Tuesday, June 14, 2016

பசித்திருக்கும் உலகத்துக்கு உணவு

ஆர்கானிக் விவசாயம் (இயற்கை விவசாயம்) பற்றி மட்டும்தான் இன்று அனைவரும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் நிஜத்தில் இன்று மிகப் பெரும்பான்மையான விவசாயம் ரசாயன உரத்தின் ஆதரவால்தான் நிகழ்ந்துவருகிறது. ரசாயன உரங்களை எடுத்துவிட்டால் உலகில் பட்டினியும் பஞ்சமும்தான் ஏற்படும்.

இண்டென்சிவ் விவசாயம் - அதாவது குறிப்பிட்ட ஒரு சதுர அடியில் கிடைக்கும் அதிகப் பயிர் மகசூல் வேண்டும் என்றால் தேவையான அளவு நீர், உரம் ஆகியவை வேண்டும். இந்த உரம் இயற்கை உரமாக இருக்கலாம் அல்லது பெரும் தொழிற்சாலையில் உருவான ரசாயன உரமாக இருக்கலாம். அதுதவிர, தேவைப்பட்டால் பூச்சிகளாலும், பேக்டீரிய, வைரஸ்களாலும் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிக்கவேண்டுமா அல்லது இயற்கை மருந்துகள் பயன்படுத்தலாம என்பது இன்னொரு விஷயம்.

தாமஸ் ஹேகர்
புத்தகத்திலிருந்து
ஒரு ஸ்க்ரீன் ஷாட்.
இயற்கை உரங்களாகப் பயன்பட்டவை பறவைகளின் எச்சங்கள், விலங்கின் கழிவுகள், ஏன் மனிதனின் கழிவுகள்கூட. இவை பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை மண்ணுக்குள் அனுப்பின. பயிர்களின் வேர்கள் இவற்றை மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டன. இயற்கையில் இந்த அளவுக்கு உயிரினக் கழிவுகள் கிடைக்காத நிலையில் அம்மோனியா (NH3) என்ற வேதிப்பொருளைத் தொழிற்சாலையில் உருவாக்கி, அதனைத் திடவடிவிலான வேதிப்பொருளாக ஆக்கி மண்ணில் சேர்க்கமுடியுமா என்ற ஆராய்ச்சியின் விளைவாக உருவானதுதான் யூரியா என்ற உரம். இன்று உலகெங்கும் உணவைப் பெற்றுத்தருவது யூரியாதான். இனி நம் நாட்டில் யூரியாவைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லிப் பாருங்கள். தெரியும் எம்மாதிரியான அரசியல் பிரச்னை ஏற்படும் என்று. 

இந்த யூரியா சிறுசிறு துகள்களாக இருக்கும். சர்க்கரைத் துகள்களைவிடப் பெரிதாக, கல்லுப்புத் துகள்களைவிடச் சிறிதாக. இவற்றை நெல் வயல்களில் தூவுவார்கள். ஆனால் இதனால் பெரும் லாபமல்ல. நீரில் கரைந்து பெருமளவு யூரியா வெளியேறிவிடும். காற்றில் பரவி மாசை விளைவிக்கும். பயிருக்கும் போய்ச் சேராது. 

சீனா போன்ற நாடுகளில் பாரம்பரிய (இயற்கை) உரங்களைப் பயன்படுத்த ஒரு முறையைக் கையாண்டுவந்தார்களாம். களிமண்ணைக் கையில் பந்தாகக் குழைத்து எடுத்துக்கொள்வார்கள். அப்படியே ஆங்காங்கே விரலை அதில் வைத்து அழுத்தி, குழியை உருவாக்கிக்கொள்வார்கள். அந்தக் குழிக்குள் இயற்கை உரத்தை அப்பிவிடுவார்கள். பின் நெல் நட்டுள்ள வயலில் ஆங்காங்கே இடையிடையே சற்றே ஆழத்தில் இந்த உரக் களிமண் உருண்டைகளை நட்டுவிடுவார்கள். இதனால் உரச் சத்து கொஞ்சம் கொஞ்சமாக வேண்டிய அளவில் மண்ணூடாக பயிருக்குப் போகிறது. வீணாவதில்லை.

