சிறுகதைகளைச் சீரழிக்கும் சீரியல்கள்?
பத்ரி சேஷாத்ரி, 28 ஆகஸ்ட் 2004
இலக்கியச் சிந்தனை 415வது கூட்டத்தில் பேசியதன் எழுத்து வடிவம்
இந்த மாத இலக்கியச்சிந்தனையின் சிறந்த சிறுகதையைத் தேடி ஜூலை 2004இல் வெளியாகியிருந்த பல சிறுகதைகளைப் படிக்கத் துவங்கினேன்.

ஏழு மாத இதழ்கள் (காலச்சுவடு, உயிர்மை, கலைமகள், அமுதசுரபி, குமுதம் தீராநதி, புதுகைத் தென்றல், குமுதம் ஜங்க்ஷன்), ஐந்து வார இதழ்கள் (விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமணி கதிர்), ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள், படித்துப் பார்த்தேன்.

எனக்கு சிறுகதைகள் மீது அலாதி ஆர்வம். சிறுகதைத் தொகுதிகள் கிடைக்கும்போதெல்லாம் வாங்கி வீட்டில் அடுக்கிவிடுவேன். புதுமைப்பித்தன், மௌனி முதலாக மணிக்கொடி எழுத்தாளர்களின் சிறுகதைகள் முதல் நவீனக் கதை சொல்லிகள் அசோகமித்திரன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமியிலிருந்து தற்காலச் சிறுகதையாசிரியர்கள் பலரையும் ஆர்வத்துடன் படிப்பேன். நான் படிக்க வேண்டிய எழுத்தாளர்கள் இன்னமும் பலர் உள்ளனர்.

இவர்கள் அனைவருமே தம் படைப்புகளை வார, மாத இதழ்களில் எழுதியவர்களே.

ஆனால் இன்றைய வார, மாத இதழ்களில் வரும் சிறுகதைகளில், வெகு சிலதைத் தவிர, உச்சத்தை அடையக்கூடிய நேர்த்தி பெரும்பான்மைக் கதைகளில் இல்லை என்றே தோன்றுகிறது. அப்படியென்றால் தமிழில் நல்ல கதையெழுதுபவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்று பொருளா? இல்லை, வார மாத இதழ்களுக்கு அவர்களெல்லாம் எழுதுவதில்லையா? இல்லை, வார, மாத இதழாசிரியர்களுக்கு நல்ல கதைகளைக் கண்டறிய முடியவில்லையா? யார் மீது குற்றம்?

என் பயமெல்லாம் இப்பொழுது தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் சீரியல்கள் சிறுகதைகளின் மீது பெருந்தாக்கத்தைச் செலுத்துகின்றதோ என்பதே. இயல்பிலிருந்து பிறழ்ந்த சம்பவங்கள், மிகு உணர்ச்சி கொட்டும் பாத்திரப் படைப்புகள், படுபாதகம் செய்பவனையும் ஒரே உரையாடலில் மனதை மாற்றிவிடக்கூடிய மாதிரியான திருப்பங்கள், அதிகம் பேசும் பாத்திரங்கள், இன்னமும் பழமையில் ஊறியிருக்கும் 'இன்சென்சிடிவ்' கதை சொல்லல் ["கறுப்பாக இருந்தாலும் களையாக இருந்தாள்", - என்னவோ கறுப்பாக இருப்பவர்கள் யாரும் பொதுவாக களையாக இருக்க மாட்டார்கள் என்றும் இந்த இடத்தில் விதிவிலக்காக களை கூடி விட்டது போலவும்..."] என்று சகிக்க முடியாது பல கதைகள்.


சம்பிரதாயமான சிறுகதைகள் எப்படியிருக்க வேண்டும் என்று பல பெரியவர்கள் சொல்லியிருக்கின்றனர்.

இப்படித்தான் இருக்க வேண்டுமென்றில்லை. ஆனால் நல்ல கதைகள் பலவற்றிலும் இவற்றைக் காணலாம்.

