபையான வாத்தியார் நடத்தும் பாடத்தை மறந்து ஐஐடியில் நடக்கும் பாடத்தை கம்பியூட்டரில் பார்த்து, கேட்டே பாஸாகலாம்.

இத்தனை பற்றியும் நிறையக் கேட்டு அலுத்துப் போய் கடைசியாய், 'ஆமா, எங்க ஊர்ப்பக்கம் டயலப் ஒன்னுதான் கெடைக்கும், அதுல மெயில் படிக்கறதுக்கே மீட்டர் எகிறுடுது' என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. அதற்குத்தான் தேவை குறைந்த கட்டணத்தில் அதிவேக அகலப்பாட்டை கனெக்ஷன் - பிராட்பேண்ட். TRAI பிராட்பேண்ட் என்றால் என்ன என்று வரையறுக்கிறது: "குறைந்தபட்சம் 256 kbps வேகமுள்ள, எப்பொழுதும் கனெக்ஷன் இருக்கக்கூடிய இணைய இணைப்புத்தான் பிராட்பேண்ட்." இப்படிப்பட்ட இணைப்பை, மிகப் பரவலாக இந்தியாவின் ஒவ்வொரு கோடியிலும் இருக்கும் மக்களிடம், குறைந்த விலையில் கொண்டு சேர்த்தால்தான் நாடு உருப்படும் என்கிறது TRAI. ஆனால் இப்பொழுது ஏன் இந்த பிராட்பேண்ட் இணைப்புகள் நாடு முழுதும் கிடைக்கவில்லை என்பதற்காக பல காரணங்களைச் சொல்கிறது TRAI. அவையாவன:

 1. எக்கச்சக்க விலை. தென் கொரியாவில் கிடைக்கும் பிராட்பேண்ட் இணைப்புகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் கிடைக்கும் பிராட்பேண்ட் 60 மடங்கு அதிக விலை! மேலும், வாங்கும் சக்தியை வைத்து மதிப்பிடுகையில் (purchase power parity), 1,200 மடங்கு அதிகம்.
 2. கடைசி மைல் தொலைவில் இப்படியான அகலப்பாட்டை இணைப்பை வழங்கக்கூடிய சக்தி இருப்பது அரசின் பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். இவ்விரண்டும் மக்களுக்குக் குறைந்த விலையில் அதிவேக இணைப்புகளை வழங்க சிறிது கூட முயற்சி எடுக்கவில்லை. மற்ற கேபிள் டிவி கேபிள்கள் மூலம் இணைப்புகள் வழங்குவது, வி-சாட் (VSAT), DTH மூலமாக அதிவேக இணைப்புகளை வழங்குவது இப்பொழுதைக்கு அதிகச் செலவாகும் காரியம்.
 3. வயர்லெஸ் இணைப்புகள் வழியாக கடைசி மைல் தூரத்தில் அதிவேக இணைப்புகள் வழங்குவதற்கு அரசின் பல துறைகளிடமிருந்தே பல தடைகள் உள்ளன.
 4. உள்ளூர் leased circuit விலை மிக அதிகமாக உள்ளது. (இப்படி செயற்கையாக அதிக விலை வைத்து விற்பது நம் அரசின் பி.எஸ்.என்.எல் தான். சர்வதேச லீஸ்டு சர்க்யூட் விலையும் அதிகம். இதற்குக் காரணம் வி.எஸ்.என்.எல் போன்றவர்கள். சில மாதங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ், வி.எஸ்.என்.எல் இருவருக்கும் இடையே இது சம்பந்தமாக கடுமையான சண்டை வந்தது.
 5. இணைய நிறுவனங்கள் தமக்குள்ளாக NIXI எனும் internet exchange-ஐக் கொண்டுவருவதன் மூலம் செலவைக் குறைக்கலாம். ஆனால் இன்றுவரை அதை சரியாகச் செய்யாமல் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ஒரு ISPயிலிருந்து இன்னொரு ISPக்கு ஈமெயில் அனுப்பினால் அந்த மெயில் அமெரிக்கா வரை போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருகிறது. அதற்குக் காரணம் உள்ளூரிலே இந்த ISPக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதில்லை!
 6. பிராட்பேண்ட் வளர்ச்சிக்கு - பொதுவாகவே இணைய வளர்ச்சிக்கு முக்கியம் இந்தியர்களுக்குத் தேவையான, உருப்படியான விஷயங்கள் - content. இது இணையத்தில் கம்மியாக உள்ளது. ஏனெனில் மேளதாளத்தோடு ஆரம்பித்த இணையத் தகவல் கம்பெனிகள் பல இழுத்து மூடிவிட்டன. மிச்சம் இருக்கும் ஒன்றிரண்டு பேரும் ஏதோ மிகக் குறைந்த சேவையைக் கொடுத்துக் கொண்டிருந்தால் போதும் என்ற நிலையில் உள்ளன.

