Wednesday, January 22, 2014

எழுத்தாளரின் உரிமைகள்

(உரிமை = Rights; உரிமம் = license என்ற பொருளில் பயன்படுத்துகிறேன்.)

நேற்று கோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த தாயகம் கடந்த தமிழ் என்ற மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அதில் தொழில்நுட்பம் குறித்தான ஓர் அமர்வில் கவிஞர், முனைவர் சேரன் தலைமை தாங்க, எஸ்.ஆர்.எம் துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ, முத்து நெடுமாறன், நான், திருமூர்த்தி ரங்கநாதன் ஆகியோர் பேசினோம்.

திருமூர்த்தியும் நானும் மின் புத்தகங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இளைய அப்துல்லா அதுகுறித்துப் பல கேள்விகள் கேட்டார். அவை குறித்து அமர்வின் இறுதியில் பதில் அளிக்க நேரம் இருக்கவில்லை. இவற்றைப் பல பதிவுகளாக என் வலைப்பதிவில் எழுதுவதாகச் சொன்னேன்.

விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒலி/ஒளிபரப்பும் உரிமை, அவற்றின் வணிக சாத்தியங்கள் ஆகியவை குறித்து எனக்கு நிறைய அனுபவம் உண்டு. வணிக சாத்தியங்கள் அதிகமாக, அதிகமாக, புதுப்புது உரிமைகளை ஏற்படுத்தி அவற்றைச் சொத்தாக ஆக்குவது நிகழ்கிறது. அப்போது ஏற்கெனவே ஏகபோக உரிமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் பலரும் பலமான எதிர்ப்புச் சக்திகளாக உருவாகி, புதுமைகளைத் தடுக்க முனைவதுண்டு. இவை இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் இறுதியாக உரிமைகள் கூர்மையான வடிவத்தை அடையும்.

ஒரு கட்டத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பொருத்தமட்டில், கேபிள் & சாடிலைட் உரிமைதான் மிக அதிகப் பணத்தைத் தந்தது. வானொலி ஒலிபரப்பிலிருந்து குறைவான பணம். வேறு பண வாய்ப்புகள் ஏதும் இருக்கவில்லை. கேபிள் & சாடிலைட் உரிமை, நாடு அல்லது பிராந்திய அளவில் பிரிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் தரைவழி (terrestrial) தொலைக்காட்சி உரிமை தனியாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது (அல்லது இந்தியாவில் சட்டம் இயற்றுவதன்மூலம் தூரதர்ஷனால் அபகரிக்கப்பட்டது). இன்றும் கேபிள் & சாடிலைட் உரிமைதான் அதிகமான பணத்தைத் தருகிறது. ஆனால் விளம்பரம் இல்லாத டிடிஎச் ஹை-டெஃப் ஒளிபரப்பு, இணைய பே-பெர்-வியூ ஒளிபரப்பு, விளம்பரங்கள் அடங்கிய இணைய இலவச ஒளிபரப்பு என்றெல்லாம் புதிய வழிகளில் வருமானம் வரத் தொடங்கியுள்ளது.

திரைப்பட உரிமைகள் குறித்து பல சினிமாத்துறை நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். தியேட்டர் விநியோகம்தான் இன்றும் மிகப் பெரிய வருமானம் தரும் துறை. அடுத்ததாக, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை. விஷ்வரூபம் படம்தான் தமிழில் டிடிஎச் பற்றிப் பேசி புரிதலைச் சற்றே மாற்றியுள்ளது. இணையம் அல்லது டிடிஎச் வழியாகப் புதுப் படத்தை வீட்டுக்கே கொண்டுவருவது விரைவில் நடக்கும். அதிக வருமானம் கொடுத்தாலும் தியேட்டர் விநியோகஸ்தர்கள் பிரிந்து கிடப்பதால், அவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் பணத்தைச் சம்பாதித்து முடிக்கும்வரை, வேறு வழிகளில் படத்தைக் காண்பித்துவிடாதீர்கள் என்பது மட்டும்தான். ஆனால் தொலைக்காட்சி உரிமையை வாங்குபவர்கள் கைக்குக் கிடைத்ததையெல்லாம் எழுதி வாங்கிக்கொண்டுவிடுகிறார்கள். வெகுசில சினிமா தயாரிப்பாளர்கள் மட்டுமே உரிமைகளைச் சரியாகப் பிரித்து எதைத் தாம் கையில் வைத்திருப்பது, எதை விற்பது என்று தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்கிறார்கள்.

எழுத்தாளர்கள் (அதுவும், தமிழ் எழுத்தாளர்கள்) இவைகுறித்தெல்லாம் அதிகம் கவலைப்பட்டதில்லை. இதுவரை. ராயல்டி பெறுவதற்கே கஷ்டப்படும்போது...

ஆனால் இங்கும் இப்போது வாய்ப்புகள் நிறைய வரப்போகின்றன.

எழுத்தாளர் எழுதும் எதற்குமான காப்புரிமை (Copyright) அவரிடமே இருக்கிறது. இது ஒரு பதிப்பாளரிடம் போய் சில எடிட்டோரியலாகச் சில மாற்றங்களை அடைந்தாலும்கூட இறுதி வடிவத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் (Moral rights) எழுத்தாளரைச் சார்ந்தது. காப்புரிமை என்பதைப் பிறருக்கு விற்கலாம். பிறர் பெயரில் எழுதிவைக்கலாம். ஆனால் அற உரிமை பணம் சார்ந்தது அல்ல. அது எழுத்தாளரிடம் எப்போதும் இருக்கும். அற உரிமை என்பது இந்த எழுத்து இவருடையது என்று குறிக்கப்பெறுவது. அந்த எழுத்தை எழுத்தாளரின் அனுமதி இன்றி மாற்ற முடியாது. அந்த எழுத்தை முற்றிலும் சிதைத்து அல்லது ஒரு பாத்திரத்தின் குணாதிசயத்தை மாற்றி அதே எழுத்தாளரின் பெயரில், அவரது அனுமதி இன்றி வெளியிட முடியாது. காப்புரிமையை ஓர் எழுத்தாளர் இன்னொருவருக்கு விற்றபின்னாலும், தன் எழுத்து எந்தவிதத்திலும் மாற்றப்படாமல் இருக்க அற உரிமையைப் பயன்படுத்தி வழக்கு தொடுக்கலாம்.