இதைத் தவிர, சிறுகதையின் உயர்வை, கதைக் கருவின் புதுமையில் காணலாம். கதைக் கருவைக் கையாளும் விதத்தில் காணலாம். உரையாடல் (conversation) திறமையில் காணலாம். கச்சிதமான கதை சொல்லலில் (narration) காணலாம். மொழியின் ஜிலுஜிலுப்பில் காணலாம்.

கதை சொல்லும் உத்திகள், அவற்றின் புதுமையில் காணலாம். உதாரணமாக நான் படித்த இந்த மாதக் கதைகளின் உயிர்மையில் ஜி.முருகன் எழுதிய "கிழத்தி" என்னும் கதை. இங்கு கதையாடல் முன்னிலையில் சொல்லப்படுகிறது. "உறக்கமின்மை என்ற இந்த வியாதி உங்களைப் பீடித்திருக்கிறது." என்று தொடங்குகிறது கதை. கதையில் "நீங்கள்"தான் கதாநாயகன். (ஆனால் இந்தக் கதையின் கதாநாயகனாக இருக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள்!) படிப்பவரை உள்ளே இழுத்து கதையின் வேகத்தை துரிதப்படுத்தும் இந்த நடை வித்தியாசமாக இருந்தது. இது தென்னமெரிக்க எழுத்தாளர்கள் கொண்டுவந்த நடை என்றார் நண்பர் ஒருவர்.


குமுதம் தொடங்கி வைத்த ஒரு பக்கக் கதைகள் என்னும் குறைப்பிரசவக் குப்பைகள் பற்றித் தனியாக எழுத வேண்டும். ஒரு பக்கத்தில் அருமையான கதையை எழுதிவிடலாம் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. அசோகமித்திரன் கூட ஒரு பக்கக் கதையொன்று எழுதியுள்ளார். ஆனால் அம்மாதிரிக் கதை ஒன்றுதான் எழுதியுள்ளார். குமுதத்தில் ஒரே இதழில் ஐந்தாறு கதைகள் வருகின்றன. எல்லாமே சுவையான சிறு ஜோக்குகளை சற்றே விஸ்தாரப்படுத்தி எழுதியவை போலத்தான் உள்ளன. சிலவற்றில் ஜோக் என்று ரசிக்கக்கூடிய எந்த அம்சமும் இல்லை. வருந்தக்கூடிய விதத்தில் கல்கியும் ஒரு அரைப் பக்கக் கதையைக் கொடுத்துள்ளது.


மொத்தத்தில் குங்குமம், குமுதம் இரண்டிலும் வந்திருக்கும் கதைகளை ஒட்டுமொத்தமாக விலக்கிவிடலாம். அமெச்சூர் ரகங்களைச் சேர்ந்த கதைகளாகவே உள்ளன. இத்தனைக்கும் குங்குமத்தில் சிவசங்கரி, சுபா, புஷ்பா தங்கதுரை போன்ற பழம் தின்று கொட்டை போட்டவர்களின் கதைகள்தான் வந்துள்ளன. குமுதத்தில் வந்த மொத்தக் கதைகளில் 12 கதைகள் ஒருபக்கக் கதைகள். எதுவுமெ தேறவில்லை. முழுக்கதைகளாக வந்த மூன்றில் 'ஐநூறு ரூபாய்' என்ற சேக் முகமதின் கதை சற்று தேவலாம். சுகந்தி எழுதிய 'எந்த மாப்பிள்ளைக்கும் என்னைப் பிடிக்கக்கூடாது!' அபத்தத்தின் உச்சம். தன் தகப்பனார் தனக்குக் கல்யாணமாகாவிட்டால் பிற ஏழைகளுக்கு தர்மக் கல்யாணங்கள் நடத்தி வைக்கிறார் என்பதால் கோவிலுக்கு வந்து தனக்கு திருமணமே நடக்கக் கூடாது என்று வேண்டிக்கொள்ளும் பெண்ணின் கதை... ('எந்த மாப்பிள்ளைக்கும் என்னைப் பிடிக்கக்கூடாது!', சுகந்தி)

விகடனில் இரண்டு கதைகள் தேறின. குறிப்பிடும்படியாக நரசைய்யா எழுதிய 'சந்நிதியில்...', மற்றும் வேங்கடசாமியின் 'அப்பாவின் டைரி'.

