காங்கிரஸ் எனும் பேரியக்கத்தில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று காங்கிரஸ் என்றாலே நேரு-காந்தி குடும்பம் (மஹாத்மா காந்தி இல்லை) என்று மக்கள் நினைக்குமளவுக்கு ஒரு குடும்பம் காங்கிரஸை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. இன்றும் கூட காங்கிரஸ் கட்சி அந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது.
நேரு-காந்தி குடும்பம் முன்னுக்கு வர வர, பிற தலைவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதுடன், புதிதாக வேறெந்தத் தலைவர்களும் வந்ததில்லை. விதிவசத்தால் உருவான விதிவிலக்கு நரசிம்ம ராவ்.
1991இல் ராஜீவ் காந்தி வெடித்துச் சிதறியிருக்காவிட்டால் நரசிம்ம ராவும் மற்ற இரண்டாம் நிலை காங்கிரஸ் தலைவர்களைப் போல காணாமல் போயிருப்பார். நேரு-காந்தி குடும்ப காங்கிரஸ் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் அவரவர்தம் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராகலாம், மாநில அமைச்சராகலாம், முதலமைச்சராகலாம், பாராளுமன்ற உறுப்பினராகலாம், மத்திய அமைச்சருமாகலாம். குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட கொள்கைகள் என்று எதுவும் தேவையில்லை. நாட்டுக்கு நல்லது செய்யவேண்டுமென்ற அவசியங்கள் எதுமில்லை. குடும்பத்தலைவர் தன் முகத்தைக் காட்டியே எப்பொழுதும் ஜெயித்து விடுவார். அல்லது தோற்றாலும், அடுத்த தேர்தலில் ஜெயம்தான்.
நரசிம்ம ராவும் ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினர் (1957), ஆந்திர மாநில அமைச்சர் (1962), ஆந்திர முதலமைச்சர் (1971), நாடாளுமன்ற உறுப்பினர் (1977), மத்திய அமைச்சர் (1980) என்று ஒரு நேர்மையான காங்கிரஸ் ஊழியனின் வழியில் வந்தவர். மத்திய அமைச்சராக இந்திரா காந்தியிடமும், ராஜீவ் காந்தியிடமும் வேலை பார்த்தவர். இன்றைய 'கோட்டரி' அமைச்சர்களைப் போல கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் தலையை விட்டவர் - இராணுவம், வெளியுறவு, மனிதவள மேம்பாடு (இதெல்லாம் கனமான துறைகள்!).
காங்கிரஸ் தோற்று வி.பி.சிங், சந்திரசேகர் பரிசோதனைகள் நடந்த நேரத்தில் நரசிம்ம ராவ் ஒதுக்கப்பட்டார். வயசும் எழுபதை நெருங்கிவிட்டது. சரி, ஹைதராபாத் போய் மிச்சமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்கலாம் என்று முடிவு செய்து 18 மாதங்கள் அரசியலிருந்து அஞ்ஞாத வாசம்.
1991-ல் திருப்பெரும்புதூர் வெடித்தது. துக்கம் அனுஷ்டித்த காங்கிரஸ் செயல்வீரர்கள், அடுத்து சோனியா காந்தியை தலைமையேற்கச் சொல்லி வற்புறுத்தினர். சோனியா அன்றும் தியாகம் செய்தார். சரி, பிள்ளைகள் வளரும் வரை ஏதாவது ஒரு பேராசை பிடிக்காத, சாகக் கிடக்கும் கிழத்தைக் கொண்டுவந்து ஆட்சியை நடத்திவிடுவோம் என்று நரசிம்ம ராவைக் கொண்டுவந்தனர்.
