Thursday, April 29, 2004

நதிநீர் இணைப்பு - நடக்கக்கூடியதா? தேவைதானா?

இது தொடர்பான ஒரு செவ்வி + ஒரு கட்டுரை ரீடிஃப் தளத்திலிருந்து.

1. சாம் கண்ணப்பனுடன் ஒரு நேர்முகம், 10 பெப்ரவரி 2003
2. சங்கீதா ஸ்ரீராமின் கட்டுரை, 29 ஏப்ரல் 2004

நடிகர் ரஜினி காந்த் நதிகளை இணைப்போம் என்று சொன்னதால் பாஜகவுக்கு வாக்கு என்கிறார். நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சில தொல்லைகள்:

1. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. பல மாநிலங்கள் இதன் மூலம் தங்களுக்கு ஏதோ ஆபத்து என்றுதான் நினைக்கின்றனர். இதுவரை தமிழகமும், ஹரியானாவும் மட்டும்தான் இந்தத் திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர். (ஏன் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.)

2. இந்தியாவின் அண்டை நாடுகள் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. பாகிஸ்தான், நேபாள், பங்களாதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் - ஏற்கனவே எதிர்க்க ஆரம்பித்து விட்டன. இந்த மூன்று நாடுகளுடனும் நாம் ஏற்கனவே நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள மக்கள் ஏற்கனவே இந்தியா தங்களுக்குத் தரவேண்டிய தண்ணீரைத் தருவதில்லை என்று குறை கூறுகின்றனர். பங்களாதேசத்திற்கு இந்தியா மேல் வண்டிக் குறை.

3. திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம்: இந்தத் திட்டத்தைப் படிப்படியாகச் செய்வதால் முழு நன்மை இருக்காது. முழுதும் செய்து முடித்தவுடன்தான் அனைவருக்கும் - குறிப்பாக தண்ணீர்ப் பஞ்சத்தில் வாடும் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும். உச்ச நீதிமன்றம் 2012க்குள் நதிகளை இணைக்க வேண்டும் என்கிறது. மத்திய அரசின் நதிநீர் இணைப்புத் திட்டக் குழு தனது இணையத்தளத்தில் எந்த கால அளவையும் கொடுக்கவில்லை. இந்தத் திட்டக்குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் பிரபு (இப்பொழுது தேர்தல் காரணங்களால் ராஜினாமா செய்துள்ளார்!) பல்வேறு செவ்விகளில் 2016 வரை ஆகலாம் என்கிறார். இந்தியாவில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பெரிய திட்டங்களைப் பார்க்கும்போது இந்தத் திட்டம் நிறைவேற 25 வருடங்களுக்கு மேலும் ஆகலாம். ஆக இந்தத் திட்டத்தை நம்பி தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் என்று உட்கார்ந்திருந்தால் போய்ச்சேர வேண்டியதுதான்!

4. திட்டத்திற்காகும் செலவு: ரூ. 560,000 கோடி என்று ஒரு எண் வந்திருக்கிறது. இதில் பணவீக்கம், ஊழல், திட்டத்தின் செய்நேர்த்தி ஆகியவற்றைச் சேர்க்கும்போது இரண்டு மடங்குக்கு மேலேயே போய்விடலாம்! அந்தப் பணத்தில் மற்ற பல திட்டங்களைச் செய்யமுடியும் என்று தோன்றுகிறது.

5. இதனால் பாதிக்கப்படப் போகும் மக்கள்: திட்டக்குழுவின் கணிப்புப்படி ஒரு கிளைத் திட்டத்திலேயே கிட்டத்தட்ட 5 லட்சம் மக்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். அவர்களுக்கு எம்மாதிரியான ஈடு கொடுக்கப்படும் என்பது நர்மதா அணை விஷயத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நம் தேவைகள் இரண்டு: (1) குடிநீர் (2) விவசாயப் பாசன நீர்.

குடிநீரைப் பொறுத்தவரையில் கடல்நீர் சுத்திகரிப்பு மற்றும் தனியார் வழியாக குடிநீரை மாநிலம் முழுதும் வழங்குதல் என்னும் முடிவு நதிநீர் இணைப்பை விட மேலானது என்று தோன்றுகிறது. இதந் மூலம் ஒரு லிட்டர் குடிநீர் தயாரிக்க என்ன செலவாகும் என்ற தகவல் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

கடல்நீரை சுத்திகரிக்க யாரிடமும் தமிழகம் (மற்ற கடலொட்டிய மாநிலங்கள்) அனுமதி கேட்க வேண்டியதில்லை. செலவு சற்றே அதிகமானாலும் ஓரிரு வருடங்களுக்குள்ளாக சில தனியார் நிறுவனங்களும், அரசுமே சுத்திகரிப்பாலைகளைக் கட்டிவிட முடியும். தொடக்கத்தில் கிழக்குக் கடலையொட்டிய மாவட்டங்களில் இதன்மூலம் குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம். குழாய்கள் மூலம் முழு மாவட்டங்களுக்கும், தண்ணீர் டாங்கர்கள் மூலம் பக்கத்து மாவட்டங்களுக்கும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம். பெப்ஸி/கோகோ கோலா நிறுவனங்களை நிலத்தடி நீரை எடுக்கவிடாமல் இவ்வாறு சுத்திகரிப்பு செய்த கடல்நீரை விற்கலாம்! தேவையான மூலதனத்தை பங்குச்சந்தை மூலமும், உலக வங்கிக் கடன்கள் மூலமும், கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமும் பெற முடியும்.

விவசாயப் பாசன நீர் - இனியும் இலவசமாக விவசாயப் பாசன நீர் கொடுக்க முடியாது என்று மாநில அரசு நம் விவசாயிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டிவரும். ஆற்றிலிருந்து கிடைக்கிறது, வேண்டியவரை அள்ளி எடுத்துப்போவோம் என்பதெல்லாம் பழைய காலம். சற்றே குறைந்த அளவு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரை (அதாவது குடிதண்ணீர் அளவிற்கு சுத்தம் செய்யாமல்) கடலொட்டிய மாவட்டங்களில் விவசாயப் பாசனத்திற்குப் பயன்படுத்தினால் என்ன செலவாகும் என்று பார்க்கலாம்.

தமிழகம் காவிரியில் தண்ணீர் வரும், கிருஷ்ணா தண்ணீர் வரும், வீராணம் தண்ணீர் வரும், நதிநீர் இணைப்பு நாளையே நடக்கும் என்று மோசம் போவதைக் காட்டிலும் கடல் நீரை நம்புவது மேல் என்று தோன்றுகிறது.

Wednesday, April 28, 2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5

என் சில உரத்த கேள்விகள்:

1. ராஜீவ் காந்தி கொலை தவிர்த்து, ஏன் இந்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று சூ.நா சொல்லவில்லை. வேறெங்காவது எழுதியிருக்கிறாரா என்று தேட வேண்டும்.

2. ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தாலும் அதற்காக நம்மை வெகு நெருங்கிய நாட்டில், நம் கலாச்சார, மொழி, மதத்தோடு வெகு நெருங்கிய ஒரு இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்தில் ராஜீவ் காந்தி கொலையை சற்று மறந்து விட்டு தொலை நோக்கோடு ஏன் இந்திய அரசு ஈடுபட மறுக்கிறது?

3. இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் நாகாலாந்து இயக்கம் (National Socialist Council of Nagaland), காஷ்மீர் போராளிகள், அவர்களுக்கு ஆதரவான ஹூரியத் அமைப்பு ஆகியவற்றுடன் அமைதியை விரும்பி பேச்சுவார்த்தை செய்யும் இந்திய அரசு ஏன் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசுவதில்லை? இலங்கை அரசு கூட விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்டு விட்டது. அதாவது விடுதலைப்புலிகளோடு நேரடிப் பேச்சுவார்த்தை இன்றி எந்தப் பலனும் இருக்காது என்று அவர்களே தெரிந்து கொண்ட பின்னரும் ஏன் இந்திய அரசு இதனை ஏற்க மறுக்கிறது?

4. இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை இன்று உருவாக்குவது யார்?

5. தமிழீழம் என்ற அமைப்பு உருவானாலும், இந்த நாடும் இந்தியாவினை பெருமளவு வர்த்தகத் துறையில் நம்பித்தானே இருக்க வேண்டும்? இது 'நான் பெரிய ஆள்' என்னும் நினைப்பில் சொல்வதல்ல. ஒரு நாட்டிற்குத் தேவையான உணவு முதற்கொண்டு, எரி-எண்ணெய், அடிப்படைக் கட்டுமான வசதி ஆகிய அனைத்திற்கும் இதுபோன்ற வளங்கள் இல்லாத சிறிய நாடு அதைக் கொடுக்கக் கூடிய பெரிய அண்டை நாட்டுடன் சுமுகமான உறவுடன்தானே இருக்க வேண்டும்? ஏன் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள நாடு இந்தியாவிற்கு எதிரியாக இருக்கும் என்று சில/பல இந்திய அறிஞர்கள் நினைக்கிறார்கள்?

6. தனி ஈழம் ஏற்பட்டால் அதனால் அடுத்து தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கை சில தமிழ்த் தீவிரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் என்ற பயமா? இப்பொழுதைய நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே? இந்தியா போன்ற ஒரு பெரிய சந்தையின் அங்கமாக இருப்பதுதான் தமிழகத்தின் பலம், தமிழ் மக்களின் வாழ்வுயர வழி என்றுதானே இன்று திமுக கூட தனித்தமிழ்நாடு போன்ற சிந்தனைகளை ஏறக்கட்டி வைத்துவிட்டது?

7. தமிழீழம் உருவானால் இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் நிலை என்னவாகும்? தோட்டத் தொழிலாளர்கள் நிலை என்ன? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள, முஸ்லிம்கள் நிலை என்ன?

8. அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முன்னேற தடைகற்கள் என்னென்ன? இந்தியா எந்த வகையில் இந்தத் தடைகளை நீக்க உதவ முடியும்? பெடரல் அமைப்பிலான இடைக்காலத் தீர்வு ஒன்றில் எம்மாதிரியான அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அமையும்? அவ்விடங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துடையவர்களின் நிலை என்னவாகும்?

9. தமிழீழம் அல்லாது ஒருமித்த (புதிய) அரசியல் நிர்ணயச் சட்டத்தின் கீழ் பெடரல் முறைப்படியான ஒரு ஆட்சி முறை இலங்கையில் சாத்தியமா? அதற்கும் சிங்களத் தீவிரவாதக் கருத்துடையவர்களிடமிருந்து எந்தவகை எதிர்ப்பு இருக்கும்? பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து என்ன?

10. இலங்கையில் அமைதி திரும்ப, முக்கியமாக இலங்கைத் தமிழரது துயர் குறைய/நீங்க இந்திய அரசின், இந்திய மக்களின் உதவி நிச்சயம் தேவை என்று விடுதலைப் புலிகள் நினைக்கிறார்களா? அல்லது தேவையில்லை என்று நினைக்கிறார்களா? அப்படித் தேவை என்று நினைத்தால் அதற்கு வசதியாக இந்திய அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள், அறிஞர்கள், ஊடகங்கள் ஆகியோரின் இலங்கைப் பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டினை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுத்து வருகின்றனர்? விடுதலைப்புலிகளால் இந்தியாவில் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு இருக்கும் என்று நிலவிவரும் கருத்தை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுக்கின்றனர்?