காப்புரிமையை விற்கலாம். அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டு. அல்லது பணமே வேண்டாம் என்று ஒருவர் உரிமையைத் துறக்கலாம். அனைத்துக்கு சட்டபூர்வமான இடமுண்டு.

பொதுவாக ஒரு மாத, வார இதழில் அல்லது தினசரியில் உங்களிடமிருந்து ஒரு கட்டுரை, கதை, கவிதை கேட்கிறார்கள் என்றால் அதனை எடிட் செய்து பதிப்பிக்கும் உரிமையை அவர்கள் கோருகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அதுதான் அடிநாதம். அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த இதழ்கள் படைப்புகளைக் கோரும்போது முன்னதாக உங்களிடம் எழுத்துமுறையில் ஒப்பந்தம் கோருவதில்லை. பெரும்பாலும் வாய் வார்த்தை அல்லது இப்போதெல்லாம் மின்னஞ்சலும்கூட இருக்கலாம். இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும்போது ஒரு சிலர்தான் சன்மானம் எவ்வளவு என்பதைச் சொல்வார்கள். அல்லது பழக்கம் காரணமாக (சென்ற கட்டுரைக்கு ரூ. 500 கொடுத்தால், இந்தக் கட்டுரைக்கும் கிட்டத்தட்ட அதே வரலாம் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்) நமக்கு எவ்வளவு கிடைக்கலாம் என்பதை நீங்கள் அனுமானித்துக்கொள்ளலாம். நீங்கள் முன்னதாகப் பேசிக்கொள்ளவில்லை என்றால் பணம் தரப்படவில்லை என்றால் நீங்கள் புகார் சொல்ல முடியாது. கூடாது.

ஆனாலும் நீங்கள் எழுதிய படைப்புக்கு (அதன் எடிட் செய்யப்பட்ட வடிவம், எடிட் செய்யப்படாத முதல் வரைவு என இரண்டையும் சேர்த்து) நீங்கள்தான் காப்புரிமைதாரர். தெளிவான கடிதத்தில் படைப்பின் காப்புரிமை தங்கள் இதழுக்கு எழுதி வாங்கிக்கொள்ளப்படுகிறது என்று அந்த இதழ் சொல்லி, அதை நீங்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டிருந்தால் ஒழிய, அந்த இதழ் உங்கள் எழுத்துக்கு உரிமை கோரமுடியாது. இந்தியக் காப்புரிமைச் சட்டம் இதில் தெளிவாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட இதழில் ஏழாம் பக்கத்தில் சின்னதாக ஏதோ எழுதியிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு நீங்கள் எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தரவில்லை என்றால் காப்புரிமை உங்களிடம்தான். இவை அனைத்தும் இணைய இதழுக்கு எழுதித்தருவதற்கும் பொருந்தும்.

மேலும் நீங்கள் புனைப்பெயரில் எழுதியது, பெயரிலியாக (அனானிமஸாக) எழுதியது என அனைத்துக்கும் அற உரிமையும் காப்புரிமையும் உங்களிடம்தான். வேறு யாராவது உங்கள் உரிமையை தங்களுடையது என்று சாதித்தால், புனைப்பெயரிலோ பெயரிலியாகவோ எழுதியது நீங்கள்தான் என்பதை நிரூபிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு.

அடுத்து, ஓர் இதழுக்கு நீங்கள் எழுதிக் கொடுத்தது, காலாகாலம் திரும்பத் திரும்பப் பதிப்பதற்கான உரிமை அல்ல. ஒருமுறை பதிப்பதற்கு மட்டுமே. மீண்டும் மீண்டும் பதிப்பிக்கவேண்டும் என்று ஓர் இதழ் நினைத்தால் அவர்கள் அதற்குரிய ஒப்பந்தத்தை எழுத்தாளரான உங்களிடம் பெற்றுக்கொள்ளவேண்டும். அதேபோல தங்களுடைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக, குறுவட்டாக, அல்லது வேறு எந்த வடிவிலுமாக வெளியிடவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும். பல பத்திரிகைகள் இதனைச் செய்வதில்லை. உங்கள் காப்புரிமை இவ்வாறாக பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகையிடம் புகார் செய்து இழப்பீடு கேட்கலாம்.

புத்தக எழுத்தாளராக, நீங்கள் உங்கள் பதிப்பாளரிடம் முறையாக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது நல்லது. இதைச் செய்யாமல் பின்னால் பணம் கிடைக்கவில்லை என்றெல்லாம் சொல்லிப் புலம்பினால் முழுத்தவறும் எழுத்தாளரான உங்கள்மீதுதான். ஆனாலும் ஒப்பந்தம் ஏதும் இல்லாவிட்டாலும், அற உரிமையும் காப்புரிமையும் உங்களிடம்தான். இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்படி படைப்பாளியான நீங்கள் உங்கள் காப்புரிமையை எங்கும் நிறுவவேண்டியது இல்லை. நீங்கள் எழுதி முடித்ததுமே காப்புரிமை அந்தக் கணத்திலேயே உங்கள் கைக்கு வந்துவிடுகிறது.

நீங்கள் ஒரு பதிப்பாளருக்கு குறுகிய கால வணிக உரிமையை மட்டும்தான் பொதுவாக அளிக்கிறீர்கள். அது குறிப்பிட்ட வடிவில் குறிப்பிட்ட காலத்துக்குப் பதிப்பிக்கும் ஏகபோக உரிமை. பதிப்பாளர்கள் ஒப்புக்கொண்டால் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்துக்கு ஒரே புத்தகத்தைப் பதிப்பிக்கும் உரிமையைக் கொடுக்கலாம். சுஜாதாவின் ஒரே புத்தகங்களை கிழக்கு பதிப்பகமும் திருமகள் நிலையமும் வெளியிடுகின்றன. அவற்றின் சில தொகுப்பு வடிவங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது. திருமகள் நிலையத்தின் ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் கிழக்கு பதிப்பகத்துக்கும் எழுத்தாளர் சுஜாதாவின் மனைவிக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் எங்களுக்குத் தரப்பட்ட புத்தகங்களை எங்களைத் தவிர திருமகள் நிலையம் (மட்டும்) பதிப்பிக்கும் என்று மிகத் தெளிவாக எழுதிக் கையெழுத்திட்டுள்ளோம்.

