Sunday, October 31, 2004

கிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி

துணைக்கண்டத்தின் கவாஸ்கர்கள் என்ற பதிவில் கண்ணன் தொலைக்காட்சியில் வரும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பற்றி எழுதியுள்ளார்.

அதைப்பற்றிய என் கருத்துகளைச் சொல்வதற்கு முன்னால் சில உள்விஷயங்கள் பற்றி எழுதுகிறேன்.

கிரிக்கெட் ஒளிபரப்பு பெரிய விஷயமாவதற்கு முன்னால் இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களையெல்லாம் பிபிசியும், இந்தியாவின் ஆட்டங்களை தூரதர்ஷனும் தயாரித்து ஒளிபரப்பின. மற்ற சில நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் அரசு சார்ந்த, வணிக அனுபவம் இல்லாத தொலைக்காட்சி நிறுவனங்களே கிரிக்கெட் தயாரித்தல் மற்றும் ஒளிபரப்பில் ஈடுபட்டன. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக தனியார் சானலான கெர்ரி பேக்கரின் சானல் 9 கிரிக்கெட் ஒளிபரப்பைப் பெறுவதன் மூலம் சில புதுமைகளைக் கொண்டுவந்து அதன்மூலம் நிறைய சம்பாதிக்க முடிவு செய்தது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கெர்ரி பேக்கருடன் ஒத்துப்போகவில்லை. இதனால் பேக்கர் அப்பொழுது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே உடைத்து, பின் உலக கிரிக்கெட்டையே சிறிது ஆட்டம் காணவைத்து சூப்பர் டெஸ்ட்கள் என்று சில போட்டிகளை நடத்தினார். அப்பொழுதுதான் இரவு நேரங்களில் ஒளிவிளக்குகளின் அடியில் விளையாடுதல், விளையாட்டாளர்களுக்கு வண்ணச்சீருடை, வர்ணனையில் கொஞ்சம் ஜிலுஜிலுப்பு என்றெல்லாம் கொண்டுவந்தார்.

அதன்பின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒருவழியாக பேக்கருடன் சமாதானம் செய்துகொண்டது. தொடர்ந்து பேக்கரின் சானல் 9 கிரிக்கெட் ஒளிபரப்பில் நிறையப் புதுமைகளைச் செய்ய ஆரம்பித்தது. அதில் ஒன்று, ஒரே முகங்களை ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ரசிகர்களுக்குக் காண்பிப்பது, ஆஸ்திரேலியர்களுக்குப் பிடிக்குமாறு pro-Australia வர்ணனை கொடுப்பது என்பது.

கிட்டத்தட்ட அந்த நேரத்தில்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு உலகளாவவே வணிகத்தன்மை நிறைந்ததாக மாறியது. பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் - மார்க் மெக்கார்மாக்கின் TWI, மைக்கேல் வாட்டின் CSI - மற்ற விளையாட்டுக்களுடன் கிரிக்கெட் விளையாட்டினை தொலைக்காட்சிக்கெனத் தயாரிப்பதிலும் அதைப் பல நாடுகளின் தொலைக்காட்சி சானல்களுக்கு விற்பதிலும் ஈடுபட்டன.

இவ்விரு நிறுவனங்களும் பிரிட்டனைச் சேர்ந்ததாக இருந்ததால் இவர்கள் கொண்டுவந்த வர்ணனையாளர்களும் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாட்டவராகவே இருந்தனர். இவர்களது தரக்கட்டுப்பாட்டில் இந்தியாவின் கவாஸ்கர் மட்டுமே தேறினார். அப்பொழுது, கிரிக்கெட் பற்றிய அறிவு, ஆங்கிலப் பயிற்சி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது வேறு யாரும் தேறியிருக்க முடியாது.

பின்னர் மார்க் மாஸ்கரேனஸின் Worldtel என்ற பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் கிரிக்கெட் தயாரித்தலில் ஈடுபட்டது. அப்பொழுது முன்னுக்கு வந்தவர்தான் ரவி ஷாஸ்திரி.

ஹர்ஷா போக்ளே பிபிசி, ஏபிசி வானொலிகளில் வர்ணனை செய்ததன் மூலமும், ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்திய கிரிக்கெட்டை அதிகமாக நம்பியிருந்ததன் காரணமாகவும் தொலைக்காட்சி வர்ணனைக்குக் கொண்டுவரப்பட்டார். ஹர்ஷாவும் கூட TWI மூலமாகத்தான் முதலில் கிரிக்கெட் வர்ணனைக்கு வந்தார்.

கடந்த சில வருடங்களில் பல இந்திய சானல்கள் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதனால் அந்தந்த சானல்களுக்கென பிரத்யேகமான முகங்கள் தேவைப்பட்டன. டென் ஸ்போர்ட்ஸ் இந்திய முகமாக சஞ்சய் மஞ்ச்ரேகரையும், பாகிஸ்தானிய முகமாக ரமீஸ் ராஜாவையும் பிடித்தது. ஆனால் இவ்விருவருக்கும் நிறையப் பயிற்சி தேவை.

பிரிட்டன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் 1990களின் தொடக்கத்தில் வெளிநாடுகளில் இங்கிலாந்து விளையாடும் அத்தனை கிரிக்கெட் ஆட்டங்களுக்குமான பிரிட்டன் ஒளிபரப்பு உரிமைகளை வாங்கத் தொடங்கினர். அப்பொழுது ஒரேமாதிரியான முகங்களையும், குரல்களையும் தம் ரசிகர்களுக்குக் காட்ட வேண்டுமென டேவிட் கோவர், பால் அல்லாட், இயான் போதம், பாப் வில்லிஸ், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தனர். இப்பொழுது இவர்களுடன் நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதெர்டன் ஆகியோரும் உள்ளனர். அவ்வப்போது இயான் பிஷப்பும் இந்தக் குழுவில் உண்டு.

இதைப்பார்த்த ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தானும் அவ்வாறே செய்ய முற்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த இந்திய முகங்கள் உருப்படியாகக் கிடைக்கவில்லை. அதனால் ஹர்ஷா போக்ளே, சுனில் கவாஸ்கர் ஆகியோரோடு ரவி ஷாஸ்திரி, ஜெஃப் பாய்காட், ஆலன் வில்கின்ஸ் ஆகியோரைச் சேர்த்தனர். நவ்ஜோத் சிங் சித்துவும் வந்தார், ஆனால் ஒருமுறை நேரடி ஒளிபரப்பில் அசிங்கமான வார்த்தைகளைப் பேசியதற்காக துரத்தப்பட்டார். இப்பொழுது டீன் ஜோன்ஸ் அதிகம் காணப்படுகிறார். அருண் லால், மனீந்தர் சிங் ஆகியோரும் காணக் கிடைக்கின்றனர்.

சோனி தான் வாங்கிய உலக்ககோப்பை போன்ற ஐசிசி ஆட்டங்களுக்காக ஒரு பிரத்யேக வர்ணனை அணியை உருவாக்க மிகவும் சிரமப்பட்டது. ஹர்ஷா போக்ளே போன்றவர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. சாரு ஷர்மாவைப் பிடித்தனர். அத்துடன் கிரிஷ் ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் ஆகியோரும் கிடைத்தனர். மீதியெல்லாம் வெளிநாட்டு இறக்குமதிகள்.

இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி ஒளிபரப்புகளுடன் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு வர்ணனையாளர் அணிகள் குரல் வழியான வர்ணனைகளைச் செய்கின்றன. உதாரணத்துக்கு உலகக்கோப்பையின் போது சோனி தனக்கென பிரத்யேகமாக ஒரு வர்ணனையும், ஸ்கை ஸ்போர்ட்ஸ் தனக்கென ஒரு வர்ணனையையும், பிற அனைத்து தொலைக்காட்சி சானல்களுக்கென ஆக்டகன் சி.எஸ்.ஐ ஒரு வர்ணனையையும் உருவாக்கினர். இந்த மூன்றாவது வர்னனையைத்தான் அமெரிக்காவிலோ, தென்னாப்பிரிக்காவிலோ அல்லது பாகிஸ்தானிலோ உள்ள தொலைக்காட்சியில் ஒருவர் கேட்டிருக்க முடியும். இதே வர்ணனைதான் இந்தியாவின் தூரதர்ஷனில் வந்தது. ஆனால் சோனி மேக்ஸில் அவர்களுக்கெனவே உருவாக்கிய பிரத்யேக வர்ணனை (மந்திரா பேடி அவ்வப்போது நடுநடுவே).

சரி. இப்பொழுது கண்ணனின் பதிவுக்கு வருவோம்.

கண்ணன்: ஹென்றி புளோபெல்ட் வர்ணனை உங்களுக்குப் பிடிக்குமா? அந்த மனிதர் சரியான லூஸ். ஏதாவது உளறிக்கொண்டே இருப்பார். ஆட்டத்திற்கும், அவர் பேசுவதற்கும் எந்த உறவும் கிடையாது. நல்ல வேளையாக இப்பொழுது இவரை பிபிசி கூட தள்ளிவைத்துவிட்டது.

ரமீஸ் ராஜா அழுமூஞ்சிதான். சில நாள்கள் முன்னால் வரை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகியாகவும், அதே சமயம் டென் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராகவும் பஜனை செய்து கொண்டிருந்தார். நடுநிலை என்பது இவரிடம் துளிகூடக் கிடையாது. இவரையும் சஞ்சய் மஞ்ச்ரேகரையும் அருகருகே வைத்து இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கு வர்ணனை செய்யச் சொன்னால் கொடுமையாக இருக்கும். ரஞ்சித் பெர்னாண்டோ நிலை அய்யோ-பாவம். இலங்கையிலிருந்து ஆங்கில வர்ணனை செய்ய இவரை விட்டால் யாரும் கிடையாது என்பதாலேயே இவர் வர்ணனையில் உள்ளார். புதிதாக யாராவது கிடைத்து விட்டால் பெர்னாண்டோவைக் கழற்றி விட்டுவிடுவார்கள். புதுப்புது இலங்கை ஆட்டக்காரர்களின் பெயர்கள், அவர்களது பின்னணி ஆகியவற்றைச் சரியாகச் சொல்வதற்கு ஒருவராவது இலங்கையிலிருந்து வந்திருக்க வேண்டும். அதனால் மாட்டுபவர் இப்பொழுதைக்கு ரஞ்சித் பெர்னாண்டோ மட்டும்தான். இவரும் சதா அழுதுகொண்டே இருப்பார்.

கவாஸ்கரை இந்த வகையில் நான் சேர்க்கமாட்டேன். அவ்வப்போது ஒருமாதிரியாக நடந்துகொள்வார். ("வடா-பாவ் ஷாட்", "யாபயாபயாபயாப" என்று ஒரு ஸ்டிரெயிட் டிரைவ் அடியைப் பார்த்துவிட்டு திடீரென்று கத்தியது, மும்பை ஆட்டக்காரர்கள் மீதான அளவுகடந்த பிரியம், டெண்டுல்கரை அதிகமாக விமர்சனம் செய்யாதது என்று சில குறைகள் உண்டு.) ஆனால் இவரிடம் இருக்கும் கிரிக்கெட் பற்றிய மிக நுண்ணிய அறிவு வெகு சில வர்ணனையாளர்களுக்கே உண்டு. மேலும் வர்ணனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் விளையாடிய கிரிக்கெட்டின் தரத்தை வைத்துத்தான் இப்பொழுது விளையாடுபவர்களைக் குறை சொல்ல வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். நீங்களோ, நானோ ஓர் ஆட்டக்காரரைக் குறைசொல்லும்போது...

கவாஸ்கர், பாய்காட் ஆகியோர் மிக மெதுவாகத்தான் ரன்களைச் சேர்த்தனர். ஆனாலும் இன்றைய கிரிக்கெட் மாறிவிட்டது. அதனால் இப்பொழுது ஒருநாள் போட்டிகளில் இந்திய/பிற அணியினர் மெதுவாக விளையாடும்போது கவாஸ்கர், பாய்காட் ஆகியோர் நிச்சயமாக இவர்களைக் குறை சொல்லலாம். தவறில்லை.

கவர்னர் பந்தாட்டம்

காங்கிரஸ் என்றுமே சர்க்காரியா கமிஷன் சிபாரிசுகளை ஏற்றது கிடையாது. இன்று நம் நாட்டில் உள்ள கட்சிகளிலேயே federalism பற்றிய மோசமான கருத்துகளை வைத்திருப்பது காங்கிரஸ்தான். இத்தனைக்கும் காங்கிரஸ் மிகவும் வலுவற்ற நிலையில்தான் உள்ளது. இதே காங்கிரஸ் வலுவான, தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தால் விளைவு மாநில அரசுகளுக்குப் படுமோசமாக இருக்கும்.

தமிழக ஆளுநர் ராம் மோகன ராவ் மாற்றத்தில் திமுகவுக்கு அதிமுக்கியப் பங்கு இருக்கிறது என்பது இப்பொழுது நன்கு தெளிவாகி விட்டது. முதல்வர் ஜெயலலிதா தனக்கும், மத்திய உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாடிலுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருப்பது தவறாகவே தோன்றவில்லை. மத்திய அமைச்சர் ஒருவர் மாநில முதல்வர் ஒருவரிடம் எவ்வளவு முட்டாள்தனமாகப் பேசுகிறார் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கும்போது அதற்குத் தேவையான எல்லாவித சாட்சியங்களையும் நீதிமன்றத்தின் முன் வைப்பது சரியான முறைதான். தேநீர் விருந்து அளிக்கவில்லை என்பதற்காக ஓர் ஆளுநர் தூக்கியெறியப்படுகிறார் - அப்படித்தான் முதல்வரிடம் உள்துறை அமைச்சர் சொல்கிறார். இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மத்திய அரசு எப்படி பொறுப்பற்ற விதமாக நடந்து கொள்கிறது என்று காண்பித்துள்ளார்.

உடனே ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார் என்றெல்லாம் கதையளக்க தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தயாராகி விட்டன. இந்த ரகசியக் காப்பு பிரமாணத்தையே மாற்றி அமைக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்காத எதுவுமே ரகசியக் காப்புப் பிரமாணத்தின் பிடிக்குள் இருக்கக் கூடாது.

அதே சமயம் சுர்ஜித் சிங் பர்னாலா திமுக அனுதாபி என்று ஜெயலலிதா தேவையில்லாது குறை சொல்லக் கூடாது. பர்னாலா இதற்குமுன் கருணாநிதி முதல்வராக இருந்தபோது (1989-90) தமிழக ஆளுநராக இருந்துள்ளார். அப்பொழுது மத்தியில் இருந்த அரசு பர்னாலாவை நெருக்கி கருணாநிதி அரசுக்கு எதிரான அறிக்கைகளைக் கொடுக்கச் சொன்னது. அதை ஏற்காத பர்னாலா பதவி விலகினார். திமுக தலைவர் கருணாநிதிக்கும், சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கும் பலத்த நட்பு உள்ளது. எமர்ஜென்சியின் போது பஞ்சாப் தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா பிற தலைவர்களைப் போலவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சில காலம் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று நினைக்கிறேன். அப்பொழுதே பர்னாலாவுக்கும், திமுக தலைவர்களுக்கும் நல்ல பழக்கம். சுர்ஜித் சிங் பர்னாலாவின் வாழ்க்கைக் கதை (ஆங்கிலத்தில் Quest for Freedom - A Story of Escape) தமிழிலும் ("விடுதலையைத் தேடி - நான் தப்பித்த கதை") மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பர்னாலாவே ஷிரோமணி அகாலி தள் கட்சியின் தலைவராக, பஞ்சாபின் முதல்வராக இருந்தவர். அப்பொழுது மத்தியில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. எனவே மத்திய-மாநில உறவுகளில் அசிங்கங்கள் அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், பர்னாலா ஜெயலலிதா அரசுக்கு வேண்டுமென்றே நெருக்கடியைத் தருவார் என்று ஜெயலலிதா நினைக்கக் கூடாது.

Friday, October 29, 2004

சமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை

இந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் இந்திய அரசின் இணையம், அகலப்பாட்டை பற்றிய குறுகிய நோக்கம் பற்றி. யூனிகோடில் இங்கே.

நாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்

ஆஸ்திரேலியா 398 & 329/5 டிக்ளேர்ட்; இந்தியா 185 & 200. ஆஸ்திரேலியா 342 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டித் தொடரையும் கைப்பற்றியது.

இன்று காலை எவ்வளவு நேரம் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் என்பதுதான் கேள்வி. மார்ட்டின், கிளார்க் இருவரும் சதம் எடுக்கும் வரை விட்டுவைக்கலாம் என்று கில்கிறிஸ்ட் முடிவு செய்திருந்தார் போலும். மாட்ட்டின் எளிதாகவே தன் அரை சதத்தை எட்டினார். அவ்வப்போது சில ரன்கள் வந்தாலும் முதல் ஒரு மணிநேரத்தில் எதிர்பார்த்த அளவு வேகமாக ஆஸ்திரேலியர்களால் ரன்களைக் குவிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவது மணிநேரத்தின்போது ரன்கள் எளிதாக வந்தது. கிளார்க் தன் அரை சதத்தைப் பெற்றபின், அதைக் கொண்டாட அகர்கரை அடித்து நொறுக்கினார். அகர்கரின் ஓர் ஓவரில் மார்ட்டினும், கிளார்க்கும் சேர்ந்து 21 ரன்களைப் பெற்றனர். (4,2,1,6,4,4). திடீரென கிளார்க்கின் எண்ணிக்கை மார்ட்டினின் எண்ணிக்கைக்கு வெகு அருகில் வந்து விட்டது. ஆனால் அதற்கு மேல் அதிகம் பெறாமல் கும்ப்ளே பந்தை மிட்விக்கெட் திசையில் அடிக்க, அங்கு காயிஃபால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். கிளார்க் 72 (11x4, 1x6), ஆஸ்திரேலியா 319/4. நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் ஜோடி சேர்ந்து சேர்த்தது 148 ரன்கள்.

மார்ட்டின் தன் சதத்தை எட்டும் வரை அவருக்குத் துணையாக இருக்க கில்கிறிஸ்ட் விளையாட வந்தார். மார்ட்டின் இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தால், பிராட்மேன் செய்தது போல மூன்று அடுத்தடுத்த இன்னிங்ஸில் சதமடித்த இரண்டாவது ஆஸ்திரேலியர் ஆகியிருப்பார். ஆனால் நடக்கவில்லை. 97 ரன்கள் இருக்கும்போது ஜாகீர் கான் பந்தில் விக்கெட் கீப்பர் படேலிடம் கேட்ச் கொடுத்து மார்ட்டின் ஆட்டமிழந்தார். அதில் 9x4 அடங்கும். ஆஸ்திரேலியா அப்பொழுது 329/5. உடனே இன்னிங்க்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தார் கில்கிறிஸ்ட்.

இந்தியா வெற்ற பெற 543 ரன்கள் தேவை என்ற நிலையில் சோப்ராவும், சேவாகும் மீண்டும் களமிறங்கினர். உணவு இடைவேளைக்கு முன் சரியாக ஓர் ஓவர் வீசமுடியும் என்றிருந்தது. மெக்ராத் ஓவரில் சோப்ராவுக்கு ஒரு ரன். உணவு இடைவேளையின்போது இந்தியா 1/0.

உணவு இடைவேளைக்குப் பின், வரிசையாக ஓர் ஊர்வலம். அதில் முதலைந்து மட்டையாளர்கள் வீடு திரும்பினர். கில்லெஸ்பி அற்புதமாகப் பந்து வீசினார். தொடர்ச்சியாக இன் கட்டர்களாகவே வீசினார். கிரிக்கெட் பந்தில் மேல் தோல் இரண்டு பெரிய பாகங்களாக இருக்கும். ஒவ்வொரு பெரிய பாகமும் இரண்டு சிறிய பாகங்களால் ஆனது. சிறிய பாகங்களை இணைத்து உள்தையல் இருக்கும். பெரிய பாகங்களை இணைத்து வெளித்தையல் இருக்கும். இந்த வெளித்தையலை ஒரு கோணத்தில் பிடித்துக் கொண்டுதான் சீம் (தையல்) வழியான பக்கவாட்டு நகர்தலை வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்படுத்துவார்கள். ஆனால் கில்லெஸ்பி புதுமையாக வெளித்தையலை குறுக்காகப் பிடித்துக் கொண்டு ஆஃப் கட்டர்களை வீசினார். முதலில் ஆகாஷ் சோப்ராவின் மிடில் ஸ்டம்ப் எகிறியது. சோப்ரா 1, இந்தியா 1/1. அடுத்து உள்ளே வந்தவர் திராவிட்.

