Tuesday, May 22, 2018

நான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை

என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு, எந்த ஓர் ஆசிரியருக்கும் அல்ல; ஒரு மூத்த மாணவருக்குத்தான்.

அவருடைய பெயர் சீனிவாசன். நான் பத்தாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையின்போது அவர் என் தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அவர் அப்போதுதான் கிண்டி காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங்கில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு ரயில்வே துறையில் வேலைக்குச் சேர்ந்திருந்தார் என்று ஞாபகம். அவருடையது வறுமையான பின்னணி என்றும் ஞாபகம் இருக்கிறது. ரயில்வே ஸ்டோர்ஸ் என்று சொல்லப்படும் ரயில்வே ஸ்டேஷன் கடையில் அவருடைய தந்தை வேலை செய்தார் என்றும் ஞாபகம். அக்காலகட்டத்தில் நாகையில் படித்து தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிக்குச் சென்றிருந்த மிகச் சொற்பமானோரில் இவர் ஒருவர் என்று நினைக்கிறேன்.

அவரும் நான் படித்த தேசிய மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். என் தந்தை அப்பள்ளியில் ஆசிரியர் என்பதால் பார்த்துவிட்டுப் போக வந்திருந்தார். எனக்கு இன்றும் அக்காட்சி ஞாபகத்தில் உள்ளது. நான் பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்து ஏதோ கதைப் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். சீனிவாசன் என்னிடம் நான் எந்த வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறார். நான் பத்தாம் வகுப்பு முடித்ததைச் சொல்கிறேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்கிறார். எஞ்சினியரிங்தான் என்று பதில் சொல்கிறேன். அப்போது அவர் என் தந்தையிடம், ஐஐடி ஜேஇஇ என்று ஒரு தேர்வு உள்ளது என்றும் அதனை எழுத பத்தாம் வகுப்பு விடுமுறையிலிருந்தே பயிற்சி எடுக்கவேண்டும் என்றும், அதில் தேர்ச்சி பெற்றால், தான் படித்த கல்லூரியைவிடச் சிறந்த பொறியியல் கல்லூரியான ஐஐடிக்குப் படிக்கச் செல்லலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

அப்போது என் தந்தை ஐஐடி குறித்து எதையும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அவர் அடுத்த சில நாட்களில் சென்னைக்கு தேர்வுத் தாள்கள் திருத்தும் பணிக்காகச் செல்லவேண்டியிருந்தது. சென்னையில் ஓர் உறவினர் மூலம் ஐஐடி பற்றித் தெரிந்திருந்த மற்றோர் உறவினரைக் கண்டுபிடித்தார். அவர், ஐஐடியெல்லாம் வேண்டாத வேலை என்றும் +2வில் ஒழுங்காகக் கவனம் செலுத்துவதே சிறந்தது என்றும் அறிவுரை கூறினார். ஆனால் என் தந்தை விடாமுயற்சியில் பிரில்லியண்ட் டுடோரியல் என்ற ஓர் நிறுவனம் ஐஐடி ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி நடத்துகிறது என்பதைக் கண்டறிந்து அந்த நிறுவனம் இருந்த தி.நகர் அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தார். அப்போது அவர்கள் தபால் மூலமான பயிற்சிக்கு (ஒய்.ஜி ஃபைல்) ரூ. 5,000 ஆகும் என்று சொல்லியிருக்கின்றனர். அது மிக அதிகம், வீண் செலவு என்று முடிவு செய்து ஊர் திரும்பிவிட்டார்.

நாகை திரும்பியதும் ஊரிலேயே வேறு யாரேனும் ஜேஇஇ தேர்வுக்கு படித்த பழைய புத்தகங்கள் இருக்கின்றனவா என்று தேடிக் கண்டுபிடிக்கத் தொடங்கினார். இதற்கான அனைத்து முயற்சிகளையும் என் தந்தைதான் செய்தார். நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது உப்பாற்றங்கரையில் கார்க் பால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். நாகையிலேயே நான்கைந்து பேர் முந்தைய ஆண்டுகளில் பிரில்லியண்ட் மற்றும் அகர்வால் பயிலகங்களின் தொலைதூரக் கல்விமூலம் ஜேஇஇ எழுத முனைந்தது தெரியவந்தது. நாகை அப்படியொன்றும் பின்தங்கியிருக்கவில்லை!

