Saturday, June 30, 2007

USS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்

ஏதாவது போராட்டம் வேண்டும் என்று தேடி அலைபவர்கள் கையில் தானாகக் கிடைத்துள்ளது USS நிமிட்ஸ்.

நிமிட்ஸ் அணுசக்தியால் இயங்கும் கப்பல். கரி, பெட்ரோல், டீசல் என்று இல்லாமல் அணுக்கரு உலையால் தனக்குத் தேவையான மின்சாரத்தை, சக்தியை தயாரித்துக்கொள்ளும் கப்பல் இது.

அணுக்கரு உலை இருக்கும் இடம் என்றாலே அதனால் ஆபத்து என்பது தவறான கருத்து. அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு நியூட்ரான் கதிர்கள். அவற்றை உறிஞ்சும் விதத்தில் ஈய, கான்கிரீட் சுவர்கள் அணுக்கரு உலையைச் சுற்றி இருக்கும். மேலும் கதிர்வீச்சுக் குப்பையைப் போட சென்னை வருகிறது கப்பல் என்று பலர் சொல்கிறார்கள். குப்பையைப் போட பெருங்கடல் பகுதி அனைத்துமே உள்ளது. அதை விட்டுவிட்டு சென்னைவரை வந்து குப்பையைப் போடவா போகிறது இந்தக் கப்பல்?

இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து போர் சாகசங்கள் செய்யத் தொடங்கி வெகு நாள்கள் ஆகிவிட்டன. இந்தியா அமெரிக்க ஆயுதங்களை வாங்குகிறது. அமெரிக்க இந்திய ராணுவ உறவின் ஒரு கட்டமே அமெரிக்காவின் போர்க்கப்பல் இந்தியா வருவது. இந்த உறவே வேண்டாம் என்றால் அதைப்பற்றி விவாதிக்கவேண்டும். அமெரிக்கப் போர்விமானங்களை நாம் வாங்குவதைப் பற்றி விவாதிக்கவேண்டும். இதே கப்பல் அணுசக்திக் கப்பலாக இல்லாவிட்டால் பரவாயில்லையா?

அமெரிக்கக் கப்பல் சென்னைக் கரைக்கு வருவதால் இங்கு வசிக்கும் மக்கள் யாருக்கும் எந்தத் தொல்லையும் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

Thursday, June 28, 2007

பண உதவி தேவை: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு

திருப்பத்தூரை அடுத்த மிட்டூர் என்ற இடத்தில் சரவணன் என்பவரும் அவரது சில நண்பர்களும் 'மனம் மலரட்டும்' என்ற சமூக சேவை அமைப்பை நடத்திவருகிறார்கள். (இதைப்பற்றி முன்னர் சில பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.) அந்தப் பகுதிகளில் உள்ள வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொறியியல்/மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர பயிற்சி, பண உதவி ஆகியவற்றைச் செய்துவருகிறார்கள்.

மிட்டூர், பூங்குளம் பகுதிகளில் இருந்து மூன்று மாணவர்கள் (இரு ஆண், ஒரு பெண்) நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்புகள் உள்ளன. அவர்களது பெயர்:

1. சந்திரசேகர்
2. நவியரசன்
3. நூர்ஜெஹான்

இவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்.

ஒருவருக்கு காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டியிலும் மற்ற இருவருக்கு சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் அரசு கோட்டாவிலும் இடங்கள் கிடைக்கலாம். (முழு விவரம் எஞ்சினியரிங் கவுன்செலிங் முடிந்ததும்தான் தெரியவரும்.)

சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து நான்கு வருடங்கள் படிக்க, கல்விக் கட்டணம், ஹாஸ்டல் செலவு, பிற செலவுகள் என்று வருடம் ரூ. 75,000 ஆகும். மொத்தமாக ரூ. 3 லட்சம்.

கிண்டி கல்லூரியில் படிக்க ஆகும் செலவு சற்றுக் குறையலாம்.

பணம் கொடுத்து உதவ விரும்புபவர்கள் சரவணனை அல்லது ஸ்டாலினைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சரவணன் மின்னஞ்சல்: manam.malarattum@gmail.com
தொலைப்பேசி எண்: 0416-3208797
மொபைல் எண்: 94864-37227 (இந்த எண் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் வேலை செய்யும்)

ஸ்டாலின்: 98949-60335

Saturday, June 23, 2007

வரம் ஆன்மிக சொற்பொழிவுகள்

சென்ற வாரம் தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6.00 முதல் 7.00 வரை வரம் வெளியீடு, ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இன்று 'அழகிக்கு ஆயிரம் நாமங்கள்' (லலிதா சஹஸ்ரநாமம்) என்ற தலைப்பில் பருத்தியூர் சந்தானராமன், ஹேமா சந்தானராமன் தம்பதியினர் உரை நிகழ்த்துவார்கள்.

