இந்திய தேசியம் என்ற கருத்தாக்கம் எப்போது ஏற்பட ஆரம்பித்தது என்று அறுதியிட்டுக் கூறமுடியுமா என்று தெரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் என்று ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம், தாதாபாய் நௌரோஜி ஆகியோர் காங்கிரஸ் கட்சியை 1885-ல் ஆரம்பித்தபோதா? நிச்சயமாக அப்போது இந்திய தேசியம் என்ற கருத்தின் ஆரம்பமாவது இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பெயர் கட்சியின் முன்னொட்டாக இருந்திருக்க முடியாது. 1857 கலவரங்களின்போது நிச்சயமாக அந்தக் கருத்து நிலையாக இருந்திருக்க முடியாது. எனவே இந்த இரு ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில்தான் அந்த எண்ணம் வலுப்பெற்றிருக்கவேண்டும்.
தேசிய உணர்வு என்பது ஒருவர்மீது திணிக்க முடியாதது. ஏதோ ஓர் இனம் புரியாத, தெளிவில்லாத, ஆனால் பெருமையைப் பறைசாற்றுகிற ஓர் உணர்வுதான் தேசியம். ‘நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்றால் எதற்காக அந்தப் பெருமை என்று பிறரிடம் சொல்லத் தெரியாவிட்டாலும், அந்தப் பெருமை உணரப்படவேண்டும். ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்பது இன்று முற்றிலும் உண்மை அல்ல என்றாலும், அப்படி ஒருவர் உணரவேண்டும்; அல்லது வருங்காலத்தில் ஒரு நாள் (எந்த அடிப்படையிலாவது) உலகிலேயே மிகச் சிறந்த நாடாக இந்தியா ஆகும் என்ற நம்பிக்கை இருக்கவேண்டும். அந்த ஏற்றத்துக்கு ஒரு துரும்பையும் கிள்ளி எறியாவிட்டாலும், இந்தியாவை தன் முதுகில் ஏற்றிச் சுமந்து மலை உச்சிக்கே கொண்டு சென்றதுபோன்ற, வெட்டி முறித்ததுபோன்ற ஓர் உணர்வு ஒருவரிடம் இருக்கவேண்டும்.
ஆனால் இதெல்லாம் 1885-ல் சாத்தியமாகியிருக்காது. அப்படியென்றால் அந்தக் காலகட்டத்தில் இந்திய தேசியம் என்றால் என்ன பொருளாக இருந்திருக்க முடியும்?
ஆரியவர்த்தம், புண்ணிய பூமி, வேதங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, புண்ணிய நதிகள், புண்ணியத் தலங்கள், சிந்து-சரஸ்வதி நாகரிகம், என்றும் உயிர்ப்புடன் இருக்கும் இந்து மதம், சமஸ்கிருதம் என்ற அற்புதமான மொழி, கலை, அறிவியல், இசை ஆகியவற்றில் பிரம்மாண்ட வளர்ச்சி, பிரமிக்க வைக்கும் கட்டடங்கள், வளமான நகரங்கள், அவற்றில் கொட்டிக் கிடந்த செல்வம், அதை வெட்டிச் செல்ல முயன்ற அந்நியப் படையெடுப்புகள், அந்தப் படையெடுப்புகளையும் மீறி, செல்வமும் கைவினைத் திறனும் செழித்த பாரதவர்ஷம்.
இவற்றை ஒருவர் முன்வைக்கலாம். ஆனால் இதையே அனைவரும் ஏற்க முடியுமா? இந்தியாவுக்கு வந்து இதையே தன் நாடாக வரித்த முஸ்லிம்களால் முடியவில்லை. அவர்களைப் பொருத்தமட்டில், இந்து மதம் அழிக்கப்படவேண்டியது. பல நூற்றாண்டுகளாக அவர்கள்தான் (டெல்லியில்) ஆட்சியில் இருந்தனர். அவர்களது கட்டடக் கலை, அவர்களது மசூதிகள், அவர்களது மொழி (பாரசீகமும் அரபியும் கலந்த உருது), அவர்களது இசை என்பது மேலே சொன்ன பலவற்றிலிருந்தும் வேறுபட்டது மட்டுமின்றி, மேலே சொன்ன பலவற்றுக்கும் எதிரானதும்கூட.