இந்த நேரத்தில் சமூக சேவை நிறுவனங்களோடு இணைந்து நடத்தப்படும் சிறுகதைப் போட்டிகளைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.


விகடன் - Waternet Tamilnadu Foundation இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி கண்ட மூன்று சிறுகதைகளும் பிரச்சார நெடி தூக்கலாக, கதையம்சம் சிறிதும் இன்றி மிகு உணர்ச்சி பொங்கும் சின்னத்திரைக் காவியத்துக்கு ஏற்ற மாதிரி அமைந்திருந்தன. திருவிழாவுக்கு காசு செலவு செய்யாமல் அந்தக் காசிலிருந்து ஊர் ஏரியை சீர்செய்வோம் என்னும் கருத்துடைய சுகபாலாவின் 'திருவிழான்னு வந்தா...'; நடுப் பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் காரின் எஞ்சின் கூலண்டைக் குடித்து உயிர்விடும் பையனின் தகப்பனார், நண்பர் வீட்டில் தண்ணீரை வீணாக்கிக் கொண்டிருக்கும் பெண்ணை ஓங்கி அறைவதாக வரும் ஐஷ்வர்யனின் 'விதை நீர்'; சுனை நீரை பாட்டிலில் பிடித்து விற்று விடத் தீர்மானம் செய்யும் பன்னாட்டு நிறுவனத்தைத் தடுத்து நிறுத்த அவர்கள் வேனுக்குப் பின் பாய்ந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் இரண்டு பிஞ்சுச் சிறுவர்கள் பற்றிய மேலாணமை பொன்னுச்சாமியின் 'பூமனச்சுனை'. அனைத்துமே செயற்கையாக இந்தப் போட்டியில் பரிசு வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வலிந்து கொண்டுவரப்பட்ட நீண்ட பிரச்சாரச் சொற்பொழிவுகளோடு படிக்கக் கஷ்டமாக உள்ளன.

தண்ணீர்ப் பிரச்சனை மக்களை வெகுவாக பாதித்துள்ளது என்பதை பரிசுப் போட்டியே இல்லாது கல்கியில் வந்த ஒரு பிரச்சாரக் கதையில் காணலாம். அதிலும் ஒரு கேவலமான NRI சதா தண்ணீர் சுரக்கும் ஒரு சுனைக்கருகே பாட்டிலில் தண்ணீர் அடைக்கும் தொழிற்சாலை கட்ட, அந்தத் தொழிற்சாலையை மூட தண்ணீர் உறிஞ்சும் எந்திரத்தில் பாய்ந்து உயிரை விடும் தியாகியின் கதை - சொ.பிரபாகரனின் 'அருஞ்சுனைக் காக்க'. இது கல்கிக்கு பதில் விகடனுக்கு அனுப்பப்பட்டிருந்தால் முதல் பரிசாக ரூ. 25,000 பெற்றிருக்கும்!

இதைவிட மோசம் தினமணி கதிர் - எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து நடத்திய போட்டிக்கான கதைகள். பெருமாள் முருகனின் 'மைதானத்தில் ஒரு கால்பந்து' நல்லபடியாக ஆரம்பித்து கடைசி மூன்று பாராக்களில் பரிசுக்காக வலிந்து எழுதியதாகப் போய்விட்டது. மற்ற மூன்று இதழ்களில் வந்த கதைகள் சிறிதும் இயல்புநிலையில் இல்லாமல் ஏதோ போட்டிக்கு மாரடிக்கும் கதைகளாகப் போய்விட்டன!


