Tuesday, April 15, 2014

மோதியை ஆதரிப்பவர்கள் யார் யார்?

தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி கணிசமான வாக்குகளைப் பெறும். எவ்வளவு இடங்களைப் பெறும் என்பது தெளிவாக இல்லை. 5 முதல் 7 இடங்கள் இருக்கலாம் என்று கணிக்கிறேன்.

எப்படி இருந்தாலும் மிகக் கணிசமான, இதுவரை இல்லாத அளவு அதிகமான வாக்குகள் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும். இது தேமுதிகவின் வாக்குகளா, பாமகவின் வாக்குகளா அல்லது மதிமுகவின் வாக்குகளா? என் கருத்தில் கிடைக்கப்போகும் பெரும்பான்மை வாக்குகள் நரேந்திர மோதிக்காகக் கிடைக்கப்போகும் வாக்குகளே.

இவையெல்லாம் இந்துத்துவ வாக்குகளா என்றால் கட்டாயமாக இல்லை. சொல்லப்போனால் இந்த வாக்குகளை அளிக்கப்போகும் பெரும்பான்மை மக்களுக்கு இந்துத்துவம் என்றால் என்னவென்றே தெரியாது.

இணையத்திலும் எழுதிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர் அவர். அவர் பெயரைக் குறிப்பிடுவதில் அவருடைய இமேஜுக்கு சிக்கல்கள் நேரலாம். சேலத்தில் இளநீர் விற்கும் பாட்டி, ஆட்டோ ஓட்டுபவர் ஆகியோரெல்லாம் மோதிக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார். ஏன் என்பதற்கு பதில், ‘மோதி வந்தால் நாட்டில் நல்ல மாற்றம் ஏற்படும்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையா, நிஜமாகவே நல்ல மாற்றம் ஏற்படுமா என்பதற்கு இப்போது பதில் சொல்ல முடியாது. ஆனால் தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் பலரும் இதை நம்ப ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் செய்தியே. பத்திரிகைகள் ஊதிப் பெருக்கியதாலோ வேறு எதனாலோ இது இப்படி ஆகியிருக்கலாம். ஆனால் இவை வாக்குகளாகவும் மாறப்போகின்றன என்பதுதான் நிதர்சனம்.

நான் கடந்த பல நாட்களாகச் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் நபர்களிடமெல்லாம் இது குறித்துப் பேசிவருகிறேன். மோதிக்கு வாக்களிக்கவேண்டும் என்று விரும்பும் பொதுவான மக்கள் குழுக்கள் இப்படிப்பட்டவையாக இருக்கின்றன:

(1) முதல்முறை வாக்காளர்கள்: கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஆண்கள். இவர்கள் மோதியின் வருகையால் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும், தங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று உள்ளூர நம்புகிறார்கள். ஒரு பொறியியல் கல்லூரியில் பேசும்போது மேடையில் இருந்தபடியே யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டதற்கு, மோதிக்கு என்று மிக அதிகமானோர் கை தூக்கினர். பத்து பத்து பேராகத் தனியாகப் பேசும்போதெல்லாம், அதில் ஐந்து பேருக்குமேல் மோதிக்கு வாக்களிக்கப்போவதாகச் சொன்னார்கள். கல்லூரி செல்லும் பெண்களிடம் பேசுவதற்கு எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்வே அவர்கள் எப்படி வாக்களிக்கப்போகிறார்கள் என்பதுகுறித்து அறுதியாகச் சொல்ல முடியாது.

(2) மத்திய வர்க்க மாதச் சம்பளக்காரர்கள்: சாதி வித்தியாசம் பாராமல், பல புதிய வாக்குகள் இந்தப் பகுதியில் மோதிக்குக் கிடைக்க உள்ளது. வேறு வாய்ப்புகள் இல்லையென்றால் இவர்கள் மாறி மாறி திமுக, அஇஅதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடியவர்கள். ஆனால் இம்முறை இதில் பலர் மோதி (எனவே பாஜக கூட்டணி) என்று முடிவெடுத்துள்ளனர்.

(3) அடிமட்ட நிலையில் இருப்பவர்கள்: இதுதான் எனக்கு மிகவும் ஆச்சரியம் தந்தது. இவர்கள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வண்டி ஓட்டுநர்கள், கறிகாய் விற்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என்று சிலரிடம் பேசிப் பார்த்ததில் கிடைத்த பதில் ஆச்சரியமாக இருந்தது. பாரம்பரியமாக திமுக, அஇஅதிமுக கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் நிறையப் பேர் அப்படியே தொடர்ந்து செய்யப்போகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் இம்முறை தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு, பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கப்போவதாகச் சொன்னார்கள். அதாவது அவர்கள் பரிசோதனை முயற்சியாகத் தங்கள் வாக்குகளை மோதிக்குத் தருவதாக முடிவு செய்துள்ளனர்.

