[எச்சரிக்கை. மிக நீண்ட போஸ்ட்.]
நரகத்துக்கான பாதை நல்லெண்ணத்துடனேயே போடப்படுகிறது.
ஒரு பக்கம் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அவ்வப்போது சுதந்தரவாதச் சிந்தனைகளுடன் சில நல்ல செயல்களில் ஈடுபடும். ஏதேனும் ஒரு துறையில் தனியார்மயம் அதிகரிக்கப்படும். ஏதேனும் ஒரு துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.
மறுபக்கம் சோனியா காந்தி தலைமையிலான சூப்பர் அரசு - இதற்கு நேஷனல் அட்வைசரி கவுன்சில் (என்.ஏ.சி) என்றும் பெயர் - மிக ஆழமாக யோசித்து அனைத்து ஏழைகளும் பலன் பெறவேண்டும் என்று சில திட்டங்களைத் தீட்டும். அதன் விளைவுகள் நாட்டை மிகக் கடுமையாகப் பாதித்து ஒட்டுமொத்த அழிவில் கொண்டுபோய் விட்டுவிடும்.
சோனியா/என்.ஏ.சி உருவாக்கிய இரண்டு திட்டங்களை எடுத்துக்கொள்வோம்.
முதலாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டம். இதற்கு 100 நாள் வேலைத் திட்டம் என்று உள்ளூரில் பெயர். இதன்படி, கிராமப் பகுதிகளில் உள்ள வயதுக்கு வந்த மக்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை கட்டாயமாகத் தரப்படும். அதாவது அவர்கள் கேட்டால், அரசு வேலை கொடுத்தே ஆகவேண்டும். இது மக்களின் உரிமை. அந்த வேலைக்கு அரசு அவர்களுக்கு நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட கூலி தந்துவிடும்.
இதன் அடிப்படை மிகுந்த நல்லெண்ணம் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. யாருமே தேசம் நாசமாகப் போகவேண்டும் என்று உட்கார்ந்துகொண்டு திட்டம் தீட்டுவதில்லை. என்ன நல்லெண்ணம்? புதிய தாராளக்கொள்கை வந்ததற்குப் பிறகு, நகரங்கள் வளரும் வேகத்தில் கிராமங்கள் வளர்வதில்லை. கிராம வருமானம் அதிகமாவதில்லை. ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த விலைவாசி அதிகரித்துக்கொண்டே போகிறது. விளைவாக கிராம மக்களின் வாழ்க்கை அழிந்துகொண்டே போகிறது. செல்வமானது, குறைவான இடத்திலிருந்து அதிகமான இடத்துக்குப் பாய்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் சாரி சாரியாக நகரங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இதனால் நகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. நகரத்துக்கு வரும் கிராமவாசிகளும் சேரிகளில் சிக்கிச் சீரழியவேண்டியிருக்கிறது.
கிராம மக்களுக்கு ஓரளவுக்காவது நிவாரணம் தரவேண்டுமானால் அவர்கள் கையில் கொஞ்சமாவது பணத்தைச் சேர்க்கவேண்டும். இதுதான் அந்த நல்லெண்ணம்.
ஆனால் என்ன நடந்தது?
