ஜனவரி மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக் கடற்படை வீரர்களால் கொல்லப்பட்டார்கள் என்று மீனவர்கள் சொல்கின்றனர். இதில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், மற்றொருவர் கழுத்தில் சுருக்கிடப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டிலும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் செல்லும்போது இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் மிகச் சிறு சலசலப்பே ஏற்பட்டது. இந்திய வெளியுறவுத்துறைச் செயலரும் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதராக இருந்தவருமான நிருபமா ராவ் இன்று (திங்கள், 31 ஜனவரி 2011), இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இலங்கை செல்கிறார். இதற்கிடையே இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் வெளியுறவு அமைச்சகத்தால் அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் துயரம் பற்றி நான் எழுதிய கட்டுரை
நிருபமா ராவ் பற்றிய தி ஹிந்து செய்தி
இந்த விவகாரம் தமிழக மீனவர்களுக்கும் இலங்கையின் தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான ஒரு பிரச்னை என்பதுபோல செய்தி வழங்குகிறது தி ஹிந்து. பேராசிரியர் சூரியநாராயணனின் இந்தக் கட்டுரையும் அப்படியேதான் சொல்கிறது. இலங்கையிலிருந்து வரும் ஒரு பதிவும் இதைத்தான் முன்வைக்கிறது.
அதே நேரம் தாங்கள் இந்தப் படுகொலைகளைச் செய்யவே இல்லை என்று இலங்கைத் தரப்பு மறுக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சில மூன்றாம்தரக் கட்சிகள் இலங்கை-இந்திய உறவில் மண்ணைப் போடவே இப்படிச் செய்வதாக இந்தச் செய்தி கூறுகிறது.
இணையத் தமிழர்கள் இந்த விவகாரத்தை இப்படியே விடக்கூடாது என்பதில் மும்முரமாக உள்ளனர். முக்கியமான சில சுட்டிகள்:
ட்விட்டரில் இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக நடக்கும் விவாதம்
தமிழக மீனவர்களைக் காக்கவேண்டும் என்னும் வலைத்தளம்
இணையம் வழியாக இந்திய அரசுக்கு பெட்டிஷன்
இப்போது நமக்கு முன் இருக்கும் கேள்விகள் இவை:
1. இந்தியத் தமிழ் மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையில் இலங்கைக் கடற்படையினர் மட்டும் துப்பாக்கியைத் தூக்குவது ஏன்? இந்திய-பாகிஸ்தான் மீனவர்கள் இடையிலும் ஜூரிஸ்டிக்ஷன் பிரச்னைகள் உள்ளன. அங்கெல்லாம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்படும் நிலையில் இலங்கைக் கடற்படை மட்டும் கொலையில் ஈடுபடுவது ஏன்? அதுவும் மனிதாபிமானமற்ற முறையில், மிருகத்தனமாக கழுத்தில் சுருக்கிட்டு, ஆடைகளைக் களைந்து, வதைஇய்ல் ஈடுபடுவது ஏன்? இதனைத் தடுக்க இந்திய அரசு என்ன செய்துள்ளது? இந்திய மீனவர்கள்மீது கோபம் கொள்ளும் இலங்கை மீனவர்கள்கூட இந்தச் செயலை என்றும் நியாயப்படுத்த மாட்டார்கள்.
2. இலங்கைக் கடற்படை இந்தக் கொலைச் செயல்களில் ஈடுபடவில்லை என்று இலங்கைத் தரப்பு கூறுகிறது. அப்படியானால் யார் பொய் சொல்கிறார்கள்? தமிழக மீனவர்களா? இந்திய அரசு விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டுவரட்டுமே? ஜனவரியில் இரு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது நிஜம். அவர்களது பிணங்களே சாட்சி. அவர்களது பிணங்களுக்கு ஈடாக தமிழக அரசு கொடுத்துள்ள இழப்பீட்டுப் பணம் சாட்சி. அப்படியானால் இந்த மீனவர்களைக் கொன்றது யார்?
3. கடந்த முப்பது வருடத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாறாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் எந்த மீனவரும் கொல்லப்படவில்லை. ஒரு இலங்கை மீனவர்கூட இந்தக் காலகட்டத்தில் இந்தியக் கடற்படையால் கொல்லப்படவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? யார் பொய் சொல்கிறார்கள்?
4. நாடு கடந்து செல்லும் இந்தியர்கள் இன்னலில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு உதவத்தானே இந்தியத் தூதரகங்கள் உள்ளன? ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல், அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகத்தில் சிக்கிய இந்தியர்கள் படும் பாடு, எகிப்தில் நடக்கும் புரட்சியில் சிக்கியிருக்கும் இந்தியர்களைக் காத்தல் - ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடும் இந்திய அரசு, தமிழக மீனவர்களின் துயர் துடைக்க இதுவரை என்ன செய்துள்ளது? ஒரு ஆதரவான வார்த்தைகூடக் கிடையாதே? கடந்த வாரத்தில் இடிச்ச புளிபோலத்தானே மன்மோகன் சிங்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இருந்துள்ளனர்? தமிழகத்திலிருந்து சென்றுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமிருந்து ஒரு வார்த்தை வெளிவரவில்லையே? நடந்துகொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் பிரச்னை அவர்கள் கண்களில் படவேயில்லையா?
இந்தப் பிரச்னை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்?
1. நீங்கள் தமிழகக் கடலோர மாவட்டங்களில் வசித்தால், அங்குள்ள மீனவர் சமுதாயத்திடம் பேசி பிரச்னைகளைப் புரிந்துகொண்டு இணையத்தில் பதிவுகளைக் கொண்டுவாருங்கள். இவை எழுத்தாக, படங்களாக, வீடியோவாக இருக்கலாம்.
2. உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் இந்தப் பிரச்னையை எடுத்துச் சொல்லி, அவர்கள் இந்தச் சிக்கல் குறித்து ஒரு முடிவுக்கு வருமாறு செய்யுங்கள்.
3. ஊடகத்துறையில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் பேசி, இது குறித்து ஊடகங்களில் வரும் தகவல்கள் போதுமானவையாக இல்லை; அவை திருப்திகரமாகவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுமாறு செய்யுங்கள். ஊடகங்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்று அழுந்தச் சொல்லி உறைக்கவையுங்கள்.
4. அரசியல்வாதிகளிடம் தொடர்புள்ளவர்கள், உங்கள் அதிருப்தியைத் தெரிவியுங்கள். தேர்தல் வருகிறது என்றும், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதும், அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாதிருப்பதும் தேர்தல் பிரச்னை ஆக்கப்படும் என்றும் அரசியல்வாதிகள் தத்தம் கட்சிகளிடம் பேசி, இதற்குத் தக்க பதிலை வைத்திருக்குமாறும் அறிவுரை கூறுங்கள்.
5. இணையத்தில் இது தொடர்பாக நடத்தப்படும் கேம்பெய்னில் பங்குகொண்டு, உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள். உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.
[நேற்று சென்னை மெரினா கடற்கரையில் இது தொடர்பான ட்வீட்-அப் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபோது நடந்த விவாதத்தின் தொகுப்பு:
நான் ட்விட்டரில் எழுதியது
கும்மியின் வலைப்பதிவு]
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
10 hours ago