Wednesday, August 31, 2011

ஊழலுக்கான காரணங்கள்

ஓரிரு தினங்களுக்குமுன் லோக்பால் தொடர்பான விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி ஒளிப்பதிவின்போது ஓர் ஓரத்தில் நானும் ஒரு பங்கேற்பாளனாக அமர்ந்திருந்தேன்.

ஊழல் பற்றிப் பேசும்போது ஒருவர், ‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி’ என்று திருவள்ளுவரை மேற்கோள் காட்டி, நாம் சிம்ப்டம்ஸ் பற்றித்தான் பேசுகிறோம், காஸ் பற்றிப் பேசுவதில்லை என்றார். பின்னர் பேசிய எழுத்தாளரும் களப்பணியாளருமான ஒருவர், 1991-க்குப் பிறகான புதிய தாராளவாதக் கொள்கைதான் ஊழல் இந்த அளவு வளர்வதற்குப் பெரும் காரணம் என்றார்.

அதற்குமுன் ஊழலே இல்லையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

தாராளமயவாதிகளான என்னைப் போன்றோர், ஊழல் ஏற்படக் காரணமே பெருத்துப்போன அரசுதான் என்று நம்புகிறோம். அரசும் அரசு ஊழியர்களும்தான் ஊழலின் அடிப்படைக் காரணம் என்பது எங்கள் கருத்து. இடதுசாரிகளின் கருத்து வேறுமாதிரியாக உள்ளது. ஊழலுக்குக் காரணமே முதலியம்; பெரும் ஊழல் அனைத்துமே கொலைகாரப் பாவிகளான கேபிடலிஸப் பெருமுதலாளிகளால்தான் என்கிறார்கள் அவர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தங்கள் கட்சிக் கொள்கையை எடுத்துரைக்கும்போது ஊழலுக்குக் காரணம் Politician-Bureaucrat-Corporate nexus என்றார்.

அண்ணா ஹசாரே இயக்கத்தை எதிர்ப்பவர்கள், ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தில் ஏன் கார்பொரேட் நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை, ஏன் என்.ஜி.ஓ அமைப்புகள் சேர்க்கப்படவில்லை, ஏன் மீடியா நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர். இன்னும் கேட்கப்படாத ஒரே கேள்வி, ஏன் அமெரிக்க அதிபரை இதில் சேர்க்கவில்லை என்பதுதான்.

நேற்று சிபிஐ பொறி வைத்துப் பிடித்த ஒரு வழக்கு செய்திகளில் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த எவெரான் என்ற கார்பொரேட் நிறுவனம், கல்வித் துறையில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பதை ஒரு வருமான வரி அதிகாரி கண்டுபிடிக்கிறார். உடனே அவர் என்ன செய்யவேண்டும்? அந்த நிறுவன அதிகாரியைக் கம்பி எண்ண வைத்துவிட்டு, நிறுவனச் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, வரியைக் கட்டுமாறு செய்திருக்கவேண்டும். ஆனால், மாறாக என்ன செய்கிறார்? ஓர் இடைத்தரகரை வைத்து (அவர் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்!) பேரம் பேசி, 50 லட்ச ரூபாய் பணமாகப் பெற்றுக்கொண்டு, வரியைக் குறைக்கிறார். [செய்திகளின்படி, எவெரான் நிறுவன நிர்வாக இயக்குனர்தான் ஓர் இடைத்தரகர்மூலம் வருமான வரி அதிகாரி ரவீந்தரைத் தொடர்புகொள்கிறார்.] அப்போதுதான் சிபிஐ அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கிறது.

இப்போது என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்? எவெரானின் நிர்வாக இயக்குனர் கிஷோர்மீது உடனடியாக வழக்கைப் பதிவுசெய்துவிடலாம். அவர்களது நிறுவனம், ஏமாற்றிய வருமான வரியை இன்னும் ஒரு மாதத்துக்குள் கட்டவேண்டும் என்று ஆணை பிறப்பித்துப் பணத்தை மத்திய அரசு வசூலித்துவிடும். கிஷோர் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.

ஆனால், லஞ்சம் வாங்கிய ஐ.ஆர்.எஸ் அலுவலரான ரவீந்தருக்கு என்ன ஆகும்? அவர்மீது வழக்குப் பதிவு செய்ய மேலிட அனுமதி தேவைப்படும். டிபார்ட்மெண்டல் என்கொயரி நடக்கும். அவர் தாற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்படுவார். அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியாது. சில ஆண்டுகள் கழித்தும்கூட அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள்.

கிஷோர் செய்தது குற்றம் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை லோக்பால் மசோதா இல்லாமலேயே தீர்க்கமுடியும். தீர்த்தும் விடுவார்கள். ஆனால் ரவீந்தரை என்ன செய்யலாம்? அடுத்து வரும் தினங்களில் நாமே பார்க்கப்போகிறோம். இந்த வழக்கு நல்லதோர் உரைகல்லாக இருக்கும்.

கார்பொரேட் பூச்சாண்டியைச் சற்று ஆழமாகப் பார்ப்போம். கார்பொரேட் நிறுவனங்கள் அரசு ஊழியர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் சேர்ந்து பேசி, தமக்குச் சாதகமான கொள்கைகளை எடுக்கத் தூண்டுகின்றன. லாபியிங் செய்கின்றன. இந்த லாபியிங் வெளிப்படையாக இருக்கும்வரை இதில் பிரச்னை இல்லை என்று தோன்றுகிறது. நாம் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் அரசிடம் லாபியிங் செய்துகொண்டேதான் இருக்கிறோம்.

ஆனால் சிலருக்கு லாபமும் பெரும் பலருக்கு நஷ்டமும் வரும் வகையில் கொள்கைகளை மாற்ற (பணமாகவோ அல்லது பொருளாகவோ) லஞ்சம் கொடுப்பதைத்தான் நாம் ஊழல் குற்றம் என்கிறோம். இந்தக் குற்றம் நடைபெறும்போது இன்றைய தேதியில் சட்டப்படி, கார்பொரேட் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் அரசியல்வாதிமீதோ அதிகாரிமீதோ நடவடிக்கை எடுப்பது மிகவும் சிக்கலானதாக, கிட்டத்தட்ட முடியாததாக ஆகிவிடுகிறது. இதைத்தான் ஒரு வலுவான லோக்பால் சட்டம் மாற்ற முனைகிறது. அப்படிப்பட்ட வலுவான சட்டத்தை நிறைவேற்ற அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள். எனவே ஒரு மக்கள் போராட்டம் நிகழ்கிறது.

ஒரு கார்பொரேட் நிறுவனம் பல இடங்களில் தவறுகளைச் செய்ய வாய்ப்பு உள்ளது. அரசுடன் உறவாடும் இடங்களில்; ஒரு கார்பொரேட் நிறுவனத்துக்கும் இன்னோர் அரசு-சாரா அமைப்புக்கும் (அது கார்பொரேட் நிறுவனமாக இருக்கலாம்; தனி நபராக இருக்கலாம்; என்.ஜி.ஓவாக இருக்கலாம்) இடையிலான உறவில்; கார்பொரேட் நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் உள்ள உறவில்; கார்பொரேட் நிறுவனம் தன் வேலையைச் செய்யும் இடத்தைச் சுற்றியுள்ள மக்களுடனான உறவில்.

இதில் அரசுடனான உறவில்தான் ஊழல் என்பது வருகிறது. பிற நிறுவனங்கள் அல்லது தனியாருடனான உறவில் ஏமாற்றுதல் அல்லது ஒப்பந்தத்தை மீறுதல் என்பதுதான் நடக்கிறது. தன் அலுவலகம், தொழிற்சாலை போன்றவை உள்ள இடங்களில் சூழியல் சார்ந்த பிரச்னைகள், அங்குள்ள மக்களுடைய வாழ்வாதாரம்மீதான பிரச்னைகள் ஆகியவை நடைபெறலாம்.

இதில் ஊழலை ஒழிக்கப் புறப்படுகிறோம் என்றால் அரசுடனான உறவைப் பரிசீலித்தால் மட்டும் போதுமானது. பிறவற்றைச் சீரமைக்க நீதிமன்றச் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தினாலே போதும். இங்கு காவல்துறை ஈடுபட்டுக் கட்டப் பஞ்சாயத்து செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது உடனடியாக அரசுடனான உறவாகிறது; ஊழலாகிறது. உடனே லோக்பால் போன்ற சட்டம் அமலில் இருந்தால், அது நடைமுறைக்கு வரும்.

என்.ஜி.ஓ, மீடியா ஆகியவற்றை எடுத்துக்கொண்டாலும் இதேதான். எனவே அரசுத் தரப்பிலிருந்து ஊழலைக் கட்டுப்படுத்தினாலேயே கார்பொரேட் ஊழல் அடிபட்டுப் போய்விடும். அதைவிடுத்து ஊரில் உள்ள அனைத்து அமைப்புகளையும் தேவையின்றி உள்ளே புகுத்துவது லோக்பால் மசோதாவை நீர்த்துப்போகச் செய்யும்.

இது ஏதோ கார்பொரேட் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்க என்று அல்ல. அரசு ஊழலை எடுத்துக்கொண்டால் அதிலேயே கார்பொரேட் நிறுவனங்கள் மாட்டிக்கொண்டுவிடும் என்பதால்தான் இப்படிச் சொல்கிறேன். இல்லாவிட்டால் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு மையங்கள் மாதிரி ஆகிவிடும் லோக்பால் நீதிமன்றங்கள்!

***

அங்கு விவாதிக்கப்பட்ட மேலும் இரண்டு விஷயங்களை அடுத்து எடுத்துக்கொள்ளப்போகிறேன்.

1. இட ஒதுக்கீடு, சமூக நீதி தொடர்பானது.
2. (ஜன்) லோக்பால் மட்டும் ஊழலை ஒழித்துவிடும் என்பதை எப்படி நம்புவது?

***

தொடர்புள்ள இரு பதிவுகள்:

வினவு: 50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்!
மாமல்லன்: ஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு


Saturday, August 27, 2011

சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகம்

மிஷல் தனினோ ஒரு பிரெஞ்சுக்காரர். இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகளாகக் கோயம்புத்தூரில் வசித்துவருபவர்.

இவர் ஆங்கிலத்தில் எழுதி, பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம்: The Lost River: On the Trail of the Sarasvati.