நரசிம்ம ராவ் கட்சியின் தலைவராகவும், சிறுபான்மை காங்கிரஸ் அரசின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் கூடக் கிடையாது. சொந்த மாநிலமான ஆந்திரம் தெலுகு தேசத்தின் கட்டுப்பாட்டில். கடந்தமுறை அவர் நாடாளுமன்றம் சென்றதே மஹாராஷ்டிர மாநிலத்தின் மேடக் தொகுதி வழியாகத்தான் - ஆந்திராவில் நின்றிருந்தால் நிச்சயம் டெபாசிட் கூட இழந்திருப்பார். நரசிம்ம ராவுக்கென்று வெளிப்படையான கோஷ்டி எதுவும் கிடையாது. அவர் சொல்வதை யாராவது கேட்பார்களா என்றுகூடத் தெரியாது. இந்தச் சிறுபான்மை அரசு இரண்டு-மூன்று வருடங்களாவது தங்குமா என்று தெரியாது. இந்த அரும்பெரும் தகுதிகள் இருந்த ஒரே காரணத்துக்காகத்தான் காங்கிரஸ்காரர்கள் அவரைக் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுத்தனர்.
முதலில் ஆட்சி அமைக்க வேண்டும். அதுவும் ஓரளவுக்கு நிலையான ஆட்சியாக இருந்தால் நல்லது. அதற்கு எதிர்க்கட்சிகளைக் குலைக்க வேண்டும். அவர்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைத் தகர்க்க வேண்டும். ஆந்திராவில் ஒரு காலத்தில் கோலோச்சிய ராவுக்கு இது ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை.
மற்றொருபுறத்தில் கஜானாவில் பைசா இல்லை. கிடுகிடுவென ஏறும் விலைவாசி, பணவீக்கம். எக்கச்சக்கமான அந்நியக் கடன். கடந்த பதினைந்து வருடத்தில் அரசின் நிதிப் பற்றாக்குறை எகிறிச் சென்றிருந்தது. கையில் தேவையான அந்நியச் செலாவணி இல்லை. யாராவது ஒரு கட்சிக்காரரை, அரசியல்வாதியை, குடும்பத்தின் அடிவருடி யாரையாவது நிதியமைச்சராக்குவதற்கு பதில் ஒரு திறமையான, அனுபவமிக்க, பொருளாதார நிபுணரை வற்புறுத்தி நிதியமைச்சராக்கினார். மன்மோகன் சிங் - இன்றைய பாரதப் பிரதமர். அவரை நிதியமைச்சராக்கியதோடு மட்டுமல்லாமல் அவர் செய்வதற்கு பலத்த எதிர்ப்பிருக்கும் என்று எதிர்பார்த்து, அந்த எதிர்ப்புகளை நீர்த்துப் போகச்செய்து அரசியல்வாதியில்லாத, அதனால் தடித்த தோலில்லாத மன்மோகன் சிங்கை வலிக்கும் வாய்ச்சொற்களிலிருந்து காப்பாற்றினார். இந்தியா வலிமையான பொருளாதார நாடாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்பொழுது இந்தியர்கள் எந்த அளவுக்கு மன்மோகன் சிங்கைப் புகழ்வார்களோ, அந்த அளவுக்கு நரசிம்ம ராவையும் புகழ வேண்டும்.
ஏப்ரல் 1992இல் ஹர்ஷத் மேஹ்தா பங்குச்சந்தை ஊழல் அம்பலமானது. தொடர்ச்சியாக பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே திண்டாடும் இந்தியப் பொருளாதாரம், பங்குச்சந்தை குழப்பத்தால் இன்னமும் தடுமாறியது. ஆனால் நிதியமைச்சரும், பிரதமரும் தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் பங்குச்சந்தை மீண்டு வந்தது. அப்பொழுதுதான் SEBI என்னும் பங்குச்சந்தைகளைக் கண்காணிக்கும் அரசு இயந்திரத்துக்கு நிறையச் சக்திகள் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு நெருக்கடியையும் சரியான முறையில் சமாளித்து அதையே சீர்திருத்தத்துக்கான நல்ல வாய்ப்பாக மாற்றினார் நரசிம்ம ராவ்.
ஒரு நெருக்கடி தீர்ந்தால் அடுத்ததைக் கொடுக்கத்தான் எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தனவே?
எப்படியாவது பாஜகவை முன்னுக்குக் கொண்டுவந்து, தான் பிரதமராகிவிடவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கும் லால் கிருஷ்ண அத்வானி அயோத்யா மீது சில நாள்களாகவே கண்வைத்திருந்தார். முதலில் விபி சிங் ஆட்சியை அடியோடு சாய்க்க தன் ரதத்தின் மேலேறி ஊர் சுற்றி, பிஹாரில் லாலு பிரசாத் யாதவால் கைது செய்யப்பட்டார். ஆனால் இம்முறை உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி. கல்யாண் சிங் ஆட்சி.