பிரில்லியண்டின் இரண்டு ஆண்டு மெட்டீரியலும் அதன் சொரசொரப்பான சைக்ளோஸ்டைல் தாள்களில், இரண்டு சீனியர் மாணவர்களிடமிருந்து கிடைத்தன. ஓரிரு மாதங்களுக்குள் எங்கள் பள்ளித் தலைமையாசிரியரும் எங்கள் கணித ஆசிரியருமான சீனிவாசனின் மகன் ராமகிருஷ்ணனிடமிருந்து அகர்வால் பாடங்கள் வழுவழுத் தாளில் கிடைத்தன

என் தந்தை ஐஐடி சென்னைக்கு ஒரு போஸ்ட்கார்டில், அங்கே சேர என்ன செய்யவேண்டுமென்று கேட்டு எழுதினார். அவர்கள் சில நாட்களிலேயே ஓர் இன்லாண்ட் லெட்டரில் விவரம் அனுப்பினர். அதாவது ஜேஇஇ நடத்துவது மட்டும்தான் அவர்கள் வேலை. சிலபஸ் வருடாவருடம் மாறலாம். சின்னச்சின்ன மாற்றங்கள்தான் இருக்கும். இருந்தாலும் எழுதவேண்டிய ஆண்டுக்கான சிலபஸைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டியது மாணவர் கடமை. ஓர் ஆண்டுக்கு ரூ. 2 (இரண்டு) என்று மணி ஆர்டர் அனுப்பினால், கடந்த நான்கு வருட வினாத்தாள்களை அனுப்பிவைப்பார்கள். எட்டு ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியது கடந்த நான்கு ஆண்டு வினாத்தாள்கள் கிடைத்தன.

அடுத்து, மிக முக்கியமான ஒரு புத்தகம் கிடைத்தது. எப்படி என்று இப்போது நினைவில் இல்லை. சென்னையில் திருவல்லிக்கேணியில் ஏதோ ஒரு கடையில் என் தந்தை வாங்கிவந்தார் என்று லேசாக ஞாபகம். கடந்த 25 ஆண்டு ஜேஇஇ வினாத்தாள்கள், அவற்றில் சிலவற்றுக்கு விரிவான வழிமுறைகளுடன் கூடிய விடை, மீதத்துக்கு இறுதி விடை மட்டும்.

ஜேஇஇ என்னை எந்தவித அழுத்தத்துக்கும் ஆட்படுத்தவில்லை. ஏனெனில் அதன் மதிப்பு என்னவென்று எனக்கும் தெரிந்திருக்கவில்லை, என் தந்தைக்கும் தெரிந்திருக்கவில்லை. என் கையில் கிடைத்திருந்த பாடங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. தொடக்கத்தில் அதன் உள்ளே நுழைவது கடினமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல கணிதம், இயற்பியல் இரண்டும் ஓரளவுக்குக் கைவரத் தொடங்கின. வேதியியல் ஆரம்பத்திலிருந்தே எளிதாகத்தான் இருந்தது.

பள்ளிக்கூடமும் பெரிதாக அழுத்தம் தரவில்லை. பள்ளித் தேர்வுகள் எனக்குப் பெரிய சுமையாகவே இல்லை. எனவே பெரும்பாலும் எல்லா நேரங்களிலும் நான் ஜேஇஇ பாடங்களிலேயே செலவிட்டேன். கணிதம், இயற்பியல் இரண்டிலுமே வரும் டிரிக் கேள்விகளை எனக்கே உரிய வகையில் உடைக்கக் கற்றுக்கொண்டேன். திரும்பத் திரும்ப 25 ஆண்டுக் கேள்வித்தாள்களிலும் உள்ள சிக்கலான கேள்விகளை எதிர்கொள்வேன். பதில் கிடைக்கும்வரை சோர்வே இல்லாமல் தொடர்வேன். இந்தப் பாடங்கள் குறித்து ஆசிரியர்களிடமும் பேச முடியாது, சக மாணவர்களுடனும் உரையாட முடியாது. எனவே நானேதான் விடைகளைக் கண்டுபிடித்துக்கொள்ளவேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்தபின்னர் ஜேஇஇ எழுத திருச்சி வரவேண்டியிருந்தது. திருச்சி .ஆர் பள்ளிதான் தேர்வு மையம். சுற்றியுள்ள பல மாவட்டங்களுக்கு இதுதான் மையம். அப்போது தேர்வு இரண்டு நாட்கள், நான்கு பரீட்சைகள். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம்.

