சைபர் கஃபே
பத்ரி சேஷாத்ரி, 2 செப்டெம்பர் 2004
சமாச்சார்.காம்
1997இல் சென்னையில் நெட்கஃபே என்றொரு வாடகை இணையக் கடையை நிறுவி நடத்தும் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகனாகப் பணியாற்றினேன்.

அதுதான் சென்னையில் - ஏன் இந்தியாவிலேயே - அப்படிப்பட்ட முதல் முயற்சி. ஜனவரி 1997இல் தொடங்கியது. வயர்லெஸ் மைக்ரோவேவ் இணைப்பின் மூலம் வி.எஸ்.என்.எல் உடனான இணையம் 64kbps வேகத்தில் இயங்கியது. அந்த இணைப்பில் 10 கணினிகள் வாடிக்கையாளர்களுக்காக இயங்கும். அந்த நேரத்தில் மணிக்கு ரூ. 150 வசூல் செய்தோம். கடையின் உள்ளே நிறைய செலவு செய்து அழகாக அமைக்கப்பட்ட அலங்காரங்கள். உயர்ந்த தரத்திலான (ஏசர்) கணினிகள். நல்ல காப்பிக் கடை - ஆனால் உள்ளூர் காப்பி கிடைக்காது - காப்பூச்சினோ, எஸ்பிரஸ்ஸோ தான். சென்னை வெய்யிலை விரட்டும் வகையில் குளிரூட்டப்பட்ட விஸ்தாரமான அமருமிடம். கேக், சமோசா, பஃப் வகைகளும் கிடைக்கும்.

ஊரில் பெரிய மனிதர்கள் அத்தனை பேரும் அங்கு வந்தார்கள். அந்த ஒரு வருடத்தில் பல சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என்று பலரை அருகில் பார்த்தது அப்போதுதான். (யாருக்கும் என்னை ஞாபகம் இருக்காது என்பதையும் அறிக.)

ஒரே வருடத்தில் அங்கும் இங்குமாக சைபர் கஃபேக்கள் வரத் தொடங்கின. சரசரவென மணிநேரக் காசும் குறையத் தொடங்கியது. அப்படியும் இப்படியுமாக மணிக்கு ரூ. 60 என்றானது.

இந்நிலையில்தான் சிஃபி (அப்பொழுது சத்யம் இன்ஃபோவே) எல்லா முக்கிய நகரங்களிலும் சைபர் கஃபேக்களை சிஃபி ஐவே (முதலில் சத்யம் ஐவே) என்ற பெயரில் தொடங்கினர். சிஃபி இணைப்பும், பெயரும் தர உள்ளூர் தொழில் முனைவோர் இடமும், கடையை நடத்த ஆள்களையும் தரும் முறை. Franchise முறை. அதுபோலவே டிஷ்நெட் தன்னுடைய பெயரில் டிஷ்நெட் ஹப் என்று சைபர் கஃபேக்களைத் தொடங்கியது. டாடா டெலிசர்வீசஸ் தன்னுடைய சங்கிலி ஒன்றை உருவாக்கியது. இப்படியான 'பெரும் பெயர்' தாங்கிய கடைகள் வந்துகொண்டிருந்தபோதே தெரு முனையில் 'பெட்டிக் கடைகள்' போல பல இணையக் கடைகள் பிறக்க ஆரம்பித்தன. தற்போது ரிலையன்ஸ் வெப்வோர்ல்டு என்ற பெயரில் அதிவேக இணைப்புகள் கொண்ட இணையக் கடைகளைத் திறந்து வருகிறது.

ஒரு மணிக்கு ரூ.15 - ரூ.30 க்குள் விரும்பத்தகுந்த அளவில் இணையம் கிடைக்க ஆரம்பித்தது.

தொடக்கத்தில் மக்கள் 'பிரவுசிங் செய்ய' (இணையத்தில் உலாவ) வந்தார்கள். அப்பொழுது சைபர் கஃபே வந்தவர்களை கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்:

  1. அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் பெற்றோர்கள், அல்லது பிற உறவினர்கள், அல்லது உறவாகப் போகிறவர்கள் - தொலைபேசியில் பேசுவதை விடக் குறைவான கட்டணத்தில் மெசஞ்சரில் பேச, மின்னஞ்சல் அனுப்ப வந்தார்கள்.
  2. ஆராய்ச்சித் துறை மாணவர்கள், ஆசிரியர்கள் இணையத்தளங்களில் கிடைக்கும் விஷயங்களைத் தேடித் துருவி அதனை பக்கம் பக்கமாளச்சடித்து எடுத்துப் போக வந்தார்கள்.
  3. பொறியியல் கல்லூரி படிப்பு முடிக்கப்போகும் மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இடம் தேடி, அதற்கென அந்தப் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்களை ஒரு வலம் வந்தனர்.
  4. முக்கால்வாசிப் பேர்களுக்கு மின்னஞ்சல்தான் முக்கியப் பயனாக இருந்தது.
  5. எக்கச்சக்கமாக பணம் கொடுத்து இணையத்தை மேய்ந்தபோதிலிருந்தே மக்கள் கிளுகிளு படங்கள் இருக்கும் தளங்களைப் பார்வையிட்டனர். உலகில் முதன் முதலில் காசு கொடுத்து இணையத்தளம் அமைக்க ஆரம்பித்தபோது முதலில் உருவானது செக்ஸ் தளங்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக இணையத்தில் வேலை வாய்ப்புக்கான தளங்கள் வரத் தொடங்கியதும், அதில் தனது பெயரைப் பதிந்து கொள்ள கூட்டம் கூடியது. பலர் இன்றும் கூட ஒரு மின்னஞ்சல் முகவரியும், மின்னஞ்சலில் ஒரு பயோ-டேட்டா கோப்பையும் இணைத்து அனுப்புவதைத் தவிர வேறெதுவுமே செய்யத் தெரியாதவர்கள்.

