Monday, November 30, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 15: சித்த மருத்துவம் பற்றி டாக்டர் அருண் சின்னையா

சித்த மருத்துவம் பற்றியும் மருத்துவ குணங்கள் கொண்ட, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரைகளைப் பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ள டாக்டர் அருண் சின்னையா, தீனதயாளனுடன் பேசுகிறார்.

சித்த மருத்துவம் பற்றிய எளிய அறிமுகத்துடன், வழக்கமாக வரும் சில நோய்களுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய கைவைத்தியங்களைப் பற்றியும் இந்த பாட்காஸ்டில் டாக்டர் அருண் சின்னையா விளக்குகிறார்.

இங்கேயே கேட்க:



தரவிறக்கிக்கொள்ள

தொடர்புள்ள புத்தகங்கள்:

                   

Sunday, November 29, 2009

எழுத்திலிருந்து ஒலிவடிவத்துக்கு (Text to Speech)

இரு வாரங்களுக்குமுன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த 10-நாள் தொல்காப்பியப் பயிற்சி அரங்கின் இறுதி நாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். அதற்கு மறுநாள் பேரா. தெய்வ சுந்தரத்தின் அலுவலகம் சென்று, அவர்களது ஆராய்ச்சிகளைப் பார்வையிட்டேன்.

கணினிவழியாக தமிழ்ச் சொற்களைப் பகுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். ‘படித்துக்கொண்டிருந்தானா’ என்ற சொல் ‘படி+த்+து+(க்)+கொண்டு+இரு+(த்->ந்)+தான்+ஆ’ என்று பிரியும். இந்த வினைச்சொல்லின் வேர் ‘படி’. கொடுக்கும் எந்த வினையையும் பெயரையும் உடைத்து, துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டும் என்ன என்று சொல்லமுடியுமா? அதைத்தான் Morphological processing செய்ய முற்படுகிறது.

தமிழின் இலக்கணம் தெளிவானது. இலக்கண விதிகளைக் கொண்டு மிக அழகாக இவற்றைச் செய்துவிட முடியும். இந்திய மொழிகளிலேயே இந்த அளவுக்குத் துல்லியமான, முழுமையான விதிகள் கொண்டவை சமஸ்கிருதமும் தமிழும் மட்டுமே. தமிழில் சொற்பகுப்பாய்வை முழுமையாகச் செய்துமுடித்துவிட்டால் கணினியில் spellcheck போன்றவற்றை எளிதாகச் செய்யமுடியும். அத்துடன் இலக்கணத் தவறுகளையும் (பெருமளவு) களையமுடியும்.

பேரா. தெய்வ சுந்தரத்திடம் ஆராய்ச்சி செய்யும் மூன்று மாணவிகள் கணினிப் படிப்பின் பின்புலத்துடன் வந்துள்ளவர்கள். அத்துடன் தமிழ் இலக்கண அறிவையும் சேர்த்து இந்த மென்பொருள் உருவாக்கத்தில் இறங்கியுள்ளனர். அவர்களது மென்பொருளில் பல்வேறு வினைச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் புகுத்தி, அது அந்தச் சொற்களை உடைத்துக் காண்பிப்பதைப் பார்த்தோம். நல்லதொரு, பாராட்டப்படவேண்டிய முயற்சி.

பேரா. தெய்வ சுந்தரத்தின் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற பேரா. முருகையன் அவர்களையும் சந்தித்தேன். இவர் text-to-speech (TTS) துறையில் நிறைய ஆய்வுகளைச் செய்தவர். இவரது திறமைகளைப் பிடித்து வாங்கி, தமிழுக்கான தரமான TTS ஒன்றை உருவாக்கவும் தெய்வ சுந்தரம் திட்டமிட்டுள்ளார். (ஆனால் தெய்வ சுந்தரமும் இந்த ஆண்டே ஓய்வு பெறப்போகிறார்!) தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் கணினி+தமிழ் ஆய்வுகள் நடக்கும் இடங்களில் பலரும் இந்த TTS முயற்சிகளில் இறங்கியிருப்பதைக் காணலாம். பெங்களூரு IISC-ல் பேரா. ராமகிருஷ்ணன் இந்த முயற்சியில் இறங்கி, ஒரு டெமோ மென்பொருளையும் தந்துள்ளது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அந்த மென்பொருளில் நிறைய முன்னேற்றம் தேவை.

முருகையன் பேசும்போது தமிழில் சுமார் 20 ஃபோனீம்கள் (Phonemes) உள்ளன என்றும் கிட்டத்தட்ட 85 அல்லோஃபோன்கள் (Allophones) உள்ளன என்றும் சொன்னார். தமிழ் ஒரு ஃபொனெடிக் மொழி. கிட்டத்தட்ட ஒவ்வொரு எழுத்தும் ஒரு ஒலிப்பான் (ஃபோனீம்). ஆனால் சில ஒலிப்பான்கள் ஒன்றை ஒன்று நெருங்கி உள்ளதால் (ன, ந, ண, ர, ற போன்றவை) உயிர்+மெய்-ஐ விடக் குறைவான ஒலிப்பான்களே உள்ளன. ஆனால் சொல்லில் ஒரு எழுத்து வரும்போது வெவ்வேறு சொற்களில் வெவ்வேறு ஒலிகளைக் கொடுக்கும். அப்படிப்பட்ட ஒலிகள்தான் அல்லோஃபோன்கள்.