11. இன்றைய நிலையில் தமிழகத்திலேயே தமிழர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி ஒன்றும் தெரிவதில்லை. ஈடுபாடில்லாமைதான் (apathy) நிலவிவருகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு தடைபட்டிருக்கும் வரையில் விடுதலைப்புலிகள் அமைப்பை முன்னிறுத்திப் பேசுவதும் பிரபாகரனின் படங்களுக்கு மாலை போட்டு, தெருவில் போஸ்டர் விற்பதும் ஜெயலலிதா போன்ற விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளர்களின் கோபத்துக்கு ஆளாகி நீதிமன்றங்களுக்குச் செல்ல நேரிடும். இந்நிலையில் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கருத்துகள் மட்டுமே தமிழகத்தில் பரவ வாய்ப்பு உள்ளது. ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெற வழியில்லாத நிலைமை உள்ளது. அமெரிக்காவில் கூட பாலஸ்தீனிய அமைப்புகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தி அதில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கருதப்படும் சிலரின் நிலைப்பாடுகளைப் பற்றிப் புகழ்ந்து பேச முடியும். ஆனால் இந்தியாவில் அண்டை நாட்டின் இனப்பிரச்சினையில் முக்கியமான அங்கமாக இருக்கும் ஒரு குழுவின் தலைவரைப் பற்றியோ, அவரது கருத்துகளைப் பற்றியோ, அகடமிக் கருத்தரங்கத்தில் கூடப் பேச முடியாத நிலைமை உள்ளது.

இதை மாற்ற தமிழக, இந்திய அறிஞர்கள், சிவில் சொஸைட்டி அமைப்புகள் முயற்சி செய்ய வேண்டியது அவசரமாகிறது.

இன்னமும் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றைப் பற்றி நேரம் கிடைக்கும்போது தொடர்கிறேன்.

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4

இப்பேச்சு மேலோட்டமான பேச்சே தவிர ஆழமான இலங்கைப் பிரச்சினை பற்றிய கலந்துரையாடல் அல்ல. பேச்சினைக் கேட்க வந்தவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றிய புரிதல்கள் ஏதும் இருப்பது போலத் தோன்றவில்லை, அல்லது அப்படிப்பட்ட புரிதல்கள் வெகு மேலோட்டமானதே. தொடர்ந்த கேள்வி-பதில்களில் இது வெளிப்படையானது. சற்றே கடினமான கேள்விகளை நான் ஒருவன்தான் கேட்டேன் என்று நினைக்கிறேன்.

சில கேள்விகளும்-பதில்களும்:

நான்: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அடக்கக்கூடிய நிலையில் இல்லை. இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஈடுபடவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இலங்கை துண்டாடப் படக்கூடாது என்றும் சொல்கிறீர்கள். விடுதலைப் புலிகள் தனியீழக் கோரிக்கையிலிருந்தோ விலகவில்லை. அப்படியானால் இந்தியா இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட வேண்டும் என்கிறீர்களா?

சூ.நா: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை எதிர்க்கும் நிலையில் இல்லை என்பது உண்மையே. ஐந்துக்கு ஒருவர் இராணுவத்திலிருந்து விலகியோடிக் கொண்டிருக்கிறார் (desertion). விடுதலைப்புலிகளுக்கு ஒப்பான வெறியோடு போரிடக்கூடிய எண்ணம் இலங்கை இராணுவ வீரர்களுக்கு இல்லை. அத்துடன் உளவுத்திறனும் குறைந்த நிலையிலேயே உள்ளது. இலங்கை இராணுவத்துக்கு வரவேண்டிய சில மார்டர்கள் ஆப்பிரிக்க நாடு ஒன்றின் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் அந்தக் கப்பலை வழிமறித்து இலங்கை அரசு ஏஜெண்டுகள் போல வேடமணிந்து அந்த இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றிவிட்டு லண்டனிலிருந்து கொழும்பு அமெரிக்கத் தூதரகத்திற்கு 'உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்.... அவர்களுக்கான இராணுவத் தளவாடங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு விட்டோமென' என்று செய்தியனுப்பினர்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?
- இந்தியக் கடற்படை மூலமாக விடுதலைப்புலிகள் கொண்டு வரும் இராணுவத் தளவாடங்களை அறவே தடுத்து நிறுத்த வேண்டும்.
- இலங்கை இராணுவத்திற்கு போதிய பயிற்சிகளும், ஆயுதங்களும் தர வேண்டும்
- தேவைப்பட்டால் நேரிடையாக இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் கடல்புலிகள் மீது குண்டெறிந்து அழிக்க வேண்டும்.
- முக்கிய இலங்கைக் கட்சிகளை ஒன்றாகக் கொண்டு வந்து இணைந்து செயல்பட வைக்க வேண்டும். அதன்மூலம் தமிழர் பகுதிகளுக்குத் தன்னுரிமை (autonomy) வழங்க வகை செய்ய வேண்டும் - ஆனால் இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காதவாறு.

நான்: ஏன் நாம் 'தேசியவாதம், ஒற்றுமை, ஒருமைப்பாடு' போன்ற பழங்கொள்கைகளுக்குள் உலவிக்கொண்டு இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கக் கூடாது என்று பேச வேண்டும்? செக்கோஸ்லோவாகியா -> செக், ஸ்லோவாகியா என்று பிரியவில்லையா? தனியீழம் கூடாது என்று எதற்காக உறுதியாகச் சொல்கிறீர்கள்?

சூ.நா: நவீன சிந்தனைப்படி ஒருவருக்குப் பல தனித்துவங்கள் இருக்கலாம். நான் ஒரு நாட்டின் குடிமகனாக இருந்துகொண்டே, கலாச்சாரப்படி மற்ற குடிமக்களிடமிருந்து வேறுபட முடியும். எனவே தனி நாடு ஒன்றுதான் வழி என்று நினைக்கக் கூடாது. விடுதலைப்புலிகளின் கருத்து 'அந்நியப்படுத்தப்பட்ட சிறுபான்மையினரால் பெரும்பான்மையினரோடு சேர்ந்து வாழ முடியாது' என்பதே. இது சரியல்ல.

அதே சமயம் தமிழீழம் என்பதும் ஒரு சரியான தீர்வல்ல. கொழும்புவில் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் அதிக தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழீழத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன நன்மை? யாழ்ப்பாணத் தமிழர்கள் வெள்ளாள சாதியினைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தலித் பின்னணியிலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது எந்தவொரு அனுசரணையும் கிடையாது. இலங்கையில் கல்வித்துறையில் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் அவரவரது சமயப் பாடத்தினைப் படிக்க வேண்டும். ஹிந்து தமிழர்கள் பாடத்திற்குப் பெயர் 'சைவ நெறி'. இது பெரும்பான்மை வெள்ளாள மக்களின் மதம் பற்றியது. கிழக்குப் பகுதி, தோட்டத் தொழிலாளர்களது சமயப் பழக்க வழக்கம் வேறு. தோட்டத் தொழிலாளர்கள் தலித் கடவுள்களை வணங்குபவர்கள். இந்தக் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது தங்களின் பழக்கவழக்கத்தை இழிவானது என்று நினைக்குமாறு உள்ளது வெள்ளாள 'சைவ நெறி' பாடங்கள்.

விடுதலைப்புலிகள் தமிழ் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு 72 மணிநேரத்திற்குள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றனர்.

எனவே தமிழீழம் என்று தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்ககூடிய ஒரு நாடாக இருக்குமென்று தோன்றவில்லை. அங்கு சிறுபான்மையினரின் கலாச்சார தனித்துவம் மறுக்கப்படும்.

விடுதலைப்புலிகள் தங்களுக்கெதிரான மாற்றுக் கருத்துள்ளவர்களை ஒழித்து விடுவார்கள்.

வேறொருவர் கேள்வி: இந்தியா பங்களாதேசத்தில் தலையிட்டு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசம் பிரிவதற்குக் காரணமாக இருந்ததைப் போல இலங்கையில் தலையிட்டு நாட்டை இரண்டாக்கக் கூடாதா?

சூ.நா: பங்களாதேசத்தில் இந்தியாவின் நிலை வேறு. அங்கு நாம் பாகிஸ்தான் இரண்டாவதை விரும்பினோம். ஆனால் அப்படி இலங்கை இரண்டாவதை நாம் எதிர்க்க வேண்டும்.

கேள்வி: வடக்கில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு தீராத தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருப்பதைப் போல தமிழீழம் தெற்கில் இந்தியாவிற்குத் தொல்லையைக் கொடுக்குமா?

சூ.நா: நிச்சயமாக. ஏற்கனவே கடல்புலிகள் இலங்கை மீனவர்களைத் தூண்டி இந்திய மீனவர்களைக் கடத்துவது, அவர்களை விடுவிக்க பணம் வாங்குவது என்றவாறு இருக்கிறார்கள். இந்திய மீனவர்களுக்கு கடல்புலிகளால் தொல்லைதான்.

கேள்வி: பிரபாகரனுக்கு அடுத்த தலைமுறையாக மற்ற தலைவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கின்றனரா?

பதில்: பிரபாகரன் வேறெந்தத் தலைவரையும் தலைதூக்க விடுவதில்லை. ஆசியத் தலைவர்களின் வயதைப் பார்க்கையில் பிரபாகரன் இளமையானவர். விடுதலைப்புலிகள் இயக்கம் மிகவும் கட்டுப்பாடான இயக்கம். Strategic முடிவுகள் அனைத்தையும் எடுப்பது பிரபாகரன் மட்டுமே. ஆனால் முடிவெடுத்தவுடன் அதை எப்படி நடத்துவது என்பது பொட்டு அம்மன் போன்றோரின் கையில் விடப்படும்.

-*-

அதிக நேரம் இல்லாத காரணத்தால் பேச்சும், கேள்வி பதிலும் அத்துடன் முடிவடைந்தது. மேற்சொன்ன கே-ப வுடன் பல அர்த்தமற்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.

ஒன்று | இரண்டு | மூன்று | ஐந்து

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3

தமிழகத்தின் தனி திராவிட நாடு கோரிக்கைக்கும், இலங்கையில் தனி ஈழம் கோரிக்கைக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.

* பெரியார் இந்திய சுதந்திர தினத்தை துக்க தினம் என்றவர். அன்றுமுதல்தான் தமிழர்களின் அடிமைத்தனம் ஆரம்பமாகிறது என்பது அவர் கருத்து.
* பின்னர் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுக 1967இலிருந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்ததோடு மட்டுமின்றி மத்தியிலும் ஆட்சியின் அங்கமாக இருந்தது.
* நாளடைவில் தனிநாடு கோரிக்கை நீர்த்துப்போய்விட்டது. ஒருகாலத்தில் தனிநாடு கேட்டவர்கள் இன்று சென்னை கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதில் தயங்குவதில்லை.
* தேவ கௌடா இந்தியப் பிரதமரானதுதான் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாள். அன்றுதான் ஹிந்தியே பேசத்தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமரானார்.
* மிகுந்த பதட்டத்தோடும், வன்முறையோடும் தொடங்கிய இந்தியா நாளடைவில் தேசியவாதம் வலுப்படுமாறு மாறியுள்ளது.

