இந்தியாவுக்கு வரும் வேலைகள் - 2
பத்ரி சேஷாத்ரி, 7 அக்டோபர் 2004
சமாச்சார்.காம்
சென்ற வாரம், ஏன் வேலைகள் இந்தியாவிற்கு வருகின்றன, எம்மாதிரியான வேலைகள் அவை என்று பார்த்தோம். இந்த வாரம் இப்படி வேலைகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் யார் யாருக்கு என்ன பிரச்னைகள், யாருக்கு என்ன நன்மைகள் என்பதை சற்று விரிவாக அலசலாம்.

முதலில் இது இந்தியா-அமெரிக்கா இடையேயானது என்று நினைக்கக் கூடாது. இந்தியா தவிர பல நாடுகளுக்கும் இந்த வேலைகள் போகின்றன. உதாரணம் பிலிப்பைன்ஸ், அயர்லாந்து, ரஷ்யா, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சில தென்னமெரிக்க நாடுகள். அதுபோலவே அமெரிக்கா தவிர பல வளர்ந்த நாடுகளும் பல வேலைகளைப் பிற நாடுகளுக்கு அனுப்புகின்றன. பிரிட்டன் முக்கியமாக. அத்துடன் ஜெர்மனி, பிரான்சு, பிற மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவையும் அடங்கும். இந்தியாவைச் சேர்ந்த பெரும் BPO நிறுவனங்கள் பலவும் மற்ற நாடுகளில் BPO பிரிவுகளை நிறுவுகின்றன. சில வெளிநாடுகளில் உள்ள BPO நிறுவனங்களை விலைக்கு வாங்குகின்றன. ஆனாலும் இந்தக் கட்டுரையில் அமெரிக்கா, இந்தியா என்றே குறிப்பிடுகிறேன். இது ஒரு குறியீடே. அமெரிக்கா எனும்போது அதுபோன்ற வளர்ச்சியடைந்த, வேலைகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளையும், இந்தியா எனும்போது ஓரளவுக்கு அதைப்போன்று வளரும், BPO வேலைகள் வந்து சேரும் நாடுகளையும் கணக்கில் வைக்கவும்.

இப்படியான BPO நிறுவனங்கள் இருவகைப்படும். ஒன்று Captive. அதாவது அமெரிக்காவில் இருக்கும் ஒரு நிறுவனம் தன்னுடைய வேலைகளை மட்டும் செய்வதற்காக இந்தியாவில் ஒரு கிளையை - subsidiary ஆக - தொடங்குவது. இந்த Captive BPO தாய் நிறுவனத்தின் வேலைகளை மட்டும் செய்யும். தாய் நிறுவனத்தின் செலவுகளைக் குறைப்பது மட்டுமே இதன் குறிக்கோள். மற்றொன்று, Third Party BPO. இப்படியான நிறுவனங்கள் எல்லா நிறுவனங்களிடமிருந்தும் கிடைக்கும் வேலைகளைச் செய்யும். லாபம் சம்பாதிப்பது மட்டுமே இவற்றின் குறி. சில Captive BPO நிறுவனங்கள் நாளடைவில் தாயை விட்டுப் பிரிந்து Third Party BPO ஆக மாறும். மாறியுள்ளன.

பல்வேறு விதமான வேலைகள் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று பார்த்தோம். மெக்கின்சி போன்ற கன்சல்டிங் நிறுவனங்கள், கார்ட்னர் போன்ற புள்ளிவிவரங்கள் கொடுக்கும் நிறுவனங்கள், இந்தியாவின் நாஸ்காம் (இது மென்பொருள் மற்றும் மென்பொருள் ஊடாக சேவைகளை அளிக்கும் நிறுவனங்களின் கூட்டமைப்புச் சங்கம்) போன்றவை வருடத்திற்கு எத்தனை வேலைகள் அமெரிக்காவிலிருந்து காணாமல் போய், இந்தியாவிற்கு வந்து சேரும் என்று பல ஹேஷ்யங்களைக் கூறுகின்றனர். அடுத்த ஐந்து வருடங்களில் பத்து லட்சத்திற்கும் மேலான வேலைகள் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கின்றனர். இத்தனை வேலைகள் அமெரிக்காவில் காணாமல் போகும் என்பதையும் கூடச்சேர்த்தே பார்க்கவும்.