சரஸ்வதி என்ற நதி உண்மையான நதியா அல்லது இந்துக்கள் மனத்தளவில் மட்டுமே இருந்துவரும் ஒரு நதியா என்ற கேள்விக்கு விடை காண தனினோ முற்படுகையில் தொடங்குகிறது அவரது தேடல். கங்கை ஆறும் யமுனை ஆறும் சங்கமம் ஆகும் இடத்தில் அடி ஆழத்தில் சரஸ்வதி என்ற நதியும் ஓடுவதாகவும், இந்த மூன்று நதிகள் கூடும் இடத்தில் முழுக்குப் போட்டால் பாவம் போய் புண்ணியம் பெருகும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

ஆனால் தனினோ சொல்லும் கதை வேறுமாதிரியானது. எக்கச்சக்க சான்றுகளுடன், சரஸ்வதி என்ற நதி உண்மையாகவே இருந்தது என்றும் அந்த நதி இமயத்தின் ஷிவாலிக் மலையில் பிறந்து, இன்றைய ஹரியானா, ராஜஸ்தானம் வழியாகப் பாய்ந்து குஜராத்தில் அரபிக் கடலில் கலந்தது என்கிறார் தனினோ. இது இவரது தனிப்பட்ட கருத்து கிடையாது. பிற அறிஞர்கள் சொல்லியிருப்பதை அழகாகக் கோர்த்துக் கொண்டுவருகிறார் தனினோ. இந்த ஆற்றுக்கு நீரைத் தரும் ஆறுகள் நிலநடுக்கம் காரணமாக வேறு திசையில் திரும்பியதாலும், இந்த ஆற்றின் கரையில் வாழ்ந்த மக்கள் நீரைப் பெருமளவு பயன்படுத்தியதாலும் இந்த நதி நாளடைவில் வற்றிக் காய்ந்து சுருங்கிவிட்டதாம்.

ஆனால் இந்தப் புத்தகம் உண்மையில் சரஸ்வதி என்ற நதியைப் பற்றியது மட்டுமல்ல. உண்மையில் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றியது. இந்தப் புத்தகத்தின் அளவுக்கு சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி எளிமையாக மக்களுக்குச் சொல்லும் புத்தகத்தை நான் பார்த்ததில்லை. உண்மையில் சரஸ்வதி நதியின் கரையில்தான் அந்த நாகரிகம் உருவாகியது என்கிறார் தனினோ. சரஸ்வதி சுருங்கச் சுருங்க, மக்கள் சிந்துவை நோக்கி நகர்ந்தனர். கங்கையை நோக்கியும் நகர்ந்தனர். இதனை மேலும் நீட்டிக்கிறார் தனினோ. வேதங்கள் உண்மையில் கங்கைக் கரையில் உருவாக்கப்படவில்லை; அவை சரஸ்வதி நதிக்கரையிலேயே உருவாக்கப்பட்டுவிட்டன என்கிறார் தனினோ.

சிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகம் என்ற ஒரு கோட்பாட்டைப் பல அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். முக்கியமாக எழுத்துரீதியில் பார்க்கும்போது சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் இலச்சினைகள் திராவிட மொழி ஒன்றையே குறிப்பாக உணர்த்துகின்றன என்கிற வாதத்தை ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற பலர் முன்வைக்கின்றனர். ஆனால் வேறு பலரும் ‘ஆரிய’ நாகரிகமே சிந்து-சரஸ்வதி சமவெளிக் கரையில் உருவானது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

செப்டெம்பர் 3-ம் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு தமிழ்ப் பாரம்பரியக் குழுமத்தின் சார்பில் சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் மிஷல் தனினோ, சரஸ்வதி ஆற்றைப் பற்றியும் சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகம் பற்றியும் உரையாடுகிறார். அதுகுறித்த தகவல் இதோ.

மிஷல் தனினோ எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட உள்ளது. இந்தப் புத்தகம் செப்டெம்பர் மாதப் பிற்பகுதியில் சென்னையில் வெளியிடப்படும். அதுகுறித்த தகவல்களைப் பின்னர் எழுதுகிறேன்.

மரண தண்டனை எதிர்ப்பு

எந்தவிதமான குற்றத்துக்கும் மரணதண்டனை தீர்ப்பாகாது என்று நம்புபவன் நான். உலகில் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற உலகின் முக்கியமான சில நாடுகளில் துரதிர்ஷ்டவசமாக இன்னமும் இந்தத் தண்டனை செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் இந்தத் தண்டனை கிடையாது.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, அதன்மீதான கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில் செப்டெம்பர் 9-ம் தேதி அன்று அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று வெளியாகியுள்ள தகவல்களால் தமிழகத்தில் பலர் மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் குரல்களில் பல, மரண தண்டனை தரப்பட்டுள்ள கைதிகள் எவ்விதத்திலும் குற்றமற்றவர்கள் என்கின்றன. வேறு சிலரோ, தமிழர்கள் தூக்கில் இடப்படும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா என்கின்றனர். அங்கிருந்து, இந்திய நீதித்துறை, புலனாய்வுத்துறை ஆகியவைமீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. உணர்வுரீதியாக எழும் இந்தக் குரல்கள் மக்களில் பெரும் பகுதியினரைத் தள்ளிவைக்கும்.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அஇஅதிமுகவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்களையும் நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட அவர்கள்தான் இன்று பேரறிவாளன் மற்றும் பிறருக்கான மரண தண்டனையை நீக்கவேண்டும் என்று வாதாடும் செயலிலும் இறங்கியிருக்கிறார்கள். அது குற்றம், இது குற்றமே இல்லை என்றெல்லாம் நேரத்துக்குத் தகுந்தவாறு மாற்றிக்கொள்வது நியாயமில்லை.

இன்று தொலைக்காட்சியில் பார்க்கும்போது பலரும், பேரறிவாளன் குற்றமே செய்யவில்லை என்பதில் தொடங்கி, மூன்று அப்பாவித் தமிழர்கள் தூக்கு மேடைக்குப் போகிறார்கள் என்பதுவரை பேசினார்கள். முருகன் அப்பாவியா? சம்பந்தப்பட்ட கொலையில் அவருக்குப் பங்கே இல்லையா? சாந்தன் எந்த அளவுக்கு அப்பாவி என்பது தெரியவில்லை. பேரறிவாளன் பற்றி ரகோத்தமன் போன்றோர் சொல்வது முற்றிலும் வேறுவிதமானது.

எனவே, குற்றம் செய்துள்ளார்களா, இல்லையா என்பதைத் தாண்டி, எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்பதே நாகரிக சமுதாயத்தின் லட்சியமாக இருக்கவேண்டும் என்ற வாதத்தின்படி, நடக்க இருக்கும் தூக்கு தண்டனையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அனைத்தையும் மீறி இந்தத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், நான் மிகவும் வேதனை அடைவேன்.

என் பழைய பதிவு: மரண தண்டனைக்கு எதிராக...

Thursday, August 25, 2011

CBSE கணிதப் பாடத்திட்டம்

கடந்த சில தினங்களாக, CBSE பாடத்திட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். பல்வேறு வடிவங்கள் கொடுத்து அவற்றுக்கான பரப்பளவைக் கண்டுபிடித்தல், லாப நட்ட விகிதங்கள், பின்னங்களைக் கூட்டுதல், தனிவட்டி, பின்னங்களும் அடுக்குக்குறிகளும் - இதுபோன்றவை.

பாடங்கள் மிகவும் கடினமானவையாகவே தோன்றுகின்றன. அந்தப் பருவத்தில் இதுபோன்ற கடினமான கணக்குகளை நான் நிச்சயம் செய்யவில்லை. தமிழ்நாடு பாடத்திட்டம் இன்றும்கூட எளிதான ஒன்றாகத்தான் உள்ளது என்பேன்.

தொட்டால் பற்றிக்கொள்ளும் வகையிலான பிள்ளைகளின் படிப்பைப் பற்றிக் கவலைப்படவேண்டிய தேவையில்லை. என் பெண்ணுக்குக் கணிதம் அவ்வளவாகப் பிடிக்காத ஒரு பாடம். பொதுவாகவே பெண்களுக்குக் கணிதம் என்றால் எட்டிக்காயோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தும் ஒரு முடிவுடன் கணிதத்தை முடிந்தவரி எளிமைப்படுத்து அதை அவள் ரசிக்குமாறு சொல்லித்தருவதாகச் சவால் விட்டிருக்கிறேன். பார்ப்போம், எப்படிப் போகிறது என்று.

அவளுடைய பள்ளியில், அவள் வகுப்பில் படிக்கும் பிற குழந்தைகளும் இந்தப் பாடத்திட்டத்தை எதிர்கொள்ளக் கஷ்டப்படுகிறார்களாம். சமீபத்தில் நடந்த வகுப்புத் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் படுமோசமாகச் செய்துள்ளனர்.

அடிப்படையில் பாடத்திட்டத்தில் நாம் எதை எதிர்பார்க்கிறோம்? ஏன் இப்படிக் கடுமையானதாக பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும்? அப்படித் திணித்து எதைச் சாதிக்கப்போகிறோம்? பெற்றோர்களால் தம் குழந்தைகளுக்குத் தேவையான படிப்பைச் சொல்லித்தர முடியாவிட்டால் அந்தக் குழந்தைகளின் நிலை என்னவாகும்? எத்தனை சிபிஎஸ்இ ஆசிரியர்கள் முதலில் இவற்றை ஒழுங்காகச் சொல்லித்தரப்போகிறார்கள்?

National Curriculum Framework, 2005 என்று பெரிதாகப் பெயர்சூட்டி இந்தக் கல்வியாளர்கள் எல்லாம் என்ன கிழிக்கிறார்கள்?

இந்தக் காரணத்துக்காகவே முரண்டுபிடித்துக்கொண்டு மினிமல் சிலபஸ் என்ற ஒன்றை நான் முன்வைக்க விரும்புகிறேன். அதில் மிக மிகக் குறைவான பாடங்கள் மட்டுமே இருக்கும். காட்டுத்தனமான நுழைவுத்தேர்வுகளைத் தவிர்த்து, கல்வி என்பது தம் அறிவுநிலையை உயர்த்திக்கொள்ள மட்டுமே என்ற விருப்பம் உள்ள எளிமையான பிள்ளைகளுக்கான ஒரு கல்வித்திட்டமாக அது இருக்கும்.

கணிதப் பதிவு

சீரியஸான கணிதப் பதிவு ஒன்றை ஆரம்பித்து, கடந்த சில தினங்களாக, குறைந்தது ஒரு பதிவாவது எழுதி வருகிறேன். உங்களுக்குத் தெரிந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பதிவை அறிமுகப்படுத்துங்கள். அவர்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Saturday, August 20, 2011

அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்?