இதனாலெல்லாம் தமிழகத்தின் பாஜக கூட்டணியின் எண்ணிக்கை பெரிதாக மாறிவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பெரியார் மண், அது இது என்றெல்லாம் தரப்படும் பில்ட்-அப் எந்தவிதத்திலும் வேலை செய்யப்போவதில்லை. மக்கள் governance மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மோதி ஆட்சிக்கு வந்தால் governance உருப்படியாக இருக்கும், பொருளாதாரம் வளம் பெறும், அதன்மூலம் தங்களுக்கும் வளம் கிடைக்கும் என்று ஏதோ ஒரு வகையில் அவர்கள் நம்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மக்கள் நினைப்பது ஒருவேளை நடக்கலாம் அல்லது மக்கள் ஏமாற்றம் அடையவும் செய்யலாம். ஆனால் தேர்தலுக்குமுன் மக்கள் தங்களுடைய இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் கருதவில்லை.

இன்னும் எட்டு நாட்கள்தான் பாக்கி.

Wednesday, April 02, 2014

மகேந்திரன் பாதை

ஞாயிறு அன்று நாங்கள் 40 பேர் மகேந்திரவர்மப் பல்லவனின் சில குகைக் கோயில்களைப் பார்த்துவிட்டு வரச் சென்றோம். திட்டம் வேறாக இருந்தாலும், இறுதியில் வல்லம், தளவானூர், சிங்கவரம், மண்டகப்பட்டு, பனமலை ஆகிய ஐந்து இடங்களுக்கு மட்டுமே போக முடிந்தது. இதில் பனமலை, ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. சிங்கவரம் மகேந்திரன் காலத்ததா என்பதில் சந்தேகம் உள்ளது. பிற்பட்டதாக இருக்கலாம்.

வல்லத்தில் மூன்று குகைக் கோவில்கள் உள்ளன. முதல் இரண்டு, மகேந்திரனின்கீழ் ஆட்சி நடத்திய கந்தசேனன் என்பவனால் 7-ம் நூற்றாண்டில் கட்டுவிக்கப்பட்டது. இதில் சிவனுக்கான கோவில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. அதைச் சுற்றி சிமெண்ட், செங்கல், இரும்புக் கம்பி கட்டடங்கள் உருவாகி, குகைக் கோவிலின் அழகைக் குலைத்துள்ளன. சிவனுக்கான கோவிலின் இரு பக்கமும் கணபதி, ஜேஷ்டா தேவி உருவங்கள் பிறைகளில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை பிற்காலத்தில் செய்யப்பட்டிருக்கவேண்டும். இங்குள்ள துவாரபாலகர் சிற்பங்கள் மிக மிக அருமை. (படங்கள் கீழே)

   

விஷ்ணுவுக்கான கோவில் சற்றுத் தள்ளி உள்ளது. கருவறை உள்ளே இருக்கும் வழிபடுமூர்த்திகள் - விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி - பிற்காலத்தவை.



இந்த இடத்தின் முக்கியத்துவம் ஆரம்பகாலத் தமிழ் எழுத்துகளில் காணப்படும் மிக அழகான ஒரு கல்வெட்டு. “பகாப்பிடுகு லளிதாங்குரன் சத்துருமல்லன் குணபரன் மயேந்திரப்போத்தரேசரு அடியான் வயந்தப்பிரி அரேசரு மகன் கந்தசேனன் செயிவித்த தேவகுலம்” என்று அதில் எழுதியுள்ளது.

மூன்றாவது, 12-ம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கனால் குடையப்பட்ட கோவில். கந்தசேனனின் சிவன் கோவிலுக்கு நேர் கீழே உள்ளது. அதன் துவாரபாலகர் சிலைகள் பெருமளவு சிதைய ஆரம்பித்துவிட்டன. இந்த இடம் இப்போது பயனற்றுக் கிடக்கிறது.

தளவானூர் குகைக் கோவில், மகேந்திரனே நேரடியாகக் கட்டுவித்தது. மிக அழகான முகப்பு. மகர தோரணங்கள். மேலே கபோதத்தில் ஐந்து கூடுகள். கூட்டில் காணப்படும் தலை ஒவ்வொன்றும் வித்தியாசமான அலங்காரங்கள் கொண்டதாக இருக்கின்றன. இங்கும் மிக அழகான துவாரபாலகர்கள், வெளி வாயிலிலும், பின்னர் உள்ளே கருவறைக்கு முன்பாகவும்.


இந்த இடத்தின் முக்கியத்துவம், இங்கே வெளிப்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சமஸ்கிருதச் செய்யுளும் அதன் நெருக்கமான தமிழ் மொழிபெயர்ப்பும். இந்தக் கல்வெட்டு எழுத்துகள் இப்போது பெரும்பாலும் மங்கிவிட்டன.

சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பது:
    தண்டநாத மகேந்திரேன நரேந்திரேனைச காரித:
    சத்ருமல்லேன சைலேஷ்மின் சத்ருமல்லேஸ்வராலய:
செல்லன் சிவதாசன் என்பவன் இதன் தமிழாக்கத்தை எழுதிப் பொறித்திருக்கிறான்:
ஸ்ரீ தொண்டையன் தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டன் என்பால் மிகமகிழ்ந்து கண்டான் ச மிக்க வெஞ்சிலையான் சத்ருமல்லேஸ்வரர் ஆலயம் என்று அரனுக்கு இடம் ஆக அங்கு.
இது தவிர நந்திவர்மப் பல்லவனின் ஒரு தமிழ்க் கல்வெட்டும் இங்கு உள்ளது.