* இலங்கை இதற்கு எதிர்மறை. தொடக்கம் அமைதியுடனும், ஒருவரை ஒருவர் மதிக்குமாறும் இருந்தது போய் இன்று எதிரெதிரே இருந்தவாறு நாட்டைப் பிரிக்கும் கோரிக்கை வந்துள்ளது. Concensus politics -> Competitive politics -> Conflicting -> Conflagration

===

குறுகிய வரலாற்று விளக்கத்திற்குப் பிறகு தற்போதைய நிலையின் இந்தியா என்ன செய்யவேண்டும் என்ற தனது கருத்துகளுக்கு வந்தார்.

* இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும்
* ஏற்கனவே இந்தியாவின் 'இந்தியன் ஆயில்' நிறுவனம் இலங்கையில் பெட்ரோல் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் கால் பதிக்க ஆரம்பித்து விட்டன.
* இந்தியாவும், இலங்கையும் பாதுகாப்புத்துறையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன (? அல்லது ஒப்பந்தத்திற்கான திட்டத்தில் இறங்கியுள்ளன?)
* முன்னர் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கடத்திச் சென்றனர், இப்பொழுது கடல்புலிகள் (Sea Tigers) இதையே செய்கின்றனர்.
* கடல்புலிகளினால் இந்தியாவிற்குக் கெடுதல்தான். இந்தியாவின் எல்லை நிலத்தோடு நின்று போய்விடுவதில்லை. அதையொட்டிய கடலும் ஒரளவிற்கு இந்தியாவினுடையதுதான்.
* ஏற்கனவே கடல்புலிகள் வடக்குக் கடற்கரையைத் தங்கள் கையிருப்பில் வைத்துள்ளனர். இப்பொழுது அமைதிப்பேச்சின்போது அவர்கள் முன்வைத்துள்ள திட்ட வரைவின்படி கிழக்குக் கடற்கரையையும் அவர்களின் கண்காணிப்பிற்கு விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். இது இந்தியாவிற்கு நல்லதல்ல.
* இந்தியா இலங்கையின் ஒற்றுமை/ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் வராவண்ணம் அங்கு பெடரல் முறை வருமாறு முயல வேண்டும். ஆனால் அதற்கு சிங்களக் கட்சிகளின் (SLFP - UNP) போட்டி அரசியல் இதற்கு இணக்கமாக இல்லை.
* தமிழீழம் உருவாவதை இந்தியா அனுமதிக்கக் கூடாது.
* விடுதலைப்புலிகள் கொடுத்துள்ள இடைக்காலத் தீர்வு என்பதே தனி நாட்டிற்கான முன்னேற்பாடுதான்.

ஒன்று | இரண்டு | நான்கு | ஐந்து

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் வெவ்வேறு காலங்களில் இந்தியாவின் பங்கு பற்றி சுருக்கமாக விளக்கினார்.

* தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலை: பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து உலகெங்கும் வேலைக்காரர்களை அழைத்துச் செல்லும்போது அவர்கள் எந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களோ, அந்த நாட்டில் இருப்பவர்களுக்கான அத்தனை உரிமைகளும் அழைத்துக்கொண்டு வரப்பட்டவர்களுக்கும் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்துடனேதான் அழைத்துச் சென்றனர்.

* சுதந்திரம் அடைந்தவுடன் இலங்கை பாராளுமன்றம் எடுத்த முதல் சில முடிவுகளிலே ஒன்று இலங்கைக் குடியுரிமைச் சட்டம். இதன்படி 19, 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளி (தமிழர்கள்) மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை பெறுவது மிகக்கடினமாக்கப்பட்டது. [தோட்டத் தொழிலாளர் அல்லாத தமிழ் பேசும் இலங்கையினர் அந்தத் தீவின் ஆதிகாலத்தவர் (native to the island)]

* இலங்கைக் குடியுரிமை பெற ஒருவரது பிறப்புச் சான்றிதழ், அவரது தந்தையின் சான்றிதழ், பாட்டனின் சான்றிதழ் தேவைப்பட்டது. அப்பொழுது பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது அப்பொழுதைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், பிரதமர் சேனாநாயகாவைப் பார்த்து உங்களால் இந்த சான்றிதழ்களை கொண்டு வர முடியுமா என்று கேட்டதற்கு அவருமே தன்னாலே முடியாது என்றுவிட்டார். தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட சட்டம் - எனவே எதிர்ப்புகள் இருந்தும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு பெரும்பான்மை தோட்டத் தொழிலாளர்கள் எந்நாட்டின் குடிமக்களும் இல்லை என்ற நிலை உருவானது. இலங்கைத் தமிழர்களும் இதற்குத் துணைபோயினர். அப்பொழுது பிரதமர் செனாநாயகாவிற்கு சட்டம் இயற்ற துணைபுரிந்தவர் சர். கந்தையா எனப்படும் தமிழர்.

* இந்தியப் பிரதமர் நேரு தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள், அதனால் அவர்களுக்கு இலங்கைக் குடியுரிமைதான் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார். இலங்கைத் தலைவர்கள் அது இந்தியாவின் பிரச்சினை என்ற நிலையில் இருந்தனர். லால் பஹாதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமரானபோது, இந்தியா அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு வைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அதை மாற்றும் விதமாக, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு பல தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்கினார்.

* கடந்த வருடம் (2003) ரணில் விக்கிரமசிங்கே அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கும் வரையில் இந்தப் பிரச்சினை தனியாகத் தொடர்ந்து வந்தே இருந்தது.

* இதற்கிடையில் தொடக்கத்தில் சுமுகமான உறவோடு ஆரம்பித்த இலங்கை அரசியலில் நாளடைவில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் போட்டி, பொறாமை என்று பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது. பல இனவெறிக் கொலைகளும் நிகழ்ந்தேறின. ஆனால் இந்தியா 1947-1981 வரை இதனை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று தலையிடாமலேயே இருந்து வந்தது.

* 1981இல் நடந்த வன்முறையைக் கண்டித்து தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டம் நடைபெற ஆரம்பித்தது. திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரச்சினையை பாராளுமன்றத்தில் வெகுவாக எடுத்துப் பேச ஆரம்பித்தனர். அதனால் இந்திய அரசு தலையிடாமல் இருந்ததிலிருந்து தலையிட்டு சிங்கள, தமிழ் தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தத் துணைபுரியும் இடையீட்டாளராக (mediator) இருக்க முனைந்தது. (மையமாக இருக்கும் அதிகாரத்தை அ-மையப்படுத்துவது, பொருளாதார, சட்டமியற்றும் அதிகாரங்களை தமிழர் பிரதேசங்களுக்கு வழங்குவது போன்ற கொள்கைகளை வலியுறுத்துவது.)

* 1983இல் மாபெரும் இனப்படுகொலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.

* 1983இல் ஜெயவர்தனே இராணுவ உதவி வேண்டி பல நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினார். UK, பாகிஸ்தான், அமெரிக்கா என்று பல நாடுகளுக்கு சென்றாலும் இந்தியாவிடம் உதவியெதுவும் கேட்கவில்லை. அப்பொழுது வெளியுறவுத் துறை அமைச்சராயிருந்த நரசிம்ம ராவை இந்திரா காந்தி கொழும்புவுக்கு அனுப்பி ஜெயவர்தனேயிடம் தனது அதிருப்தியை வெளியிட்டார். அப்பொழுதுதான் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு இடையீட்டுடன், ஆயுத உதவியும் செய்ய முடிவு செய்தது.

* 1983இல் புது தில்லி சென்ற அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடன் (ஜி.பார்த்தசாரதி ஆலோசகர்) பேசியபோது ஜெயவர்தனே தமிழர் போராளிகளைத் தாக்கினால் போராளிகளால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்று கேட்ட கேள்விக்கு, அமிர்தலிங்கம் மொத்தமாகவே 300 போராளிகள்தான் இருக்கின்றனர், அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்றாராம். அதனைத் தொடர்ந்து இந்திய மைய அரசு முடிவில் இலங்கயிலிருந்து பல போராளிக் குழுக்களை இந்தியா கொண்டு வந்து அவர்களுக்கு போர்ப்பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கப்பட்டன.

* 1987இல் தமிழ்ப்போராளிகளுக்கும் இலங்கைப் படைகளுக்குமான் யுத்தம் பெரிதான வேளை. இலங்கை மீண்டும் இராணுவ உதவி வேண்டி அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் என்று பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தது. வடவிலங்கை உணவுப்பற்றாக்குறையால் தவித்த போது ராஜீவ் காந்தி இராணுவ விமானங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருட்களைப் போட வைத்தார். ஜெயவர்தனேயிடம் இந்தியாவின் இராணுவ பலத்தைக் காண்பிக்கும் வகையிலும் இது அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தமும், அமைதிப்படை (IPKF) இலங்கை செல்வதும் நடந்தது. இலங்கை அரசுக்கும் தமிழ்ப்போராளிகளுக்கும் இடையில் நடக்க வேண்டிய ஒப்பந்தத்திற்கு பதில் இந்தியாவை உள்ளுக்கிழுத்து இந்திய-இலங்கை ஒப்பந்தமாக்கியது ஜெயவர்தனேயின் திறமை. அதன்மூலம் இலங்கைப் போராளிகளை வழிக்குக் கொண்டு வரவேண்டிய வேலை இந்தியர்களிடம் அவர் ஒப்படைத்து விட்டார். அவ்வாறு செய்து விட்டு மீண்ட இலங்கைப் படையினரைக் கொண்டு தெற்கில் ஆயுதமேந்திப் போராடும் ஜனதா விமுக்தி பெரமுனவை அழிக்க ஆரம்பித்தார்.

* பிரபாகரனின் சுடுமலைப் பேச்சு. பிரபாகரன் இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாது, சிங்கள அரசை நம்பமுடியாது என்று சொன்னது.

* IPKF புதைகுழியில் மாட்டியது. விடுதலைப்புலிகளிடம் இந்தியப் படைகளிடம் இருந்ததை விட திறமையான தகவல் தொடர்பு சாதனங்கள், ஆயுதங்கள், உளவுத்திறன்.

* பிரேமதாசா புலிகளுடன் (மறைமுக) ஒப்பந்தம் செய்து கொண்டு புலிகள் மூலமாக IPKFஐ விரட்ட நினைத்தது. பிரேமதாசாவின் வேண்டுகோளின்படி வி.பி.சிங் IPKFஐ திரும்ப அழைத்துக் கொண்டது.

* ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே சென்னையில் எதிரிப் போராளிகளை க் கொன்றது.

* ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இந்திய அரசுகள் இலங்கைப் பிரச்சினையைக் கைகழுவி விடும் கொள்கையை (hands-off policy) மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தனர். இந்திய நீதிமன்றம் பிரபாகரனை 'proclaimed offender' என்று சொல்வது. இந்திய அரசு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கையைக் கேட்டுக் கொள்வது.

* இலங்கையில் தொடரும் போர், பின் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை.