தர்க்கரீதியாக ஜன்லோக்பால் மசோதாவைப் பார்க்கும்போது என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மெலிதான அரசு என்ற என் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது ஜன்லோக்பால் முன்வைக்கும் மாதிரி. இப்போதுள்ள அரசின் சில அமைப்புகளை வலிமைப்படுத்துவதன்மூலம் ஊழலைக் குறைக்கமுடியும் என்பதே என் கருத்து.

ஆனால் அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாகப் பின்தொடர்கிறார்கள்? யார் இவர்கள்?

என் நண்பர் சமீபத்தில் தில்லி சென்றிருக்கிறார். அப்போது அண்ணா ஹஸாரே உண்ணாவிரதக் கூட்டத்தில் பங்கெடுக்க கிழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த மூவரை பேருந்தில் பார்த்திருக்கிறார். அவர்கள் அரசு வேலை பார்ப்பவர்கள்.

“அண்ணா ஹஸாரே, ஜன் லோக்பால் என்கிறாரே, இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா?”

“இல்லை. அதெல்லாம் எங்களுக்கு அவ்வளவாகப் புரியாது.”

“அப்படியென்றால் எதற்காக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்?”

“உங்களுக்குத் தெரியாது... என் தாயும் தந்தையும் விபத்தில் இறந்து அந்த உடல்களை வாங்க நான் எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டிவந்தது, எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருந்தது என்று. நீங்கள் எல்லாம் பையில் காசைப் போட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பி உங்கள் வேலைகளைச் செய்துகொள்பவர்கள். உங்களுக்குத் தெரியாது நாங்கள் தினம் தினம் படும் கஷ்டம். அண்ணா ஹஸாரே எங்களுக்காகப் போராடுகிறார். அதனால் லஞ்சம் தீர்ந்துவிடுமா என்றால் தெரியாது. ஆனால் ஒருவேளை தீர்ந்துவிட்டால்? அதனால்தான் வந்திருக்கிறோம். எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. எனக்குச் சம்பளமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவருடன் இருப்போம். மேலும் இன்னொரு விஷயம். அவர் நல்லவர்.”

இந்த ஒரு பதிலில் கிட்டத்தட்ட எல்லாமே அடங்கிவிட்டது என்று நினைக்கிறேன். பொட்டில் அறைந்தாற்போல இருந்தது எனக்கு. அண்ணா ஹஸாரேயால் லஞ்சம், ஊழல் எல்லாம் முற்றிலுமாக ஒரே நொடியில் தீர்ந்துவிடும் என்று பொதுமக்கள், அதுவும் அடிமட்ட மக்கள், நினைக்கவில்லை. ஆனால் அவர்மூலமாக ஊழல் ஒழியக்கூடும் என்ற நம்பிக்கையை ஓர் ஓரத்தில் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையே நிராசையாக இருக்கும்போது ஏன் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கக்கூடாது?

அதனால்தான் இந்த அளவுக்கு வரலாறு காணாத கூட்டம் அவர்பின் வருகிறது. இது நிச்சயம் பிரியாணியும் சாராயமும் வாங்கிக்கொடுத்து கட்சிகள் சேர்க்கும் கூட்டமல்ல. தானாகச் சேரும் கூட்டம். கூடவே லாப்டாப் வைத்திருக்கும் நவீன இளைஞர்களும் இருக்கிறார்கள்; அதுவும் தொலைக்காட்சி கேமராவைக் கண்டுவிட்டால் முன்னால் துருத்திக்கொண்டு வந்து நிற்கிறார்கள், வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என்பது முற்றிலும் வேறு விஷயம். அதைப் புறந்தள்ளுவோம்.

ஆனாலும் என் மனம் ஜன்லோக்பாலை ஏற்க மறுக்கிறது. அதே நேரம், காங்கிரஸ் கட்சியினர்போலோ அல்லது வினவு குழுவினர்போலோ அண்ணா ஹஸாரேமீது சேறை வாரி இறைக்கமாட்டேன். அவர்மீது அளவுகடந்த மதிப்பு உள்ளது. மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார் அவர். அவரது கூட்டணியினரும் அரசுடன் மோதும் போக்கை மட்டுமே கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. என் பயம் எல்லாம் அவரையே தங்கள் நாயகராக, தங்கள் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு தீர்ப்பாக நம்பியிருக்கும் அடிமட்ட மக்களை நினைத்துத்தான்.

அவர்களது நம்பிக்கை நாசமாகாமல் இருக்கவேண்டும்.

Tuesday, August 16, 2011

அண்ணா ஹஸாரேயின் கைது

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இந்தத் தொலைக்காட்சி சானல் இன்னும் ஒளிபரப்புக்கு வரவில்லை. அதனால் நீங்கள் அந்த விவாதத்தைப் பார்த்திருக்க முடியாது. கல்யாணம் என்ற 90 வயதுப் பெரியவர், காந்தியின் அந்திம காலத்தில் அவருடைய செயலராக இருந்தவர், நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினர்.

பாபா ராம்தேவின் கூட்டத்தின்மீது தில்லி காவல்துறை நடத்திய அடிதடியின்போது அந்தக் கூட்டத்தில் கல்யாணம் இருந்திருக்கிறார். “அடி படாமல் தப்பித்துவிட்டேன்” என்றார். அண்ணா ஹஸாரேயுடன் முந்தைய உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றிருந்திருக்கிறார்.

கடுமையான கோபத்தில் இருந்தார். ஊழல் செய்பவர்களையெல்லாம் அந்தமானில் சிறைக்குள் தள்ளவேண்டும் என்றார். நாடாளுமன்றம்தான் சுப்ரீம்; அதற்குமேல் அப்பீலே கிடையாது என்று பிரதமர் சொன்னது அவரது கோபத்தைக் கிளறியிருந்தது. “உங்களை யார் நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள்? நாங்கள்தானே? அப்படியானால் யார் சுப்ரீம்?” என்றார்.

நியாயம்தான்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திக்குத் திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங்கை நினைத்தால் பாவமாக இருக்கிறது. நிஜமாகவே அவர்மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. இப்போதும்கூட. அவர் ஏன் இந்த அரசில் இன்னும் இருக்கிறார் என்று புரியவில்லை. நானாக இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு அக்கடா என்று பஞ்சாப் கிராமம் ஒன்றில் போய் உட்கார்ந்துகொள்வேன். அவரை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. பிற திருட்டு மந்திரிகளுக்கும் சோனியா காந்திக்கும் ஒரு முகமூடி தேவைப்படுவதால் இவரைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் ஏன் இப்படித் துணைபோகிறார் என்று தெரியவில்லை.

அண்ணா ஹஸாரே குழுவினர் முரட்டுப் பிடிவாதக்காரர்களாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்களும் மோசமான வரைவு ஒன்றைத்தான் ஜன் லோக்பால் மசோதா என்று முன்வைக்கிறார்கள். ஆனால் அதற்கு ஏற்றாற்போல ஜோக்கர் காங்கிரஸ் அரசு, நீர்த்துப்போன ஒரு குப்பையை அவசர அவசரமாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப் பார்க்கிறது. கூடவே அண்ணா ஹஸாரே, பாபா ராம்தேவ் போன்றோரின் எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கிறது.

இன்று அண்ணா ஹஸாரேவின் கைது, ஐ.மு.கூ அரசின் இறுதியை விரைவு செய்துள்ளது என்று நான் நம்புகிறேன். நாளையே ஆட்சி கவிழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த ஆட்சி முழுக் காலமும் நீடிப்பதில் சிரமம் ஏற்படும் என்று நினைக்கிறேன். மறு தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக மண்ணைக் கவ்வும். அதன் விளைவு பாஜகவுக்கு முழுமையான ஆதரவைத் தராது. கம்யூனிஸ்டுகளுக்கும் பெருமளவு ஆதரவு கிடைக்காது. ஆனால் நிறைய பிராந்தியக் கட்சிகள் முன்னுக்கு வருவார்கள். பிராந்தியக் கட்சிகளின் துணையுடனான பாஜக ஆட்சி அமையலாம்.

இப்போது குடிமைச் சமூகத்துக்கு வருவோம். சிவில் சமூகத்தால் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படலாம். ஆனால் ஊழல் குறையுமா? அண்ணா ஹஸாரே, மற்றும் அவர் போன்றோரிடம் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான செயல்திட்டம் ஏதும் உள்ளதா? ஊழலுடன் நின்றுபோகும் திட்டமா அல்லது அதற்கும் மேலான ஏதேனும் அவர்களிடம் உள்ளதா? ஏனெனில் பொதுமக்கள் இந்த சிவில் சமூகத் தலைவர்களிடம் தங்கள் பிரச்னைகள் அனைத்துக்குமான தீர்வுகளை எதிர்பார்க்கப்போகிறார்கள். அரசியல்வாதிகளிடம் ஏமாந்துள்ள அவர்களை சிவில் சமூகத் தலைவர்களும் ஏமாற்றிவிட்டால், மக்கள் உடைந்துபோய்விடுவார்கள்.

அப்படிப் பார்த்தால் அண்ணா ஹஸாரேயும் அர்விந்த் கேஜ்ரிவாலும் கிரண் பேடியும் பிறரும் விரைவில் ஓர் அரசியல் கட்சியையே தொடங்கவேண்டியிருக்கும். அப்படிச் செய்ய அவர்களிடம் தெம்பு இருக்கிறதா?

Thursday, August 11, 2011

புன்னகையை விதைக்கும் இளைஞர்கள்

சென்ற ஞாயிறு அன்று எதிராஜ் கல்லுரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். Smile Welfare Foundation என்ற தொண்டமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவுவிழா.

இந்த அமைப்பை ஆரம்பித்த அனைவரும் ஈரோட்டில் இருக்கும் Institute of Road and Transport Technology என்ற கல்லூரியின் மாணவர்கள். படித்து முடித்து பல்வேறு இடங்களுக்கு வேலைக்குச் சென்றபிறகு, ஓரளவு சம்பாதிக்கத் தொடங்கியபிறகு ஏதோ செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அப்படி 2004-ல் உருவானதுதான் மேலே சொன்ன அமைப்பு.