இடம்: வித்லோகா புத்தகக்கடை, 238, ராயப்பேட்டை ஹை ரோட் (பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாணமண்டபம் அருகில்), சென்னை 600004

நேரம்: மாலை 6.00 - 7.00

நாள்: 23 ஜூன் 2007

சென்ற வாரம், லக்ஷ்மி ராஜரத்தினம் 'பெரிய கடவுள்' என்ற தலைப்பில் பேசினார். அதன் பாட்காஸ்ட் இங்கே.

Tuesday, June 19, 2007

தமிழகத்தின் கடைசி காந்தியவாதி

பி.ஏ.கிருஷ்ணன் பயனீர் பத்திரிகையில் எழுதியிருக்கும் பத்தி: The last Gandhian in Tamil Nadu

84 வயதாகும் கிருஷ்ணம்மாள் நிறைய நிலம் உள்ளவர்களிடமிருந்து அவர்களது விருப்பத்துடன் நிலத்தைப் பெற்று ஏழை தலித்களுக்குக் கொடுக்கிறார். கடைசியாக, கிட்டத்தட்ட 300 ஏக்கர் நிலத்தைப் பெற்றுள்ளார் இவர். ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட ரூ. 1,500 தேவைப்படுகிறது.

நான் சுமார் 6 ஏக்கர் நிலத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க உள்ளேன். நீங்களும் உங்களால் முடிந்ததைச் செய்யலாமே?

அனந்தகிருஷ்ணனைத் தொடர்புகொள்ள: pak_kannan@yahoo.com

Update:

கிருஷ்ணம்மாளுக்கு (LAFTI) பணம் அனுப்ப கீழ்க்கண்ட வங்கிக்கணக்குக்கு அனுப்பலாம்:

Name of the Bank : Federal Bank
Address : Thanjavur, Tamil Nadu, India
Swift Code : FDRL – INBB – IBD
To the Credit of Krishnammal Jagannathan
Account Number : SB 5559

காசோலையாக அனுப்ப அவர்களது முகவரி:

LAFTI
Vinoba Ashram
KOOTHUR
NAGAI District
Tamil Nadu 611 105

உலகமயமாக்கலை எதிர்கொள்வது

(சுதேசி செய்திகள் இதழில் இதன் சுருக்கப்பட்ட வடிவம் வெளியானது.)

*

பல அரசியல் மேடைகளிலும் இன்று உலகமயமாக்கல் பற்றி பேசப்படுகிறது. சிலர் உலகமயமாக்கலை வில்லனாகக் காண்பித்து இன்று நம் நாட்டில் உள்ள ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை இதன் காரணமாகத்தான் என்கிறார்கள். வேறு சிலரோ உலகமயமாக்கல்தான் நம் நாட்டை மேற்சொன்ன பிரச்னைகளிலிருந்து விடுவிக்கும், நாட்டுக்கு வளம் சேர்க்கும் என்று சொல்லி உலகமயமாக்கலை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்தி வணங்குகிறார்கள்.

பொதுமக்களுக்கோ உலகமயமாக்கல் என்றால் என்ன என்பது விளக்கமாகப் புரிவதில்லை. அதனால் அது நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு சரியான விடை சொல்லமுடியாமல் தடுமாறுகிறார்கள். நம் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் பல நிலைப்பாடுகள் நமக்கு நன்மை தரக்கூடியனவா அல்லது தீமை தரக்கூடியனவா என்று கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள்.

உலகமயமாக்கல் (Globalization) என்பது பொருளாதார, சமூக, அரசியல், பண்பாட்டுத் தளத்தில் அனைத்து நாடுகளும் அனைத்து மக்களும் ஒரே நிலையை நோக்கிச் செல்வதைக் குறிக்கிறது.

*

நாட்டின் பல பகுதிகளுக்கு இடையேயான தொடர்புகள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பொருளாதாரச் சூழல் நிலவ ஆரம்பிக்கிறது. பிஹாரில் சிமெண்ட் அல்லது வாழைப்பழம் தட்டுப்பாடு என்றால் வெகு சீக்கிரமாகவே அந்த விஷயம் பரவி, தமிழகத்திலிருந்து இந்தப் பொருள்கள் பிஹாருக்கு அனுப்பப்படுகின்றன. பஞ்சாபில் கோதுமை விளைச்சல் எக்கச்சக்கம் என்றால் தமிழகத்திலும் விரைவிலேயே கோதுமை விலை குறையவேண்டும்.

ஆனால் இதெல்லாம் இப்படி நடப்பதில்லையே என்று நீங்கள் கேட்கலாம். இவை நடக்கவேண்டும் என்றால் இந்தப் பகுதிகளுக்கிடையே நல்ல போக்குவரத்து வசதிகள் வேண்டும். தகவல் தொடர்பும் வேண்டும். எங்கு எதற்குப் பற்றாக்குறை, எங்கு எது கொட்டிக்கிடக்கிறது என்ற தகவல் வியாபாரிக்குக் கிடைக்கவேண்டும். இதில் ஏதேனும் ஒரு தொடர்பு சரியாக இல்லை என்றால் சமநிலை உருவாகாது. ஒரு நாடு நன்றாக வளர வளர, சமநிலைப்படுத்தப்பட்ட பொருளாதாரம் உருவாகும்.

