Friday, August 22, 2003

கலை நிகழ்ச்சி, இரவு விருந்து 

இரவு, முதல்வர் ஜெயலலிதா மாநாட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஒரு விருந்தும், கலை நிகழ்ச்சியும் அளித்தார். அமைச்சர் ஜெயக்குமார் மேற்பார்வையில் நடந்தது. இந்நிகழ்ச்சி தாஜ் கன்னிமராவில் நடைபெற்றது. தாஜ் கொரமாண்டலில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வந்திருந்ததால் பயங்கரக் கெடுபிடி வேறு. (இவர் வந்தது தமிழ் மாநாட்டுக்காக அல்ல; எம்.எஸ்.சுவாமினாதன் ஆய்வு மையம் சம்பந்தப்பட்ட ஒரு விழாவுக்காக.)


புஷ்பவனம் குப்புசாமி, அவரது மனைவி அனிதா அவர்களின் நாட்டுப்புறப் பாடல்கள். மிக நன்றாக இருந்தது. இது பற்றி விளக்கமாகப் பின்னர் எழுதுகிறேன். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் புஷ்பவனம் பாடிய 'காலம் மாறிப்போச்சு' என்னும் நகைச்சுவைப் பாடல். கலக்கி விட்டார் மனுஷன்.

சீனியர் அமைச்சர் பொன்னையன், மற்றும் அவைத்தலைவர் காளிமுத்து, மற்றும் பல பெயர், முகம் தெரியாத அமைச்சர்கள் வந்திருந்தனர்.

ஒன்பது பாடல்கள் பாடிய பின்னர், பத்தாவதாக ஒன்று ஆரம்பிக்க இடை மறித்த அமைச்சர் பெருமக்கள், நீண்ட நன்றியுரைக்குப் பின்னர் ஆளுக்கொரு பொன்னாடையை ஆளுக்கொன்றாகப் போர்த்தினர். மீண்டும் பத்தாவது பாடல் தொடங்க, மணியும் 21.30 ஆனது, உணவு பரிமாறல் தொடங்கியது. அனைவரும் பந்திக்குப் போனாலும் பாடல் தொடர்ந்தது. நேரம் நிறைய ஆனதாலும், மறுநாள் கருத்தரங்குக்குச் செல்ல வேண்டிய காரணத்தாலும் நான் கிளம்பி வர வேண்டியதயிற்று.

பொன்விழி கிருஷ்ணமூர்த்தி 

krishnamoorthyபொன்விழி OCR மென்பொருளை உருவாக்கிய பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்துப் பேசினேன். நாளை அவர் OCR - எழுத்து உணரியை உருவாக்குவதில் உள்ள கடினங்களைப் பற்றிப் பேசுகிறார்.

நாளை தமிழ் எழுத்து உணரி பற்றி ஒரு கருத்தரங்கு நடக்கிறது. இது எனக்குப் பிடித்தமான பகுதி. இது பற்றி நாளை பார்ப்போம்.

லோகசுந்தரம் பேச்சு 

லோகசுந்தரம் பெரிய ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தார். நேரம் வேண்டி நான் மீண்டும் வெளிநடக்க நேரிட்டது. எளிதாகத் தான் சொல்ல வந்ததைச் சொல்ல சில பேருக்குத்தான் தெரிகிறது.

திரு சுந்தரமூர்த்திக்கும் இந்த விஷயத்தில் நிறையக் கருத்துக்கள் உள்ளது. அதனால் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தார். செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

எனக்கு குழந்தைசாமியின் கருத்துக்கள் மிகத் தெளிவாகப் புரிந்தது. அவர் சொல்வது அனைத்தும் சரி என்றும் தோன்றியது. அவர் சொல்லும் வகையில் எழுத்துச் சீர்மை செய்வது வெகு அவசியம். அவரது முழுக் கட்டுரையும் இணையத்தில் சீக்கிரம் கிடைக்கும். படித்துப் பார்த்து, இதைச் செவ்வனே செய்யுமாறு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

சின்னதுரை ஸ்ரீவாஸ், அரவிந்தன் 

ஸ்ரீவாஸின் கட்டுரையை வழங்க வந்தவர் அரவிந்தன். குழந்தைசாமியின் பேச்சுக்குப் பிறகு சற்று எடுபடாமல் இருந்தது இது. தவறு ஸ்ரீவாஸ் வராததுதான் - ஆனால் அவருக்கு வரமுடியாத நிலையாயிருக்கலாம்.