ஆரம்பத்தில் அவர்கள் சேர்த்த சிறுமளவு பணத்தை ஏதேனும் நல்ல காரியங்களுக்குத் தருவது என்று மட்டும்தான் யோசித்திருந்தனர். பின்னர் தமிழக அரசு நடத்தும் (அனாதை) இல்லங்களுக்கு ஏதேனும் செய்யலாம் என்று அவர்களுக்கு யாரோ அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் இல்லங்கள், ஆதரவற்றவர்களுக்காக நடத்தப்படுவது. ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், தம் பிள்ளைகளை எந்தவிதத்திலும் சரியாக வளர்க்க முடியாதோர் ஆகியோர் தம் பிள்ளைகளை இந்த இல்லங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு இந்த இல்லங்கள் பற்றிய முழுமையான தகவல் கிடையாது. நான் இந்த இல்லங்களுக்குச் சென்று பார்த்ததும் கிடையாது.

ஸ்மைல் குழுவினர் சென்னை கொசப்பேட்டையில் இருக்கும் பெண்கள் இல்லத்துக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான சில பொருள்களை வாங்கிக்கொடுத்துள்ளனர். அப்போது அந்த இல்லத்தின் பொறுப்பாளர், உண்மையில் இந்தப் பெண்களுக்குத் தேவை கல்விக்கான உதவி என்று சொல்லியிருக்கிறார். பணம் அல்ல; நேரம். இந்தக் குழந்தைகளுக்கு பாடங்களில் உதவ யாரும் இல்லை. டியூஷன் என்று வெளியே எங்கும் செல்லமுடியாது. எனவே இல்லத்துக்கே வந்து டியூஷன் சொல்லிக்கொடுக்க முடியுமா என்று அவர் கேட்டிருக்கிறார். அப்படி ஆரம்பித்ததுதான் அவர்களுடைய சிக்‌ஷா திட்டம். கொசப்பேட்டை, வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் உள்ள இல்லங்களில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு விளையாட்டு கலந்து பாடங்களைச் சொல்லித்தர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அங்கிருந்து அடுத்த கட்டமாக புன்னகைப் பாலம் என்ற திட்டத்தில், 10, 12 வகுப்புப் பிள்ளைகளுக்கு அதிக மதிப்பெண்கள் பெறும் விதமாகப் பயிற்சி தரத் தொடங்கியுள்ளனர்.

ஒரு தன்னார்வலர் என்னிடம் இவை பற்றி விளக்கமாகச் சொன்னார். தன்னார்வலர்களோ பெரும்பாலும் ஆண்கள். இவர்கள் உதவச் செல்லும் இல்லங்களோ பெண்களை மட்டுமே கொண்டவை. இல்ல அலுவலரிடம் நம்பிக்கை ஏற்படுத்தி பயிற்சிகள் நடக்கும்போது திடீரென அலுவலர் இடம் மாறுவார். எனவே மீண்டும் ஆரம்பித்திலிருந்து அந்தப் புதிய அலுவலரிடம் தொடங்கவேண்டும். இதனால் எத்திராஜ் மகளிர் கல்லூரியைத் தொடர்புகொண்டு அங்கிருந்தும் சில தன்னார்வலர்கள் வந்து பாடம் கற்பிக்கத் தொடங்கினர். மேலும் ஸ்மைல் தன்னார்வலர்கள் பலரும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள். தின அலுவல்கள் தாண்டி அவர்களுக்கு நேரம் கிடைப்பதே சிரமம். அதற்கிடையிலும் பலர் குறைந்தபட்சம் வார இறுதியிலாவது இல்ல மாணவிகளுக்குப் பாடங்கள் கற்பித்தனர்.

இதன் விளைவாக தேர்வு பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் அதிகரித்தன. இப்போதெல்லாம் கிட்டத்தட்ட 100% தேர்ச்சி பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன். முன்னெல்லாம் இந்த இல்லங்களில் இருந்த பல பெண்களும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே மீண்டும் ஏழைமை வாழ்க்கைக்குத் திரும்பியபடி இருந்தனர். ஆனால் இப்போது மட்டும் என்னவாம்?

பள்ளிப் படிப்பு முடித்தாயிற்று. பிறகு, மீண்டும் அதே ஏழைமை வாழ்க்கைதானே?

அதனால்தான் ஸ்மைல் தன்னார்வலர்கள் சாதனா என்ற திட்டத்தைக் கொண்டுவந்தனர். தேவை கல்லூரிப் படிப்பு. ஏதோ ஒரு டிகிரி. அத்துடன் மிகுந்த தன்னம்பிக்கை. அதைக்கொண்டு ஒரு நல்ல வேலையைப் பெற்றுவிட முடியாதா என்ன?

ஆனால் இந்த மாணவிகள் எங்கு தங்கிப் படிப்பார்கள்? கல்லூரிக்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ. 1,500-ஓ என்னவோதான். ஆனால் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவேண்டுமென்றால் ரூபாய் 15,000 ஆகுமே? அந்தப் பணத்தில் இன்னும் பலரைப் படிக்கவைக்கலாமே?

ஸ்மைல் நிர்வாகிகள் தமிழகசமூக நலத்துறை அலுவலர்களிடம் சென்று பேசினர். ஏற்கெனவே 12-ம் வகுப்பு வரை இந்த இல்லங்களில் தங்கிப் படிப்பவர்களை தொடர்ந்து அதே இல்லங்களிலேயே தங்க அனுமதிக்க முடியுமா? இருப்பிடமும் உணவும் தரமுடியுமா? படிப்புக்கான செலவை ஸ்மைல் அளிக்கும்.

இதுவரையில் இப்படிப்பட்ட ஒன்றைச் சிந்தித்திராத சமூக நலத்துறையினர் நல்ல முடிவையே எடுத்தனர். தமிழகத்தில் ஏதேனும் ஓர் இல்லத்தில் தங்கி பள்ளிவரை படித்த மாணாக்கர்கள், அடுத்து கல்லூரிக்குச் செல்வதாகா இருந்தால் மீண்டும் அதுபோன்ற இல்லங்களில் தங்கிக்கொள்ளலாம்.

ஸ்மைலின் சாதனா திட்டம் நன்றாகச் செயல்படத் தொடங்கியது. பணத்தை எப்படியாவது திரட்டிவிடலாம் என்கிறார்கள் இவர்கள். இந்தக் கல்லூரிதான் என்றில்லை. குறைந்தபட்சம் ஒரு மாணவி மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். சிலர் பொறியியல் கல்லூரிகளில் படிக்கிறார்கள். மீதமுள்ள அனைவரும் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கிறார்கள்.

சரி, கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வந்தால் என்ன செய்வது? இந்த மாணவர்களுக்கு சாஃப்ட் ஸ்கில்ஸ் பயிற்சி கொடுத்து, ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்க பிலேஸ்மெண்ட் செல் ஒன்றை உருவாக்கியுள்ளது ஸ்மைல்.

இது தவிர சாஃப்ட் ஸ்கில் சொல்லிக்கொடுக்க கிராமப்புறங்களுக்குச் செல்கிறார்கள். இவர்கள் கல்வி உதவித்தொகை தந்து படிப்பை முடித்த சில மாணவர்களுக்கு வேலையும் வாங்கிக்கொடுத்துள்ளனர்.




நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இரு பெண்கள் பேசினர். இந்த இல்லங்களில் வசித்து, ஸ்மைல் கொடுத்த உதவியால் வாழ்க்கையில் முன்னுக்கு வந்த பெண்கள். (மேலே உள்ள படம் நிர்மலா என்பவருடையது.) மற்றொரு பெண் லோகாம்பா, இப்போது விகடனில் பணியாற்றுகிறார். எந்த அளவுக்கு ஸ்மைல் அவர்களது வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது என்பதை அருகிலிருந்து பார்க்கமுடிந்தது.

ஸ்மைல் தன்னார்வலர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பது முழுமையாகப் புரிந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்கள் உண்மையில் ஒரு சமூகப் புரட்சிக்கான விதையை நட்டிருக்கிறார்கள். வெறும் புலம்பல்கள் மட்டுமே மலிந்த மத்தியதரத்தினர் வசிக்கும் இந்தியாவில், மாபெரும் மாற்றத்தைத் தங்களால் கொண்டுவரமுடியும் என்பதை இவர்கள் காட்டியிருக்கிறார்கள். அலட்டல் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல், சிறிதாகத் தொடங்கி வலுவாக முன்சென்றபடி உள்ளனர் இவர்கள்.

ஏழைமையை ஒரே வாரத்தில் ஒழித்துவிடுவோம் என்று மார்தட்டும் அரசியல் ஆரவாரப் பேச்சல்ல இவர்களது. முன்கூட்டியே திட்டமிட்டு, இப்படித்தான் செல்லப்போகிறோம் என்று பாதையைத் தீர்மானித்து இவர்கள் ஆரம்பிக்கவில்லை. நம்மால் என்ன செய்யமுடியுமோ, முயன்று பார்க்கலாம் என்று ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதற்கான பாதை தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

அவர்களது செயல்முறையில் எனக்குப் பல அம்சங்கள் பிடித்திருந்தன.

1. அரசு அமைப்புகளுடன் வேலை செய்தல். ஆனால் அதே நேரம் அரசின் பணத்தை நம்பியிருக்காமை.
2. பணம் எப்படியும் சேர்த்துவிடலாம் என்ற அதீதமான நம்பிக்கை. இந்த பாசிடிவிசம் ஒன்றுதான் அவர்களை தைரியமாக முன்செல்ல வைக்கிறது. இந்தியாவில் இருந்துகொண்டு ஏதோ ஒரு மேற்கத்திய மத நிதியமைப்புக்கு புரபோசல் எழுதிப் பணம் சேர்த்து, எஸ்.யு.வி வாங்கிக்கொண்டு சமூக சேவை செய்யும் அமைப்பல்ல இவர்களது.
3. முழுமையான ஒரு தொலைநோக்கு இவர்களிடம் உள்ளது. அடிப்படைத் தேவைகளைத் தருகிறது அட்சயா திட்டம். படிப்பை வெறுக்கும் மாணவர்களுக்கு விளையாட்டாகக் கல்வியை அறிமுகப்படுத்துகிறது சிக்‌ஷா. ஆனால் அதே நேரம் பள்ளி இறுதி வகுப்பை நல்ல மதிப்பெண்களுடன் கடக்க உதவுகிறது புன்னகைப் பாலம். அங்கிருந்து கல்லூரிக்கு இட்டுச் செல்கிறது சாதனா; பின் வேலையும் பெற்றுத்தர உதவுகிறது.
4. ஸ்மைல் தன்னார்வலர்களுக்கும் உதவி பெறுபவர்களுக்கும் இடையில் சகோதர பாசம் நிலவுகிறது. நான் கொடுக்கிறேன், நீ பெறுகிறாய் என்ற இறுமாப்பு இல்லை. நிஜமான மனிதநேயத்தைக் காண முடிகிறது.
5. இது ஒரு செகுலர் அமைப்பு. சாதி, மதங்களற்ற ஒரு பார்வையை முன்வைக்கிறது.