பொதுவாக எங்கள் ஒப்பந்தம் அனைத்திலும் ஒப்பந்தக் காலம், ஆரம்பிக்கும் தேதி இரண்டும் தெளிவாக இருக்கும். ராயல்டி என்பது எப்படி வழங்கப்படும் (எத்தனை சதவிகிதம், கணக்கிடுதல் எப்படி நடக்கும், ஆடிட்டிங் உரிமை) என்பதும் தெளிவாக இருக்கும்.

காப்புரிமை உங்களிடம் இருக்கும்பட்சத்தில், எழுத்துபூர்வமாக காலம் முழுதும் (perpetual) என்று நீங்கள் எழுதிக்கொடுக்காதவரை, பதிப்புரிமையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், காலம் வரையறை செய்யப்பட்ட ஒப்பந்தம் இருந்தால், அது முடிவதற்குள் பதிப்பாளர் உங்களுக்குப் பதிப்புரிமையைத் திரும்ப வழங்கத் தேவையில்லை. கூடவே, எங்கள் ஒப்பந்தங்களில், பதிப்புக் காலம் முடிந்தபின்னும் அதுவரையில் அச்சடித்துக் கிடங்கில் இருக்கும் புத்தகங்கள் தீரும்வரை அவற்றை விற்போம் என்றும் எழுதி வாங்கிக்கொள்கிறோம். மீண்டும் அச்சடிக்க மாட்டோமே தவிர, கையில் இருக்கும் பிரதிகளை விற்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்பதை உறுதி செய்துகொள்கிறோம்.

அடுத்ததாக மொழிமாற்றல் உரிமை. பொதுவாக எங்கள் ஒப்பந்தங்கள் அனைத்திலும், பிற மொழிகளுக்கு மாற்றும் உரிமையையும் சேர்த்தே வாங்குகிறோம். அது பிடிக்காதவர்கள் அதனை மட்டும் நீக்குமாறு கோரலாம். அதனை நாங்கள் ஏற்க மறுக்கலாம். அல்லது ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். இதுவரை எங்களின் சில புத்தகங்களை பிற இந்திய மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் மாற்றும் உரிமையை விற்று கிடைக்கும் பணத்தை நாங்களும் எழுத்தாளர்களும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். (அதிகமான மொழிமாற்றல்கள் சொக்கனின் புத்தகங்களில்தான் நிகழ்ந்துள்ளது.) இங்கும் எந்த விகிதத்தில் வருமானம் பகிரப்படும் என்பதைத் தெளிவாக ஒப்பந்தத்தில் எழுதிவிடுகிறோம்.

அதே நேரம், ஓர் எழுத்தாளர் தானாகவே தனிப்பட்ட முறையில் மொழிமாற்றிப் பதிப்பிக்க விரும்புகிறார் என்றால், நாங்கள் உடனடியாக அவருடைய ஒப்பந்தக் கட்டுகளிலிருந்து அவரை விடுவித்து சம்பந்தப்பட்ட உரிமையை அவருக்கே தந்துவிடுகிறோம். பொதுவாக இவையெல்லாம் குறைந்த வருவாய் தரக்கூடியவையாக இருப்பதால் யாரும் அதிகமாகச் சண்டை பிடிப்பதில்லை.

ஒலிப்புத்தக உரிமை அடுத்து. இதனைத் தனியாகவே எழுதி வாங்குகிறோம். அச்சுப் புத்தக உரிமை ஒருவருக்குத் தரப்படுகிறது என்றாலே பிற உரிமைகளும் அவருக்கே தரப்படவேண்டும் என்பதில்லை.

இப்போதைக்கு இறுதியாக மின்புத்தகப் பதிப்புரிமை. இதுதான் அடுத்த சில ஆண்டுகளில் மிக முக்கியமானதாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. மேலே சொன்ன மொழிமாற்றல் உரிமை அல்லது ஒலிப்புத்தக உரிமை ஆகியவற்றில் மிக அதிகமான வருமானம் வரும் என்று நான் நம்பவில்லை. ஆனால் மின்புத்தகப் பதிப்புரிமையை நல்ல பணமாக மாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏற்கெனவே எங்களிடம் புத்தகங்களின் அச்சுப் பதிப்புரிமையைத் தந்திருப்போர் அனைவரிடமும் மின்புத்தகப் பதிப்புரிமையையும் எழுத்துப்பூர்வமாகப் பெற்றிருக்கிறோம். அவர்கள் யாரேனும் மின்புத்தகப் பதிப்புரிமையைத் திரும்பக் கேட்டால், அச்சுப் பதிப்புரிமையையும் திரும்பக் கொடுத்துவிடுவோம். ஏனெனில் மின்பதிப்பில்தான் லாப சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அச்சுரிமை கழுத்தில் கட்டிய கல்போலத்தான். மேலும் சொல்லப்போனால், 2014-ல் நான் பதிப்பிக்க நினைக்கும் பெரும்பாலான புத்தகங்களுக்கான மின்பதிப்பு உரிமையை மட்டும்தான் பெற்றுக்கொள்ளப்போகிறேன். அச்சுப் பதிப்பு உரிமையை அந்த ஆசிரியரிடமே பெரும்பாலும் கொடுத்துவிடுவதாக முடிவுசெய்துள்ளேன்.

அப்படியானால் ஓர் எழுத்தாளர் என்ன செய்யவேண்டும்? அவர் தன்னுடைய பதிப்பாளரிடம் அச்சுப் பதிப்புரிமை குறித்துப் பேசும்போது, மின்பதிப்பு குறித்த அவருடைய திறன் என்ன, குறிப்பிட்ட காலத்துக்குள் மின்பதிப்பைக் கொண்டுவரக்கூடிய திறன் அவரிடம் இருக்கிறதா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு மின்பதிப்பைக் கொண்டுவரக்கூடிய திறன் அவரிடம் இல்லை என்றால், அந்தப் புத்தகத்தின் மின் பதிப்புரிமையை எழுத்தாளர் தானே தக்கவைத்துக்கொள்வதுதான் சிறந்த வழி.