அமெரிக்காவில் இதுபோன்று வேலைகள் காணாமல் போவதை எதிர்ப்பவர் பலர். முக்கியமாக இந்த வேலை மாற்றங்களினால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள். இந்த எதிர்ப்பாளர்கள் இப்படி வேலைகள் வெளிநாடுகளுக்குப் போவதை எதிர்க்கும்போது பல காரணங்களை முன்னிறுத்துகிறார்கள். அதே நேரம், நிறுவன உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரோ வேலைகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் செலவைக் குறைப்பதையே விரும்புகிறார்கள். வேலைகள் ஏற்றுமதியை எதிர்க்கும் ஜேன் என்பவர், வேலைகளை ஏற்றுமதி செய்யும் டாம் என்பவரைச் சந்தித்து காரசாரமாக விவாதித்தால் எப்படியிருக்கும் என்று பார்ப்போமா?


ஜேன்: வேலைகள் எல்லாம் அமெரிக்காவை விட்டுப் போய்விட்டால் அமெரிக்காவின் மத்திய வர்க்கம் திண்டாடும். வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். வேலையை இழப்பவர்களின் சொந்த வாழ்க்கையில் பெரும் திண்டாட்டம் இருக்கும். பலர் தன் 40-45 வயதுக்கு மேல் வேலையை இழக்கும்போது மாற்று வேலை எதுவும் கிடைக்காது; மாற்றுக் கல்வியைக் கற்க முடியாத நிலையிலும் இருப்பர். அவர்களுக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

டாம்: வேலைகளை இந்தியாவிற்கு அனுப்புவதால் நம் நிறுவனங்களுக்குப் பணம் மிச்சமாகும். அப்படி மிச்சமாகும் பணத்தை வைத்து மேற்கொண்டு முதலீடு செய்து நாங்கள் புது வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். இதனால் பொருளாதாரத்துக்கு நன்மைதானே?

ஜேன்: மிச்சமாகும் பணமெல்லாம் பங்குதாரர்களுக்கு லாபமாகப் போகிறது. இன்று காணாமல் போகும் வேலைகளை என்றோ வரப்போகும் - அதுவும் நிச்சயமில்லா - வேலைகளுக்காக மாற்றிக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம். இன்றைய பசியை நாளைய சாப்பாட்டாலா நிரப்ப முடியும்?

டாம்: வேலைகளை ஏற்கனவே பிற இடங்களுக்கு அனுப்பும் நிறுவனங்களால் எங்களை விட அதிகம் சேமிக்க முடிகிறது. இதனால் எங்கள் பொருட்களின்/சேவைகளின் விலையை விடக் குறைவான விலையில் அவர்களால் தர முடிகிறது. எனவே இப்பொழுதிருக்கும் போட்டியில் நாங்கள் வேலைகளை இந்தியாவிற்கு அனுப்பாவிட்டால் முழு நிறுவனத்தையுமே இழுத்து மூட வேண்டியிருக்கும். இப்பொழுதாவது நூறு வேலைகள்தான் இந்தியாவிற்குப் போக இருக்கின்றது. ஆனால் கம்பெனியை இழுத்து மூட வேண்டி வந்தால் மொத்தமாக நானூறு வேலைகள் போக வேண்டி வரும்.