இந்த அல்லோஃபோன்களைப் பதிவுசெய்து, குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தைப் பல அல்லோஃபோன்களாக உடைத்து, ஒலியேற்றம் செய்து, ஏற்ற இறக்கங்களுக்காகச் சில முன்னேற்றங்களைச் செய்தால் கிடைத்துவிடும் text-to-speech.

முருகையன், இந்திய மொழிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். உள்ள மொழிகளிலேயே சமஸ்கிருதத்துக்கு TTS-ஐ எளிதாகச் செய்யலாம் என்றும் அடுத்தாற்போல தமிழுக்குத்தான் அப்படிச் செய்யமுடியும் என்றும் சொன்னார். பிற இந்திய மொழிகள் (இந்தி முதற்கொண்டு) மேலும் வேலை எடுக்கக்கூடியவையாம்.

***

தமிழின் இலக்கணக் கட்டமைப்பும் ஒலிக்கட்டமைப்பும் இன்றைய நவீன இந்திய மொழிகளில் தமிழை முதன்மையான மொழியாக வைத்திருப்பது ஆச்சரியமானது. கணினியில் Natural Language Processing என்று வரும்போது தமிழில் மிக வேகமாக வேலைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்று தோன்றுகிறது.

உத்தமம் அமைப்பு சமீபத்தில் ஜெர்மனியின் நடத்திய TI-2009 மாநாட்டில் மார்ஃபாலஜி பற்றி நிறைய கட்டுரைகள் வந்திருந்தன. அடுத்து கோவையில் நடக்க உள்ள TI-2010-ல் இந்தத் துறையில் மேலும் பல புதுமைகள் நடந்தேறி இருக்கும்.

Monday, November 16, 2009

கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்

1980-கள் இறுதியில் இணையத்தில் Usenet Newsgroups என்று ஒன்று கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. அப்போது soc.culture.indian என்ற குழு மிகவும் பிரபலமானது. இப்போது இணையத்தில், வலைப்பதிவுகளில் காணப்படும் அத்தனை சண்டைகளும் அதில் அப்போதே நடந்தன. இன்று வலைப்பதிவுகளில் தென்படும் அருமையான, அற்புதமான எழுத்துகளும் அபூர்வமாகத் தென்பட்டன.

அப்படி எழுதக்கூடிய ஒருவராக ரமேஷ் மஹாதேவன் இருந்தார். இன்றும் கூகிள் குரூப்ஸ் வழியாகத் தேடிப்பார்த்தால் அவர் எழுதியது உங்களுக்குக் கிடைக்கும். அவர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பாகவும் இணையத்தில் சில இடங்களில் கிடைக்கலாம். அஜய் பால்வாயண்டீஸ்வரன் என்று அவர் உருவாக்கிய பாத்திரம், பத்திரிகைகளில் மட்டும் கதைகளாக வந்திருந்தால், துப்பறியும் சாம்பு பாத்திரத்துக்கு இணையாகப் பிரபலமாகியிருக்கும். சென்னைக்கு திரும்பிய அவர், இப்போது SSN பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார்.

கர்நாடக இசை பற்றிய ஓர் அறிமுகப் புத்தகத்தை, A gentle introduction to Carnatic Music என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். எளிமையாக, ராகம், தாளம், மேற்கத்திய செவ்வியல் இசைக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள வேறுபாடு என்று ஒன்றுமே தெரியாதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில், எழுதப்பட்டுள்ளது. 100 பக்கத்துக்கு உள்ளாக இருக்கும் இந்தப் புத்தகம், Oxygen Books பதிப்பாக வெளியாகியுள்ளது. விலை ரூ. 100/-

சென்னை இசைக் கச்சேரி சீசன் ஆரம்பமாகும் நிலையில் இதை வாங்கிப் படித்துப் பலரும் பயன்பெறுவர் என்று நம்புகிறேன்.

அடுத்து... இந்தப் புத்தகத்தை விரைவாகத் தமிழில் கொண்டுவர விரும்புகிறோம். கர்நாடக இசை தெரிந்த, நல்ல தமிழில் மொழிபெயர்க்கக்கூடியவராக இருந்தால் நல்லது. நீங்கள் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்க விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பரஸ்பர நிதிகளை பங்குச்சந்தை மூலம் வாங்கலாம்...