வாரப் பேரிதழ்களில் சிறுகதைகள் முழுவதுமாக கழட்டி விடப்பட்ட நிலையில் நல்ல கதைகளைத் தொடர்ந்து வெளியிடும் கல்கியைப் பாராட்ட வேண்டும். ஆரணி யுவராஜின் 'வேண்டுதல்', மேலே குறிப்பிடப்பட்ட பிரபாகரனின் 'அருஞ்சுனைக் காக்க', சரயுவின் ஒரு பக்க 'இரகசியக் கேள்வி', ஸ்வரமஞ்சரியின் 'வாடகை வீடு' ஆகிய நான்கும் மோசம். மற்ற கதைகள் அனைத்துமே தேவலாம். முக்கியமாகக் குறிப்பிட வேண்டுமானால் ஆனந்த் ராகவின் 'பாதை', கிருஷ்ணாவின் 'ஒருநாள் கூத்து', ஏக்நாத்தின் 'மொற' ஆகிய மூன்றைச் சொல்லலாம்.


காலச்சுவடில் வெளியான நவீன பாணிக் கதையான "உப்பாவைச் சொல்லும் கலை" - இதைக் கதையென்றே சொல்ல முடியாது. பக்கம் பக்கமாக எழுதப்பட்டு கடைசியில் உருப்படியாக ஒன்றையுமே சொல்லாது விட்ட கதை இது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கதைகள் உயிர்மையில் வெளியான இரண்டும், தீராநதியில் வெளியான ரெ.கார்த்திகேசுவின் 'இந்தக் கடிதத்தில் முகவரி இல்லை' ஆகியவை.


இந்த மாதத்தில் குறிப்பிடப்படும்படியான சில கதைகளைப் பார்க்கலாம்.

1. ஆனந்த் ராகவின் 'பாதை', கல்கி

ஓவியங்கள் வரைவதில் ஆர்வமுள்ள ஒருவன். அவனது தந்தை அவனை ஏதாவது வேலைக்குப் போகச் சொல்கிறார். பின் தன் நண்பர் ஒருவர் வேலை பார்க்கும் நிறுவனத்துக்குப் பையனை அனுப்பித்து அங்கு அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்குமாறு செய்கிறார். போரடிக்கும் குமாஸ்தா உத்யோகத்தில் மாட்டிக் கொண்டு திண்டாடப்போகிறோமோ என்ற நினைப்பில் தெருவில் வரும் அவன் தெருவோரத்தில் ஆட்களை நிற்க வைத்து தத்ரூபமாகப் படம் வரையும் கலைஞன் ஒருவனைப் பார்க்கிறான். விரும்பினால் அந்த ஓவியனையே தான் வரைந்து தருவதாகச் சொல்கிறான். வரைந்தும் தந்து அதற்கு ரூ. 100ம் பரிசாகப் பெறுகிறான். அந்த நிகழ்ச்சி அவனது மன உறுதியை அதிகமாக்குகிறது. வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்கும் நிலையிலிருந்து வாழ்க்கை பிடித்துப் போகுமளவிற்கு மாற்றத்தை உணர்கிறான்.

2. ஜி.முருகனின் "கிழத்தி", உயிர்மை

வித்தியாசமான நடையில் - கதைநாயகனை முன்னிலையில் வைத்து - எழுதப்பட்ட கதை. சற்றே பாலியல் தூக்கலான கதை. ஏற்கனவே மணமான பெண் ஒருத்தி - பல ஆண்களை மயக்கி அவர்களோடு உறவு வைத்துக்கொள்பவள். கதைநாயகன் எப்படி அவள் சாகசத்தில் மயங்கி, அதே சமயம் அவள் மற்றவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதை நினைத்து கோபப்பட்டு அவளைத் துன்புறுத்த வேண்டும் என்று நினைக்கிறான். பின் ஒரு சமயம் அவளது கணவன் வீட்டுக்கு வரும் நேரம் அவளுடனே இருந்தபோது அவள் சற்றும் கலவரப்படாமல் அவனைத் தன் கணவனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாள். ஆனால் கதை நாயகன் இந்தச் சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறான். அவனது மனநிலையை மிக நன்றாக விளக்கும் கதை.

சிற்றிதழ்களில் மட்டுமே பிரசுரமாகக் கூடிய கதை.