மெக்ராத் பந்துவீச்சில் சேவாக் மூன்றாவது ஸ்லிப்பில் நிற்கும் லாங்கருக்கு கேட்ச் கொடுத்தார். லாங்கர் அற்புதமாக டைவடித்து அதைப் பிடிக்க முயன்றார். முடியவில்லை. ஆனால் கையால் பந்தைத் தடுத்து விட்டார். அடுத்த பந்தை சேவாக் நான்காவது ஸ்லிப் இருக்கும் திசையில் உயர அடித்து நான்கு ரன்களை பெற்றார். அடுத்த ஓவரில் கில்லெஸ்பி மற்றுமொரு ஆஃப் கட்டர் மூலம் திராவிடின் லெக் ஸ்டம்பைப் பதம் பார்த்தார். இந்தப் பந்து சட்டென்று உள்ளே வந்து, திராவிடின் பேட்டின் உள்புற விளிம்பில் பட்டு இடைவெளி வழியாக ஸ்டம்பில் விழுந்தது. திராவிட் போன்ற டெக்னிக் ஒழுங்கான மட்டையாளர் ஏன் மட்டைக்கும், கால் காப்புக்கும் இடையே இத்தனை இடைவெளி விட்டு வைத்தார்? திராவிட் 2, இந்தியா 9/2.

அடுத்து அரங்கமே அதிருமாறு டெண்டுல்கர் உள்ளே வந்தார். கில்லெஸ்பி பந்தில் கவர் டிரைவ் ஒன்றை அடித்தார். பந்து எல்லைக்கோட்டுக்கு முன்னால் தானாகவே நின்றது. முந்தைய டெண்டுல்கராக இருந்தால் விளம்பரப் பலகையில் அடித்து உள்ளே வந்திருக்கும். இரண்டு ஓவர்களுக்குப் பின், மெக்ராத் வீசிய பந்து ஒன்று சடாரென்று எழும்பியது. லொட்டைக் கையுடன் டெண்டுல்கர் அந்தப் பந்தை பின்வாங்கித் தட்ட, பாயிண்ட் திசையில் மார்ட்டின் பாய்ந்து விழுந்து பிரமாதமான கேட்சைப் பிடித்தார். டெண்டுல்கர் 2, இந்தியா 20/3.

லக்ஷ்மண் வந்தார். கொஞ்சம் தடவினார். மற்றொரு பக்கம் சேவாக் அப்படியும் இப்படியுமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். கில்லெஸ்பி போய் காஸ்பரோவிச் பந்துவீச வந்தார். அவர் வீசிய முதல் பந்து, பவுன்சர். லக்ஷ்மண் இதைத் தூக்கி டீப் ஸ்கொயர் லெக்கில் அடிக்க, அங்கு நின்ற மெக்ராத் பிடிக்க, நான்காவது விக்கெட் காலி. லக்ஷ்மண் 2, இந்தியா 29/4. அடுத்து காயிஃப். முதல் இன்னிங்ஸில் நிறைய அடித்தாயிற்று, இது போதும் என்று நினைத்தாரோ என்னவோ. நல்லதொரு ஸ்டிரைட் டிரைவ் நான்கைப் பெற்றவர், காஸ்பரோவிச் பந்தை விளிம்பால் தட்டிவிட, கில்கிறிஸ்ட் முதல் ஸ்லிப் முன்னால் விழுந்து பிடித்தார். காயிஃப் 6, இந்தியா 35/5.

இத்தனைக்கும் தேநீர் இடைவேளை கூட வரவில்லை. இதே நிலையில் போனால் அதற்கு முன்னரே இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும் அபாயம் இருந்தது. ஆனால் சேவாகும், படேலும் சேர்ந்து ஜாலியாக விளையாடி சில ரன்களைப் பெற்றனர். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 84/5. சேவாக் 49*, படேல் 21.

தேநீர் இடைவேளைக்குப் பின் சேவாக் தன் அரை சதத்தைப் பெற்றார். சதம் எடுப்பாரா? இல்லை. ஷேன் வார்ன் சேவாகுக்குப் பந்து வீசும்போது வீசும் கை விக்கெடிலிருந்து விலகி வந்து, லெக் ஸ்டம்பிற்கு வெளியே வீசிக்கொண்டிருந்தார். இதனால் கடுப்பான சேவாக் இறங்கி வந்து அடிக்கப் போய் பந்தை கவர் திசையில் வானளாவப் பறக்க விட்டார். கிளார்க் சுலபமாகப் பிடித்தார். சேவாக் 58, இந்தியா 102/6.

தொடர்ந்து விளையாட வந்த அகர்கரும் ஜாலியாக ரன்களைப் பெற்றார். பல ரன்கள் ஸ்லிப் திசையில் பறந்தவையே.

கில்கிறிஸ்ட் கில்லெஸ்பியைப் பந்துவீசக் கொண்டுவந்தார். கில்லெஸ்பி உடனேயே படேலுக்கு ஆஃப் கட்டர் ஒன்றை வீசினார். இடதுகை ஆட்டக்காரரான படேலுக்கு பந்து வெளியே சென்றது. அதில் மெல்லிய உரசல் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து படேல் அவுட்டானார். படேல் 32, இந்தியா 114/7. கும்ப்ளே அதிகம் நிற்கவில்லை. கில்லெஸ்பி அவரது ஸ்டம்பைப் பெயர்த்தார். கும்ப்ளே 2, இந்தியா 122/8. இந்நிலையில் இந்தியா 400 ரன்களுக்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் தோற்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் கார்த்திக்கும், அகர்கரும் மட்டையை அகல வீசி தடதடவென ரன்களைக் குவித்தனர். கார்த்திக் நன்றாகவே விளையாடினார் என்று சொல்லவேண்டும். மெக்ராத், கில்லெஸ்பி, வார்ன் என்று அனைவர் பந்திலும் நான்குகளைப் பெற்றார். திடீரென கார்த்திக்கின் ஸ்கோர் அகர்கர் அடித்த ரன்களைவிட அதிகமாகி விட்டது.

மெக்ராத் பந்துவீச்சுக்கு வந்தார். உடனேயே வெளியே செல்லும் பந்தில் மிக மெல்லிய உரசல் பட்டு கார்த்திக் கில்கிறிஸ்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். கார்த்திக் 22, இந்தியா 148/9. ஆட்டம் இப்பொழுதும் நிறைவு பெறவில்லை. கடைசியாக விளையாட வந்த ஜாகீர் கான் மெக்ராத்தை அடித்து ஒரு நான்கைப் பெற்றார். அடுத்த வார்ன் ஓவரில் சரமாரியாக இரண்டு சிக்ஸ் அடித்தார். உடனே கில்கிறிஸ்ட் வார்னை எடுத்துவிட்டு காஸ்பரோவிச்சைக் கொண்டு வந்தார். அவருக்கும் சரமாரியான அடிதான். மெக்ராத்தின் ஓர் ஓவரில் அகர்கர் வரிசையாக மூன்று பவுண்டரிகளை ஒரே இடத்தில் - பேக்வர்ட் பாயிண்டில் - அடித்துப் பெற்றார். இப்படியே ஒருவழியாக இந்தியா 200 ரன்களைத் தொட்டு விட்டது! வார்ன் திரும்பி வந்தார். ஜாகீர் கான் மற்றுமொரு சிக்ஸ் அடிக்கப்போய் எல்லைக்கோட்டில் மார்ட்டினிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கான் 25, அகர்கர் 44*, இந்தியா 200 ஆல் அவுட். ஆஸ்திரேலியா 342 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஏதோ கடைசி நேரத்தில் பல நான்குகளையும், ஆறுகளையும் அடித்து இந்தியாவின் கடைசி மூன்று பேர் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தனர்.

ஆஸ்திரேலியாவோ - கடந்த 35 வருடங்களாக இந்தியாவில் சாதிக்க முடியாததை சாதித்து விட்டனர். இந்தியாவின் ஒரு டெஸ்ட் தொடர் வெற்றி. டேமியன் மார்ட்டின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

[பி.கு: 30 அக்டோபர் 2004, சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் 'விளையாட்டு அரங்கம்' நிகழ்ச்சியில், இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் பற்றிய என் கருத்துக்களைப் பார்க்கலாம்.]

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் மெக்ராத் மீது புகழ்பாடல்.

நாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்

ஆஸ்திரேலியா 398 & 202/3 (73 ஓவர்கள்) - மார்ட்டின் 41*, கிளார்க் 10*; இந்தியா 185

இன்று காலை ஆட்டம் தொடங்கியதுமே இந்தியாவின் தொல்லைகள் அதிகமாயின. இரண்டாவது ஓவரில், ஷேன் வார்ன் வீசிய அளவு குறைந்த பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் சுழற்றி நான்கு அடித்த படேல், அடுத்த பந்து - கூக்ளியை - சரியாகப் புரிந்து கொள்ளாமல் முதல் ஸ்லிப்பில் இருக்கும் ஹெய்டனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். படேல் 20, இந்தியா 150/6. அடுத்து பேட்டிங் செய்ய வந்த அகர்கர் வார்ன் பந்தில் இரண்டு நான்குகளைப் பெற, உடனே கில்கிறிஸ்ட் புதுப்பந்தை எடுத்து மெக்ராத், கில்லெஸ்பியிடம் கொடுத்தார். அகர்கார் ஸ்லிப் திசையில் அடித்து மற்றுமொரு நான்கைப் பெற்றார், பின் கில்லெஸ்பி பந்து வீச்சில் இரண்டாவது ஸ்லிப்பில் கிளார்க் பிடித்த மிக அழகான கேட்சால் அவுட்டானார். அகர்கர் 15, இந்தியா 173/7. இதற்கிடையே ஒரு மூன்றைப் பெற்று காயிஃப் தன் அரை சதத்தை எட்டியிருந்தார்.

கும்ப்ளே துணையுடன் காயிஃப் மேலும் ரன்களைச் சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. மெக்ராத் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் இருக்கும் வார்னிடம் கேட்ச் கொடுத்து எதிர்பாராத விதமாக அவுட்டானார் காயிஃப். காயிஃப் 55 (151), 7x4, 1x6. இந்தியா 178/8. இதற்குப்பிறகு இந்தியா 200ஐத் தாண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கும்ப்ளே, கார்த்திக் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு பந்துகளை எதிர்கொண்டனர். கார்த்திக் கில்லெஸ்பியின் பந்தில் இரண்டாம் ஸ்லிப்பில் கிளார்க்கிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கார்த்திக் 3, இந்தியா 181/9. அதன்பின் ஸ்கோரர்களைக் கஷ்டப்படுத்தாமல் ஜாகீர் கான் கில்லெஸ்பியின் நேரான பந்தை எதிர்கொள்ளத் தெரியாது பவுல்ட் ஆனார். இந்தியா 185 ஆல் அவுட். ஆஸ்திரேலியா இந்தியாவை விட 213 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. ஆஸ்திரேலியா ஃபாலோ-ஆனை விதிக்காமல் மீண்டும் பேட்டிங் செய்யத் தொடங்கியது. இதுவும் எதிர்பார்த்ததுதான்.

இம்முறை கானும், அகர்கரும் நன்றாகவே பந்து வீசினர். முக்கியமாக ஜாகீர் கான். தொடக்கத்திலிருந்தே ஹெய்டன், லாங்கர் இருவருமே கானை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 19/0 என்ற நிலையில் இருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது ஒவரிலேயே ஹெய்டனுக்கு கான் வீசிய பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்து விழுந்து உள்ளே வந்த பந்து, பேட், கால் காப்பு வழியாக ஸ்டம்பில் போய் விழுந்தது. ஹெய்டன் 9, ஆஸ்திரேலியா 19/1. அதன்பின் லாங்கர் கான் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகியிருக்க வேண்டும். ஆனால் நடுவர் அலீம் தர் அவுட் கொடுக்கவில்லை. நேரம் ஆக, ஆக ஆடுகளத்தில் விழும் பந்துகள் மெதுவாகவே எழும்பி வந்தன. இதனால் ரன்களை வேகமாகச் சேர்க்க முடியவில்லை. ஆனாலும் காடிச் பிரமாதக விளையாடி ரன்களைப் பெற்றார். லாங்கருக்கோ ரன்களைப் பெறுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. காடிச் வேகமாக தன் அரை சதத்தை தாண்டிவிட்டார். ஆனால் லாங்கர் 30இலேயே இருந்தார். தன்ன்னால் ரன்களை வேகமாகப் பெற முடியவில்லை என்பதால் கார்த்திக் வீசிய பந்து ஒன்றை லாங்கர் இறங்கி வந்து அடிக்க முனைந்தார். ஆனால் காற்றிலே மிதந்து வந்த பந்தில் ஏமாந்த லாங்கர் பந்தை மிட் ஆன் திசையில் உயர அடித்தார். லாங் ஆனில் இருந்த லக்ஷ்மண் ஓடிச்சென்று கேட்சைப் பிடித்தார். லாங்கர் 30, ஆஸ்திரேலியா 99/2.

காடிச், மார்ட்டின் இருவரும் மெதுவாகவே, ஆனால் எளிதாகவே ரன்களைப் பெற்றனர். அவ்வப்போது சில நான்குகளும் வந்துகொண்டிருந்தனர். கும்ப்ளே, டெண்டுல்கர், கார்த்திக் என மூன்று ஸ்பின்னர்கள் பந்துவீசினர். கும்ப்ளே முழுவதும் உபயோகமற்றதாக வீசினார். டெண்டுல்கர் கூட பலமுறை மட்டையாளர்களை சிரமப்பட வைத்தார், ஆனால் விக்கெட் எதையும் பெறவில்லை. கார்த்திக் மட்டும்தான் சிறப்பாக வீசினார் என்று சொல்ல வேண்டும்.

காடிச் தன் சதத்தை நிச்சயம் பெற்றுவிடுவார் என்றுதான் தோன்றியது. ஆனால் 99இல் இருக்கும்போது கார்த்திக் வீசிய சற்று வேகம் அதிகமான பந்தை பின்னால் சென்று வெட்டி ஆட முனைந்தார், ஆனால் பேட்டில் படாமல், கால்காப்பில் பட்டது. காடிச் எல்.பி.டபிள்யூ என்று நடுவர் ஷெப்பர்ட் முடிவு செய்தார். காடிச் தன் 99இல் 14 நான்குகளை அடித்திருந்தார். ஆஸ்திரேலியா 171/3. அதன்பின் மார்ட்டினும் கிளார்க்கும் ஆட்டம் முடியும் வரை ஸ்கோரை 202/3 என்ற நிலைக்க்குக் கொண்டுபோனார்கள். இப்பொழுதைய லீட் 415 ரன்கள்.

நாளை ஆஸ்திரேலியா இன்னமும் 100 ரன்கள் பெற்றபின் டிக்ளேர் செய்வார்கள் என்று நினைக்கிறேன். இந்தியா நான்காவது நாளே ஆட்டமிழந்து தோற்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் திடீரென சிலிர்த்துக்கொண்டு இரண்டு நாள்கள் முழுதும் விளையாடி டிரா செய்வார்களா என்று பார்ப்போம். ஆடுகளத்தில் கன்னாபின்னாவென்று பந்து ஸ்பின் ஆகத் தொடங்கியுள்ளது. அப்படியானால் ஷேன் வார்ன் சப்புக்கொட்டிக்கொண்டு பந்து வீசுவார். எதற்கும் இருக்கவே இருக்கிறார்கள் மெக்ராத், கில்லெஸ்பி.

கங்குலி நான்காவது டெஸ்டும் விளையாடப்போவதில்லை என்று தெரிகிறது. இரண்டாம் இன்னிங்ஸில் டெண்டுல்கர் எப்படி விளையாடுகிறார் என்பதையும் கூர்ந்து பார்க்க வேண்டும். தான் அவுட்டானது பிரெஸ் பாக்ஸில் ஒருவர் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்ததாலும், அதனால் தன் கவனம் பாதிக்கப்பட்டதாலும் என்பது போல டெண்டுல்கர் தெரிவித்ததாகச் செய்தி...

இப்பொழுதைய கேள்வி ஆஸ்திரேலியா எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வெல்லும் என்பதில்தான்.

Thursday, October 28, 2004

நாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்

ஆஸ்திரேலியா 398, இந்தியா 146/5 (77 ஓவர்கள்) - காயிஃப் 47*, படேல் 16*

ஆஸ்திரேலியா, இந்தியா விளையாடிய கடந்த 9 டெஸ்ட்களில் இந்திய அணி தன்னளவில் மிகச்சிறந்த அணியையே அமைத்திருந்தது. சிலசமயம் ஹர்பஜன் விளையாடவில்லை, சிலசமயம் கும்ப்ளே. ஆனால் பேட்டிங் எப்பொழுதுமே சிறப்பானதாக இருந்துள்ளது. அதனால்தான் ஆட்டத்தின் முடிவுகளும் 3-3-3 (ஆளுக்கு மூன்று வெற்றிகள், மூன்று டிரா) என்று இருந்துள்ளது. ஆனால் நாக்பூர் டெஸ்டின் தொடக்கத்திலேயே இந்திய அணி ஆஸ்திரேலியா போன்ற உலக சாம்பியன் அணியை சிறிதும் எதிர்கொள்ள லாயக்கற்றது என்று தெரிந்துபோனது.

முதல்தரப் பந்துவீச்சு இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை 398க்கு ஆல் அவுட் ஆக்கியது சாதனைதான். இன்று காலை ஜாகீர் கான் முதல் ஓவரிலேயே புதுப்பந்தை எடுத்தார். சில ஓவர்களுக்குப் பின், கில்லெஸ்பியை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். கில்லெஸ்பி 9, ஆஸ்திரேலியா 376/8. அடுத்த ஓவரிலேயே அகர்கர் காஸ்பரோவிச்சை விக்கெட் கீப்பர் படேலிடம் கேட்ச் கொடுக்க வைத்து அவுட்டாக்கினார். காஸ்பரோவிச் 0, ஆஸ்திரேலியா 377/9. தன் நூறாவது டெஸ்டை விளையாடும் மெக்ராத் கடைசியாக மட்டை பிடிக்க வந்தார். அகர்கர் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு ஓரடி தள்ளி வந்தெல்லாம் காமெடியாக விளையாடினார், ஆனால் தடால் தடாலென்று இரண்டு நான்குகளும் (ஒரு கவர் டிரைவ், ஒரு ஹூக்!) ஒரு மூன்றும் அடித்தார். மறு முனையில் கிளார்க் தன் சதத்தை எட்டுவாரா என்பதே கேள்வியாக இருந்தது. ஆனால் கானின் பந்தில் படேலிடம் கேட்ச் கொடுத்து கிளார்க் அவுட்டானார். கிளார்க் 91, ஆஸ்திரேலியா 398.

படேல் கடைசியில் மூன்று கேட்சுகளும், ஒரு ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். ஆனாலும் அவர் விட்ட கேட்சுகள்தான் நம் மனதில் நிற்கும்.

இந்தியா பேட்டிங் செய்ய வந்தது. மோசமான ஃபார்ம், டெண்டுல்கரின் ஃபிட்னெஸ் பற்றிய கவலை, கங்குலி இல்லாதது, ஆஸ்திரேலியாவின் மிக அருமையான பவுலிங். இந்தியா ஃபாலோ-ஆனைத் தாண்டுவதே கடினம் என்று எனக்கு உள்மனதில் தோன்றியது. ஆனால் முதல் நான்கைந்து ஓவர்களில் சேவாக் பேட்டிங் செய்த போது யாருமே இப்படி நினைத்திருக்க முடியாது. முதல் ஓவர் மெக்ராத், ஆகாஷ் சோப்ராவுக்கு - மெய்டன். இரண்டாவது ஓவரில் சேவாக் கில்லெஸ்பியை வெளுத்து வாங்கினார். முதல் பந்து, பாயிண்ட் - நான்கு ரன்கள். இரண்டாவது பந்து யார்க்கர், தடுத்து விளையாடினார். மூன்றாவது பந்து ஸ்லிப் திசையில் உயர அடிக்கப்பட்டு, தர்ட்மேனில் நான்கு. நான்காவது பந்து ஆஃப் திசையில், நல்ல அளவில் வந்தது, கவர் திசையில் நான்கு ரன்கள். ஐந்தாவது பந்து, விளிம்பில் பட்டது, ஆனால் இரண்டாவது ஸ்லிப் கைக்குப் போகாமல் முன்னாலேயே விழுந்து விட்டது. ஆறாவது பந்து, கால் திசையில். சேவாக் அதை மிட்விக்கெட்டுக்கு மேல் தூக்கி அடித்தார், நான்கு ரன்கள்!

அதன்பிறகு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. சோப்ரா விளிம்பில் பந்தைத் தட்டி, தர்ட்மேனில் இரண்டு நான்குகளைப் பெற்றார். சேவாக் அங்கும் இங்குமாக இரண்டுகளையும், ஒன்றுகளையும் பெற்றார். நடுவில் கொஞ்சம் அமைதி.

