நிதின் கோகலே என்.டி.டி.வி நிருபர். இலங்கையில் நான்காம் ஈழப்போர் நடந்த நேரம் அதைத் தன் தொலைக்காட்சிக்காகப் பின்பற்றிவந்தார். அதற்குமுன் கார்கில் போர் நடந்த நேரம் நேரடியாக அதனை ‘கவர்’ செய்தார்.
அவர் கார்கில் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இப்போது இலங்கை யுத்தம் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.
தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இலங்கைப் பிரச்னை ஓரளவுக்காவது தெரியும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி தோல்வி என்று நிர்ணயிக்கமுடியாத ஒரு போராட்டத்தில் திடீரென கடந்த இரண்டு வருடங்களில் என்ன மாற்றம் ஏற்பட்டது? எப்படி இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கமுடிந்தது?
இந்தக் கேள்வியை முன்வைக்கும் நிதின் கோகலே பதிலை ஆராய்கிறார். அவரது பதிலை, அவரது புத்தகத்தை கீழ்க்கண்ட சாரமாகக் கொடுக்கலாம்.
1. பிரபாகரன் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்ஷே ஜெயிக்கக் காரணமாக இருந்தது.
2. மகிந்த ராஜபக்ஷே, அமெரிக்காவில் இருந்த தன் தம்பி கோதபாய ராஜபக்ஷேவை இலங்கைக்கு அழைத்து பாதுகாப்புச் செயலராக ஆக்கியது.
3. இருவரும் சேர்ந்து சரத் ஃபொன்சேகாவை ராணுவத் தளபதி ஆக்கியது. (ஃபொன்சேகாவும் கோதபாயவும் சேர்ந்து ராணுவத்தில் பணியாற்றியிருந்தனர்.)
4. தரைப்படைத் தளபதி ஃபொன்சேகா, விமானப்படை தளப்தி வசந்த கரனகோடா, கடற்படைத் தளபதி ரோஷன் குணதிலக ஆகிய மூவரும் சேர்ந்து பெரும் பொருட்செலவில் தங்கள் படைகளை மாற்றி அமைத்தல், நிறையப் பேரை வேலைக்குச் சேர்த்தல். ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவம் தனது எண்ணிக்கையை கிட்டத்தட்ட மும்மடங்கு உயர்த்தியிருந்தது.
5. கோதபாய ராஜபக்ஷே உலகெங்கும் சென்று ஆயுதங்கள் வாங்குதல். (இந்தியா உதவவில்லை; ஆனால் சீனா பெருமளவு உதவியுள்ளது - கடனாகவே கொடுத்துள்ளது.)
6. கருணா புலிகள் அமைப்பிலிருந்து விலகுதல்.
7. இந்தியாவின் கடற்படை, இலங்கைக் கடற்படைக்கும் பெருமளவு உதவி புரிந்து, கடற்புலிகளை அழிக்க வழி செய்தது.
8. ஃபொன்சேகா மீதான புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் ஃபொன்சேகா பிழைத்தல். தொடர்ந்து மாவிலாறு பிரச்னையில் முழுப் போரின் ஆரம்பம்.
9. கிழக்கில் போர் வெடித்து கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு முழுமையையும் இலங்கை ராணுவம் கைப்பற்றுதல்.
இந்தக் கட்டத்தில் புலிகளை முழுமையாக அழிக்க திட்டம் தீட்டப்பட்டு சில மாதங்களிலேயே செயல்படுத்தப்பட ஆரம்பித்தனர். அதன்பின், புலிகளால் மீண்டும் வலுவான நிலைக்கு வரமுடியவே இல்லை.
இந்தப் புத்தகம் போரை வெறும் போராக மட்டுமே பார்க்கிறது. உயிர் இழப்புகளைப் பற்றி ஆங்காங்கே சில கவலைகள் தெரிந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் புலிகள் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியதனால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் அதே காரணத்தாலேயே புலிகள் தோல்வியை நோக்கித் தள்ளப்பட்டதையும் விரிவாகப் பேசுகிறது.
இறந்தது பிரபாகரன்தான் என்று அடித்துச் சொல்கிறார் நிதின் கோகலே. அதற்கு மாற்றுக் கருத்துகள் பல இருந்தாலும், கோகலே அதைப்பற்றி அதிகம் விவரிப்பதில்லை.
கிழக்குப் போர், வடக்குப் போர் தவிர, முதல் மூன்று ஈழ யுத்தங்கள், இந்திய அமைதிப் படைக்கு எதிரான போர், கூடவே தமிழ்நெட், டிஃபென்ஸ்.எல்கே தளங்களுக்கு இடையேயான ஊடகப் போர் ஆகியவற்றைப் பற்றியும் தொட்டுச் செல்கிறார்.
இந்திய அதிகாரிகள், அமைச்சர்களின் நிலைப்பாடுகள், இலங்கை-இந்திய உறவு ஆகியவை பற்றியும் புத்தகத்தில் நிறையத் தகவல்கள் உள்ளன.