ராமர் பிறந்த இடம்-பாபர் மசூதி விவகாரம் பல வருடங்களாக நடப்பது. நரசிம்ம ராவ் 'இதுவும்' தன்னைக் 'கடந்து போகும்' என நினைத்திருக்கலாம். ஆனால் டிசம்பர் 1992இல் புயல் கரையைக் கடந்து விட்டது. வானர சேனை கையில் கடப்பாரையுடன் குதித்து தொழுகை நிறுத்திவைக்கப்பட்ட, சிதிலமடைந்து கொண்டிருந்த பாபர் மசூதி கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது. நரசிம்ம ராவ் முழுவதுமாகத் தடுமாறிய நேரம் இதுவாகத்தான் இருக்க முடியும். தொடர்ச்சியாக இந்தியாவில் பல மத வன்முறைகள். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, மார்ச் 1993இல் மும்பை முழுவதும் தொடர்ச்சியாக பல வெடிகுண்டுகள் வெடித்தன. சுதந்தர இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் என பிரச்னை மிகுந்த பகுதிகள் தவிர்த்து நாட்டுக்குள் நடக்கும் மிகப்பெரிய கலவரம் இது. இந்தக் கலவரமும் சில நாள்களில் ஓய்ந்தது.
அடுத்த நெருக்கடி ஜூலை 1993இல். எதிர்க்கட்சிகள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்க வேண்டும். நரசிம்ம ராவ் அர்த்த சாஸ்திர வழியில் சென்று இந்தத் தீர்மானத்தை முறியடித்தார். பணப்பெட்டிகள் பரிமாறப்பட்டு, (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டு, 14 வாக்குகள் அதிகமாக நரசிம்ம ராவ் அரசு தொடர்ந்தது. பின்னாள்களில் CBI நரசிம்ம ராவ் மீது வழக்கு கொண்டுவந்து, நரசிம்ம ராவ் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். ஆனால் நரசிம்ம ராவ் தன் மனத்தளவில், ஆட்சி நிலைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்திருக்கலாம்.
குற்றம் குற்றமே. ஆனால், சற்று யோசித்துப் பார்ப்போம். அந்த நேரத்தில் நரசிம்ம ராவ் ஆட்சி கவிழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்? ஒருவேளை பாஜக 1993இலேயே ஆட்சிக்கு வந்திருக்கலாம். அத்வானி பிரதமராகியிருக்கலாம். அந்நேரத்தில் பாஜகவுக்கு தாராளமயமாக்கல் கொள்கைகள் மீது எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை. அதனால் நிச்சயமாக மன்மோகன் சிங்-நரசிம்ம ராவ் கொள்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கும். ஆனாலும் நரசிம்ம ராவ் செய்தது சரிதான் என்று நான் இங்கு வாதாட வரவில்லை.
நரசிம்ம ராவ் ஆட்சி தொடர்ந்தது. 1994இல் அமெரிக்காவின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நரசிம்ம ராவ் பேசினார். இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்தத் தொடங்கிய மிக முக்கியமான நிகழ்வு இது. சோவியத் ரஷ்யா நொறுங்கிப்போன காலக்கட்டம் இது.
1994இல்தான் தேசியப் பங்குச்சந்தை தொடங்கியது. முழுக்க முழுக்க கணினி வழியாக நடந்த வெளிப்படையான இந்தப் பங்குச்சந்தை இன்று மும்பை பங்குச்சந்தையை வெகுவாகப் பின்னுக்குத் தள்ளி, பங்கு வர்த்தகம் வளர வகை செய்தது. ஊழல்கள் வெகுவாகக் குறையவும், பங்குகளில் விலையில் சில புரோக்கர்கள் தகிடுதத்தம் செய்வதைத் தடுக்கவும் பெரிதும் துணைபுரிந்தது.