மெக்ராத் வீசிய ஓவரில் சேவாக் பந்தை வெட்டி ஆடப்போய் தவறினார். கொஞ்சம் சுதாரித்து அந்த ஓவரில் கவனமாக விளையாடியிருக்கலாம். அப்படிச் செய்வது சேவாகின் வழக்கமில்லையே? அடுத்த பந்து, எழும்பி வந்தது. வெட்டினார். கில்கிறிஸ்ட் முதல் ஸ்லிப்புக்கு முன்னால் தாவி வந்து கேட்சைப் பிடித்தார். சேவாக் 22, இந்தியா 31/1. இதன் பின் சேவாக் கையில் உதைவாங்கியதற்காக கில்லெஸ்பிக்கு பதில் காஸ்பரோவிச்சைப் பந்துவீச வைத்துக்கொண்டிருந்த கில்கிறிஸ்ட், மீண்டும் கில்லெஸ்பியை பந்துவீச்சுக்குக் கொண்டுவந்தார். சோப்ரா ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை அழகாக கேட்ச் பிராக்டீஸ் செய்வது போல தட்டி முதல் ஸ்லிப்பில் இருக்கும் வார்ன் கையில் கொடுத்தார். சோப்ரா 9, இந்தியா 34/2. டெண்டுல்கர் விளையாட வந்தார். அரங்கமே ஆர்ப்பரித்தது. (ஏன்?)

டெண்டுல்கர் விளையாடும்போது அவர் முழு ஃபிட்னெஸில் இல்லை என்றே தோன்றியது. உலகமே அவசரப்படுத்தி அவரை பேட்டிங் செய்ய அழைத்து வந்திருந்தது. இரண்டொரு முறை வலி தாங்காமலோ, என்னவோ, மட்டையைப் பிடித்திருக்கும் கீழ்க்கையை எடுத்துவிட்டார். ஆனால் டென்னிஸ் எல்போ வந்திருப்பது மேல்கை (அதாவது இடக்கை). உணவு இடைவேளையின்போது இந்தியா 35/2 என்று இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் திராவிடும், டெண்டுல்கரும் தட்டுத் தடுமாறி ஆடினர். ஒரு தடவை கூட எல்லைக்கோட்டை நெருங்குமாறு ஷாட் எதுவும் அடிக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் யாருமே மோசமான பந்துகளைத் தரவில்லை. தந்திருந்தாலும் கூட அடிக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையும் மட்டையாளர்களிடம் இல்லை. கில்கிறிஸ்ட் ஆனால் ஷேன் வார்னை பந்துவிச்சுக்குக் கொண்டுவரவில்லை. கில்லெஸ்பியின் பந்தில் டெண்டுல்கர் எல்.பி.டபிள்யூ ஆனார். ஸ்டம்பிற்கு நேராக அவரது காலில் பட்ட பந்து. அப்பொழுது டெண்டுல்கர் 36 பந்துகளில் 8 ரன்கள் அடித்திருந்தார். எந்த நான்கும் இல்லை. திராவிட் அப்பொழுது 53 பந்துகளில் 5 ரன்கள் அடித்திருந்தார்! இந்தியா 49/3.

லக்ஷ்மண் அடுத்து விளையாட வந்தார். இப்பொழுது கொஞ்சமாவது ரன்கள் வர ஆரம்பித்தது. திராவிட் மெக்ராத் பந்தை பாயிண்டில் அடித்து நான்கைப் பெற்றார். லக்ஷ்மண் கில்லெஸ்பியின் பந்தில் தர்ட்மேனில் ஒரு நான்கு அடித்தார். அதே ஓவரில் மீண்டும் ஸ்லிப் திசையிலேயே மற்றுமொரு நான்கு. காஸ்பரோவிச் பந்தில் மிட் ஆஃப் திசையில் லக்ஷ்மணுக்கு மற்றுமொரு நான்கு. காஸ்பரோவிச் பந்தில் திராவிடும் இன்னுமொரு நான்கைப் பெற்றார்.

ரன்கள் வரத் தொடங்கவே, கில்கிறிஸ்ட் ஷேன் வார்னைக் கொண்டுவந்தார். தன் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே வார்ன் லக்ஷ்மணுக்கு லட்டு போல ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் போட்டுக் கொடுத்தார். மோசமான பந்து. அதை நான்கிற்கு அடித்திருக்க வேண்டும். ஆனால், அதைப் பார்த்தவுடன் வாயில் எச்சில் ஊற லக்ஷ்மண் பந்தைத் தூக்கி அடிக்க கல்லியில் கிளார்க் அழகான ஒரு கேட்சைப் பிடித்தார். லக்ஷ்மண் 13, இந்தியா 75/4.

திராவிட் உடனே ஒரு கூட்டுக்குள் போய்விட்டார். காயிஃபுடன் சேர்ந்து இந்த டெஸ்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து 'டொக்கு வைக்க' ஆரம்பித்தார். ஆனால் காயிஃப் சரியாக, நிதானமாக விளையாடினார். திராவிடும் அப்படியே செய்திருக்கலாம். செய்யவில்லை. தேநீர் இடைவேளையின்போது இந்தியா 95/4. திராவிட் 119 பந்துகளில் 19*. காயிஃப் 27 பந்துகளில் 15*.

இடைவேளைக்குப் பின் இந்தியா நூறைத் தாண்டியது. காயிஃப் மட்டும்தான் ரன்களைப் பெற முயற்சித்தார். இருவரும் 21 ரன்களை எட்டினர். மெக்ராத் வீசிய அருமையான பந்தில் - ஆஃப் ஸ்டம்பில் விழுந்து சற்றே விலகிச் சென்றது - திராவிட் முதல் ஸ்லிப்பில் இருக்கும் ஷேன் வார்னிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் 140 பந்துகளில் 21. இந்தியா 103/5.

அதன்பின் காயிஃப் - படேல் ஜோடி சேர்ந்து சிறிதாவது மானத்தைக் காத்தனர். சென்னையில் விளையாடியதைப் போலவே இருவரும் சமர்த்தாக விளையாடினர். படேல் சற்றே கவனமாகவும், காயிஃப் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரன்களைப் பெற்றும் ஆடினர். முன்னமே சொன்னது போல காயிஃப் ஒருவர்தான் முழுத் தன்னம்பிக்கையுடன், தன் இயல்பான விளையாட்டை விளையாடினார்.

மெக்ராத் வீசிய ஒரு 'நோபாலில்' - அளவு குறைந்து வந்தது - காயிஃப் கண்மூடித்தனமாக குனிய, பந்து பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பில் வார்னிடம் கேட்சானது. அதை 'நோபால்' என்று கவனிக்காமல் காயிஃப் பெவிலியன் திரும்பி நடக்கலானார். திடீரென நடந்ததை உணர்ந்து மீண்டும் கிரீஸில் ஓடி வந்து விழுந்தார் - இல்லாவிட்டால் ரன் அவுட் ஆகியிருக்கும். ஆஸ்திரேலியர்கள் இதையெல்லாம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் அல்லவா? அதன் பிறகு காயிஃப் நிதானமாக ஆடி, மெக்ராத், காஸ்பரோவிச், கில்லெஸ்பி பந்துகளில் சில நான்குகளையும், வார்ன் பந்தில் லாங் ஆனுக்கு மேல் ஒரு ஆறையும் பெற்றார். இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது இந்தியா 146/5 என்று இருந்தது. மெக்ராத் படேலை நிறையவே பயமுறுத்தினார். ஆனால் படேல் அதைப்பற்றி கவலைப்படாது தைரியமாக - இதுவரை - நிற்கிறார். இன்று காலை நடைபெறும் ஆட்டம் முக்கியமானது. ஆஸ்திரேலியா இந்தியாவின் கடைசித் தடையை உடைத்துவிட்டால் நாளைக்குள் ஆட்டம் முடிந்து விடும். ஆனால் காயிஃப் தொடர்ச்சியாக இன்று முழுதும் விளையாடினால் இந்தியாவால் ஆட்டத்தை ஐந்தாவது நாளுக்குக் கொண்டுபோக முடியும்.

மற்றபடி ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்தில் ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றே இப்பொழுதைக்குத் தோன்றுகிறது.

Tuesday, October 26, 2004

நாக்பூர் டெஸ்ட், முதல் நாள்

ஆஸ்திரேலியா 362/7 (90 ஓவர்கள்) - கிளார்க் 73*, கில்லெஸ்பி 4*

முதலிரண்டு டெஸ்ட்களில் இருந்த அணியின் வலிமை வெகுவாகக் குறைந்தும், இந்தியா இன்று சற்றும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டியது.

சென்னை டெஸ்ட் முடிந்த போதே இர்பான் பதான் விளையாட மாட்டார் என்று தெரிந்துவிட்டது. இரண்டு நாள்களுக்கு முன்னர் டெண்டுல்கர் இந்த டெஸ்டில் ஆடுவார் என்பதைக் கேட்டு நாடே சந்தோஷத்தில் மூழ்கியது. ஆனால் இன்று ஆட்டம் நடக்கும் முன்னரே சவுரவ் கங்குலி (தொடை இழுப்பு), ஹர்பஜன் சிங் (ஜுரம்) இருவரும் விளையாட மாட்டார்கள் என்பது பேரிடியாக விழுந்தது. திராவிட் தற்காலிக அணித்தலைவர் ஆனார். ஆனால் டாஸ் என்னவோ கில்கிறிஸ்ட் பக்கம்தான். இந்தியா யுவ்ராஜ் சிங்குக்கு பதில் ஆகாஷ் சோப்ராவையும், பதானுக்கு பதில் அகர்கரையும், ஹர்பஜனுக்கு பதில் முரளி கார்த்திக்கையும் கொண்டு வந்தது. ஆஸ்திரேலியா அணியில் எந்த மாற்றமும் இல்லை. டாஸ் வென்றதும் பேட்டிங் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை.

முன்னணிப் பந்துவீச்சாளர்கள் மூன்றுபேரை (பாலாஜி, பதான், ஹர்பஜன்) இழந்த இந்தியா காலை முதலே சுமாராகவே பந்து வீசியது. ஜாகீர் கான், அகர்கர் இருவரும் அவ்வப்போது மட்டை விளிம்புகளை முத்தமிட்டுச் சென்றனர். ஆனால் எதுவும் கேட்ச் ஆகவில்லை. கடந்த இரண்டு டெஸ்ட்களைப் போலவே ஆஸ்திரேலியத் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சுலபமாக ரன்களைப் பெற்றனர். ஹெய்டனை விட லாங்கர் ஆக்ரோஷமாக விளையாடினார். கும்ப்ளே பந்துவீச வந்தும் எந்த மாற்றமும் இல்லை. இப்படியே போனால் தொடக்க ஆட்டக்கார ஜோடி 250 ரன்களைப் பெறும் என்று நான் சொல்லிமுடிக்கவும், அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

உணவு இடைவேளை நெருங்கினாலே சற்று சாவதானமாக விளையாடுவது மற்ற அணிகளின் இயல்பு. ஆஸ்திரேலியா அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. தன் இரண்டாவது ஸ்பெல்லில், ஜாகீர் கான் உள்நோக்கிக் கொண்டுவந்த பந்தை ஹெய்டன் வெட்டினார், ஆனால் பந்து விளிம்பில் பட்டு படேலிடம் சென்றது. இம்முறை கேட்சைப் பிடித்து விட்டார் படேல். ஹெய்டன் 23, ஆஸ்திரேலியா 67/1. மறுமுனையில் கும்ப்ளே நன்றாகப் பந்துவீசினார். முதல் விக்கெட் விழுந்து அடுத்த மூன்று ஓவர்களுக்குள், கும்ப்ளே வீசிய பந்தில் லாங்கர் விக்கெட் கீப்பர், முதல் ஸ்லிப் இருவருக்கும் இடையே ஒரு கேட்ச் கொடுத்தார். பிடிக்க மிகவும் கஷ்டமானதுதான். ஆனால் லாங்கர் அடுத்த ஓவரிலேயே கானின் சற்றே உயரம் அதிகமாகி வந்த பந்தை வெட்டி ஆடப்போய் முதல் ஸ்லிப்பில் நிற்கும் திராவிட் கையில் கேட்ச் கொடுத்தார். லாங்கர் 44, ஆஸ்திரேலியா 79/2. காடிச், மார்டின் இருவரும் உணவு இடைவேளை வரை சென்றுவிடுவார்கள் என்று நினைக்கும்போதே, கும்ப்ளே பந்தில் மட்டை, கால்காப்பு வழியாக பார்வர்ட் ஷார்ட் லெக்கில் இருக்கும் ஆகாஷ் சோப்ராவிடம் பிடிகொடுத்து காட்சி அவுட்டானார். காடிச் 4, ஆஸ்திரேலியா 86/3. மார்ட்டினும், லெஹ்மானும் சற்றும் பயமின்றி விளையாடி உணவு இடைவேளை போது ஆஸ்திரேலியாவை 103/3 என்னும் எண்ணிக்கைக்குக் கொண்டு சென்றனர்.

உணவு இடைவேளைக்குப் பின் மார்ட்டினும், லெஹ்மானும் பிரம்மாதமாக விளையாடினர். தம் அணி மிகக் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பது போலவே அவர்கள் விளையாடவில்லை. ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் அடித்து நொறுக்கினார்கள். முதல் முறையாக முரளி கார்த்திக் பந்துவீச வந்தார். டெண்டுல்கரும் பந்துவீச வந்தார் (நிறைய அடி வாங்கினார்). அணி 216/3, தன் ஸ்கோர் 61* என்னும் நிலையில் ஹாம்ஸ்டிரிங் பிரச்னையால் (தொடை, கவுட்டி நரம்பு இழுத்துக்கொள்ளுதல். இதனால் காலை அகட்டி வைத்து விளையாட முடியாது, ஓடி ரன்கள் எடுக்க முடியாது) பாதிக்கப்பட்ட லெஹ்மான் உதவி ஓட்டக்காரரைக் கோரினார். கில்கிறிஸ்ட் செய்தது போல திராவிட் எந்த அசிங்கமான பிரச்னையையும் எழுப்பவில்லை. ஹெய்டன் உதவிக்கு வந்தார். அடுத்த பந்திலேயே லெஹ்மான் கார்த்திக் பந்தை இறங்கி அடித்து நான்கு ரன்களைப் பெற்றார். ஆனால் அடுத்த ஓவரில் லெஹ்மான் டெண்டுல்கர் பந்துவீச்சில் அவருக்கே கையில் கொடுத்த கேட்ச் நழுவிப்போனது. ஆனால் இங்கும் உடனடியாக கார்த்திக் வீசிய பந்தில் முதல் ஸ்லிப் திராவிட் கையில் பந்தை வெட்டி கேட்ச் கொடுத்து லெஹ்மான் அவுட்டானார். லெஹ்மான் 70, ஆஸ்திரேலியா 234/4. தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 245/4 என்ற நிலையில் இருந்தது. மார்ட்டின் 80 ரன்களுடன் இருந்தார்.

கடைசி வேளையின்போது தொடக்கத்தில் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. அகர்கர் வீசிய பந்தை கவர் பாயிண்ட் திசையில் நான்காக அடித்து மார்ட்டின் சதம் பெற்றார். அவரது ஒன்பதாவது டெஸ்ட் சதம் இது. ஆனால் மார்ட்டின் அதன்பின் வெகுநேரம் நிற்கவில்லை. கும்ப்ளே பந்தை லாங் ஆஃப் மேல் சிக்ஸ் அடித்தவர், அடுத்த பந்திலும் அதேபோல் அடிக்கப்போய் மிட் ஆஃபில் இருக்கும் அகர்காரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மார்ட்டின் 114, ஆஸ்திரேலியா 314/5. மார்ட்டினும், லெஹ்மானும் சேர்ந்து ஆஸ்திரேலியாவை தொல்லையிலிருந்து முழுவதுமாகக் காப்பாற்றினர். ஆனால் கிளார்க்கும், கில்கிறிஸ்டும் தோற்கமுடியாத நிலைக்கு ஆஸ்திரேலியாவை அழைத்துச் சென்றுவிடுவார்களோ?

கார்த்திக் வீசிய காற்றில் மிதக்கும் பந்தை சரியாகக் கணிக்காத கில்கிறிஸ்ட் பந்தை விசியவரிடமே மேலாக அடித்தார். கார்த்திக் முன்னால் பாய்ந்து விழுந்து அற்புதமான கேட்ச் பிடித்தார். கில்கிறிஸ்ட் அடித்தது வெறும் 2 ரன்கள். ஆஸ்திரேலியா 323/6. இப்பொழுது கார்த்திக் நன்றாகவே பந்துவீசிக்கொண்டிருந்தார். மறுமுனையில் கிளார்க் சிறிதும் பயமின்றி இறங்கி இறங்கி வந்து சுழற்பந்து வீச்சாளர்களைத் தூக்கி அடித்து ரன்களைப் பெற்றுக்கொண்டிருந்தார். 87 பந்துகளில் தன் அரை சதத்தைப் பெற்றார். ஆனால் ஷேன் வார்ன் வெகுநேரம் நிற்கவில்லை. கார்த்திக் பந்தை இறங்கி அடிக்க வந்தவர் அதை முழுவதுமாக விட்டுவிட, படேல் வார்னை ஸ்டம்பிங் செய்தார். வார்ன் 2, ஆஸ்திரேலியா 337/7. கடைசி இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றதன் மூலம் இந்தியா மீண்டும் தன் முகத்தை முன்னுக்குத் தள்ளியது.

ஆனால் கிளார்க், கில்லெஸ்பியுடன் கூட்டு சேர்ந்து ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். கிளார்க் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார். படேல் இரண்டையும் தவற விட்டார். கும்ப்ளே பந்தில் ஒரு ஸ்டம்பிங், ஜாகீர் கான் பந்தில் கையில் வந்து விழுந்த ஒரு கேட்ச் - இரண்டையும் தவற விட்டார் படேல். முதல் நாள் ஆட்டம் முடிந்த போது ஆஸ்திரேலியா 362/7 என்ற நிலையில், கிளார்க் 73*, கில்லெஸ்பி 31 பந்துகளில் 4* என்றும் இருந்தனர்.

இந்தியாவின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் அவ்வப்போது எடுத்த விக்கெட்டுகள் மூலம் கொஞ்சமாவது ஆட்டத்தில் இருக்கின்றனர். படேல்... இவரை என்ன செய்யலாம்?

விஷ்வதுளசி

சற்றே வித்தியாசமானது; மம்மூட்டி, நந்திதா தாஸ் நடித்துள்ளனர் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.

முதல் பிரச்னை கதையில். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதையில் ஒன்றுமே இல்லை. சின்ன ஜமீன்தார் விஷ்வம் (மம்மூட்டி) பாட்டு கற்றுக்கொள்ள துளசியின் (நந்திதா தாஸ்) தந்தையை அணுகுகிறார். துளசியின் முறை மாமன் சிவா, துளசி மீது ஆசை வைத்துள்ளான். ஆனால் துளசிக்கு விஷ்வத்தின் மீது கண். அந்நேரத்தில் அவர்கள் எல்லோருக்கும் கிட்டத்தட்ட 16-18 வயது இருக்கும். துளசியின் தந்தையை நெஞ்சுவலி திடீரென்று தாக்க, அவசர அவசரமாக அங்கேயே, அப்போதே துளசிக்கும், சிவாவுக்கும் சாமி படத்தில் மாட்டியிருக்கும் மாலைகளால் பொம்மைக் கல்யாணம். அன்றே(?) மின்னல் தாக்கி சிவாவுக்கு பைத்தியம் பிடிக்கிறது, காணாமல் போகிறான். அதற்கு சற்று முன், சிவா-துளசி மாலை மாற்றுவதைப் பார்த்து விஷ்வம் அதிர்ச்சியடைந்து தன் ஊருக்குப் போய்விடுகிறான். இதுதான் முன்கதை. நடப்பது 1942இல்.

இருபது வருடங்களுக்குப் பின், சின்ன ஜமீன் பெரிய ஜமீனாக உள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் காதலில் மருகி மாய்ந்துகொண்டிருக்கிறார். அவரது உதவியாளருக்கு விஷ்வம்-துளசி இருவரும் ஒருவரையொருவர் விரும்பியது தெரியும். ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு பாட்டு, நாட்டியம் சொல்லிக்கொடுக்க, துளசியை அழைத்துக்கொண்டு வருகிறார். பைத்தியமான சிவாவும் அதே ஊருக்கு வந்து சேர்கிறார்.

சில நாள்கள் விஷ்வமும், துளசியும் ஒருவரை ஒருவர் பார்த்து மனதை இன்னமும் அதிகமாக வருத்திக்கொண்டு, பின் ஒருவழியாக ஒன்றுசேர முடிவு செய்கின்றனர். சொல்லிவைத்தாற் போல யானை ஒன்று பைத்திய சிவாவைத் தூக்கிப் விட்டெறிய, தலை கல்லில் பட்டு இரண்டு நாள்களில் பைத்தியம் தெளிந்து பழைய வெறிகொண்ட சிவா ஆகிறார். இதற்கிடையில் துளசி, விஷ்வம் இருவரும் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். கோவிலில், அடுத்த நாளே கல்யாணம் என்று முடிவாகிறது. இருவரும் தனியாக மாட்டு வண்டியில் திரும்பி வரும்போது சிவா வண்டியில் வந்து மோத, சிவாவின் பைத்தியம் தெளிந்ததை அறியாத விஷ்வம் கீழே இறங்கி, விழுந்த பழத்தட்டைப் பொறுக்கி எடுத்துக்கொண்டிருக்கும்போது சிவா மெதுவாக துளசியை நோக்கி நடந்து வண்டியின் அச்சாணியை உருவி, வயிற்றில் குத்தி சாகடிக்கிறார். ஒரு வழக்கமான சண்டையைப் போட்டு விஷ்வம், சிவாவை மண்டையை உடைத்துக் கொல்கிறார்.