3. இப்பொழுது இந்த மாதத்தின் என் தேர்விற்கு வருவோம்.

கலைமகளில் வெளியான ஆனந்த் ராகவ் எழுதிய 'டாக்ஸி டிரைவர்'.

சென்னையில் ரோட்டரி சங்க உறுப்பினராக இருக்கும் ஒருவர் கலாச்சாரப் பரிவர்த்தனைத் திட்டத்தில் ஆஸ்திரியாக் காரர் ஒருவரை தன் வீட்டில் சில நாள்கள் தங்க வைத்திருக்கிறார். ஆஸ்திரியாக் காரரின் மரியாதை நிமித்த அழைப்பை ஏற்று சென்னைக்காரர் தன் மனைவியுடன் ஆஸ்திரியாவுக்கு சுற்றுலா போகிறார்.

விமானம் லேட்டாகப் போனதால் தாங்களாகவே விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரியாக் காரர் வீட்டிற்குப் போக வேண்டும். புது இடம். டாக்ஸி டிரைவர்கள் மீது நம்பிக்கையில்லை. (சென்னை ஆட்டோக்காரர்கள் நினைவுக்கு வந்திருப்பர்.) ஒரு வழியாக ஒரு டாக்ஸியில் ஏறி முகவரி சொல்லி போகும்போது வழியில் சென்னைத் தம்பதியினரின் மனதில் ஏற்படும் பயங்கள், கவலைகள் ஆகியவற்றை மிக அழகாகக் கொண்டுவருகிறார்.

ஊரைச் சுற்றி அழைத்துக் கொண்டு போய் விடுவானோ? எங்கேயாவது கொண்டுபோய் விட்டுவிடுவானோ? மீட்டரில் என்ன பணம் ஓடுகிறது? அதைக் கொடுக்கும் அளவிற்குக் கையில் காசு இருக்குமா? இளிச்சவாயன் என்று நம்மைப் பற்றி முகத்தில் எழுதியுள்ளதா?

மனதில் மட்டும் ஓடவில்லை. தம்பதிகள் தமிழில் சத்தமாகவே பேசிக்கொள்கிறார்கள்.

கடைசியில் முகவரி வந்து சேர்ந்ததும், அந்த வெள்ளைக்கார டாக்ஸிக் காரன் பெட்டிகளைக் கீழே இறக்கி வைத்துவிட்டு கழுத்தில் உள்ள ருத்ராட்ச மாலையை கண்ணில் ஒற்றி உள்ளே தள்ளிவிட்டுச் சொல்கிறான்:

"பனி விலுந்து ரோடு மோசமாக இருக்கு... அதனால வர லேட் ஆச்சு. சுத்தி வரலை... தப்பா நெனைக்காதீங்க. மதராஸ்லந்து வந்த உங்கல சந்திக்க ரொம்ப மகில்ச்சி..." என்று உடைந்த தமிழில் சொல்கிறான்.


வெளிநாடு போகும் எவருக்கும் மனதில் தோன்றும் சந்தேகங்கள்தான் இவை. அதுவும் கூடக் கூப்பிட்டுக்கொண்டு போக யாரும் இல்லாத போது, மனம் அல்லாடும். அதை அற்புதமாகப் படம் பிடித்துள்ளார் ஆனந்த் ராகவ். கணவன் மனைவிக்குள்ளான உரையாடல்கள் வெகு இயல்பாய், வெகு அழகாய் அமைந்துள்ளன. கணவனைக் கடைசிவரை காய்ச்சிக் கொண்டே வருகிறாள் மனைவி. டாக்ஸி சார்ஜ் ரூ. 1,400க்கு மேல் இருக்கும் (ஆஸ்திரியப் பணத்தை இந்திய ரூபாயில் மாற்றிப் பார்த்தால்) என்று தெரிந்தபோது மனைவி சொல்வது:

"அநியாயங்க ... மெட்ராஸ்ல ஆட்டோ காரனுக்கு மீட்டருக்கு மேல ஐஞ்சு ரூபா குடுக்கச் சண்டை போடுவீங்கல்ல. இங்க சேத்து வச்சி அழுங்க. எவனோ இளிச்ச வாயனுங்க மாட்னாங்கன்னு ஊரைச் சுத்திக் காமிக்கறான்."