ஒன்று | மூன்று | நான்கு | ஐந்து

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1

பிரக்ஞ்ய விஸ்வதர்ஷன் தொடர்பேச்சு வரிசையில் 26 ஏப்ரல் 2004 மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் வி.சூர்யநாராயணன் இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் என்ற தலைப்பில் பேசினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியான் (Asean) நாடுகளைப் பற்றிய படிப்புக்கான மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் திரு. சூர்யநாராயணன்.

கூட்டத்திற்கு சுமார் 20 பேர் வந்திருந்தனர். பனிரெண்டு பேர் கல்லூரி மாணவர்கள் போலவும், நான்கைந்து பேர் வயதான பெரியோர்களாகவும் இருந்தனர். கல்லூரி மாணவர் போன்றோர் இந்தத் தொடர்பேச்சின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருபவர் போலிருந்தது. (எடுத்துக்காட்டாக அடுத்த வாரத்திற்கானது Stress Management என்னும் தலைப்பில் ஒருவர் பேசப்போகிறார். இதற்கும் இந்த மாணவர் குழாம் அப்படியே வரலாம்.?) இந்தப் பேச்சு பற்றிய முன்னறிவிப்பு 'தி ஹிந்து' பத்திரிகையில் வெளியாகியிருந்தது. நானும் எனது வலைப்பதிவில் தகவல் இட்டிருந்தேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி யார் பேசினாலும், எத்தகைய கருத்தை முன்வைத்தாலும் சென்னைத் தமிழர்களுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு நாட்டம் இல்லை என்று தெரிகிறது.

-*-

தொடக்கத்தில் இந்தியா-இலங்கை பற்றிய உறவை அறிந்து கொள்ள, இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்று சொன்னார். (1) இந்தியாவைப் பற்றிய இலங்கைப் பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து (2) இந்தியாவின் மைய அரசில் இலங்கை பற்றிய கொள்கைகளை வரையறுத்தவர்களின் தமிழ்நாடு/இலங்கைத் தமிழர்கள் பற்றிய அறியாமை

இந்தியா பற்றிய இலங்கையினரின் கருத்து

* 1948 பெப்ரவரியில் சுதந்திரம் (புதிய அரசியல் நிர்ணயச் சட்டம்). இந்திய சுதந்திரத்தின் போது நடந்தது போலல்லாமல் சிறிதும் சண்டையின்றி, இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றது சிலோன். அது மட்டுமின்றி முதல் அரசிலிருந்தே தமிழர்களுக்கு அமைச்சரவையிலும் பங்கிருந்தது. ஐவர் ஜென்னிங்ஸ் இலங்கையை 'மாடல் காலனி (Model Colony)' என்று பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

* தொடக்கத்திலிருந்தே இலங்கை மக்கள் (சிங்களவர்கள்?) இந்தியாவின் மீது காதலும், வெறுப்பும் உள்ளவர்களாக இருந்தனர். (love hate relationship). மதம், கலாச்சாரம், மொழி ஆகிய பலவற்றிலும் இலங்கை இந்தியாவிலிருந்து பலவற்றைப் பெற்றது. ஆனால் இலங்கை மக்கள் இந்தியாவினால் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளையும் என்று நம்பினர்.

* சுதந்திரத்திற்கு 7-8 வருடங்கள் முன்னரே சிலோனில் இந்தியக் குடியினர் (தோட்டத் தொழிலாளர்கள்) பற்றிய ஒரு பிரச்சினை சம்பந்தமாக இந்திய தேசிய காங்கிரஸ் பட்டாபி சீதாராமையாவை சிலோன் அனுப்பத் தீர்மானித்தது. ஆனால் சிங்களர்கள் சீதாராமையாவை தமிழர் என நினைத்து அவர் வருவதை எதிர்த்தனர். [சீதாராமையா ஒரு தெலுங்கர்.] பின், ஜவஹர்லால் நேரு அவருக்கு பதிலாக இலங்கை சென்றார். அவர் திரும்பி வந்து அப்பொழுதைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாதுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
"என்றாவது ஒருநாள் பிரிடிஷ்காரர்கள் இந்தியாவையும், சிலோனையும் விட்டுவிட்டுத்தான் போக வேண்டும். விடுதலை அடைந்த பின்னர், இந்தியா சிலோனை இலட்சியம் செய்யாமல் தனியாக வாழ முடியும். ஆனால் சிலோனால் இந்தியாவை அண்டாமல் இருக்க முடியாது. ஆனால் சிங்கள இனவாதிகள் (Sinhala Chauvinists) அப்படியொரு நிலையைக் கடுமையாக எதிர்ப்பார்கள்" (தோராயமான மேற்கோள், தவறு இருக்கலாம்....)

இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகள்

* பலவேறு குழுக்கள் தனித்தனியாக இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்கி வைத்திருந்தன. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், RAW, IB, தமிழ்நாடு அரசாங்கத்தின் உளவுத்துறை, இராணுவம், கடற்படை என்று பலர், ஆனால் இவர்களிடையே ஒருமித்த கருத்து ஏதுமே இல்லை.

* மேல்மட்டத்தில் இருந்த பல அதிகாரிகளிடம் தமிழர்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. ஒரு உதாரணம் கொடுத்தார். ரொமேஷ் பண்டாரி வெளியுறவுச் செயலராகவும், ஜே.என்.திக்ஷித் இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவும் இருந்த நேரம் அது. அப்பொழுது ரொமேஷ் பண்டாரி ஒரு திட்ட அறிக்கையை உருவாக்கி அதனை திக்ஷித்துக்கு அனுப்பி அதனை இலங்கைத் தமிழ் தலைவர்களிடையே சுற்றறிக்கையாக விடச்சொல்லியிருந்தாராம். பின் ரொமேஷ் பண்டாரி கொழும்பு வந்திறங்கிய பின்னர் திக்ஷித்திடம் 'செல்வநாயகத்திடம் அந்த அறிக்கையைக் கொடுத்து விட்டீர்களா?' என்று வினா எழுப்ப, பதிலாக திக்ஷித் "நீலம் திருச்செல்வத்தை தானே சொல்கிறீர்கள்? செல்வா இறந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது" என்று பதிலளித்தாராம். அதற்கு பண்டாரி "செல்வாவோ, திருச்செல்வமோ, இந்தத் தமிழ்ப்பெயர்களே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது" என்றாராம். ஆக ஆள் யாரென்று கூட அறியாதவர்கள் பலர் இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்குவதில் முன்னால் இருந்தனர்.

* 1987இல் IPKF இலங்கையில் இருக்கையில் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்ய வேண்டிய வேலை IPKFஇடம் வந்தது. அப்பொழுது ராஜீவ் காந்தி தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் கே.சி.பந்த், ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜீவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது சுந்தர்ஜி, வெறும் 72 மணிநேரங்களில் யாழ்ப்பாணம் விழுந்து விடும் என்று பகட்டாகப் பதில் சொன்னாராம். (72 மணிநேரம் 72 நாட்களாகி, பின்னர் மாதங்களாகிப் போயின).

இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

Monday, April 26, 2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும்

இன்று மாலை 6.30 மணியளவில் பாஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இரண்டாவது மாடி, டி.டி.கே சாலை, சென்னை 18) "India and Ethnic Conflict in Sri Lanka" என்ற தலைப்பில் பேராசிரியர் V. சூர்யநாராயணன் பேசுகிறார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் "Centre for South & South East Asean Studies" இயக்குநராக இருந்தவர்.

நான் இந்தப் பேச்சுக்குப் போகிறேன். நாளை இதுபற்றி பதிவு செய்கிறேன்.

Sunday, April 25, 2004

பா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு

நாரதகான சபாவில் இலக்கியப்பீடம் இதழ் சார்பில் அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியின் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பரிசு பெற்ற எழுத்தாளர் பா. ராகவனுக்கு (நாவல்: அலகிலா விளையாட்டு) சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் திரு. ஏ. நடராசன் விருதும், ரூ. 10,000 மதிப்புள்ள காசோலையையும் வழங்கினார்.

இலக்கியப்பீடம் நிறுவனர், ஆசிரியர் திரு.விக்கிரமன், எழுத்தாளர் அனுராதா ரமணன், கலைமகள் பொறுப்பாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட படத்தில் ராகவன், அவரது பெற்றோர், சிறப்பு விருந்தினர் ஏ.நடராசன் ஆகியோர் உள்ளனர். பின்னால் நிற்பது நெய்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் மாலா உத்தண்டராமன். இவர்தான் போன வருடத்திற்கான இலக்கியப்பீடம் நாவல் பரிசை தனது 'அம்மா வென்றாள்' என்ற நாவலுக்காக வென்றவர்.

இலக்கியப்பீடம் நாவல் போட்டி விருது

A country caught in cross-currents of neo-liberalism and Hindu nationalism

இந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் இடையில் மாட்டியுள்ள இந்தியா

அருந்ததி ராய் ஏப்ரல் 6, 2004 அன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஐ.ஜி.கான் நினைவுப் பேச்சாகப் பேசியது இன்றைய தி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

நியோ-லிபரலிஸம்

அருந்ததி ராய் இந்தப் பேச்சில் தொட்டுச் செல்பவை:

- போடா சட்டம், மற்ற வெகுஜன எதிர்ப்பு சட்டங்கள், அதனை அப்பாவிகள் மீது கட்டவிழ்த்து விடும் அரசு இயந்திரங்கள்
- போடாவை ஒழிப்போம் என்று எதிர்க்கட்சிகள் சொன்னாலும் அவை செய்யப்போவதில்லை, ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த சட்டம் அவர்களுக்கும் பயன்படும்
- போடா என்பதை யார்மீதும் பிரயோகிக்கலாம் - உங்கள் மீது, என் மீது. உதாரணமாக ஒருவரிடம் கடும் ஆயுதம் இருக்கிறது என்று சந்தேகித்தால் கூட - ஆம், சாட்சியோ, ஆயுதமோ கூட தேவையில்லை, வெறும் சந்தேகம் போதும் - போடாவில் கைது செய்யலாம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். அதாவது நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என்பது பழைய நீதி. நிரூபிக்கப்படும் வரை குற்றம் செய்தவர் என்பது புது போடா நீதி.
- காவல்துறையிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் "குற்றவாளிக்கு" எதிராக பயன்படுத்தப்படும். [சாதாரண குற்றவியல் குற்றங்களில் இது செல்லுபடியாகாது.] அதனால் காவல்துறையினர் சாட்சியங்களைத் தேடிப்போக வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்டவரை சற்று 'கவனித்தாலே' போதும்.
- எப்படியெல்லாம் கவனிக்கிறார்களாம் தெரியுமா? சிறுநீரைக் குடிக்க வைப்பது, பொட்டுத் துணி இல்லாமல் அம்மணமாக்குவது, மின்சார ஷாக் கொடுப்பது, சிகரெட்டால் சுடுவது, இரும்புக் கம்பிகளை ஆசனவாயில் சொருகுவது... இதைவிட சிறந்த முறைகளை 'காதலன்' படத்தில் ஷங்கர் காண்பித்துள்ளார். அதை ஒவ்வொரு மாநிலத்தின் காவல்துறைக்கும் போட்டுக் காண்பிக்கலாம்.
- காஷ்மீர், குஜராத், வட-கிழக்குப் பிராந்தியங்கள், ஆந்திரப் பிரதேசம் (மற்ற நக்ஸல் பிரதேசங்கள்) ஆகிய இடங்களில் நடக்கும் ஜெயில் கொலைகள், என்கவுண்டர் கொலைகள்

- கடந்த பத்து வருடங்களில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள் (நியோ-லிபரல்)
- இந்தியா ஜொலிக்கிறதா? பத்து வருடங்களுக்கு முந்தைய நிலையை விட இன்று ஏழைகள் உட்கொள்ளும் உணவுப்பொருள் வருடத்திற்கு 100 கிலோ குறைவாக உள்ளது
- 40% கிராமப்புற மக்கள் கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் சஹாராவைச் சுற்றியுள்ள நாடுகளில் உட்கொள்ளும் உணவின் அளவேதான் உட்கொள்கின்றனர். [எதியோப்பியா தெரியுமல்லவா?]. அதாவது பஞ்சத்தில் அடிப்பட்ட மக்கள்.
- கிராம-நகர இடைவெளி கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது

- தனியார் நிறுவனங்களின் (படிக்க: பன்னாட்டு நிறுவனங்களின்) முதலாளிகள் ஒரு பிரதமரை விட அதிக ஆளுமையுடன் இருக்கிறார்கள்.