இவர்கள் பெரிதாக வளரவேண்டும். பல இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும். ஆதரவற்ற ஆனால் பெரும் திறமைகொண்ட இந்திய இளைஞர்கள், தம் உண்மையான திறமையைப் பறைசாற்ற இவர்கள் உதவவேண்டும்.

மனமார வாழ்த்துகிறேன்.

7 ஆகஸ்ட் 2011 அன்று நடந்த ஸ்மைல் அமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டப் படங்களைப் பார்க்க

ஸ்மைல் அமைப்பினருடன் தொடர்புகொள்ள

ஆன்-லைன் வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை - தினமணி

வை. ராமச்சந்திரன் என்பவர் எழுதியிருக்கிறார். தங்கம் விலை ஏறுவதால் மக்கள் எல்லாம் கலங்கிப்போயிருக்கிறார்களாம். கல்யாணம் என்று மட்டும் இல்லாமல் பல்வேறு குடும்ப விழாக்களிலும் தங்க நகை செய்துபோடவேண்டுமாமா. ஆனால் இப்போது விலை ஏற்றத்தால் அதனைச் செய்யமுடியாமல் ஏழைகள் தடுமாறுகிறார்களாம். காரணம்?
குறைந்த அளவில் ‘மார்ஜின்’ பணம் செலுத்தி, அதிக அளவில் தங்கம் வாங்கும் வசதி ஆன்-லைனில் உள்ளது. அதாவது, ஒருவர் 100 கிராம் தங்கம் கடையில் வாங்க வேண்டுமானால், தங்கத்தின் அன்றைய விலைக்கு ஏற்ப மொத்தப் பணத்தையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், ஆன்-லைனில் 100 கிராம் தங்கத்தின் விலையில் 10 சதவீத அளவு ‘மார்ஜின்’ பணம் செலுத்தினாலேயே 100 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம். இது ஆன்-லைன் வர்த்தகத்தில் மட்டுமே சாத்தியம்.

ஆன்-லைனில் தங்கம் வாங்குவோர் அவர்களது தேவையைத் தாண்டி பல கோடி ரூபாய்க்கு ஆன்-லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாகி தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்கிறது.
தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்தியாவில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தங்க யூனிட்டுகளை மியூச்சுவல் ஃபண்ட்போல யூனிட் யூனிட்டாக (ஒரு கிராம் = ஒரு யூனிட்) வாங்கி வைத்துக்கொள்ளலாம். வேண்டியபோது விற்கலாம். இது டீமாட்டட் தங்கம். நீங்கள் ஒரு கிராம் வாங்கினால் அது உங்கள் வீட்டுக்கு வராது. மாறாக எங்கோ எதோ பாதுகாப்பான கோடவுனில் தங்கம் இருக்கும்; அதை நீங்கள்தான் வாங்கி இருக்கிறீர்கள் என்பதற்கான பத்திரம் மட்டும் உங்கள் பெயரில் டிஜிட்டலாக இருக்கும். இங்கே அடியில் இருப்பது நிஜமான தங்கம். முழுப் பணத்தையும் கொடுத்தால்தான் ஒவ்வொரு கிராமையும் வாங்கமுடியும். இதனை பங்குச்சந்தைகளில் வாங்கலாம். கிட்டத்தட்ட 12 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதனை இந்திய பங்குச்சந்தைகளில் (மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை) அளிக்கிறார்கள்.

இது மிகவும் வசதியானது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் சாதாரண ஏழைகூட இதனைச் செய்யலாம். என்ன வசதி? கழுத்தில் போட்டுப் பார்க்கமுடியாதே தவிர, தேயாது. தொலையாது. செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை. விற்கும்போது சேட்டு உரசிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. 100% சுத்தமான தங்கம். அதற்கான அன்றைய சந்தை விலை உங்களுக்குக் கிடைத்துவிடும். இன்ஷூர் செய்யவேண்டாம். வங்கி லாக்கர் தேடி ஓடவேண்டிய அவசியம் இல்லை.

அடுத்தது தங்க ஃபியூச்சர்ஸ் (Gold Futures). அனைத்துவித கம்மாடிட்டிகளும் (பண்டங்கள்) அவற்றின் எதிர்கால விலைகளும் MCX எனப்படும் Multi Commodity Exchange-ல் விற்பனைக்கு வருகிறது. இவற்றுக்கு அடியில் உண்மையான தங்கம் என்பது இல்லை. எதிர்காலத்தில் தங்கம் இன்ன விலைக்கு இருக்கலாம் (அதனால்தான் அதன் பெயர் ஃபியூச்சர்ஸ்) என்று சில வியாபாரிகள் தங்களுக்குள் பேரம் பேசிக்கொள்கிறார்கள். அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை. சிலர் விலை அதிகமாகும் என்றும் சிலர் நீங்கள் சொல்லும் அளவுக்கு அதிகமாகப் போகாது என்றும் பேசி முடிவு செய்துகொள்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல அவர்களுக்குள் ‘பெட்’ கட்டிக்கொள்கிறார்கள். தோற்றால் தோற்றவர் ஜெயித்தவருக்குப் பணம் தரவேண்டும். இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்னை? இது வெறும் சூதாட்டமல்ல. இதில் கொஞ்சம் தேவையும் அவசியமும் சேர்ந்தே இருக்கிறது. தன் கையில் நிறையத் தங்கம் வைத்திருப்பவர் அதன் விலை சடாரெனச் சரிந்துவிட்டால் அதனைச் சரிக்கட்ட விலைக்கு எதிர்த்திசையில் போட்டு வைத்துக்கொள்ளும் ஃபியூச்சர் உபயோகமானது. அதற்குள் இங்கு நாம் புகவேண்டாம்.

இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் தங்கம் விலை எந்தவிதத்திலும் உயரவோ தாழவோ செய்யும் என்று நான் நம்பவில்லை. இது ஒரு ஜீரோ சம் கேம். இதில் யார் பணம் பெறுகிறார்களோ, அதே அளவுக்கு யாரோ தோற்கிறார்கள். இருவருமே ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பேரம் பேசுபவர்கள். அது நாமல்ல. நாம் கையில் இருக்கும் உபரிப் பணத்தை உண்மையான தங்கமாக (என்னைக் கேட்டால் டீமாட் தங்கமாக) வாங்கி வைத்துக்கொள்வோம். பலனடைவோம்.

ஐயோ, ஏழைகள் வயிற்றில் அடிக்கிறார்களே என்று காரணமே இல்லாமல் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது. ஏன் ஒரு பொருளின் விலை ஏறுகிறது? அதன் சப்ளை குறைவு. டிமாண்ட் ஜாஸ்தி. இப்போது பங்குச்சந்தைகள் கொஞ்சம் டகால்டியாக மேலும் கீழுமாக யோயோவாய்ப் போய்க்கொண்டிருப்பதால், சேஃப்டி என்பதைக் கருத்தில் கொண்டு பலரும் தங்கத்தில் உண்மையான முதலீட்டைச் செய்கிறார்கள் (ஊக பேர வணிகம் அல்ல!) என்பதால் தங்கத்தின் விலை சரசரவென ஏறுகிறது. நாளை பங்குச்சந்தைகள் சீராகிவிட்டால் தங்கத்தில் போட்ட பணத்தை எடுத்து பங்கில் போடுவார்கள். தங்கம் கொஞ்சம் சரியும்.

அவ்வளவுதான். இதற்காக ஆன்-லைன் வர்த்தகத்தை ஏன் நிறுத்தவேண்டும்?

அவ்வப்போது வெள்ளையன் கோஷ்டிகள், உணவுப்பொருள் தொடர்பான ஆன்-லைன் வர்த்தகத்தை நிறுத்தச் சொல்லிப் போராடுவார்கள். அதுபோலத்தான் இதுவும். ஆன்-லைன் வர்த்தகத்தில், என் ஆன்-லைன் ஃபியூச்சர்ஸில்கூட, பிரச்னை ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்தப் பொருளுக்கும் சும்மா விலையை ஏற்றிவிட முடியாது. ஒன்று அதற்கு நிஜமாகவே கிராக்கி அதிகமாக இருக்கவேண்டும். இரண்டு, வேண்டிய அளவைவிடக் குறைவாக அதன் உற்பத்தி இருக்கவேண்டும். இல்லாமல் விலையைத் தொடர்ந்து ஏற்றுவது சாத்தியமே அல்ல.

ஏழைகளை வஞ்சிக்கும் மசோதா - தினமணி

பல நேரங்களில் உளறல் கட்டுரைகளைக் காணும்போதெல்லாம் கை துறுதுறுக்கும். நேரம்தான் இருக்காது. இன்று தினமணி நடுப்பக்கத்தில் வந்திருக்கும் இரண்டு கட்டுரைகளுக்கும் மறுப்பு எழுதியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

பி.எஸ்.எம். ராவ் எழுதியுள்ள ஏழைகளை வஞ்சிக்கும் மசோதா!

குறுங்கடனைக் கட்டுப்படுத்த நிதியமைச்சகம் கொண்டுவரப்போகும் சட்ட மசோதாவின் வரைவைப் படித்துவிட்டு கண்ணீர் உகுத்துக்கொண்டே கட்டுரையாளர் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறாராம். இந்த மசோதா ஏழைகளை வஞ்சிக்கப்போகிறதாம்.

வரிக்கு வரி இந்தக் கட்டுரையை விமரிசிப்பதைவிட, இந்த மசோதாவின் சாரமான மூன்று புள்ளிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.

1. தனியார் குறுங்கடன் நிறுவனங்கள் மோசமானவை. கந்துவட்டிக்காரர்களைவிடக் கொடுமையானவை. “குறுங்கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன் வசூலிப்பு முறை கந்துவட்டிக்காரர்களைவிடக் கொடுமையானது. வட்டி விகிதம் மீட்டர் வட்டிக்கு நிகரானது. இந்த வட்டியால் பல்கிப் பெருகிய கடன் தொகையைக் கட்டமுடியாமலும், அவமானத்துக்குப் பயந்தும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழைகள் பலர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர்.”