சென்ற வாரம் செபி (SEBI) ஓர் ஆணை பிறப்பித்து, இனி மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை பங்குச்சந்தை வழியாக வாங்கலாம், ரிடீம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள Fundsindia.com நிறுவனத்தின் ஸ்ரீகாந்த் மீனாக்ஷியிடம் தொலைபேசியில் பேசினேன். அந்த பாட்காஸ்ட் இங்கே.

இங்கேயே கேட்க



தரவிறக்கிக்கொள்ள

பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனித இனம் பிரிவதற்கு ஆளாகுமா?

படிக்க: Will disparity split the human race?

கடந்த சில நூற்றாண்டுகளில், சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. முன்னர் பற்றாக்குறை இருந்தாலும், அதுவும் பரவலாக இருந்தது. ஆனால் இப்போது பற்றாக்குறை ஒரு சிலருக்கும், வசதி வாய்ப்புகள் ஒரு சிலருக்கும் என்று ஆகியுள்ளது. இதனால் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு, இரு வெவ்வேறு மனித species-இனம் உருவாகக்கூடுமா என்பதைப் பற்றிப் பேசுகிறது மேலே குறிப்பிட்ட செய்தி.

அது எப்படி நிகழும்? உணவுப் பற்றாக்குறை உள்ள ஒரு சமூக அமைப்பை எடுத்துக்கொள்வோம். அந்த நிலையில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் இறந்துவிடும். ஆனால் ஏதோ மரபணு மாற்றம் (genetic variation) உள்ள ஒருசில குழந்தைகள் மட்டும் கிடைக்கும் மிகக்குறைந்த உணவை உட்கொண்டு உயிர்வாழும் திறன் படைத்ததாக இருக்கும். குறைந்த உணவில் காலம் தள்ள ஏதுவாக, உடலில் வளங்கள் அதிகம் தேவைப்படும் சில பாகங்களை அந்த மாறிய மரபணுக்கள் குறைவாக உருவாக்கவேண்டியிருக்கும். அப்படிச் செய்வதன்மூலம்தான் அந்த உயிர் வளர்ந்து நீடிக்கமுடியும். அதிக வளங்கள் தேவைப்படும் பகுதி ஒன்று மூளை. எனவே மூளையைச் சற்றே சிறிதாக்க அந்த மரபணு முற்படலாம். அத்துடன் எலும்புக்கூட்டைச் சிறிதாக்க. இதனால் குறைந்த உணவைக் கொண்டு உடலைப் பராமரிக்கமுடியும். ஆனால் உடல் சிறியதாக, மூளை சிறியதாக இருக்க நேரிடும்.

இப்படியே பல தலைமுறைகள் - 10,000 முதல் 20,000 ஆண்டுகள் இதே நிலை தொடரத் தொடர, உணவு குறைவாகக் கிடைக்கும் இந்தச் சமூகம் உணவு அதிகம் கிடைக்கும் குழுவிலிருந்து நல்ல உடல் வேறுபாட்டைக் காண்பிக்கக் கூடும். மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் (100,000, 500,000) தாண்டத் தாண்ட, அதிகபட்ச மரபணு மாற்றங்களுடன் இரு வெவ்வேறு மனித இனங்கள் (homo , homo ) இந்த உலகில் இருக்கும் நிலை ஏற்படலாம்.

ஒரே மனித இனமாக, 99.9% மரபணுக்கள் ஒத்தவையாக இருக்கும் நிலையிலேயே, மனித இனக்குழுக்கள் ஒருவரை ஒருவர் நசுக்குவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமூக அமைப்பிலேயே இப்படி உள்ளது என்றால், மரபணு ரீதியில் இரு ஸ்பீஷிஸ் என்றால் தொடர்ச்சியான போர் நடக்கும். ஒருவரை மற்றவர் அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

விரைவில் இந்நிலை மாறவேண்டும் என்றால் பசிப் பிணியை உடனடியாகப் போக்கவேண்டும்.

Saturday, November 14, 2009

இனி இது சேரி இல்லை...

அன்னை சத்யா நகர் பற்றி சிலமுறை பதிவுகளில் எழுதியிருக்கிறேன். சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு அன்னை சத்யா நகர் என்னும் சேரிப் பகுதியை எடுத்துக்கொண்டு அங்குள்ள மக்கள், அரசு இயந்திரம் ஆகியவற்றுடன் இணைந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த மாற்றங்கள் என்னென்ன? அவற்றால் நீடித்த முன்னேற்றம் அந்த இடத்தில் ஏற்படுமா? சேரி என்றால் என்ன? சேரிகளில் உள்ள மக்கள் படும் பாடு என்ன? வெளியிலிருந்து வரும் தொண்டு அமைப்புகள் சேரிப் பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியுமா? சேரியை மாற்றுவது என்பது வெறும் பணம் சார்ந்த ஒன்றா? பாதுகாப்பு உணர்வு இன்றி, அரசு எப்போது வேண்டுமானாலும் துரத்தக்கூடும் என்ற நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் வாழும் இடம் அவர்களுக்கே சொந்தம் என்று பட்டா, நில ஆவணம் என்று கையில் கிடைக்கும்போது என்ன மாற்றம் ஏற்படுகிறது? சுத்தம், சுகாதாரம் என்பதை எங்கும் மலரச் செய்யமுடியுமா?

