மிகச்சில நாடுகளிடம் மட்டுமே விண்வெளிக்குக் கலங்களை அல்லது செயற்கைக்கோள்களை அனுப்பும் திறன் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பியக் கூட்டமைப்பு, இந்தியா. அவ்வளவுதான்.
அமெரிக்காவின் நாசா தவிர, அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் சிலவும் களத்தில் உள்ளன. போயிங், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள யூ.எல்.ஏ (யுனைடெட் லாஞ்ச் அல்லயன்ஸ்), எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், ஜெஃப் பேசோஸின் நிறுவனமான ப்ளூ ஆரிஜின் ஆகியவை இவை. இதில் ஸ்பேஸ் எக்ஸ் மிகவும் முக்கியமானது.
விண்வெளிக்குப் பல காரணங்களுக்காக ராக்கெட்டுகளை ஏவலாம்.
- உயரம் அதிகமில்லாத சுற்றுகளுக்குச் செயற்கைக் கோள்களை அனுப்புதல்
- ஜியோஸ்டேஷனரி சுற்றுக்கு (புவியிணைச் சுற்று) செயற்கைக் கோள்களை அனுப்புதல்
- சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சரக்குகளை அனுப்பி, அங்கிருந்து பூமிக்கு மீண்டு வருதல்
- சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆட்களை அனுப்புதல், அவர்களை மீண்டும் பூமிக்குக் கொண்டுவருதல்
- நிலவுக்கு ஆளில்லாக் கலத்தை அனுப்புதல்
- நிலவுக்கு ஆட்களை அனுப்புதல்
- நிலவு தாண்டி செவ்வாய் கிரகத்துக்குக் கலத்தை அனுப்புதல்
- வால் நடசத்திரம் போன்றவற்றில் ஆளில்லாக் கலத்தை இறக்குதல்
- செவ்வாய்க்கு ஆட்களை அனுப்புதல், மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்குக் கொண்டுவருதல்
அமெரிக்காவின் நாசாதான் இதில் பெரும் கில்லாடியாக இருந்தது. நிலவுக்கு ஆட்களை அனுப்பி, அவர்களைப் பத்திரமாக மீட்டு வருவது, செயற்கைக் கோள்களைச் சர்வ சாதாரணமாக அனுப்புவது, சூரியக் குடும்பத்தின் கோள்களை எல்லாம் தெளிவாக ஆராய விண்கலங்களை அனுப்புவது, மற்றொரு கிரகத்தில் ஒரு வண்டியைக் கீழே இறக்கி அதை இயக்குவது என்று அவர்கள் ஏகப்பட்டதை சாதித்துவிட்டார்கள்.
ஆனால் சமீப காலங்களில் நிதிப் போதாமை காரணமாக அவர்கள் பல முயற்சிகளிலிருந்து பின்வாங்கியுள்ளனர். வணிகரீதியிலான செயற்கைக் கோள்களை நாசா இனியும் அனுப்பவதில்லை. அவர்களுடைய ராணுவ செயற்கைகோள்களைக்கூட அவர்கள் யு.எல்.ஏ மூலமாகத்தான் அனுப்புகிறார்கள். நாசாவுடனான ஒப்பந்தத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ்தான் சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவுப் பொருள்களைக் கொண்டுசெல்கிறது.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆட்களைக் கொண்டுசெல்ல, அமெரிக்கா, ரஷ்யாவின் உதவியையே நாடுகிறது. இக்காரியங்களைச் செய்துவந்த நாசாவின் கலங்கள் செயலிழக்கம் செய்யப்பட்டுவிட்டன.
வணிகரீதியிலான செயற்கைக்கோள்களைப் பொருத்தமட்டில் ஸ்பேஸ் எக்ஸ் மிக வேகமாக முன்னணிக்கு வந்துள்ளது. குறைந்த செலவில் இவர்கள் ராக்கெட்டுகளை அனுப்புவதே காரணம். சீனாவும் இந்தியாவும் இந்தப் போட்டியில் தற்போது இறங்கியுள்ளன. இந்தியாவைவிட சீனா சற்றே முன்னிலையில் உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். ஸ்பேஸ் எக்ஸின் எலான் மஸ்க்குடைய வாழ்க்கை வரலாறு ஒன்றைச் சமீபத்தில் படித்து முடித்தேன். அந்தப் புத்தகத்தில் இந்தியா என்ற வார்த்தையே இல்லை! அவர்கள் தங்களுடைய போட்டியாளர்களாக சீனாவை மட்டுமே கருதுகிறார்கள்.
இந்தியாவின் பி.எஸ்.எல்.வியால் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களையே மேலே கொண்டுசெல்ல முடியும். இந்தியாவின் கிரையோஜெனிக் எஞ்சின் நுட்பம் மேலும் மேம்படவேண்டும். கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்திய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டால்தான் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவியிணைச் சுற்றுக்கு அனுப்ப முடியும்.
இம்மாதம் 27-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், ஜிசாட் 6 செயற்கைக்கோளை புவியிணைச் சுற்றுக்கு அனுப்ப உள்ளது.
பல பில்லியன் டாலர் வருமானம் வரக்கூடிய இத்துறையில் இந்தியாவின் இஸ்ரோ, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸுடனும் சீனாவுடனும் போட்டியிட்டு முன்னிலைக்கு வரவேண்டுமானால் இதற்கான நிதி ஒதுக்கீடை மத்திய அரசு குறைந்தபட்சம் இரட்டிக்கவேண்டும். கூடவே, அமெரிக்காவைப் போல இந்தியத் தனியார் துறையின் பங்களிப்பையும் அதிகரிக்கச் செய்யவேண்டும்.
ஸ்பேஸ் எக்ஸ் போன்ற ஒரு தனியார் நிறுவனமே, செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்புவதைத் தன் முக்கிய நோக்கமாகக் கொண்டு அதை நோக்கித் தன் ஆராய்ச்சியைச் செலுத்துகிறது. செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி என்ன சாதிக்கப்போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கும்கூட அதில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அதை முயற்சி செய்யும்போது கிடைக்கும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவையாக அமையும். இந்தத் தொழில்நுட்பங்களை விலைக்கு வாங்கிவிட முடியாது. யாரும் விற்க மாட்டார்கள். நாமேதான் இவற்றைக் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இஸ்ரோவின் ஆகஸ்ட் 27 ஜி.எஸ்.எல்.வி ஏவுதலுக்கு வாழ்த்துகள்!