ஜேன்: இந்தியாவிற்கு வேலைகள் போனால் அதனால் பணம் மிச்சமாகும் என்று மட்டும் சொல்கிறீர்கள். ஆனால் அங்கு வேலை செய்பவர்களுக்கு நம் நிறுவனத்தைப் பற்றி என்ன தெரியும்? அவர்கள் செய்யும் குளறுபடிகளால் நம் வேலைகள்தானே பாதிக்கப்படும்? அதனால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும்? இந்திய அழைப்பு மையங்களில் வேலை செய்பவர்கள் தம் வாடிக்கையாளருக்கு சரியான சேவை அளிக்கவில்லை என்று எத்தனையோ புகார்கள் வந்துள்ளன. இந்தியாவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் பலருக்கும் தரமான நிரலிகள் எழுதத் தெரிவதில்லை. அவர்கள் செய்துள்ள பிழைகளைத் திருத்துவதற்கே அமெரிக்காவில் பலர் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவர்கள் ஆங்கிலத்தில் பயிற்சிக் கையேடுகள் எழுதுவது, மருத்துவ அறிக்கைகளைப் பிரதியெடுப்பது - இவையெல்லாம் அபத்தமாகப் படவில்லையா?

டாம்: எந்த நாட்டில் உள்ள ஊழியர்களாலும் தவறுகள் செய்யப்படுகின்றன. சரியான பயிற்சி கொடுக்க வேண்டியது, தன் துறையைப் பற்றிய முழு விவரங்களையும் அளிக்க வேண்டியது, மேற்பார்வை பார்க்க ஆட்களை நியமிக்க வேண்டியது, வாடிக்கையாளருக்கு முழு திருப்தியைக் கொடுக்கக் கூடிய தரத்தை நிர்ணயம் செய்து, அதை இந்திய BPO மீது விதிப்பது போன்றவற்றை அமெரிக்க நிறுவனம்தான் செய்ய வேண்டும். GE, British Airways போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் 1980 இறுதியில், 1990 தொடக்கத்தில் இருந்தே Captive BPOக்களை நிறுவி அதனால் ஏகப்பட்ட பலன்களைப் பெற்றுள்ளனர்.

காசை மிச்சம் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் சில அடித்தட்டு BPO நிறுவனங்களுக்கு வேலையைக் கொடுத்தால் நிச்சயமாக விளைவு விபரீதமாகத்தான் இருக்கும். தரம் முக்கியம். நமக்கு வேண்டிய தரத்தைத் தரக்கூடிய சில நிறுவனங்கள், நம் தரத்தையும் மிஞ்சிய தரத்தில் உள்ள சில நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.

ஜேன்: அமெரிக்காவில் வாடிக்கையாளர் சேவைகளைக் கவனிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பத்திரமாக வைத்துள்ளன. இந்தியாவில் வேலை செய்யும் ஊழியர்கள் இப்படியே அந்தரங்கத் தகவல்களை ரகசியமாக வைப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? அதேபோல நிறுவனத்தின் முக்கிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்பதில் என்ன நிச்சயம்? இந்தத் தகவல்கள் போட்டி நிறுவனங்கள் கைகளுக்குப் போய்விடாது என்பது என்ன நிச்சயம்? அமெரிக்கர்களின் கிரெடிட் கார்டு எண்கள் இந்தியாவில் வேலை செய்பவர்கள் கையில் போய்விட்டால் அவர்கள் என் கிரெடிட் கார்ட் எண்ணை வைத்து பொய்யான வர்த்தகங்கள் செய்து என் பணத்தைத் திருடி விட்டால்?

டாம்: நியாயமான கேள்விகளே. அத்தியாவசியமான தகவல்களின் பாதுகாப்பு அதி முக்கியம் என நம் நிறுவனம் நினைத்தால் Captive BPO ஒன்றை இந்தியாவில் உருவாக்கிக் கொள்வதே சிறந்தது. எந்த அளவுக்கு Third Party BPOக்களை நம்பலாம். Captive BPOவை தொடங்க அவசியத் தேவை உள்ளதா? போன்ற கேள்விகளுக்கான முடிவுகள் ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் எடுக்க வேண்டியவை.

இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு கிரெடிட் கார்ட் திருடு வேலை செய்வார்கள் என்பதெல்லாம் சும்மா பயமுறுத்தல் காரணங்கள். அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டும் அதையே செய்யலாம். செய்கிறார்கள். நம் நிறுவனங்கள் எந்த அளவுக்கு தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு முறைகளை அதிகப்படுத்த வேண்டும். சில மோசமான ஊழியர்கள் அமெரிக்காவிலும் இருக்கலாம், இந்தியாவிலும் இருக்கலாம். அவர்கள் கம்பெனியின் நேரடி ஊழியர்களாகவும் இருக்கலாம், Third Party BPOவில் வேலை செய்பவர்களாகவும் இருக்கலாம். இதனால் ஏற்படும் நஷ்டங்களையும் கணக்கில் வைத்துதான் சேமிப்பின் அளவை கணிக்க வேண்டும்.

ஜேன்: வேலைகள் இந்தியாவிற்குப் போய்விட்டால் அமெரிக்காவில் ஒருசில தொழில்நுட்பங்கள் அழிந்து போய்விடும். பிற்காலத்தில் அதை அமெரிக்காவில் செய்வதற்கு யாருமே இருக்க மாட்டார்கள். அதனால் அமெரிக்கா எப்பொழுதுமே இந்தியாவை நம்பி இருக்க வேண்டி வரும்.

டாம்: இப்பொழுது இந்தியாவிற்குப் போகும் வேலைகள் அனைத்துமே நுட்பமானவை அல்ல. Routine வேலைகள்தான். மேலும் உலகமயமான பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு தேவையான பலவற்றையும் அவர்கள் அமெரிக்காவிலிருந்துதான் வாங்குகிறார்கள். கோகோ-கோலா, தொலைக்காட்சி பெட்டிகள், கார், தொலைபேசித் தொழில்நுட்பம் என அமெரிக்கா பலதை இந்தியாவுக்கு விற்கிறது. பதிலுக்கு பாசுமதி அரிசி, உள்ளாடைகள், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை இந்தியாவிடமிருந்து வாங்குகிறது. பொருளாதார பலத்தால் அமெரிக்காவே இந்த விற்றல், வாங்கலைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இந்தியாவில் உள்ள பல BPO நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவையே. இல்லையானால் பல இந்திய BPO நிறுவனங்களில் அமெரிக்க நிதி நிறுவனங்களும், வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுமே அதிகப் பங்குகளை வைத்துள்ளன. அதனால் நாம் பயப்பட வேண்டியதேயில்லை.

ஜேன்: எப்படியானாலும், வேலையை இழந்து திண்டாடப்போவது அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினரே.

டாம்: உண்மைதான். அதற்கு அமெரிக்க அரசுதான் மாற்றுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும். வேலைகளை இழக்கவிருக்கும் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு மாற்றுக் கல்வி, தொழில் பயிற்சி, உதவித் தொகை ஆகியவற்றை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நம் மாணவர்களும் தங்கள் திறமையை அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். பூகோள எல்லைகளற்ற இந்நேரத்தில் தேவையின்றி செயற்கையான தடைகளை விதிப்பதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களின் போட்டிபோடும் திறனைக் குறைக்கக் கூடாது.


ஜேன், டாம் இருவருமே நாள் முழுவதும் விவாதம் செய்யுமளவிற்கு இந்தப் பிரச்னையில் இரண்டு தரப்புகளும் உள்ளன. அவர்கள் விவாதத்தைத் தொடர்வார்கள். அதே நேரம் இந்தியாவிலும் சிலவற்றைப் பற்றி தீவிர விவாதத்தை நடத்த வேண்டும். அவற்றைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.


எண்ணங்கள் வலைப்பதிவு