Monday, March 30, 2015

குரோம்காஸ்ட்

கடந்த ஒரு வாரமாக குரோம்காஸ்டைச் சோதனை செய்துவருகிறேன். இந்தியாவில் ரூ. 2999/- ஆகிறது. குரோம்காஸ்ட் என்பது கூகிள் விற்கும் ஒரு குட்டி டாங்கிள். HDMI போர்ட்டில் நுழையக்கூடியது. தனியாக மின் இணைப்பு வேண்டும். மின் இணைப்புக்கு டிவியில் உள்ள USB போர்ட்டையேகூட பயன்படுத்திக்கொள்ளலாம். என்னிடம் உள்ள டிவியில் இரண்டு HDMI, இரண்டு USB போர்ட்டுகள் உள்ளன. உங்கள் செல்பேசி அல்லது பலகைக் கணினியில் பார்க்கும் வீடியோக்களை குரோம்காஸ்ட் மூலமாக உங்கள் டிவிக்கு அனுப்பலாம். பெரிய திரையில் பார்க்கலாம்.

பேண்ட்வித் அதிகமாகி, இணைய மாதக் கட்டணம் குறையும்போது கேபிள் டிவி என்பது சரித்திரமாகிப் போய்விடும். ஒருசில சானல்கள், அவற்றிலும் அவர்கள் எதை எப்போது காண்பிக்கிறார்கள் என்பதற்காகக் காத்திருக்கவேண்டிய நிலை ஆகியவை போய்விடும். நெட்பிலிக்ஸ் அல்லது அவர்களைப் போன்றோர் இந்தியாவில் கால் பதிக்கும்போது இது வேகமாக நடக்கத் தொடங்கும். குறைந்தபட்சம், இணையத்துக்குச் செல்வழிக்க அஞ்சாத மத்திய தர, நகரக் குடும்பங்களிலாவது கேபிள்/டிடிஎச் காணாமல் போய்விடும்.

என் ஐபோன், ஐபேட் ஆகியவற்றிலிருந்து யூட்யூப் (YouTube), டெட் (TED) குறுஞ்செயலிகளில் வரக்கூடிய வீடியோக்களை குரோம்காஸ்ட் செய்துபார்த்தேன். டெட் மிகவும் தொல்லை தந்தது. அது எதிர்பார்க்கும் பேண்ட்வித் என்னிடம் இல்லையோ என்னவோ. ஆனால் யூட்யூபில் பிரச்னை ஏதும் இல்லை. ஆனால் FastForward, Rewind ஆகியவற்றைச் செய்யமுடியவில்லை. எனவே TV Cast என்ற குறுஞ்செயலியைத் தருவித்து, அதற்கான சில கட்டுப்பாட்டுப் பட்டைகளை விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன். இப்போது வேண்டிய இடத்துக்குத் தாவ முடிந்தது. யூட்யூப் போன்றவற்றில் வரும் விளம்பரங்களைத் தொலைக்க முடிந்தது.

இப்போது டெட் வீடியோக்களை மிகவும் ஆனந்தமாகப் பார்க்க முடிகிறது. நேற்று 3டி பிரிண்டிங் தொடர்பான நான்கு வீடியோக்களைப் பார்த்தேன். இப்போதைக்கு 3டி பிரிண்டிங் குறித்த ஒரு தெளிவான கருத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது. இனி வாரத்துக்கு 1-2 மணி நேரம் டெட் வீடியோக்களைப் பார்க்கச் செலவிடுவேன். 3டி பிரிண்டிங் குறித்து அடுத்து எழுதுகிறேன்.

Monday, March 16, 2015

உப்பு, வரி, வேலி

ராய் மாக்ஸாம், ஆங்கிலேய எழுத்தாளர். பேராசிரியர் அல்லர். ஆனால் வரலாற்று ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இவருடைய பெயரை நான் கேள்விப்பட்டேன். ஜெயமோகனின் இணையத்தளத்தில் The Great Hedge of India என்ற இவருடைய புத்தகத்தைப் பற்றி ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். உடனேயே அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டேன். அந்தப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘உப்புவேலி’ என்ற பெயரில் சிறில் அலெக்ஸின் மொழியாக்கத்தில், எழுத்து பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது. அந்த விழாதான் நேற்று நடைபெற்றது.


ராய் மாக்ஸாமின் வாழ்க்கை துண்டு துணுக்குகளாக நேற்று தெரியவந்தது. சிறுவயதில் தந்தையை இழந்தவர், வேதியியல் படிக்க விரும்பியிருக்கிறார் ஆனால் பணம் இல்லை. ஷெல் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே சைக்கிளில் ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்றுவந்திருக்கிறார். 21 வயதாகும்போது ஆப்பிரிக்காவின் மலாவி தேசத்தில் தேயிலைத் தோட்டம் ஒன்றும் மேலாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அதன்பின் ஆப்பிரிக்கா முழுதும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். 40 வயதாகும்போது பல்கலைக்கழகம் சேர்ந்து, அரிய தொன்மையான நூல்களைப் பாதுகாத்தல் தொடர்பாகக் கல்வி பயின்று, நூலகங்களில் வேலை பார்த்துள்ளார்.