படம் முடியும்போது விஷ்வம் கையில் செத்துப்போன துளசி... பெயர்கள் திரையில் தோன்றி மறையத் தொடங்குகின்றன. விஷ்வதுளசி!

அமெரிக்காவிலிருந்து தமிழ் உலகுக்கு வந்து முதல் படமெடுக்கும் இயக்குனர் சுமதி ராம் இவ்வளவு மோசமான கதையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டியதில்லை. அதைவிட மோசம் படத்தின் தலைப்பு.

கதை மோசமானதால், திரைக்கதை மிகவும் தடுமாறுகிறது. காட்சியமைப்பு பொருந்தாமல் உறுத்துகிறது. படத்தில் நந்திதா தாஸ் பாதி நேரம் பட்டுப்புடவையிலேயே இருக்கிறார். பட்டோ, பருத்தியோ, நந்திதா தாஸை மட்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதனால் மட்டும் படம் நன்றாக ஆகிவிடுமா? பட்டுப்புடவையில் நந்திதா தாஸ் கடலில் நடுவே குதித்து நாட்டியமாடுகிறார். வைக்கோல் போரில் புரளுகிறார். மம்மூட்டி சாப்பிட்டு கைகழுவியதும் பட்டுப்புடவை முந்தானையை கைதுடைக்க நீட்டுகிறார்! (பட்டுப்புடவையால் ஈரத்தை இழுக்க முடியாது என்பது வேறு விஷயம்!) ஆக எல்லாம் பட்டுப்புடவை விளம்பர ஸ்டில்களாகவே படம் முழுதும். படத்தில் பைத்தியம் சிவாவைத் தவிர சற்று அழுக்கான உடை கூட யாரிடமும் எப்போதும் இல்லை. வயலில் வேலை செய்பவர்கள் முதற்கொண்டு பால் போல வெளுத்த ஆடைகள் அணிந்துள்ளனர். கறையே படியாதா?

அவ்வப்போது விஷ்வமும், துளசியும் பாட்டுப்பாடுவதோடு இல்லாமல், ஊரே - குண்டு குண்டாக இருக்கும் பெண்கள் பலரும் சேர்ந்து கொண்டு - ஜம்மென்று பரத நாட்டியம் ஆடுகின்றது. பாட்டுப்பாடுபவர்கள் வாயசைப்புக்கும், பாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதுபோலவே வீணை வாசிக்கும் நந்திதா தாசின் கையசைவும்.

ஊரே ஜமீன்தாரைச் சுற்றி நடக்கிறது. ஜமீன்தார் ஊருக்கே நல்லது செய்பவர். அவருக்கு ஊழியம் செய்து, அதில் மகிழ்வதுதான் அவரைச் சுற்றியிருப்பவர்கள் ஜென்ம சாபல்யம் அடைய ஒரே வழி.

படத்தில் நிகழ்காலத்திலிருந்து, அவ்வப்போது பின்நோக்கிச் செல்லுமாறு கதை பின்னப்பட்டுள்ளது.

இசை (எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா), கேமரா (பி.கண்ணன்), பாடல்கள் (இளையராஜா, சுமதி ராம்) ஆகியவை நன்றாக உள்ளன. கலையமைப்பு பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ளது. ஆனால் 1962 கிராமத்தின் உண்மை நிலை போலத் தெரியவில்லை. ஏதோ ஒரு கற்பனா உலகில் இருக்கும் உடோபியன் கிராமம் (ஊரின் பெயரே சுந்தரபுரி!). படத்தில் விஷ்வம், துளசி இருவரும் தனியாக இருக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் எல்லாம் யாராவது ஒருவராவது பேசிக்கொண்டே இருக்கிறார். ஓயாத சத்தம்.

படத்தில் ஆங்காங்கே சில காட்சிகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. கூடை முழுதும் பவளமல்லிப் பூக்களால் நிரப்பி விஷ்வம், துளசி கண்ணில் படுமாறு விட்டுச் செல்வது (இருபது வருடங்களுக்கு முன், தான் துளசியை மணந்துகொள்ள வரும்போது அவ்வாறு செய்வதாக உறுதியளித்ததை இவ்வாறு காட்டுவது), கையில் மருதாணியுடன் இருக்கும் துளசிக்கு விக்கல் எடுக்கும்போது விஷ்வம் தண்ணீர் கொடுப்பது போன்றவை. அதேபோல் அபத்தத்தின் உச்சக்கட்டம் விஷ்வம் துலாபாரத்தில் உட்கார்ந்திருக்கும்போது எல்லா தங்க நகைகளும், பாத்திரங்களும் சாய்க்க முடியாத தராசை, ஒரு கட்டு துளசியை வைத்து சரிக்கட்டுவது.

மம்மூட்டி, நந்திதா தாஸ் போன்ற நடிகர்களை கையில் வைத்துக்கொண்டிருந்தும் இயக்குனர் கத்துக்குட்டியாய் இருந்ததாலும், கதை முழு வேஸ்டாக இருந்ததாலும், மொத்தமாக இந்தப் படத்தை வீணடித்துள்ளார்.

Monday, October 25, 2004

மையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்

மையான்மார் (பர்மா) ராணுவ ஜெனரல் தான் ஷ்வே இந்தியா வந்துள்ளார்.

[பிரிட்டனிடமிருந்து 1948இல் பர்மாவுக்கு விடுதலை கிடைத்தது. தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் போல பர்மாவிலும் மக்களாட்சிதான் ஆரம்பித்தது. ஆனால், அவ்வப்போது பாகிஸ்தானில் நடந்தது போல, 1962இல் பர்மாவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அன்றிலிருந்து இன்றுவரை பர்மாவின் தலையெழுத்து ராணுவத்திடம்தான். 1990இல் திடீரென ராணுவம் 'சரி, தேர்தல்தான் நடத்திப் பார்ப்போமே' என்று முடிவு செய்ய, ஆங் சான் சூ சி என்பவரது கட்சி தேர்தலில் ஜெயித்தது. உடனே இந்தத் தேர்தல் செல்லாது என்று ராணுவம் அறிவித்து மீண்டும், தன் ஆட்சியை வலுப்படுத்தியது. சூ சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். சூ சியின் கணவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. சூ சியின் கணவர் மைக்கேல் ஏரீஸ் 1999இல் காலமானார்.

1990இல் பர்மா ராணுவ அரசு, தன் நாட்டை மையான்மார் என்று பெயர் மாற்றியது. நாட்டின் தலைநகர் ரங்கூன், யாங்கூன் என்று பெயர் மாறியது.

சூ சிக்கு 1991இல் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. இன்றும் கூட சூ சி பர்மாவில் சிறைப்பட்டுள்ளார். வெளிநாட்டவரை மணந்ததால் அவர் மையான்மார் அரசியலில் ஈடுபடக்கூடாது, தேர்தலில் நிற்கக்கூடாது என்று ராணுவம் சட்டம் கொண்டுவந்துள்ளது. மையான்மார் பெண்கள் வெளிநாட்டவரை மணக்கக்கூடாது என்று கூட சட்டம் உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடந்ததைப் போல, இனி வரும் நாள்களில் பர்மாவில் மாற்றம் உருவாகலாம். நெல்சன் மண்டேலா போல சூ சியும், மையான்மாரில் உண்மையான மக்களாட்சி வரச் செய்யலாம்.]

ஆனால் இப்பொழுதைக்கு தான் ஷ்வேதான் ராஜா. அவர் வைத்ததுதான் சட்டம். அவர் இதுநாள் வரை வெளிநாடுகளுக்கே போகாதவர். அவர் இப்பொழுது இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இந்தியா கூட சில வருடங்களுக்கு முன்னர் வரை சூ சிக்கு ஆதரவாகத்தான் இருந்தது. சூ சி சிறுவயதில் படித்தது இந்தியாவில்தான். இப்பொழுது மையான்மாருடன் இந்தியாவிற்கு பல காரியங்கள் நடக்க வேண்டியுள்ளது. முதலாவது வட கிழக்கு மாநிலங்களில் வம்பு செய்யும் பல பயங்கரவாதிகள் மையான்மார் காடுகளில் முகாமிட்டு, பயிற்சி பெருகின்றனர். பூடான், பங்களாதேஷ், மையான்மார் ஆகிய மூன்று இடங்களில், பூடானில் தொல்லையை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழித்தாயிற்று. பங்களாதேஷில் இப்பொழுதைக்கு முடியாது எனத் தோன்றுகிறது. எனவே இப்பொழுது இந்தியா மையான்மாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப் பார்க்கிறது.

இரண்டாவது வர்த்தகம் தொடர்பானது. மையான்மாரில் ராணுவ ஆட்சி வந்த 1962இலிருந்து வெளிநாடுகளுடனான உறவு குறைந்து போனது. பல மேற்கத்திய நாடுகளும் மனித உரிமை காரணமாக மையான்மாருடன் உறவு கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்டனர். [மேற்கத்திய நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன் மனித உரிமை என்று பேசுவதெல்லாம் அபத்தம். தமக்கு வேண்டிய நேரத்தில் பாகிஸ்தான், சீனா முதல் ஈராக் வரை எல்லோருடனும் உறவு வைத்துக்கொள்வார்கள். வேண்டாவிட்டால் மனித உரிமை பற்றிப் பேசுவார்கள்.] இப்பொழுது பர்மாவில் உருப்படியான உள் கட்டுமானம் எதுவுமே இல்லை. இந்தியா தனக்கு ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்று பார்க்கிறது போலும்.

மையான்மாருக்கும் இந்தியாவுக்கும் இடையே ரயில், சாலை வசதிகள் கட்டப்பட இருக்கின்றன. இதுவே நீட்டப்பட்டு தாய்லாந்து வரைக்கும் செல்லவுள்ளது. மையான்மாரில் எரிவாயு, எண்ணெய் வளத் திட்டங்களில் இந்திய எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் (ONGC, GAIL) ஈடுபட்டுள்ளன.

இந்தியாவுக்கும் மையான்மாருக்கும் இடையே வர்த்தகம் - ஏற்றுமதி, இறக்குமதி - இரண்டுமே அதிகமாகிக் கொண்டுதான் வருகின்றன.

====

தான் தோழமை கொண்டுள்ள நாடுகளில் மக்கள் நசுக்கப்படுகிறார்களா, மனித உரிமைகள் மீறப்படுகின்றதா என்பதைப் பற்றி இந்தியா இனியும் கவலைப்படாது என்றே தோன்றுகிறது. பொருளாதாரக் காரணங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியுறவுக் கொள்கையை இனி முன்செலுத்தும் என்றும் தோன்றுகிறது.

Saturday, October 23, 2004

குங்குமம் உருமாற சில யோசனைகள்

10 லட்சம் தாண்டினாலும் இலவசப் பொருள் விநியோகம் என்றாவது ஒருநாள் நிற்கும். அப்பொழுது குங்குமம் விற்கும் பிரதிகள் சடாரென குறையும் என்றே பலரும் சொல்கிறார்கள். தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் வந்த செய்தியில் 'ABC (Audit Bureau of Circulation) ஆடிட் படி ஜூன் 2004இல் குங்குமம் வெறும் 75,000 பிரதிகள்தான் விற்பனையானது; குமுதம் கிட்டத்தட்ட 400,000 பிரதிகள் விற்பனையானது' என்று சொல்லியிருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.

குங்குமம் ஏன் ஏற்கனவே தமிழ் உலகில் இருக்கும் குமுதம், விகடன் போல தானும் இருக்க வேண்டும்? குமுதம், விகடனுக்கு இல்லாத சில வசதிகள் குங்குமத்துக்கு உண்டு. குங்குமம், சன் டிவி/கே டிவி/சன் நியூஸ்/SCV ஆகிய சானல்கள், சூரியன் எஃப்.எம் பண்பலை வானொலி அனைத்தும் ஒரே குழுமத்தின் உரிமையின் கீழ்.

ஏன் குங்குமம் மற்ற இதழ்களைப் போல பத்து பேரிடமிருந்து சிறுகதைகளை வாங்கி, அதில் இரண்டை வைத்துக்கொண்டு, மீதியைத் தூர எறிய வேண்டும்? சினிமா செய்திகள், துணுக்குகள் ஆகியவற்றை குமுதம்/விகடனைப் போலச் செய்ய வேண்டும்?

பேசாமல் குங்குமத்தை சன் டிவி, சூரியன் எஃப்.எம் இரண்டின் துணையிதழாக வெளியிடலாமே? சன் நியூஸில் வரும் அந்த வாரச் செய்திகளின் சுருக்கம் இரண்டு பக்கங்களில். அத்துடன் அந்தப் பக்கத்திலேயே "செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியைப் பார்க்கவும்" என்று விளம்பரம் போட்டு விடலாம். சன் டிவியில் அந்த வாரம் காண்பிக்கப்படும் தொடர் சீரியல்களின் கதைச் சுருக்கத்தை - ஒவ்வொன்றும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் போட்டுவிடலாம். அத்துடன் அவற்றின் கீழ், "மெட்டி ஒலி, திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் சன் டிவியில் இந்த நேரத்தில்" என்று போட்டு விடலாம். அதே போல சன் டிவி, கே டிவியில் காண்பிக்கப்படும் திரைப்படங்களின் கதைச்சுருக்கம், டாப் டென் பாடல்கள் லிஸ்ட் ஆகியவை. வணக்கம் தமிழகத்தில் வரும் ஆசாமிகள் பற்றிய சுருக்கம், அவர்கள் கொடுத்த அறிவுரைகள், சாலமன் பாப்பையா, சுகி சிவம் இப்படி யாராவது டிவியில் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே சுருக்கமாக இதழில் போட்டு விடலாம்.

முக்கியமாக, அடுத்த வாரம் சன் டிவி குழும சானல்களில் என்னென்ன நிகழ்ச்சிகள், சூரியன் எஃப்.எம்மில் என்ன நிகழ்ச்சிகள் என்பதைப் பட்டியலிடலாம். விளம்பரங்களுக்கு - சன் டிவி, சூரியன் எஃப்.எம்மில் நிகழ்ச்சிகளின் விளம்பரதாரர்களையே பிடித்து ஐந்து சதவிகிதம் அதிகம் கட்டினால் குங்குமம் இதழிலும் வரும் என்று போடலாம்.

இதுபோலவே சன் டிவி குழுமத்துக்கான இணையத்தளத்தையும் (யூனிகோடில்!) ஒப்பேற்றலாம். செய்திகள் வர வர இணையத்தளத்தில் சூடாகவும், அடுத்து செய்தி சானலிலும், பின் கடைசியாக வாரா வாரம் குங்குமத்திலும் வரவைக்கலாம். கேளிக்கை விஷயங்களை இணையம் முதல், தொலைக்காட்சி/வானொலியுடன் அச்சு இதழ் வரை எல்லா இடத்திலும் அப்படியே போடலாம். குங்குமத்தில் சிறுகதை, துணுக்குகள் ஆகியவற்றை அறவே ஒழித்து விடலாம். தொடர்கதைகளுக்கு பதில் - அண்ணமலையும், மெட்டி ஒலியும் அது போன்றவையும். சினிமா பற்றிய கிசுகிசுக்கள், வம்புகள் ஆகியவற்றை மட்டும் "exclusive to குங்குமம்" என்று விட்டுவைக்கலாம்.

இப்படிச் செய்வதால் குங்குமத்துக்கு தனிப்பண்பு இருக்கும். அதன் கூட மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, ஷாம்பூ, பாதாம்பருப்பு கொடுக்காமலேயே கூட மூன்று, நான்கு லட்சம் ஓடும். தொடர்ச்சியாக சன் டிவி பார்ப்பவர்கள் அனைவரும் இந்த துணையிதழையும் வாங்குவர். இதனால் நாளை முப்பது லட்சம் பிரதிகள் கூட விற்க வாய்ப்பு உண்டு.

சிஎன்என், பிபிசி கூட இணையம், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை முழுதாக, தடங்கலின்றி இணைத்துள்ளார்கள். சன் குழுமம், இவற்றுடன் அச்சு இதழையும் சேர்த்து புரட்சி செய்யலாம்.

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் பிரச்னை பற்றிய புலம்பல்.

Wednesday, October 20, 2004

ராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை

மார்ச் 2003: ராஜ் டிவி நிறுவனம் தன்னிடம் ஏற்கனவே இருக்கும் சானல்களான ராஜ் டிவி (Raj TV), ராஜ் டிஜிட்டல் பிளஸ் (Raj Digital Plus) ஆகியவற்றுடன், ராஜ் விஸ்ஸா (Raj Vissa), ராஜ் மியூஸிக்ஸ் (Raj Musix) என்னும் மற்றும் இரண்டு சானல்களின் சிக்னல்களை நேரடியாக, இந்தியாவிலிருந்தே மேலேற்ற அனுமதி கோரி செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் (Department of Information and Broadcasting) விண்ணப்பிக்கிறது.

செயற்கைக்கோளுக்கு சிக்னல்களை மேலேற்றும் அனுமதியைத் தருவது தொலைதொடர்பு அமைச்சகத்தின் (Department of Telecommunication) Wireless Planning and Coordination Wing (WPC) ஆகும்.

ஜூன் 2003: ராஜ் டிவி நிறுவனம் தன் தெலுங்கு சானல் 'ராஜ் விஸ்ஸா'வை 23 ஜூன் 2003 அன்று தொடங்குகிறது. அப்பொழுதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கிறார். அதே மாதத்தில் ஆர்ப்பாட்டம் எதுவுமின்று ராஜ் மியூசிக்ஸ் என்னும் 24 மணிநேர தமிழ் ஆட்டம்/பாட்டம் சானல் ஆரம்பிக்கப்படுகிறது.

மார்ச் 2004: ராஜ் டிவி நிறுவன உரிமையாளர் M.ராஜேந்திரன் (M.Raajhendhran) பாஜகவில் சேர்கிறார்.

மே 2004: பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, பிற கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது. திமுகவின் தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சர் ஆகிறார். தயாநிதி மாறன், அவரது அண்ணன் கலாநிதி மாறன் ஆகியோர் தமிழ், கன்னடம், தெலுகு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி நடத்தும் சன் டிவி நிறுவனத்தின் உரிமையாளர்கள். ராஜ் டிவி நிறுவனம் சன் டிவி நிறுவனத்துக்கு போட்டி நிறுவனமாகும்.

ஜூலை 2004: தொலைதொடர்பு அமைச்சகத்தின் WPC, ராஜ் டிவி நிறுவனம் ஒழுங்கான அனுமதி வாங்காமல், பணமும் கட்டாமல் ராஜ் மியூசிக்ஸ், ராஜ் விஸ்ஸா எனும் சானல்களின் சிக்னல்களை மேலேற்றுவது ஏன் என்று கேட்டு ராஜ் டிவி நிறுவனத்துக்குக் கடிதம் எழுதுகிறார்கள். பதறி அடித்துக்கொண்டு ராஜ் டிவி நிறுவனம், WPCக்கு பதில் கடிதமும், ரூ. 3.15 லட்சத்துக்கான வரைவோலையும் அனுப்பி வைக்கின்றனர். அத்துடன் புதிதாக ஆரம்பித்த இரண்டு சானல்களையும் - கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு - மொத்தமாக நிறுத்தி விடுகின்றனர்.

(நேரடியாக இந்தியாவிலிருந்து செயற்கைக்கோளுக்கு சிக்னல்களை அனுப்ப 1 MHz க்கு WPCக்கு ரூ. 35,000 பணம் கட்ட வேண்டும். ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ் ஆகிய இரண்டு சானல்களையும் மேலேற்ற 9 MHz தேவை. அதற்கு மேல் இன்னமும் இரண்டு சானல்களை ஏற்ற மற்றும் 9 MHz. அதற்கான கட்டணம் 9*35,000 = ரூ. 3.15 லட்சம்.)

25 ஆகஸ்ட் 2004: முறையான அனுமதி இல்லாமல் சிக்னல்களை மேலே ஏற்றியதனால் ராஜ் டிவி நிறுவனத்துக்குக் கொடுத்திருந்த சிக்னல்களை மேலேற்றும் உரிமை - நான்கு சானல்களுக்கும் சேர்த்து - ரத்து செய்யப்படுகிறது என்று WPC ராஜ் டிவி நிறுவனத்துக்கு அறிவிக்கிறது.

26 ஆகஸ்ட் 2004: இந்த உத்தரவை தடை செய்யக் கோரி ராஜ் டிவி சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகுகிறது.

27 ஆகஸ்ட் 2004: நீதிபதி R.பாலசுப்ரமணியன் தற்காலிகத் தடையுத்தரவு பிறப்பிக்கிறார். நீதிமன்றத்தில் விவாதம் தொடர்கிறது.

