ஊழலுக்கு அடுத்து இன்று பொதுத்தளத்தில் விரிவாகப் பேசப்படும் விஷயங்கள் இரண்டு: (1) அணு மின் நிலையங்கள் வேண்டுமா, வேண்டாமா. (2) சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாமா, வேண்டாமா.
அந்நிய நேரடி முதலீட்டைச் சற்றே அலசுவோம்.
இன்றைய சந்தைப் பொருளாதார முறையை எதிர்ப்பவர்கள் (இடதுசாரிகள்), கட்டாயமாக எல்லாவிதமான அந்நிய நேரடி முதலீட்டையும் எதிர்க்கிறார்கள். இது தத்துவார்த்த எதிர்ப்பு. அவர்களைப் பொருத்தமட்டில் சந்தைப் பொருளாதாரம் என்பதே மக்களுக்கு எதிரானது. எனவே எல்லா முதலாளிகளும் கெட்டவர்கள். தொழிலாளிகளை நசுக்குபவர்கள். மக்களைச் சுரண்டுபவர்கள். ஆனால் இரண்டு முதலாளிகளுக்கு இடையே என்று பார்த்தால், சிறு/குறு முதலாளியாவது பரவாயில்லை; பெருமுதலாளிதான் அதிகம் கெட்டவன். ஆனால் இந்தியப் பெருமுதலாளியையும்விடக் கெட்டவன் ஒருவன் இருக்கிறான். அவன் சர்வதேசப் பணமுதலை அல்லது பன்னாட்டு நிறுவனத்தான். இவன் நம் நாட்டையே கொள்ளையடித்துப் பணத்தை அள்ளிக்கொண்டு ஓடுவிடுவான்; ஊழல் மிகுந்தவன்; கிழக்கிந்தியக் கம்பெனியின் மறு அவதாரம்; என்ரான், யூனியன் கார்பைடு... போன்றவன்.
இப்படிப்பட்ட கொள்கை கொண்டோரிடம் விவாதம் செய்வது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர்கள் ஏற்கெனவே தங்கள் முடிவுகளை எடுத்துவிட்டனர்.
ஆனால் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் பலரும்கூட அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக எதிர்க்கிறார்கள். சிலரோ, சில துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஆதரித்தாலும் சில்லறை வணிகத்தில் மட்டும் கூடவே கூடாது என்கிறார்கள்.
இப்படி கருப்பு-வெள்ளை என்று இல்லாமல், இந்த விவாதத்தில் பல சாம்பல் நிறங்கள் பரவியுள்ளன.
சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்போருடனான விவாதமாகவே நான் என் கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன்.
***
சந்தைப் பொருளாதார முறை என்பது கட்டுப்பாடுகள் அற்ற ஒன்றாக எப்போதுமே இருந்ததில்லை. அமெரிக்காவில்கூட இதுதான் நிலை. பொதுவாக ஓர் அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவைத்திருக்கும். இந்தியாவில் நிலவும் சில கட்டுப்பாடுகளைப் பார்ப்போம்:
1. சில துறைகளில் சிறு, குறு அமைப்புகள் மட்டுமே ஈடுபடலாம்.
உற்பத்தித் துறை என்றால், குறுந்தொழில் (மைக்ரோ) என்றால் இயந்திரங்களில் முதலீடு ரூ. 25 லட்சத்துக்கு உள்ளாக இருக்கவேண்டும். சிறுதொழில் (ஸ்மால்) என்றால் இயந்திர முதலீடு ரூ. 25 லட்சத்துக்குமேல், ரூ. 5 கோடிக்குக்கீழ் இருக்கலாம்.
சேவைத் துறை என்றால் குறுந்தொழில் முதலீடு ரூ. 10 லட்சத்தைத் தாண்ட முடியாது. சிறுதொழில் என்றால் ரூ. 10 லட்சத்துக்குமேல், ரூ. 2 கோடிக்குக்கீழ் இருக்கவேண்டும்.
உதாரணமாக சில: ஊறுகாய், கடலை எண்ணெய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கண்ணாடி வளையல், எவர்சில்வர் அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றை மேற்படி நிறுவனங்கள் மட்டும்தான் செய்யமுடியும். நீங்களும் நானும் ரூ. 100 கோடி முதலீட்டில் இவற்றை உற்பத்தி செய்ய முன்வந்தால் நமக்கு அனுமதி கிடையாது.
2. சில பொருள்களை, உற்பத்தி செய்வோரிடமிருந்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியாது.
உதாரணம்: விவசாய விளைபொருள்கள்.