அடுத்ததாக, அச்சுப் பதிப்புபோல் இல்லாமல், ஆரம்பக்கட்டத்தில் மின்பதிப்புரிமையைப் பற்றி யோசிக்கும்போது அதனை ஏகபோகமாக இல்லாமல் non-exclusive முறையில் பதிப்பாளருக்குத் தருவது குறித்தும் யோசிக்கவேண்டும். ஏனெனில் ஆரம்பகட்டத்தில் யாருடைய தொழில்நுட்பம் சரியாக இயங்கப்போகிறது, யாரால் அதிகபட்ச வருமானத்தைக் கொண்டுவந்து தரமுடியும் என்ற தெளிவு இல்லை என்றால், உரிமைகளைத் தானே கையில் வைத்துக்கொண்டு, ஒருசிலருக்கு non-exclusive உரிமங்களை அளித்துச் சோதித்துப் பார்க்கலாம். பல நேரங்களில் மின்பதிப்பு platforms எல்லாம் வெறும் விநியோக அமைப்புகளே.

இங்கே இரண்டு சற்றே முரண்படக்கூடிய கருத்துகளை நான் முன்வைப்பதாகச் சிலர் கருதலாம். முடிந்தவரை விளக்கப் பார்க்கிறேன்.

(அ) ஓர் எழுத்தாளர், முற்றிலும் தயாரான முழு இறுதி வடிவப் புத்தகத்தைத் தயாரிப்பவர் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய படைப்பைப் பொருத்தமட்டில் ஒரு பதிப்பாளர் அந்தப் புத்தகத்துக்கு உள்ளடக்கம் என்ற அளவில் வேறு எந்தப் பங்கையும் செய்யப்போவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் அந்த எழுத்தாளர் முடிந்தவரை தன் உரிமைகளைத் தானே தக்கவைத்துக்கொண்டு, எவ்வகை உரிமைகளையெல்லாம் வணிகமாக ஆக்க முடியுமோ அவற்றைச் சரியாகச் செய்யக்கூடிய நிறுவனங்களுடன் சரியான ஒப்பந்தங்களை எழுதிக்கொள்ளவேண்டும்.

(ஆ) ஓர் எழுத்தாளருக்கு எடிடிங்ரீதியிலும் புத்தக வடிவமைப்புரீதியிலும் நிறையப் பங்களிப்பு தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது பதிப்பாளர் தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அவற்றை வழங்குகிறார். அப்போது அந்தப் பதிப்பாளர் எந்தெந்த உரிமைகளையெல்லாம் தான் கோரப்போகிறேன் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடவேண்டும்; ஓப்பந்த வரைவையும் கொடுத்துவிடவேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால்தான் மேற்கொண்டு அந்தப் பிரதியில் பதிப்பாளர் கைவைக்கப்போகிறார்.

மிக நீண்டுவிட்ட பதிவு இது. சுருக்கமாக இங்கே:
  1. எழுத்தாளராக நீங்கள் உங்கள் பதிப்பாளரிடம் ஒரு காகிதத்தில் அனைத்து ஷரத்துகளையும் எழுதிக் கையெழுத்து இட்டுவிடுங்கள். பின்னர் பிரச்னைகள் வருவதை இது பெரும்பாலும் தவிர்க்கும்.
  2. உங்கள் எழுத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் உங்களுடையதே. நீங்கள் பயந்து நடுங்கவேண்டாம்.
  3. பதிப்புரிமையை நன்றாகப் பிரித்து அச்சுப் பதிப்புரிமை, மின் பதிப்புரிமை, மொழிமாற்றல் உரிமை, ஒலிப்புத்தக உரிமை, கதையாக இருந்தால் சினிமா ஆக்கும் உரிமை, புதினமல்லா எழுத்தாக இருந்தால் ஆவணப்படம் எடுக்கும் உரிமை என்று தனித்தனியாக ஷரத்துகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இவற்றில் எவற்றையெல்லாம் உங்களுடைய பதிப்பாளரால் இன்றைக்கு வணிகமாக்க முடியாதோ அவற்றை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எவற்றைப் பணமாக இன்றைக்கு ஆக்க முடியுமோ அவற்றை மட்டும் பதிப்பாளருக்குத் தாருங்கள். ஒரு பதிப்பாளரால் முடியாதவற்றை இன்னொருவரிடம் தரப்போவதாக முடிவுசெய்து அதனை முன்னதாகவே உங்கள் முதன்மைப் பதிப்பாளரிடம் பேசிவிடுங்கள்.
  4. ஒவ்வொரு உரிமையையும் விற்கும்போது ஒப்பந்த காலம், ராயல்டி போன்ற அனைத்தையும் மிகத் தெளிவாக எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
  5. உங்கள் பதிப்பாளரின் கணக்கை ஆடிட் செய்யும் உரிமையைக் கோரிப் பெறுங்கள். 1,000 அல்லது 5,000 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது என்று அவர் சொல்வதை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. இதனால் நீங்கள் அவரை நம்புவதில்லை என்று இல்லை. நம்பிக்கையை உறுதி செய்வதற்காகவே இது. இந்த உரிமை இருக்கிறது என்பதாலேயே நீங்கள் தினம் தினம் உங்கள் புத்தகம் சம்பந்தப்பட்ட கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. (எங்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும் இந்த உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம்.)