இது முழுப்பொய். இந்தியாவின் குறுங்கடன் வழங்கும் எந்த நிறுவனமும் எந்தக் காலத்திலும் ஆண்டுக்கு 30-32% என்பதற்குமேல் வட்டி வசூல் செய்ததில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் ஆண்டுக்கு 24-26% என்ற கணக்கிலேயே வசூலிக்கிறார்கள். சமீபத்தில் மாலேகாம் கமிட்டி அளித்த பரிந்துரையில் 24% உச்சபட்ச வரையறையாக இருந்த வட்டி விகிதம், ரிசர்வ் வங்கியின் மாற்றங்களுடன் இப்போது 26% என்று ஆக்கப்பட்டுள்ளது. அனைத்துக் குறுங்கடன் நிறுவனங்களும் இதனைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.

அனைத்துக் கந்துவட்டி நிறுவனங்களும் மாதத்துக்கு 3% முதல் 10% வரை (அதாவது ஆண்டுக்கு 36% முதல் 120%) வட்டி வசூலிக்கின்றனர். அதுவும் diminishing balance-ல் அல்ல. வெறும் simple interest தான். அதாவது வட்டி மட்டும் கட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அசலில் குறைவே ஏற்படாது. மாறாக குறுங்கடன் அனைத்துமே குறையும் முதலைக் கொண்ட வட்டிகள். இதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் (பொதுவாக ஓராண்டு) கடன் முழுதாக அடைந்துவிடும். மீட்டர் வட்டி என்றால் என்னவென்றே ராவுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

நாள் ஒன்றுக்கு ரூ. 100-க்கு ரூ. 5 வட்டியாகக் கொடுக்கும் சென்னை காய்கறிக் கடைக்காரர்களைப் பற்றி அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ எழுதியுள்ள Poor Economics என்ற புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார்கள். ராவ் அதைப் படித்தால் கொஞ்சம் தெளிவு பெறலாம்.

ஆந்திரப் பிரதேசத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டது. இது தொடர்பாக முழுமையான தகவல்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு தகவல் ஆந்திராவில் இதுவரை 85 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அரசு கூறுவதாகச் சொல்கிறது. ஆந்திராவில் சில குறுங்கடன் நிறுவனங்கள், கடனை வசூலிக்க மிக மோசமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்தன. ஆந்திராவில் இரண்டுமுறை இது பெரிய பிரச்னையாகியுள்ளது. ஆந்திரா பற்றித் தனியாக எழுதுகிறேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் இதுபோன்ற பிரச்னை எழுந்துள்ளது? ஓரிடத்திலும் அல்ல.

2. மத்திய அரசின் மசோதா, இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரத்தையும் ரிசர்வ் வங்கியிடம் அளிக்கிறது. மாநிலங்களுக்கு இதில் தலையிட உரிமை இல்லை. “இந்த மசோதாவின்படி குறுநிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முழு உரிமையும் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எந்த வகையிலும் மாநில அரசுகள் இந்த நிறுவனங்களைக் கேள்வி கேட்க முடியாது. கட்டுப்படுத்தவும் முடியாது. தனியாகச் சட்டமியற்றுவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது.”

இதில் என்ன பிரச்னை? நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை ரிசர்வ் வங்கியிடம் மட்டும்தான் இருக்கவேண்டும். வங்கிகள், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் என அனைத்தையும் ரிசர்வ் வங்கிதானே கட்டுப்படுத்துகிறது? இது எதோ மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பிடுங்கிக்கொண்டதுபோல எழுதுகிறார் ராவ். உண்மையில் ஆந்திராவில் மாநில அரசு தலையிட்டு தானாகவே ஒரு சட்டத்தை இயற்றியதுதான் பிரச்னையே. காரணம்: குறுங்கடன் தொடர்பாக மத்திய அரசு சட்டம் ஏதும் இயற்றாததுதான். அந்தக் குறையைத்தான் இப்போது மத்திய அரசு சரி செய்ய முனைந்துள்ளது.

3. தனியார் குறுங்கடன் நிறுவனங்கள் எதற்கு? நபார்ட், சிட்பி, சுய உதவிக் குழுக்கள் ஆகியவை போதுமே? தனியாரை இந்தத் துறையில் விட்டதுதான் பிரச்னையே.

நாட்டின் உள்ள கிரெடிட் தேவையைச் சிறிதும் புரிந்துகொள்ளாத அப்பாவிதான் இந்த ராவ். இத்தனை தனியார் குறுங்கடன் நிறுவனங்கள் இருந்தும் ஏழைகளுக்கு மேலும் கடன் தேவையாக இருக்கிறது. வங்கிகள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நியாயமான முறையில் நிரப்புகின்றன குறுங்கடன் நிறுவனங்கள். அவற்றிலும் சில மோசமான அமைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தத்தான் சட்டங்கள் வேண்டும். அமைப்புகள் வேண்டும். இப்போது இயற்றப்பட உள்ள சட்டமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடும் இதனை நன்றாகவே செய்யும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏன் போதா; ஏன் தனியார் குறுங்கடன் நிறுவனங்கள் அவசியம் தேவை என்பதைப் பற்றி பின்னர் ஒரு பதிவில் விளக்குகிறேன்.

***

அடுத்து தங்கம் பற்றிய பதிவு.

Saturday, August 06, 2011

பெர்ன்ஹார்ட் ரீமான்

(அம்ருதா பத்திரிகையில் இந்த மாதம் வெளியாகியிருக்கவேண்டும். நான் இன்னும் இதழைப் பார்க்கவில்லை.)

செப்டெம்பர் 17, 1826 முதல் ஜூலை 20, 1866 வரை வெறும் 40 வருடங்களே வாழ்ந்து கணித உலகுக்கு மாபெரும் கொடையை அளித்தவர் பெர்ன்ஹர்ட் ரீமான். இவரது வாழ்க்கைக்கும் ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பல வித்தியாசங்களும் உள்ளன. இருவரும் மிகக் குறைவான ஆண்டுகளே வாழ்ந்தனர். இருவரது இளமைக் காலமும் ஏழைமையில்தான் கழிந்தது. இருவரும் மிக முக்கியமான ஒரு கணிதச் சிக்கல் தொடர்பாக (பகா எண்கள்) ஆராய்ச்சிகள் செய்தனர். இருவரும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கையில் பணம் கிடைக்கும் நேரத்தில், கடுமையான நோயில் ஆழ்ந்து, உயிரை விட்டனர்.

ஆனால் ஒற்றுமை அவ்வளவே.

ரீமான் செய்த புண்ணியம் அவர் ஜெர்மனியில் பிறந்தது. ராமானுஜன்போல, பிரிட்டிஷ் அட்சியில் அடிமையாகக் கிடந்த இந்தியாவில் அல்ல. ரீமானைச் சுற்றிலும் கணித விற்பன்னர்கள் பலர் இருந்தனர். முக்கியமாக கார்ல் பிரெடெரிக் கவுஸ் அப்போது உயிருடன் இருந்தார்.

ரீமான் பிறந்தது ஒரு லுத்தரன் சர்ச் பாதிரியார் வீட்டில். எண்ணற்ற குழந்தைகள். அதில் பல வரிசையாக இறந்தன. பெர்ன்ஹார்ட் ரீமானின் தாயும் விரைவில் இறந்தார். ரீமான் பள்ளிப் படிப்பை, தன் பாட்டி வீட்டிலிருந்தபடித்தான் செய்தார்.

ராமானுஜனின் கதையைப் படிக்கும்போது, கணித ஆராய்ச்சியில் அவரை ஆழவைத்தது எது என்று பார்த்தோம். அதே கதைதான் ரீமான் வாழ்க்கையிலும். பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது, ரீமானின் கணிதத் திறமையைப் பார்த்த தலைமை ஆசிரியர், தன் சொந்த நூலகத்திலிருந்து ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக்கொடுத்து ரீமானைப் படிக்கச் சொல்லியுள்ளார். அந்தப் புத்தகம் லெஜாந்த்ர எழுதிய ‘எண்களின் கோட்பாடு’ என்ற புத்தகம். வெறும் ஆறே நாள்களில் ரீமான் இந்தப் புத்தகத்தை மனப்பாடம் செய்துவிட்டார்!

இந்தப் புத்தகம் ரீமானின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. அந்தக் காலத்தில் கணித மேதைகள் அனைவரையும் ஆட்டி எடுத்த ஒரு சிக்கல் பகா எண்கள் பற்றியது. ஆங்கிலத்தில் இவற்றை பிரைம் நம்பர்ஸ் என்கிறோம். 1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.

4 = 2 x 2
6 = 2 x 3
8 = 2 x 2 x 2
9 = 3 x 3

ஆனால், 2, 3, 5, 7, 11, 13 போன்ற எண்களை இப்படி மேற்கொண்டு பகுத்து, சிறு சிறு எண்களின் பெருக்குத் தொகையாகக் காட்ட முடியாது. இப்படி பகுக்க முடியாத எண்களை பகா எண்கள் (பிரைம் நம்பர்ஸ்) என்கிறோம். பகுக்கக்கூடிய எண்களை பகு எண்கள் (காம்போஸிட் நம்பர்ஸ்) என்கிறோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே யூக்ளிட் என்ற கிரேக்க கணித விற்பன்னர், பகா எண்கள் முடிவின்றி நீளக்கூடிய ஒரு வரிசை என்பதை மிக அழகாக நிரூபித்திருந்தார். அதாவது எண் வரிசையில் நீங்கள் சென்றுகொண்டே இருந்தால், திடீரென பகா எண்கள் காணாமல் போய்விடா. அவ்வப்போது பகா எண்கள் வந்துகொண்டேதான் இருக்கும். முடிவற்று வந்துகொண்டே இருக்கும்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குக் கீழ் எத்தனை பகா எண்கள் உள்ளன? 1-லிருந்து 10-க்குள் எத்தனை பகா எண்கள்? 2, 3, 5, 7 = 4 பகா எண்கள். 100-க்குள் எத்தனை பகா எண்கள்? 25.

எண்எத்தனை
பகா எண்கள்?
104
10025
1,000168
10,0001,229
100,0009,592
1,000,00078,498
10,000,000664,579
100,000,0005,761,455
1,000,000,00050,847,534

எந்த எண்ணைக் கொடுத்தாலும் அதைவிடக் குறைவாக எத்தனை பகா எண்கள் உள்ளன என்று ‘டக்’ என்று சொல்லிவிட முடியுமா? கவுஸ், லெஜாந்த்ர இருவருமே இந்தச் சிக்கலைப் பற்றி யோசித்தார்கள். இருவருமே இதற்கான தோராயமான விடையைத் தனித்தனியாகக் கண்டுபிடித்தார்கள்.

Pi(n) ~ n / ln (n)

பின்னர், கவுஸ் இதனை மேலும் செம்மையாக்கினார்.