- பாஜகவின் இந்து தேசியவாதம், குஜராத் கொலையாட்டம். அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு இதுவரை யாருக்கும் தண்டனை கிடைக்காதது
- ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து வலதுசாரி அமைப்புகள் மிக ஆழமாக தங்கள் அமைப்புகளை நிலைநிறுத்தி அதன்மூலம் தங்கள் கொள்கைகளைப் பரப்புவது
- அரசுசாரா அமைப்புகள் (NGOs) அரசுகளைச் சாராமல் அரசு கொடுக்கும் கையூட்டை வாங்கிக் கொள்ள அரசியலிருந்து விலகியிருப்பது தவறு.
- இந்து தேசியவாதம், நியோ-லிபரலிஸம் ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். அதற்கு நாடு முழுதும் கிராமப்புறங்களில் உள்ள அடிவேர் அமைப்புகள் சேர்ந்து உழைக்க வேண்டும்.

- ஏழைகளுக்கு ஆதரவான அரசியல் கட்சி, ஏழையாகவே இருக்கும். இடதுசாரிகள் தங்களுக்குள்ளேயே குழம்பிப்போய் இருக்கிறார்கள். அவர்களால் இப்பொழுதைக்கு ஒரு பிரயோசனமும் இல்லை.
- இந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் எதிரான கருத்துள்ளவர்கள் இன்று அரசியலில் ஈடுபட முடியாது. இதற்கு அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. போரை நிகழ்த்த பலமான பின்னணி வேண்டும். பலம் குறைந்த நிலையில் போராட முடியாது. ஓரிரண்டு சமூக சேவகர்களை பாராளுமன்றத்தில் வைப்பதில் எந்த உபயோகமும் இல்லை.
- மாற்றம் நிச்சயம் வரும். அது கையில் ஆயுதம் ஏந்தி, இரத்தத்தைச் சிந்த வைக்கும் போராகவும் இருக்கலாம், அல்லது அஹிம்சை வழியிலும் இருக்கலாம். எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நாம்தான்.


மேற்சொன்ன அரசு/அரசியந்திரம் அடக்குமுறைகள் மீது எனக்கு வேற்றுக் கருத்துகள் இல்லை. அருந்ததி ராய் இப்பொழுதுள்ள பிரச்சினைகளை மிக அழகாக விளக்குகிறார். இன்னமும் அதிகம் உழைத்து மாற்றுக் கருத்துகள், மாற்று அரசியலமைப்புகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

ஆனால் எனது பொருளாதாரச் சிந்தனைகள் நியோ-லிபரல் சிந்தனைகளே, அல்லது அதற்கு மிக அருகாமையில் வரும் சிந்தனைகளே. அதில் நான் அருந்ததி ராயுடன் வேறுபடுகிறேன்.

Thursday, April 22, 2004

இந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1

இப்பொழுது நடப்பது இந்தியப் பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்றங்களால் தொடமுடியாத, பாராளுமன்றத்தால் மட்டுமே தொடக்கூடிய ஒரு துறை - அயலுறவுத்துறை.

அயலுறவை எடுத்துக்கொண்டால் நமக்கு எதெல்லாம் முக்கியம்?

1. பாகிஸ்தானுடனான உறவு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை
2. நம்மைச் சுற்றியிருக்கும் மற்ற அண்டை நாடுகள் - நேபாள், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள் - அதாவது சார்க் நாடுகளுடனான உறவு
3. சீனாவுடனான உறவு, சிக்கிம், திபேத், அருணாசலப் பிரதேசம் பற்றிய பிரச்சினைகள்
4. மற்ற கிழக்காசிய நாடுகளுடனான உறவுகள் - சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து - முக்கியமாக இந்தியாவிலிருந்து இந்நாடுகளுக்கு வேலை செய்ய வருபவர்களின் உரிமைகள்
5. மற்ற ஆசிய நாடுகளுடனான உறவுகள் - முக்கியமாக ஆஃப்கானிஸ்தான், வளைகுடா எண்ணெய் வள நாடுகள், இராக், இரான், மத்திய ஆசிய நாடுகள் (சோவியத் குடியரசிலிருந்து பிரிந்த நாடுகளான கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்றவை)
6. ரஷ்யாவுடனான உறவு, ரஷ்யாவின் செச்னியா பற்றிய நிலைப்பாடு
7. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான (ஐரோப்பிய பொதுச்சந்தை) உறவு
8. மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவு
9. அமெரிக்காவுடனான உறவு, அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் பற்றிய நமது கருத்துகள்
10. ஜப்பானுடனான உறவு
11. இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருக்கும் நாடுகளுடனான உறவு (கனடா, தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து இன்ன பிற)
12. மற்ற அனைத்து நாடுகளும்

ஆனால் முக்கியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன பேசுகின்றன?

பாஜகவின் தேர்தல் அறிக்கை | காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிய தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிச் சொல்வதை "DEFENCE, NATIONAL SECURITY AND FOREIGN POLICY" என்னும் தலைப்பில் பேசுகிறது. அதாவது வெளியுறவுக் கொள்கையை, நாட்டின் பாதுகாப்புடன் மட்டுமே இணைத்துப் பார்க்கும் பழைய போக்கே அதில் தென்படுகிறது. இன்றைய தேதியில் வெளியுறவுக் கொள்கை என்பது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் பரஸ்பர நட்பு பற்றியதே முதன்மை வகிக்க வேண்டும் இந்தக் காலத்தில்.

காங்கிரஸ் மொத்தமாக பெயர் சொல்லி நான்கு நாடுகளையும் (பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்), பொதுவாக ஐந்து பிரதேசங்களையும் (சார்க், கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம், அணிசேரா நாடுகள்) சொல்லி கதையை முடித்து விடுகிறது. அணிசேரா நாடுகள் என்னும் அமைப்பு எப்பொழுதோ காலாவதியாகி விட்டது என்பதை அறியவில்லை இவர்கள். இலங்கை என்னும் நாடு பற்றி முழுவதுமாக மறந்து விட்டார்கள் காங்கிரஸார். தமிழர்கள்-சிங்களவர்கள் பிரச்சினையில் தங்கள் நிலை என்ன, அமைதிப் பேச்சு வார்த்தையில் எந்த விதத்தில் ஈடுபடப் போகிறோம் என்று ஒரு பேச்சைக் காணோம். சீனா பற்றி சொல்லிக் கொள்ள கான்கிரஸுக்கு ஒரு விஷயமும் இல்லை போல.

பாஜக தன் வெளியுறவுக் கொள்கைக்கு அழகான பெயர் மட்டும் கொடுத்துள்ளது: "India and the World". சற்றே விரிவாக இன்னமும் பத்து நாடுகளின் பெயர்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தானுக்குப் பிறகு வெறும் சார்க்தான். இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு பேச்சுமில்லை. பங்களாதேஷ், நேபாள், ஆஃப்கானிஸ்தான் என்று ஒன்றும் இல்லை. மற்றபடு மொழுக்கென்று எல்லோருடனும் நட்பை வளர்க்கப் போகிறோம் என்றுதான் சொல்கிறார்கள்.

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் என்றுமே சரியான உறவு வைத்துக்கொண்டிருந்ததில்லை.

1. பாகிஸ்தான்: நம் அனைவருக்கும் தெரிந்ததே பாகிஸ்தானுடனான உறவு. பாகிஸ்தான், காஷ்மீர், தீவிரவாதம் பற்றிய விஷயங்களில் கூட வாக்காளர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு அவர்களுடன் எந்தவிதமான உரையாடலையும் வைத்துக்கொள்ளவில்லை இரண்டு கட்சிகளும். காங்கிரஸ் இன்னமும் 1972 சிம்லா ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. பாஜக இஸ்லாமாபாதில் பெப்ரவரி 2004இல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் வெளிப்படையாக காஷ்மீரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லவில்லை.

2. சீனா: இப்பொழுதுதான் உறவு ஓரளவுக்கு சரியாகி வருகிறது. ஆனாலும் எவ்வாறு மேற்கொண்டு இந்த உறவுகளை மேம்படுத்தப் போகிறோம் என்ற பேச்சில்லை. காங்கிரஸ் அறிக்கையில் அயலுறவுக் கொள்கை பற்றிப் பேசும்போது சீனா என்ற சொல்லே வருவதில்லை!

3. இலங்கை: அப்படியொரு நாடு இருப்பதாகவே இரு கட்சிகளுமே காட்டிக்கொள்ளவில்லை. எங்கிருந்தோ வந்து நார்வே தூதுக்குழு இலங்கையில் அமைதி காண முயலுகிறது. ரணில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமரதுங்கே இருவருமே இந்திய அரசுடன் இலங்கை பற்றி பேசுகிறார்கள். விடுதலைப் புலிகளும் இந்தியா அமைதிப் பேச்சில் ஈடுபட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் இரு முக்கிய கட்சிகள் இலங்கை பற்றி ஒரு வரி கூட தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. பொதுவாக 'சார்க்' என்று வருகிறது - அவ்வளவே. தமிழகக் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டும் கூட இலங்கைப் பிரச்சினை, அமைதிப் பேச்சுவார்த்தை ஆகியவை பற்றி ஒரு வரி கூட குறிப்பிடாமல் விட்டது சோகம்தான். மதிமுகவின் தேர்தல் அறிக்கை எனக்குக் கிடைக்கவில்லை. (அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையும், இலங்கை மீனவர்களும் கடத்திச் செல்வது பற்றியும், முரசொலி மாறன் "சொந்த லாபத்திற்காக" இலங்கையிலிருந்து தேயிலையைக் குறைந்த விலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதித்ததையும் பற்றி வரும்போதுதான் இலங்கை என்ற சொல்லே அடிபடுகிறது.)

(தொடரும்)

Monday, April 19, 2004

சுகமான வார இறுதி

கிரிக்கெட் முடிவு பெறவும், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் ஆனந்தமாய்க் கழிந்தன.