டாக்ஸிக் காரன் பேசியபிறகும் நம் மனதில் கதை தொடர்கிறது. கணவன் மனநிலை எப்படி இருக்கும், மனைவி மனநிலை எப்படியிருக்கும், டாக்ஸிக் காரன் ஏன் நடுவிலேயே தனக்குத் தமிழ் தெரியும் என்று சொல்லவில்லை என்றெல்லாம் பல கேள்விகள் எழுகிறது.

மோசமான நாட்டில், மோசமான மக்கள் நிறைந்த நகரங்களில் வாழும் மத்திய தர மக்களால் பிற நாடுகளில் டாக்ஸிக் காரர்கள் நியாயமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புவது இயற்கைதான். அது எத்தனை தவறு என்பதை உரக்கப் பேசாமல் சொல்கிறது இந்தக் கதை.


இதைத்தவிர மற்றுமொரு கதையைப் பற்றி நிச்சயமாகச் சொல்லவேண்டும். அது அமுதசுரபியில் வெளியான மொழியாக்கக் கதை. மொழியாக்கக் கதைகள் இலக்கியச் சிந்தனைப் பரிசுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால் அதை விட்டுவிட்டேன். ஆனால் அதுமட்டும் மொழியாக்கமாக இல்லாவிட்டால் அதுதான் என் கணிப்பில் முதலாவதாக வந்திருக்கும். கன்னடத்தில் நேமிசந்த்ர என்பவர் எழுதி தமிழில் இளம்பாரதி மொழிபெயர்த்துள்ள இந்தக் கதை 'புதிதாய் ஒரு பிறப்பு'.

மணமாகி பல நாள்களாக குழந்தை பிறக்காத பெண் ஒருத்தியின் கதை. அவள் ஓர் ஓவியக் கலைஞர். குழந்தை பிறக்காத காரணத்தால் குடும்பத்தில் கிடைக்கும் அல்லல் பேச்சுகள், சுரீரென்று குத்தும் அக்கம்பக்கத்துச் சொற்கள், 'இவர்களுக்குத்தான் குழந்தை இல்லையே, நமக்காகச் செலவு செய்யட்டும்' என்று எதிர்பார்க்கும் உறவினங்கள். குழந்தைப் பிறப்பின்போதும், தொடர்ந்து குழந்தைகளை வளர்க்கும்போதும் ஏற்படும் அலுப்பு வெளிப்படையாகத் தெரிந்தாலும், குழந்தை வயிற்றில் வளர்வது ஏதோ "சௌந்தர்ய அனுபவம்" என்று பேசும் அவளது தங்கை.

தனக்கு குழந்தை பிறக்காது என்ற வேதனை உருவாகும் அதே சமயத்தில் அவளுக்கு "எல்லாரும் எல்லா அனுபவங்களுக்கும் ஆட்படுவதற்கு வாழ்க்கை என்ன அவ்வளவு விசாலமானதா?" என்றும் தோன்றுகிறது. வேதனை குறைந்து தன் ஓவியத்தில் முழுமையாக ஈடுபடுகிறாள்.

கரு, நடை, மொழி என அனைத்திலும் முதல் தரமாக அமைந்திருந்தது இந்தக் கதை.