பங்களாதேஷில் யூரியாவை வைத்து இதே முறைப்படிப் பயன்படுத்தினால் பலன் அதிகமாக இருக்குமா என்று முயற்சி செய்தார்கள். யூரியா துகள்களை கைக்கடக்கமான உருண்டைகளாக ஆக்கி, சரியான ஆழத்தில் நெல் வயலில் சீரான இடைவெளியில் புதைத்துவைத்து முயற்சி செய்தார்கள். UDP என்று இதற்குப் பெயர். Urea Deep Placement. இது மிகச் சிறப்பான பயன் அளித்தது. 1990களில் இம்முறையை அறிமுகப்படுத்தி, விரிவாக்கியதால், பங்களாதேஷ் உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்தது.

அதன்பின், Fertilizer Deep Placement (FDP) என்ற பெயரில், யூரியாவை மட்டுமின்றி பொட்டாஷ், பாஸ்பேட் உரங்களையும் வேறுசில நுண்சத்துகளையும் சரியான விகிதத்தில் சேர்த்து சரியான ஆழத்தில் வைத்து பயிர்களுக்குச் சத்தளிப்பது என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் பின்னணியில் இருந்தது IFDC - International Feritilizer Development Center என்ற அமெரிக்காவிலிருந்து இயங்கும் அமைப்பு. உலகமெங்கும் உணவுப் பற்றாக்குறை இருந்த காலகட்டத்தில் உரப் பயன்பாட்டை உலகமெங்கும் பரப்ப ஆராய்ச்சிகளைச் செய்து, அத்துடன் நிற்காமல் விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்த உதவிய அமைப்பு இது. ஐரோப்பியக் கண்டத்தில் கம்யூனிசம் வீழ்ந்தபின் இரும்புத் திரையிலிருந்து வெளியேறிய கம்யூனிச நாடுகள் பலவற்றிலும் உரங்களை உற்பத்தி செய்ய உதவி, உணவுத் தன்னிறைவை உருவாக்கிக்கொள்ள வழிவகுத்தவர்கள். ஆசியாவில் பங்களாதேஷ் அவர்களுடைய செயலுக்கு முக்கியமான எடுத்துக்காட்டு. ஐரோப்பாவில் அல்பேனியா ஒரு எடுத்துக்காட்டு. ஆப்பிரிக்காவில் வளமற்ற மண்ணுக்கு உரங்கள்மூலம் வளம் சேர்த்து விளைச்சலை அதிகப்படுத்தியதில் பெரும் பங்கு IFDC-க்கு உண்டு.

ஹேபர்-பாஷ் முறைமூலம் அம்மோனியா (அதிலிருந்து யூரியா) உருவாக்கப்பட்ட கதையை மிக அற்புதமாக எழுதிய தாமஸ் ஹேகர், IFDC-யின் 40 ஆண்டுகளைப் படம் பிடித்து எழுதிய புத்தகம்தான் "Feeding a Hungry World".

இதன் தலைமை அதிகாரியாகப் பல ஆண்டுகள் இருந்து மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றவர் அமிதாவா ராய். ஐஐடியில் படித்தபின் அமெரிக்காவில் கெமிகல் எஞ்சினியரிங் துறையில், உரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாக இவரைப் போன்றவர் குறித்து நம் நாட்டில் அதிகம் பேசப்படுவதில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நான் இந்தப் பெயரையே முதன்முதலில் கேள்விப்பட்டேன். இவரைக் குறித்து மேலும் தகவல்களைத் திரட்டவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.


இயற்கை விவசாயம் நன்கு வளர்ந்து செழிக்கட்டும். அதே நேரம், நம் அனைவருக்கும் உணவளிக்கும் ரசாயன உரங்களைப் போற்றுவோம். அவற்றைச் சரியான முறையில், சரியான அளவில் நம் விவசாயிகள் பயன்படுத்திப் பலனைப் பெறட்டும்.