குழந்தைகளுடன் நான்


சனி காலை சுமார் 10 சிறுவர், சிறுமிகளுக்கு இணையம் பற்றியும், தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடகங்களுக்கும் இணையம் வழியாக செய்திகளை/கேளிக்கைகளை பரப்புவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் விளக்கினேன். இது ஒரு கோடைகால விடுமுறைக் குழாம். பங்கு பெற்றவர்களின் வயது 8-12 இருக்கும். மிகவும் சூட்டிகையான சிறுவர்கள். இவர்களுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் வெகு அதிகம்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏன் பள்ளிச்சிறுவர்களுடன் ஊடாடுவதை அதிகம் விரும்புகிறார் என்று இப்பொழுது தெரிகிறது. இதுபோல் இன்னமும் பல சிறுவர்களுடன் தொடர்ச்சியாகப் பேச வேண்டும்.

சனி மாலை Something's Gotta Give படம் பார்த்தேன். நல்ல சுவாரசியமான படம். பிறகு எழுதுகிறேன்.

ஞாயிறு காலை தமிழ்நாடு சிறுமுதலீட்டாளர்கள் சங்கக் கூட்டம்.

மாலை மியூசிக் அகாடெமியில் CRY பணம் சேர்ப்பதற்காக நடத்திய பால் தால் என்றொரு இசைக் கச்சேரி. உஸ்தாத் ஸாகிர் ஹுசேன், அவரது சகோதரர் ஃபஸல் குரேஷி இருவரும் தபலா. மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ராஜேஷ் சகோதரர்கள், செல்வ கணேஷ் கஞ்சிரா, ரஞ்சித் பாரோத் டிரம்ஸ். மிக அருமையாக இருந்தது. டிக்கெட் விலை அதிகம்தான். அதனால்தானோ என்னவோ அரங்கம் முழுமையும் நிரம்பவில்லை. அரங்கை விட்டு வெளியேறுகையில் கச்சேரி இன்னமும் மூன்று மணிநேரங்களுக்குத் தொடர்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது.

சில நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கும் மா.வே.சிவகுமாரின் 'வாத்தியார்' சிறுகதைத் தொகுதியினைப் படித்து முடித்தேன். எளிய நடை, உள்ளடங்கிய நகைச்சுவை. நாகூர் ரூமியின் இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம் என்னும் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். ரூமியின் புத்தகம் தமிழில் இஸ்லாம் பற்றி வந்துள்ள மிக முக்கியமான ஒரு புத்தகம் என்று தோன்றுகிறது. மிகச் சரளமான நடை. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். [Disclosure: மேற்சொன்ன இரண்டு புத்தகங்களும் 'கிழக்கு பதிப்பகம்' மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் எனக்கு பெரும்பான்மைப் பங்கு உள்ளது. இந்தப் புத்தகங்களைப் பிறர் வாங்குவதன் மூலம் எனக்கு நேரடி லாபம் கிடைக்கும்.]

பாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி

பாகிஸ்தானில் என்னை மிகவும் கவர்ந்தது கழுதை இழுக்கும் வண்டிகள். நான் அங்கு சுற்றியவரை (இஸ்லாமாபாத், லாஹூர், ராவல்பிண்டி, ஹாரப்பா) கண்ணில் பட்டதெல்லாம் மாடுகளோ, குதிரைகளோ இழுக்கும் வண்டிகளல்ல, ஆனால் கழுதைகள் இழுக்கும் வண்டிகளே. அங்குள்ள கிராம வாசிகள், உழவர்கள் (அதாவது மோட்டார் வண்டி வைத்துக் கொள்ள முடியாதவர்கள் என்று வைத்துக் கொள்வோமே?) அனைவரும் வைத்திருந்தது இந்தக் கழுதை வண்டிகளே.

கழுதை வண்டிஇந்தக் கழுதைகள் நம்மூர் சலவைத் தொழிலாளர்கள் அல்லது பல வருடத்திற்கு முந்தைய உப்பு வாணிகர் வைத்திருக்கும் கழுதைகளைப் போலில்லை. பைபிளில் சொல்லப்படும் கோவேறு கழுதைகள் (கழுதை-குதிரை என்றும் சொல்லப்பட்டிருக்கும்) போல என்று நினைக்கிறேன். நான் படமெடுத்த போது இருட்டத் துவங்கியிருந்தது. அதனால் எனக்கு சுமாரான படம்தான் கிடைத்துள்ளது. வண்டியின் சக்கரங்கள் ரப்பர் டயரால் ஆனவை. அதிக சுமையைத் தாங்கி இழுக்கிறது. நல்ல திறனான வண்டிகள் என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் இதுபோன்ற கழுதை வண்டிகள் உண்டா என்று தெரியவில்லை. நிச்சயம் தமிழகத்தில் கிடையாது.

நான் ஐஐடி சென்னையில் மெக்கானிகல் எஞ்சினியரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது பிராஜெக்ட் என்ன செய்யலாம் என்று சில பேராசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ராம் மோஹன் ராவ் என்றொரு பேராசிரியர் இருந்தார். ஜனதா தளம் மத்தியில் ஆட்சியிலும், தேவிலால் துணைப் பிரதமராகவும் இருந்த நேரம் அது. தேவிலாலுடைய விவசாய அமைச்சரகம் கிராமப்புறத்தில் விவசாய மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செய்யப்படும் மாணவத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதாகச் சொல்லியிருந்தது. என் பேராசிரியர் மாட்டு வண்டிகளை எப்படி மாற்றியமைக்கலாம், நல்ல தரமான அடி பம்புகளை எப்படி உருவாக்கலாம் போன்ற திட்டங்களைப் பற்றிப் பேசினார். (ஆனால் அமெரிக்கா போகவேண்டுமானால்) இதுபோன்ற திட்டங்கள் கவர்ச்சியாக இல்லை என்று அவற்றை நிராகரித்து விட்டு 'A Graphical Approach to Optimization of Non-linear Functions' என்று ஏதோ கதையடித்து ஒருவருக்கும் உபயோகமில்லாத வேலையைச் செய்து ஒப்பேற்றினேன்.

இன்றைய தேவை இப்பொழுது உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் கிராமப்புறங்களில் நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே. குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 'PURA - Providing Urban facilities in Rural Areas' திட்டத்தை நிறைவேற்ற பொறியியல் துறை மாணவர்கள் அதிகமாக முன்வர வேண்டும்.

பாகிஸ்தான் கதைகள் 1 - அலங்கார லாரி

Friday, April 16, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில்.

இதுவரை எழுதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் இங்கே.

ராஹுல் "The Wall" திராவிட்

ஊரெங்கும் திராவிட் பற்றிய பேச்சுதான். தி எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றில் ராஹுல் திராவிடுக்கு 'The Wall' என்று யார் பெயர் கொடுத்தது என்று தேடிக் கண்டுபிடித்துள்ளார்கள்.

ரீபாக் ஷூ நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பரத்தில் அசாருத்தீன், கும்ப்ளே, ஸ்ரீநாத், திராவிட் ஆகியோருக்காக லியோ பர்னெட் என்னும் விளம்பர நிறுவனம் குறிப்பெயர்களை உருவாக்கினராம். நிமா நாம்ச்சு, நிதின் பெர்ரி ஆகியோர் உருவாக்கிய பெயர்கள் முறையே:

அசாருத்தீன் - The Assassin
கும்ப்ளே - The Viper
திராவிட் - The Wall

பின்னர் கும்ப்ளே 'The Smiling Assassin' என்றழைக்கப்பட்டார். டெண்டுல்கருக்கு யாரும் உருப்படியாக ஒரு பெயரும் கொடுக்கவில்லை. மற்ற வீரர்களுக்குக் கொடுத்துள்ள பெயர்களும் நிலைக்கவில்லை. கங்குலிக்கு 'The Prince of Kolkotta' என்னும் பெயர் அர்த்தமற்றது.

'The Wall' மட்டும் தொடர்கிறது.

இன்று அலுவலகம் வரும் வழியில் ரேடியோ மிர்ச்சியில் திராவிட் டெண்டுல்கரின் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டாரா என்ற கேள்விக்கு பலர் வழிசலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். "டெண்டுல்கர் நிலா, திராவிட் வெறும் நட்சத்திரம்தான்" என்றெல்லாம் ஒரு பெண் கவிதை பாடினார்.

Thursday, April 15, 2004

ஓட்டு வாங்க கிரிக்கெட் மட்டை

கடந்த இரு தினங்களாக இளம் வாக்காளர்களை மயக்க வேட்பாளர்கள் கிரிக்கெட் மட்டைகளையும் இதர சாதனங்களையும் லஞ்சமாகத் தருவதாகப் படித்தேன்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் பின்புறமாக சாக்குப்பையுடன் வரவேண்டுமாம். வெளியே தெரிந்து விடக்கூடாது அல்லவா!

ஆந்திராவிலும் இதே தொல்லையாம். அங்கு தெலுகு தேசம் வேட்பாளர்கள் கிரிக்கெட்டையும் தேர்தலையும் வெவ்வேறு நேரத்தில் வைத்திருக்கக் கூடாதா என்று புலம்புகிறார்களாம்.

இதுநாள் வரை பிரியாணி, சேலை (லால்ஜி டாண்டன் லக்னோவில் சேலை தருகிறேன் என்று சொல்லி 20 பேருக்கு மேல் சொர்க்கத்துக்கு அனுப்பி விட்டார்), சாராயம் என்று அழ வேண்டி வந்தது. இப்பொழுதோ பலருக்கு ரூ. 2,500-3,000 சமாச்சாரமாக அழ வேண்டியுள்ளது.

18 வயது இளைஞர்களுக்கு கிரிக்கெட் சாதனங்கள் என்றால், 18 வயது நிரம்பிய பெண்களுக்கு என்ன லஞ்சம் கொடுப்பது? தாலிக்குத் தங்கம் என்றெல்லாம் முன்னால் செய்தாகி விட்டது. யாருக்காவது நல்ல யோசனை இருந்தால் சொல்லவும்.

Wednesday, April 14, 2004

தமிழ்ப் புத்தாண்டு

ஏன் தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் உள்ளன?

பல நாட்களாக எனக்கிருக்கும் கேள்வி இது. யாருக்காவது விடை தெரியுமா?

பாலாஜியின் சிரிப்பும், கருப்பும்

லக்ஷ்மிபதி பாலாஜி பாகிஸ்தானியர்களின் உள்ளங்கவர் கள்வனாகி விட்டாராம். ஏனென்றால் தெரியாது என்கிறார். எங்கு போனாலும் 'பாலாஜி, தீரே சே சல்னா' என்று பாடுகிறார்களாம் பாகிஸ்தானிகள்.

வெட்கத்தோடு ஒருவேளை தனது கருப்பு வண்ணம்தான் தன்னை அவர்களுக்குப் பிடிக்கும் காரணமோ என்கிறார் பாலாஜி. கருமையைக் காயும் தமிழர்கள் இனியாவது கருமையின் சிறப்பை உணர்வார்களாக. Fair & Lovely போன்ற களிம்புகளைப் பூசுவதை இனியாவது நிறுத்துவார்களாக.