இந்தப் பணத்தைத் தருவதற்கு என்.ஏ.சி கொண்டுவந்த திட்டம் எப்படிப்பட்டது? மக்கள் வேலை செய்யவேண்டும், செய்தால்தான் பணம் என்றார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? நாட்டில் பெரும்பாலான இடங்களில், பரம நிச்சயமாக தமிழ்நாட்டில், உருப்படியாக ஒரு வேலையும் நடப்பதில்லை. குழி தோண்டு, குழி மூடு என்ற அடிப்படையில் கிராமத்துக்கு டாஞ்சிபிள் சொத்து எதையும் உருவாக்காமல் இந்தப் பணம் கடைசியில் பட்டுவாடா ஆகிறது. வேலை எதுவுமே செய்யாமல் பணம் கிடைக்கிறது என்பதால் அரசு அதிகாரிகள் அடிக்கும் 30% கொள்ளையை மக்களால் தட்டிக்கேட்க முடிவதில்லை. நான் சென்னை அருகே ஒரு கிராமத்தில் எடுத்த ஒரு சர்வேயின்படி நாள் ஒன்றுக்கு 119 ரூபாய் கூலி இருந்தபோது மக்களுக்குக் கையில் கிடைத்த பணம் ரூ. 80-85 (சராசரி). ஓர் ஆண்டுக்கு வயது வந்த நபர் ஒருவருக்குக் கையில் கிடைப்பது சுமார் ரூ. 8,000/-
ஆனால் என்ன நடக்கிறது? மனத்தளவில் இது இலவசப் பணம் மாதிரிதான். விவசாயக் கூலி வேலை செய்வோர் பலரும் இதன் காரணமாகக் இனியும் கூலி வேலை செய்ய விரும்புவதில்லை. ஏற்கெனவே நசித்துப்போயிருக்கும் விவசாயம் மேலும் நசிகிறது. விவசாயிகள் இப்போது அரசிடம் தங்கள் வயல்களில் வேலை செய்வதற்கு ஈடாக 100 நாள் கூலியைத் தரச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசம். நடைமுறையில் வேலை செய்யாமல் இருப்பதற்குத்தான் நாள் ஒன்றுக்கு 80 ரூபாய். யாருக்கும் வேலை செய்யப் பிடிக்கவில்லை. எனவே விவசாயிகள் வயல்களுக்கு இவர்கள் வேலை செய்யப் போனாலும் சும்மாதான் உட்கார்ந்திருக்கப் போகிறார்கள். இதனால் விவசாயிக்கு எந்த நன்மையும் இல்லை.
அத்துடன் கிராமப் பகுதிகளில் இருக்கும் சிறு தொழில்களில் வேலை செய்துவந்தோர் பலரும் வேலைகளுக்குச் செல்வதில்லை என்று சமீபத்தில் வந்த ஓர் அறிக்கை சொல்கிறது. ஆண்டுக்குக் கிடைக்கும் 8,000 ரூபாயை வைத்துக்கொண்டு இவர்களால் எப்படி வாழ்க்கை நடத்தமுடியும்? இவர்கள் ஏன் வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை? ஏன் 8000 ரூபாய் போதும் என்றிருக்கிறார்கள்?
இது ஒரு லோக்கல் மினிமம். மாதம் முழுதும் லொங்கு லொங்கென்று வேலை செய்து லோல்பட்டு, வெறும் 2,000 ரூபாய் சம்பாதிப்பதற்கு, பேசாமல் வீட்டோடு உட்கார்ந்திருக்கலாம். ஏதோ ஒரு கைவேலை செய்யலாம். பணம் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும். வேலை செய்தால் குறைந்தது மாதம் 6,000 ரூபாயாவது வரவேண்டும். (சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வே செய்தபோது, மாதத்துக்கு 10,000 அல்லது அதற்குமேல் இருந்தால்தான் வளமான வாழ்க்கை வாழமுடியும் என்று அவர்கள் சொன்னார்கள். நான் சொல்லும் 6,000 என்பது சற்றுத் தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில்.) அப்படிக் கிடைக்கப்போவதில்லை என்றால் அந்த வேலைக்குப் போனால் என்ன, போகாவிட்டால் என்ன?
கிராமங்களில் அதிகச் சம்பள வேலைகளை உருவாக்க என்ன செய்யவேண்டும் என்று அரசுக்குத் தெரியவில்லை. (ஹிண்ட்: முதலில் ஒழுங்காக கரண்ட் கொடுங்கள்!) ஆனால் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இவர்களது வழிமுறையின் விளைவு இப்படியாக இருக்கிறது:
(அ) அரசு ஊழியர்களுக்கும் பிற இடைத்தரகர்களுக்கும் அதிக லஞ்சம் (30% கட்)
(ஆ) கடைமட்ட உழைப்பாளர்கள் உழைப்பை விட்டுவிட்டுச் சோம்பேறிகளாக ஆக்குவது
(இ) வேலை செய்யாமல் வேலை செய்ததுபோலப் பொய் சொல்லலாம் என்ற கெட்ட எண்ணத்தை மக்கள் மனத்தில் விதைப்பது
(ஈ) ‘இது நம்ம பணம்தான்யா!’ என்று உரிமை கொண்டாட வைக்கிறது மக்களை. இது மிக அபாயகரமான வாதம்.