சமநிலைப்படுத்தப்பட்ட பொருளாதாரம் தொடர, நாடெங்கும் ஒரே மாதிரியான அரசியல் சூழல் தேவை. இந்தியா போன்ற தேசத்தில் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு சட்டதிட்டங்கள் இருந்தால் குழப்பம் பெருகும். மதிப்புக் கூட்டு வரி போன்றவை, நாடு தழுவிய சந்தையில் குழப்பத்தைக் குறைக்க உதவி செய்கின்றன. பொருளாதாரமும் அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பதால் நாடெங்கிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அரசியல் சூழலும் நிலவும். அரசாங்கமும் குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கை, பணக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றும்.

இந்த அரசியல் பொருளாதாரச் சூழலில் வாழும் மக்கள், ஊடகங்களில் ஒரே மாதிரியான கேளிக்கைகளைப் பார்க்கத் தொடங்குவர். ஒரே மாதிரியான விருப்பு வெறுப்புகளைப் பேணத் தொடங்குவர். ஒரே மாதிரியான பொருள்களை நுகர்வர். எனவே விரைவில் நாடெங்கிலும் சமநிலைப்படுத்தப்பட்ட சமூக, கலாசார சூழல் நிலவும் என நினைப்பது நியாயம்தான்.

சரி, இந்தக் கொள்கைகள் நாடு விட்டு நாடு பரவி, உலகமே ஒரே மாதிரியான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார சூழலைக் கொண்டதாக இருக்குமா? இது சாத்தியம்தானா? அப்படி ஒரு நிலையை நோக்கி உலக நாடுகள் பலவும் செல்வதைத்தான் உலகமயமாக்கல் என்று சொல்கிறோம்.

இந்த நிலை எவ்வாறு சாத்தியப்படுகிறது?

இதுவும் பொருளாதாரத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

*

உலகு தழுவிய வியாபாரம் எத்தனையோ நூற்றாண்டுகளாக நடந்து வருவதுதான். ஓர் இடத்தில் இல்லாத பொருள்களை, இருக்கும் நாட்டிலிருந்து எடுத்து வந்து விற்று காசாக்குவது எப்பொழுதுமே இருந்துள்ளது. கிரேக்கர்களும் யவனர்களும் தமிழகத்தில் வர்த்தகம் செய்துள்ளனர். அரேபியக் குதிரைகளை தமிழக அரசர்கள் வாங்கியுள்ளனர். தமிழர்கள் கப்பலில் சென்று கீழை ஆசிய நாடுகளில் வணிகம் செய்துள்ளனர்.

ஆனால் நிகழும் யுகத்தில் இவை அனைத்துமே மிக எளிதாக்கப்பட்டுள்ளன. பண்டமாற்று முறையிலிருந்து, விலை மதிப்புள்ள தங்கம் போன்றவற்றால் பொருள்களை விற்பது வாங்குவதிலிருந்து, காசோலை, அந்நியச் செலாவணி போன்றவைக்கு வந்து, முழுக்க முழுக்க இண்டெர்னெட் மூலம் பணத்தை ஒரு நாட்டின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு அனுப்புவது என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இது நிதித்துறையில் நடந்துள்ள புரட்சி.

அதே நேரம் தொலைத்தொடர்பின் தாக்கத்தால் உலகின் ஒரு மூலையில் இருப்பவர் அடுத்த மூலையில் இருப்பவருடன் ஒரே நொடியில் பேசலாம், விடியோ கான்ஃபரன்சிங் மூலம் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே உரையாடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் எந்தக் கோடியில் நடக்கும் நிகழ்வும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் மூலம் அடுத்த விநாடியே உலகெங்கும் காணக்கிடைக்கின்றன. இது தொலைத்தொடர்பில் நடந்துள்ள புரட்சி.

ஒரு நாட்டின் சந்தைக்குத் தேவையான எந்தப் பொருளையும் வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் உற்பத்தி செய்து அவற்றைப் பெரும் கப்பல்களில் ஏற்றி அனுப்பிவைக்கலாம்; வேண்டுமானால் மறுநாளே கிடைக்கும் வண்ணம் விமானத்தில் ஏற்றி அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள புரட்சி.

தொலைத்தொடர்பு புரட்சியின் விளைவாக உருவானது அவுட்சோர்சிங் எனப்படுவது. ஒரு நாட்டுக்குத் தேவையான சேவைகளை அடுத்த நாட்டில் இருந்துகொண்டு செய்வது.

இவை அனைத்தும் சேர்ந்து பொருளாதாரத் துறையில் உலகமயமாக்கலை வேகமாக்கின.

ஆனால் இவை அனைத்தும் ஒழுங்காக நடக்க அரசியல் துறையில் நிறைய மாறுதல்கள் தேவைப்பட்டன. ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் தங்களுக்கென்றே வெவ்வேறு கொள்கைகளை வைத்திருந்தன. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் பெருமளவு வர்த்தகம் செய்யவேண்டுமானால் அவை இரண்டுக்கும் இடையே அந்நியச் செலாவணி மாற்றம் தாராளமாக நடக்கவேண்டும். தடையின்றி அந்நியச் செலாவணி பெறுவதை கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டி என்போம்.