மண்டகப்பட்டு, மிகப் பிரசித்தி பெற்றது. மகேந்திரவர்மன் முதன்முதலாக இந்தக் கோவிலைத்தான் வெட்டியிருக்கவேண்டும் என்பதை அவனுடைய கல்வெட்டிலிருந்து புரிந்துகொள்ளலாம். (சமஸ்கிருதம், கிரந்த எழுத்துகளில்)
    ஏதத் அனிஷ்டகம் அத்ருமம் அலோஹம் அசுதம்
    விசித்ரசித்தேன நிர்மாபிதம் ந்ருபேன
    ப்ரஹ்மேஸ்வர விஷ்ணு லக்ஷிதாயதனம்
அதாவது,
செங்கல் இல்லாமல், மரம் இல்லாமல், உலோகம் இல்லாமல், சுதை இல்லாமல், பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணுவுக்காகவென்று இந்தக் கோவில் விசித்திரசித்தனால் கட்டுவிக்கப்பட்டது.

நல்ல தடி, தடித் தூண்கள் இருக்குமாறு வெட்டுவிக்கப்பட்ட மண்டபம் இது. பிற்காலங்களில் தூண்களின் குறுக்களவு குறைந்து மெலிதாக ஆகத் தொடங்கின. இங்கு காணப்படும் துவாரபாலகர்களும் மிகப் பிரமாதம். நாகசாமி, இவர்களில் இடது பக்கம் உள்ளவரை கருடன் என்றும் வலதுபக்கம் உள்ளவரை மகா காலன் என்றும் சொல்கிறார்.

இந்த நான்கு ஜோடி துவாரபாலகர் படங்களும் கீழே:

   

வல்லம். வலதுபக்க வாயிற்காப்போன் கையில் ஒரு மின்விளக்கைக் கொடுத்து அசத்தியுள்ளனர்!

   

தளவானூர். மண்டபத்தின் முகப்பில் உள்ள வாயிற்காப்போர்

   

தளவானூர். கருவறைமுன் இருக்கும் வாயிற்காப்போர்

   

மண்டகப்பட்டு

சிங்கவரம், சயனத் திருமாலின் திருக்கோவில். ஆனால் அதனைச் சுற்றி பிற்காலத்தில் முழுமையான கட்டுமானக் கோவில் ஒன்று எழும்பிவிட்டது. ஆதிசேடன்மீது படுத்திருக்கும் போக சயனமூர்த்தி. காலடியில் பூதேவி. நாபிக்கமலத்தில் பிரம்மா. மதுவும் கைடபனும் ஆளுக்கொரு தடியுடன் அவரைத் தாக்க முனைகிறார்கள். கருடன் அவர்களை நோக்கிச் சைகை செய்கிறார். பிருகு, மார்க்கண்டேயர் திருமாலை வணங்கியபடி உள்ளனர். (உள்ளூர் புராணத்தின்படி இதில் ஒருவரை பிரகலாதன் ஆக்கிவிடுகிறார்கள். ஆகமப்படி இந்த இரண்டு இருடிகளும் பிருகு, மார்க்கண்டேயர் ஆகியோரே.) வெறும் குகைக் கோவில் மட்டும் இருந்த காலத்தில் கருவறையை ஒட்டிய சுவற்றில் மிக அழகான துர்கையைக் கண்டிருக்க முடியும். திரிபங்கத்தில் மிக ஒயிலாக துர்கை நின்றிருக்க, கீழே ஓர் அடியார் கைகூப்பித் தொழ, இன்னொருவர் தன் தலையை வெட்டிக் காணிக்கையாக்கத் தயாராக இருக்கிறார். [மாமல்லையில் ஆதிவராக மண்டபத்திலும் திரௌபதி ரதத்திலும் இதே போன்ற கொற்றவையைக் காணலாம்.] ஆனால் பின்னர் அமைக்கப்பட்ட கட்டுமானத்தில் துர்கையை ஒரு சிறு துவாரம் வழியாகக் குனிந்துதான் பார்க்க முடிகிறது. பெருமாளுக்கு ஏற்ற ஜோடியாகப் பின்னர் செய்விக்கப்பட்ட தாயாருக்கான சந்நிதி இந்த துர்கையை மறைத்துவிடுகிறது.

பனமலைக்கு நாங்கள் சென்றது மிக முக்கியமாக அங்கே இன்னமும் எஞ்சியிருக்கும் பல்லவர் கால ஓவியத்தைப் பார்வையிட. சிவன் ஊழி நடனம் செய்ய, உமை சற்றே ஒயிலாகக் காலை சுவற்றின்மீது சார்த்தி, கையில் குடையைப் பிடித்தபடி பார்வையிடுகிறாள். ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது. எனவே பார்க்க விரும்புவோர் உடனே சென்று பார்த்துவிடவும்.