கருப்பு பாலாஜி எப்பொழுதும் முகத்தை சிரித்தவாறு வைத்திருப்பதே அவரை அனைவருக்கும் பிடிக்கும் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது பந்தை நான்கடித்தாலும், ஆறடித்தாலும், அவரது பந்தில் கேட்ச் விடுபட்டுப்போனாலும் அவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறுவதில்லை.

Tuesday, April 13, 2004

லாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்

பிரையன் லாரா நேற்று 400 ரன்கள் அடித்து கிரிக்கெட் டெஸ்டு போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார். தொலைக்காட்சியில் இதைப் பார்த்த எனக்கு ஏனோ மனநிறைவு இல்லை. கடைசி ஐம்பது ஓட்டங்கள் ஏனோதானோவென்று இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது.

போகட்டும். 400ஐத் தொட முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. மாத்தியூ ஹெய்டன் தொட்டுவிடுவாரோ என்றிருந்தது நடக்காமல் போனது.

டான் பிராட்மேனுக்குப் பிறகு இரண்டு முச்சதங்கள் அடித்த ஆசாமி லாராதான். (அடுத்த ஆசாமியாகப்போகிறவர் விரேந்தர் சேவாக் என்று பட்சி சொல்கிறது:-)

இப்பொழுது மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இந்த டெஸ்டை வெல்ல முடியுமா என்று பார்ப்போம்.

என்னதான் நாநூறு அடித்தார் ஒருவர் என்றாலும் ஆண்டிகுவாவின் பிரதமர் ஆடுகளத்தின் உள்ளே பிரவேசித்து லாராவை கட்டித் தழுவி 'ஷோ' காட்டியிருக்க வேண்டாம்! பார்க்க அசிங்கமாக இருந்தது. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கூத்துகள் நடக்காது. யோசித்துப் பாருங்களேன்? வேறெந்த விளையாட்டிலும், வேறெந்த நாட்டிலும் உலக சாதனை நடக்கும் போது நாட்டின் பிரதமரோ, பெரிய ஆட்களோ பாதி ஆட்டத்தில் ஓடிவந்து கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறார்களா என்ன?

நடுவர்கள் டாரைல் ஹேர், அலீம் தர் இருவரும் ஐசிசியிடம் இது பற்றி புகார் செய்ய வேண்டும்.

Sunday, April 11, 2004

ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு

ரஜினி இன்று பத்திரிகை நிருபர்களை சந்தித்துப் பேசியது விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ரஜினி ஏற்கனவே எழுதிவைத்த அறிக்கையைப் படித்தார். படிக்கும்போது நிறையப் பிசிறல் இருந்தது. படித்து முடித்ததும், பத்திரிகையாளர்களிடம் வேறு ஏதும் பேசாமல், வேறெந்தக் கேள்விகளுக்கும் விடை கொடுக்காமல் கிளம்பி விட்டார். அவன் சொன்னதின் சாரம்:

* பாமகவின் ராமதாஸ் பாபா படத்தில் நான் பீடி குடித்தது போல வந்த காட்சிகளை எதிர்த்தார். அவர் என்னைவிட வயதில் பெரியவர். என்னை நேரடியாக வந்து சந்தித்திருக்க வேண்டியதில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்மாதிரியான காட்சிகளை நீக்கிவிடுமாறு சொல்லியிருந்தால், நான் முடிந்தால் நீக்கியிருப்பேன், அல்லது அடுத்த படத்தில் வராதமாதிரி செய்திருப்பேன். ஆனால் அதைச் செய்யாமல் அவரது அடியாட்கள் மூலமாக சினிமா திரைகளைக் கிழித்தார், திரைப்பெட்டிகளை, திரைப்பட அரங்குகளின் அதிபர்களைக் கடத்தினார். பல்லாயிரக்கணக்கான பணம் நஷ்டமாகுமாறு செய்தார்.

* என் ரசிகர்கள் வெகுண்டு எழுந்தனர். ஆனால் நான் அவர்களை அமைதியோடு இருக்குமாரு சொன்னேன். நான் அவர் வழிக்கு வந்ததில்லை. பின்னர் சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் என்னை 'சேற்றில் உழலும் பன்றி' என்று தரக்குறைவாகப் பேசினார்.

* என்னை தனிமனிதனாக அவர் விமரிசனம் செய்ததற்காக நான் அவரை எதிர்க்கவில்லை. அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு: (1) ஊழல், (2) வன்முறை. ராமதாஸ் வன்முறையைப் பிரதிபலிப்பவர். அதனால்தான் என் ரசிகர்களின் கருத்துக்கிணங்கி இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்ய ஒப்புதல் கொடுத்தேன். இதனால் என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் வந்தது. என் ரசிகர் மன்றத்தவர்களை காவல் துறையினரால் எப்பொழுதும் காப்பாற்ற முடியாது என்பதால் அஇஅதிமுக/பாஜக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு சொன்னேன். அப்படிச் செய்தால் இந்தக் கட்சியினர் என் ரசிகர் மன்ற ஆட்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன்.

* ஜனநாயக முறைப்படி மதுரையில் ராமதாஸுக்கு கறுப்புக்கொடி காட்ட முனைந்த என் ரசிகர்களை கொலைவெறியோடு தாக்கினர் பாமகவினர். ராமதாஸ் மீது கொலை வழக்கு போட்டிருக்கும் தமிழகக் காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் என் நன்றிகள். மதுரை மட்டுமல்ல, நாளை சென்னை, மும்பை, தில்லி, கோலா லம்பூர், ஏன் ஜப்பான் இங்கெல்லாம் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக்கொடு காட்டினால் என்ன செய்வீர்கள்? அங்கும் ஆட்களை ஏற்பாடு செய்து அவர்களை அடித்து நொறுக்குவீர்களா?

* ராமதாஸை இதற்கு மேல் விமரிசிக்க நான் விரும்பவில்லை. அவர் என் நண்பர்களிடம் தஞ்சம் அடைந்து விட்டார்.

* நான் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. இது பாராளுமன்றத் தேர்தல். நாடு முழுதும் சுற்றிப்பார்த்ததில் எனக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் உள்ள தே.ஜ.கூ வே ஆட்சிக்கு வரும் என்று தோன்றியது. மேலும் இப்பொழுதைக்கு தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினை. நம் மாநிலத்தைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் வற்றாத ஜீவநதிகள் உண்டு. நம் மாநிலத்தில் மட்டும்தான் இப்படி ஒரு நதியும் கிடையாது. இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி இந்திய நதிகளை ஒன்றிணைப்பது மட்டுமே. அப்படி இணைக்காவிட்டால் அதிகமாக பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டுமே. அதனால் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நான் ஒத்துக்கொண்டேன். பாஜக மட்டும்தான் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேசியுள்ளது. துணைப்பிரதமர் அத்வானியும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நதிநீர் இணைப்பை தன் கட்சி/அரசு செய்தே தீரும் என்று உறுதி கொடுத்துள்ளார். எனவே என் தனிப்பட்ட வாக்கு பாஜகவுக்கே.

* இதனால் என் ரசிகர்கள் அனைவரையும் பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. என் ரசிகர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஆனால் வாக்களிக்கப் போகும்போது அவர்களை நான் கேட்டுக்கொள்வது - "சிந்தியுங்கள்" என்பதே. உங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களிப்பீர்களா அல்லது நம் மாநிலத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உறுதியளிக்கும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா...?

* இந்தத் தேர்தலில் பாமக தோற்றால், நாம் வென்றதாகக் கருதக்கூடாது. பாமக வென்றால் நாம் தோற்றதாகக் கருதக்கூடாது. நம்முடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் வெளிக்காட்டுவதே இந்த முயற்சி. இனி நம் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விட்டு ஜனநாயக முறையில் வாக்குச் சாவடியில் எதிர்ப்பைக் காட்டட்டும்.

[முழு அறிக்கையும் இங்கு கிடைக்கிறது - நன்றி லாவண்யா.]

ஆக ரஜினி இப்பொழுதைக்கு சொல்வது:
1. பாமகவை எதிர்க்கிறேன் - என்னை நேரடியாக விமரிசனம் செய்ததால் அல்ல, ஆனால் அரசியலில் வன்முறையைப் பிரதிபலிப்பதால்.
2. பாஜகவை ஆதரிக்கிறேன் - தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமான நதிநீர் இணைப்புத் திட்டத்தை ஆதரிப்பதால்.
3. அஇஅதிமுகவை பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் ஆதரிக்கிறேன்.
4. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என் 'அமைப்பின்' ஆதரவில்லை. (!!)
5. திமுக, ப.சிதம்பரம் போன்றோர் இன்னமும் என் நண்பர்கள்.

எதிர்பார்த்த மாதிரியே சன் டிவி தன்னுடைய தலைப்புச் செய்திகளில் தேவையானவற்றை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மீதியை வெட்டி விட்டது. சன் டிவி செய்தி:

"எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை - ரஜினி."
"பாமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்ப்போம்"
"இனி என் ரசிகர்கள் ராமதாஸை எதிர்த்து கறுப்புக்கொடி காட்ட மாட்டார்கள்."

பாகிஸ்தான் கதைகள் - 1

பாகிஸ்தானில் லாரிகள், ஆட்டோக்கள் ... ஏன், மோடார் பைக்குகள், சைக்கிள்கள் என்று எந்த வண்டியானாலும் ஒருவித அதீத அலங்காரம் இருக்கும். முதலில் பார்த்த போது ஓரிரு லாரிகளுக்கே இம்மாதிரியான அலங்காரம் இருக்கும் என்று நினைத்தேன். பின்னர் தெருவில் ஓடும் அனைத்து லாரிகளும் இப்படித்தான் என்று தெரிந்தது.

பாகிஸ்தான் அலங்கார லாரி


ஹாரப்பா போகும் வழியில் குளிர்பானம் அருந்த ஒரு கடையில் நின்றோம். அங்கு சில அலங்கார லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு வண்டியின் ஓட்டுநர் எங்களைப் பார்த்ததும் இந்தியர்கள் என்று தெரிந்து கொண்டார். எங்களிடம் வந்து பேசத் தொடங்கினார்.

(உருதுவில்) "போதும் இந்தச் சண்டைகள்... துப்பாக்கியும், தோட்டாவும் வேண்டாமே... வேண்டியதெல்லாம் அன்பும், காதலுமே" (प्यार और मोहबत)

(உடைந்த அரைகுறை ஹிந்தியில்) "ஆமாம். நீங்கள் சொல்வது சரியே..."

"ஆனால் ஏன் உங்கள் நாட்டில் முஸ்லிம்களைக் கொல்கிறீர்கள்? அவர்களைக் கொல்லாதீர்கள்..., பாவம்...."

அவரது விசனத்தில் பாகிஸ்தானில் இந்தியாவைப் பற்றிய எப்படியான கண்ணோட்டம் பரவியிருக்கிறது என்று புரிந்தது. குஜராத் கொடுமைகள் மூலம் 'இந்தியா ஒளிர்கிறது'. ஆனாலும் அந்த லாரி டிரைவரிடம் அரைகுறை மொழியில் நிலைமையை விளக்க ஆரம்பித்தோம். அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவரும் அவசரமாக வந்து (நாட்டின்) விருந்தினர்களைத் தொல்லைபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும், நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

மாலனின் தேர்தல் 2004

மாலன் தேர்தல் 2004 பற்றிய கருத்துக்களை கடித வடிவில் வலைப்பதிவிடுகிறார்.