ஜூலை 2004 சிறுகதைகள்

இதழ்கதைத் தலைப்புஎழுத்தாளர்
காலச்சுவடுஉப்பாவைச் சொல்லும் கலைஎச்.முஜிப் ரஹ்மான்
உயிர்மைகடல் கொண்ட நிலம்யுவன் சந்திரசேகர்
கிழத்திஜி.முருகன்
கலைமகள்டாக்ஸி டிரைவர்ஆனந்த் ராகவ்
நான்எழுத்தாளர் பேரில்லை
கடுகடு சிடுசிடு சிடுவெனகௌசல்யா ரங்கநாதன்
அமுதசுரபிவலியறிதல்செந்தூரம் ஜகதீஷ்
புதிதாய் ஒரு பிறப்புகன்னடத்தில் நேமிசந்த்ர, தமிழில் இளம்பாரதி
குமுதம் தீராநதிஇந்தக் கடிதத்தில் முகவரி இல்லைரெ.கார்த்திகேசு
முழுவட்டம்உருதுவில் சலாம்-பின்-ரசாக், தமிழில் சா.கந்தசாமி
புதுகைத் தென்றல்சின்னான்விஜயகிருஷ்ணன்
அவன் சந்தோஷத்திற்காககே.ஜி.ராஜேந்திரபாபு
(பாவ மன்னிப்பு - போன மாதம் வந்த கதையின் தொடர்ச்சி, அதனால் சேர்த்துக்கொள்ளவில்லை)
குமுதம் ஜங்க்ஷன்கண்ணாமூச்சிவித்யா சுப்ரமணியம்
தினமணி கதிர் (எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து)
04.7.2004மைதானத்தில் ஒரு கால்பந்துபெருமாள் முருகன்
11.7.2004நல்வாழ்த்துபி.லூயிசா செல்வம்
18.7.2004இன்று ஐந்தாம் நாள்தமிழினியன்
25.7.2004கிருமிபுதியவன்
கல்கி
04.7.2004வாடகை வீடுஸ்வரமஞ்சரி
பாதைஆனந்த் ராகவ்
மறைந்த பிரதேசம்சுப்ரபாரதி மணியன்
11.7.2004இரகசியக் கேள்விசரயு
ஒரு நாள் கூத்துகிருஷ்ணா
வேண்டுதல்ஆரணி யுவராஜ்
18.7.2004மொறஏக்நாத்
சீப்புசங்கர் பாபு
அருஞ்சுனைக் காக்கசொ.பிரபாகரன்
25.7.2004காலம்தேவவிரதன்
"கேள்!" "கேட்காதே!"பர்வதவர்த்தினி
குமுதம்
05.7.2004கண்ணாடி (1)சு.கவிதா
தங்கச்சி வர்றா (1)டி.சீனிவாசன்
அம்மாவும் நீயேசீதாராம்
இதுதான் வித்தியாசம் (1)எஸ்.முகமது யூசுப்
12.7.2004ஏன் (1)மனோஜ்
பூமராங் (1)புதுவை சந்திரஹரி
வீடு (1)உஷா பாரதி
டாட்டா (1)வி.உஷா
எந்த மாப்பிள்ளைக்கும் என்னைப் பிடிக்கக்கூடாது!சுகந்தி
நன்றி (1)வானதி
19.7.2004பாசம் (1)தனம்
ஐநூறு ரூபாய்சே.அ.சேக் முகமது
26.7.2004அட (1)பிரியதர்ஷன் சுபாகர்
மிஸ் (1)வானதி
ஏமாற்றம் (1) அரு.அருள்செல்வன்
ஆனந்த விகடன்
04.7.2004திருவிழான்னு வந்தா...சுகபாலா
அப்பாவின் டைரிரா.வேங்கடசாமி
11.7.2004விதை நீர்ஐஷ்வர்யன்
18.7.2004பூமனச்சுனைமேலாண்மை பொன்னுச்சாமி
சிகரம்கைலாஷ்குமார்
25.7.2004பொழைக்கிற புள்ள (1)மு.மாறன்
மசால் தோசைஜே.வி.நாதன்
சந்நிதியில்...நரசய்யா
குங்குமம்
09.7.2004தாய்மைசிவசங்கரி
16.7.2004சுகந்திக்கு ஒரு விலைசுபா
23.7.2004வதனா நீ என் மனைவியாபுஷ்பா தங்கதுரை
30.7.2004தேசத் தலைவர் (பாதிதான் வந்துள்ளது. மீதி அடுத்த இதழிலாம்...)ஸ்டெல்லா புரூஸ்

எண்ணங்கள் வலைப்பதிவு