இதுபோன்ற பல கேள்விகளுக்கான விடைகள் இந்தப் புத்தகத்தில் கிடைக்கும்.

இந்தப் புத்தகத்தின் ஆரம்ப வடிவம் ஆங்கிலத்தில் "A Slum No More" என்று எழுதப்பட்டு (அதுவும் நியூ ஹொரைசன் மீடியா வெளியீடுதான்), பின்னர் தமிழில் மறு எழுத்தாக்கம் செய்யப்பட்டது. கிழக்கு பதிப்பக வெளியீடு.

இந்தப் புத்தகம் படிப்பதன்மூலம் சில கார்பரேட் நிறுவனங்கள், Corporate Social Responsibility என்ற அடிப்படையில் மேலும் சில சேரிகளை எடுத்துக்கொண்டு, அங்கு மாற்றங்களைக் கொண்டுவந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

செப்டம்பர் 2008-ல் நான் எழுதிய பதிவு இது. இதிலிருந்து தொடங்கிய உறவில், பைரவன் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.

Wednesday, November 11, 2009

கண்டுபிடிப்பாளர் டேவிட்

வெகு நாள்களாகவே பேரா. சுவாமிநாதன், பல சுவாரசியமானவர்களைப் பற்றி சொல்லிக்கொண்டு வருகிறார். பாலசுப்ரமணியம் B+ என்று ஒருவர். பிறகு டேவிட் என்று ஒருவர். இரு நாள்களுக்கு முன், “டேவிட் ஹைதராபாதிலிருந்து வருகிறார், எல்லோரும் சந்திக்கலாமே” என்றார். நான் என் வீடியோ கேமராவைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டேன்.

டேவிடுக்கு இப்போது 63 வயதாகிறது. பாதி தமிழர். அவரது தந்தை கர்நாடக மாநிலத்தில் மருத்துவராக இருந்தார். ஆனால் தாய் ஆந்திராவைச் சேர்ந்த, எழுதப் படிக்கத் தெரியாதவர். டேவிடுக்கு நான்கு வயதாகும்போது அவரது தந்தை இறந்துவிட, தந்தை வழி உறவினர்கள் சொத்தைப் பிடுங்கிக்கொண்டு, டேவிடின் குடும்பத்தை நடுத்தெருவுக்கு விரட்டிவிட்டனர். அடுத்த சில ஆண்டுகள் அனாதை இல்லம் ஒன்றில் தங்கி சில ஆண்டுகள் பள்ளிப் படிப்பைப் படித்த டேவிட், பின் தன் 11 வயதில் ஏதோ வேலை செய்து பிழைக்க ஆரம்பித்தார். படிப்புக்கு முழுக்கு.

ஆனால், டேவிட் கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு புதிய புதிய கருவிகளை உருவாக்க ஆரம்பித்தார். சில கருவிகளைக் எடுத்துக்கொண்டு NRDC என்ற அரசு அமைப்பிடம் எடுத்துக்கொண்டு செல்ல, அவர்கள் அப்போது ஐஐடி டெல்லியில் பேராசிரியராக இருந்த சுவாமிநாதனிடம் அந்தக் கண்டுபிடிப்புகளை மதிப்பிட அனுப்பிவைத்துள்ளனர்.

ஆனால், டேவிடின் பல கண்டுபிடிப்புகள் பிறரால் எடுத்துக்கொள்ளப்பட்டு, டேவிட் பல முறை ஏமாற்றப்பட்டுள்ளார். இருந்தும், பல ஆண்டுகள் உழைப்பின் பலனாக அவர் பல பேடண்டுகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த இரு தினங்களாக அவர் சென்னையில் இருந்தது, புதிய ஒரு பேடண்ட் பதிவு செய்வதற்காக.

இப்போது, ஹைதராபாத் ஐஐஐடியில் Engineering Technology and Innovation Centre (ENTICE) மையத்தில் கண்டுபிடிப்பாளராக வேலை செய்கிறார். பள்ளிப் படிப்பையே முடிக்காத ஒருவருக்கு இந்தியக் கல்வி/ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் திறமையின் அடிப்படையில் வேலை கொடுத்திருக்கிறார்கள் என்பதே நல்ல விஷயம்.

கீழே உள்ள வீடியோவை நேரம் கிடைக்கும்போது பாருங்கள். டேவிட் இப்போது கவனம் செலுத்தும் சில கண்டுபிடிப்புகள்: குறைந்த செலவாகும், சூரிய ஒளியில் இயங்கும் கதிர் அறுக்கும் இயந்திரம், கிராமப்புறங்களில் மாடுகளைக் கொண்டு மின்சாரம் உருவாக்குதல், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் நெசவு இயந்திரம், குறைந்த திறனில் இயங்கும் மின்விசிறி, இன்னும் பல.