ஆனால், ஒரு நாட்டில் வங்கி வட்டி விகிதம் குறைவாக இருக்கலாம்; இன்னொரு நாட்டில் அதிகமாக இருக்கலாம். இது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சேமிப்பு விகிதம், பணவீக்கம் ஆகிய பல விஷயங்களைப் பொறுத்தது. அந்நியச் செலாவணியைத் தடையின்றி மாற்றிக்கொள்ள முடியும் என்றால், இரு நாடுகளுக்கிடையே வட்டி விகிதம் மிகவும் வித்தியாசமாக இருந்தால் அந்த ஓட்டையைப் பயன்படுத்தி பலர் லாபம் பெற முடியும். எனவே இந்நிலையில் உலகமயமாகும் நாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மானிட்டரி பாலிசியை உடையனவாக இருக்கவேண்டும்.

*

நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகத்தைக் கொண்டுவரும் தாராளமயமாக்கல் கொள்கை, உலகமயமாக்கலின் அடிப்படைக் கொள்கையாகும். இதன்படி எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளையும் இன்னொரு நாட்டில் தடையின்றி, மேலதிக வரியின்றி விற்கலாம்.

ஆனால் இயல்பில் நாடுகளுக்கிடையே பெரும் வித்தியாசங்கள் உள்ளன. அதனால்தான் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற பிரிவுகளை நாம் காண்கிறோம். சில நாடுகள் இயற்கை வளம் பொருந்தியவை. சில நாடுகளோ, உணவுப்பொருள்கள் முதற்கொண்டு இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளவை. சில நாட்டு மக்கள் இருப்பதை வைத்து சந்தோஷம் பெற முயல்பவர்கள். வேறு சில நாட்டு மக்களோ உலகின் அத்தனை வளங்களையும் தாங்களே அனுபவிக்க ஆசைப்படுபவர்கள்.

இந்த அடிப்படையான மனித, நாட்டு வேறுபாடுகளைக் கண்டுகொள்ளாமல், உலகமயமாதலை நோக்கிச் செல்லும்போது வலுவான நாடுகள், வலுவற்ற நாடுகளை அச்சுறுத்துகின்றன. அமெரிக்கா, இந்தியாவின் பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும், யாருக்கு மான்யம் தரவேண்டும், தரக்கூடாது, எந்தப் பொருளுக்கு எவ்வளவு இறக்குமதி வரி (tariff) வைக்கவேண்டும் என்றெல்லாம் பேசத் தலைப்படுகிறது. ஆனால் அதே சமயம், தன் நாட்டின் நலன்களைக் கவனமாகப் பாதுகாத்துக்கொள்ள விழைகிறது.

இந்தியா எனும் நாடும் ஒரே மாதிரியான மக்களைக் கொண்டதல்ல. இங்கு ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகம். வறுமைக்கோட்டுக்குக் கீழே பல கோடி மக்கள் உள்ளனர். தடையற்ற வர்த்தகம்தான் இந்தியாவின் ஏழைகளுக்கு சோறு போடப்போகிறது என்று அமெரிக்கா சொல்கிறது என்ற ஒரே காரணத்தால் இந்தியா தடையற்ற வர்த்தகத்தை வரவேற்கக்கூடாது.

அரசின் கொள்கைகள் பெரும்பாலும் ஏழை மக்களால் முன்னெடுத்துச் செல்லப்படுவதில்லை. சொல்லப்போனால் ஏழை மக்களுக்கு தங்களுக்கு ஆதரவான கொள்கைகள் எவை, அவற்றை எப்படிச் செயல்படுத்துவது ஆகிய விஷயங்கள் தெரிவதில்லை. கொள்கைகளைச் செயல்படுத்துபவர்களோ, மிடில் கிளாஸ் அல்லது பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு ஆதரவானவற்றை மட்டுமே செயல்படுத்துகிறார்கள்.

உலகமயமாக்கத்தின் பல கூறுகள் வளரும் இந்தியாவுக்கு இடைஞ்சலைக் கொடுக்கக்கூடியவை. சில கூறுகள் இந்தியாவுக்கு சாதகமானவை. இந்திய அரசின் நோக்கம் உலகமயமாக்கமலை உள்வாங்கிகொள்வதன்று. பெரும்பான்மை இந்திய மக்களுக்குச் சாதகமானவற்றைச் செய்வது.