Monday, January 20, 2014

சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் டாப் 10

2014 சென்னை புத்தகக் காட்சியில், முதல் ஒன்பது நாள்கள் (சனிக்கிழமை) வரை கிழக்கின் டாப் 10 புத்தகங்கள் இவை:
  1. கிமு கிபி - மதன்
  2. தன்னாட்சி - அர்விந்த் கெஜ்ரிவால்
  3. லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரின்
  4. குமரிக் கண்டமா, சுமேரியமா - தமிழரின் தோற்றமும் வளர்ச்சியும், பிரபாகரன்
  5. உலகை மாற்றிய புரட்சியாளர்கள், மருதன்
  6. மோடி - புதிய இரும்பு மனிதர், அரவிந்தன் நீலகண்டன்
  7. மணி ரத்னம் படைப்புகள், ஓர் உரையாடல், பரத்வாஜ் ரங்கன்
  8. ஸ்ரீரங்கத்து தேவதைகள், சுஜாதா
  9. ராஜராஜ சோழன், ச.ந.கண்ணன்
  10. குஜராத் 2002 கலவரம், சி. சரவணகார்த்திகேயன்
இந்தப் போக்கில் இறுதிவரையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். கண்காட்சி முடிந்ததும் கிழக்கின் டாப் 20-ஐப் பட்டியலிடுகிறேன்.

Friday, January 10, 2014

சென்னை புத்தகக் காட்சி தொடக்கவிழா

சிறப்பு விருந்தினர்கள்

ம.ராசேந்திரன் இ.ஆ.ப, வேளாண் துறைச் செயலர், தமிழக அரசு
நீதியரசர் ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதி மன்றம்
திருஞானம், காவல்துறை இணை ஆணையர், சென்னை தெற்கு





Wednesday, January 08, 2014

பபாசி பத்திரிகையாளர் சந்திப்பு


பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. 37வது சென்னை புத்தகக் காட்சி, ஜனவரி 10 முதல் 22 வரை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் மைதானத்தில் தொடங்க உள்ளது குறித்து.

# வாசலிலிருந்து கண்காட்சி இடம் வரை செல்ல இலவச வாகன வசதி
# கணினி டிக்கெட் வசதி
# மொபைல் எண் கொடுத்தால், தினமும் அந்தந்த நாள் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் தரப்படும்
# புத்தகக் கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் உட்கார்ந்துகொள்ள இடவசதி
# கண்காட்சி வளாகத்தின் உள்ளேயே ஒரு ஏ.டி.எம் வைக்கப்படும். அதில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்
# ஸ்டால் அலோகேஷன் கணினிமூலம் செய்யப்பட்டது
# சிறுகதைப் போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படும் கதைகளை பபாசியே பதிப்பிக்கும்
# 1500 கார்கள் நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள மிலிடரி மைதானத்திலும் கார்களை நிறுத்திக்கொள்ளலாம்.
# நம்ம ஆட்டோவுடன் இணைந்து உள்ளேயே மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ எடுத்துக்கொள்ளலாம்
# கழிப்பறை வசதிகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன
# கழிப்பறை வசதிக்காகக் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
# உள்ளரங்கில் எழுத்தாளர்-வாசகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
# ஏழு லட்சம் இலவச டிக்கெட்டுகள் பள்ளி மாணவர்களுக்குத் தரப்பட்டுள்ளது
# சென்னை புத்தகக் காட்சிக்கு ஆப்பிள் ஐ ஓஎஸ், ஆண்டிராய்ட் ஆப் உருவாக்கப்பட்டுள்ளன
# மருத்துவ வசதி உள்ளேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது
# மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர இருக்கை ஏற்பாடு செய்துள்ளார்கள்
# புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு அமைச்சர்கள் வருகிறார்கள்
# புதிய லோகோ அறிமுகம்


# நுழைவுக் கட்டணம் ரூ. 10. பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டோருக்கு டிக்கெட் கிடையாது
# சென்ற ஆண்டு சுமார் 3.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன
# இம்முறை, சென்ற ஆண்டைவிட 50% அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
# வேலை நாட்களில் 2-9, விடுமுறை நாட்களில் 11-9 நேரம்
# சென்ற ஆண்டு 10 கோடி ரூபாய் விற்பனை நடந்துள்ளது, இந்த ஆண்டு 15 கோடி ரூபாய் விற்பனை ஆகும் என்று எதிர்பார்ப்பு
# 800 அரங்குகள், 400 பங்கேற்பாளர்கள், தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, வட மாநிலங்களிலிருந்து பதிப்பாளர்கள் பங்கேற்பு. இரண்டு லட்சம் சதுர அடி.
# பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, சிறுகதைப்போட்டி.

Tuesday, January 07, 2014

சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு

சென்னை புத்தகக் கண்காட்சி 10-22 ஜனவரி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இரண்டு “four stalls” எடுத்திருக்கிறோம். மிகவும் அருகருகே இவை உள்ளன. (இடையில் வேறு ஒரு கடை வருகிறது.)

நியூ ஹொரைசன் மீடியா (NHM) 593/594/639/640
கிழக்கு பதிப்பகம் (Kizhakku) 589/590/643/644

ஒன்றில் கூட்டம் அதிகமானால் அடுத்ததில் நுழையலாம். தவிரவும் வேறு பல கடைகளிலும் எங்கள் புத்தகங்கள் கிடைக்கும்.

தவறாமல் வாருங்கள்.

Monday, January 06, 2014

மீ-குளிர் எஞ்சினும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டும்

இந்தியத் தொழில்நுட்பத்தின் மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக, நேற்று மாலை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டின் இறுதி அடுக்கில், சொந்தமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மீ-குளிர் எஞ்சின் ஒன்று பயன்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமாக இயங்கியுள்ளது. இதற்குமுன் ரஷ்யாவிலிருந்து பெற்ற மீ-குளிர் எஞ்சின்களைப் பயன்படுத்தியிருந்தோம். அமெரிக்க அழுத்தத்தால் அவர்கள் கையை விரித்துவிட, இந்தியா சொந்தமாகத் தயாரித்த மீ-குளிர் எஞ்சின்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம். 2010-ம் ஆண்டு இரண்டுமுறை அந்த எஞ்சின்கள் இயங்காமல்போக ராக்கெட்டுகள் வானிலேயே வெடித்துச் சிதறின. இரண்டு தோல்விகளுக்குப்பின், இம்முறை, நேற்று, வெற்றி.