Watch An interaction with TJ David, inventor and innovator (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch An interaction with TJ David, inventor and innovator (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

Monday, November 09, 2009

ஆர்.கே.சண்முகம் செட்டியார் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீடு

சென்ற மாதம், அக்டோபர் 26-ம் தேதி அன்று கோவை இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த ‘ஆர்.கே.சண்முகம் செட்டியார்’ வாழ்க்கை வரலாறு வெளியானது. அது தொடர்பான சிறு வீடியோ துண்டும், முழு வீடியோ துண்டும் கீழே. சிறு துண்டு, யூட்யூப் மூலமும், முழு துண்டு veoh மூலமும் கிடைக்கும்.

புத்தகத்தை வாங்க






Watch Launch of a Tamil biography of RK Shanmugam Chettiar (26 October 2009) in Family  |  View More Free Videos Online at Veoh.com

உபுண்டு 9.10 லினக்ஸ் இயக்குதளம்

இரண்டு நாள்களுக்கு முன், என் வீட்டில் ஒரு கணினியில் உபுண்டு 9.10 லினக்ஸ் இயக்குதளத்தை நிறுவினேன். அந்தக் கணினி என் மகளுடையது. அதில் பழையகாலக் குறுவட்டுகள் பலவும் செயல்படவேண்டும் என்ற காரணத்தால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 98-ஐத் தாண்டி வேறு ஒன்றையும் நிறுவியதில்லை. ஆனால் வரவர என் மகளுக்கு அந்தக் குறுவட்டுகள்மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள், ஃபயர்ஃபாக்ஸ் உலாவி போன்றவை விண்டோஸ் 98-ஐப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டன. எனவே வேறு வழியின்றி, புதிய இயக்குதளம் ஒன்றை நிறுவிவிடலாம் என்று முடிவுசெய்தேன்.

மைக்ரோசாஃப்ட் வழியே செல்லலாமா அல்லது லினக்ஸுக்குத் தாவலாமா? கணினியைப் பயன்படுத்தப்போவது நான் அல்ல. என் மகள்தான். அவளுக்கு வசதியானதாக இருக்கவேண்டும். ஒலி, ஒளி, திரைப்பட விசிடி/டிவிடி ஆகியவை சரியாக இயங்கவேண்டும். சரி, எதற்கும் உபுண்டுவை நிறுவிப் பார்த்து, சரியாக இருந்தால் விட்டுவைக்கலாம்; இல்லாவிட்டால் மைக்ரோசாஃப்ட் இயக்குதளம் ஒன்றை வாங்கிவிடலாம் என்று முடிவெடுத்தேன்.

1992 முதலேயே அவ்வப்போது கணினியில் லினக்ஸ் இயக்குதளங்களை நிறுவி, பயன்படுத்தி வந்துள்ளேன். ஸ்லாக்வேர், டெபியன், ரெட் ஹேட், மாண்ட்ரேக், ஃபெடோரா எனப் பலவற்றைப் பயன்படுத்தியுள்ளேன். அவை அனைத்திலும் எனக்கு ஏதேனும் குறைகள் தென்பட்டபடியே இருந்துவந்தன. ஆனால் உபுண்டு 9.10 அனைத்தையும் மாற்றிவிட்டது. இணையம் மூலமாகவே சுமார் 700 MB நிறுவுபடிமத்தை இறக்கிக்கொண்டேன். அதை குறுவட்டு ஒன்றில் எழுதி, கணினியில் நிறுவத்தொடங்கினேன். அதிக நேரம் எடுக்கவில்லை. மைக்ரோசாஃப்ட் போல வெட்டித்தனமான படங்காட்டுதல்கள் குறைவு.

இயக்குதளத்தை முழுவதுமாக நிறுவிமுடித்ததும், புதிய மென்பொருள் பொதிகளை இறக்கி, நிறுவுவது அத்தனை எளிதாக உள்ளது. முதலில் ஒலி சரியாக இயங்கியது. இசைக் குறுவட்டுகளைச் சரியாக இயக்க ஒரு பொதியைத் தேடி நிறுவினேன். நன்றாக வேலை செய்தது. விசிடி சரியாக இயங்கவில்லை. வி.எல்.சி பிளேயரை நிறுவியபின் ‘திருவிளையாடல்’ சினிமாப் படத்தைப் போட்டுப் பார்த்தேன். சரியாக வரவில்லை. கோடுகளாகவே தெரிந்தது. ஒலியும் தெளிவாக இல்லை. இதைமட்டும் பின்னர் கவனிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். ஃபயர்ஃபாக்ஸ் 3.5 இருந்தது. அதில் அடோபி ஃபிளாஷ் நிறுவவேண்டி இருந்தது. அதுவும் மிக எளிதாக நிறுவிக்கொண்டது. முன்னெல்லாம் தனியாக இறக்கி, ஷெல்லிலிருந்து சில காரியங்களைச் செய்யவேண்டும். அப்படியான தேவைகள் ஏதும் இன்றி உபுண்டுவின் ‘பொதி நிறுவி’ மிக அழகாக இதைக் கையாளுகிறது.