லண்டனில் பழைய புத்தகம் ஒன்றை வாங்கியபோது அதில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது வங்காளத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட மாபெரும் வேலி பற்றிய குறிப்பு ஒன்று இருந்திருக்கிறது. வங்காளத்துக்கு வெளியிலிருந்து உப்பைக் கொண்டுவந்தால் கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி கட்டவேண்டும். அதனைச் செயல்படுத்த அவர்களுடைய சுங்கத்துறை உருவாக்கியிருந்த மிகப்பெரிய வேலி அது. அதுபற்றி மேற்கொண்டு விசாரித்தபோது யாரிடமும் சரியான பதில் இல்லை. கிழக்கிந்திய கம்பெனியின் பல்வேறு ஆவணங்கள், மேப் வரைபடங்கள், இந்தியாவுக்கு நேரில் வந்து பலமுறை ஃபீல்ட்வொர்க் செய்தல் என்று விரிந்த அவருடைய ஆராய்ச்சி இறுதியில் அந்த மாபெரும் வேலியின் சில எச்சங்களை முலாயம் சிங்கின் எடாவா தொகுதியில் பார்த்ததோடு முடிவுற்றது. அதன் விளைவாக உருவானதுதான் இந்தப் புத்தகம்.


சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரியும் பின்னாட்களில் எம்.பி ஆனவரும், படுகொலை செய்யப்பட்டவருமான பூலன் தேவியுடன் கடித நட்பு கொண்டிருந்த ராய் மாக்ஸாம் அதுகுறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இரண்டு புதினங்கள் எழுதியுள்ளார். தேநீர் குறித்து Tea: Addiction, Exploitation, and Empire என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். வாஸ்கோ ட காமா முதல் கிளைவ் வரை இந்தியாவைக் கொள்ளையடித்தது குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இன்னும் பதிப்பகத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றார்.

நேற்றைய நிகழ்வில் சிறில் அலெக்சின் அறிமுகம் நன்றாக இருந்தது. இடதுசாரி ஆராய்ச்சியாளர் பால்ராஜ், வரலாற்றாளர் ராமச்சந்திரன் ஆகியோர் புத்தகம் குறித்துப் பேசினர். எனக்கு ராமச்சந்திரனின் பேச்சு பிடித்திருந்தது. ராய் மாக்ஸாமின் புத்தகத்தின் கிழக்கிந்திய கம்பெனியின் காசு ஒன்றின் படம் இருக்கும். அதில் ஒரு புறம் தராசும் அதால் என்ற பாரசீகச் சொல்லும் இருக்கும். மற்றொரு புறம் 4 என்ற எண்ணும் இதயத்தின் படமும் இருக்கும். அதைக் குறித்துக் குறிப்பிடும்போது கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் (4 - ஹார்ட்/ஆட்டின் - புது ஊர்) என்று ஒரு ஊர் இருப்பதை ராமச்சந்திரன் குறிப்பிட்டார். பருத்தி வியாபாரம், பாளையக்காரர்கள், நாடார்கள், கட்டபொம்மன், கிழக்கிந்திய கம்பெனி என்று சில விஷயங்களை ராமச்சந்திரன் மேலோட்டமாகக் குறிப்பிட்டார். அவர் என்ன சொல்லவருகிறார் என்று எனக்கு ஓரளவுக்குப் புரிந்தது. ஒருவேளை அவர் இதனை எங்காவது எழுதியிருக்கக்கூடும். சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் இது என்று நினைக்கிறேன். வரலாற்றை நாம் தீர்க்கமாக ஆய்வு செய்யவேண்டும். நிறைய பழைய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர்வது அவசியம்.

யுவன் சந்திரசேகர் மிகுந்த நகைச்சுவையுடன் பேசினார். அரங்கு முழுவதையும் குலுங்கக் குலுங்க சிரிக்கவைத்தார். சிறில் அலெக்ஸின் மொழிபெயர்ப்பில் பல அருமையான தமிழ்ச் சொற்கள் வந்திருப்பதையும் சில இடங்களில் ஜெயமோகனின் டச் இருப்பதையும் குறிப்பிட்டார். ஜெயமோகன் ராய் மாக்ஸாம் பற்றிய மிகச் சுருக்கமான அறிமுகத்தைக் கொடுத்தார். கடந்த சில தினங்களாக ராய் மாக்ஸாமுடன் நேரத்தைச் செலவிட்டதில், அவரைப் பற்றித் தான் அறிந்துகொண்டதாக மூன்று விவரங்களைச் சொன்னார். (1) எதையுமே இயல்பான நகைச்சுவையோடு பேசுவது. (2) எந்த விதத்திலும் உயர்வு நவிற்சி வந்துவிடக்கூடாது என்று மட்டுப்படுத்தி உண்மை நிலையை மட்டும் வெளிப்படுத்தவேண்டும் என்ற விருப்பம். (3) உயர்மட்டத்தினரின் டாம்பீகத்தைச் சிறிதும் ஏற்க விரும்பாத தன்மை.

ராய் மாக்ஸாம் பேசும்போதும் பின்னர் கேள்வி பதில் நேரத்தின்போதும் பல விஷயங்களைச் சொன்னார். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது பல லட்சம் பேர் இறந்துபோயினர். அதில் எவ்வளவு பேர் உப்பின் போதாமையால் (உப்பு வரியால்) செத்துப்போனார்கள் என்று சொல்ல முடியாது. உப்பின்மீதான வரி பல நேரங்களில் ஏழைக் குடும்பங்களின் இரண்டு மாத வருமானமாகவும் சில நேரங்களில் ஆறு மாத வருமானமாகவும்கூட இருந்திருக்கிறது. இந்திய மேட்டுக்குடியினரே உப்புவரியை அதிகரிக்கச் சொல்லியிருக்கின்றனர். போர்த்துக்கீசியர்கள் மிக மிகக் கொடுமைக்காரர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் ஆங்கிலேயர்கள்தான் அதிகம் இந்தியர்கள் இறக்கக் காரணமாக இருந்திருக்கின்றனர்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டமும் எழுத்து பதிப்பகமும் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியிருந்தன. அவர்களை வாழ்த்துகிறேன்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க