1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு மிக மோசமானது அஇஅதிமுகதான் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்துவந்திருக்கிறோம். அவ்வகையில் இம்முறை திமுகதான் வெற்றிபெறவேண்டும். ஆனால் நிலைமை வெகுவாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன்.
கடந்த தேர்தல்களின்போது பிற சிறு கட்சிகளெல்லாம் திமுக, அஇஅதிமுக இருவரில் எவருடன் சேர்வது என்பதில்தான் குறியாக இருந்தனர். கூட்டணி உடன்படிக்கைகள் வெகு சீக்கிரமாக நடந்தேறிவிடும். பேரம் சரியாகப் படியாதபோது சில கட்சிகள் கோபம்கொண்டு தனித்து நிற்பது வழக்கம், அல்லது தேர்தலையே புறக்கணிப்பதும் நடக்கும். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை விஜயகாந்தின் தேமுதிக மட்டும்தான் திமுக, அஇஅதிமுக இரண்டையும் விட்டு விலகி தனித்து நின்று தங்கள் வாக்குகளைப் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால் அதுவும் 2011-ல் அஇஅதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததுடன் அழிந்துபோனது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக, பாமகவுடனான கூட்டணியால் தேமுதிகவுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. அஇஅதிமுகவின் அதிரடி அரசியலுக்கு தேமுதிக தன் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் இழந்தது.
இந்நிலையில்தான் மதிமுக, விசி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நால்வரும் திமுகவுடனும் அஇஅதிமுகவுடனும் கூட்டணி அமைப்பது தங்கள் கட்சிகளுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு ஒப்பானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டன. இவ்விரு பெரும் கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதால் தத்தம் கட்சிகளை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல; ஆட்சியில் எவ்விதத்திலும் பங்கு கிடையாது; கூடவே அரசின் திட்டங்களில் எந்தவிதத்திலும் தாக்கம் செலுத்தமுடியாது. ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கலாம். கிடைக்கும் ஓரிரு எம்.எல்.ஏ இடங்களை வைத்துக்கொண்டு அது தரும் வசதிகளை அனுபவித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கலாம்; அவ்வளவுதான்.
பாமகவும் இதனைப் புரிந்துகொண்டது என்றாலும், அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்ற பரப்புரையில் இறங்கி பிற சிறு கட்சிகளிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தது. மேலும் விசி-பாமக விரிசல், வெளிப்படையான தலித் எதிர்நிலைப் பிரசாரம் ஆகியவை அக்கட்சிக்கான ஆதரவுத் தளத்தைக் குறுக்கியது.
மக்கள் நலக் கூட்டணியின் தற்போதைய நான்கு கட்சிகளுக்கும் ஒருவிதத்தில் முன்னோடி தேமுதிகதான். ஆனால் இன்றுவரை தேமுதிக குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. தேமுதிக, தமாக இரண்டும் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்திருந்தால் உண்மையிலேயே மிகப்பெரிய எதிர்ப்பு சக்தியை தமிழகத்தில் உருவாக்கியிருக்க முடியும். மக்கள் நலக் கூட்டணியினர் இதனை உருவாக்கப் பெரிதும் முயன்றார்கள். ஒத்துழைக்க மறுத்தது விஜயகாந்த்தும் வாசனும்தான்.
***
தமிழகத்தில் ஊழலை ஆரம்பித்துவைத்தது கருணாநிதி என்றால் அதைப் பெரிதும் வளர்த்தது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவுமே. கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா செய்த மாபெரும் சாதனை ஊழலை முழுமைப்படுத்தி, மையப்படுத்தி, ஒழுங்குபடுத்தியது. அதாவது முன்பெல்லாம் லஞ்சம் கொடுக்காமல் சில செயல்கள் நடக்கலாம். இடையிடையே பலர் காசு பார்க்கலாம், சில அமைச்சர்கள், செயலர்கள் காசு வாங்காமலும் சில செயல்களைச் செய்யலாம். ஆனால் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஒழுங்குபடுத்தப்பட்டு, எந்தெந்தச் செயல்களுக்கு எவ்வளவு வாங்கவேண்டும் என்று ரேட் கார்ட் நிர்ணயிக்கப்பட்டு, இதிலிருந்து சிறிதும் வழுவாமல் செயல்படவேண்டும் என்று ஆணை விதிக்கப்பட்டு, சேர்க்கப்பட்ட பணம் எப்படிப் பிரித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் வழிமுறை தரப்பட்டிருக்கிறது. இது தமிழகம் கண்ட மாபெரும் புதுமை.
அஇஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகிய பழ.கருப்பையா இதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் ஊடக நேர்காணல்களில் யாரும் அவரிடம் இதுகுறித்துக் கேள்விகள் கேட்கவே இல்லை. அவரைக் குடைந்து மட்டம் தட்டுவதிலேயே நேரம் போய்விட்டது. ஊழல் மலிந்த தேசம் என்பதைத் தாண்டி, ஊழலால் நெறிப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை, வாழ்க்கைமுறை என்று ஆகியிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொதுமக்கள் உணரவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பைசாகூட லஞ்சம் தராது ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் தராது வாங்கப்பட்ட பொது நூலக ஆணை என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது தரப்பட்ட சாலை போடும் ஒப்பந்தம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என்று எவரும் இல்லை. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், ஒவ்வொரு நியமனத்திலும் இலக்கு வைத்து அமைச்சர்கள்முதல் அதிகாரிகள்வரை விரட்டப்பட்டிருக்கின்றனர். முதல்வருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோதே இதுதான் நம் மாநிலத்தில் நடந்துகொண்டிருந்தது.
அஇஅதிமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் துளிக்கூட மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
***
அப்படியென்றால் திமுகவுக்கு வாக்களிக்கலாமே என்ற இயல்பான கேள்வி எழுகிறது. அப்படித்தானே இதற்குமுன்புவரை செயல்பட்டுக்கொண்டிருந்தோம்? இந்தக் கட்சிமீது கோபம் என்றால் அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சிமீது கோபம் என்றால் இந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதுதானே நடைமுறை? கிட்டத்தட்ட இரு கட்சி ஜனநாயகம்தானே தமிழகத்தில் நடந்துகொண்டிருந்தது?
கவனமாகப் பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் திமுக என்னும் கட்சி சுருங்கிக்கொண்டிருக்கிறது என்பது புரியவரும். சென்றமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது அது தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையைப் பெறவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிப்பதைக் காரணம் காட்டி, கூட்டணி ஆட்சி இல்லாமலேயே தமிழகத்தில் காங்கிரஸின் ஆதரவில் திமுக ஆட்சி நடத்தியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக எந்த அளவுக்குப் பலவீனமாக ஆகியுள்ளது என்பது மேலும் தெரியவந்தது.
ஆனாலும் இந்தப் பலவீனத்தை வெளிக்காட்டாமல், தாங்கள் தனித்து ஆட்சியைப் பிடிப்போம், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே திமுக தலைமை பேசியது. அஇஅதிமுக ஊழல் செய்கிறது என்றால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த அனைத்துக் கட்சிகளும் தாமாக முன்வந்து உதவவேண்டும் என்று இறுமாப்புடன் எதிர்பார்த்தது திமுக. தன் பலத்தை அதிகமாக மதிப்பிட்டு, பிற கட்சிகளைக் கேவலமாகப் பார்த்ததன் விளைவுதான் மக்கள் நலக் கூட்டணி உருவானது. இன்றுவரை மக்கள் நலக் கூட்டணியை ‘அஇஅதிமுக பி டீம்’, ‘ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியவர்கள்’ என்று தூற்றுவது மட்டும்தான் திமுகவின் எதிர்வினையாக இருந்துவருகிறது.
மதிமுக, விசி, கம்யூனிஸ்டுக் கட்சிகள் திமுகவிடமிருந்து விலகி நிற்க வலுவான காரணங்கள் உள்ளன. ஆனால் மக்களாகிய நாம் திமுகவிடமிருந்து விலகி நிற்கக் காரணங்கள் உள்ளனவா?
திமுக இதுவரை பயணித்துவந்த பாதையிலிருந்து மாறி வேறுமாதிரியான ஆட்சியை அளிக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் நமக்கு இதுவரையில் கிட்டவில்லை. எப்போதெல்லாம் தாம் ஆட்சியில் இருக்கிறோமோ அப்போது தமிழகத்துக்கு நன்மை செய்வதாகவும் அஇஅதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்துக்குத் தீமை செய்வதாகவும் சொல்வது திமுகவினரின் வாடிக்கை. அப்படியானால் ஏன் மக்கள் ஒவ்வொரு முறையும் திமுகவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்துள்ளனர்? ஏன் அஇஅதிமுகவுக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்?