13 அக்டோபர் 2004: நீதிபதி K.ரவிராஜ பாண்டியன் வழக்கின் முடிவை தள்ளி வைக்கிறார். விவாதங்களில் ராஜ் டிவி சிக்னலை மேலேற்றும் உரிமை செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ்தான் வரவேண்டும் என்று வாதாடுகின்றனர். அத்துடன் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டு, இப்படிப்பட்ட தவறுக்கு சிக்னலை மேலேற்றும் உரிமையை முற்றிலுமாக ரத்து செய்வது, அதுவும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இரண்டு பழைய சானல்களின் சிக்னல்களையும் மேலேற்றும் உரிமையையும் சேர்த்து ரத்து செய்வது நியாயமற்றது என்று வாதாடுகின்றனர். (மத்திய) அரசு வக்கீலோ, ஏற்கனவே ராஜ் டிவி, WPCஇடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் (அதாவது இரண்டு சானல்கள் - 9 MHz என்பதை மாற்றி 18 MHz சிக்னல் மேலேற்றியது) மொத்த அனுமதியையும் ரத்து செய்ய WPCக்கு அதிகாரம் உண்டு என்று வாதாடுகிறார். நீதிபதி, ராஜ் டிவி தான் செய்த தவறை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று அரசு வக்கீலிடம் கேட்கிறார். அதற்கு அரசு வக்கீல் TRAIதான் (தொலைதொடர்பு, ஒளி/ஒலிபரப்பு கட்டுப்பாடு வாரியம்) இதற்கு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்கிறார்.

19 அக்டோபர் 2004: எல்லோரும் வீரப்பன் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தன் தீர்ப்பில் "WPC ஆணை செல்லுபடியாகும்... அதாவது ராஜ் டிவி இனி நேரடியாக தன் சிக்னல்களை செயற்கைக்கோளுக்கு இந்தியாவிலிருந்து மேலேற்ற முடியாது" என்று தீர்ப்பளிக்கிறார். ஆனால் ராஜ் டிவிக்கு மேல் முறையீடு செய்ய இரண்டு வாரங்கள் வாய்ப்பளிக்கிறார். அதுவரை தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாது.

====

இனி...

ராஜ் டிவி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடையுத்தரவைப் பெற வேண்டும். அதே நேரத்தில் TRAI யை அணுகி, தான் செய்த தவறுக்கு என்ன நிவாரணம் என்று கேட்க வேண்டும். TRAI இதுவரை இதுபோன்ற பிரச்னையில் ஈடுபட்டதில்லை. சொல்லப்போனால் Conditional Access System (CAS) பிரச்னை பெரிதாகி வெடித்ததும்தான் பாஜக அரசு ஒலி/ஒளிபரப்புத்துறை விவகாரத்தையும் TRAI தலையில் சுமத்தியது. அதுவரை TRAI தொலைபேசி/செல்பேசி சம்பந்தமான பிரச்னைகளை மட்டும்தான் கவனித்து வந்தது.

TRAI தலைவர் பிரதீப் பைஜால் நியாயமான, சுதந்திரமான அதிகாரி. அதனால் ராஜ் டிவியின் நிலையைப் புரிந்து கொண்டு பிரச்னையைத் தீர்க்கும் விதமாக ஒரு தீர்ப்பைக் கொடுக்கலாம்.

WPC நடத்தை கேவலமாக உள்ளது. தான் செய்தது தவறு என்று ராஜ் டிவி நிறுவனத்தாரே ஒப்புக்கொள்கிறார்கள். ஓர் அரசுத்துறை செய்ய வேண்டியது பழிவாங்குதல் அல்ல. தவறுக்கு தண்டனையைத் தீர்மானிப்பதும் அவர்கள் பொறுப்பல்ல. அதற்குத்தான் TRAI உள்ளது.

சிக்னல் மேலேற்றும் உரிமை மறுக்கப்பட்டால் ராஜ் டிவி நிறுவனத்தின் இரண்டு தமிழ் சானல்கள் - ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ் - பல கஷ்டங்களுக்கு உள்ளாக நேரிடும். வேறு நாட்டிலிருந்து சிக்னலை மேலேற்ற வேண்டும். இதனால் நிகழ்ச்சிகளை முன்னதாகவே செய்து கேஸட்டுகளில் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும். வேறு செயற்கைக்கோள் தேட வேண்டும். இதனால் எல்லா கேபிள் ஆபரேட்டர்களிடமும் இருக்கும் சிக்னல் டிகோடர்களை (decoder) மாற்ற வேண்டும். நேரடி ஒளிபரப்பு எதையும் செய்ய முடியாது.

தயாநிதி மாறன் ஒரு மூலையில் சிரித்துக்கொண்டே "எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எல்லாம் சட்டப்படி நடக்கிறது" என்று சொல்லிவிடலாம். ஆனால் நிச்சயம் உண்மை அதுவல்ல என்றே தோன்றுகிறது. இது ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல. ஒரு குறிப்பிட்ட அளவு அபராதத் தொகையை விதித்து, 'ஒழிந்து போ' என்று விட்டுவிடக் கூடியதுதான்... சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு வருத்தத்தை அளிக்கிறது.

சமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3

சென்ற வாரங்களில் எழுதியவற்றின் தொடர்ச்சி. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேலைகளினால் இந்தியாவில் என்ன பிரச்னைகள் என்பது பற்றி. யூனிகோடில் இங்கே.

Tuesday, October 19, 2004

மஹாராஷ்டிர தேர்தலும், அதற்கப்பாலும்

நடந்து முடிந்த மஹாராஷ்டிர தேர்தலில் ஆளும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

சோனியா காந்தி ஆதரவாளர்கள் இது சோனியா காந்திக்கு மக்கள் கொடுத்த ஆதரவு என்கிறார்கள். சிவ சேனை பால் தாக்கரே இந்தத் தோல்விக்குக் காரணம் முஸ்லிம்களும், வெளியாரும் என்கிறார். இனியும் அவர் பேச்சை யாரும் - அவரது கட்சி விசுவாசிகளே கூட - நம்பத் தயாராக இல்லை என்பது சந்தோஷத்துக்குரிய விஷயம். பாஜாகவின் பிரமோத் மஹாஜன் தன் கட்சி தோற்றதற்கு தானே முழுக்காரணம் என்கிறார். இதனால் அதிகமாக சந்தோஷம் அடைவது பாஜகவின் சுஷ்மா சுவராஜ்! வெங்கையா நாயுடு பாஜக தலைவர் பதவியிலிருந்து விலகி நேற்று எல்.கே.அத்வானி மீண்டும் தலைவராகியுள்ளார்.

உண்மையான வெற்றிக்குக் காரணம் ஷரத் பவாரின் கட்சி (தேசியவாத காங்கிரஸ்), அவருக்கு மஹாராஷ்டிரத்தில் இன்னமும் இருக்கும் செல்வாக்கு ஆகியவையே.

1999இல் மஹாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சோனியா காந்தியின் தலைமையை ஏற்காத ஷரத் பவார் காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஏற்படுத்தியிருந்தார். தனியாகவே எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியும் எல்லா தொகுதிகளிலும் தன்னுடைய ஆதரவுக் கட்சிகளுகடன் போட்டியிட்டது. இவ்விருவருக்கும் எதிராக அப்பொழுதைய ஆளும் கூட்டணி பாஜக-சிவ சேனா இணைந்து போட்டியிட்டது. இந்த மும்முனைப் போட்டியில் எந்த ஒரு குழுவுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இரண்டும் கூட்டணி அமைக்க நேரிட்டது.

அந்நேரத்தில் காங்கிரஸ் தன்னிடம் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் முதல்வர் பதவி தன் கட்சிக்குத்தான் வரவேண்டும் என்றது. தேசியவாத காங்கிரஸ் அதற்கு ஒப்புக்கொண்டது. முதலில் விலாஸ்ராவ் தேஷ்முக்கும், பின் காங்கிரஸுக்கே உரிய 'பாதியில்-முதல்வரை-மாற்றியே-தீருவோம்' என்னும் கொள்கைப்படி சுஷில்குமார் ஷிண்டேயும் முதல்வரானார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்துவதில் எப்பொழுதும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவில் மத்தியில் கூட்டணி ஆட்சிதான். பல மாநிலங்களிலும் கூட்டணி அமைத்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்னும் நிலை.

ஜம்மு & காஷ்மீரில் 2002இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நேஷனல் கான்பரன்ஸ் கட்சியை எதிர்த்து காங்கிரஸ், PDP ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட்டன. PDP (People's Democratic Party) என்பது தேசியவாத காங்கிரஸ் போல காங்கிரஸிலிருந்து பிரிந்த கட்சி. முஃப்தி மொஹம்மத் சயீத் - வி.பி. சிங் அமைச்சரவையில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் - அவரது மகள் மெஹ்பூபா முஃப்தி ஆகியோரால் உருவாக்கப்பட்ட கட்சி. எப்படி ஷரத் பவார் மஹாராஷ்டிரத்தில் முக்கியமான தலைவரோ, முஃப்தியும் காஷ்மீரில். குட்டையைக் குழப்ப பாஜக தனித்துப் போட்டியிட்டது. மத்தியில் அந்த நேரத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் நேஷனல் கான்பரன்ஸ் கட்சி உறுப்பினராக இருந்தது, ஒமார் அப்துல்லா அப்பொழுது மத்தியில் அமைச்சராகவும் இருந்தார். ஆக மத்தியில் கூட்டணி, மாநிலத்தில் எதிர்ப்பு! பாந்தர்ஸ் பார்ட்டி என்றொரு கட்சியும் இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பலம் வாய்ந்தது. அதுவும் தனியாகப் போட்டியிட்டது. இதைத்தவிர பல சுயேச்சைகள்.

ஆனால் உண்மையான போட்டி ஆளும் கட்சி நேஷனல் கான்பரன்ஸ், காங்கிரஸ், PDP ஆகியவற்றுக்கிடையேதான். இந்தத் தேர்தலிலும் மஹாராஷ்டிரம் போல தொங்கு சட்டமன்றமாக அமைந்தது. இங்கும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் (21), அதன் கூட்டாளி PDPஐ (15) விட அதிக இடங்கள் கிடைத்தன. நேஷனல் கான்பரன்ஸ் 28 இடங்களைப் பெற்றது. பலத்த குடுமிப்பிடி சண்டைகளுக்குப் பின், காங்கிரஸ், PDP, சில உதிரிகள் அனைவரும் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்றும், 2.5 ஆண்டுகளுக்கு PDP ஆள் முதல்வராகவும், அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆள் முதல்வராவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இப்பொழுது PDPஇன் முஃப்தி மொஹம்மத் சயீத் முதல்வராக உள்ளார். இந்த மாதத்துடன் 2 ஆண்டுகள் முடிவடைகின்றன. 2005 மே மாதம் காங்கிரஸ் முதல்வர் பதவியை எடுத்துக்கொள்ளும்.

இதற்கிடையில் 2004 மே மாதம் பாராளுமன்றத்துக்கும், கர்நாடகா சட்டமன்றத்துக்கும் நடைபெற்ற தேர்தலில் மற்றுமொரு தொங்கு சட்டமன்றம். பாஜக 79 தொகுதிகளையும், ஆளும் கட்சி காங்கிரஸ் 64 தொகுதிகளையும், ஜனதா தளம் 58 தொகுதிகளையும் பெற்றனர். மூவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து மும்முனைப் போட்டியில் ஈடுபட்டிருந்தனர். மேலே சொன்ன இரு மாநிலங்களைப் போலவே இங்கும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ்-ஜனதா தளம் இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்த முடிவு செய்தன. ஜனதா தளம் தனக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டது. காங்கிரஸ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின் ஜனதா தளம் ஜம்மு & காஷ்மீர் பாணியில் 2.5 ஆண்டுக்கு ஒருமுறை முதல்வர் பதவியை மாற்றிக்கொள்ளலாம் என்று கேட்டுப் பார்த்தது. அதற்கும் காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை, கடைசியில் ஜனதா தளம் பிற அமைச்சர் பதவிகளில் நல்ல "சுளையான" பதவிகளைப் பெற்றுக்கொண்டு பதிலுக்கு காங்கிரஸுக்கே முதல்வர் பதவியைக் கொடுத்து விட்டது. காங்கிரஸின் தரம் சிங் - ஜனதா தளத் தலைவர் தேவ கவுடாவின் நண்பர் - என்ற முறையில் முதல்வரானார்.

இப்பொழுது மஹாராஷ்டிரத்துக்கு வருவோம். தேர்தல் முடிந்து விட்டது. இம்முறை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இரண்டும் இணைந்தே போட்டியிட்டன. இல்லாவிட்டால் பாஜக-சிவ சேனை கூட்டணியிடம் தோற்றுப் போயிருப்பார்கள். ஆனால் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்குப் பின், ஜெயித்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி முன்கூட்டியே பேசி முடிவுசெய்யவில்லை. தேர்தலுக்குப் பின், தேசியவாத காங்கிரஸ் 71 இடங்களையும், காங்கிரஸ் 69 இடங்களையும் பெற்றன. இப்பொழுது ஷரத் பவார் தன் கட்சி காங்கிரஸை விட அதிக இடங்களைப் பெற்றதால் ஐந்தாண்டுகளுக்கும் தன் கட்சியே முதல்வராக இருக்கும் என்கிறார். காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. ஏதோ கணக்குகளைக் காட்டி காங்கிரஸ் தான் ஏற்கனவே RPI(A), மற்றும் கம்யூனிஸ்டுகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் அவர்களது இடங்களையும் சேர்த்து தனக்கு 72 இடங்கள் இருப்பதாகவும், ஆகவே தனக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்றும் சொல்கின்றனர். இல்லையா, சரி, ஜம்மு & காஷ்மீர் ஃபார்முலாவை - அதாவது இருவருக்கும் தலா 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முதல்வர் என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

தன் கட்சிக்கு முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் தாங்கள் ஆட்சியில் சேர மாட்டோம் என்றும், வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம் என்றும் பயமுறுத்துகிறார் ஷரத் பவார். வெளியிலிருந்து ஆதரவு என்றால் சும்மா பயமுறுத்திக் கொண்டிருப்போம், எப்பொழுதுவேண்டுமானாலும் கவிழ்த்து விடுவோம் என்று பொருள்! (மத்தியில் கம்யூனிஸ்டுகள் நடந்துகொள்வது போல!)

இந்தக் கூத்தும் சில நாள்களில் முடிவாகும்.

இவற்றைப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி ஆட்சி நடத்த சிறிதும் தெரியவில்லை, விருப்பமில்லை என்றே தோன்றுகிறது. ஜம்மு & காஷ்மீரில் PDP பிடிவாதமாக இருந்ததால்தான் அவர்களுக்கு ஆட்சி செய்ய கொஞ்சமாவது அனுமதி கிடைத்தது. ஐந்து ஆண்டுகள் மஹாராஷ்டிரத்தில், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன், தன் முதல்வர் தலைமையில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஐந்தாண்டுகள் தேசியவாத காங்கிரஸ் ஆசாமி ஒருவர் முதல்வராக ஆட்சி நடத்திட ஏன் உதவி செய்யக்கூடாது?

Monday, October 18, 2004

மழை!

இதுநாள் வரை திருவல்லிக்கேணி/சேப்பாக்கத்தில் பெய்யாத மழை இன்று பெய்ததால் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. A sad end to a fantastic Test match. இனி நாக்பூர்.

Sunday, October 17, 2004

இரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்

இந்த டெஸ்ட் மேட்ச் ஐந்தாவது நாளில்தான், அதுவும் கடைசி வேளையில்தான் முடிவாக வேண்டும் என்று இருக்கிறது!

ஆஸ்திரேலியா அசாதாரணமானதொரு விளையாட்டின் மூலம் இந்த டெஸ்டை ஜெயிக்க தனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. நான்காம் நாள் ஆட்டம் தொடங்கும்போது அப்படியொரு வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று யாருக்கும் தோன்றியிருக்காது. கில்லெஸ்பி தடுத்தாடக் கூடியவர், நிறைய நேரம் மைதானத்தில் நின்று விளையாடக் கூடியவர் என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த அளவுக்கு - கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்கு நின்று இந்தியாவிற்கு இந்த அளவுக்கு எரிச்சலூட்டுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

முதல் மூன்று நாள்கள் நடந்த ஆட்டத்திலிருந்தே காலை முதல் வேளை அதிகமாக ஒன்றும் நடக்காது என்று தோன்றிவிட்டது. இதுவரை விழுந்த விக்கெட்டுகள் நாள், வேளைப்படி: முதல் நாள்: 0, 3, 8; இரண்டாம் நாள்: 1, 1, 3; மூன்றாம் நாள்: 1, 3, 4. இன்றும் உணவு இடைவேளைக்கு முதல் ஒரு விக்கெட்டும் விழவில்லை. கில்லெஸ்பி அத்தனை பேர் பந்துவீச்சையும் தடுத்தாடினார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசும்போது மட்டும் நிறையத் தடுமாறினார். ஆனால் விக்கெட்டை விட்டுவிடவில்லை. கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் இரண்டு முனைகளிலிருந்தும் வீசினர். ம்ஹூம்! யுவராஜ் பந்துவீசினார். ஒன்றும் ஆகவில்லை. உணவு இடைவேளை போது ஆஸ்திரேலியா 230/4 - மார்ட்டின் 67*, கில்லெஸ்பி 15*

உணவு இடைவேளைக்குப் பிறகு உடனே விக்கெட் விழவேண்டும் என்று எதிர்பார்த்தோம். நடக்கவில்லை. ஒரு மணி நேரம் ஆனது. இப்படியே இரண்டாவது புதுப்பந்தை எடுக்க வேண்டியதாயிற்று. அப்பொழுதும் ஒன்றும் ஆகவில்லை. கங்குலி வந்து பந்து வீசினார். பிரயோசனமில்லை. மீண்டும் ஸ்பின்னர்கள். ஹர்பஜன் பந்துவீச்சில் கில்லெஸ்பி பந்துவீச்சாளர் கைக்கே சற்று கடினமான கேட்ச் கொடுத்தார். ஹர்பஜன் கையில் பந்து பட்டது, ஆனால் சிக்கவில்லை. படேல் - இவரை என்ன செய்ய? - ஹர்பஜன் பந்துவீச்சில் ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை இழந்தார். பின் கும்ப்ளே பந்துவீச்சில் மற்றொரு ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார்.

இதற்கிடையே மார்ட்டின் தன் சதத்தை கும்ப்ளே பந்துவீச்சில் லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்துப் பெற்றார். அற்புதமான இன்னிங்ஸ். உச்ச அழுத்தத்திலிருந்து அணியைக் காத்து, கில்லெஸ்பியை அரவணைத்து மார்ட்டின் இந்த சதத்தைப் பெற்றிருக்காவிட்டால் இன்று ஆட்டம் முடிந்திருக்கும். புல், கட் ஆகியவையே மார்ட்டின் அதிகமாக அடித்த ஷாட்கள்.

கிட்டத்தட்ட தேநீர் இடைவேளை நேரம் வந்துவிட்டது - இன்னமும் பத்து நிமிடங்கள்தான் பாக்கி. ஹர்பஜன் வாலாஜா சாலை முனையிலிருந்து (இந்தப் பக்கம் இருந்து வீசினால்தான் அதிகமாக விக்கெட்கள் விழுகின்றன) வீசிய பந்து மார்ட்டினின் மட்டையின் அடிப்பாகத்தில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருக்கும் திராவிட் கையில் மிகவும் கீழாக விழுந்தது. 284/5, மார்ட்டின் 104 ரன்கள், 11x4, 1x6. அடுத்து விளையாட மைக்கேல் கிளார்க் வந்தார். முதல் பந்திலேயே ஒரு ரன் அடித்தார்.

அடுத்த பந்து சடாரென எழும்பி, உள்ளே ஸ்பின் ஆகி வந்த பந்து. அதுவரை அசைக்க முடியாத கில்லெஸ்பி பந்தை ஸ்லிப் திசையில் உயரத் தட்டிவிட, இம்முறை தன் வலதுகைப்பக்கம் பாய்ந்து விழுந்து திராவிட் அதையும் பிடித்தார். 285/5. மூன்று பந்துகளுக்குள் இரண்டு விக்கெட்டுகள். தேநீர் இடைவேளை போது ஆஸ்திரேலியா 290/6 - கிளார்க் 4*, லெஹ்மான் 2*

கடைசி வேளையின் போதுதான் நிறைய விக்கெட்டுகள் விழும் என்று எதிர்பார்ப்பு எங்களுக்கு. ஆனால் கிளார்க்கும், லெஹ்மானும் நன்றாக விளையாடினர். இருவரும் சேர்ந்து 62 ரன்கள் சேர்த்தனர். லெஹ்மான் திடீரென அடித்தாடி ரன்கள் சேர்க்க விரும்பினார். கும்ப்ளே வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் புல் செய்யப்போக, பந்து மேல் விளிம்பில் பட்டு எழும்பி படேலிடம் வந்தது. அவரும் பிடித்து விட்டார்! 347/7. உள்ளே வந்தவர் ஷேன் வார்ன். ஒரு பந்து, தடுத்தாடினார். அடுத்த பந்து - பந்தை நேராக பேட்டில் வாங்கி சில்லி பாயிண்டில் இருக்கும் காயிஃபிடம் கேட்ச் கொடுத்தார்! 347/8.