எனக்குப் புரிந்தது இவ்வளவே:

- ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு ஆகியவற்றைக் குதர்க்க எழுத்துக்கள் என்றும் இந்தக் குழப்பத்தை நீக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
- குழந்தைசாமி போன்று இகர, ஈகார, உகர, ஊகாரக் குழப்பங்களை நீக்க வேண்டும் என்கிறார்
- diacritics ஐப் பயன்படுத்தி உச்சரிப்புகளை விளக்க வேண்டும் என்கிறார். இது சர்ச்சைக்குரிய விஷயம்
- கி.பி/கி.மு எழுத்து வடிவம் (குழந்தைசாமி போன்று) காண்பித்து, தொல்காப்பிய காலத்து எழுத்து விஞ்ஞானபூர்வமாக உள்ளது என்கிறார்.
- யூனிகோட் உயிர்மெய்யை சரியாகச் செய்துள்ளது (உயிருக்கு அடுத்து மெய் வந்து)

கட்டுரையை நிதானமாகப் படிக்க வேண்டும்.

குழந்தைசாமி பேச்சு 

- வரி வடிவம் நிரந்தரமானதல்ல, ஒலி வடிவம்தான் நிரந்தரம்
- காலக்கணக்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன
- கி.பி. 2ஆம் நூற்றாண்டில் உள்ள வரிவடிவம் படம் காண்பிக்கிறார் - மிகவும் எளிதாக இருந்திருக்கிறது. ஆனால் பிற்காலத்தில்தான் கடினமாக ஆகியுள்ளது.
- பழங்கால செப்பேடுகளைப் பார்க்கையில் எழுத்துக்கள் எளிமையாக உள்ளன
- கிரந்தக் குறியீடு - உகர, ஊகாரத்துக்கு எளிதானது என்கிறார். ஆனால் தமிழ் விரும்புவோர் கிரந்தம் என்றாலே ஓடி விடுகிறார்கள்!

- முடிவு: மாற்றங்கள் தேவை, 1978க்குப் பிறகு பல முயற்சிக்குப் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. இனியாவது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.

குழந்தைசாமி பேச்சு 

- தமிழ் கற்கும் இடத்தில் ஆங்கிலம், மற்றும் ஃபிரெஞ்சைப் பார்க்கையில் தமிழ் கற்பது பிரமிப்பாக இருக்கிறது, ஏனெனில் அந்த மொழிகளில் எழுத்துக்கள் குறைவு
- இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை வெறும் நான்கு குறியீட்டை வைத்துச் செய்ய வேண்டும்
- சண்டை சச்சரவு இல்லாமல் இந்த நான்கு வரிசைகளையும், நான்கு குறியீடுகளினால் எழுதுவோம் என்ற கொளகையை மற்றும் ஏற்றுக் கொள்வோம். எந்த குறிகளைக் கொண்டு வருவது என்பது பற்றி அறிஞர் குழு ஒன்றின் மூலம் முடிவு செய்யலாம்.
- இதன் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது எளிதாகிறது, அவர்களுக்கும் தமிழ் கற்பதில் அச்சம் இல்லாது இருக்கும்
- இதனையும் விட குறைக்கலாம், ஆனால் தமிழ் உலகம் ஒப்புக் கொள்ளாது என்பதால் அதைப்பற்றி இப்பொழுது பேசப்போவதில்லை

- இகர, ஈகார குறியீடுகள் (எழுத்தைச் சார்ந்து வரும் கொம்பு) படிக்கக் கடினமில்லை.
- உகர, ஊகாரம் கொஞ்சம் கடினமாக இருக்கலாம்

குழந்தைசாமி பேச்சு 

- தமிழ் பன்னாட்டு மொழி, உலகு தழுவி வாழும் மொழிக்குடும்பத்தால் பேசப்படும் மொழி
- இந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆகும் நேரத்தைக் குறைக்க வேண்டும்
- உயிர்மெய் என்பது ஐரோப்பிய நாடுகளின் மொழிகளில் கிடையாது, மத்திய தரை நாடுகளிலும் கிடையாது
- இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இதில்தான் குழப்பமே, வித்தியாசமே
- இவற்றைக் கற்கத்தான் நாம் அதிகக் குறியீடுகளை உண்டாக்குகிறோம்

குழந்தைசாமி பேச்சு 

kuzanthaisami
- எழுத்துச் சீரமைப்பு என்றால் எழுத்தைக் குறைப்பது அல்ல, கற்பதை எளிதாக்குவது (247 எழுத்துக்களை இம்மியும் குறைப்பதல்ல)
- எழுத்தைக் குறைக்கப் போனால் மக்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், அதனால் 'சீரமைக்கும்' பணியே கெட்டு விடலாம்.
- எம்.ஜி.ஆர் 'ஐ', 'ஔ' ஆகிய இரண்டையும் நீக்க முயற்சிக்கையில் மக்கள் அதை ஒத்துக் கொள்ளாததனால், அதை விட்டு விட்டார்.