ஒவ்வொரு மாநிலமும் Agricultural Produce Marketing Committee Act (விவசாய விளைபொருள் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் தன் கையில் வைத்துள்ளது. மத்திய அரசு இந்தச் சட்டத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்து, Model APMC Act என்ற ஒன்றை இயற்றியது. கடந்த சில வருடங்களில் 16 மாநிலங்கள் இதனைப் பின்பற்றித் தத்தம் சட்டங்களை ஓரளவுக்கு மாற்றிக்கொண்டுள்ளன. இருந்தாலும் அவை இந்தத் துறையில் கட்டுப்பாடுகளை முற்றிலுமாகத் தளர்த்திக்கொள்ளத் தயாராக இல்லை.
பொதுவாக, இந்தச் சட்டத்தின் அடிப்படை, விவசாய விளைபொருள்களை அரசு விரும்பினால் அரசு மட்டும்தான் வாங்கலாம் என்பதே. அடுத்ததாக, அரசு அனுமதி அளிக்கும் வியாபாரிகள் மட்டும்தான், அரசு அமைக்கும் சந்தையில் மட்டும்தான் மேற்படிப் பொருள்களை வாங்கலாம். அரசு தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கியபின்னரேயே தனியார் வர்த்தகர்களுக்கு இந்தப் பொருள்களை வாங்க அனுமதி தரும். உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பிற பணப்பயிர்கள், காய்கள், கனிகள் என்று அனைத்தையுமே இந்தச் சட்டங்கள் கட்டுப்படுத்தும். இதனால் சந்தை என்பது விலையை நிர்ணயிப்பதில்லை. அரசுதான் விலையை நிர்ணயிக்கிறது. பெரும்பாலான பொருள்களை அரசு கொள்முதல் செய்யும்போது அவர்களுக்கு விற்காமல் காத்திருந்து பிறகு தனியாரிடம் விற்று அதிக விலை பெறலாமா என்றால் அதற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வாங்கிச் சென்றபிறகு தனியார் வர்த்தகர்கள் யாருமே வாங்கத் தயாராக இல்லை என்றால் கோவிந்தாதான். எனவே பெரும்பாலான விவசாயிகள் அரசு கேட்கும் பொருள்களை அரசு சொல்லும் விலைக்கு விற்றுவிட்டு, பணம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். (அரசு கேட்கும் விலையில் நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கிவிட்டுக் காத்திருக்கும் பதிப்பாளர்கள்போல.)
உங்களால் நேரடியாக முன்கூட்டியே விவசாயிகளிடம் கொள்முதல் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. ஒப்பந்த விவசாயத்தில் எளிதில் இறங்கமுடியாது. சந்தைக்குப் பொருள்கள் வந்து அங்கே கொள்முதல் செய்ய உங்களுக்கு உரிமம் இருந்தால்மட்டுமே உங்களால் அங்கே பொருள்களை வாங்க முடியும். இல்லாவிட்டால் வாங்கிய இடை நபரிடமிருந்து அவர் சொல்லும் விலைக்குத்தான் வாங்கிக்கொள்ள முடியும்.
3. சில துறைகளில் கார்பொரேட் நிறுவனங்கள் நுழைய அனுமதி இல்லை.
சில்லறை வணிகம் அப்படிப்பட்ட நிலையில்தான் சில ஆண்டுகளுக்குமுன்வரை இருந்தது. பின்னர் இதில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் விளைவாகத்தான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மோர் போன்ற நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் இறங்கின.
4. சில வகைப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடும் வரி விதிக்கப்படும்.
இந்தியப் பொருள்களுக்கான சந்தை அழிந்துபோய்விடாமல் இருக்க அந்நியப் பொருள்கள் மீதான வரி (tariff) அதிகரிக்கப்படும். உதாரணமாக பனை எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். ஆகஸ்ட் 1, 2012 தேதியிட்ட எகனாமிக் டைம்ஸ் இதழ் சொல்லும் செய்தி இது:
சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் உள்நாட்டுத் தொழில் துறையை அழியாது பாதுகாக்கவும் ஒரு டன் பனை எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 484 டாலர் என்பதிலிருந்து 1,053 டாலர் என்று இந்தியா உயர்த்தியுள்ளது.
அரசின் இந்த ஆணைமூலம் பனை எண்ணெய் விலை முன்னர் இருப்பதைவிட லிட்டருக்கு ரூ. 30 அதிகமாகியுள்ளது. இறக்குமதி வரியை ஒட்டுமொத்தமாக ஒழித்தால் இந்த விநாடியே பனை எண்ணெய் விலை லிட்டருக்கு 55 ரூபாய் குறையும்.
5. சில பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும்.