அவ்வளவுதான், ஆட்டம் முடிந்தது, இனி இந்தியா பேட்டிங்தான் என்று நினைக்கும்போது காஸ்பரோவிச், கிளார்க்குடன் இணைந்து 17 ரன்கள் சேர்த்தார். இந்நேரத்தில் கங்குலி கிளார்க்கை தாக்கி விக்கெட்டைப் பெற நினைக்காமல், கிளார்க்குக்கு ஒரு ரன் கொடுத்து, காஸ்பரோவிச்சை அவுட்டாக்க நினைத்தார். ஆனால் நடைபெறவில்லை. இப்படியே 7 ஓவர்கள் வீணாயிற்று. கும்ப்ளே வீசிய ஓவர் ஒன்றில், கிளார்க் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்து, கடைசி பந்தை காஸ்பரோவிச் கவனித்துக் கொள்வார் என்று விட்டுவிட, கும்ப்ளே காஸ்பரோவிச்சை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். 364/9.

ஹர்பஜன் வீசிய பந்தில் மெக்ராத் பவுல்ட் ஆக, ஆஸ்திரேலியா 369 க்கு ஆல் அவுட் ஆனது. கிளார்க் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கும்ப்ளே இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 178 ரன்கள் கொடுத்து 13 விக்கெட்டுகளைப் பெற்றார்.

இந்தியா ஜெயிக்க 229 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் யுவராஜ் சிங்கும், சேவாகும் ஆட்டத்தைத் தொடங்கினர். பத்து நிமிடங்கள்தான் பாக்கி - மூன்று ஓவர்கள் வீசப்படலாம். மெக்ராத் வீசிய முதல் ஓவரில் யுவராஜ் மூன்றாவது ஸ்லிப், கல்லிக்கு இடையே பந்தை உயர அடித்தார். லாங்கர் கையைத் தாண்டிச் சென்ற பந்து நான்கு ரன்களைப் பெற்றுத் தந்தது. ஒரு ரன்னைப் பெற்று யுவராஜ் அடுத்த முனைக்குச் செல்ல, சேவாக் தரையோடு கல்லியைத் தாண்டி பந்தை அடித்து நான்கைப் பெற்றார். முதல் ஓவரின் கடைசியில் இந்தியா 9/0. கில்லெஸ்பி வீசிய இரண்டாவது ஓவரில் யுவராஜ் பந்தைக் காலுக்கடியில் தட்டிவிட்டு அவசர அவசரமாக ஒரு ரன் அடித்தார். மற்ற பந்துகளை சேவாக் அழகாகத் தடுத்தாடினார். இந்தியா 10/0.

மூன்றாவது ஓவர் - நாளின் கடைசி ஓவர். யுவராஜ் மற்றுமொரு ஒற்றையை எடுக்க, சேவாக் பிரமாதமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். ஒரு பந்தை கவர் திசையில் அடித்து நான்கைப் பெற்றார். கில்கிறிஸ்ட் கால் திசையிலிருந்து மற்றுமொரு தடுப்பாளரை ஆஃப் திசைக்கு அனுப்பினார். நாளின் கடைசிப் பந்தை சேவாக் நேராக லாங் ஆஃபில் ஆஃப் டிரைவ் அடித்து மற்றுமொரு நான்கைப் பெற்றார். இந்தியா 19/0. இந்தியா வெற்றிபெற நாளை இன்னமும் 210 ரன்களைப் பெற வேண்டும்.

இதுவரை சென்னை டெஸ்ட்களில் கடைசி இன்னிங்ஸில் அதிகபட்சமாக எடுத்து ஜெயித்த எண்ணிக்கை 155தான். அதுவும் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெயித்த ஆட்டம் 18-22 மார்ச் 2001 இல் - 155 ரன்களை எடுப்பதற்குள் இந்தியா எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்பொழுது ஆஸ்திரேலியா அணியில் இப்பொழுதிருக்கும் மூன்று முக்கிய பந்து வீச்சாளர்களும் இருந்தனர். பார்க்கலாம், நாளை எப்படி ஆட்டம் போகிறதென்று.

Saturday, October 16, 2004

இரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்

ஆஸ்திரேலியா 235 & 150/4 (50 ஓவர்கள்) - மார்ட்டின் 19*, கில்லெஸ்பி 0*; இந்தியா 376

என்ன சொல்ல? மற்றுமொரு சுவாரசியமான தினம். ஆடுகளத்திலும், வெளியிலும் பல சுவையான நிகழ்ச்சிகள்.

இன்று காலை ஆடத் தொடங்கிய படேலும், காயிஃபும் நேற்று கஷ்டப்பட்டது போல இல்லாமல் இன்று மிகவும் சுலபமாகவே பந்துகளைச் சந்தித்தனர். இன்று நேற்றை விட வெய்யில் அதிகம். படேல் நேற்று தடவித் தடவித்தான் விளையாடினார். ஆனால் இன்று ஆரம்பம் முதலே பல அருமையான நான்குகள் அவரது பேட்டிலிருந்து பறக்க ஆரம்பித்தன. காஸ்பரோவிச், கில்லெஸ்பி, வார்ன், காடிச் யாரையும் விட்டுவைக்கவில்லை. காயிஃப் அதே நேரம் ஒன்று, இரண்டு என தன் எண்ணிக்கைகளை அதிகமாக்கினார்.

முதலில் காயிஃப் தன் அரை சதத்தை எட்டினார். படேல் அவரைத் தொடர்ந்தார். வார்ன் பந்தை மிட்விக்கெட்டில் புல் செய்து ஒரு நான்கைப் பெற்ற படேல், அடுத்து அவரை வெட்டி ஆடப்போய், விளிம்பில் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்தார். 335/7. படேல் 54, ஏழாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர் படேலும், காயிஃபும்.

கும்ப்ளே, காயிஃப் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை தொடர்ந்து துன்புறுத்தினர். கும்ப்ளே அளவு அதிகமாக வீசப்பட்ட பந்துகளை தைரியமாக அடித்து விளையாடினார். உணவு இடைவேளை வரையில் வேறெந்த விக்கெட்டும் விழாமல் இந்தியா 363/7 என்ற நிலையில் உள்ளே திரும்பியது.

காலையில் தண்ணீர் இடைவேளை நேரத்தில் ஆஸ்திரேலிய 12வது ஆள் தண்ணீர், குளிர்பானம் கொண்டுவரும்போது கூடவே இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளையும் கொண்டுவந்தார். இது போன்று இதுவரை எந்த டெஸ்டிலும் நடந்ததில்லை. மதியம் நாற்காலிகளோடு விரியும் பெருங்குடை ஒன்றையும் கூடக் கொண்டுவர ஆரம்பித்தார்! அவ்வப்போது நடுவர்களும் குடையின் கீழ் அமர்ந்தனர். ஆனால் இந்த முறையை இந்திய 12வது ஆள் பின்பற்றவில்லை! உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாகவே காயிஃப் ஒவ்வோர் ஓவரின் இடையிலும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை நடுவர் ஷெப்பர்ட் காயிஃப் இவ்வாறு நேரம் கடத்துவதைக் கடுமையாகக் கண்டித்தார். உணவு இடைவேளையின் போது அவசர அவசரமாக உள்ளே ஓடிய காயிஃப் இடைவேளைக்குப் பின் பேட்டிங் செய்ய வரவில்லை. அப்பொழுது காயிஃப் 60 ரன்களில் இருந்தார்.

இது இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக அமைந்தது. காயிஃப் உடலிலிருந்து நிறையத் தண்ணீர் வெளியேறியது என்றும் அதனால் அவர் திரும்பி விளையாட வருவது சந்தேகம்தான் என்றும், வேண்டுமானால் துணை ஓட்டக்காரர் ஒருவருடன் கடைசியாக வரலாம் என்றும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

இந்த ஒரு நூலைக் கையில் பிடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா முன்னேற ஆரம்பித்தது. காயிஃப் உடன் நன்றாக விளையாடிய கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உள்ளே வந்ததும் ஷேன் வார்ன் பந்து வீச்சில் - லெக் பிரேக் - இறங்கி அடிக்கப் போய் ஸ்டம்பை இழந்தார். 369/8. ஹர்பஜனும் வார்ன் பந்தில் அவருக்கே கையில் நேராக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 372/9. இந்த நிலையில் காயிஃப் மீண்டும் விளையாட வந்தார்.

உள்ளே வரும்போதே அவருடன் கூட யுவராஜ் சிங்கும் வந்தார். அதைப் பார்த்த கில்கிறிஸ்ட் ஓடிப்போய் நடுவர்களிடம் தீவிரமாக முறையிட்டது போல இருந்தது. நடுவர் ஷெப்பர்ட் யுவராஜை வெளியே போ என்றார். அதிர்ந்து போன யுவராஜும், காயிஃபும் ஷெப்பர்டிடம் சென்று முறையிட்டனர். கில்கிறிஸ்ட் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஏதோ பேசினார். கடைசியில் யுவராஜ் துணை ஓட்டக்காரராக இருக்க நடுவர்கள் அனுமதி அளித்தனர். ஆனால் விதி விளையாடியது. வார்ன் தனக்கு வீசிய முதல் பந்தை காயிஃப் மிட் ஆன் மேல் தூக்கி அடித்து நான்கு ரன்களைப் பெற்றார். அடுத்த பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்துவிட்டு தானே ஓட ஆரம்பித்தார். யுவராஜ் தனக்காக ஓட இருப்பதை காயிஃப் மறந்து விட்டார். இரண்டடி எடுத்து வைத்தவர் தடுக்கி கீழே விழுந்து மீண்டும் கிரீஸுக்குள் வரமுடியவில்லை. இதற்கிடையில் யுவராஜ் மறுமுனைக்கு செல்ல, ஜாகிர் கான் காயிஃப் இருக்கும் முனைக்கு வர, காயிஃப் மட்டும் பரிதாபமாக தரையில் விழுந்து கிடந்தார். எழுந்து நிற்கக்கூட முடியவில்லை அவரால். இதற்குள் மார்ட்டின் பந்தைப் பொறுக்கி கில்கிறிஸ்டுக்கு அனுப்ப, அவர் ஸ்டம்பை உடைத்து அப்பீல் செய்ய, காயிஃப் ரன் அவுட் 64. இந்தியா 376 ஆல் அவுட்.

இதுநாள் வரை கில்கிறிஸ்ட் கட்டிவந்த கோட்டை சரிந்தது போல இருந்தது. ஆஸ்திரேலியர்களால் அசிங்கமான கிரிக்கெட் தான் விளையாட முடியும் என்று தோன்றியது. காயிஃப் ரன் அவுட் பற்றியதல்ல என் கோபம். ஆனால் காயிஃப் கேட்ட உதவி ஓட்டக்காரரை மறுக்கும் விதமாக ஆஸ்திரேலியர்கள் நடந்துகொண்டது அசிங்கமாக இருந்தது. சயீத் அன்வர் சென்னையில் 194 அடிக்கும்போது இந்தியா ரன்னர் கொடுப்பதை மறுக்கவில்லை. அதுபோல எத்தனையோ ஆட்டங்களிலும்.

போகட்டும்.

141 ரன்கள் பின்னிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜாகீர் கான் வீசிய முதல் ஓவரில், அணியின் இரண்டாவது ஓவரில் ஹெய்டன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பார்திவ் படேலுக்கு எளிதான கேட்ச் ஒன்றைக் கொடுத்தார். படேல் அதைத் தட்டிவிட அது முதல் ஸ்லிப் திராவிட் கையில் விழுந்தது, அவர் அதைத் தடவினார்! ஹெய்டன் மறுபடியும் கும்ப்ளே பந்துவீச்சில் படேலுக்குக் கொடுத்த கேட்சும் நழுவியது. படேல் இதற்கு மேல் மோசமான கீப்பிங் செய்ய முடியாது!

தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 53/0 என்ற ஸ்கோரில் இருந்தது.

ஆனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. அதுவரை ஒழுங்காக விளையாடிக் கொண்டிருந்த லாங்கர் கும்ப்ளே பந்தை வெட்டப்போய் ஸ்லிப்பில் நிற்கும் திராவிட் கையில் கேட்ச் கொடுத்தார். கடவுள் புண்ணியத்தில் இம்முறை திராவிட் இந்த கேட்சைத் தவற விடவில்லை. 53/1.

சைமன் காடிச் வருவதற்கு பதில் கில்கிறிஸ்ட் உள்ளே வந்தார். எல்லா பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கினார். திடீரென ஹெய்டனும், தானும் அவ்வாறே விளையாட முடிவு செய்து கும்ப்ளே பந்தை வானளாவ அடித்தார். பந்து மிட்விக்கெட்டில் இருக்கும் லக்ஷ்மண் கையில் விழுந்தது! 76/2.

இப்பொழுது காடிச் விளையாட வந்தார். இருவரும் மிக சுலபமாக ரன்களைப் பெற ஆரம்பித்தனர். இப்படி அப்படி திரும்புவதற்குள் இருவரும் சேர்ந்து 45 ரன்களைப் பெற்றனர்.

ஆட்டம் கைவிட்டுப் போவதை அறிந்த கங்குலி, வேறு வழியின்றி ஜாகீர் கானைப் பந்து வீச அழைத்தார். முதல்முறையாக கானின் பந்துவீச்சு பிரமாதமாக அமைந்தது. ஸ்விங் ஆகிவந்த பந்து ஒன்று காடிச்சை எல்.பி.டபிள்யூ ஆக்கியது. இரண்டு பந்துகளுக்குப் பிறகு மற்றுமொரு பந்து கில்கிறிஸ்ட் காலில் பட்டது. அரங்கில் இருந்த எங்களுக்கு அதுவும் அவுட் போலத்தான் தோன்றியது, ஆனால் ஷெப்பர்ட் நிராகரித்தார்.

இந்த ஸ்பெல்லில் கான் தொடர்ந்து ஐந்து ஓவர்கள் வீசினார். ஒவ்வொன்றிலும் கில்கிறிஸ்டையும், மார்ட்டினையும் தடுமாற வைத்தார். மார்ட்டினுக்கு எதிராக மிக நெருக்கமான ஒரு எல்.பி.டபிள்யூ கானுக்குக் கிடைக்கவில்லை. அதுவும் கூட அவுட் என்றுதான் தோன்றியது.

இதற்கிடையில் கில்கிறிஸ்ட் தன் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். ஆனால் கானும், கும்ப்ளேயும் வீசிய பந்துகளில் எளிதாக ரன்களைப் பெற முடியவில்லை. நாளின் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரை கும்ப்ளே வீசினார். ஒவ்வொரு பந்தும் கூக்ளியாக இருந்தது. கில்கிறிஸ்ட் சற்றும் புரிந்துகொள்ள முடியாத இந்த ஓவரின் ஒரு பந்தில் 49 ரன்னுக்கு பவுல்ட் ஆனார். 145/4.

கில்லெஸ்பி இரவுக் காவல்காரனாக வந்தார். கும்ப்ளே வீசிய கடைசி சில பந்துகள் எங்கு போகின்றன என்று கூட அறிய முடியவில்லை அவரால். படேலுக்கும் ஒரு மண்ணும் புரியவில்லை. ஒரு பந்து நான்கு பை, அடுத்த பந்து ஒரு பை.

கடைசி ஓவரை ஹர்பஜன் வீசினார். அதை கில்லெஸ்பி ஒரு மாதிரியாகத் தடுத்தாடினார்.

இப்படியாக நாளின் கடைசியில் ஆஸ்திரேலியா 150/4 - அதாவது 9/4. நாளை ஆட்டம் கத்தியின் மீது நடப்பது போல இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை. இந்தியா ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டுகளை இன்னமும் 150 ரன்களுக்குள் எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் மிகவும் கஷ்டப்பட நேரிடும். ஆனால் கும்ப்ளே பந்துவீசுவதைப் பார்க்கும்போது இந்தியாவின் கையே மேலோங்கியிருப்பது போலத் தோன்றுகிறது.

காசி... இன்றும் மழை பெய்யவில்லை. 3.00 மணிக்கு இருட்டத் தொடங்கியது!

Friday, October 15, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் தொலைக்காட்சியில் இல்லாது அரங்கம் சென்று கிரிக்கெட் பார்ப்பது பற்றி.

இரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்

ஆஸ்திரேலியா 235, இந்தியா 291/6 (100 ஓவர்கள்) - காயிஃப் 34*, படேல் 27*

மற்றொரு சுவையான நாள். இந்தியா சற்று மேல், ஆனால் மிகக் குறைவாகவே. விரேந்தர் சேவாக் இல்லையென்றால் நிலைமை மோசமாகியிருக்கும்.

இன்று காலை சேவாகும், பதானும் பேட்டிங் செய்ய வந்தனர். இந்தியாவில் இரண்டு பேருக்கு பந்துகளை நன்றாக தடுத்தாடத் தெரிந்துள்ளது. ஒருவர் திராவிட். மற்றொருவர் பதான். காலை ஒன்றரை மணிநேரம் பதான் நேர்த்தியான தடுப்பாட்டத்தைக் காண்பித்தார். ஒரேயொருமுறை, காஸ்பரோவிச் பந்தை ஆஃப் திசையில் வெட்டப்போய் பந்தைத் தவறவிட்டார். அது ஒன்றுதான் அவர் தன் இன்னிங்ஸில் செய்த தவறு - விக்கெட் கொடுத்த பந்தைத் தவிர.

இந்நேரத்தில் பதான் எடுத்த ரன்கள் வெறும் 14தான். அதில் ஷேன் வார்ன் பந்தை ஸ்கொயர் லெக்கில் அடித்த சிக்ஸ், ஜஸ்டின் லாங்கர் ஓவர்துரோ செய்து ஓசியாகக் கொடுத்த ஒரு நான்கு அடங்கும். மற்ற நேரத்தில் பதான் ரன் ஏதும் எடுக்க முயற்சிக்கவில்லை. மெக்ராத், கில்லெஸ்பி, காஸ்பரோவிச், வார்ன் - ஒருவர் மாற்றி ஒருவராக வந்தனர், வீசினர், தடுக்கப்பட்டு தலை குனிந்து சென்றனர்! மறுமுனையில் சேவாக் கூட பல பந்துகளைத் தடுத்தாடினார். சில பிரமிக்க வைக்கும் அடிகள், அதே சமயம் அசிங்கமான சில கிந்தல்கள் என்று சேவாகின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. சேவாக் ஷேன் வார்ன் பந்துகளை கால் திசையில் மிட் விக்கெட் மேல் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார். இதனால் வார்ன் பந்துவீச்சின் போது கில்கிறிஸ்ட் அவருக்கு டீப் பைன்லெக், டீப் ஸ்கொயர் லெக், டீப் மிட்விக்கெட் என்று மூவரை எல்லைக்கோட்டிலேயே வைத்திருந்தார். அதனால் சேவாகிற்கு வேண்டிய நேரத்தில் ஒரு ரன்னைப் பெறுவது எளிதாக இருந்தது. பதானோ பந்துகளை விட்டுவிடுவார், அல்லது தன் பேட்டில் வாங்கி பொறுமையாக தரையோடு தரையாக அழுத்திக் கொன்று விடுவார்.

பதான் இன்றுமுழுவதும் ஆடுவார், யாராவது ஒருவர் அவுட்டாவார் என்றால் அது சேவாகத்தாண் இருக்கும் என்று தோன்றிய போது, திடீரென ஆட்டத்தின் போக்குக்கு முற்றிலும் மாறாக பதான், ஷேன் வார்ன் பந்துவீச்சில் விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் ஹெய்டனால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். 83/2. இத்துடன் ஷேன் வார்ன் முரளிதரனை விட ஒரு விக்கெட் அதிகமாக எடுத்து உலகில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளரானார். இனி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் முந்துவார்கள்.

திராவிட் உள்ளே வந்து பதான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து தடுத்தாடினார். சேவாக் மறுமுனையில் கொஞ்சம் கொஞ்சமாக தன் முழு வீச்சையும் காட்டினார். ஓர் ஓவரில் ஒரு கவர் டிரைவ், ஒரு புல் என்று நான்குகள் அடித்து மெக்ராத்தை அதிர வைத்தார். வார்னை அவ்வப்போது இறங்கி அடித்து ரன்களைப் பெற்றார். உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் திராவிட் கூட முதலில் வார்ன் பந்தை அருமையாக மிட் விக்கெட் திசையில் தரையோடு ஆன் டிரைவ் செய்தார். பின்னர், ஏதோ வெறியில் மேலே தூக்கி அடித்தார். அந்தப் பந்து மிட் விக்கெட் பந்துத் தடுப்பாளர் தலைக்கு சற்றுமேல் சென்று நான்கானது. தெய்வாதீனமாக திராவிட் தப்பினார். உணவு இடைவேளை போது இந்தியா 101/2.