அதைப்போலவேதான் திராவிடம் என்னும் கருத்தாக்கமும். இந்து மதத்தின் மிகச் சிறந்த புனிதக் கருத்துகளின் அடிநாதமே வர்ண முறையும், அதன் விளைவாக தெற்கில் ஏற்பட்ட பிராமண x சூத்திர போராட்டங்களும், தீண்டாமைப் பிரச்னையும்.
ஆரியம் x திராவிடம்
சமஸ்கிருதம் (அல்லது அதன் பினாமியான இந்தி) x தமிழ்
பிராமணர்கள் x சூத்திரர்கள்
மனு நீதி x திருக்குறள் நீதி
என்ற எதிர் எதிர் நிலைகள் உருவாக்கப்பட்டு, திராவிடர்கள் (அல்லது ஆதி தமிழர்கள்) காக்கப்படவேண்டும், ஆரிய மாயையிலிருந்து விடுபட வேண்டும், பிராமண ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும், மனுவின் அநீதிக்கு பதில் குறளின் சமதர்ம நீதி முன்வைக்கப்படவேண்டும் என்று சில சூத்திரங்கள் உருவாயின.
இதுவும் குறிப்பிட்டு எந்த ஆண்டில் தோன்றியது என்று எனக்குத் தெரியாது. நிச்சயமாக 19-ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கவேண்டும். நீதிக் கட்சி, பெரியாரின் திராவிட இயக்கம், பின்னர் உருவான அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை இந்த சூத்திரங்களை முன்வைத்தன.
இதில் பெரியாரின் பங்கு கணிசமானது. திராவிடம் என்பதற்கான வலுவான தத்துவார்த்தப் பின்னணியை உருவாக்கியவர் அவர்தான். அது பெரும்பாலும் எதிர்மறைக் கருத்துகளால் ஆனது. திராவிடம் சிறந்தது என்பதை நிரூபிப்பதற்கு பதில் ஆரியம் மோசமானது என்று காட்டிவிட்டால் போதும். திராவிடம் மோசமானது என்று யாராவது ஓர் உதாரணத்தைக் காட்டினால், ஆரியம் அதைவிடவும் மோசமானது என்று இன்னோர் உதாரணத்தைக் கொண்டு நிரூபித்தால் போதும். ஆரியம், சமஸ்கிருதம் என்றால் வேதம், புராணம் என்று இந்திய தேசியவாதிகள் சொன்னால், அவற்றையே எடுத்துக்கொண்டு, புராண நாயகர்கள் எப்படி மோசமானவர்கள் என்று விளக்கிவிடலாம்.
புராணங்கள் அனைத்திலும் ஆபாசத்தைத் தேடி, பதிப்பித்தபின், பெரியாரின் அடுத்த குறி பிராமணர்கள் மீதாக இருந்தது. மூட நம்பிக்கைகளை விதைத்தல், அப்பாவி மக்களை ஏமாற்றுதல், சோம்பேறிகளாக, உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கடவுளின் இடைத்தரகர்கள் என்று தங்களைக் காட்டிக்கொண்டு, அப்பாவி சூத்திரர்கள் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பை உறிஞ்சி, உண்டு கொழுத்தவர்கள் என்பதோடு மட்டுமின்றி, இந்த பிராமணர்கள், வாய்ப்பு கிடைத்தவுடனேயே ஆங்கிலேயர் கொண்டுவந்த கல்வியைக் கற்று வளமான மாத வருமானம் கொடுக்கும் அரசு வேலைகளை தம் சதவிகிதத்துக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாமல் பெருமளவு பிடுங்கிக்கொண்டனர். அத்துடன் மெரிட் என்ற கருத்தை முன்வைத்து தமது செல்வாக்கு சரியாமல் பார்த்துக்கொண்டனர். இதை எதிர்க்கவேண்டியது பெரியாரின் முக்கிய வேலையானது.
புராணங்களை எதிர்ப்பது போலவே இங்கும், பிராமணர்கள் போற்றுவதெல்லாம் இழிசெயல்களாகக் காட்டப்பட்டன. பிராமணர்கள் தங்களைத் தனித்துக் காட்டிக்கொள்ள பூணூல், பூஜை புனஸ்காரம், நடை, உடை, பாவனை, பேச்சு, வழக்கு ஆகியவற்றை உயர்ந்தவையாகக் காட்டினால் அவையே இழிந்தவையாக கேரிகேச்சர் செய்யப்பட்டன. இதில் பெரியாரும் அவரது தொண்டர்களும் பெருவெற்றி பெற்றனர் என்றே சொல்லலாம்.