உதாரணத்துக்கு விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். இந்தியாவின் விவசாயமும் அமெரிக்காவின் விவசாயமும் வெவ்வேறு கோடியில் இருப்பவை. அமெரிக்காவில் மிகச்சிலரே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொருவரும் பெரும்பணக்காரர். அவர்கள் பெருமளவு உற்பத்தி செய்துவிட்டால் பொருள்களின் விலை அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுமே என்று பயந்து அமெரிக்க அரசு, பொருள்களை விளைவிக்காமல் இருக்க அவர்களுக்கு மான்யம் கொடுக்கிறது! இந்தியாவில், பெரும்பான்மை மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். வெகு சிலரைத் தவிர அனைவரும் படிப்பு குறைவான ஏழை விவசாயிகள். ஒவ்வொரு துளி நிலத்திலும் விளைவித்தாலும் நஷ்டத்தில் இயங்குபவர்கள். எனவே அமெரிக்காவின் விவசாயக் கொள்கையும் இந்தியாவின் விவசாயக் கொள்கையும் எந்நாளும் ஒன்றாக இருக்க முடியாது.

திடீரென இந்தியா அமெரிக்காவைப் போன்றோ, அல்லது அமெரிக்கா இந்தியாவைப் போன்றோ விவசாயத்தில் மாறிவிட முடியாது.

இதைப்போலத்தான் மருந்துத் தொழிலும். அமெரிக்காவில் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளவேண்டும். அந்தக் காப்பீட்டில் மருந்துக்கான கட்டணமும் உண்டு. அங்குள்ள மருந்துக் கம்பெனிகள் தலைவலி மாத்திரையைக்கூட அதீத விலைக்கு விற்கின்றன. பொதுமக்கள் அதைப்பற்றி ஆரம்ப காலங்களில் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் நாளடைவில் மருந்து விலைகள் ஏறிக்கொண்டேபோக, இன்சூரன்ஸ் பிரீமியமும் ஏறிக்கொண்டே போனது.

இந்தியாவிலோ மருந்துக்கு என்று எந்தக் காப்பீடும் கிடையாது. அனைத்து மக்களுக்கும் பயன்படும் விதத்தில் மருந்துக் கம்பெனிகள் குறைந்த விலையில் மருந்துகளை விற்கின்றன. ஆனால் காப்புரிமை (பேடண்ட்) போன்ற சட்டங்களை வைத்துக்கொண்டு மருந்துகளின் விலையை உலகெங்கும் ஏற்ற அமெரிக்க மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. மருந்து விலையைக் குறைப்பதன்மூலம் உலகெங்கும் குறைந்த விலை மருந்துகளை விற்று லாபம் பெற முயற்சி செய்கின்றன இந்திய மருந்து நிறுவனங்கள்.

ஆக இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரியான சட்டங்கள், செயல்பாடுகள் இருக்க சாத்தியம் இல்லை. ஆனாலும் அமெரிக்கா, இந்தியாவின் சட்டதிட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தொல்லை கொடுக்கிறது.

பண்டைய இந்திய சமுதாயம், கடன்கள் வாங்குவதைத் தவிர்க்க விரும்பியது. சேமிப்பை வலியுறுத்தியது. ஆனால் அமெரிக்கா கடன்கள்மூலம் செலவுகளைப் பெருக்கி, பொருளாதாரத்தை வளப்படுத்த முனைகிறது. இரண்டும் இரு கோடிகள். இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரியான நிதிக்கொள்கை இருப்பது சாத்தியமல்ல. இந்தியாவில் அதிக வட்டிவிகிதம் இல்லாவிட்டால் பணவீக்கம் அதிகமாகி ஏழைகள் பாதிக்கப்படுவர். அமெரிக்காவில் வட்டிவிகிதம் குறைவாக இல்லாவிட்டால் மக்கள் பொருள்கள் வாங்குவது குறைந்து, வேலைகள் குறைந்து பல ஏழைகள் நடுத்தெருவுக்கு வருவர்!

உலகமயமாக்குதல் மூலம் உலகமே ஒரே பொருளாதாரச் சந்தையாக, உலகமே ஒரே நாடாக, ஒரே அரசின்கீழ் இருப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. இதன் விளைவாக ஒரே கலாசாரம் (அது நுகர்வுக் கலாசாரமா, சேமிப்புக் கலாசாரமா என்பது ஒருபக்கம் இருக்கட்டும்), ஒரே உலக சமுதாயம் என்ற நிலை ஏற்படும் என்றால் அதனால் உலகின் பல நாகரிகங்கள் அழிவுபட்டுப் போகும். அதுவும் நல்லதற்கல்ல.

எனவே ஒவ்வொரு நாடும் தனித்தனி பொருளாதாரத் தீவாக இருப்பது அவசியமாகிறது. சில நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொருளாதார மண்டலத்தை உருவாக்கலாம். அவ்வாறு உருவாக அந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு இடையே ஒத்த கருத்துகள் இருக்கவேண்டும். ஓரளவுக்கு இது ஐரோப்பாவில் நிலவுகிறது. ஆனால் ஐரோப்பியப் பொருளாதார மண்டலத்திலும் பல உட்பூசல்கள் உள்ளன.

ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளுக்கு நடுவே புதிதாகப் பிரச்னைகளைக் கொண்டுவரத் தேவையே இல்லை. நமக்கு வசதிப்படும் சில துறைகளில் மட்டும் பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொண்டு, பிற துறைகளில் தடைகளை வைத்திருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது.