உணவு இடைவேளைக்குப் பின்னர் சேவாக், திராவிட் ஜோடி மிகவும் எளிதாக ரன்களைப் பெற ஆரம்பித்தது. கில்கிறிஸ்ட் இந்த நேரத்தில் ரன்களைத் தடுக்கும் முகமாகவே தடுப்பாளர்களை நிறுத்தினார். வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது திராவிடுக்கு ஒரு ஸ்லிப். சேவாகிற்கு அதுவுமில்லை. நான்கைந்து பேர்கள் எப்பொழுதும் எல்லைக்கோட்டில். இரண்டு மூன்று முறைகள் சேவாக் பந்தைத் தூக்கு அடிக்கும்போது தடுப்பாளர்கள் ஓடிச்சென்று பிடிக்க முயல்வர். கைக்கெட்டும் தூரம்... வாய்க்கெட்டாது. திடீரென சேவாக் 90களுக்கு வந்துவிட்டார். 95இலிருந்து இரண்டு நான்குகள் வழியாக சதம்.

தேநீர் இடைவேளை நெருங்கிக் கொண்டிருக்க, மூன்று முன்னணிப் பந்து வீச்சாளர்களும் விக்கெட் எடுக்காத நிலையில் கில்கிறிஸ்ட் காஸ்பரோவிச்சைக் கொண்டு வந்தார். காஸ்பரோவிச் வீசிய ஒரு பந்து இன்ஸ்விங் ஆனபின், தரையில் பட்டு உள்ளே திரும்பியும் வந்தது. திராவிடின் பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பில் விழுந்தது. இதுவும் எதிர்பார்க்காத ஒரு விக்கெட். திராவிட் 26 ரன்கள். இந்தியா 178/3. தொடர்ந்து வந்த கங்குலி சொதப்பு சொதப்பினார். காஸ்பரோவிச்சின் அதே ஓவரில் ரன்கள் ஏதும் எடுக்காமல் இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச். ஆனால் நல்லவேளையாக நோபால். பின் காஸ்பரோவிச்சின் மற்றுமோர் ஓவரில் கங்குலி கையில் கொடுத்த கேட்சை, கில்கிறிஸ்ட் தடவினார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 197/3.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கில்லெஸ்பி பந்துவீச வந்தார். கங்குலி தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், 9 ரன்கள் எடுத்து, கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 203/4. லக்ஷ்மண் ஒரேயொரு நான்கை மட்டும் அடித்த பின்னர் கில்லெஸ்பியின் உயரம் வெகுவாகக் குறைந்து வந்த பந்தில் பவுல்ட் ஆனார். 213/5.

சேவாக் இந்த நேரத்திலும் கூட நின்று ஆட வேண்டும் என்று தோன்றாமல், ரிவர்ஸ் ஸ்வீப் எல்லாம் அடிக்க முனைந்தார். எல்லைக்கோட்டில் ஆறு பேர்கள் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படமால் ஷேன் வார்ன் பந்தை மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க மைக்கேல் கிளார்க் கேட்ச் பிடித்தார். 233/6. சேவாகின் 155 ரன்கள் 221 பந்துகளில், 21 நான்குகளோடு வந்தது. சேப்பாக்கத்தில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்களில் நான்காவது சேவாக். இதற்கு முந்தைய மூவர் கவாஸ்கர், குண்டப்பா விஷ்வநாத், டெண்டுல்கர்.

அவ்வளவுதான், இனி நம்மாட்கள் 250 தாண்ட மாட்டார்கள் என்று நினைத்தோம். மணி பிற்பகல் 3.00. இருட்ட ஆரம்பித்தது. மின்விளக்குகள் எரிய, மொஹம்மத் காயிஃப், பார்திவ் படேல் விளையாடினர். படேல் கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுக்க, இன்று கில்கிறிஸ்ட் காலையில் யார் முகத்தில் முழித்தாரோ, இந்த கேட்சையும் தடவினார். படேல் இரண்டு முறை ஸ்லிப்பின் இடையே பந்தைத் தட்டி நான்கு ரன்களைப் பெற்றார். காயிஃப் கூட முழுவதும் சுயக் கட்டுப்பாட்டில் ரன்கள் பெற்றார் என்று சொல்ல முடியாது, ஆனால் அடித்த ஐந்து நான்குகளில் மூன்று அருமையான ஷாட்கள். பார்திவ் படேல் எடுத்ததெல்லாமே ஓசி.

83 ஓவர்களுக்குப் பிறகு கில்கிறிஸ்ட் புதிய பந்தை எடுத்தார். ஆனால் அதன்பின் விக்கெட் எதுவும் விழவில்லை. ஆட்டம் முடியும்போது இந்தியா 291/6 என்ற நிலையில் உள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களைச் சேர்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவை இரண்டாவது இன்னிங்ஸில் சுலபமாக அவுட்டாக்கி விடலாம் என்று நினைக்க முடியாது. மேலும் நாம் நான்காவதாக விளையாடுகிறோம். டெண்டுல்கர் அணியில் இல்லை. சேவாக் ஏற்கனவே தன் கணக்கில் இந்த மேட்சுக்கென நிறைய ரன்களைப் பெற்று விட்டார். லக்ஷ்மண் ஃபார்ம் கவலை தருகிறது. கங்குலியும் அப்படியே. யுவராஜ் தொடக்க ஆட்டக்காரராக வந்தால் விரைவிலேயே உள்ளே வந்துவிடுவார்... இந்தியாவில் நான்காவது இன்னிங்ஸில் 150க்கு மேல் அடிப்பது கஷ்டம்.

இந்தியாவின் லீட் 125-150 இல்லாவிட்டால் திண்டாட்டம்தான் என்று எனக்குத் தோன்றுகிறது.

Thursday, October 14, 2004

இரண்டாம் டெஸ்ட், முதல் நாள்

ஆஸ்திரேலியா 235, இந்தியா 28/1 (13 ஓவர்கள்) - சேவாக் 20*, பதான் 0*

சென்னை சேப்பாக்கம் அருகில் நெருங்கும்போதே பலர் "டேய் இன்னிக்கு ஆஸ்திரேலியா பேட்டிங்காம், வாடா வீட்டுக்குப் போகலாம்" என்று டிக்கெட் வாங்காமல் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தனர். அப்படியும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்தனர்.

பெங்களூரில் ஆட்டம் தொடங்கும் நாள் வரை தினமும் மழை பேய்ந்து கொண்டிருந்தது. ஆனால் சரியாக, டெஸ்ட் தொடங்கியது மழையே இல்லை. அதுபோல் சென்னையிலும் நேற்று மழை. இன்று எந்த பிரச்னையும் இல்லை.

இந்திய அணியில் மட்டும் ஒரு மாற்றம். ஆகாஷ் சோப்ராவுக்கு பதில், மொஹம்மத் காயிஃப். பந்துவீச்சைத் தொடங்கிய இர்ஃபான் பதானும், ஜாகீர் கானும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெய்டன், லாங்கர் இருவரையும் எந்தவிதத்திலும் கஷ்டப்படுத்தவில்லை. கானை விட பதான் ரன்கள் குறைவாகக் கொடுத்தார். முதலில் லாங்கரே அதிக ரன்களை எடுத்தார். நாலாபக்கமும் நான்குகள் பறந்தன. கங்குலி மூன்றாவது வீச்சாளராக ஹர்பஜன் சிங்கை ராயல் சுந்தரம் ஸ்டாண்ட் முனையிலிருந்து கொண்டுவந்தார். ஹெய்டன் ஹர்பஜனை நேராக தலைக்கு மேல் சிக்ஸ் அடித்து தன்னுடைய அரை சதத்தை எட்டினார். உடனேயே லாங்கரும் தன் அரை சதத்தைத் தொட்டார். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 111/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது. நடுவர் ஷெப்பர்ட் தாண்டித் தாண்டிக் குதித்துக் கொண்டே உள்ளே வந்தார்!

இன்று இந்தியா இரண்டு, மூன்று விக்கெட்டுகளைப் பெற்றாலே சந்தோஷம் என்ற நிலை எங்களுக்கு. மதிய உணவுக்குப் பின் ரன்கள் எடுப்பது நிறையவே தடைப்பட்டது. ஒரு பக்கம் ஹர்பஜனும், மறுபக்கத்திலிருந்து ஜாகீர் கானும் பந்து வீசினர். கான் நிறையப் பந்துகளை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். ஆனால் விக்கெட் எதுவும் விழுவதாகத் தெரியவில்லை. கானுக்கு பதில் கும்ப்ளே பந்துவீச வந்தபோது ஹெய்டன் மற்றுமொரு சிக்ஸ் அடித்தார்.

அணி எண்ணிக்கை 136 ஆக இருந்தபோது, ஆட்டத்தில் இன்னமும் சுவையைக் கூட்டலாம் என எண்ணிய ஹெய்டன் ஹர்பஜனை இறங்கி அடிக்கப் போய் லாங் ஆஃபில் இருக்கும் லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கேட்ச் பிடிக்கும் முன்னர் லாங்கர் மறுபக்கம் ஓடியிருந்தார். ஒரு பந்து கழித்து, அடுத்த பந்தை லாங்கர் வெட்டப் போய், விளிம்பில் பட்டு திராவிட் முதல் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார். இப்படியாக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் மூன்று பந்துகளுக்குள்ளாக உள்ளே திரும்பினர். இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் திரும்பத் தொடங்கியது. சைமன் காடிச் வந்ததும் ஹர்பஜன் பந்தில் முதல் ஸ்லிப்பில் இருக்கும் திராவிட் கையைத் தாண்டி ஒரு கேட்ச் போனது. பிடித்திருக்கலாம்.

சைமன் காடிச், டேமியன் மார்ட்டின் இருவரும் நிதானமாக, எந்தக் கவலையுமின்றி ஆடினர். கங்குலி முனைகளை மாற்றி, ஹர்பஜன் பந்துவீசும் பக்கத்திலிருந்து கும்ப்ளேயைக் கொண்டுவந்தார். உடனேயே கும்ப்ளே பந்துவீச்சில் மாறுதல். தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் கும்ப்ளேயின் பந்தை பார்வர்ட் ஷார்ட் லெக்கில் இருக்கும் யுவ்ராஜ் சிங்கிடம் கேட்ச் கொடுத்து மார்ட்டின் ஆட்டமிழந்தார். நடுவர்கள் தேநீர் இடைவேளை அறிவிக்கும்போது ஆஸ்திரேலியா எண்ணிக்கை 189/3.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கங்குலி இரண்டு ஸ்பின்னர்களையும் இரு பக்கங்களிலிருந்தும் போடச் செய்தார். ஆஸ்திரேலியா விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல விழ ஆரம்பித்தனர். லெஹ்மான் பெருந்தன்மையோடு தான் தன் இடத்தை புது வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு விட்டுக் கொடுத்துவிடுவேன் என்றார். இப்பொழுது அவர் விளையாடுவதைப் பார்த்தால், பெருந்தன்மை எதுவும் வேண்டாம். தேர்வுக்குழுவினரே அவரைத் தூக்கி விடுவார்கள். கும்ப்ளே பந்துவீச்சை அடித்து நொறுக்கியே தீருவது என்ற எண்ணத்தில் விளையாடினார். கும்ப்ளே பந்தை வெட்டி ஆடப்போய் மிக மெல்லிதாக பேட்டில் பட்டு படேலிடம் கேட்ச் கொடுத்தார். அதுவரை படேல் மிக மோசமாக கீப்பிங் செய்தார். நல்லவேளை இந்த கேட்ச் கையில் பிடிபட்டது. 191/4. பெவிலியன் முனையிலிருந்து ஹர்பஜன் வீசிய பந்தில் சைமன் காடிச் லட்டு போல சில்லி பாயிண்டில் இருக்கும் யுவராஜ் சிங்கிற்கு கேட்ச் கொடுத்தார். லட்டு வழுக்கி விழுந்தது!

காடிச், கிளார்க் இருவராலும் ரன்களைப் பெறுவது முடியாத காரியமாக இருந்தது. இப்படி இருந்தாலே விக்கெட் போகக் கூடிய நிலைமைதான். கும்ப்ளே வீசிய அருமையான பந்து ஒன்று... பிளிப்பர். பந்து சரேலென்று கீழே இறங்கி தரையில் பட்டதும் வேகமாக பேட்ஸ்மேனை நோக்கி வரும். கிளார்க் அதில் எல்.பி.டபிள்யூ ஆனார். 204/5. ஆனாலும் அடுத்து உள்ளே வரும் கில்கிறிஸ்டைப் பார்க்கும்போது கவலையாக இருந்தது. இப்படி இருக்கும்போதுதான் பெங்களூரில் கில்கிறிஸ்ட் அடித்து விளாசினார். ஆனால் இங்கு கும்ப்ளே வீசிய பந்தை ஷார்ட் லெக் திசையில் அடிக்க, யுவராஜ் சிங் அருமையாக பின்னாடி தாவி விழுந்து பிடித்தார். தான் காடிச் கேட்சை கோட்டை விட்டதற்கு பிராயச்சித்தம் செய்தார். 210/6.

இதையே சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு போயிருப்போம் நாங்கள். ஆனால் ஆஸ்திரேலியா இந்நிலையில் சுதாரித்து, நின்று ஆட விரும்பவில்லை. ஷேன் வார்ன் மிட் விக்கெட் திசையில் கும்ப்ளேயை நான்கு அடித்தார். பின் அதே ஓவரில் மற்றுமொரு சூப்பர் ஷாட் அடிக்கப்போய் பந்தை கும்ப்ளே திசையிலேயே அடிக்க, அவர் விழுந்து பிடிக்க, கும்ப்ளேயின் ஐந்தாவது விக்கெட். 216/7.

மறுமுனையில் ஹர்பஜன் பிரமாதமாகப் பந்து வீசினார். ஆனால் அவருக்கு மேற்கொண்டு விக்கெட் எடுக்கும் அதிர்ஷ்டம் எதுவும் இல்லை. சைமன் காடிச் இப்பொழுது ஹர்பஜனை இறங்கி தூக்கி அடித்து ஒரு நான்கைப் பெற்றார். கில்லெஸ்பி கும்ப்ளே பந்தை கட் செய்து ஒரு நான்கைப் பெற்றார். ஆனால் மற்றொரு பந்தை ஷார்ட் லெக்கில் இருக்கும் காயிஃப் கையில் சமர்த்தாகத் தட்டி அவுட்டானார். 224/8. அடுத்து வந்த காஸ்பரோவிச் கும்ப்ளே வீசிய பந்தை சில்லி மிட் ஆஃபில் இருக்கும் லக்ஷ்மண் கையில் அடித்தார். எல்லோரும் ஷெப்பர்டிடம் அப்பீல் செய்ய அவருக்கு இது கேட்சா இல்லையா என்று தெரியவில்லை. இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே காஸ்பரோவிச் பெவிலியன் திரும்பத் தொடங்கினார். இப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியர்கள் ரொம்பவே மாறிவிட்டனர். 228/9.

மெக்ராத் கும்ப்ளே பந்தை பைன் லெக்கிற்குத் திருப்பிவிட்டு ஒரு ரன் ஓடினார். பின் இரண்டாவது ரன்னுக்குத் திரும்பும்போது, காடிச் அவரைத் திருப்பி அனுப்பினார். இதற்குள் கான் படேலிடம் பந்தை வீச, அவர் பந்தை கும்ப்ளே கையில் கொடுக்க மெக்ராத் ரன் அவுட். ஆஸ்திரேலியா 235 ஆல் அவுட். கும்ப்ளே 7/48, ஹர்பஜன் 2/90. ஆனால் உண்மையில் ஹர்பஜன் கும்ப்ளேவை விடச் சிறப்பாகத்தான் வீசினார் என்று சொல்ல வேண்டும். கும்ப்ளே அவ்வப்போது கால் திசையில் வீசிய பந்துகள், புல் டாஸ் ஆகியவை தவிர்த்து மிக அருமையாக வீசினார். இந்த ஆடுகளத்தில் பந்துகள் நன்கு எழும்பி வந்தன. அது அவருக்கு மிகவும் உதவியது.

இந்தியாவிற்கு யுவராஜ் சிங்கும், சேவாகும் ஆட்டத்தைத் தொடங்கினர். மெக்ராத் முதல் ஓவரை வீச, யுவராஜ் சந்தித்தார். நான்கு ஸ்லிப்கள், ஒரு கல்லி, ஒரு பாயிண்ட். வீசிய முதல் ஓவரில் யுவராஜ் பந்தை இரண்டாவது ஸ்லிப்பிற்கு கேட்ச் கொடுத்தார். ஆனால் கிளார்க் சுலபமான இந்த கேட்சை நழுவ விட்டார்.

அதன்பின் கடைசி ஓவர் வரை எந்த பிரச்னையும் இல்லை. சேவாக் அதிக நம்பிக்கை தரும் விதமாக விளையாடினார். கவர் திசையில் ஒன்று, ஸ்கொயர் லெக்கில் ஒன்று, மிட் விக்கெட்டில் ஒன்று என்று மூன்று முத்தான நான்குகள் அதில் உண்டு. விக்கெட் எதுவும் இழக்காமல் இன்றைய ஆட்டத்தை இந்தியா முடித்திருக்கலாம். ஆனால் நாளின் கடைசி ஓவரில் யுவராஜ் சிங் ஷேன் வார்ன் பந்தை வெட்டி ஆடப்போய் பேட்டின் அடிப்பாகத்தால் லேசாகப் பட்டு கில்கிறிஸ்ட்டிடம் கேட்ச் ஆனது. அந்நேரத்தில் இந்த ஷாட் தேவையற்றது. இந்தியா 28/1. அடுத்த இரண்டு பந்துகளையும் இரவுக் காவல்காரர் இர்பான் பதான் அமைதியாகத் தடுத்து விளையாட முதல் நாள் ஆட்டம் நிறைவுற்றது.

இந்தியா திருப்தியுடன் நாளை ஆடத் தொடங்கும். குறைந்தது 150 ரன்களாவது இந்தியா லீட் எடுக்க முயல வேண்டும்.

வெளியே வரும்போது அடுத்த நாள் டிக்கெட் வாங்க பெருங்கூட்டம் சூழத் தொடங்கியிருந்தது.

Wednesday, October 13, 2004

சூப்பர்மென்

கிறிஸ்டோபர் ரீவ் - சூப்பர்மேனாக நடித்தவர் - சென்ற வாரம் உயிர் நீத்தார். இப்பொழுது POGO சானலில் Lois & Clark தொடராகப் போடுகிறார்கள். கிளார்க் கெண்ட் பாத்திரம் மிகவும் கூச்ச சுபாவம் உள்ள மனிதர். அவர்தான் தேவைப்படும்போது திடீரென சூப்பர்மேனாக மாறுவார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எல்லாம் அழகுப்பெண், துடுக்குப்பெண் லூயி லேனையும், உலகையும் காப்பாற்றுவதற்குத்தான். சூப்பர்மேன் பாத்திரத்தையோ, அதில் நடித்த ரீவ் பற்றியோ நான் அதிகமாக ஒன்றும் சொல்லப்போவதில்லை. எனக்கு மிகவும் பிடித்தது Lois & Clarke தொடரை விளம்பரப்படுத்தும் வாசகங்களே:

What do you need to be a superhero? A ridiculous constume, a catchphrase ("Is it a bird? Is it a plane? No, it is Superman!"), and a damsel in distress!

-*-

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கீத் மில்லர் சென்ற வாரம் இறந்த மற்றொரு சூப்பர்மேன். சர்வதேச கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர் என்றே சொல்லலாம். பிற்காலத்தில் கேரி சோபர்ஸ், அதற்குப் பல நாள்கள் கழித்து கபில்தேவ், இம்ரான் கான், இயான் போதம் போன்ற பிரகாசமான ஆல்ரவுண்டர்களுக்கு முன்னோடி மில்லர்.

இரண்டாம் உலகப்போரின் போது விமானப்படை விமானியாக இருந்தவர்.

பார்க்க சினிமாக்காரர் போல அழகாக, பந்தாவாக இருப்பவர். அதனால் பெண்கள் கூட்டம் இவரைத் துரத்தும். வாழ்க்கையில் அலட்சியம். விளையாட்டிலும் அலட்சியம். ஆனால் திறமை நிறைய இருந்தது.

பார்வையாளர்கள் முதல் பத்திரிகையாளர் வரை அனைவரையும் கவர்ந்தாலும், டான் பிராட்மேனுக்கு மில்லரை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இருவரும் வெவ்வேறு ரகம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிராட்மேன் கையில் இருந்ததால் கடைசிவரை மில்லருக்கு அணித்தலைவர் பதவி கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார் என்பதற்கு சில "செவிவழிச் செய்திகள்" பதில் சொல்லும்...

ஒருமுறை உள்ளூர் ஆட்டம் ஒன்றில் அணித்தலைவராக இருந்த மில்லர், பந்துத் தடுப்பு வியூகம் அமைப்பதற்கு யார் யார் எங்கே போக வேண்டும் எனச் சொல்ல "ஆளாளுக்கு அப்படியே சிதறி எங்காவது போய் நில்லுங்கள்" (scatter!) என்றாராம். பின் மற்றொரு முறை யார் 12வது ஆட்டக்காரர் என்று சொல்ல மறந்துபோனதால் ஆடுகளத்தில் 12 பேர் உள்ளே. யாரையாவது வெளியே அனுப்ப வேண்டும். அதற்கு மில்லர் சொன்னது: "சரி, யாராவது ஒர்த்தன் போய்த் தொலைங்க" (Well, one of you had better bugger off!)