பயனுள்ளது.

Thursday, April 08, 2004

பாகிஸ்தான் அணி வெற்றி

நான் லாஹூர் வந்த வேளை, இந்தியாவிற்கு நல்லதில்லை போல. இரண்டு மணிநேரங்களுக்கு முன்னர் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இடையில் ஹாரப்பா சென்றபின், நேற்று இஸ்லாமாபாத், தக்ஷசீலம் சென்றேன். நிறைய படங்கள் எடுத்துள்ளேன். ஆனால் இங்கு இணைய இணைப்பு படுமோசம். அதனால் சென்னை வந்தபின்னர்தான் அதெல்லாம்.

இன்று மாலை வாகா எல்லைக்குப் போகலாம் என்ற எண்ணம்.

Tuesday, April 06, 2004

லாஹூர் டெஸ்ட் முதல் நாள்

அவசர அவசரமான பதிவு இது.

* ஆடுகளத்தில் எவ்வளவு புல் இருக்கும் என்பதுதான் பெரிய கேள்வி. பாகிஸ்தான் அணியில் யாரெல்லாம் வெளியே போகப் போகிறார்கள் என்பது அடுத்த கேள்வி.

* மோயின் கான், சக்லைன் முஷ்டாக் இருவரும் நீக்கப்படுகிறார்கள். ஷப்பீர் அஹமதுக்கு காலில் ஏதோ சரியில்லை. அப்துர் ரஸாக் தானாகவே கழண்டு கொள்கிறார். கம்ரான் அக்மல், அசீம் கமால், உமர் குல், டேனிஷ் கனேரியா உள்ளே வருகின்றனர். இந்தியாவிற்கு அஜீத் அகர்கார், ஜாகீர் கானுக்கு பதில்.

* திராவிட் டாஸில் வென்று தைரியமாக பேட்டிங் என்கிறார்.

* ஆடுகளத்தில் புல் சிறிது இருந்தாலும், பிரவுன் வண்ணத்திலேயே இருக்கிறது. அவ்வளவு பச்சை இல்லை. ஒருநால் மட்டுமே பந்து எழும்பி வரும் என்று தோன்றுகிறது.

* மொஹம்மத் சாமி தன் முதல் ஓவரில் ஆகாஷ் சோப்ராவை வீழ்த்தினாலும் அடுத்து சோயப் அக்தரும், சாமியும் சுமாராகவே பந்து வீசுகின்றனர். சேவாக் தன் ஆட்டத்தை சிறிது குறைத்துக் கொண்டாலும் ஆஃப் திசையில் அகலம் கொடுத்தால் அக்தரை தர்ட்மேனுக்கு மேல் சிக்ஸ் அடிக்கிறார். ஓட்டங்கள் குவிகின்றன.

* உமர் குல் பந்து வீச வருகிறார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸை வீழ்த்தியவர்கள் பெஷாவர் ரிக்ஷாவை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்விக்கு வித்தியாசமான விட கிடைக்கிறது.

* மிகத் துல்லியமான பந்து வீச்சால் குல் ஓட்டங்களே கொடுப்பதில்லை. முதலில் சேவாக் விக்கெட் கீப்பருக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார். அடுத்து டெண்டுல்கர் உள்ளே வரும் பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். சிறிது ஏமாற்றம்தான். திராவிடும், லக்ஷ்மணும் விளையாடுவது மிகவும் திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. ஆனால் குல் பந்துவீச்சில் லக்ஷ்மண் விளிம்பில் தட்டி மீண்டும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கிறார். உணவு இடைவேளை 107/4.

* உணவு இடைவேளைக்குப் பின் திராவிடும், யுவ்ராஜ் சிங்கும் ஓட்டங்களை எடுக்கின்றனர். ஆனால் ஏமாற்றம் தரும் விதமாக திராவிட் தவறு செய்து முதல் ஸ்லிப்பிற்கு கேட்ச் கொடுக்கிறார். குல் நான்கு விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி இந்தியாவின் முதுகெலும்பை உடைக்கிறார். இத்துடன் நிற்பதில்லை. அடுத்து பார்திவ் படேல் ஷாட் எதுவும் விளையாடாமல் எல்.பி.டபிள்யூ ஆகிறார். குல் முதல் முறையாக ஐந்து விக்கெட் எடுக்கிறார். தரையைக் குனிந்து முத்தமிடுகிறார். அடுத்து 'ஆல்-ரவுண்டர்' எனப்படும் அகர்கார் வருகிறார். சிறிது தடவி விளையாடி ஷோயப் அக்தரின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட். அக்தருக்கு இந்தத் தொடரின் முதல் விக்கெட்.

* அதைத் தொடர்ந்து யுவ்ராஜும், இர்ஃபான் பதானும் மிக அற்புதமாக விளையாடுகின்றனர். இதற்கிடையில் குல் ஏதோ காயம் காரணமாக உள்ளே சென்று விடுகிறார். 12 ஓவரில் 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அக்தரும், சாமியும், கானேரியாவும் ஒன்றுக்கும் உதவாமல் பந்து வீசுகின்றனர். பதான் 49இல் கானேரியாவின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கிறார். ஒரு நிமிடம் அங்கேயே நிற்கிறார், வெளியே போகவே விருப்பமில்லாமல். யுவ்ராஜ் அருமையான சதம் அடிக்கிறார், கடைசியாக கானேரியாவை அரங்கை விட்டு வெளியே அடிக்கப் போய் டீப் மிட்விக்கெட் திசையில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழக்கிறார்.

* அரங்கில் 2000 பேர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

* இந்தியா பந்து வீச்சில் பதான் வெகுவாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிக்கொண்டிருக்கிறார். அகர்கார் பந்து வீச்சில் சிறப்பாக எதுவும் இல்லை. பாலாஜியின் ஒரு நல்ல பந்தில் தக்ஃபீக் உமர் நடு ஸ்டம்பை இழக்கிறார். மற்றபடி யாரும் விக்கெட் எடுப்பது போலவே வீசுவதில்லை. கும்ப்ளே நன்கு வீசுகிறார். இன்று இந்தியா கும்ப்ளேயையே வெகுவாக நம்பியிருக்கும்.

* பாகிஸ்தான் நிச்சயமாக முன்னணியில் உள்ளது.

Sunday, April 04, 2004

பாகிஸ்தான் பயணம்

நேற்று அதிகாலை சென்னையிலிருந்து கிளம்பி, புது தில்லி வந்து, மாலை 17.30க்கு லாஹூர் கிளம்பினோம்.

பாகிஸ்தான் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் எங்களோடு கூட பயணம் செய்தவர்கள் அனில் கும்ப்ளே (அவசர அவசரமாக பெங்களூர் வந்து தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்து விட்டு இரண்டாவது டெஸ்டுக்காக மீண்டும் லாஹூர் வருகிறார்), நான்கு இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்கள் (கிர்மானி, மோரே ஆகியோர்), இர்ஃபான் பதானின் பெற்றோர்கள், மற்றும் கிரிக்கெட் பார்க்க வருபவர்கள்.

அனில் கும்ப்ளே லாஹூர் இறங்கியதும்தான் தனது விசா 'single entry' என்று கவனித்தார், அதை போனமுறை அணியோடு உள்ளே வந்தபோதே உபயோகித்திருந்தார். அவசர அவசரமாக குடியேற்றத்துறை அதிகாரிகள் ஏதோ முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர். ஒருவழியாக அவரை மீண்டும் பாகிஸ்தானுக்குள் அனுமதித்திருப்பார்கள் என்று நம்புவோம்!

பாகிஸ்தானில் என் நண்பர்கள் விமான நிலையம் வந்திருந்தனர். புதிதாகக் கட்டப்பட்டுள்ள, அழுக்ககள் அற்ற விமான நிலையம், சிறியதாக இருந்தது. எங்கள் தங்கும் விடுதி கதாஃபி ஸ்டேடியம் மிக அருகில் இருக்கிறது. (ஐந்து நிமிடங்கள் நடை)

ஹோட்டல் மேனேஜர் 'welcome to home' என்று வரவேற்றார். சிலர் பல இடங்களில் எழுதியிருந்தது போல வரவேற்பு எங்கும் பிரமாதமாக இருந்தது.

நேற்றி இரவு ஒரு புத்தகக் கடை சென்றிருந்தோம். இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்.

'The clash of fundamentalisms - Crusades, Jihads and Modernity' - Tariq Ali, Verso, 2002
'How to think like Benjamin Graham and invest like Warren Buffett' - Lawrence A. Cunningham, McGraw Hill, 2001 (Hardbound)

இரண்டும் சேர்த்து பாக். ரூ. 290 க்கு(!!) என்றார் கடைக்காரர். புதிய புத்தகம், ஒரிஜினல் பேப்பர் - நிச்சயமாக pirated இல்லை. இந்தியரா என்று வினவினார். ஆம் என்றவுடன், வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 250க்கு என்றார்! தேநீர் அருந்துவீர்களா என்னுடன் என்றார். அப்பொழுதுதான் இரவு உணவு முடித்து சென்றிருந்தோம். மறுத்தவுடன், 'போத்தல்' (மது) அருந்துவீர்களா என்றார். திகைத்து நின்றோம். பிறகு நன்றி கூறி, மறுத்து விட்டு, மீண்டும் வரும் நாட்களில் சந்திப்போம் என்று கூறி விட்டு வெளியே வந்தோம்.

தெருவில் போக்குவரத்து மிக மோசமாக இருக்கிறது. பைக்கில் செல்லும் இளைஞர்கள் கன்னா-பின்னாவென்று ஓட்டுகிறார்கள். தெருக்களில் கார்கள் எங்கும் இடைவெளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

இன்னமும் அரை மணி நேரத்தில் ஹாரப்பா செல்கிறோம். நம் முன்னோர்கள் என்ன கட்டிடங்களை கட்டியிருந்தனர் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

Friday, April 02, 2004

தமிழோவியம் கட்டுரை

இந்த வாரம் தமிழோவியம் கிரிக்கெட் கட்டுரை.

முருகனின் மூன்று விரல்

இரா.முருகனின் அதி அற்புதமான இந்த நாவலின் விமரிசனத்தை மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு திண்ணையில் எழுதியுள்ளார். ஆங்காங்கே 'ஆ' காணாமல் போயுள்ளது. கவனமாகப் படிக்கவும்!

இரா.முருகனது படைப்புகளிலேயே இந்த நாவல்தான் நான் படித்த முதலாவது. இம்ம்மாதிரியான கதை சொல்லும் விதம், அதீத நகைச்சுவையுள் அமுங்கியிருக்கும் அதீத சோகம், மொழியின் சரளமும், ஈர்ப்பும் என்று என்னை மிகவும் கவர்ந்த நாவல்களின் முதலிடத்தைத் தொட்டது இந்நாவல்.

நான் எப்பொழுதோ எழுத ஆரம்பித்த விமரிசனம் இங்கே. பாதியிலேயே நிற்கிறது. இப்பொழுது ரெ.கா வின் விமரிசனம் இக்கதையை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.