இதைத் ‘தமிழ்க் கணினி’யாக நான் நிறுவவில்லை. தமிழ் படிக்கமுடிந்தால் இப்போதைக்குப் போதும். அது முடிகிறது. ஆனால் கிரந்த எதிரியாக உள்ளது. ‘ஷ’ முன்னால் உள்ள எழுத்து ஒன்றின்மேல் ஏறி நின்றுகொண்டிருக்கிறது. அதைத் தவிர உபுண்டு உடன் வரும் தமிழ் எழுத்துரு அதிகப் பிரச்னை தரவில்லை. தமிழில் எழுதுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை இனிதான் கவனிக்கவேண்டும். இந்தக் காரணத்துக்காகவாவது என்.எச்.எம் ரைட்டர் மென்பொருளை, லினக்ஸ் மற்றும் உலாவியில் வேலை செய்யுமாறு மாற்றவேண்டியிருக்கும்:-)

ஈமாக்ஸ் 23-ஐ நிறுவினேன். சில ‘சி’ நிரலிகளை எழுதிப்பார்க்க வசதியாக இருக்கும். வெகு நாள்களுக்குப் பிறகு சில ‘சி’ புரோகிராம்களை எழுதி கம்பைல் செய்து, இயக்கிப் பார்த்தேன். கொஞ்சம் ஞாபகம் இருக்கத்தான் செய்கிறது. ஈமாக்ஸ் எடிட்டரில் நிறைய மாறுதல்கள் இருந்தாலும் அடிப்படைக் கட்டளைகள் மாறவில்லை.

எந்தப் பள்ளிக்கூடத்துக்கும் சிறுவர்களது கணினிக்கும் உபுண்டு 9.10 இயக்குதளத்தை சிபாரிசு செய்வேன். மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்களை விட எளிமையாக, இயல்பாக வேலை செய்யும் வகையில், குறைந்த திறன் கொண்ட கணினிகளையும் இயக்கும் வகையில் உருவாகியுள்ளது உபுண்டு 9.10. வீடியோ சிடிக்களை இயக்குவதில் என்ன பிரச்னை என்பதை மட்டும் கொஞ்சம் ஆராயவேண்டி உள்ளது. அதைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.

சென்னையில் இருக்கும் யாருக்காவது உபுண்டு 9.10 வேண்டும் என்றால், நகல் எடுத்துத் தரத் தயாராக உள்ளேன்.

Thursday, November 05, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 14: எமோஷனல் இண்டெலிஜென்ஸ் பற்றி சோம.வள்ளியப்பன்

இட்லியாக இருங்கள். இந்தத் தலைப்பு பயங்கர காண்ட்ரவர்ஷியலானது. சோம.வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தை எழுதிக் கொடுத்து, பா.ராகவன் அதனை எடிட் செய்து முடித்தபின், தலைப்பு என்ன வைப்பது என்ற விவாதம் தொடங்கியது. எமோஷனல் இண்டெலிஜென்ஸ் என்றால் யாருக்கும் புரியாது என்று ராகவன் முடிவு செய்தார். என்ன பெயர் வைப்பது என்பதே பெரிய சண்டையாகி, கடைசியில் வாயில் நுழைவதுபோல ஒரு பெயர் வேண்டும் என்று யாரோ சொன்னார்கள். வாயில் நுழைவது என்றால் இட்லி அல்லது வடை என்றுதான் வைக்கவேண்டும் என்று யாரோ சொல்லியிருக்கவேண்டும். இட்லி என்பதே எமோஷனல் இண்டெலிஜென்ஸின் ‘அடை’மொழியானது. இதன் காரணமாக புத்தகத்தின் தலைப்பு ‘இட்லியாக இருங்கள், இட்லி சாப்பிடுங்கள்’ என்று மாறியது. புத்தகத்தின் உள்ளேயும் இட்லி நுழைந்தது. இட்லி நுழைந்த காரணத்தால் இட்லி மாவு வந்தது.

ஆனால் வாங்குபவர்களுக்குப் பெரிய குழப்பம். இது என்ன சமையல் புத்தகமா? இந்தப் புத்தகம் விற்காது என்று பலர் நினைத்தனர். ஆனால் புத்தக விற்பனை தொடர்ந்தது. பிறகு ‘இட்லி சாப்பிடுங்கள்’ என்ற பகுதி தலைப்பிலிருந்து விடுபட்டது. ஆனாலும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு புத்தகத்தை விற்பது எளிதாக இல்லை. கடைசியாகப் புத்தகம் வாங்கிய ஒருவர் கூட, “நீங்க குஷ்புவைப் பத்தியா இந்தப் புத்தகத்துல சொல்றீங்க?” என்று கேட்டுவிட்டார்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பை மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். எமோஷனல் இண்டெலிஜென்ஸ் என்றால் தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்று தமிழ் ஆர்வலர்கள் சிந்திக்கட்டும். என்ன பெயராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இந்தக் கருத்தாக்கம் நம் மக்களுக்கு அவசியமானது.