-*-

சமீபத்தில் மண்டையைப் போட்ட மற்றுமொரு சூப்பர் ஹீரோ - ழாக் தெரிதா (Jacques Derrida). பிரஞ்சு தத்துவவாதி, மொழியறிஞர். கட்டுடைத்தல் (deconstruction) என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர். அடுத்த மாதம் வெளிவரும் அனைத்து தமிழ் சிற்றிதழ்களிலும் இவரைப் பற்றிய ஒரு கட்டுரை இருக்கும். உயிர்மையில் ஜெயமோகன், காலச்சுவடில் எஸ்.வி.இராஜதுரை? அ.மார்க்ஸ் எதிலாவது (யூகம்தான்... பார்க்கலாம்!).

-*-

எல்லோரும் சொர்கத்துக்குப் போய் 72 ஹூரிக்களுடன் கும்மாளம் அடிக்கட்டும் என வாழ்த்துவோம்!

Tuesday, October 12, 2004

ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது

நேற்று மாலை ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்தில் சிறிது தடங்கல். தெருவோரத்தில் அதிமுக தொண்டர்கள் கைகளில் கொடியுடன் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

தெருவெங்கும் ஜெயலலிதாவின் உருவப் படங்கள், சிறு மின்விளக்குகளாலான 'அம்மா' உருவங்கள், கட்சிக் கொடிகள்.

பக்கத்து ஊர்களிலிருந்து வந்து குவிந்திருக்கும் வேன்கள், குழுமிய தொண்டர்கள்.

என்ன திருவிழா?

முதல்வர் ஜெயலலிதா ஆண்-பெண் சமத்துவத்துக்காக, பெண்களின் நிலை உயர்வதற்காகப் பாடுபட்டார் என்பதனால் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த The International Human Rights Defence Committee (IHRDC) என்னும் அமைப்பு ஜெயலலிதாவுக்கு The Golden Star of Honour and Dignity Award என்றதொரு விருதளிக்கும் விழாதான் அது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த விருது பற்றி அஇஅதிமுக கட்சி சார்பில் ஒரு செய்தியறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இன்று ஜெயா டிவி சார்பில் பல செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள்.

மேற்படி அமைப்பு IHRDC கடந்த வருடங்களில் இந்த விருதினை ஐ.நாவின் கோஃபி அன்னான், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடின் ஆகியோருக்கு வழங்கியுள்ளதாம். அந்த வரிசையில் வருகிறார் ஜெயலலிதா.

இதுபற்றிய தி ஹிந்து செய்தி, தினமணி செய்தி, தினமலர் படம்

மேற்படி விழாவில் கலந்து கொண்ட உலகத் தமிழ் இளைஞர்கள் கூட்டமைப்பின் (இப்படி ஓர் அமைப்பு இருப்பது உங்களில் யாருக்காவது தெரியுமா?) தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் தன் சார்புக்கு, அடுத்த ஆண்டு அமெரிக்காவின் சர்வதேச நட்புறவுக் கழகம் என்னும் அமைப்பு ஜெயலலிதாவுக்கு சிறந்த அரசியல் தலைவருக்கான விருதை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

தங்கத்தாலான செல்பேசிகள்

ஆகா, ஆரம்பிச்சுட்டாங்கைய்யா... நோகியா செல்பேசிகள் நிறுவனம் தங்கம், பிளாட்டினம் போன்றவையால் ஆன செல்பேசிக் கருவிகளை இந்தியாவில் விற்க எண்ணியுள்ளனர். இதன் விலை ரூ. 3.71 லட்சம் இருக்குமாம்.

முதல் வருடத்தில் கிட்டத்தட்ட 1,000 கருவிகளை விற்க எண்ணியுள்ளனர்.

யார் முதலில் வாங்குவார்கள்? அரசியல்வாதிகள்? தொழிலதிபர்கள்? நடிக, நடிகையர்? கிரிக்கெட் வீரர்கள்?

Monday, October 11, 2004

முதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்

பெங்களூர் ரசிகர்கள் அனைவருக்கும் முடிவு என்ன என்று தெரிந்து விட்டதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆனாலும் உள்ளூர் திராவிட் அரை சதம், சதம் அடிப்பாரோ என்னும் ஆசையால் பத்தாயிரம் ஆசாமிகளாவது வந்திருந்தனர்.

திராவிட் என்னவோ இந்த உலகத்தையே தானே தாங்கப் போவதுபோல ஷேன் வார்ன் பந்துவீச்சைத் தன்னால் மட்டும்தான் விளையாட முடியும், பதானால் முடியாது என்று கிடைக்கும் ரன்களை எல்லாம் விட்டுவிட்டார். ஷேன் வார்ன் வீசிய முதல் ஓவரிலேயே திராவிட் ஆன் டிரைவ் அடித்து நான்கைப் பெற்று அரை சதத்தை எட்டினார். பின் அடுத்து வந்த ஷேன் வார்ன் ஓவரிகள் இரண்டிலும் ஓவருக்கு ஒன்றாக ஆஃப் திசையில் பவுண்டரிகளை அடித்தார். மறுமுனையில் பதான், காஸ்பரோவிச் பந்துவீச்சை நன்றாகவே சமாளித்தார் - ஓவரில் நான்கு பந்துகள் பேட்டிலேயே படாது. மற்ற இரண்டைத் தடுத்தாடுவார்.

ஷேன் வார்ன் எப்படியாவது பதானுக்கு பந்துவீச வேண்டும் என்பதற்காக வீசும் பக்கத்தை மாற்றினார். லெஹ்மான் வார்ன் வீசிய பக்கம் வந்து வீச, அடுத்த ஓவரில் ஷேன் வார்ன் அடுத்த பக்கம் மாற, திராவிட் ஒரு ரன் பெற்று மீண்டும் வார்னைச் சந்திக்க - ஆட்டத்துக்கு நடுவில் மற்றொரு சுவையான ஆட்டம்.

ஆனால் இதெல்லாம் தேவையில்லாததாகவே எனக்குத் தோன்றியது. இவ்வளவும் செய்தபின் காஸ்பரோவிச் பந்துவீச்சில் திராவிட் எல்.பி.டபிள்யூ ஆனார். பதானோ அதுவரை காஸ்பரோவிச் வீசிய பந்துகளை அதிக பிரச்னையின்று சந்தித்து வந்தார். திராவிட் போனதும் ஆட்டம் இன்னமும் அரை மணிக்குள் முடிந்து விடும் என்று அனைவரும் நினைத்தனர். கும்ப்ளே வந்தார். எப்பொழுதும்போல டென்ஷனாகவே இருந்தார். இரண்டு ரன்கள் பெற்றதும், காஸ்பரோவிச் பந்துவீச்சில் ஸ்டம்பை இழந்தார். 125/8. அவ்வளவுதான், இன்னமும் இரண்டு விக்கெட்டுகள்தான் பாக்கி.

ஆனால் அடுத்த சில மணிநேரங்களே ஆட்டத்தில் இந்திய ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்த நேரங்கள். ஹர்பஜன் சிங்கும், இர்ஃபான் பதானும் எந்தவித அழுத்தமும், இடையூறுகளும் இன்றி இயல்பாக விளையாடினர். காஸ்பரோவிச் பந்தில் பதான் இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க, அங்குள்ள வீரரால் அதைப் பிடிக்க முடியவில்லை.

முதலில் பதான் ஷேன் வார்ன் பந்துகளை விளாசத் தொடங்கினார். டிரெஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்திருந்த திராவிட் அதைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். பதான் மீது நம்பிக்கை வைத்திருந்தால் திராவிட் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கலாம்... ஒருவேளை இந்தியா இந்த ஆட்டத்தை டிரா கூட செய்திருக்கலாம். பதானைத் தொடர்ந்து ஹர்பஜனும் அடிதடியில் இறங்கினார். பதான் வெறும் அடிதடியோடு இல்லாமல் மிக அழகான தடுப்பாட்டத்தையும் காண்பித்தார். கில்கிறிஸ்ட் மெக்ராத்தை பந்துவீச அழைத்தார். ஒரு மாற்றமும் இல்லை. வார்ன் வீசிய பந்தை பதான் மிட்விக்கெட்டுக்கு மேல் சிக்ஸ் அடித்தார். மெக்ராத் பந்தை ஹர்பஜன் எல்லைக்கோட்டுக்கு சற்று முன் விழுமாறு ஒரு நான்கு அடித்தார்.

இப்படியே உணவு இடைவேளை வரை மேற்கொண்டு எந்த இழப்புமின்றி விளையாடினர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு பதான் தன் அரை சதத்தைப் பெற்றார். லெஹ்மான் வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் எழும்பி அடித்த மற்றுமொரு சிக்ஸ் அதில் அடங்கும். ஹர்பஜனும் வார்ன் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். மெக்ராத்தால் விக்கெட் எதையும் பெற முடியவில்லை. வார்ன் தன் விக்கெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடியவில்லை. காலையில் எடுத்திருந்த இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் காஸ்பரோவிச்சாலும் எந்த விக்கெட்டையும் பெற முடியவில்லை. கிளார்க் ஓர் ஓவர் வீசினார். லெஹ்மான் பந்துவீச்சிலும் எந்த பிரயோஜனமும் இல்லை. கில்கிறிஸ்ட் கடைசியாக கில்லெஸ்பியை பந்துவீச்சிற்குக் கொண்டுவந்தார்.

55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில்லெஸ்பியின் பந்தை விளிம்பில் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்சாக, பதான் அவுட்டானார். மிகவும் முதிர்ச்சியான இன்னிங்ஸ் இது.

ஆட்டம் இத்துடன் முடிவடையவில்லை. இன்னும் சிறிது நேரம் ஜாகீர் கானும், ஹர்பஜனும் வாணவேடிக்கை செய்து காட்டினர். கடைசியாக ஹர்பஜன் கில்லெஸ்பியை ஹூக் செய்யப் போய் டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் இருந்த மெக்ராத்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா 217 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவிற்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்கள்: ஆகாஷ் சோப்ராவின் தடுப்பாட்டம் முழுவதுமாக தோல்வியுற்றது, சேவாக் இன்னமும் மோசமான நிலையில் இருப்பது, கங்குலிக்கு இன்னமும் எந்த ரன்களைப் பெறுவதற்கு ஓடலாம் என்று தெரியாமல் இருப்பது, லக்ஷ்மணுக்கு ஷேன் வார்ன் ஸ்பின்னை விளையாடத் தெரியாமல் இருப்பது, யுவராஜ் சிங்கிற்கு மெக்ராத்தின் பந்துவீச்சை சமாளிக்கத் தெரியாமல் இருப்பது. இன்னமும் பல குறைகள் உள்ளன.

அடுத்த டெஸ்டிற்கு இந்த அணியில் ஒரு மாற்றம் செய்தால் போதும். ஜாகீர் கானுக்கு பதில் அகர்கரைக் கொண்டு வரவேண்டும். டெண்டுல்கர் இன்னமும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு விளையாடப் போவதில்லை. கிரிக்கெட் வாரியம் இந்திய ரசிகர்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். இப்பொழுதும் கூட இந்தியாவின் மேல்வரிசை ஆட்டக்காரர்கள் கொஞ்சம் நிதானமாக விளையாடினால் போதும்... இந்தியா இனி வரும் மூன்று டெஸ்ட்களில் ஒன்றையாவது ஜெயிக்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சில் இந்தியாவின் நம்பிக்கை ஒளி ஹர்பஜன் சிங் மட்டும்தான். கும்ப்ளே, பதான், மற்றும் இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளர் (பாலாஜி எப்ப வருவாரோ?) கொஞ்சம் உதவி செய்தால் - அதிகமாக ரன்களைக் கொடுக்காமல், அவ்வப்போது ஓரிரு விக்கெட்டுகளைப் பெற்றால் - உபயோகமாக இருக்கும்!

Sunday, October 10, 2004

முதல் டெஸ்ட், நான்காம் நாள்

பெங்களூர் சின்னசாமி அரங்கில் காலை ஆஜர். ஆஸ்திரேலியா எப்பொழுது டிக்ளேர் செய்வார்கள், அல்லது இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றி விடுவார்களா?

இன்றைய டிக்கெட்டுகளை வாங்க பெரும் கூட்டம். சொக்கனிடமிருந்து SMS - டிக்கெட் வாங்க வந்தோம், டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. பின் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் வாங்கி உள்ளே வந்தாராம். பெங்களூர் ஜனங்கள் ஆசையோடு இந்தியாவின் பேட்டிங்கைப் பார்க்க வந்திருந்தனர். பாவம், இந்தியர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்று அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமா என்ன?

ஹர்பஜன், கும்ப்ளே இருவரும் பந்து வீச்சைத் தொடங்குகின்றனர். கிளார்க் பேட்-கால்காப்பு கேட்சில் சில்லி பாயிண்டில் இருக்கும் சோப்ராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்கிறார். கூட்டம் குதிக்கிறது. ஹர்பஜன் வீசும் பந்துகள் படமெடுக்கும் நாகப்பாம்பு போல ஆடுகளத்தில் பட்டதும் சுர்ரென்று சீறுகின்றன. கில்கிறிஸ்ட் உள்ளே வருகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல வேகமாக ரன்களைச் சேர்க்க முடிவதில்லை. மார்ட்டின் ஹர்பஜனின் ஆஃப் பிரேக்கை மிட்விக்கெட் திசையில் அடிக்கப்போய் ஷார்ட் மிட்விக்கெட்டில் இருக்கும் காயிஃப் அருமையான தரையோடு ஒட்டிய கேட்சைப் பிடிக்கின்றார். யாருக்கு பதில் காயிஃப் வந்துள்ளார் என்று தெரியவில்லை. ஷேன் வார்ன் வந்ததும் நிறைய பெருக்கல் அடிகளை (ஸ்வீப்) அடிக்கிறார். கும்ப்ளே நன்றாகப் பந்து வீசினாலும் விக்கெட் எதையும் பெறவில்லை. ஆனால் உணவு இடைவேளைக்கு சற்று முன் கில்கிறிஸ்டை பேட்-கால்காப்பு வழியாக ஃபார்வார்ட் ஷார்ட் லெக் சோப்ரா பிடிக்க கும்ப்ளேவுக்கு இந்த இன்னிங்ஸில் இரண்டாவது விக்கெட். கில்லெஸ்பி விளையாட வருகிறார். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 204/7.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலியா மீண்டும் பேட்டிங் செய்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. ஷேன் வார்ன் அங்கும் இங்குமாக சில ஓட்டங்களைப் பெறுகிறார். பின் ஹர்பஜனை ஸ்வீப் செய்ய, யுவராஜ் சிங் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் பிரமாதமான கேட்ச். கில்லெஸ்பியும் அதே கூட்டணிக்கு ஆட்டமிழக்க்கிறார். ஹர்பஜனுக்கு ஐந்து விக்கெட்டுகள். கடைசியாக காஸ்பரோவிச் புல் செய்யப்போய் பந்து மேலாகப் பறக்கிறது, திராவிட் ஸ்லிப்பிலிருந்து ஓடிப்போய் கேட்சைப் பிடிக்கிறார். அரங்கம் ஆர்ப்பரிக்கிறது.

இந்தியா ஜெயிக்க 457 ரன்கள் தேவை!

இம்முறை முதல் ஓவரில் விக்கெட் விழுவதில்லை. ஆனால் மூன்றாவது ஓவரில். முதல் பந்தில் சோப்ரா ஒரு ரன் எடுக்கிறார். அடுத்த பந்து வீசுமுன் மெக்ராத் (சேவாகிற்கு மெக்ராத்திடமிருந்து வரும் முதல் பந்து) நிறைய நேரம் எடுத்து பந்துத் தடுப்பாளர்களை மாற்றியமைக்கிறார். வீசுகிறார். அவுட்! எல்.பி.டபிள்யூ என்கிறார்கள். நாங்கள் ஓடிச்சென்று டிவியில் மற்றொருமுறை காண்பிப்பதைப் பார்க்கிறோம். பந்து மட்டையில் பட்டு சென்றுள்ளது தெரிகிறது. அரங்கம் பவுடனுக்கு சாபம் கொடுக்கிறது. சேவாகும் நடுவர்களிடம் நாலு வார்த்தை பேசியபின்தான் சென்றுள்ளார். அன்று மாலை ரஞ்சன் மடுகல்லே சேவாகைக் கூப்பிட்டு "திட்டுகிறார்." சேவாக் மன்னிப்பு தெரிவிக்கிறார். இன்று தெரியும் என்ன்ன தண்டனை என்று. தவறாக தீர்ப்பு கொடுத்த பவுடனுக்கு எந்த தண்டனையும் கிடையாது.

சரி, போகட்டும். மற்ற மாணிக்கங்கள் என்ன செய்தனர்? சோப்ரா கில்லெஸ்பியின் உள்ளே வரும் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். இம்முறை சரியான தீர்ப்புதான். கங்குலி கில்லெஸ்பியின் பவுன்சர்களை நன்கு சமாளிக்கிறார். முதல் பந்தை ஹூக் செய்து அருமையான நான்கைப் பெறுகிறார். அடுத்த பந்து வயிற்றில் படுகிறது. மூன்றாவது பவுன்சரை எப்படியோ தட்டி ஒரு ரன் பெறுகிறார். அதுதான் அவர் எடுக்கும் கடைசி ரன்.

அடுத்த ஓவரில் மெக்ராத் பந்தை கால் திசையில் மிக அழகாக விளையாடுகிறார். அந்த சந்தோஷத்தில் ரன் கிடைக்குமா, இல்லையா என்று கவனிக்காமல் ஓடத் தொடங்கி திராவிட் இருக்கும் இடம் வரை சென்றபின்தான் திராவிட் ரன்னுக்காக ஓடப்போவதில்லை என்று புரிகிறது. இதைவிடச் சுலபமான ரன் அவுட் கிடைக்காது.

லக்ஷ்மண் - ஷேன் வார்ன் வீசும் பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். பந்து எப்பொழுதும்போல ஸ்பின் ஆவதில்லை.

அவ்வளவுதான், இன்றே ஆட்டம் முடிந்துவிடும் என்று மக்கள் அரங்கத்தை விட்டுக் கிளம்புகிறார்கள். கலவரம் நடக்குமோ என்ற சந்தேகத்தில் அரங்க நிர்வாகிகள் சில பகுதிகளில் மீன்வலையை விரிக்கிறார்கள். (இதனால் மோசமான ஆசாமிகள் கல், பிற சமாச்சாரங்களை ஆடுகளத்தினுள் வீசுவதைத் தடுக்கலாம்.)


ஆனால் யுவராஜ், திராவிடுடன் சேர்ந்து அழகாக விளையாடுகிறார். வார்ன் வீசும் பந்துகளை திராவிடும், யுவராஜும் திறமையாகவே விளையாடுகிறார்கள். காஸ்பரோவிச், கில்லெஸ்பி இருவரும் வீசும் பந்துகளை முக்கால்வாசி விட்டுவிடுகிறார்கள்.

எப்படியோ ஐந்தாம் நாள் ஆட்டத்தைக் கொண்டுவந்துவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது மெக்ராத் அழைத்து வரப்படுகிறார். யுவராஜ் இம்முறை பந்தை கில்கிறிஸ்டிடம் தட்டி கேட்ச் கொடுத்து அவுட்டாகிறார். மெக்ராத் ஸ்டம்புக்கு வெகு அருகில் வந்து பந்து வீசுவதால் யுவராஜால் தைரியமாக இவரது பந்துகளை விட முடிவதில்லை. பந்து சற்றே விலகி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போகும்போது வேறு வழியின்றி வலையில் சிக்குகிறார். இதிலிருந்து வரும்ம் டெஸ்ட்களில் யுவராஜ் விடுபட வேண்டும்.

படேல் வார்ன் பந்துகளை விளையாடத் தடுமாறுகிறார். முன்னே போவதா, பின்னே வருவதா என்று தடுமாறிக் கொண்டிருக்கும்போது ஒரு பந்து அவரது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இருக்கும் ரஃப்பில் பட்டு படேலின் பின்னங்காலில் படுகிறது. எல்.பி.டபிள்யூ.

இர்ஃபான் பதான் திராவிடுக்கு நம்பிக்கை தருகிறார். ஆனாலும் திராவிட் பல எளிதான ஒரு ரன்களை விட்டுவிடுகிறார். முடிந்தவரை தானே எல்லாப் பந்துகளையும் சந்திக்கிறார். இதனால் என்ன்ன சாதிக்கப்போகிறார் என்று தெரியவில்லை.

நான்காம் நாள் ஆட்டம் முடியும்போது இந்தியா 105/6 - திராவிட் 47*, பதான் 7*

நாளை மற்றுமொரு நாளே.

Friday, October 08, 2004