திமுகவின் தலைமை உண்மையில் யார் கையில் உள்ளது? கருணாநிதியின் பங்களிப்பு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்? ஏன் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சி முழுமையான கட்டுப்பாட்டைத் தரவில்லை? திமுகமீதான ஊழல் குற்றச்சாட்டுகள், நில அபகரிப்பு வழக்குகள் உண்மையில்லை, பொய்யாகப் புனையப்பட்டவை என்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. புதிய ஆட்சியில் இம்மாதிரியான ஊழல்கள் தொடரா என்பதற்கான சான்றுகளும் இல்லை. புதிய சிந்தனை, தமிழகத்தை மேலெடுத்துச் செல்ல புதிய திட்டங்கள் என்று எவையும் திமுகவிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கட்சி என்பதற்காகவே வாக்குகள் தாமாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்துவிடும் என்ற அவர்களுடைய தன்னம்பிக்கை நமக்கு ஆச்சரியத்தையே தருகிறது.
***
பாமகவின் அன்புமணியின் பேச்சில் தெரியும் தெளிவும் சிந்தனையும் எனக்குப் பிடித்துள்ளது. ஆனால் அந்தக் கட்சி தனித்து நிற்பதாலும் அதன் கடந்த சில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இந்தத் தேர்தலில் பாமக அதிகம் சாதிக்க முடியாது. காங்கிரஸ் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் செல்லும். பாஜக பெரும்பாலும் தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் அல்லது தனித்து நிற்கும் என்று தோன்றுகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் இருவருமே தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. அதற்கான சிந்தனையும் இவர்களிடம் இல்லை; பலமும் இல்லை. தேமுதிக, தன் நிலையைத் தெளிவாக்காமல், எங்கே ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பதாலேயே தற்போதைக்கு நிராகரிக்கவேண்டிய கட்சியாக உள்ளது.
***
விலக்கவேண்டியவர்கள் அனைவரையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்பது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. இக்கூட்டணியில் இருப்போர் எல்லோரும் உத்தமமா என்று கேட்கலாம். கடந்த காலங்களில் திமுக, அஇஅதிமுக இருவருடனும் மாறிமாறிக் கூட்டணி வைத்தவர்கள்தானே இவர்கள், அப்போது தெரியவில்லையா திமுக, அஇஅதிமுகவினரின் ஊழல்பற்றி என்று கேட்கலாம். பாஜகவின் மதவாதம் பற்றிப் பேசுபவர்கள், மதிமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்ததே என்றும் குற்றம் சாட்டலாம். அந்தவகையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்குமே ஒருவர் வாக்களிக்க முடியாது. இருக்கும் வாய்ப்புகளில் எது சிறப்பானது என்பதைப் பரிசீலித்து வாக்களிப்பதே சரியானதாக இருக்கும்.
அவ்வகையில் இப்போதைக்கு என் கண்ணில் படுவது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. அதன் உறுப்புக் கட்சிகளில் பலவற்றின் நிலைப்பாடுகளுடன் நமக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லாமல் போகலாம். உதாரணமாக, கம்யூனிஸ்டுகளின் பொருளாதாரக் கொள்கை எனக்கு ஏற்புடையது கிடையாது. ஆனால் இப்படிப் பார்த்துக்கொண்டே போனால் ‘நோட்டா அல்லது வீட்டோடு கிட’ என்பதுதான் பதிலாக வரும்.
