சுஜாதாவுடன் எனக்கு அதிகம் பழக்கமில்லை. பத்துக்கும் குறைவான முறையே அவரைச் சந்தித்திருக்கிறேன்.
1997-ல் முதலாவதாக சந்தித்தேன். அப்பொது சென்னையில் கனகஸ்ரீ நகர் (ராதாகிருஷ்ணன் சாலையில் மியூசிக் அகாடெமிக்குப் பக்கத்து சந்து) என்னுமிடத்தில் நெட்கஃபே என்ற சென்னையின் முதல் இணைய உலவுதளம் உருவாகியிருந்தது. அதன் தொழில்நுட்ப ஆலோசகனாக நான் இருந்தேன். சென்னைக்கு மிகவும் புதியதான 'ஹை-ஸ்பீட்' இணைப்பு என்பதால் பல பிரபலங்கள் அங்கே வந்துள்ளனர். சுஜாதாவும் அதில் ஒருவர்.
பின்னர் 1997-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அவரைச் சந்தித்தேன். மாநாட்டிலிருந்து தங்குமிடத்துக்குச் செல்லும்போது ஒரு வண்டியில் சுஜாதா, முரசு அஞ்சல் முத்து நெடுமாறன், (கனிமொழி கணவர்) அரவிந்தன், நான், இன்னும் சிலர் சென்றோம். கிரிக்கின்ஃபோ பற்றி அப்போது பேசிய ஞாபகம் இருக்கிறது.
அதன்பின் அவரை தமிழ் இணைய மாநாடுகளில் மட்டுமே சந்தித்தேன் என்று நினைக்கிறேன். சென்னையில் 1999-ல் (?) நடந்த மாநாட்டின்போது இப்போது கொரியாவில் இருக்கும் (அப்பொது ஜெர்மனியில் இருந்த) நா.கண்ணன், சுஜாதா ஆகியோரோடு மனோஜ் அண்ணாதுரையின் சென்னை கவிகள் அலுவலகம் சென்றது ஞாபகம் இருக்கிறது.
பிறகு மீண்டும் 2003 தமிழ் இணைய மாநாடு. (அதைப்பற்றிய எனது பதிவுத்தளம்.) பின் 2004-ல் ழ கணினி அறிமுக விழாவின்போது. 2003-04 சமயத்தின் டிஷ்நெட் அலுவலகம் சென்று சிலமுறை தமிழ்+லினக்ஸ் பற்றி அவருடன் பேசியிருக்கிறேன்.
2006-ல் என் தந்தைக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்வதற்கு அபோல்லோ மருத்துவமனையில் டாக்டர் விஜயஷங்கர் அறை வாயிலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதா அங்கே வந்தார். என் தந்தைக்கு நடக்க உள்ள ஆபரேஷன்பற்றி அவரிடம் பேசினேன். அவரும் டாக்டர் விஜயஷங்கரிடம்தான் பைபாஸ் செய்துகொண்டதாகச் சொன்னார். இதயம் சரியாக இருக்கிறதா என்று ரொட்டீன் பரிசோதனைக்காக அங்கு வந்ததாகச் சொன்னார். 'He [Dr. Vijayashankar] is the best, don't worry' என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவருடன் நான் புத்தகங்கள் தொடர்பாகவோ இலக்கியம் தொடர்பாகவோ எதையுமே பேசியதில்லை. தமிழ் கம்ப்யூட்டர் பற்றி அதிகமாகவும், கிரிக்கெட் பற்றி ஓரளவுக்கும். கடைசியாக சில மாதங்களுக்குமுன் அவருக்கு சில ஆடியோ புத்தகங்களை அனுப்பிவைத்தேன். அப்போது ஃபோனில் பேசியவர், நாவல்களைவிட சிறுகதைகள் ஆடியோ வடிவில் நன்றாக வரும் என்று தனக்குத் தோன்றுவதாகச் சொன்னார். அவ்வளவுதான்.
-*-
சுஜாதாவின் எழுத்துகள் பல தலைமுறை இளைஞர்களை வசியம் செய்ததுபோலவே என்னையும் வசீகரித்திருக்கிறது. மூன்றாவது படிக்கும்போது குங்குமம் இதழில் சுஜாதாவின் ஒரு தொடர்கதை. (கதை என்ன என்று இப்போது ஞாபகம் இல்லை.) அதற்கு ஜெயராஜ் போட்டிருந்த படம் கதையைவிட மோசம். அந்தப் பக்கத்தை நான் கையில் வைத்திருக்கும்போது என் தாயிடம் மாட்டி உதை வாங்கியிருக்கிறேன். இனி புஸ்தகமே படிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்துகொடுத்துவிட்டு நிறையப் படித்தேன்.