- 1933 இல் பெரியார் கூறிய கருத்து
- 1978 இல் பெரியார் சொன்ன சீர்திருத்தத்தில் பாதி நிறைவேற்றப்பட்டது, மற்றது இதுவரையில் செயல்படுத்தப் படவில்லை.

தமிழ் மொழி - 2 

sundaramurthy"தமிழ் எழுத்துச் சீர்மை" பற்றிய கருத்தரங்கு. தலைமை தாங்குவது திரு சுந்தரமூர்த்தி. பேசப்போவது திரு குழந்தைசாமி, சின்னத்துரை ஸ்ரீவாஸ் (அவர் வரவில்லை. பேசப்போவது மற்றொருவர்) மற்றும் திரு லோகசுந்தரம்.

தொழில்நுட்பமும் பயன்பாடும் - 1 

மணி மணிவண்ணன் தலைமையில் இந்தக் கருத்தரங்கு தொடங்கியது. மணிவண்ணனின் துவக்க உரைக்குப் பின் முதல் உரை திரு வா.மு.சே ஆண்டவர் 'ஆய்வு நோக்கில் கணினி உதவியுடன் அகராதி' என்பது பற்றிப் பேசினார். கிட்டத்தட்ட எழுதிக் கொண்டு வந்ததை அப்படியே பேசிமுடித்தார். 1968க்குப் பிறகு கலைக் களஞ்சியம் மாற்றப்படவே இல்லை என்று சொன்னார். கணினி, இணையம் உதவியோடு அகராதி செய்ய வேண்டும் என்று சொன்னார். எப்படி, யார் செய்யப்போவது என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

பின்னர் உரையாட வந்த பழனிராஜன், "தமிழ் இணைய அகராதி" பற்றிப் பேசினார். அண்ணா பல்கலைக் கழகம் ஒரு மென்பொருள் செய்துள்ளதாகவும் அதன் ஒரு சில காட்சிப் படங்களையும் காண்பித்தார்.

இது எந்த வகையில் பொது மக்களைப் போய்ச் சேரப் போகிறது என்பதும் தெரியவில்லை. வெறும் ஆராய்ச்சிதானா இல்லை ஓரளவுக்கு செயல்படும் முழு மென்பொருளா என்றும் தெரியவில்லை.

அடுத்துப் பேசிய திருமதி இராதா செல்லப்பன் "தமிழ் மலையாளம் பொறி வழி மொழி பெயர்ப்பு" - அந்தோ, ஆங்கிலத்தில் உரையாற்ற ஆரம்பித்து விட்டார். உடனே எழுந்து வெளியே வந்து விட்டேன்.

இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் எப்படி மக்களுக்குப் பயன்படப் போகிறது என்றுதான் தெரியவில்லை.


கருத்தரங்கு தொடங்கும் முன்னர் 

கருத்தரங்கு இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னர் வந்திருந்த சிலரைப் படம் பிடித்துள்ளேன். முனைவர் இராம.கியும் சிஃபிடாட்காம் வெங்கடேஷும் கீழே:


நானும் எழுத்தாளர் சுஜாதாவும். சுஜாதா தற்பொழுது தமிழ் கணினி லினக்ஸில் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கண்காட்சியில் 

இப்பொழுது முதல்வர் துவக்க உரை அண்ணா பல்கலைக் கழகத்தில் முடிந்திருக்கும். இங்கு தாஜ் கொரமாண்டலில் கண்காட்சி துவக்கத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது. கண்காட்சி முகப்பு:


பதிவு செய்தவர்கள் தங்கள் அடையாள அட்டைகளுக்காகக் காத்திருக்கின்றனர். வேலையாட்கள் மும்முரமாக பொருட்களை கண்காட்சி அறையினுள் எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.கண்காட்சி அறையின் ஒரு பகுதி.மாநாடும், கண்காட்சியும் 

இன்று உலகத் தமிழ் இணைய மாநாடு - "தமிழ் இணையம் 2003" - துவங்குகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மதியம் 12.00 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் கலையரங்கில் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைக்கிறார். மதியம் 14.00 மணி அளவில் தாஜ் கோரமாண்டலில் மாநாட்டின் இணையாக மாநாட்டுக் கண்காட்சி தொடங்குகிறது. அதனை தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைக்கிறார்.

நான் மாநாடு துவக்க விழாவிற்கு அண்ணா பல்கலைக்கழகம் வரை போகப் போவதில்லை. காலை ஒரு நான்கு மணிநேரமாவது அலுவல் வேலைகளை முடித்து விட்டுப் பின்னர் மதியம் 13.00 மணி அளவில் தாஜ் கோரமாண்டல் போகிறேன்.

This page is powered by Blogger. Isn't yours?