சில மாதங்களுக்குமுன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவித்தது மத்திய அரசு. பின் இரண்டே வாரங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டது. பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் லாபம். செய்யாவிட்டால் உள்ளூர் துணி ஆலைகளுக்கு லாபம். அவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளை நசுக்கித் தங்களுக்கு வேண்டிய பருத்தி இழைகளை வாங்கிக்கொள்ளலாம்.
6. உரிமங்கள், உற்பத்திக்கான கோட்டா ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு சில துறைகளை அரசு கட்டுப்படுத்தும்.
உரிமங்கள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறைவாக இருப்பதால் ஒரு மாநிலத்தில் இத்தனை மொபைல் போன் நிறுவனங்கள்தாம், உரிமம் பெற்றுத் தொழிலை நடத்தலாம் என்று அரசு தீர்மானிக்கிறது.
அதேபோல முன்பெல்லாம், ஒரு துறையில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை மீட்டர் துணி உற்பத்தி செய்யலாம், எத்தனை டன் உருக்கு உற்பத்தி செய்யலாம் என்பதற்குக் கோட்டா பெறவேண்டியிருந்தது. பெற்ற கோட்டாவைவிட அதிகமாக நீங்கள் உற்பத்தி செய்யமுடியாது. நல்லவேளையாக அந்தச் சனியனிலிருந்து இன்று முற்றிலுமாக விடுதலை கிடைத்துவிட்டது.
உரிமங்கள் சில துறைகளில் இருக்கவேண்டியது அவசியம். இவை இரண்டு விதமானவை. ஒன்றில், அரசு மட்டுமே உற்பத்தியை, சேவையைச் செய்யலாம் (ராணுவத் தளவாடங்கள் முதலியன). இன்னொன்றில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் இருக்கலாம் (தொலைத்தொடர்பு).
7. அந்நிய முதலீட்டை அரசு கட்டுப்படுத்தும்.
மேலே சொன்ன அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தாண்டி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை யார் வைத்திருக்கலாம் என்பதில் கட்டுப்பாடு. அதாவது யார் யார், எந்த எந்தத் துறைகளில், எந்த அளவுக்கு முதலீடு செய்யலாம், செய்யக்கூடாது என்பது பற்றியது. அதன்மூலமும் அரசு கட்டுப்படுத்துதலைச் செய்கிறது.
இந்திய நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், அந்நிய நேரடி நிறுவனங்கள் என்ற மூன்று வெவ்வேறு நபர்களை/அமைப்புகளை நாம் பார்க்கிறோம்.
அந்நிய நேரடி நிறுவனங்களுக்கும் அந்நிய நிதி நிறுவனங்களுக்குமான வித்தியாசம் என்ன? வால்மார்ட் இந்தியா வந்து சில்லறை வியாபாரம் செய்ய விரும்புவது அந்நிய நேரடி முதலீடு. ஒரு நிறுவனம் தனக்கு எந்தத் தொழிலில் அனுபவம் இருக்கிறதோ அதே தொழிலில் இந்தியாவில் முதலீடு செய்வது. மாறாக கலிஃபோர்னியா அரசுத் தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதி என்ற அமைப்பு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்குவது அந்நிய நிதி நிறுவன முதலீடு. இதில் அந்நிய நிறுவனத்தின் கட்டுப்பாடு இருக்காது. அதன் முதலீடு, வருமானத்தைப் பெருக்குவது என்பதற்காக மட்டுமே. நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க இந்தியர்கள் கையில் இருக்கும்.
உதாரணமாக மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் என்ற நிலக்கரி வெட்டி எடுக்கும் கம்பெனியில் பிரிட்டனைச் சேர்ந்த தி சில்ரன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (டி.சி.ஐ) என்ற நிதி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இது இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்மெண்ட் என்ற வகையைச் சாரும். அதே, பி.எச்.பி பில்லிடன் என்ற உலகிலேயே பெரிய கரி மற்றும் தாது நிறுவனம் கோல் இந்தியாவில் முதலீடு செய்ய வருகிறது என்றால் அது டிரெக்ட் இன்வெஸ்ட்மெண்ட்.
ஒரு துறையில் யார் முதலீடு செய்யமுடியும் என்பதைக் கட்டுப்படுத்துவதோடு, எத்தனை சதவிகிதம் பங்கு வைத்திருக்கலாம் என்பதையும் அரசு கட்டுப்படுத்துகிறது. சில துறைகளில் ஒரு நிறுவனத்தின் 100% பங்குகளையும் அந்நிய நிறுவனங்கள் தம் கையில் வைத்திருக்கலாம். சில துறைகளில் 74%, 51%, 49%, 26% என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்கும். அவ்வப்போது அரசு இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அந்நிய முதலீட்டின் சதவிகிதத்தை அதிகரிக்கும்.
(தொடரும்)