1995-1996 வருடங்களில் நரசிம்ம ராவ் அரசுக்கு பெரிய தலைவலி ஒன்றும் வரவில்லை. வெளியுறவு, நிதிச் சீர்திருத்தம் ஆகியவற்றில் அவரது அரசால் கவனம் செலுத்த முடிந்தது. பல முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment) அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் (நேரு-காந்தி) குடும்பம், அந்நியர் ஒருவர் ஐந்து வருடங்கள் பத்திரமாக அரசை வழிநடத்திச் சென்றதை எதிர்பார்க்கவில்லை. நரசிம்ம ராவுக்கும் வயது 75ஐத் தொடவே, அவரும் மேற்கொண்டு தேர்தலில் ஈடுபட விரும்பவில்லை. கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். இப்பொழுதும் குடும்பத்தின் வாரிசுகள் வயசுக்கு வராத காரணத்தால், கட்சித் தலைவராக மற்றுமொரு சாகக் கிடக்கும் கிழவர் சீதாராம் கேசரி கொண்டுவரப்பட்டார்.
நரசிம்ம ராவ் அப்பழுக்கற்றவர் என்று சொல்ல முடியாது. 'மோசடி' சாமியார் சந்திரஸ்வாமியுடன் ராவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. விட்டால் புட்டபர்த்தி சாய்பாபா காலடியில் விழுந்து கிடப்பார்.
லக்குபாய் பாதக் என்னும் பிரிட்டன்-இந்திய ஊறுகாய் வியாபாரி ராவ் மத்திய அமைச்சராக இருந்தபோது தன் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு தான் செய்து கொடுப்பதாகச் சொன்ன காரியத்தைச் செய்யவில்லை என்று வழக்குத் தொடுத்திருந்தார். நீதிமன்றத்தில் ராவ் மீதான் குற்றத்துக்கு சரியான சாட்சியம் இல்லை என்று தீர்ப்பானது. நாம் ஏற்கனவே பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்ச வழக்கில் ராவ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. நரசிம்ம ராவின் பிள்ளை பிரபாகர ராவ் 1998இல் யூரியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பின் இந்த வழக்கில் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நரசிம்ம ராவின் மற்றொரு பிள்ளை ரங்கா ராவ் ஆந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் - சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலக் கல்வி அமைச்சராகவும் இருந்தவர். இவரும் தமிழ் நடிகர் ரஜினி காந்த் கொடுத்த புகாரின் பேரில் (2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக) 2001இல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கும் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை. நரசிம்ம ராவின் மற்றொரு மகன் ராஜேஷ்வர ராவும் ஆந்திர காங்கிரஸ் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். நரசிம்ம ராவின் பிற உறவினர்களும் (ஒரு மருமகன், அவர் பேரும் ராஜேஷ்வர ராவ்) சில ஊழல் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள்தான்.
நரசிம்ம ராவ் பன்மொழி அறிவு பெற்றவர். பதினேழு மொழிகளில் இவருக்குப் பேசவும், எழுதவும் தெரியும் என்று சொல்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. நான் இவர் தெலுகு, ஹிந்தி, ஆங்கிலம் எனும் மூன்று மொழிகள் பேசிக் கேட்டிருக்கிறேன். அவ்வளவே. நரசிம்ம ராவ் தன் ஓய்வு நாள்களில் "Insider" என்றதொரு புதினத்தை எழுதினார். அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் கடைசியில் இந்தப் புத்தகத்தில் அதிகமாக ஒன்றுமில்லை. பின்னர் "A Long Way" என்ற தன் பேச்சுக்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.
நரசிம்ம ராவ் ஆட்சியில் இருந்த காலம் முழுவதும் நான் அமெரிக்காவில் (ஆராய்ச்சி மாணவனாக) இருந்தேன். ஆனால் அவர் ஆட்சியின் காரணமாகத்தான் என்னால் இந்தியாவுக்கு வர முடிந்தது, தொழில்முனைவனாக முடிந்தது. அந்த வகையில் நரசிம்ம ராவ் எனக்கு மிகவும் பிடித்தமானவர். May his soul rest in peace.
[
இகாரஸ் பிரகாஷ் இரங்கல்]