லெஜாந்த்ரவின் புத்தகத்தால் ஈர்க்கப்பட்ட ரீமான் பின்னர் கல்லூரி சென்று பல புதிய விஷயங்களைக் கற்கத் தொடங்கினாலும் பகா எண்கள் அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தன. இன்னும் துல்லியமாக பகா எண்களின் எண்ணிக்கையைக் கணிக்க முடியுமா என்று சிந்திக்கத்தொடங்கியதன் விளைவாகவே அவர் கலப்பு எண்கள் (காம்ப்லெக்ஸ் நம்பர்ஸ்) என்ற துறைக்குள் மூழ்கினார். தன் 25 வயதில் 'Foundations for a general theory of functions of a complex variable' என்ற தலைப்பில் ஒரு முனைவர் பட்ட ஆய்வறிக்கையை ரீமான், கொட்டிங்கன் பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்தார்.

அங்கே அவரது முனைவர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தது கவுஸ்! அந்தக் கட்டத்தில் கவுஸ் தனது முதுமையில் இருந்தார். அவரது வாழ்க்கையில் இன்னமும் நான்கு ஆண்டுகள் மட்டுமே பாக்கி இருந்தன. ரீமானின் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்ததும் கவுஸ் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அவர் எழுதினார்: ‘ரீமானின் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஆழமானது, மிக முக்கியமானது. அத்துடன் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக எந்த அளவுக்கு நாம் தரத்தை எதிர்பார்க்கிறோமோ, அதை இது தொட்டுள்ளது என்பது மட்டுமல்ல, அதைப் பெருமளவு தாண்டியும் சென்றுவிட்டது.’

இதைவிட ஒரு பாராட்டு ரீமானுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால், அந்தக் காலத்தில் இதற்கெல்லாம் யார் வேலை கொடுக்கப் போகிறார்கள்? பல்கலைக்கழக வேலைகளே குறைவாக இருந்த காலம் அது. கவுஸ், அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் யோஹான் டிரிச்லே இருவரும் பேராசிரியர்களாக இருந்தனர். இன்னொரு வேலை கிடையாது. ஆனால் சம்பளம் இல்லாத லெக்சரர் பதவி ஒன்று கிடைக்கலாம். பல்கலைக்கழகம் சம்பளம் கொடுக்காதே தவிர, மாணவர்கள் தாமாக ஏதேனும் தந்தால் வாங்கிக்கொள்ளலாம்!

சரி, அப்படியான வேலையைத் தூக்கிக் கொடுத்துவிடுவார்களா என்றால் அதுவும் கிடையாது. தன் திறமையை ரீமான் நிரூபிக்கவேண்டும். அதற்கு அவர் மாணவர்களும் பேராசிரியர்களும் நிரம்பியிருக்கும் அவையில் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு லெக்சர் கொடுக்கவேண்டும். அதன் தகுதியின் அடிப்படையில்தான் இந்தச் சமபளம் இல்லாத வேலையே அவருக்குக் கிடைக்கும்.

ரீமானுக்கு அது ஒன்றும் அவ்வளவு பெரிய சிக்கல் இல்லை என்றுதானே நினைப்பீர்கள். சிக்கல் இல்லைதான். ரீமான் தனக்குப் பிடித்த மூன்று தலைப்புகளைக் கொடுக்கவேண்டும். அதில் ஒன்றை கவுஸ் தேர்ந்தெடுப்பார். குறிப்பிட்ட நாளில் ரீமான் அதைப்பற்றிப் பேசினால் போதும். ரீமான் இரண்டு தலைப்புகளைக் கொடுத்துவிட்டார். கொஞ்சம் யோசித்துவிட்டு, அப்போது அவர் வேலை செய்துகொண்டிருந்த ‘ஜியாமெட்ரிக்கு ஒரு புது அடிப்படை’ என்பதை மூன்றாவது தலைப்பாகக் கொடுத்துவிட்டார்.

பொதுவாக முதல் அல்லது இரண்டாவது தலைப்பையே கொடுப்பதுதான் வாடிக்கை. ஆனால் கவுஸ் ஜியாமெட்ரி பற்றி நிறையவே யோசித்துவைத்திருந்தார். அவரது வாழ்க்கையை வானியல் பிடுங்கிக்கொண்டிருக்காவிட்டால் கவுஸ் ஜியாமெட்ரியில் என்னென்னவோ செய்திருப்பார். ஏற்கெனவே ரீமான் செய்திருந்த முனைவர் பட்ட ஆராய்ச்சி கவுஸை வெகுவாகக் கவர்ந்திருந்தது. எனவே ஜியாமெட்ரி பற்றி இந்தப் பையன் என்ன சொல்லப்போகிறான் என்று பார்க்க கவுஸுக்கு ஆர்வம். எனவே மூன்றாவது தலைப்பைத் தேர்ந்தெடுப்பதாகச் சொல்லிவிட்டார்.

ரீமான் இது தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்திருந்தாலும், அதில் மேலும் சில வேலைகள் பாக்கியிருந்தன. இப்போது கவுஸ் அதைத் தேர்ந்தெடுத்திருப்பதால் சொதப்பிவிடக்கூடாதே என்ற பயம் வேறு பிடித்துக்கொண்டது. தான் செய்துகொண்டிருந்த அனைத்தையும் விட்டுவிட்டு மாதக்கணக்காக ஜியாமெட்ரியில் மூழ்கினார் ரீமான். கவனியுங்கள்... இத்தனையும் எதற்கு? சம்பளமில்லாத ஒரு வேலைக்காக. யுஜிசி பே ஸ்கேல் மாதச் சம்பளம் வாங்க அல்ல!

ஆனால் அதன் விளைவாக உருவானதுதான் மிக அற்புதமான ஒரு துறை. ரீமானியன் ஜியாமெட்ரி என்ற பெயரிலேயே விளங்குவது. ஜியாமெட்ரியை யூக்ளிடின் இரும்புக்கரங்களிலிருந்து விடுவித்தது இந்த ஆராய்ச்சி.

கிரேக்கர்கள் பிளேன் ஜியாமெட்ரி எனப்படும் சமதள வரைகணிதத்தில் விற்பன்னர்களாக விளங்கினர். அவர்களது சிந்தனைகளையெல்லாம் தொகுத்துத்தான் யூக்ளிட் ஒரு புத்தகத்தை எழுதி அழியாப்புகழ் பெற்றிருந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்தப் புத்தகம்தான் மேற்குலகில் கோலோச்சியது. இரு இணைகோடுகள் ஒன்றை ஒன்று வெட்டாது என்ற கருதுகோள் அதில் ஒன்று. இதுபோன்ற கருத்துகள் ஜெர்மன் தத்துவவியலிலும் வலுவாகப் புகுந்துகொண்டது. ஆனால், கவுஸின் கண்டுபிடிப்புகள் வேறுவிதமாகச் சொல்லின. சமதள ஜியாமெட்ரி மட்டும்தான் ஜியாமெட்ரி என்பதல்ல, பிற ஜியாமெட்ரிகளும் உள்ளன என்று அவர் சொன்னார். ஆனால் அத்தனை பெரிய ஆளுமையாக இருந்தாலும் தனது கண்டுபிடிப்புகளை வெளியே சொல்ல கவுஸ் பயப்பட்டார். காந்த் போன்ற தத்துவவியலாளர்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் அவர்கள் கவுஸைக் காலி பண்ணிவிடுவார்கள்!

கவுஸ் வெளியே சொல்லாமல் கோடு போட்டிருந்தார். ஆனால் ரீமான் முழுமையான ரோடே போட்டுவிட்டார். அதுவும் எத்தகைய சாலை? நெடுஞ்சாலை. இந்த நெடுஞ்சாலையில்தான் சில ஆண்டுகள் கழித்து ஐன்ஸ்டைன் ஒளியின் வேகத்தில் தன் வண்டியை ஓட்டிச் செல்லப்போகிறார்.

மனிதர்களால் நேர் கோடுகளைப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியும். வளைந்த கோடுகளையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் சின்னஞ்சிறு எறும்புக்கு நேர் கோடு, வளைந்த கோடு என்ற வித்தியாசம் ஏதும் உள்ளதா என்ன? ஒரு பெரிய பரப்பில், ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல எறும்பு தன்னளவில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. சொல்லப்போனால், அதற்கு, தான் சென்று சேரப்போகும் இடம் எது என்று அந்த இடத்துக்கு அருகில் செல்லும்வரை தெரியாது. எனவே, தான் இருக்கும் இடத்திலிருந்து வளைந்தோ நெளிந்தோ சென்றுகொண்டே இருக்கும்.

அதேபோலத்தான் வளைந்து நெளிந்த, மேடும் பள்ளமுமான இரு பரிமாணப் பரப்பு. இதையும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நாம் வசிக்கும் இந்த முப்பரிமாண உலகம்? இது எப்படிப்பட்டது? இது வளைந்து நெளிந்ததா அல்லது சீரானதா என்பதை இதில் வசிக்கும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஒருசில அதீதப் பிரக்ருதிகளால் நான்கு பரிமாண உலகு என்பதில் வசிக்கமுடியும் என்று வைத்துக்கொண்டால், அவர்களால் நாம் வசிக்கும் முப்பரிமாண உலகைப் பார்க்க முடியும். நம் முப்பரிமாண உலகம் சீரானதா அல்லது வளைந்து நெளிந்துகிடப்பதா என்று அவர்களால் பார்க்கமுடியும். எப்படி நம்மால் எறும்புகளின் பாதையைக் கணக்கிட முடியுமோ, அப்படி.

அப்படிப்பட்ட ஒரு பல பரிமாண உலகை ரீமான், மேனிஃபோல்ட் என்று அழைத்தார். அது (ஒரு நேர்கோடு போல அல்லது ஒரு சமதளம் போல) சீராக உள்ளது என்று எடுத்துக்கொள்ளாமல், அது தன்னிஷ்டத்துக்கு (வளைந்த கோடு போல, அல்லது மேடும் பள்ளமும் நிறைந்திருக்கும் தளம்போல) இருக்கும் என்று வைத்துக்கொண்டார். அப்படிப்பட்ட பல பரிமாண மேனிஃபோல்டுகளின் இரு புள்ளிகளுக்கு இடையேயான தொலைவு என்ன, எந்த ஒரு புள்ளியை எடுத்துக்கொண்டாலும் அதன் அடிப்படை குணமான ‘வளைவு’ (கர்வேச்சர்) என்ன என்பது போன்ற விஷயங்களிலிருந்து ஆரம்பித்தார். ஒரு புதிய ஜியாமெட்ரி தயார்.