*

ஒரே ஒரு வரலாற்று உதாரணத்தைப் பார்க்கலாம். தொழில்புரட்சிக்குப் பிறகு பிரிட்டன் நாடுதான் உலகிலேயே இரும்பு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கியது. 1900 வரை இதே நிலைதான் நீடித்தது. அமெரிக்காவில் இரும்பு உற்பத்தி அப்பொழுதுதான் பெரிய அளவுக்கு உருவாகிக்கொண்டிருந்தது. அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து தன் நாட்டுக்கு வரும் இரும்பின்மீது வரி விதித்தது. ஆனால் பிரிட்டன் தடையற்ற வர்த்தகத்தைப் பின்பற்றி அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாட்டிலிருந்து தன் நாட்டுக்கு வரும் இரும்பின்மீது வரி விதிக்கவில்லை. நாளடைவில், அதாவது முதலாம் உலகப்போருக்கு முன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு, பிரிட்டனின் இரும்புத் தொழிற்சாலைகளை முற்றிலுமாக அழித்துவிட்டது. பிரிட்டன் கடைசிவரை தன் கொள்கையிலிருந்து மாறவேயில்லை.

அதன் விளைவாக, 2007 வரை, அதாவது இன்றுவரை பிரிட்டனில் வலுவான இரும்பு நிறுவனம் ஏற்படவில்லை. அந்த நாட்டின் மிகப்பெரும் இரும்பு நிறுவனத்தை இந்தியாவின் டாடா ஸ்டீல் சமீபத்தில் விலைக்கு வாங்கியது.

பிரிட்டனை நசுக்கி, பெரும் இரும்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அமெரிக்காவும் இன்று இந்தத் துறையில் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவிலும் வலுவான இரும்பு நிறுவனம் ஒன்றுகூட இருக்காது.

அர்த்தமற்ற கொள்கைப்பிடிப்பு எந்த நாட்டுக்கும் பலன் கொடுத்ததில்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் தடையற்ற வர்த்தகம் இந்தியாவுக்கு சாதகமா, இந்திய மக்களுக்கு சாதகமா என்று பார்த்து, சாதகம் என்றால் மட்டும் அந்தத் துறையில் மட்டும், அதுவும் குறுகிய காலத்துக்கு மட்டும் அந்தக் கொள்கையை வைத்துக்கொள்வது நலம். இது அந்நியச் செலாவணியில் ரூபாய், டாலர் மதிப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதிலிருந்து, இறக்குமதிக்கு எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கவேண்டும் என்பதிலிருந்து, யாருக்கு எவ்வளவு மான்யம் தரவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலிருந்து அனைத்திலும் நடைமுறைப்படுத்தவேண்டும். அதற்கு எதிராக உள்ள அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் (WTO முதலானவை) விடுபடவேண்டும்.

மொத்தத்தில் உலகமயமாதல் எந்த நாட்டுக்கும் நல்லதல்ல. ஒவ்வொரு நாடும், தன் மக்களின் நலனை முழுமையாக முன்வைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இது புலனாகும். இது அமெரிக்காவுக்கும் பொருந்தும், இந்தியாவுக்கும் பொருந்தும்.

The Indian Fan: Passionate or Obsessive

Monday, June 18, 2007

எஞ்சினியரிங் கவுன்செலிங்

1987-ல் ஐஐடி சென்னையில் எனக்கு கவுன்செலிங். கவுன்செலிங் என்றால் என்னவென்று சரியாகத் தெரியாது. அவர்கள் அனுப்பியிருந்த கடிதத்தில் கொஞ்சம் பயமுறுத்தியிருந்தார்கள். மொத்தம் ஏழோ எட்டோ சாய்ஸ் இருந்தது என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்கும் இடம் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான்.

இடம் என்றால் துறை + ஊர். மெக்கானிகல் எஞ்சினியரிங், ஐஐடி சென்னையில், அல்லது கெமிக்கல் எஞ்சினியரிங், ஐஐடி கான்பூரில். இப்படி. இதைத் தெரிவுசெய்வதற்கு வாகாக முந்தைய ஆண்டில் எந்தெந்த ஐஐடியில் எந்தெந்தத் துறைகளை எந்தெந்த ரேங்க் காரர்கள் எடுத்திருந்தனர் என்று ஓர் அட்டவணையைத் தந்திருந்தனர்.

எந்தத் துறையை எடுக்கலாம்?

எஞ்சினியரிங் என்றால் சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் தவிர்த்து புதிதாக கம்ப்யூட்டர் சயன்ஸ் என்பது அப்பொழுதுதான் தொடங்கியிருந்தது. இவை தவிர, கெமிக்கல், ஏரோனாட்டிகல், மெட்டலர்ஜி, நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளும் இருந்தன.