சரி, TRAI இன்னதான் பிரச்சினைகள் என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டதே, அப்படியே அதற்கான தீர்வுகளையும் சொல்லிவிடக் கூடாதா என்று கேட்கிறீர்களா? அந்தத் தீர்வுகளை அரசுக்கு சிபாரிசுகளாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள வேண்டியதும், வேண்டாததும் அரசின் கையில். அதாவது அமைச்சர் தயாநிதி மாறனின் கையில். TRAI என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

2010க்குள், 4 கோடி இணைய இணைப்பு, அதில் சரிபாதியாவது (2 கோடி) பிராட்பேண்ட் எனப்படும் அதிவேக, எப்பொழுதும் இருக்கக்கூடிய இணைப்புகள் வேண்டும். அது தேவையென்றால் கீழ்க்கண்டவைகளைச் செய்ய வேண்டும்.

 1. ஏற்கனவே அடிப்படைத் தொலைபேசி நிறுவனங்கள் கையில் இருக்கும் கடைசி மைல் செப்புக் கம்பிகள் வழியாக (அதாங்க, வீட்டுக்கு வர டெலிஃபோன் வயர்தான்) யார் வேண்டுமானாலும் DSL முறையில் அகலப்பாட்டை இணைப்பை வழங்கலாம். அதாவது உங்கள் வீட்டுக்கு வரும் டெலிஃபோன் கம்பி பி.எஸ்.என்.எல் உடையது என்றாலும், சிஃபியோ, வி.எஸ்.என்.எல் லோ, மற்ற வேறெந்த நிறுவனமோ அந்த டெலிஃபோன் கம்பி மூலம் DSL சேவையைக் கொடுக்க முடியும். இதனால் போட்டிகள் பெருகும், விலை குறையும், சேவை அதிகரிக்கும்.
 2. DTH, VSAT முறைகள் மூலமும் வீடுகளுக்கு அகலப்பாட்டை இணைப்பைக் கொடுப்பதில் இருக்கக்கூடிய செயற்கையான வரிகள், கட்டணங்கள் நீக்கப்பட்டு, விலை குறைக்கப்பட வேண்டும். அரசிடம் அனுமதி பெறுவது எளிதாக்கப்பட வேண்டும்.
 3. கடைசி மைல் தூரத்தில் கம்பியில்லா இணைப்புகள் மூலம் - wifi, wimax போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் - அதிவேக இணைப்புகளைக் கொடுப்பதை எளிதாக்க வேண்டும்.
 4. உள்ளூர் leased circuits க்கான விலையை அதிரடியாகக் குறைக்க வைப்பது. [இதுபற்றிய TRAIஇன் சிபாரிசைக் கேட்டதுமே பி.எஸ்.என்.எல் முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இப்பொழுதிருந்தே முடியாது, விலையைக் குறைக்க மாட்டோம் என்ற பிடிவாதம்.]
 5. இண்டெர்நெட் எக்ஸேஞ்சை ஒழுங்காக நிறைவேற்றுவது. இதனால் சர்வதேச பாண்ட்விட்த் செலவைக் குறைப்பது.
 6. கணினியில்லாத பிற கருவிகள் மூலம் இணையம் பெறுவதை வரவேற்கும் விதமாக இந்தக் கருவிகள் மீதான வரிகளை நீக்குதல்/குறைத்தல். செல்பேசிகள் வழியே பிராட்பேண்ட் இணைப்பைப் பேறுவதற்கு வசதியாக அத்தகைய செல்பேசிக் கருவிகள் மீதான வரிகள் நீக்கம். வெளிநாடுகளில் கழித்துக் கட்டும் பழைய கணினிகளை இந்தியாவிற்குக் கொண்டு வருவதை வரவேற்கும் விதமாக அதன்மீது விதிக்கப்படும் anti-dumping வரியை ரத்து செய்தல்.
 7. நான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன வரிவிலக்குகள்.
 8. எல்லாவற்றுக்கும் மேலாக அரசு தன் குடிமக்கள் அனைவர் கையிலும் இணையம் இருந்தால், அதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் விரிவாகும் (தென் கொரியா, சீனா, மலேசியாவில் அப்படித்தான் நடந்துள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன) என்பதை உணர்ந்து அரசு தொடர்பான அத்தனை விஷயங்களையும் இணையத்தில் போடுவது, மக்கள் அரசுடன் ஊடாடுவதை முழுக்க முழுக்க இணையம் வழியாகவே செய்ய வகை செய்வது ஆகியவை. கல்வி நிலையங்களில் ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் ஒரு கணினி இருக்குமாறு செய்தல்.
இத்துடன் தமிழ் நாட்டுக்கென நாம் மேலுமொரு கோரிக்கையையும் வைக்க வேண்டும். தமிழக அரசு, பல தமிழ் எழுத்துக் குறியீடுகளையும் தூக்கிக் குப்பையில் எறிந்து விட்டு யூனிகோடு ஒன்றை மட்டும் கையில் எடுக்க வேண்டும். தமிழில் வரும் இணையத்தளங்கள் அத்தனையும் இந்த யூனிகோடு குறியீட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பிக்க வேண்டும்!


எண்ணங்கள் வலைப்பதிவு