மக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உண்டா? ஜெயித்தால் யார் முதல்வர் ஆவார் போன்ற கேள்விகளை சிலர் கேட்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியைப் பொருத்தமட்டில் முழுப் பெரும்பான்மையுடன் ஜெயிக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியில் செய்ததுபோல, திமுக, அஇஅதிமுக இருவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்து, மக்கள் நலக் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் கிடைத்தாலே போதும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக கெஜ்ரிவாலை காங்கிரஸ் ஆதரித்ததுபோல, திமுக, அஇஅதிமுக இரண்டில் ஒரு கட்சி மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கலாம். குறைந்தபட்சம், தேர்தலுக்குப்பின் மக்கள் நலக் கூட்டணி ஆதரவுடன்தான் யாராக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் அதுவே மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
***
மக்கள் நலக் கூட்டணியும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஆத்மி என்பது ஒற்றைக் கட்சி. மக்கள் நலக் கூட்டணி என்பது தற்போதைக்கு நான்கு கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணி. இவர்கள் நால்வரும் தேர்தலுக்குப் பிறகு (அல்லது தேர்தலுக்கு முன்னமேகூட) பிரிந்துபோய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? பிரிந்து திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோரிடம் விலை போய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
மிக நியாயமான கேள்விகள். இங்கு trust, personal integrity ஆகியவற்றைத்தான் நாம் அலசிப் பார்க்கவேண்டும். வேறு எந்தக் குறைகள் இருந்தாலும் நம்பிக்கை, தனிநபர் நாணயம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வைகோ ஆகியோரை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.
இவர்கள் ஒரு கூட்டாக, ஒரே அணியாக தங்கள் குழுவை தேர்தலுக்குப் பின்னான பேச்சுவார்த்தைகளிலும் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். அப்போது தனிநபர் ஆதாயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் தங்கள் கூட்டணியின் நலனையும் மாநிலத்தின் நலனையும் மட்டுமே முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். தேர்தலுக்குப்பின் திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோருடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி நடத்தவேண்டிவந்தால் குறைந்தபட்சச் செயல் திட்டத்தின் அடிப்படையில் அது இருக்குமாறும், தனிநபர் துதிக்காக அரசின் பணம் விரயமாவதைத் தடுக்குமாறும், ஊழலற்ற ஆட்சி அமையுமாறும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
என் நம்பிக்கை நிறைவேறுமா, வீண்போகுமா என்று தெரியாது. ஆனால் ஏதோவொரு நம்பிக்கையை முன்வைத்துத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்களிக்கவேண்டியிருக்கிறது. முக்கியமாக திமுக, அஇஅதிமுக ஆகியோர் பெறக்கூடிய இடங்களை வெகுவாகக் குறைத்து, மக்கள் நலக் கூட்டணி பெறக்கூடிய இடங்களை அதிகரித்தால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலையை, அதாவது முழுப் பெரும்பான்மை இல்லாது குறைந்தபட்சச் செய்லதிட்டத்தின் அடிப்படையிலான, ஊழலற்ற ஒரு கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதை, அடைய முடியும்.
எனவேதான் மக்கள் நலக் கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.
மந்தை வாக்காளர்கள் - அதாவது கட்சியின் அனுதாபிகள் - திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய தத்தம் கட்சிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்கள். அவர்களை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குழம்பும் நடுநிலை வாக்காளர்களை நோக்கியே இந்தப் பதிவு.
வாக்குகள் வீணாகப்போய்விடக்கூடாது என்ற அபத்தமான ஒரு கருத்தாக்கம் தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது நாம் ஒருவருக்கு வாக்களிக்க, அவர் தோற்றுப்போய்விட்டால் நாம் நம் வாக்கை வீணாக்கிவிட்டோம் என்று நினைக்கும் மனநிலை. ஜெயிப்பவருக்கே நம் வாக்கு போகவேண்டும் என்ற மனநிலை.
இது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள். உபயோகமற்ற ஒருவருக்கு வாக்களிப்பது நம்மை எந்தவிதத்திலும் பெருமைப்படுத்தாது. நீங்கள் வாக்களித்து ஜெயிக்கவைத்த ஒருவர்தான் அஇஅதிமுக இந்த அளவுக்கு ஊழல் செய்யக் காரணமாக இருந்திருக்கிறார். இது நம்மைச் சிறுமைப்படுத்தத்தான் வேண்டும். எனவே நாம் வாக்களிக்கப்போகும் ஒருவர் தேர்தலில் ஜெயிக்கப்போகிறாரா அல்லது தோற்கப்போகிறாரா என்பதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். நாம் விரும்பும் கூட்டணியை ஜெயிக்கவைக்க இன்னும் எத்தனை பேரை நம் தரப்புக்கு மாற்றுவது என்று சிந்தியுங்கள்.
***
இம்முறை நம் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்குப் போகட்டும். தமிழகம் நல்ல மாற்றத்தைச் சந்திக்க உதவுவோம்.