இதில் ஏரோனாட்டிகல் மனத்தில் இனம்புரியாத கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நாகப்பட்டினத்தில் எப்பொழுதாவது வானத்தில் பறக்கும் விமானம் கண்ணில் படும். சிறுவர்களாக இருக்கும்போது அதைப் பார்த்து சத்தம் போட்டுக்கொண்டே ஓடுவோம். கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போய்விடும். எப்பொழுதாவது இந்திரா காந்தியோ ஃபக்ருதீன் அலி அஹமதோ ஹெலிகாப்டரில் ஊருக்கு வருவார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து வரிசை வரிசையாக எங்களை அழைத்துப் போயிருப்பார்கள். ஹெலிகாப்டர் கீழே இறங்கும்போது புழுதி பறக்கும். அதிலிருந்து இறங்கிய பெரிய மனிதர்கள் கையசைத்துவிட்டு சர் சர்ரென்று கிளம்பும் கார்களில் ஏறி காணாமல் போய்விடுவார்கள். மீண்டும் பல கிலோமீட்டர்கள் நடந்து வீடு வந்து சேருவோம்.

ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங் என்றால் விமானத்தையே கட்டமுடியுமோ? அதில் ஏறி ஓட்டமுடியுமோ? எவ்வளவு சந்தோஷமான விஷயம். அதையே தேர்ந்தெடுப்பதாக என் தந்தையிடம் சொன்னேன். அவருக்கு இதெல்லாம் அதிகம் புரியாத விஷயங்கள். சரி என்றார். ஐஐடி சென்னை ஏரோனாட்டிகல் முதல் சாய்ஸ். அடுத்து ஐஐடி மும்பை ஏரோனாட்டிகல். அடுத்து வேறு சில ஏரோனாட்டிகல். பிறகு ஏதாவது ஒரு சேஃப் சாய்ஸ் போட்டுவைப்போம் என்று முடிவு செய்தேன்.

கவுன்செலிங் தினத்துக்கு முதல் நாள் சென்னை ஐஐடி கேம்பஸுக்கு வந்துசேர்ந்தோம். அடேயப்பா! உள்ளே பஸ் விடும் அளவுக்கு பெரிய இடமோ! இப்பொழுதுதான் முதல்முறை பார்க்கிறேன் ஐஐடியை. பஸ்ஸில் ஒரு அண்ணா. நான்காவது வருடம் மெக்கானிகல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு அமெரிக்கா போவதாகச் சொன்னார். எதற்கு அமெரிக்கா போகிறீர்கள் என்றேன். மேலே படிக்க என்றார். இதற்குமேல் என்ன படிப்பது என்றேன். சிரித்துவிட்டு, நீயே பின்னால் தெரிந்துகொள்வாய் என்றார். ரேங்க் என்ன என்று கேட்டார். சொன்னேன். சென்னையில் மெக்கானிகல் கிடைக்கும் என்றார். இல்லை, ஏரோனாட்டிகல் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றேன். வேண்டாம், மெக்கானிகலே எடுத்துக்கொள் என்றார்.

ஹாஸ்டலில் காகிநாடாவிலிருந்து வந்த பையனைச் சந்தித்தேன். ரேங்க் கேட்டான். சொன்னேன். அவன், தான் மெக்கானிகல் எடுக்க இருப்பதாகச் சொன்னான். நான் ஏரோனாட்டிகல் எடுக்க இருப்பதாகச் சொன்னதைக்கண்டு ஆச்சரியப்பட்டான். இந்த ரேங்குக்கு மெக்கானிகல் கிடைக்குமே என்றான்.

அடுத்த நாள் கவுன்செலிங் நடந்தது. ஸ்ரீனிவாச ராவ் என்று ஒரு பேராசிரியர். விருப்பம் என்ன என்று கேட்டார். ஏரோனாட்டிகல் என்றேன். வேண்டாம், சென்னையில் மெக்கானிகல் எஞ்சினியரிங் எடுத்துக்கொள் என்றார். இல்லை, நான் விமானம் ஓட்ட விரும்புகிறேன் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, அதெற்கெல்லாம் வாய்ப்புகள் கிடையாது என்றார்.

ராவ், ஏன் மெக்கானிகல் எடுத்துக்கொள்வது சிறந்தது என்று ஏதோ காரணங்கள் சொன்னார். எனக்குப் பெருத்த ஏமாற்றம். அவர் சமாதானம் சொன்னார். தேவை என்றால் மேற்கொண்டு படிக்கும்போது ஏரோ எடுத்துக்கொள்ளலாமாம்.

இப்படியாக என் கவுன்செலிங் முடிவடைந்தது. என் ரேங்குக்கு விதிக்கப்பட்ட மெக்கானிகலை எடுக்கவைத்தார்கள்.

-*-

எஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது.

இன்று நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகள் தேவையே இல்லை. யோசித்துப் பார்த்தால் ஏரோனாட்டிகல் கூடத் தேவையில்லை. மெட்டலர்ஜிக்கு இன்று மெட்டீரியல் சயன்ஸ் எனப் பெயர் மாற்றம் ஆகியிருக்கலாம்.

சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் (பவர்), எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்ஸ், கெமிக்கல், மெட்டீரியல் சயன்ஸ். இந்த ஏழைத் தவிர வேறு எதுவும் இளநிலைப் படிப்பில் இருக்கக்கூடாது. லெதர், பிரிண்டிங், பேப்பர் அண்ட் பல்ப் அது, இது என்று இருக்கும் பாடங்கள் எல்லாம் தவறானவை என்றே நினைக்கிறேன். பயோடெக்னாலஜி வேண்டுமானால் ஒரு இளநிலைப் படிப்பாக இருக்கலாம்.