ராக்கெட் நுட்பம் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆக்சிஜனேற்றம் என்ற முறையில் ஓர் எரிபொருளை ஆக்சிஜன் கொண்டு எரிக்கும்போது, வெப்பம் வெளிப்படும். எரிப்பதனால், வாயுக்களும் வெளியாகும். வெளியாகும் வாயுக்கள் வெப்பத்தால் விரிவடையும். அவற்றை ஒரு சிறு துளை (Nozzle) மூலம் வெளியேற்றும்போது (நியூட்டனின்) எதிர்வினை காரணமாக ராக்கெட் முன்னோக்கிப் பாயும்.

திட, திரவ எரிபொருள்கள் பலவற்றை ராக்கெட்டில் பயன்படுத்துவார்கள். ஆனால் அனைத்தையும்விட மிகச் சிறந்த எரிபொருள் ஹைட்ரஜன் வாயுதான். அது ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும்போது மிக அதிக அளவிலான வெப்பம் வெளிப்படும். இரண்டும் இணைந்து நீராவி ஆகும். வெப்பத்தில் இந்த நீராவி நன்கு விரிவடையும்.

ஆனால் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் சாதாரண அறை வெப்பநிலையில், வளிமண்டல அழுத்தத்தில் வாயுக்களாகவே இருக்கும். வாயுக்களாக இருந்தால் நிறைய இடத்தை அடைத்துக்கொள்ளும். எனவே ராக்கெட் தொழில்நுட்பத்தில் இவற்றைப் பயன்படுத்தவேண்டுமானால் இவற்றைத் திரவமாக மாற்றவேண்டியிருக்கும். திரவமாக மாற்ற, வெப்பநிலையைக் குறைக்கவேண்டும்.

வளிமண்டல அழுத்தத்தில், ஆக்சிஜன் -183 டிகிரி செண்டிகிரேடிலும் ஹைட்ரஜன் -253 டிகிரி செண்டிகிரேடிலும் திரவ நிலையை அடைந்து நிலையாக அப்படியே இருக்கும். இந்த அளவுக்கான குளிர்ச்சியை எளிதில் உருவாக்கிவிட முடியாது. இந்தத் தொழில்நுட்பத் திறன் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. இப்போது இந்தியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பரிசோதித்துவிட்டது.

மீ-குளிர் எஞ்சின் மிக அதிகமான சக்தி காரணமாக, அதிக எடை கொண்ட பொருள்களை, அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் நம் ராக்கெட்டுகளுக்குக் கிடைக்கும். ஜியோஸ்டேஷனரி செயற்கைக்கோள்களை (அதாவது பூமி தன் அச்சில் தான் சுழலும் அதே கோணத் திசைவேகத்தில் இந்த செயற்கைக்கோள் பூமியைச் சுற்றிச் சுழலும். இதனால் இந்தச் செயற்கைக்கோள் பூமியின்மேல் ஓரிடத்தில் நிலையாக இருப்பதுபோன்ற தோற்றம் ஏற்படும். இது, பூமியின் மேற்பரப்பிலிருந்து - கடல் மட்டத்திலிருந்து 35,786 கிமீ உயரத்தில் உள்ளது) வானில் ஏவ இந்த ராக்கெட்டுகளைப் பிரமாதமாகப் பயன்படுத்தலாம்.

இதுவரை, இஸ்ரோவின் பொதி சுமக்கும் கழுதை, பி.எஸ்.எல்.வி என்ற ராக்கெட்டாகத்தான் இருந்தது. இதனால் கனமான பொருள்களை மிக அதிக உயரத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது. ஆனால் இதனைக்கொண்டுதான் சந்திரயான், மங்கள்யான் ஆகியவற்றை ஏவினோம். இப்போது புதிய பொதிக்குதிரையாக ஜி.எஸ்.எல்.வி வந்துவிட்டது. இதுவரை எடுத்துச் சென்றதுபோல் இரு மடங்கு அல்லது அதற்கும் மேலாக ஏற்றிச்செல்ல முடியும். மேலும் சந்திரனுக்குச் செல்லவேண்டும் என்றால் ஒரேயடியாக பூமியின் விடுபடு வேகத்தைத் தாண்டிக்கூட ஒரே உந்தலில் இந்த மீ-குளிர் எஞ்சின்களின் உதவியால் சென்றுவிட முடியும் (என்று நினைக்கிறேன்). பி.எஸ்.எல்.வி கொண்டு சந்திரயான் ஏவப்பட்டபோது (பின்னர் மங்கள்யானிலும்) ஒரு கீழான நீள்வட்டப்பாதையில் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பாதையை மீ-நீள்வட்டப்பாதையாக மாற்றி, பின்னர்தான் பூமியின் விடுபடு வேகத்தைத் தாண்டினோம். அப்படியெல்லாம் இனி காத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

***

விஜய் டிவி நீயா நானா விருதுகளில், இஸ்ரோவின் மங்கள்யான் திட்ட இயக்குனர் சுப்பையா அருணனுக்கு விருது அளிக்கப்பட்டது. அப்போது நானும் அரங்கில் இருந்தேன். அந்த விருது அருணனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்ரோவுக்கே அளிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளவேண்டும். எண்ணற்ற இந்திய விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் சேர்ந்து, மிகவும் எதிர்மறையான சூழலில், உலகில் யாருமே உதவாத சூழலில், இந்தியாவிலும் இஸ்ரோவின் சாதனைகளை யாரும் கண்டுகொள்ளாத சூழலில், “ஏழைகள் உண்ண உணவில்லாமல் கஷ்டப்படும்போது ராக்கெட் ஒரு கேடா?” என்று கரித்துக்கொட்டப்படும் சூழலில் செய்யப்படிருக்கும் மாபெரும் சாதனைகள் இவை.