பிராமணர்-சூத்திரர் போராட்டம் இட ஒதுக்கீடு என்னும் புள்ளியில் வந்து நின்றது. இட ஒதுக்கீடு என்பது இடைக்காலத் தீர்வு மட்டுமே. அதன்மூலம் ஓரளவுக்குத்தான் பிரச்னைகள் தீருமே தவிர, முழுமையான சாதிக் கலப்பு ஏற்பட்டால்தான் இந்தப் பிரச்னை தீரப்போகிறது. அதற்கு இன்னும் இரு அல்லது மூன்று நூற்றாண்டுகள் ஆகலாம். இதில் தீண்டாமைப் பிரச்னை என்பதற்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை. இன்றுவரை தொடர்கிறது.
சமஸ்கிருதம் (இந்தி) என்ற மொழிக்கு எதிரான போர் எளிதில் முடியவில்லை. இன்றுவரை தொடர்கிறது.
இந்திய சுதந்தரத்துக்கு முன்னாவது, இந்திய தேசியவாதிகள் ஓரளவுக்கு சமரசம் செய்துகொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். ஆனால்
சுதந்தரத்துக்குப் பின், முரட்டுத்தனத்தை மட்டுமே முன்வைத்தனர். ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் இந்தி வெறி இன்றுவரை கபில் சிபலின் இந்தி வெறியில் வந்து நிற்கிறது. இன்றைய 2009-லும் மக்களவை செக்ரடேரியட், ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியாது என்று மறுக்கும் நிலை உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் இன்னும் பல தலைவர்கள் ஓங்கிக் குரல் கொடுத்தால் மட்டுமே இந்த அநீதி ஓயும். மக்களாகிய நாமும் இதற்கு நம் பங்கைச் செலுத்தவேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பெரும்பாலான அநீதிகளை ஒழித்துவிட்டது. அனைவருக்குமான சம உரிமைகள், சிறுபான்மையினருக்கு அதிகபட்ச உரிமை போன்ற லிபரல் கருத்துகள்தான் இந்தியாவில் புழங்குகிறது. ஆனால் நீதி பரிபாலனம் என்பதில், நீதிபதிகள் எப்படி நீதியை நிறுத்து வழங்குகிறார்கள் என்பதில் திராவிடம் அதிக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதுவும் நாளடைவில் மாறவேண்டிய ஒன்றுதான்.
ஆரிய, சமஸ்கிருத புராணங்களை எதிர்க்கும்போதுதான் பகுத்தறிவு என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆரியம் என்றால் மூட நம்பிக்கை. எனவே அதற்கு மாற்றான திராவிடம் என்றால் பகுத்தறிவு. ஆனால், இன்றுவரை மூட நம்பிக்கை ஒழிப்பு என்பது மாறிவிடவில்லை. பெரியார் அனைத்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும் பெரும்பான்மைத் தமிழர்கள் வசதியாக ராகு காலம், எம கண்டம் போன்ற ஆரிய மூட நம்பிக்கைகளை மட்டும் கேலி செய்துவிட்டு, இப்போது வாஸ்து, ஃபெங் ஷூயி, நேமாலஜி, ஜெம்மாலஜி என்று வெளுத்துக்கட்டுகிறார்கள்.
திராவிடக் கருத்தாக்கம், இந்திய தேசியக் கருத்தாக்கத்தை முற்றிலுமாகச் சிதைத்து ஒழித்துவிடவில்லை. மாறாக, இந்திய தேசியத்தை பெருமளவு செழுமைப்படுத்தியுள்ளது. அதன் முரட்டுத்தனங்களை முடிந்த அளவு குறைத்து, ஐரோப்பிய லிபரல் கருத்தாக்கத்தை நோக்கிச் செல்ல வைத்துள்ளது. அதுதான் திராவிடத்தின் வெற்றி என்று கொண்டாடவேண்டும். இனியும் தொடர்ந்து இந்திய தேசியத்தைச் செழுமைப்படுத்தி, சிறுபான்மை மக்களின் நலன்கள் நசுக்கப்படாதவாறு காப்பதிலும், தீண்டாமையை ஒழிப்பதிலும், அனைத்து இந்திய மொழிகளுக்கு சம உரிமை கிடைப்பதிலும்தான் திராவிடத்தின் முழு வெற்றியும் இருக்கப்போகிறது. பெரியாரின் முழு வெற்றியும் கூட.