அதன்பின் இந்தியாவில் பலர் இணையத்தளங்களை அமைக்க ஆரம்பித்தனர்.

முதலில் ஒருசில வலைவாசல்கள் (web portals) வரத்தொடங்கின. பின் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென ஓர் இணையத்தளத்தை நிறுவத்தொடங்கினர். தொடக்க காலத்தில் நிறுவப்பட்ட இணையத்தளங்கள் ஏன், எதற்கு என்ற கேள்விகள் கேட்காமலேயே வந்தவை. அவற்றின் மூலம் அந்த நிறுவனங்கள் அதிகமாக ஒன்றும் சாதித்திருக்காது.

இன்றும்கூட இணைய வர்த்தகம் (இ-வர்த்தகம்? இ-வாணிபம்? இ-வணிகம்?) இந்தியாவில் அதிகமாக நடப்பதில்லை.

இன்று ஓர் சைபர் கஃபேக்கு வருபவர் என்ன செய்கிறார்?

  1. மின்னஞ்சல் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார். இப்பொழுது செய்திகளுடன் அசையாப் படங்களையும் பரிமாறிக் கொள்கிறார்.
  2. சிலருடன் நேரடித் தொடர்பு - மெசஞ்சர் மூலம்.
  3. பல்வேறு சினிமா, இலக்கிய, சமூக, செய்தி இதழ்களைப் பார்வையிடுகிறார். தன் பங்களிப்பை அனுப்பி வைக்கிறார். இப்பொழுது புதிதாக முளைக்கும் வலைப்பதிவுகளை அவ்வப்போது நோட்டம் விடுகிறார்.
  4. வேலைவாய்ப்புத் தளங்களில் சேர்கிறார்; வேலைக்கு மனுச்செய்கிறார்.
  5. இன்றைய தேதியில் சில இ-வணிகத் தளங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாங்கலாம், ரயில்வே டிக்கெட் பதிவு செய்யலாம். இப்பொழுது பங்கு வர்த்தகமும் செய்யலாம்.

ஆக தொடக்கத்தில் இருந்ததை விட மேலதிகமாக இ-வணிகத்தைத் தவிர ஒன்றுமில்லை. இந்த சைபர் கஃபேக்களில் பேண்ட்வித் குறைவாக இருப்பதால் ஒலி/ஒளி இணைந்த கலவையான கேளிக்கைகள் மக்களுக்குக் கிடைப்பதில்லை. எந்தவொரு கணினியை எடுத்தாலும் அதில் வேண்டிய தொலைக்காட்சி சானல்கள் உடனடியாகக் கிடைக்க வேண்டும். வேண்டிய கேளிக்கைகள் - சினிமாப் படங்கள், விளையாட்டுத் துண்டுகள், செய்தித் துண்டுகள், மரம், செடி, கொடி, விலங்குகள் பற்றியவை ஆகிய அனைத்துமே ஒலி/ஒளியுடன் கூடிய படங்களாக, அசையும் ஓவியங்களாக (animation) இருக்க வேண்டும். அப்பொழுதுதான் புதிதாகப் பலரை இணையம் பக்கம் ஈர்க்க முடியும்.

உள்ளூர் விஷயங்கள் பலவும் ஒலி/ஒளி/அனிமேஷன் முறையில் கணினி வடிவாக்கப்பட வேண்டும்.

சிஃபி தன் ஐவேக்களை இணைக்க வயர்லெஸ் பிராட்பேண்ட் முறையைப் பயன்படுத்துகிறது. ரிலையன்ஸ் போன்றவர்கள் ஒளியிழைகள் (optical fibre) மூலம் தம் கடைகளை இணைக்கின்றனர். இம்முறைகள் மூலம் நல்ல வேகத்தை அடைய முடியும்.

ஆனால் தெருவோரம் இருக்கும் பெட்டிக்கடை சைபர் கஃபே என்ன செய்யமுடியும்? அவர்கள் கூட Wi-Fi, Wi-Max மூலம் தம் கடைகளுக்கு அதிவேக இணைப்பைப் பெற முடியும்.

அப்பொழுதுதான் சைபர் கஃபேக்களில் புதிது புதிதாக மக்கள் கூட்டம் வரும்.


எண்ணங்கள் வலைப்பதிவு