(உ) விவசாயத்தை விரைந்து அழிக்கிறது.
(ஊ) கிராமப்புறக் கைத்தொழில்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது.
இப்படித்தான் நல்ல எண்ணம் நாசத்தை விளைவிக்கிறது. இனி இந்தத் திட்டத்தை நிறுத்த முடியாது. ஏனெனில் இடைத்தரகர்களுக்குக் கிடைக்கும் 30% கட் போவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் 8,000 ரூபாயை விட விரும்பமாட்டார்கள். தமிழ்கத்தில் ஏற்கெனவே நாள் கூலி 119 ரூபாய் என்பது 130+ என்றாகிவிட்டது. இரண்டாண்டுக்கு ஒரு முறை இது அதிகரித்துக்கொண்டே போகும். மேலும் கிராமம் என்று சொல்லப்படும் பகுதியில் யார் வேண்டும் என்றாலும் இந்தப் பணத்தை (வேலையை!) கொடுத்தே ஆகவேண்டும். ஏனெனில் இது உரிமை!
என்.ஏ.சியின் அடுத்த நல்லெண்ணத் திட்டத்தைப் பார்ப்போம்.
மக்களின் வாழ்க்கையைச் சரி செய்த கையோடு சோனியா அண்ட் கோ கல்வியைக் கையில் எடுக்க முடிவு செய்தனர். மீண்டும் புதிய தாராளமயக் கொள்கையை ஒரு பிடி பிடிக்கலாம். நாட்டில் தனியார் கல்வி நிலையங்கள் தறிகெட்டு வளர்கின்றன. இவை இரண்டு வகைப்படும். நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு, உயர் சாதி ஆட்களுக்காக மட்டும் நடக்கும் பந்தா பள்ளிகள். மறுபக்கம், அவற்றை போலி செய்து உள்ளே சரக்கு இல்லாமல், சரியான வசதிகூட இல்லாமல், மோசமான கட்டடங்களில் மோசமான கல்வி கொடுத்து ஆனால் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகள். இன்னொரு பக்கம் அரசுப் பள்ளிகளில் ஆட்கள் சேர்வதில்லை, கட்டடம் உடைந்து தொங்குகிறது, மேற்கொண்டு நிதி முதலீடு செய்தாலும் உருப்படி ஆக்கமுடியாத நிலையில் அந்தப் பள்ளிகள் உள்ளன.
என்ன செய்யலாம்?
முதலில் மோசமான தனியார் பள்ளிகளை எடுத்துக்கொள்வோம். அவர்கள் எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருக்கவேண்டும், என்ன மாதிரியான ஆசிரியர்-மாணவர் விகிதம் இருக்கவேண்டும், என்ன மாதிரியான வசதிகள் இருக்கவேண்டும் என்று மிரட்டுவோம். இதெல்லாம் இல்லாவிட்டால் அவர்களுடைய உரிமத்தைப் பிடுங்கிவிடுவோம் என்று மிரட்டுவோம்.
சரி, அப்புறம்?
அடுத்து, அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களை ஒரு பதம் பார்ப்போம். சும்மா D.T.Ed அல்லது B.Ed இல்லாமலேயே ஆசிரியர்கள் ஆகிவிடுகிறார்கள். அதை ஒரு வெட்டு வெட்டுவோம். இனி இந்தப் பட்டங்கள் இல்லாவிட்டால் ஆசிரியர் ஆகமுடியாது.
சரி, அப்புறம்?