நாளை இந்தியா அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற, இந்தியாவில் ஏழைமை அகல, இந்தத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். ஹைட்ரஜன் எரிபொருள், இந்தியாவின் எரிபொருள் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்யலாம். அணுசக்தியைக் கொண்டு உருவாக்கும் எக்கச்சக்கமான வெப்பத்தைப் பயன்படுத்தி ஒரு பக்கம் மின்சாரம் தயாரிக்கும் அதே நேரம், இன்னொரு பக்கம் தண்ணீரை உடைத்து ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் உருவாக்கலாம். இன்றே இந்தத் தொழில்நுட்பங்கள் புழக்கத்தில் உள்ளன. தொடர்ந்து இவற்றில் ஆராய்ச்சி செய்வதன்மூலம் உருவாக்கப்படும் ஹைட்ரஜனின் செலவைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம். ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு எஞ்சின்கள் செய்தால் நாளை கார்கள், பேருந்துகள் அனைத்தும் இதில் இயங்கலாம். வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலியம், கரி ஆகியவற்றை நாம் இறக்குமதி செய்யவேண்டிய தேவையே இல்லை. இஸ்ரோவும் இந்தியாவின் அணு சக்தித் துறையும் இணைந்து தம்முடைய தொழில்நுட்பத் திறன்களை ஒன்றாகக் கொண்டுவந்தால் இந்தியப் பொருளாதாரத்துக்கு அது நல்ல வலு சேர்க்கும்.

மீண்டும் ஒருமுறை, இஸ்ரோ விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் வாழ்த்துவோம்.

Friday, January 03, 2014

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

மனிதர்களுக்கு இரண்டு பெரும் பயங்கள் உள்ளன. முதலாவது பயம், இந்த பூமியில் மனிதர்களைவிட அறிவு மேம்பட்ட ஓர் உயிரினம் தோன்றினால் என்ன செய்வது என்பது. மனிதனுக்கு பலம் பொருந்திய பிற விலங்குகள்மீது அவ்வளவு பயம் கிடையாது. யானைகளையே பிச்சை எடுக்கச் செய்துவிடுவான். சிங்கம், புலி, விஷப்பாம்புகள், கொடூர வைரஸ்கள், பேக்டீரியம்கள் என்று பலவற்றையும் தன் மூளையின் திறத்தால் கையாளத் தெரிந்தவன் மனிதன். ஆனால் மனிதன் அளவுக்கு மூளை கொண்ட, அல்லது அதற்கு அருகே நெருங்கக்கூடிய மூளை கொண்ட ஓர் உயிரினத்தை மனிதன் விட்டுவைக்க மாட்டான். எப்படியாவது அந்த இனத்தையே நிர்மூலம் செய்துவிடத் துடிப்பான் என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படி அவன் செய்யாவிட்டால் அந்தப் புதிய இனம், மனித இனத்தை அழித்துவிடும் என்றே நான் நினைக்கிறேன்.

இரண்டாவது பெரிய பயம், மனிதனுக்கு இணையான இப்படிப்பட்ட இனம் இந்தப் பூமியில் இல்லை என்றால், இந்தப் பெரிய பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் மற்றொரு கிரகத்தில் இருக்கலாமோ என்பது. அப்படி ஏதோ ஓரிடத்தில் அவை இருந்து, அவை பூமியை நோக்கி வந்து நம்மை எதிர்கொண்டால் என்ன ஆவது என்பது.

ஏலியன் அல்லது வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனரா, இல்லையா; இருந்தால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்கள் நம்மை என்ன செய்வார்கள் என்ற பல கேள்விகள், பல கதைப் புத்தகங்களை, சினிமாக்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவில் இது ஒரு குடிசைத் தொழில்போல. டாப்லாய்ட் இதழ்கள், கடந்த வாரத்தில் எங்கெல்லாம் பறக்கும் தட்டுகள் வந்து இறங்கியுள்ளன, அவற்றிலிருந்து கீழே இறங்கிய ஏலியன்கள் என்னென்னவெல்லாம் சொன்னார்கள், செய்தார்கள் என்பது பற்றி பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுவார்கள்.

இப்படிப்பட்ட மூன்றாம்தர இதழ்கள் சொல்கின்றன என்பதனாலேயே ஏலியன்கள் என்பவை வெறும் புருடா ஆகிவிடமாட்டா. ஏலியன்கள் இருக்கின்றன என்று வாதாடுவோர் எவற்றையெல்லாம் சாட்சியங்களாகக் காண்பிக்கின்றனர்?

ஒரு சாட்சியமாக அவர்கள் முன்வைப்பது பயிர் வட்டங்களை (Crop Circles). உலகின் பல இடங்களில் இவை தோன்றினாலும், மிக அதிகமாக இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர், வில்ட்ஷயர் கவுண்டிகளில் ஏவ்பரி, ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற இடங்களுக்கு அருகே இந்த மர்ம வட்ட டிசைன்கள் கோதுமை, சோள, பார்லி வயல்களில் திடீர் திடீரெனத் தோன்றுகின்றன. இரவு நேரத்தில், ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாக, யாருமே பார்க்காதவகையில் இவை உருவாக்கப்படுகின்றன. இவற்றில் நிச்சயமாகப் பல, மனிதர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுபவையே. ஆனால் அனைத்தையும் அப்படி ஆதாரபூர்வமாகச் சொல்லிவிட முடியாது. இதுகுறித்துப் பல அறிவியல் கோட்பாடுகள் சொல்லப்பட்டாலும், குறிப்பாகக் கையைச் சுட்டி, இப்படித்தான் பல நூறு மீட்டர் அகலத்தில் இந்தப் பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்ல முடியாத நிலையில்தான் நாம் உள்ளோம். மனோஜ் நைட் ஷ்யாமளனின் Signs என்ற படம் இந்தப் பயிர் வட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானதே.

உயிர்மை வெளியீடான ராஜ் சிவாவின் ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்ற புத்தகம் பயிர் வட்டங்களில்தான் ஆரம்பிக்கிறது. கணிசமான பக்கங்கள் பயிர் வட்டங்களைப் புரிந்துகொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது. உலகின் பல இடங்களில் எங்கெல்லாம் பயிர் வட்டங்கள் தோன்றியுள்ளன, இவை குறித்து எம்மாதிரியான கதைகள் பரவியுள்ளன, இவற்றின் உண்மை என்னவாக இருக்கும் என்பதை எளிமையாக விளக்குகிறார் ராஜ் சிவா. அடுத்து, இவை ஏலியன்களால் பூமியின் மனிதர்களுக்கு ஏதேனும் தகவல் சொல்வதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பி அதுகுறித்துப் பேசுகிறார் ராஜ் சிவா.