கணிதத் தேர்வு மரண அடி. மொத்தம் 15 மதிப்பெண்களுக்குத்தான் என்னால் பதிலே எழுத முடிந்தது என்று ஞாபகம். என் வாழ்க்கையிலேயே அவ்வளவு மோசமான கணிதத் தேர்வை நான் எழுதியதில்லை. இயற்பியல் அவ்வளவு மோசமில்லை. சுமார் 60 மதிப்பெண்களுக்குத் தொடவாவது முடிந்தது. அதில் எத்தனைக் கேள்விகளுக்குச் சரியான விடை கொடுத்திருப்பேன் என்பது தெரியாது. வேதியியல்தான் மனத்துக்கு இதம் தருவதாக இருந்தது.

ஐஐடி காலி என்று முடிவுசெய்துவிட்டேன். ஆனால் என் தந்தையிடம் எதையும் சொல்லவில்லை. அவர் தன் மகன்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்திருந்தேன். மாவட்டத்திலும் முதல் மாணவனாகத்தான் இருந்திருப்பேன். பத்தாம் வகுப்பிலும் அப்படியே. ஜேஇஇ தேர்வு முடிவுகள் வரவில்லை. பிற மாணவர்கள் தமிழ்நாட்டின் பொறியியல், மருத்துவ நுழைவுத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தார்கள். நான் பொறியியல் நுழைவுத்தேர்வு மட்டும்தான் எழுதுவதாகத் தீர்மானம். ஆனால் என் தந்தை அதற்குப் பணம் கட்டி விண்ணப்பிக்கவில்லை. ஜேஇஇ தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார். அவருடைய திட்டம் இதுதான். ஜேஇஇ தேர்வு முடிவு வெளியாகி இரண்டு நாள்கள் கழித்துத்தான் பொறியியல் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கக் கடைசி நாள். ஜேஇஇ கிடைக்கவில்லை என்றால், நேராகச் சென்னை வந்து அண்ணா பல்கலையிலேயே நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தை நேரடியாகக் கொடுத்துவிடுவது. இது என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மட்டுமல்ல. பணத்தை ஏன் வீணடிப்பானேன் என்ற அவருடைய சிக்கன உணர்வும்கூட.

ஆச்சரியமான முறையில் ஜேஇஇ கணிதத் தேர்வில் வெறும் 15 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதியும் எனக்கு ஆல் இந்தியா ரேங்க் 469 கிடைத்திருந்தது. அடுத்த பிரச்சினை, இந்த ரேங்குக்கு ஐஐடியில் இடம் கிடைக்குமா என்பது. துறை பற்றியெல்லாம் பெரிய கனவு இருக்கவில்லை. எது கிடைத்திருந்தாலும் எடுத்துப் படித்திருந்திருப்பேன். யார் எம்மாதிரியான ஆலோசனை கொடுத்தார்கள் என்று இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் பொறியியல் நுழைவுத்தேர்வு எழுதவேண்டாம் என்று முடிவாயிற்று.

ஐஐடி கவுன்செலிங்குக்காகச் சென்னை வரவேண்டியிருந்தது. அப்போது சென்னை கடும் வறட்சியில் இருந்தது. ஐஐடி சென்னை கேம்பஸே கொஞ்சம் காய்ந்துதான் இருந்தது. ஏதோ ஒரு ஹாஸ்டலில் நானும் என் தந்தையும் தங்கினோம். பக்கத்து அறைகளில் ஆந்திரா மாணவர்கள் பலர் தத்தம் தந்தையருடன் வந்திருந்தனர்.


இன்றும் பல மாணவர்கள் செய்யும் மடத்தனத்தில் நான் ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங் படிப்பை என் முதல் தேர்வாக முடிவெடுத்திருந்தேன். என் நல்லூழ், கவுன்செலிங்கில் உட்கார்ந்திருந்த பேரா. ஶ்ரீனிவாச ராவ் என்பார், ‘சொல்வதைக் கேள், மெக்கானிகல் எஞ்சினியரிங் எடுத்துக்கொள்என்றார். அதை ஒழுங்காகக் கேட்டு நடந்துகொண்டேன். சென்னை ஐஐடியில் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் இடம் கிடைத்தது.