இந்த லெக்சரைக் கேட்ட கவுஸ் சந்தோஷம் அடைந்திருப்பார் என்பதில் வியப்பேதும் இல்லை.

ரீமானுக்கு சம்பளமில்லா லெக்சரர் வேலை கிடைத்தது. பின்னர் கொஞ்சமாக அவருக்கு உதவித்தொகையும் கிடைத்தது. கவுஸ் இறந்தபின், டிரிச்லேயும் இறந்தபின், அந்த வேலையும் முழுச்சம்பளத்துடன் ரீமானுக்குக் கிடைத்தது.

மற்றொரு பக்கம், ரீமானுக்குத் திருமணம் நடந்தது. அவரது தந்தை மறைந்தார். அவரது சகோதரிகள் அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பு ரீமானிடம் வந்தது. தங்கைகள் சிலர் மரணமடைந்தனர். மொத்தத்தில் நோயும் குடும்பத் தொல்லைகளும் ரீமானைக் கடைசிவரை வாட்டின. அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ரீமானின் உடல்நிலை வெகுவாக மோசம் அடைந்தது. ஜெர்மனியின் குளிர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் குளிர் காலத்தில் இத்தாலி நாட்டில் போய் வசிக்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். அப்படிச் செய்தும் அது பெரிய பலனைத் தரவில்லை. தன் 40-வது வயதில் இத்தாலியில் அவருடைய உயிர் பிரிந்தது.

***

பகா எண்களைப் பற்றி ஆராய்ந்துகொண்டிருந்தபோதுதான் ரீமான், ஸீட்டா ஃபங்க்ஷன் என்பதைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.இந்த ஸீட்டா ஃபங்க்ஷன் பற்றி ராமானுஜனுக்கு ஒன்றுமே தெரியாது. சொல்லப்போனால், ராமானுஜனுக்கு இந்தியாவில் இருந்தவரை கலப்பெண்கள் பற்றித் தெரிந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கவில்லை. ஆனாலும் ரீமான் சென்றிருந்த பாதையில் ராமானுஜனும் சென்றிருந்தார். ஆனால் அடிப்படைக் கருவிகளின் போதாமையால் சில தவறுகளைச் செய்திருந்தார். இருந்தும், ராமானுஜன் கொடுத்திருந்த ஒரு சமன்பாடு, குறிப்பிட்ட ஓர் எல்லை வரை, பகா எண்களின் கணிப்பை மிக நன்றாகச் செய்தது. ராமானுஜனின் ஒரு சமன்பாட்டைக் கொண்டு, பின்னர் இங்காம் என்பவர் 1930-ல் பகா எண் தேற்றத்தை (அதாவது பகா எண்களின் எண்ணிக்கை n / ln (n) என்ற மாதிரிச் செல்லும்) நிரூபித்தார். ரீமான் ஸீட்டா ஃபங்க்ஷனின் துணை கொண்டு ஹடமார்ட் என்பவரும் தி லா வாலீ பூஸான் என்பவரும் பகா எண் தேற்றத்தை முன்னதாக 1896-லேயே நிரூபித்திருந்தனர்.

***

ரீமானின் சாதனைகள் கணிதம் தாண்டி இயல்பியலிலும் உள்ளன. கணிதத்திலும் மேலே சொன்ன ஓரிரு எடுத்துக்காட்டுகளைத் தாண்டி பல துறைகளில் உள்ளன. விரித்துச் சொல்ல இந்த இடம் போதாது.

ஒரே ஒரு புத்தகம் ஒரு மாணவனை எங்கேயோ உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு ரீமான் சிறந்த எடுத்துக்காட்டு. இதில் கணித ஆசிரியர்கள் கவனத்தைச் செலுத்தவேண்டும். உங்கள் நூலகத்தில் நல்ல கணிதப் புத்தகங்கள் இருக்கின்றனவா? உங்களது மிகச் சிறந்த மாணவரைத் தேர்ந்தெடுத்து அந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுங்கள். நாளையே ஒரு ரீமான் அல்லது ஒரு ராமானுஜன் உங்கள் கண் முன்னாலேயே உருவாகக்கூடும்.

Wednesday, August 03, 2011

ரஜினியின் பன்ச்தந்திரம் - வெள்ளி மாலை 6.00 மணிக்கு

நியூ ஹொரைஸன் மீடியா ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டுள்ள புத்தகம் Rajini's PUNCHtantra / ரஜினியின் பன்ச்தந்திரம்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது? என்று முன்னதாக டிசம்பர் 2010-ல் ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவை எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது தொடங்கி இந்தப் புத்தகம் தொடர்ந்து top of the chart-லேயே இருந்துவந்துள்ளது. கிழக்கு புத்தகங்கள் கிடைக்கும் எல்லா இடங்களிலும் கிடைப்பதைத் தவிர, யுனிவெர்செல் செல்பேசிக் கடைகள் பலவற்றில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. இப்போது இந்தப் புத்தகத்தின் 30 பன்ச் வசனங்களையும் 30 எபிசோடுகளாக ராஜ் டிவி தயாரித்து வாராவாரம் ஒளிபரப்ப உள்ளது. இந்த மாசக் கடைசியிலோ அல்லது அடுத்த மாதத்திலோ நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடும். சேலத்தில் உள்ள கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று எழுத்தாளர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி தயாரித்தது. அது விரைவில் சேலம் முழுவதும் கேபிளில் வலம் வர ஆரம்பிக்கும். பிற நகரங்களிலும் கேபிள் தொலைக்காட்சிகளில் தெரியலாம். இதுபற்றிய தகவலை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வாரம், 5 ஆகஸ்ட் 2011 அன்று மாலை 6 மணிக்கு, அமிஞ்சிக்கரை, அம்பா ஸ்கைவாக் மால், லாண்ட்மார்க் புத்தகக் கடையில் இந்தப் புத்தகம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழ் இதோ:

புத்தகத்தின் இரு எழுத்தாளர்களுடன் சினிமா மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொள்ளும் சுவாரசியமான நிகழ்ச்சியாக இது இருக்கும். இதன் எடிட்டட் ஒளிப்பதிவும் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும்.

இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். ஒரு புத்தகம், தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஆவது மிகவும் மகிழ்ச்சியைத் தருவது. அதுவும் சானல் ஒன்று எங்கள் பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இந்த நிகழ்ச்சியைத் தயாரிப்பது, தமிழ்ப் பதிப்புலகத்துக்கு நல்ல செய்தி.

இந்தப் புத்தகத்துக்கு என்று தனியான ஒரு இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம். புத்தகம் தொடர்பான பல செய்திகளும் இங்கே வெளியாகும்.

Tuesday, August 02, 2011

சமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் வீம்பு

சமச்சீர் கல்வித் திட்டம் என்று சொல்லப்பட்டு கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது வெறும் ஒற்றைப் பாடத்திட்டமே. எப்படி புரட்சி, சமூகநீதி போன்ற சொற்கள் எல்லாம் தமிழகத்தில் பொருள் இழந்துபோயுள்ளனவோ அதேபோலத்தான் இந்த சமச்சீர் என்ற சொல்லும்.

அடிப்படையில் நான் ஒற்றைப் பாடத்திட்டம் என்பதை எதிர்க்கிறேன். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தமக்கென தனியொரு பாடத்திட்டம் வேண்டினால் அதைக் கொடுத்துவிட்டுப் போய்விடலாம். அதில் சிக்கல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதையும் விடுத்து மாநில வாரிய (ஸ்டேட் போர்ட்) பட்டயத்துக்கே ஒன்றுக்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. இதை மேலும் விரிவாகப் பேசவேண்டும், வேறோர் இடத்தில்.

இந்தப் பதிவின் நோக்கம் ஜெயலலிதாவின் வீம்பைப் பற்றிப் பேசுவது. கருணாநிதி எதைக் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பதே தன் நோக்கம் என்பதாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் என்பது ஒரு பக்கம். வேறு யார்மீதும் எந்தக் கரிசனையும் இல்லாது நடந்துகொள்ளும் அகங்காரமான மனோபாவம் மற்றொரு பக்கம். பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து இரண்டு முழு மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் சரியான புத்தகங்கள் போய்ச் சேராமல் இருப்பதற்கு முழுமையான காரணம் ஜெயலலிதாதான். கருணாநிதிமீதான போரில் கொல்லேட்டரல் டேமேஜ் தமிழக மாணவர்கள்தானா?

இதனை வெளிப்படையாகச் சொல்லி அவரைக் கண்டிக்க எந்தத் தமிழ்நாட்டுப் பத்திரிகைக்கும் துப்பு இல்லை. தலையங்கங்கள் இதனைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தெருவில் ஒரு போஸ்டர் பார்த்தேன். அதில் யாரோ ஒரு கோவிந்து ‘அம்மா, தாயே, ஏதாச்சும் ஒரு சிலபஸை அப்ரூவ் செய்து எங்க பிள்ளைகள் வாழ வழி செய்யுங்கள், தாயே’ என்று பிச்சை எடுக்கிறார். கல்வி என்பது உரிமை. அதற்காகப் பிச்சையா கேட்கவேண்டும்? அந்த உரிமையில் ஜெயலலிதா வீம்புக்காகத் தலையிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கிறார். முக்கியமாக இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடையும் மன உளைச்சல் பற்றி அவர் கடுகளவும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதில் கருணாநிதியின் தவறே இருந்துவிட்டுப் போகட்டும். மாணவர்களைப் பாதிக்காமல் ஒரு முடிவு எடுத்துவிடமுடியாதா என்ன? எதற்காக விடாமல் இந்த கோர்ட், அந்த கோர்ட் என்று இழுத்தடிக்கவேண்டும்? இது என்ன சொந்த சொத்துக் குவிப்பு வழக்கா? அங்கு வாய்தா மேல் வாய்தா வாங்கினால் அதற்காவது நியாயம் கற்பிக்கலாம். ஆனால் இங்கு?

ஜெயலலிதாவின் ஆட்சிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த ஒன்றுதானே, அட்ஜஸ்ட் செய்துகொள்வோம், பிற விஷயங்கள் எல்லாம் பிரமாதமாகச் செய்கிறார் என்று பாராட்டுவது அபத்தம். நாளை அவருக்குப் பிடிக்காத ஒன்று நடைபெறுகிறது என்றால் அப்போது எந்தமாதிரியான ருத்ர தாண்டவம் ஆடுவார் இவர் என்பதை இந்த முதல் கோணலே காட்டிக்கொடுத்துவிட்டது.