இந்தப் பாடங்களிலும்கூட வர்ணாஸ்ரம முறைகள் தேவையின்றி நுழைகின்றன. இந்த ரேங்கா, இத்தனை மார்க்கா, கம்ப்யூட்டர் எடு. அடுத்த நிலையா? எலெக்ட்ரானிக்ஸ் எடு, இல்லையா மெக்கானிகல். கடைசியாக கெமிக்கல், அடுத்து சிவில். இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லி உள்ளே நுழையும் மாணவர்களைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிடுகிறார்கள். இன்று சிவில் எஞ்சினியரிங் துறைக்கு இருக்கும் வாய்ப்புகள் ஏராளம். அதேபோல மெட்டீரியல் சயன்ஸும் கெமிக்கலும். ஆனால் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்தத் துறைகள் இருப்பதே இல்லை. பல தமிழக அரசுக் கல்லூரிகளிலும் அரசு மான்யம் பெறும் தனியார் கல்லூரிகளிலும் கெமிக்கல் எஞ்சினியரிங் துறை இருப்பதே இல்லை.

எஞ்சினியரிங் படிப்பு முடிக்கும் மாணவர்கள் பாதிப்பேர் கடைசியில் டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் என்று போய்ச் சேருகிறார்கள். மீதமுள்ள பலர் எம்.பி.ஏ படிப்புக்குப் போகிறார்கள். எஞ்சினியரிங் படிப்பில் சேர்வதற்கு முன்னமே ஒவ்வொரு துறையைப் பற்றியும் மேலோட்டமாகவாவது தெரிந்துகொள்வது நல்லது. அப்படித் தெரிந்துகொண்டால் அந்தத் துறையில் தீராத ஆசை வரலாம். கவுன்செலிங் அழுத்தத்தையும்மீறி அந்தத் துறையில் சேர்ந்து பெரும் சாதனை புரியலாம்.

Thursday, June 14, 2007

சன் (குழும) டிவியில் கிரிக்கெட்

ராஜ், விஸ்ஸா டிவியில் கிரிக்கெட் ஒளிபரப்புக்குப் பிறகு இப்பொழுது நிம்பஸ், சன் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அயர்லாந்தில் நடக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் ஆட்டங்களின் தமிழ், தெலுங்கு, கன்னட நேர்முக வர்ணனையுடனான ஒளிபரப்பு முறையே சன் நியூஸ், ஜெமினி நியூஸ், உதயா வார்த்தகலு சானல்களில் ஒளிபரப்பாகும்.

ராஜ் டிவி தமிழ் கமெண்டரியில் சில குறைகள் இருந்தன. அப்துல் ஜப்பார் சென்றபின்னும்கூட. ஜப்பார் தமிழில் குறைவைக்கவில்லை. ஆனால் ரேடியோ வேறு, தொலைக்காட்சி வேறு. அவ்வப்போது தொலைக்காட்சியில் ஸ்கோரைத் தெரிவிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை - கீழே எப்பொழுதுமே கண்ணுக்குத் தென்படுமாறு ஸ்கோர் உள்ளது. ரீப்ளேயை சரியாகக் கவனிக்காமல் பலமுறை 'மீண்டும் ஒரு விக்கெட்' என்று தவறாகச் சொல்லவேண்டி வந்தது. ஓடுவருகிறார், பந்து வீசுகிறார் போன்றவற்றைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் பந்து எத்தகையது, எம்மாதிரி ஸ்வின், சீம், ஸ்பின் ஆகிறது போன்றவற்றைச் சொல்லவேண்டும். ஸ்டிரோக் பற்றிப் பேசவேண்டும். தடுப்பாளர் நிற்கும் இடம் பற்றிப் பேசவேண்டும்.

நம்மைப்போன்றே பார்வையாளரும் பார்த்துக்கொண்டிருக்கிறார், ஆனால் பார்வையாளர் அதிக விவரம் தெரியாதவர் என்ற எண்ணத்துடன் வர்ணனை அமையவேண்டும்.

ரேடியோவிலோ 'கேட்பவர்' எதையும் பார்ப்பதில்லை; எனவே அதற்கு ஏற்றவாறு சின்னஞ்சிறு விஷயத்தையும் சொல்லவேண்டும். அப்போது பெரிய, நுணுக்கமான பல விஷயங்கள் விடுபட்டுவிடும்; ஆனால் பரவாயில்லை. அடிக்கடி ஸ்கோர் சொல்லவேண்டும். மேலும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் - இடைவெளி விடாமல். தொலைக்காட்சியில் நிறைய இடைவெளி வேண்டும் - அவ்வப்போது பேசினால் போதும்.

-*-

ராஜைவிட சன் அதிக விளம்பர வருவாயைப் பெற வாய்ப்பு உள்ளது.



ராஜ் டிவி