வேற்று கிரக உயிரினங்கள் உண்மையிலேயே இருந்தால் அவை பூமியை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது முக்கியமான கேள்வி. ஒளியின் வேகம், ஐன்ஷ்டைனின் சார்பியல் கொள்கை ஒரு விண்கலத்தின் வேகம் குறித்துப் போடும் கட்டுப்பாடுகள், ஒளியை நெருங்கும் வேகத்தில் செல்லும் ஒரு விண்கலத்தில் காலத்துக்கு ஏற்படும் மாற்றங்கள் போன்ற அடிப்படை அறிவியல் கருத்துகளை ராஜ் சிவா அறிமுகம் செய்கிறார்.

வேற்று கிரக உயிரினங்களைத் தேடும் SETI என்ற திட்டம் குறித்துப் பேசும் ராஜ் சிவா, கார்ல் சேகன் உருவாக்கிய சமிக்ஞைப் படம், அதில் இருக்கும் குறியீடுகளின் பொருள் ஆகியவற்றைக் கொஞ்சமாக விளக்குகிறார். இவற்றைத் திரும்பவும் பயிர் வட்டங்களுடன் தொடர்புபடுத்துகிறார். கார்ல் சேகனின் சமிக்ஞைக்கு பதிலாக இருப்பதுபோன்ற வேறு ஒரு சமிக்ஞை பயிர் வட்டமாக ஓரிடத்தில் தென்பட்டதைக் குறித்துப் பேசுகிறார்.

ஏலியன்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் அடிப்படையில் இதற்கான பதில் என்னவாக இருக்கும்?

பூமியில் உயிர்கள் தோன்றியதே அகஸ்மாத்தான ஒரு நிகழ்வுதான். இதே நிகழ்தகவின்படி இன்னோர் இடத்திலும் இந்த விபத்து நடக்கலாம். அப்படிப்பட்ட உயிர் - தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ளும் டி.என்.ஏ போன்ற ஒரு கரிம வேதிப்பொருள் - அது கரி அல்லாத சிலிக்கான் சேர்மமாகக்கூட இருக்கலாம் - இன்னொரு கோளில் ஏன் உருவாகக்கூடாது? அப்படி உருவானால், அதுவும் டார்வின் கொள்கைப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து மூளை வளர்ச்சி அடைந்து, இன்று நம்மைவிட அதிக மூளைத்திறன் கொண்டதாக இருக்கலாம்.

பயிர் வட்டங்கள் குறித்து எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. ஏன் இவை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நெல் வயல்களிலோ கோதுமை வயல்களிலோ காணப்படுவதே இல்லை? ஏன் இந்த ஏலியன்கள் நம்மை வெறுக்கின்றன? ஏன் அவை பொதுவாக மேலை நாடுகளிலும் குறிப்பாக இங்கிலாந்திலும் அதிகமாக உருவாகின்றன? மாறாக இந்தியாவில் பிள்ளையார் பால் குடிப்பது, சித்தர் பறந்துசெல்வது போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மட்டுமே நடக்கின்றன? ஏன் ஏலியன்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடம் மட்டுமே பேசுவதற்கே ஆசைப்படுகின்றன? ஏன் மன்மோகன் சிங்கையோ, நரேந்திர மோதியையோ, ஜெயலலிதாவையோ தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை?

அடுத்து ராஜ் சிவாவின் முக்கியமான கேள்விக்கு வருவோம். இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன என்று கேட்கிறார் அவர். உண்மைகள் என்று அவர் சொல்பவை, ஏலியன்கள் குறித்து அமெரிக்காவில் வந்த பல்வேறு செய்திகள். ஏலியன்களையும் பறக்கும் தட்டுகளையும் கண்ணால் கண்டதாகப் பல சாட்சியங்கள் சொல்ல, அந்தத் தகவல்கள் வெளியே தெரியாமல் இருக்க, அமெரிக்க அரசும் அதன் ராணுவமும் மிகுந்த பிரயத்தனத்தைச் செய்கின்றன என்று எழுதப்பட்டுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.

உண்மையில் ஏலியன்கள் பூமியின் மனிதர்களைத் தொடர்புகொள்கின்றன என்றால் அதை எந்த அரசுமே மறைக்கவேண்டிய தேவை இல்லை. உதாரணமாக, பயிர் வட்டங்கள் ஏலியன்களால் உருவாக்கப்பட்டன என்றே வைத்துக்கொள்வோம். அவற்றை இழுத்து மூட அரசுகள் முயற்சி செய்யவேயில்லை. மற்றபடி பறக்கும் தட்டுகள் குறித்தோ, ஏலியன்களின் உடல்கள் கிடைத்தது குறித்தோ நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் அவற்றை இப்போதைக்கு நம்பத் தயாராக இல்லை. மக்களிடையே ஏலியன்கள் குறித்த அச்சம் அதிகமாகி, அதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதித்துவிடும் என்று ஓர் அரசு பயந்தால்தான் இந்தத் தகவல்களையெல்லாம் மூடி மறைக்கப் பார்ப்பார்கள். அமெரிக்காவில் கான்ஸ்பிரசி தியரிகளுக்குப் பஞ்சமே இல்லை.

ஏலியன்கள் தொடர்பாக அறிவியல் அடிப்படையில் தமிழில் கிட்டத்தட்ட ஒன்றுமே எழுதப்படவில்லை என்று சொல்வேன். அருண் நரசிம்மன் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். (ஒரு புத்தகமும் எழுதினார்; அது வெளியே வராததற்கு நான்தான் காரணம். இனி வெளியாகும் என்று நம்புவோம்.) ராஜ் சிவாவின் புத்தகம் தமிழர்களின் ஆர்வத்தைக் கட்டாயம் தூண்டும்வண்ணம் இருக்கும். அவரது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களை கூகிளில் தேடி எடுத்து மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அது கட்டாயம் படிப்போரிடம் விதைக்கும். புத்தகம் எளிமையான தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.

வாங்கிப் படியுங்கள். சிறுவர்களைப் படிக்க ஊக்குவியுங்கள்.