இது போதாது; இவர்கள் பொய்யாக பி.எட் வாங்கிவிட்டு வந்திருக்கலாம். எனவே TET (டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) என்று ஒன்றை வைத்து அதில் பாஸ் ஆனால்தான் நீ டீச்சராக ஆகலாம் என்று சொல்வோம்.
சூப்பர். அப்புறம்?
இதுபோதும், லொட்டைத் தனியார் பள்ளிகளைப் பதம் பார்க்க. இப்போது பணக்காரப் பள்ளிகளை ஒரு வாங்கு வாங்குவோம்.
எப்படி?
சிம்ப்பிள். அவர்களுடைய 25% இடத்தை ஏழை/பிற்படுத்தப்பட்டோர்/தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்காக ஒதுக்கிவைக்கவேண்டும் என்று சொல்வோம். ஏழையா அல்லது பிற்படுத்தப்பட்டவரா, யாருக்கு எவ்வளவு என்ற கேள்விகளை ஒருமாதிரி பிறகு பார்த்துக்கொள்ளலாம். இந்தக் கட்டணத்தை அரசு கொடுக்கும். ஆனால் எவ்வளவு கட்டணம், எப்போது கொடுப்போம் என்பதையெல்லாம் பிறகு மெதுவாகப் பார்த்துக்கொள்வோம். முதலில் இந்தப் பள்ளிகள் உடனடியாக இதனைச் செயல்படுத்தியே ஆகவேண்டும் என்று மிரட்டுவோம்.
செய்தார்கள். ஆனால் பூதம் வெவ்வேறு வழிகளிலிருந்து கிளம்புகிறது.
(அ) முதலில் இந்த எந்தச் சட்டமும் அரசுப் பள்ளிகளைக் கட்டுப்படுத்தாது. ஒரே ஒன்றைத் தவிர. அதாவது அரசுப் பள்ளியில் சாக்கடை, மலசலக்கூடம் எல்லாம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றிக் கவலையில்லை. அதெல்லாம் தனியார் பள்ளிகளுக்குத்தான். ஆனால் அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்வு எழுதியாகவேண்டும். இது என்ன பெரிய விஷயம் என்று ஆர்.டி.ஈ சட்டம் இயற்றியோர் நினைத்திருக்கவேண்டும். ஆனால் இதில்தான் முதல் சனியே பிடிக்கப்போகிறது.
ஏற்கெனவே நடந்த டெட் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால் ஒரே ஜோக். நம் ஆசிரியச் செல்வங்களால் இந்தப் பரீட்சையை இந்த நூற்றாண்டில் எழுதி பாஸ் செய்ய முடியாது. இந்த டெஸ்டே தப்பு என்று ஒரு பக்கம் போராட்டம். தமிழக அரசு TET, TRB என்ற இந்த இரண்டு பரீட்சையையும் குழப்பி, ஒன்றாக்கிவிட்டது. ஒன்று ஆசிரியர்களிடம் இருக்கவேண்டிய தகுதி. இன்னொன்று, இருக்கும் அரசுப் பள்ளிக் காலி இடங்களில் யாரைக்கொண்டு வேலை பார்க்கவைப்பது என்று தீர்மானிப்பது. முந்தைய பரீட்சையை ஆர்.டி.ஈ சட்டப்படி, ஏற்கெனவே வேலையில் இருக்கும் ஆசிரியர்களும் எழுதியாகவேண்டும்.
இப்போது அனைத்து ஆசிரியர்களும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் ஏற்கெனவே பி.எட் படித்துவிட்டுத்தானே வருகிறோம், இப்போது இன்னொரு டெஸ்ட் எல்லாம் எழுதமுடியாது என்கிறார்கள். சிலர் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள்.
டெட் எழுதியே ஆகவேண்டும் என்று அரசு வற்புறுத்தினால் அடுத்த முறை தேர்தல் நடக்கும்போது இது குறித்து தேர்தல் வாக்குறுதி வருமாறு செய்துவிடுவார்கள். ஆசிரியர்கள் பலம் மிக்க ஒரு வாக்கு வங்கி.