ஆஹா FM 91.9 MHz-ல் நடந்த பாட்காஸ்டை இங்கேயே கேட்க:



தரவிறக்கம் செய்துகொள்ள

சோம.வள்ளியப்பனின் அனைத்துப் புத்தகங்களையும் வாங்க

ஆடியோ புத்தகமாக வாங்க

***

14 வாரங்கள் தொடர்ச்சியாக வந்த இந்த பாட்காஸ்டுக்குச் சென்ற வாரம் (1 நவம்பர் 2009) விடுமுறை. மீண்டும் 8 நவம்பர் 2009 முதல் 15-வது வார நிகழ்ச்சி தொடர்கிறது. சித்த மருத்துவம் பற்றிய நிகழ்ச்சி. மருத்துவர் அருண் சின்னையா, தீனதயாளனுடன் பேசுகிறார். அலோபதி மருத்துவத்துக்கும் சித்த மருத்துவத்துக்கும் என்ன வித்தியாசம்? சாதாரண நோய்களுக்கு இரண்டு மருத்துவமுறைகளும் எப்படி வெவ்வேறு வகையில் சிகிச்சைகளை மேற்கொள்கின்றன? சித்த மருந்துகள் எப்படி உருவாக்கப்படுகின்றன? அவற்றை வீட்டிலேயே செய்யமுடியுமா? நம் நாட்டில் கிடைக்கும் விதவிதமான கீரைகளுக்கு என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன? அவற்றை உட்கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? எதுபோன்ற நோய்களை எதிர்கொள்ளலாம்? போன்ற பலவற்றைப் பற்றியும் உரையாடல் இருக்கும்.

நரம்பியலும் கலை ஆர்வமும் - VS ராமச்சந்திரன்

இங்கு Neurology என்பதை நரம்பியல் என்கிறேன். பயந்துவிட வேண்டாம். இதுதான் உலகப் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர், மருத்துவர், யுனிவெர்சிடி ஆஃப் கலிஃபோர்னியாவின் உளவியல், நரம்பியல் துறையின் மூளை மற்றும் கற்றல் மையத்தின் இயக்குனர் விலையனூர் ராமச்சந்திரன் பேசப்போகும் பேச்சின் தலைப்பு.

நாம் ஏன் கலையை ரசிக்கிறோம்? இந்திய சிற்பக் கலையிலோ, ஓவியக் கலையிலோ அப்படி என்னதான் உள்ளது? நம் கண்கள் அவற்றைப் பார்த்து, மூளைக்கு என்ன சிக்னல்களை அனுப்புகின்றதன? மூளை எதனை உணர்ந்து ஒரேயடியாக அகமகிழ்ந்து போகிறது?

உலக அளவில் உள்ள எல்லாவிதமான கலைகளுக்கும் என்று ஏதேனும் அடிப்படை ஒற்றுமை உள்ளதா? சாதாரண ஒரு கேமரா பிடிக்கும் படம் எல்லாம் கலை என்ற வகையில் சேருமா? நம் மூளை ஒரு சாதாரண ஓவியத்தை எப்படி உணர்கிறது? ஆனால் அதே நேரம் ஒரு மாமல்லபுரம் சிற்பத்தையோ பிகாஸோ ஓவியத்தையோ பார்க்கும்போது மூளை எப்படி உணர்கிறது?

இதைப் பற்றியும், மேலும் பல விஷயங்களைப் பற்றியும் பேச உள்ளார் டாக்டர் ராமச்சந்திரன். இவர் கீநோட் பேச்சு கொடுக்காத இடமே இல்லை. இவரைப் பாராட்டாத ஆட்களே இல்லை. உதாரணத்துக்கு, பரிணாம உயிரியல் மேதை ரிச்சர்ட் டாக்கின்ஸ், ராமச்சந்திரனை நரம்பியல் மருத்துவத்துறையின் மார்க்கோ போலோ என்று பாராட்டியுள்ளார். ராமச்சந்திரன் எழுதியுள்ள Phantoms in the Brain என்ற புத்தகம் மிகவும் புகழ்பெற்றது. அதைப்பற்றியும் அவருடன் நானும் பலரும் கலந்துகொண்ட ஒரு உரையாடலைப் பற்றியும் நான் முன்னர் எழுதிய பதிவு இதோ.

இந்த சுவையான பேச்சு நடக்க இருக்கும் நேரம் மாலை 5.30 மணி, நாள்: சனிக்கிழமை 7 நவம்பர் 2009, இடம்: காந்தி ஸ்டடி செண்டர், தக்கர் பாபா வித்யாலயா பின்புறம், அமைப்பு: தமிழ் பாரம்பரியக் குழுமம்.

இது தொடர்பாக மேற்கொண்டு தகவல் வேண்டும் என்றால் நீங்கள் என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம். (98840-66566)

பெங்களூரு புத்தகக் கண்காட்சி

நாளை 6 நவம்பர் 2009 முதல் 15 நவம்பர் 2009 வரை பெங்களூருவில், பேலஸ் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

கிழக்கு பதிப்பகம், 165-166 கடை எண்களில் இருக்கும். கிழக்கு, வரம், நலம், ப்ராடிஜி, மினிமேக்ஸ் ஆகியவற்றின் வெளியீடுகளான தமிழ்ப் புத்தகங்களும், ஒலிப்புத்தகங்களும், நியூ ஹொரைஸன் மீடியாவின் ஆங்கில, மலையாளப் புத்தகங்களும் கிடைக்கும்.

தொடர்புக்கு: காளி பாண்டியன், 095000-45608

Monday, November 02, 2009

கிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம் - ஒலிப்பதிவு

இங்கேயே கேட்க:



தரவிறக்கம் செய்துகொள்ள.
.

கிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம் - வீடியோ

29 அக்டோபர் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடைபெற்ற கூட்டத்தின் வீடியோ கீழே.

இது veoh.com தளத்தில் உள்ள plug-in கொண்டு பார்த்தால்தான் சரியாகத் தெரியும்.

எப்போதும் சொல்வதுபோல இப்போதும் disclaimer: இதை ஏன் youtube-ல் போடவில்லை, இதை ஏன் யாஹூ!வில் போடவில்லை என்பவர்களுக்கு. Youtube-ல் 10 நிமிடத்துக்கு உட்பட்ட துண்டுகளை மட்டுமே போடமுடியும். யாஹூ!வில் 350 MB-க்கு உட்பட்ட துண்டுகளை மட்டுமே போடமுடியும். அதிக நீளம் கொண்ட துண்டுகளைச் சேர்க்க என்ன செய்யவேண்டும் என்று Youtube ஆட்களிடம் கேட்டிருக்கிறோம் - முயற்சி செய்கிறோம். அதுவரை வாசகர்கள் பரிந்துரைக்கும் வேறு எந்த இடத்திலும் என்னால் இதனைச் சேர்க்கமுடியாது. அதற்கான நேரம் என்னிடம் இல்லை. வேண்டுபவர்கள், விரும்புபவர்கள், இந்தத் துண்டுகளை veoh.com தளத்திலிருந்து இறக்கிக்கொள்ள முடியும். அவர்கள் பின்னர் இவற்றைத் துண்டு துண்டாக நறுக்கி வேறு எங்கெல்லாம் போடமுடியுமோ, செய்துகொள்ளலாம். இது Creative Commons Attribution 2.5 India License உரிமம் வகையைச் சேர்ந்தது. இதற்கென நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் அனுமதி வாங்கவேண்டிய தேவையில்லை.


Watch Climate Change and Global Warming (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Climate Change and Global Warming (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

Sunday, November 01, 2009

இந்தியாவின் புதிய வளமை ஏற்படுத்தியுள்ள முரண்

பேராசிரியர் சுனில் கில்னானி இன்று மாலை (ஞாயிறு, 1 நவம்பர் 2009), ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ராமசாமி அய்யர் அமைப்பு அரங்கத்தில் “இந்தியாவின் புதிய வளமை ஏற்படுத்தியுள்ள முரண்” என்ற தலைப்பில் பேசுகிறார். (பேச்சு ஆங்கிலத்தில் இருக்கும்.)

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இடம்: சி.பி.ராமசாமி அய்யர் ஃபவுண்டேஷன் ஆடிட்டோரியம், 1, எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018
நேரம்: மாலை 4.30 மணி

மேற்கொண்டு தொடர்பு கொள்ள: சத்யா (98840-65630)

சுனில் கில்னானி பற்றி: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஸ்டார் ஃபவுண்டேஷன் பேராசிரியராகவும் தெற்காசியத் துறையின் இயக்குனராகவும் இருக்கிறார். இவர் எழுதியுள்ள புத்தகங்கள்:

* The Intellectual Left in Postwar France (Yale, 1993, German translation 1995)
* Civil Society: History and Possibilities (with Sudipta Kaviraj: Cambridge, 2001)
* The Idea of India (3rd Edition, Penguin, 2003)

தற்போது இவர் ஜவாஹர்லால் நேரு பற்றியும், இந்தியாவில் குடியாட்சி முறையின் வரலாறு பற்றியும் ஆராய்ச்சி செய்துவருகிறார். அவை தொடர்பாகப் புத்தகங்கள் எழுதும் முயற்சியிலும் இருக்கிறார்.