சுஜாதா அப்போது விகடன், குமுதம், குங்குமம், சாவி - வேறு எதுவாக இருந்தாலும் சரி, அவற்றில் எழுதியவற்றை ஒன்றுவிடாமல் படித்திருக்கிறேன். கிழித்து பைண்ட் செய்யப்பட்டு பழுப்பேறிக் கிடந்த 'நைலான் கயிறு' போன்ற தொடர்கதைகளைத் தேடிப் பிடித்துப் படித்திருக்கிறேன். கணையாழியின் கடைசிப் பக்கங்கள் சின்னச் சின்ன தொகுப்பாக வந்தபோது வாங்கிப் படித்து அதிசயித்திருக்கிறேன். அசோகமித்திரன், சுஜாதா இருவரும் அந்தக்கால bloggers. கண்டது, கேட்டது, தங்களை பாதித்தது என்று இவர்கள் இருவரும் பதிந்துவைத்துள்ள விஷயங்கள் தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானவை.
சுஜாதாவின் தொடர்கதைகளில் நான் மிகவும் ரசித்துப் படித்தவை: பதவிக்காக, கனவுத் தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப்பூ, கொலையுதிர் காலம், பிரிவோம் சந்திப்போம் (பாகம் 1, 2), என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ. கிரிக்கெட் தொடர்பான நிலா நிழல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நாவல் என்ற வடிவத்தில் சுஜாதா அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. எல்லாமே தொடர்கதைகளாக ஜனித்தவை என்பதே அவற்றின் குறைபாடுகள். ஆனால் சுஜாதாவின் ஒரிஜினல் இலக்கியப் பங்களிப்பு அவரது சிறுகதைகள். புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியகர்த்தாக்கள் வரிசையில் சுஜாதாவை எந்தக் காரணம் கொண்டும் விலக்கிவைக்க முடியாது.
சுஜாதாவின் அறிவியல் தொடர்பான கட்டுரைகள், கேள்வி பதில்கள் பற்றி எனக்குக் கடுமையான விமரிசனம் உண்டு. மிகவும் மேலோட்டமாகச் சென்றுவிடும். அதேபோல அவர் பிரம்மசூத்திரம் தொடர்பாக குமுதம் பக்தியில் எழுதிய தொடர் ஏமாற்றத்தைக் கொடுத்தது. என் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மற்றுமொரு ஏமாற்றம் சுஜாதாவின் சங்க இலக்கியங்களை தற்காலக் 'கவிதை?' நடையில் கொண்டுவந்தது. அவை சப்பையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. திருக்குறள்கூட சுஜாதாவிடமிருந்து தப்பவில்லை:-(
தமிழில் அறிவியல் புனைகதைகள் எழுதுவதற்கு சுஜாதாவைத்தவிர யாருமே தீவிரமாக முனைந்தது கிடையாது. வேறு சிலர் (பெயர்களைத் தவிர்த்துவிடுகிறேன்) எழுதியுள்ளவற்றை நான் அந்த வரிசையிலேயே சேர்க்கமாட்டேன்.
சுஜாதாவின் சினிமா பங்களிப்பு பற்றி பலருக்கும் பலவிதமான குறைகள் இருக்கின்றன. ஆனால் நேற்றுவரையில் சுஜாதா அளவுக்கு தமிழ் சினிவாவில் வசனம் எழுதுவதற்கு ஆள் இருந்ததில்லை. பயங்கர அடாஸான அந்நியன் போன்ற படங்களுக்கு சுஜாதாவின் வசனம் இல்லையென்றால் கொடுமையாக இருந்திருக்கும். எல்லோராலும் பழித்துத் தூற்றப்பட்ட ஷங்கரின் பாய்ஸ் படத்திலிருந்து சிவாஜி படம்வரை, சுஜாதாவின் வசனங்கள் அற்புதம் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் படத்தின் பிற குறைகளுக்காக சுஜாதாமேல்தான் கண்டனங்கள் வந்தன.
எந்த இலக்கிய விமரிசகராலும் எள்ளித் தூக்கியெறியமுடியாதது சுஜாதாவின் மொழித் திறன். தமிழை அவ்வளவு இலகுவாக சமகால எழுத்தாளர் எவரும் கையாண்டு நான் பார்த்ததில்லை. அதில் இலக்கண வழு இருக்கும். ஆனால் சுவாரசியம் குன்றாது. சுஜாதா எப்பொதும் தன் மொழியை இளமையாக வைத்திருந்தார். கடைசியாக கல்கியில் வந்த 'உள்ளம் துறந்தவன்' தொடர்கதை வரையில் அவரது கதைமாந்தர்கள் பேசும் மொழி அவ்வளவு இளமையாக, contemporaneous ஆக இருந்தது.
சுஜாதாவால் தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வந்த பல தலைமுறை வாசகர்களில் ஒருவனாக என் அஞ்சலி. கண் ஓரத்தில் கண்ணீர் துளிப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
மனிதன் கடவுளைப் படைத்தானா?
3 hours ago