(ஆ) டெட், ஆர்.டி.ஈ போன்றவற்றை சமூக நீதிக்கு எதிரானதாகவும் ஃபெடரலிசத்துக்கு எதிரானதாகவும் இந்த ஆசிரியர்களும் அறிவுஜீவிகளும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இது ரொம்ப டேஞ்சர். சமூக நீதி சிறக்கத்தானே இதைச் செய்தோம், இப்படி ஆகிவிட்டதே என்று சோனியா காந்தி துடித்துப் போய்விடுவார். டெட் எப்படி சமூக நீதிக்கு எதிரானது என்று கேட்கிறீர்களா? டெட் எதிர்பார்க்கும் 60% மதிப்பெண்ணை தாழ்த்தப்பட்டோரால்/ பிற்படுத்தப்பட்டோரால் பெற முடியாது; எனவே அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காது என்கிறார்கள் இவர்கள். இது எப்படி ஃபெடரலிசத்துக்கு எதிரானது? டெட் வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை மிரட்டிப் பணிய வைத்துள்ளது. (இது உண்மையே.)
(இ) தனியார் கல்வி நிறுவனங்கள் பலவும், உன்னால் முடிந்ததைச் செய், நான் 25% கொடுக்கமாட்டேன் என்று தான் பாட்டுக்கு நடந்துகொள்கின்றன. இவர்களை யார் கண்காணிக்கப்போவது? அதற்கான ஆள்பலம் மாநில அரசுகளிடம் இல்லை.
(ஈ) இத்தனை ஏக்கர் நிலம் வேண்டும் என்றெல்லாம் மிரட்டினால் பள்ளிக்கூடமே நடத்தப்போவதில்லை, பேசாமல் அங்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் பார்க்கலாம் என்று சிலர் முடிவு செய்வார்கள். (எல்டாம்ஸ் ரோட்டில் எங்கள் அலுவலகம் முந்தி இருந்த இடத்துக்கு எதிரில் உள்ள ஒரு பள்ளி இப்படித்தான் இழுத்து மூடி அந்த இடத்தை ஆஃபீஸ் ஆக்கிவிட்டார்கள்!) சப்ளை குறையும்; அதிகரிக்காது.
(உ) இன்னும் இரண்டாண்டுகளில் தனியார் ஸ்கூல்களை மிரட்டி சைட் பிசினஸ் செய்து ஏற்கெனவே பார்க்கும் வருமானத்தைவிட அதிகம் பார்க்கக் கல்வித்துறைக்கு வழி பிறக்கும்.
(ஊ) தனியார் பள்ளியில் காசு கொடுத்துப் படிக்கும் மாணவர்களின் கட்டணம் உயரும். தமிழக அரசின் கட்டணக் கட்டுப்பாட்டுச் சட்டம் அத்துடன் மல்லுக்கு நிற்கும். மொத்தத்தில் தினசரிப் போராட்டமாக இது ஆகும். கிட்டத்தட்ட அனைவருமே நீதிமன்றம் போவார்கள்.
(எ) வேண்டிய அளவு பி.எட், டி.டி.எட் கல்லூரிகள் இப்போது இல்லை. ஆனால் ஆர்.டி.ஈ முழுமையாகச் செயல்படுத்தப்படவேண்டும் என்றால் எக்கச்சக்கக் கல்வியியல் கல்லூரிகள் திறக்கப்படவேண்டும். இப்போது உள்ள கல்லுரிகளில் பி.எட் என்பதே பெரும் பஜனைதான். பெரும் தொகை வாங்கிக்கொண்டு ஓராண்டு கழித்து கையில் டிகிரி கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். அப்படி வெளியே வருபவர்கள், சிடெட் அல்லது டெட் பரீட்சையில் ஆப்பு வாங்குகிறார்கள்.
ஆக, ஒட்டுமொத்தமாக கல்வித் துறையில் உள்ள அனைவரது வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்ள ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு.