Friday, July 27, 2012

தி.நகரில் டயல் ஃபார் புக்ஸ் கடை எண் 2

நேற்று சென்னை தி.நகரில் எங்களுடைய இரண்டாவது புத்தகக் கடையைத் திறந்திருக்கிறோம். முதல் கடை, மூன்று மாதங்களுக்குமுன் தி.நகரிலேயேதான் ராமேஸ்வரம் சாலையில் திறக்கப்பட்டது.

நாங்கள் தமிழ்ப் பதிப்பாளராக (கிழக்கு பதிப்பகம்) பிப்ரவரி 2004-ல் வாழ்க்கையைத் தொடங்கினோம். கொஞ்சமாக ஆங்கிலம், மலையாளம் ஆகியவற்றில் கால் பதித்து, பிறகு இரண்டையும் நிறுத்திவிட்டோம். தமிழ்ப் பதிப்பில் பல புதிய முயற்சிகளைச் செய்துள்ளோம். தொடர்ந்து செய்துவருகிறோம்.

தமிழ் மட்டுமின்றி, பிற இந்திய மொழிகளை எடுத்துக்கொண்டாலும் புத்தக விற்பனைக்கான கட்டுமானம் மிக மோசமாக உள்ளது. வேண்டிய கடைகள் இல்லை. இருக்கும் கடைகளிலும் வேண்டிய புத்தகமெல்லாம் இருக்காது. புத்தகக் கடைக்காரர் பெரும்பாலும் பதிப்பாளர்களுக்குச் சரியான நேரத்தில் பணம் கொடுக்கமாட்டார். (பல நேரங்களில் பணமே கொடுக்கமாட்டார்!) இதன் காரணமாக பல முன்னணிப் பதிப்பாளர்களும் கையில் காசு கொடுக்காவிட்டால் விற்பனைக்குப் புத்தகம் தரமாட்டார்கள். (அதாவது கிரெடிட் கிடையாது.) இதைவிட மோசம், சில பதிப்பாளர்கள் கேஷ் என்றால் ரூபாய் நோட்டுகளை மட்டும்தான் மதிப்பார்கள். செக், டிராஃப்ட் எல்லாம் அவர்களுடைய அகராதியிலேயே கிடையாது. கட்டுக்கட்டாகக் காசை எண்ணி வைத்தால்தான் புத்தகம்.

தமிழகத்தில் விநியோகத்துக்கான கட்டுமானமும் கிடையாது. நீங்கள் சிறு பதிப்பாளராக இருந்து 10-20 புத்தகத்தைப் பதிப்பித்திருந்தால் அவற்றை ஒவ்வொரு கடைக்கும் கொண்டுசேர்ப்பதற்குள் உயிர் போய்விடும்.


நாங்கள் 2006-ல் வித்லோகா என்ற பெயரில் ஒரு கடையை ஆரம்பித்து, கையைச் சுட்டுக்கொண்டோம்.அதன்பின் ரீடெய்ல் எல்லாம் வேண்டாம் என்று மூட்டை கட்டி வைத்துவிட்டோம். பின் மீண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, இணையம் வழியாகப் பிறருடைய புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். இது மிகவும் பாதுகாப்பான தொழில். ஆர்டர் வந்தால் அதன்பின் அந்தப் புத்தகத்தைப் பிறரிடமிருந்து பெற்று கஸ்டமருக்கு அனுப்பினால் போதும். பின் சென்ற ஆண்டு, ஃபோன்மூலம் புத்தகம் விற்கலாம் என்ற முடிவை எடுத்தோம். அப்படி ஆரம்பித்ததுதான் டயல் ஃபார் புக்ஸ் 94459-01234 (அ) 9445-979797. இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும், இந்த எண்களுக்கு ஃபோன் செய்து வேண்டிய புத்தகங்களை வீட்டுக்கே தருவித்துக்கொள்ளலாம்.

இணையம், ஃபோன் இரண்டின்வழியாகவும் ஓரளவுக்குக் கணிசமான விற்பனை நடக்க ஆரம்பித்தபின்னரே, தி.நகர் ராமேஸ்வரம் சாலையில் கடையை ஆரம்பித்தோம். ஏற்கெனவே லிஃப்கோ ஷோரூம் இருந்தது அங்கே. அவர்களிடமிருந்து அந்த இடத்தைப் பெற்று, லிஃப்கோ புத்தகங்களையும் சேர்த்துப் பல பதிப்பாளர்களின் புத்தகங்களையும் அங்கே வைத்து விற்றுவருகிறோம்.

முதல் இரண்டு மாதத்திலேயே நல்ல விற்பனை நடந்துள்ளது. இதனால் உந்தப்பட்டு, சென்னையில் மேலும் பல இடங்களிலும் புத்தகக் கடைகளை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தோம். உடனடியாகக் கிடைத்தது தி.நகரிலேயே மற்றோர் இடம். ஏற்கெனவே பி.எம்.ஜி காம்ப்லெக்ஸின் கிழக்கு ஷோரூம் ஒன்றை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அங்கேயே ஷோரூமுக்கு எதிராகவே சற்றே பெரிய இடம் கிடைத்தது. அதில் பிற புத்தகங்களை வைத்துக் கடையை ஆரம்பித்துவிட்டோம்.


அடுத்ததாக, மைலாப்பூர், அண்ணா நகர், வேளச்சேரி போன்ற மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் இடம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

***

எங்கள் புத்தகக் கடைகளுக்கும் ஏற்கெனவே இருக்கும் புத்தகக் கடைகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?


1. எந்த புத்தகக் கடையாக இருந்தாலும் தமிழில் வெளியாகியுள்ள அத்தனை புத்தகங்களின் பிரதிகளையும் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் எங்கள் கடையில் நீங்கள் ஒருமுறை வந்து ஏதேனும் ஒரு புத்தகத்தைக் கேட்டுப்பாருங்கள். அது அச்சில் உள்ளது என்றால் அதைத் தேடிப் பிடித்து உங்களுக்கு வாங்கித்தராமல் விடமாட்டோம்.

பொதுவாக கஸ்டமர் சர்வீஸ் என்பதில் நமக்குப் பெரும் போதாமை உள்ளது. எப்படியாவது இதனைச் சரி செய்யவேண்டும் என்று போராடுகிறோம்.

2. தினம் தினம், சனி, ஞாயிறு உட்பட, விடுமுறை தினங்கள் உட்பட அனைத்து நாள்களிலும் புத்தகக் கடைகள் திறந்திருக்கும். காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை.

3. நேரில்தான் வரவேண்டும் என்றில்லை. ஃபோனிலும் (94459-01234 / 9445-979797) அல்லது இணையம்வாயிலாகவும் (www.nhm.in/shop) புத்தகங்களை வாங்கலாம். குறிப்பிட்ட அளவுக்குமேல் வாங்கினால், இப்போதைக்குச் சென்னையில் மட்டும் உங்கள் வீட்டுக்கு நாங்களே புத்தகங்களைக் கொண்டுவந்து தருகிறோம்.

4. கடையில் புத்தகம் வாங்கினால் டிஸ்கவுண்ட் கிடையாது. பல கடைகளில் உங்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கலாம். ஆனால் எங்கள் கடைகளில் எத்தனை ரூபாய்க்கு வாங்கினாலும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். இணையத்திலும் இனி டிஸ்கவுண்ட் கொடுக்கப்போவதில்லை. சிறப்பான சேவைமூலம் வாடிக்கையாளரைத் திருப்தி செய்வதுதான் முக்கியமே தவிர டிஸ்கவுண்ட் மூலமாக அல்ல என்று முடிவெடுத்துள்ளோம்.

5. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்குப் புத்தகங்களைத் தரும் பதிப்பாளர்களுக்கும் சிறப்பான சேவையைத் தருகிறோம். இதனை, பதிப்பாளர்கள் கடந்த சில மாதங்களில் உணர்ந்திருப்பர்.

***

இதுதவிர புத்தக விநியோக நெட்வொர்க் ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். லிஃப்கோ அகராதிகள், கவிஞர் வைரமுத்து புத்தகங்கள், மஞ்சுள் புக்ஸ், ஷிவம் புக்ஸ், டயமண்ட் புக்ஸ் (தில்லி), பாரகன் புக்ஸ் போன்ற சிலருடைய புத்தகங்களை தமிழகம் முழுதும் விநியோகம் செய்கிறோம். விநியோக நெட்வொர்க், இதனால் தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு என்ன நன்மை போன்றவற்றைப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

எங்களிடம் புத்தகம் வாங்கியது குறித்த மகிழ்ச்சியான, சோகமான அனுபவம் என்ன இருந்தாலும் என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சரி செய்ய உடனடியாக முயற்சி செய்கிறேன்.

Wednesday, July 25, 2012

ஏழை மாணவி மருத்துவக் கல்வி பெற உதவுங்கள்

சில சோகங்கள் மிகவும் கொடுமையானவை.

மிக நன்றாகப் படிக்கும் ஒரு பெண். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண். ஆனால் அதன் காரணமாகவே அப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணபரன் என்பவரின் மகள் தீபா. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1149/1200 மதிப்பெண்கள். [பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 449/500 மதிப்பெண்கள் பெற்றவர்.]

இவ்வளவு நன்றாகப் படிக்கும் பெண்ணை மருத்துவப் படிப்பில் சேர்க்கத் தன்னால் முடியாதே என்று மனம் வருந்திய தந்தை, மதிப்பெண்கள் வந்த அடுத்த நாளே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சோகத்தைத் தாண்டி, தீபா மருத்துவ கவுன்செலிங் சென்றுள்ளார். சென்னையில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் (தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில்) படிக்க இடம் கிடைத்திருக்கிறது.

ஆனால், நல்ல மனம் படைத்தோர் உதவியின்றி அவரால் இந்தப் படிப்பைப் படிக்க முடியாது.

ஓர் ஆண்டுக் கல்விக் கட்டணம்:
  • டியூஷன்: ரூ. 3,25,000
  • ஹாஸ்டல்: ரூ. 60,000
  • பிற: ரூ. 20,000
ஆக, ஆண்டுக்கு, சுமார் ரூ. 4 லட்சம். ஐந்தாண்டுகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 20 லட்சம்.

தந்தை இல்லை. வேறு வருமானம் இல்லை. வங்கிக் கடன் பெறுவது கடினம்.

இந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய ‘மனம் மலரட்டும்’ அறக்கட்டளை முன்வந்துள்ளது. இந்த அறக்கட்டளை ரூ. ஒரு லட்சம் கொடுத்து உதவியுள்ளதோடு, பலரிடமிருந்தும் நிதி திரட்டும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தகவல் பெற, இந்தப் பெண்ணுக்கு கல்வி உதவி செய்ய, சரவணனைத் தொடர்புகொள்ளுங்கள்:

மனம் மலரட்டும்
சரவணன், manam.malarattum@gmail.com, 96004-49661
சிவகணேஷ், 99624-28642

Tuesday, July 24, 2012

ஆறுமுகனேரி ஆண்டோ பீட்டர்


சாஃப்ட்வியூ நிறுவனத்தை உருவாக்கி நடத்திவந்த, 45 வயதான ஆண்டோ பீட்டர், இரு வாரங்களுக்குமுன் அகால மரணம் அடைந்தார். ஞாயிறு அன்று இரங்கல் கூட்டம் ஒன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற்றது.

ஆண்டோ பீட்டரை எனக்குக் குறைந்தது பத்து வருடங்களுக்கு மேலாகத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ் இணைய மாநாடுகளில் சந்திப்பது மட்டுமின்றி, அவ்வப்போது வேறு இடங்களிலும் சந்தித்துக்கொள்வதுண்டு. கணித்தமிழ் சங்கத்திலும் நான் உறுப்பினர். அவர் அழைத்து இருமுறை கணித்தமிழ் சங்கத்தில் பேசியிருக்கிறேன். அவருக்குத் தெரிந்த பலரில் நானும் ஒருவன். ஆனால் நெருக்கமான நண்பர் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவருடைய நிறுவனத்தைப் பற்றியோ, அவருடைய வேலைகளைப் பற்றியோ, கனவுகளைப் பற்றியோ அவர் என்னிடம் பேசியது கிடையாது. நானும் அவரிடம் கேட்டது கிடையாது. அவருடைய சொந்த வாழ்க்கை, மனைவி, மக்கள் என்று எதுபற்றியும் எனக்குத் தெரியாது.

சாஃப்ட்வியூ நிறுவனம் தமிழ் எழுத்துருக்களைத் தயாரித்துவந்தது. தமிழ் ஊடக நிறுவனங்கள் பலவும் அவருடைய மென்பொருளையும் எழுத்துருக்களையும் பயன்படுத்திவந்தன. ஆண்டோ பீட்டருக்கு தமிழ் ஊடகங்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.

எழுத்துருவில் ஆரம்பித்த ஆண்டோ பீட்டர் விரைவில் DTP எனப்படும் தொழிலை இளைஞர்களுக்குக் கற்றுத்தரத் தொடங்கினார். அதன்மூலம் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெற உதவினார். பேஜ்மேக்கர் போன்ற மென்பொருளைக் கொண்டு தமிழில் புத்தகங்கள், செய்தித்தாள் போன்றவற்றை அச்சுக்குத் தயாராக்குவதுதான் இந்த வேலை. இதன் தொடர்ச்சியாக, CSC என்ற கணினிப் பயிற்சி நிறுவனமும் ஆண்டோ பீட்டரின் சாஃப்ட்வியூ நிறுவனமும் இணைந்து பல மையங்களில் வரைகலைப் பயிற்சியைத் தர ஆரம்பித்தனர். இது இன்றும் தொடர்கிறது.

தமிழ்க் கணிமை, தமிழ் வழிக் கணினிப் பயிற்சி ஆகியவற்றில் ஆண்டோ பீட்டர் ஆர்வமாக இருந்தார். கணினி தொடர்பான பல தமிழ்ப் புத்தகங்கள் அவர் பெயரில் வெளியாகியுள்ளது. தமிழ்க் கணிமை தொடர்பாக இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் வழியாகக் கணினி மென்பொருள்களைக் கற்றுக்கொள்வது பற்றித் தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். தினமணி செய்தித்தாளில் அவருடைய நடுப்பக்கக் கட்டுரைகளை நான் படித்துள்ளேன்.

அவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்சிக்காகப் பதிந்திருந்தார் என்று தகவல்.

புத்தகக் கண்காட்சிகள், கணினிக் கண்காட்சிகள் அனைத்திலும் சாஃப்ட்வியூ நிறுவனத்தையும் ஆண்டோ பீட்டரையும் நீங்கள் கட்டாயம் பார்த்திருப்பீர்கள். இந்நிறுவனம் ஆத்திச்சூடி, திருக்குறள் என்று தொடங்கி, மென்பொருள்களைக் கற்றுக்கொள்வதற்கான குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளது. அத்துடன் கணினி மென்பொருள்களின் பயன்பாட்டைக் கற்றுக்கொடுக்கும் பல அச்சுப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

ஆண்டோ பீட்டர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்துதான் நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக அவர் பதற்றமடைந்தோ, கோபமடைந்தோ நான் பார்த்ததில்லை. அரசின் பல்வேறு அலுவலர்கள், அமைச்சர்கள், அறியப்பட்ட கல்வியாளர்கள் ஆகியோருடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. கணித்தமிழ் சங்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். உத்தமம் (INFITT) அமைப்பின் செயற்குழுவில் இருந்தார். தானாகவே முன்வந்து வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யக்கூடியவராகவே அவர் என் நினைவுக்கு வருகிறார்.

கணினியில் தமிழ் வருவதற்காகப் பாடுபட்ட பலரில் அவரும் ஒருவர். கணினியில் தமிழிலேயே புழங்கலாம் என்பதைப் பரப்புவதில் ஈடுபட்ட சிலரில் முக்கியமானவர்.

ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டிவிட்டதென்றால் உடலில் பல்வேறு கோளாறுகள் தோன்றுவது இயற்கை. தன் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு, நண்பர்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டு, தன் உடலை அலட்சியப்படுத்தியிருக்கிறார் ஆண்டோ பீட்டர்.
தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறுமுகனேரி என்ற சிற்றூரிலிருந்து சென்னை வந்து, தன் வாழ்க்கையில் வெகுவாக முன்னேறியவர் ஆண்டோ பீட்டர். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘களம் இறங்கியவர்கள்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பங்குகொண்ட காணொளியை இரங்கல் கூட்டத்தின் தொடக்கத்தில் போட்டுக் காட்டினார்கள். வெகு இயல்பான திருநெல்வேலிப் பேச்சு. அதிலிருந்துதான் அவரைப் பற்றிப் பலவற்றை நான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன்.

இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட பெருந்திரளைக் கொண்டு ஒன்றைக் கண்டிப்பாகச் சொல்லலாம். ஆண்டோ பீட்டர் தமிழ்க் கணிமைக்காக என்ன சாதித்தாரோ இல்லையோ, பெரும் நண்பர் குழாமைச் சாதித்திருக்கிறார். அவர்கள் அவரைத் தொடர்ந்து நினைவில் வைத்திருப்பார்கள்.

[சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சில பகுதிகளை நீக்கியிருக்கிறேன். --பத்ரி]

Monday, July 23, 2012

சீனா உலகை ஆளும்போது...

சனிக்கிழமை அன்று ஐஐடி சென்னையின் சீனா மையமும் சென்னை சீன ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்திய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பிரிட்டனின் மார்ட்டின் ஜாக் (Martin Jacques) பேசினார். இவர் சீனா தொடர்பாக When China Rules the World: The End of the Western World and the Rise of a New Global Order என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சீனா பற்றி ஆழ்ந்து படித்து வருகிறார். சீனா பற்றி அவர் பேசிய TED பேச்சு இங்கே.


சென்னையில் அவருடைய பேச்சு கிட்டத்தட்ட இந்தமாதிரித்தான் அமைந்தது. ஆனால் அதற்குமேல் சற்று விரிவாகவும் இருந்தது. சீனா பற்றி மேற்குலகம் அறிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதுதான் மார்ட்டின் ஜாக்கின் புத்தகத்தின் நோக்கம். ஆனால் அதிலிருந்து இந்தியர்களும் நிறையப் புரிந்துகொள்ள முடியும்.

1. சீனா எப்படிப்பட்ட அரசு?

மேற்கத்திய நாடுகள் 17-18-ம் நூற்றாண்டுகளில்தான் தேசம் என்று கருத்தாக்கத்தை உருவாக்கின. அதன் விளைவாக தேச-அரசுகள் உருவாயின. தேச-அரசு என்றால், ஒரு குறிப்பிட்ட தேசமாகத் தங்களைக் கருதும் மக்கள் ஒன்றுசேர்ந்து, ஓர் அரசை உருவாக்கி, அதற்கு இறையாண்மையை அளிப்பது.

மார்ட்டின் ஜாக் சீனாவை, தேச-அரசு என்பதைவிட நாகரிக-அரசு என்று சொல்லவேண்டும் என்கிறார். சீனாவை ஒன்றுபடுத்தும் முயற்சிகள் 2,000 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

[இந்த வேற்றுமை எனக்கு அவ்வளவு பெரிதாகவோ முக்கியமானதாகவோ படவில்லை. - பத்ரி]

2. மாவோவின் முக்கியத்துவம்

மாவோவின் ஆட்சியினால் துன்பம்தான், கொலைகள்தான் என்று மேற்கத்தியர்கள் பேசுவது கொஞ்சம் அதீதமானது என்கிறார் மார்ட்டின். சீனர்களின் கருத்து வேறுமாதிரியானது என்கிறார். அவர்கள், மாவோபின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கருதுவதாகச் சொல்கிறார். அதுநாள்வரையில் பஞ்சம், ஒற்றுமையின்மை, எதிரிகளின் அச்சுறுத்தல் என்று இருந்த நாட்டில், பஞ்சத்தைப் போக்கியது, நாட்டை வெகுவாக ஒன்றுபடுத்தியது, எதிரிகளைத் துரத்தியது, நாட்டுக்கு வலு சேர்த்தது ஆகிய காரணங்களால் மாவோ சீனாவுக்குப் பெரும் பங்கு ஆற்றியிருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுவதாக மார்ட்டின் ஜாக் சொல்கிறார்.


3. ஒரு நாடு, பல ஆட்சிமுறைகள்?

ஹாங் காங் சீனாவின் கைக்குப் போக இருந்த நேரம், உலகில், அதுவும் முக்கியமாக பிரிட்டனில் பெரும் அவநம்பிக்கை இருந்தது. சீனா ஹாங் காங்மீது பாய்ந்து அதனை விழுங்கிவிடும்; ஹாங் காங்கின் நடைமுறை, முற்றிலும் சீனாவின் பிற பகுதிகளைப் போலவே இருக்கும் என்று அனைவரும் நம்பினர். ஆனால் இன்றுவரை அப்படி ஆகவில்லை. ஒரு நாடு, இரு ஆட்சி முறைகள் என்பது தொடர்கிறது.

சீனாவுக்குத் தன் ஆட்சிமுறையை ஹாங் காங்மீது திணிப்பது அவசியமில்லை. ஹாங் காங் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும் - அவ்வளவுதான். ஆனால் மேற்கத்திய நாடுகள் இப்படி நடந்துகொள்ளாது. உதாரணமாக, மேற்கு ஜெர்மனி - கிழக்கு ஜெர்மனி இணைப்பு நடந்தபோது என்ன ஆனது? கிழக்கு ஜெர்மனி முற்றிலுமாக விழுங்கப்பட்டு, மேற்கு ஜெர்மனியின் நடைமுறைகள் அப்படியே அங்கு திணிக்கப்பட்டது.

நாளை தைவானும் சீனாவின் பிடிக்குள் வரும். இதனைத் தடுக்கவே முடியாது. அப்போது தைவானில் பல கட்சி ஆட்சி தொடரும். இப்போது இருப்பதுபோலவே.

[இதில் எனக்கு நிறைய மாற்றுக்கருத்து உள்ளது. மார்ட்டினிடம் பலர் கேட்டது, ஏன் இது திபெத்தில் நடைமுறையில் இல்லை என்பதை. சீன இறையாண்மைக்கு அடங்கிய, முழுமையான சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒன்றைத்தானே இப்போது தலாய் லாமா கேட்கிறார்? இந்தக் கேள்வியை ஓரிருவர் கேட்டனர். மார்ட்டின் அதற்கு சரியான பதிலைச் சொல்லவில்லை. ஒருவேளை தைவானின் பொருளாதார பலம் ஹாங் காங் போன்றே இருப்பதால் ஹாங் காங் போல தைவானுக்கும் நிறையச் சுதந்தரம் தரப்படலாம். ஆனால் திபெத் இந்தியாவுடனான சார்பைக் கொண்டிருப்பதாலும் அதற்கு பொருளாதார வலு ஏதும் இல்லை என்பதாலும் திபெத் ஓர் எல்லைப் பிரதேசம் என்பதாலும், திபெத்தியர்கள் தலாய் லாமா என்ற மதத் தலைமையை முழுமையாக நம்புவதாலும் வேறு மாதிரியாகக் கையாளப்படுகிறதோ?]

4. சீனா, புதிய காலனிய சக்தி?

சீனா ஆப்பிரிக்காவில் பெரும் ஈடுபாடு காட்டுவதை மேற்கத்தியப் பத்திரிகைகள் தவறாகச் சித்திரிக்கின்றன. சீனா எக்காலத்திலும் மேற்கத்திய நாடுகளைப் போல காலனிய சக்தியாக இருக்காது. அது, அதன் ரத்தத்தில் இல்லாத ஒன்று. தன் நாட்டு எல்லைகளை விரிவாக்கவேண்டும் என்று அது விரும்பவில்லை. ஹாங் காங், தைவான் போன்றவை வரலாற்றுரீதியாக அதனுடைய ஆளுகைக்கு உட்பட்டவை. அதுதவிர, பிற இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைக் கட்டுப்படுத்த சீனா விரும்பாது.

18-ம் நூற்றாண்டுவரையில் இந்தோசீனப் பகுதி (இன்றைய கொரியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதி) சீன அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போதுகூட, சீனா அங்கெல்லாம் தன் ஆட்சியைப் பரப்ப விரும்பவில்லை. அந்நாடுகளுடனான வர்த்தக உறவை மட்டுமே கொண்டிருந்தது. அந்நாட்டு அரசர்கள் தன் ஆளுகைக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று மட்டுமே வைத்திருந்தது.

19-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு, பிரிட்டிஷ், ஜப்பானிய காலனிய சக்திகள் சீனாவுக்குள் நுழையும்வரை இந்நிலை நீடித்தது.

கொலம்பஸ் போன்றோர் சிறு கப்பல்களில் உலகத்தைச் சுற்றுவதற்கு முன்பாகவே பெரும் சீனக் கப்பல்கள் பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளன. ஆனால் சீனா எக்காலத்திலும் ஒரு பெரும் கப்பற்படையைக் கொண்டு உலகை ஆட்சி செய்ய யோசித்ததில்லை. அதேபோல, இனியும் அப்படிச் சிந்திக்காது.

5. வர்த்தகம்

இன்று இந்தியா தவிர்த்த பிற ஆசிய நாடுகள் செய்யும் மொத்த வர்த்தகத்தில் 25% சீனாவுடன். உலகின் பெருவாரியான நாடுகள் - வளர்ந்த, வளரும் நாடுகள் - சீனாவுடன்தான் மிக அதிகமான வர்த்தகத்தைச் செய்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா போன்ற பல நாடுகளின் முதன்மை வர்த்தகப் பங்காளி சீனாதான். இது மேலும் மேலும் அதிகரிக்கத்தான் போகிறது. உலகின் முதன்மை நாணயமாற்று கரன்சியாக ரென்மின்பி ஆகப்போகிறது.

6. தென் சீனக் கடல்

தென் சீனக் கடல் பகுதி முழுமையும் தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா நினைக்கிறது. அப்பகுதியில் பிறர் யாரும் தலையிடுவதை சீனா விரும்பவில்லை. (பார்க்க: வியட்நாம்-இந்தியா -எதிர்- சீனா பிரச்னை.)

7. இனமும் கலாசாரமும்

சீனாவில் பெருவாரியான மக்கள் (சுமார் 90%) ஹான் சீனர்கள். பிற பெரும் நாடுகளைப் போலன்றி (அமெரிக்கா, இந்தியா) பெரும்பான்மை சீனர்கள் தங்களை ஒரே இனத்தினராகக் கருதுகிறார்கள்.

ஆனால் ஒரு சிக்கல். ஹான் சீனர்கள் தம் கலாசாரத்தை மட்டுமே உயர்ந்ததாகக் கருதுபவர்கள். அத்துடன் பிற கலாசாரங்களைத் தாழ்ந்தவையாகவும் கருதுகிறவர்கள். எனவே பிற இனங்களைக் கேவலமாகப் பார்க்கிறவர்கள். கலாசாரம் பன்மை என்பது சிறந்தது என்று கருதுபவர்கள் இல்லை. ஒற்றைக் கலாசாரத்தையே விரும்புபவர்கள்.

8. அரசு

ஒரு அரசின் ஆட்சி அதிகாரமும் சட்ட அதிகாரமும் வாக்குரிமை கொண்ட மக்களாட்சியிலிருந்தே பெறப்படுகிறது என்பது மேற்கு நாடுகளின் நம்பிக்கை. ஆனால் இது உண்மையல்ல. இத்தாலி போன்ற நாட்டில் வாக்குரிமையுள்ள மக்களாட்சி நடைமுறையில் இருந்தாலும் அந்நாட்டின் பல இடங்களில் வசிக்கும் மக்கள் அரசை சட்டபூர்வமானதாகக் கருதுவதில்லை. [இந்தியாவில்கூடச் சில இடங்களை இப்படிக் கருத இடமுண்டு - பத்ரி.] ஆனால் சீனா இதிலிருந்து மாறுபட்டது. அங்கே வாக்குரிமை கொண்ட பல கட்சிகள் கொண்ட மக்களாட்சி முறை கிடையாது. ஆனாலும் அங்குள்ள மக்கள் தம் அரசை சட்டபூர்வமானதாகவே கருதுகிறார்கள். அத்துடன் பெரும்பான்மை மக்களுக்கு தம் அரசின்மீது திருப்தியே நிலவுகிறது. உள்ளூர் அரசுகள்மீது குறைந்த திருப்தியும் மத்திய அரசின்மீது அதிகபட்ச திருப்தியும் கொண்டிருப்பதாக ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

உலகிலேயே செயல்திறன் மிகுதியான அரசு என்றால் அது சீன அரசுதான். இன்று மேற்குலகம் முழுதும் அரசுகள் தோல்வியுற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உலகம், சீன அரசின் மாதிரியைப் படிக்கவேண்டிய அவசியம் வந்துள்ளது.

9. சீனாவின் வளர்ச்சி

2009 உலகப் பொருளாதார வீழ்ச்சிக்குமுன், சீனா எத்தனை ஆண்டுகளில் அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லினர். ஆனால் 2008-க்குப்பின், இந்த ஆருடங்களை மாற்றி எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த எட்டிப்பிடிப்பு இன்னும் வேகமாக நிகழும். இந்த 4 வருடங்களில் மேற்கத்திய நாடுகள் பலவற்றின் ரியல் ஜிடிபி குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி 30% அதிகரித்துள்ளது.

எனவே 2008-ம் ஆண்டை சீனாவின் ஆண்டு என்றே சொல்லலாம். சீனா உலகின் பொருளாதார வல்லரசாக இந்தப் பத்தாண்டின் இறுதிக்குள்ளாகவே (2018) ஆகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ப்ரிக் வங்கி (சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா) என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டால், அது உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.

***


இதன்பின் கேள்வி-பதில் நிகழ்வு நடைபெற்றது. பலர் நேரடியாகக் கேள்விகளைக் கேட்காமல் பெரும் பிரசங்கங்களைச் செய்யத் தொடங்கினர்.

மார்ட்டின் ஜாக், சீனாமீது பெரும் காதல் கொண்டவர் என்று நன்கு தெரிகிறது. இந்தியா-சீனா தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு நன்றாகப் பதில் சொன்னார். நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்தியாதான் சீனாவைத் தனக்கு இணையான நாடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சீனர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் கலந்துகொள்ளும் பந்தயத்தில் இந்தியாவைக் காணவே இல்லை.

இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பது எளிது என்றே மார்ட்டின் ஜாக் கருதுகிறார். உணர்ச்சிவசப்படாமல் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், சீனாவுக்கு இந்த எல்லைகளை மாற்றிக்கொள்ளவோ கொஞ்சம் விட்டுக்கொடுக்கவோ பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என்பது மார்ட்டினின் கருத்து. பதிலுக்கு இந்தியா சீனாவுக்கு என்ன கொடுக்கப்போகிறது?

***

மார்ட்டின் ஜாக்கின் புத்தகத்தை வாங்கிவிட்டேன். படித்துவிட்டு எழுதுகிறேன்.

Thursday, July 19, 2012

Rajini's Punchtantra - இப்போது ரூபா அண்ட் கோ வாயிலாக

2010-டிசம்பரில் ரஜினியின் பன்ச்தந்திரங்கள் என்று தமிழிலும், Rajini's Punchtantra என்று ஆங்கிலத்திலும் புத்தகம் வெளியிட்டிருந்தோம். பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி எழுதியது. ரஜினி நடித்த படங்களின் பன்ச் வசனங்களைக் கொண்டு அவற்றிலிருந்து பிசினஸ், வாழ்க்கை இரண்டுக்கும் உதவும்வகையில் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் புத்தகம்.

கடந்த ஆண்டில் நாங்கள் பதிப்பித்த புத்தகங்களிலேயே மிக அதிகம் விற்ற புத்தகம் இதுதான். ஆனால் எங்களுக்கு ஆங்கில விநியோகம் குறைவு. தமிழகம் தாண்டி ஆங்கிலப் புத்தகத்தை விற்க மிகவும் சிரமப்பட்டோம். அதன்பின் பாலாவின் முயற்சியில் ஆங்கிலப் பதிப்பக நிறுவனமான ரூபா அண்ட் கோவுடன் உருவாக்கிக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தப் புத்தகம் இப்போது ரூபா அண்ட் கோ பதிப்பாக வெளியாகிறது.

இந்தப் புத்தகத்தை நீங்கள் ஆங்கிலப் புத்தகங்கள் விற்கும் எல்லாக் கடைகளிலும் வாங்கலாம். இணையத்தில் ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம். விலை ரூ. 95 மட்டுமே. அதுகூட இணையத்தில் வெறும் ரூ. 71-க்குக் கிடைக்கிறது.

உங்கள் நண்பர்களுக்கு வாங்கிப் பரிசளியுங்கள்!

தமிழ்ப் பதிப்பை நாங்கள் தொடர்ந்து வெளியிடுகிறோம். இணையத்தில் வாங்க: என்.எச்.எம் கடை | ஃப்ளிப்கார்ட்

உலகம் பிறந்தது எதனாலே?

[புதிய தலைமுறை இதழில் வெளியான என் கட்டுரை]

இந்த உலகம் எப்படி உருவானது? நம்மைச் சுற்றியுள்ள கோள்களும் நட்சத்திரங்களும் எப்படிப் பிறந்தன? இந்தப் பிரபஞ்சம் உருவானது எப்படி?

நீண்டகாலமாக அறிவியல் இந்தக் கேள்விக்கு விடைகாண முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இதற்கான விடைகள் அவ்வப்போது கீற்றுப் போலத் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றாலும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி நமக்கு இன்னமும் ஏகப்பட்ட விடை தெரியாத கேள்விகள் உள்ளன.

ஒரு பெருவெடிப்பு என்பதன் மூலமாகத்தான் இப்போதைய பிரபஞ்சம் உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தைக் கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் அந்தப் பெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தைப் பற்றி அறிவியல்ரீதியாக ஒன்றையும் சொல்லமுடியாத நிலையில் இப்போதும் இருக்கிறோம். ஆனால்-

அந்தக் கணத்துக்குச் சில விநாடிகள் கழித்து, பிரபஞ்ச வெளியில் எக்கச்சக்கமாக வெப்பத்தின் ஆற்றல் மட்டுமே விரவி இருந்திருக்கும். அங்கிருந்து எப்படி இத்தனைத் துகள்களும், அவற்றிலிருந்து இத்தனை அணுக்களும், அவற்றிலிருந்து இத்தனை தனிமங்களும், இன்று நாம் காணும் அனைத்தும் உருவாகின? முதலில் இந்தத் துகள்களின் அடிப்படைக் குணங்களான நிறையும் மின்னூட்டமும் எப்படித் தோன்றின?

மின்னூட்டம் எப்படி வந்திருக்கலாம் என்பதற்கு சில கோட்பாடுகள் உள்ளன. ஆனால் நிறை எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்பதற்கு ஹிக்ஸ் கோட்பாடு ஒன்றுதான் இப்போதைக்கு அறிவார்ந்ததாக உள்ளது.

அது என்ன ஹிக்ஸ் கோட்பாடு?

பெருவெடிப்பை ஒட்டிய தருணத்தில் ’ஹிக்ஸ் போஸான்கள்’ என்ற துகள்கள் உருவாகி, பிரபஞ்ச வெளியை முழுமையாக நிறைத்திருக்கவேண்டும். பிற துகள்கள் அடுத்துத் தோன்றியிருக்கவேண்டும். அவை ஹிக்ஸ் புலத்தில் நகர்ந்தபோது ஹிக்ஸ் போஸான்களுடன் ஊடாடி, தமக்கான நிறையைப் பெற்றிருக்கவேண்டும்.

அதன்பின் இந்தத் துகள்கள் எல்லாம் ஒன்றுகூடி, கொஞ்சம் கொஞ்சமாக அணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து இன்று நாம் காணும் இந்தப் பிரபஞ்சப் பெருவெளி, நட்சத்திரங்கள், அண்டங்கள், கோள்கள், தூசுகள் என அனைத்துமே தோன்றியிருக்கவேண்டும்.

அதாவது பிரபஞ்சத்தின் முதல் துகள் ஹிக்ஸ் போஸான். அதிலிருந்துதான் எல்லாமே உருவாகியிருக்க வேண்டும்

ஹிக்ஸ் போஸான் என்றால்?

தமிழ் நாட்டில் இன்று பள்ளிப் பிள்ளைகளுக்குக்கூட அணுவைப் பற்றித் தெரிந்திருக்கும். அணுவின் உள்ளே புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போன்ற அணுத் துகள்கள் இருப்பதாக நாம் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம்.

இந்தத் துகள்களுக்கெல்லாம் அடிப்படையாக இரண்டு இயல்புகள் உண்டு. ஒன்று நிறை (mass), மற்றொன்று மின்னூட்டம் (charge).

நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் ஒத்த மின்னூட்டம் உடைய இரு பொருள்கள் ஒன்றை ஒன்று விலக்கும்; எதிரெதிர் மின்னூட்டம் உடைய இரு பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பது. இது அடிப்படை விதிகளில் ஒன்று.

ஆனால் ஓர் அணுவின் உட்கருவில் ஒரே மின்னூட்டம் கொண்ட பல புரோட்டான்கள் உள்ளன. அவை ஒன்றை ஒன்று விலக்கி அல்லவா தள்ளவேண்டும்? ஆனால் அப்படியின்றி ஒன்றை ஒன்று இறுக்கிப் பிடித்தபடி ஒரே உட்கருவில் உள்ளனவே? இது எப்படிச் சாத்தியம்?

விஞ்ஞானிகள் இதனை விரிவாக ஆராய்ந்தனர். புரோட்டான், நியூட்ரான் ஆகியவையே அடிப்படைத் துகள்களாக இல்லாதிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இவற்றுக்கும் அடிப்படையாக குவார்க்குகள் என்ற ஆறு துகள்கள் இருக்கவேண்டும் என்றும் அவற்றின் பல்வேறு கூட்டமைப்பே புரோட்டானாகவும் நியூட்ரானாகவும் ஆகியிருக்கவேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.

இந்தக் குவார்க்குகளுக்கு இடையே மிகவும் வலுவான ஒரு விசை இருக்கவேண்டும் என்ற அவர்கள், இதற்கு ‘வலுவான உட்கரு விசை’ (ஸ்ட்ராங் நியூக்ளியர் ஃபோர்ஸ்) என்று பெயரிட்டனர்.

இதேபோல ‘வலுவற்ற உட்கரு விசை’ என்ற கருத்தாக்கமும் உருவானது. சில குறிப்பிட்ட கட்டங்களில் ஒரு நியூட்ரான் ஒரு புரோட்டானாக மாறுகிறது. வேறு சில கட்டங்களில் புரோட்டான் ஒன்று எலெக்ட்ரான் ஒன்றைக் கவ்விப் பிடித்து, நியூட்ரானாக உருவெடுக்கிறது. இதுபோன்ற மாற்றங்களுக்குக் காரணம் இந்த வலுவற்ற உட்கரு விசை.

ஆக, நமக்கு ஏற்கெனவே தெரிந்த மின்காந்த விசை, ஈர்ப்பு விசை ஆகியவற்றோடு வலுவற்ற உட்கரு விசை, வலுவான உட்கரு விசை ஆகியவை சேர்ந்து மொத்தம் நான்கு அடிப்படை விசைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் பேசத் தொடங்கினர். இதைத்தான் ஸ்டாண்டர்ட் மாடல் என்று விஞ்ஞானிகள் சொல்லத் தொடங்கினர்.

துகள்கள்

இந்த விசைகள் பரவியிருப்பதை விசைப்புலங்கள் என்றும் அந்த விசைப்புலங்களை சில சில துகள்கள் உருவாக்குவதாகவும் சொல்லலாம். உதாரணமாக மின்காந்த விசைப்புலத்தை உருவாக்குவது போட்டான்கள் என்ற ஒளித்துகள்கள்தான் எனலாம்.

அப்படியானால் வலுவான உட்கரு விசை, வலுவற்ற உட்கரு விசை ஆகியவற்றை உருவாக்குவதிலும் ஏதேனும் துகள்கள் இருக்குமோ?

அப்படிப்பட்ட ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது. வலுவான உட்கரு விசையை உருவாக்கக்கூடிய துகள்களுக்கு குளூவான் என்றும் வலுவற்ற உட்கரு விசையை உருவாக்கும் துகள்களுக்கு டபிள்யூ போஸான், இஸட் போஸான் என்றும் பெயர் தரப்பட்டது.

இந்தத் துகள்களை ஏன் போஸான் என்று அழைக்கிறார்கள்?

பால் டிராக் என்ற விஞ்ஞானி,  வேறு சில விஞ்ஞானிகளின் கருத்துகளையும் ஐன்ஸ்டைனின் சார்பியல் விதிகளையும் இணைத்து, எலெக்ட்ரானின் இயக்கத்தை விளக்கும் சமன்பாடுகளை வெளியிட்டார்.அப்போது அவர் இருவிதமான துகள்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது.

(1) ஒரே குவாண்டம் நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட துகள்கள் இருக்கலாம்.

(2) ஒன்றுக்கும் மேற்பட்ட துகள்கள் ஒரே குவாண்டம் நிலையில் இருக்க முடியாது.

குவாண்டம் நிலை என்றால்?

குவாண்டம் நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள, ஓர் உதாரணம் உதவும். சென்னையில் இருக்கும் பாம்புப் பண்ணையில் இருளர்கள் பாம்புகளைப் பானையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒரு சிலவகைப் பாம்புகள் பலவற்றை ஒரே பானையில் ஒன்றாகச் சேர்த்து வைக்கலாம். ஆனால் வேறு சிலவகைப் பாம்புகளை அப்படிச் செய்ய முடியாது. ஒரு பானையில் ஒன்று மட்டும்தான். அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு பாம்பைக்கூட தன்னுடன் இருக்க அது அனுமதிக்காது. பானைதான் குவாண்டம் நிலை; பாம்புதான் துகள்.

எலெக்ட்ரான்களை எடுத்துக்கொண்டால், இரு வேறு எலெக்ட்ரான்கள் ஒரே குவாண்டம் நிலையில் இருக்காது. ஆனால் போட்டான் எனப்படும் ஒளித்துகள் பலவும் ஒரே குவாண்டம் நிலையில் இருக்கும்.

இந்த இரண்டுவகைப் பாம்புகளையும் வேவ்வேறு விதமாகக் கையாளவேண்டும் என்பதை டிராக் தெளிவாகப் புரிந்துகொண்டார். அதற்கான கணிதமுறைகளைத் தேடினார். அவருடைய முன்னோடிகள் இதனை ஏற்கெனவே செய்து வைத்திருந்தனர்.

கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திர நாத் போஸ், ஒளித்துகளான போட்டானின் இயக்கம் பற்றிச் சில கணக்குகளைச் செய்யும்போது புதுவிதமான ஒரு புள்ளியியல் முறையைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால் இதனை யாரும் ஏற்கவில்லை. போஸ் சற்றும் மனம் தளராமல் தன் கட்டுரையை ஐன்ஸ்டைனுக்கு அனுப்பிவைத்தார்.

அந்தக் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ஐன்ஸ்டைன்,  அதை ஜெர்மன் மொழிக்கு மாற்றிப் பதிப்பிக்கச் செய்தார். நிறையற்ற ஒளித்துகளுக்காக போஸ் உருவாக்கிய கணித முறையை ஐன்ஸ்டைன் நிறை கொண்ட பொருள்களுக்கும் நீட்டித்தார்.

டிராக் இந்தக் கணித முறையை அப்படியே எடுத்துக்கொண்டார். பல துகள்களும் ஒரே குவாண்டம் நிலையில் இருந்தால், அவை போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் முறையில் இயங்கும். எனவே இத்தகைய துகள்களுக்கு  போஸான் என்று பெயர் கொடுத்தார் டிராக்.

ஒரே குவாண்டம் நிலையில் இருக்காத துகள்கள், ஃபெர்மி-டிராக் புள்ளியியல் முறையில் இயங்கும். எனவே இத்தகைய துகள்களை ஃபெர்மியான் என்று அழைத்தார் டிராக் .

ஹிக்ஸ் கண்டுபித்த, போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் முறையில் இயங்கும் துகள்தான், ஹிக்ஸ் போஸான்.

மாற்றி யோசி

பல்வேறு துகள்கள் இருக்கின்றன என்ற உண்மை இன்னொரு கேள்விக்கு இட்டுச் சென்றது. பல்வேறு துகள்களுக்கும் வெவ்வேறு நிறை எப்படி ஏற்படுகிறது? அவற்றுக்கு உள்ளே என்னதான் புகுந்துகொண்டு ஒன்றை அதிக நிறையுடனும், ஒன்றை மிகக் குறைந்த நிறையுடனும், இன்னொன்றை நிறையே இல்லாமலுமாக ஆக்குகிறது?

1963-ல் ஆறு விஞ்ஞானிகள் இது குறித்து விரிவான கோட்பாடு ஒன்றை முன்வைத்தனர். அந்த ஆறு பேரில் ஒருவர்தான் பீட்டர் ஹிக்ஸ்.

இவர்கள் முன் வைத்த கோட்பாடு, துகள்களின் நிறை பற்றி நாம் அதுவரை வைத்திருந்த கருத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிப்போட்டது. ஒரு துகளுக்கு உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று அதன் நிறையைத் தருகிறது என்று யோசிப்பதைவிட, ஒரு துகள் ஒரு விசைப்புலத்தில் செல்லும்போது அதன்மீது உருவாகும் வினைதான் அதன் நிறையைத் தருகிறது என்பதாக ஏன் சிந்திக்கக்கூடாது என்றனர் இவர்கள்.

இவர்கள் முன் வைத்த கருத்துகளின் முக்கிய அம்சங்கள்:
  • எப்படி வலுவான/வலுவற்ற உட்கரு விசைப்புலங்களை அவற்றுக்கான துகள்கள் உருவாக்குவதாகச் சொல்கிறோமோ, அதேபோல ஹிக்ஸ் புலத்தை ஹிக்ஸ் போஸான் என்ற துகள் உருவாக்குகிறது.
  • எப்படி மின்காந்தப் புலத்தில் மின்னூட்டம் கொண்ட ஒரு துகள் செல்லும்போது அது உருவாக்கும் மாற்றத்திலிருந்து அதற்கு என்ன மின்னூட்டம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியுமோ...
  • அதே போல ஹிக்ஸ் புலத்தில் ஒரு துகள் செல்லும்போது ஏற்படும் மாற்றத்திலிருந்து ஒரு துகளின் நிறை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இப்படிப் பார்க்கலாம். ஹிக்ஸ் புலத்தில் ஒரு துகள் மிக எளிதாக, வேகமாகச் செல்கிறது என்றால் அதன் நிறை குறைவாக இருக்கவேண்டும். இன்னொரு துகள் சிரமப்பட்டு மெதுவாக நீந்திச் செல்கிறது என்றால் அதன் நிறை அதிகமாக இருக்கவேண்டும்.

அதெல்லாம் சரி, உண்மையிலேயே ஹிக்ஸ் போஸான் என்ற துகள் ஒன்று உள்ளதா? அதனைக் கண்டுபிடிக்க முடியுமா?

உண்மையிலேயே இருக்கிறதா?

இதற்கு முன்னர் பரிசோதனைச் சாலையில் சில துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல இப்போதும் சில பரிசோதனைகளைச் செய்தால் ஹிக்ஸ் போஸான் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடித்து விடலாமே?

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், ஹிக்ஸ் கோட்பாடு உருவானது 1964-ல். அதற்குப்பின், 1970-களில்தான் வலுவான உட்கரு விசை முன்மொழியப்பட்டது. ஆனால் அதன் விளைவாகச் சிந்திக்கப்பட்ட துகள்கள் எல்லாம் கண்டறியப்பட்டுவிட்டன. ஹிக்ஸ் போஸான் துகள் மட்டும் கண்ணில் படவில்லை.

அதற்கு ஒரு காரணம் இருந்தது.

இந்தத் துகள்களையெல்லாம் கண்டுபிடிக்கவேண்டுமானால் அதிவேகத்தில் செல்லும் இரு அணுத் துகள்களை மோதவிடவேண்டும். அதன் விளைவாக உருவாகும் ஆற்றலில் இந்தத் துகள்கள் உடைந்து, நாம் எதிர்பார்க்கும் சில துகள்கள் கிட்டலாம்.

ஹிக்ஸ் போஸானின் உள்ளார்ந்த ஆற்றல்-நிறை மிக மிக அதிகமானது. பிற துகள்களைக் கண்டுபிடிக்கவேண்டுமானால் இரண்டு எலெக்ட்ரான்களை அல்லது குறைந்த வேகத்தில் செல்லும் இரு புரோட்டான்களை மோதவிட்டால் போதுமானது. ஹிக்ஸ் போஸானைக் கண்டறியவேண்டுமானால் மிக அதிகமான வேகத்தில் இரு புரோட்டான்களை மோதவிட வேண்டியிருக்கும். இதனைச் சாத்தியப்படுத்த நிறையத் தொழில்நுட்ப மேம்பாடு தேவைப்பட்டது. இதன் விளைவாக உருவானதே சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிச் சாலையில் உள்ள லார்ஜ் ஹேட்ரான் கொலைடர் (பெரும் துகள் மோதற்களம்).

இந்த மோதற்களத்தில் இரண்டு புரோட்டான்களை அதிவேகத்தில் மோதச் செய்ய முடியும். ஆனால் பல்வேறு தொழில்நுட்ப இடைஞ்சல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களையும் தாண்டி, சென்ற ஆண்டில்தான் லார்ஜ் ஹேட்ரான் கொலைடரில் குறிப்பிட்ட வேகத்தை அடைய முடிந்தது.

அந்தச் சோதனைகளின்போது கிடைத்த தகவல்களை ஆராய்ந்ததில் கிட்டத்தட்ட ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று இரு விஞ்ஞானிக் குழுக்கள் கடந்த வாரம் (4 ஜூலை 2012) அறிவித்தனர்.

கிட்டத்தட்ட என்றால்? இன்னும் முழுமையாகச் சொல்ல முடியாது என்பதுதான். அதாவது மேலும் சில சோதனைகள் தேவை. ஆனால் இதுவரை அறிந்ததிலிருந்து ஹிக்ஸ் போஸான் போல ஒன்று இருப்பது உறுதி. அதாவது ஹிக்ஸின் கோட்பாடு கிட்டத்தட்ட உறுதி.

ஆனால் இதுவே இறுதி கிடையாது. நாளை மேலும் சில கேள்விகள் எழலாம். அப்போது நாம் மேலும் சில புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகலாம்.

ஆனால் சமீப காலத்தில், அதாவது கடந்த கால் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று சொல்லலாம்.

இதன் அடிப்படைகள் 1920-களிலிருந்து உருவானவை. அதில் இந்தியரான சத்யேந்திர நாத் போஸின் கணிதப் பங்களிப்பு அடிப்படையாக இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

***

சத்யேந்திர நாத் போஸ் (1 ஜனவரி 1894 - 4 பிப்ரவரி 1974)

கல்கத்தாவில் பிறந்த சத்யேந்திர நாத் போஸ், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்தபோதிலும் சுடர்விட்டுப் பிரகாசித்த ஒரு சில விஞ்ஞானிகளில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. கல்கத்தாவில் கல்வி பயின்ற இவர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.

டாக்கா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு ஆசிரியராகச் சென்ற இவர்,  வகுப்பில் மாணவர்களுக்கு ஒளித்துகள் பற்றிய பாடம் ஒன்றை விளக்க முற்பட்டபோது தன் பெயர் கொண்ட புள்ளியல் முறையை ஒரு விபத்தாகக் கண்டுபிடித்தார். அதனை அவர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக எழுதி இங்கிலாந்தின் ஆராய்ச்சி இதழ்களுக்கு அனுப்பியபோது அவர்கள் அக்கட்டுரையை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஆனால் போஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு அந்தக் கட்டுரையை அனுப்பிவைத்தார். ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கையை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் உரிமையை அவர் ஏற்கெனவே ஐன்ஸ்டைனிடமிருந்து பெற்று, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்தியாவில் வெளியிட்டும் இருந்தார். இதன் காரணமாக ஐன்ஸ்டைன் அந்தக் கடிதத்தைப் படித்திருக்கக்கூடும். அந்த ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தவுடனேயே போஸ் அனுப்பிய கருத்துகள் மிகச் சிறப்பானவை என்று ஐன்ஸ்டைன் புரிந்துகொண்டார். தானே அந்தக் கட்டுரையை ஜெர்மனுக்கு மொழிபெயர்த்து, தன் பரிந்துரையுடன் ஆராய்ச்சி இதழ் ஒன்றில் வெளியாகுமாறு செய்தார். கூடவே, போஸின் ஆராய்ச்சியை மேலும் ஒருபடி எடுத்துச் சென்றார்.

அதன் விளைவாக உருவானதுதான் போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல். அதன்படி இயங்கக்கூடிய பொருள்களுக்குத்தான் பால் டிராக், போஸான் என்று பெயர் சூட்டினார். அப்படிப்பட்ட ஒரு போஸான்தான் ஹிக்ஸ் போஸான் என்ற துகள்.

போஸ் உருவாக்கியது ஒரு கணக்கு முறை மட்டுமே. அந்தக் கணக்கின்படி போட்டான் என்ற ஒளித்துகள் இயங்கும் என்று மட்டுமே போஸ் சொன்னார். ஒளித்துகள் மட்டுமல்ல, இன்னும் பல பொருள்களும் இதே கணக்கின்படி இயங்கும் என்பதை ஐன்ஸ்டைனும் பின்னர் டிராக்கும் முன்வைத்தனர்.

ஐரோப்பா சென்று திரும்பிய பின்  போஸ், பல்வேறு விஷயங்களில் தன் ஆர்வத்தைச் செலுத்த ஆரம்பித்தார். அதில் தாய்மொழியிலேயே அறிவியலைச் சொல்லித்தரவேண்டும் என்ற கருத்து மிக முக்கியமானது. பல்வேறு அறிவியல் கட்டுரைகளையும் வங்க மொழியில் மொழிமாற்றி எழுத ஆரம்பித்தார். மேற்கொண்டு உலகத் தரத்தில் அவர் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு, அவர் பிற துறைகளில் தன் கவனத்தைச் சிதறவிட்டதே காரணம். ஆனால் அவரிடமிருந்து நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் கட்டுரைகள் தாய்மொழியில் வரவேண்டும். அப்போது மட்டும்தான் நாம் சத்யேந்திர நாத் போஸ் போன்ற மாபெரும் விஞ்ஞானிகளை உருவாக்கமுடியும்.

***

கடவுளைக் கண்டுபிடித்தார்களா?

ஹிக்ஸ் போஸான் பற்றி ஒரு புத்தகம் எழுதிய லியான் லெடர்மேன் என்பவர் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தை வெளிப்படுத்த இந்தத் துகளை ‘நாசமாய்ப்போன துகள்’ என்று பொருள் பட ‘காட் டாம்ண்ட் பார்ட்டிகிள்’ என்று எழுதியிருந்தார். ஆனால் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் அதனை ‘காட் பார்ட்டிகிள்’ (கடவுள் துகள்) என்று மாற்றிவிட்டார்.

ஹிக்ஸ் உண்மையில் ஒரு நாத்திகர். அவருடைய கருத்தாக்கத்துக்கும் கடவுளுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று அவரும் பிற விஞ்ஞானிகளும் சொன்னாலும் பத்திரிகைகள் இன்றுவரை அதனைக் கேட்பதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் ‘கடவுள் துகள்’ என்றும், ‘கடவுளைக் கண்டுபிடித்துவிட்டார்கள்’ என்றும் தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Tuesday, July 17, 2012

புத்தகக் கடையில் வேலைவாய்ப்பு

சென்னையில் நாங்கள் தொடங்க உள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடையில் பணி புரிய ஒரு நபர் தேவைப்படுகிறார்.

தகுதிகள்:

1. படிப்பு: +2 வரை போதுமானது. அதற்குமேல் படித்திருந்தால் பழுதில்லை.
2. கணினியைப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும்.
3. எம்.எஸ் ஆபீஸ் பயன்படுத்தத் தெரிந்திருந்தால் முன்னுரிமை தரப்படும்.
4. வயது: 19 வயது முதல் 24 வயதுக்குள்

வேலை நேரம் குறிப்பிட்டுச் சொல்லமுடியாமல் இருக்கும். எனவே '9-5' வேலையை எதிர்பார்ப்பவர்கள் விண்ணப்பிக்கவேண்டாம்.

சம்பளம்: ரூ. 8,000/-

தொடர்புகொள்ள: hp@nhm.in
விண்ணப்பிக்கக் கடைசி நாள் 24 ஜூலை 2012

Monday, July 16, 2012

மத அடிப்படைவாதம்

எல்லா மதங்களுக்கும் சில புனித நூல்கள் உள்ளன. சில இறைத் தூதர்கள்/கடவுளின் மகன்/அவதாரங்கள் உள்ளனர். அந்த மதத்தைப் பின்பற்றுவோர் இந்த நூல்களையும் தூதர்களின் வாக்கியங்களையும் literal-ஆக, அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளின் அறுதி உண்மை என நம்பும்போதுதான் பிரச்னை எழுகிறது.

கிறிஸ்தவ பழைய ஏற்பாட்டை அப்படியே லிடரலாக எடுத்துக்கொண்டு உலகமும் உயிர்களும் தோன்றியது சுமார் ஐந்தாயிரத்தி சொச்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்று நம்புவோர் பலர் இருக்கின்றனர் (Young Earth Creationsists). எத்தனை அறிவியல் சான்றுகளை அவர்கள்முன் வைத்தாலும் அதற்குப் பலன் கிடையாது. பைபிள் என்பது கடவுளின் வார்த்தை. அதில் தவறு இருக்க முடியாது.

இஸ்லாத்தைப் பற்றிப் பேச்சே இல்லை. குரானும் ஹதீஸும்தான் முதன்மை ஆவணங்கள். அவற்றுக்கு வெளியே என்ன இருந்தாலும் அவற்றை நம்பவேண்டியதில்லை. காலிபா உமர், அலெக்சாண்ட்ரியாவில் உள்ள நூலகத்தை எரிக்க ஆணையிட்டதாகச் சொல்வார்கள். அவர் சொன்னாராம்: அந்தப் புத்தகங்கள் ஒன்று குரானில் உள்ளதைச் சொல்லியிருக்கும். எனவே அவை அழிந்தால் கவலையில்லை. அல்லது குரானுக்கு எதிரானதாக இருக்கும். அப்படியானால் அதை அழிப்பது முக்கியமாகிறது.

***

இந்தப் பதிவில் நான் பேச இருப்பது மேலே உள்ளவை பற்றியல்ல. மாறாக, வைணவ மத அடிப்படைவாதிகளைப் பற்றி.

தமிழக வைணவம் ஸ்ரீவைணவம் எனப்படுகிறது. ராமானுஜர் சம்பிரதாயம். இதுவும் வேதாந்த மதம் என்பதால், இதன் ஆதார நூல்கள் பிரஸ்தானத் த்ரயி எனப்படும் மூன்றான (1) வேத உபநிடதங்கள் (2) பிரம்ம சூத்திரம் (3) பகவத் கீதை. இவற்றுக்குமேல், ஸ்ரீவைணவத்துக்கு ஆழ்வார் பாசுரங்களான நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் சேர்த்தி.

இவற்றுடன் பல்வேறு ஆசாரியர்கள் எழுதியிருக்கும் உரைகள் (ஈடு), ஸ்லோகங்கள் ஆகியவையும் சேர்ந்து மிகப் பெரிய ஆவணத் தொகுதி ஒன்று உள்ளது. உரைகளிலேயே மிக முக்கியமானது ராமானுஜர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய ஸ்ரீபாஷ்யம். இதன்மூலம்தான் ராமானுஜர் விசிஷ்டாத்வைதக் கொள்கையை நிலைநாட்டினார். அத்துடன் அவர் எழுதிய வேதார்த்தசங்கிரகம், கீதாபாஷ்யம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துக்கு திருக்குருகைப்பிரான் பிள்ளை, நஞ்சீயர், அழகிய மணவாள ஜீயர், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றோர் உரைகளை எழுதியுள்ளனர். இவைதவிர பிள்ளை உலகாரியர், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனி போன்றோர் பல விளக்க நூல்களை எழுதியுள்ளனர். ராமானுஜருக்கு முன்னவரான ஆளவந்தார் எழுதியவையும் முக்கியமானவை.

மேலே சொல்லப்பட்ட தொகுதிதான் ஸ்ரீவைணவர்களால் இன்றுவரை படிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காலத்தால் இவற்றுக்கு முற்பட்டு, தமிழில் இயற்றப்பட்ட பரிபாடலும் ஆழ்வார்கள் காலத்துக்குப் பிற்பட்ட, ஆனால் உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்பட்ட கம்ப ராமாயணமும் வைணவ உரைகளில் எங்குமே காணப்படுவதில்லை. வால்மீகி ராமாயணத்திலிருந்து பக்கம் பக்கமாக மேற்கோள் காட்டும் பெரியவாச்சான் பிள்ளையின் காலத்துக்கு முன்பே கம்ப ராமாயணம் இயற்றப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஒரு வரியையேனும் நீங்கள் வைணவ உரைகளில் கண்டுவிட முடியாது.

திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலிருந்து பல சொற்றொடர்களை ஆழ்வார் பாசுரங்களில் நீங்கள் காண முடியும். முக்கியமாக சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலிருந்து.

ஆனால் அவை பற்றியும் வைணவ உரைகளில் எதுவும் இருக்காது.

***

நான் எம்.ஏ வைணவம் படிக்கிறேன். இரண்டாம் ஆண்டுக்கான முதல் வகுப்பு நேற்று நடைபெற்றது. சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ஒரு பாடம். அப்போது வகுப்பில் பெரிய விவாதம். வகுப்பை நடத்தும் ஆசிரியர், சிலப்பதிகாரத்தினால் ஆழ்வார்கள் உந்தப்பட்டு சில சொற்றொடர்களை அப்படியே கையாண்டுள்ளனர் என்று சொல்லிவிட்டார்.

இருக்கவே முடியாது என்று சில அன்பர்கள் வாதிட்டனர். ஆசாரியர்களால் ஏற்கப்படாத ஒரு பனுவலிலிருந்து ஆழ்வார்கள் inspiration பெற்றனர் என்று சொல்லிவிட்டால் அது ஆழ்வார்களுக்கு இழுக்கு. ஒருவர் ஒருபடி மேலே போய் திருவள்ளுவரும் இளங்கோ அடிகளும் ஆழ்வார் பாடல்களால் உந்தப்பட்டு தத்தம் பாடல்களை உருவாக்கினர் என்று ஏன் சொல்லக்கூடாது என்றார். அப்படிச் சொல்வதால் இளங்கோ அடிகளுக்கும் திருவள்ளுவருக்கும்தானே பெருமை என்றார்.

காலம் இடிக்கிறதே என்றார் ஆசிரியர்.

உண்மையில் ஆய்வாளர்கள் சொல்லும் காலம்தான் இடிக்கிறது என்றார் அந்த மாணவர். ஏனெனில் குருபரம்பரப் பிரபாவம் என்னும் பூர்வாசாரியர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின்படி, ஆழ்வார்கள் காலகட்டம் என்பது துவாபர யுகம், திரேதா யுகம் என்றெல்லாம் போகும். அதாவது பல்லாயிரம் ஆண்டுகள். அதைத்தான் ஆசாரியர்கள் நம்பினர். என்வே அதுதான் உண்மை. எனவே அதன்பின்னரே திருவள்ளுவர், இளங்கோ அடிகள் ஆகியோர் தோன்றியிருக்கவேண்டும். மேலும் நம்மாழ்வார் எந்தப் புத்தகத்தையுமே படித்திருக்க முடியாது. ஏனெனில் அவர் பிறந்ததிலிருந்தே யோக நிஷ்டையில் இருந்தார். பின் ஒரு நாளில் இறைவன் அருளால் அவருக்கு ஞானம் தோன்ற அவர் பாடத் தொடங்கிவிட்டார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி இளங்கோவையே திருவள்ளுவரையோ படித்திருக்க முடியும்? மேலும் இளங்கோவைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் எந்த வைணவ உரையாசிரியரும் ஒன்றுமே சொல்லவில்லையே? எனவே அவர்கள் எழுதியுள்ள நூல்கள் பிரமாணங்கள் ஆகா.

இந்த விவாதத்தில் மேற்கொண்டு இறங்குவது கடினம். ஸ்ரீவைணவ மரபின்படி பிரபத்தியை அடைய எம்பெருமான்மீது மகாவிசுவாசம் வேண்டும். அந்த மகாவிசுவாசத்தின் ஒரு பகுதி, ஆசாரியர்கள்மீதான விசுவாசம். அவர்கள் எக்காரணம் கொண்டும் தவறே இழைத்திருக்க மாட்டார்கள் என்னும் நம்பிக்கை.

இத்தகைய நம்பிக்கைக்கு மத்தியில்தான் பாவம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வைணவத்துறை, சிலப்பதிகாரம், பரிபாடல், கம்பராமாயணம் போன்றவற்றையெல்லாம் எம்.ஏ வைணவத்துக்குப் பாடமாக வைத்துள்ளது.

படிப்பது எம்.ஏ ஸ்ரீவைணவம் என்று பலரும் நினைத்துவிடுவதுதான் தவறே. பாடம் எம்.ஏ வைணவம்தான். வைணவம் என்பது இந்தியா முழுவதும் உள்ள பரந்துபட்ட ஒரு மதம். அதில் பல பிரிவுகள் உள்ளன. ஸ்ரீவைணவம் ஒரு பிரிவுதான். மத்வாசாரியரின் வைணவத்தில் ஆழ்வார்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கமாட்டார்கள். எந்தப் பிரிவிலும் மாட்டாத பரிபாடல் போன்ற சங்கப் பாடல்களும் கம்பராமாயணம் போன்ற காப்பியங்களும் உள்ளன. இவற்றையெல்லாம் படிக்க திறந்த மனம் தேவை.

வைணவத்தின் பிற பகுதிகளைப் படிப்பதற்கே திறந்த மனம் இல்லாதபோது மதங்களுக்கு இடையேயான பேதங்களை எப்படிப் படித்து, என்ன செய்து கிழிக்கப்போகிறோம்?

Sunday, July 15, 2012

மூன்றாம் உலகப் போர் - புத்தக வெளியீடு

வைரமுத்து விகடனில் தொடராக எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ 13 ஜூலை 2012 அன்று மாலை 6 மணிக்கு காமராசர் அரங்கில் புத்தகமாக வெளியானது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் ஜெயகாந்தன் முதல் படியை பெற்றுக்கொண்டார். நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்கினார்.

ஒரு புத்தகத்துக்கான வெளியீடு என்ற வகையில் இதைவிட பிரம்மாண்டமான, சிறப்பான வெளியீடு இருந்திருக்க முடியாது. வைரமுத்துவின் தரப்பிலிருந்து ஏற்பாடுகள் பிரமிக்கத்தக்கவகையில் இருந்தன.

விழாவில் கலந்துகொண்ட பிரமுகர்கள் அவரவர் துறையில் முன்னோடிகள். கேள்விக்கு இடமே இல்லாத வகையில் சிறப்பான சாதனை புரிந்தவர்கள். விழா நடப்பதற்கு முன்பிருந்தே முன்னேற்பாடுகள், முன்விளம்பரம் ஆகியவை பிரமாதமாக இருந்தன. தெருவில் தொடர்ந்து சுவரொட்டிகளைக் காண முடிந்தது. மூன்று வாரங்களாக வெவ்வேறு போஸ்டர்கள் படிப்படியாகத் தகவலைக் கூட்டிக்கொண்டே வந்து, ஆர்வத்தை அதிகரித்தன. இறுதி சில நாள்களில் பல இடங்களில் விளம்பரப் பலகைகளும் தென்பட்டன.

புத்தக வெளியீட்டுக்கு இரண்டு நாள்களுக்குமுன் தி ஹிந்துவில் ஒரு விரிவான பேட்டி இருந்தது. ஒரு நாள் முன்னதாக தினமணியில் புத்தகத்தின் முன்னுரையாக வைரமுத்து எழுதியிருந்தது வெளியானது. பிற பத்திரிகைகளை நான் புரட்டிப் பார்க்கவில்லை.

நிகழ்ச்சி நடக்கும் காமராசர் அரங்கில் மொத்த இருக்கைகள் 2,000-க்குச் சற்று குறைவு. ஆனால் 5.50-க்கு நான் உள்ளே நுழைந்தபோதே 2,000-க்கும் மேற்பட்டோர் நெருக்கு அடித்துக்கொண்டு நின்றனர். இதில் பலர் வைரமுத்துவின் வாசகர்கள் என்றாலும், கருணாநிதியைக் காண விரும்பிய திமுகவினர், நடிகர் கமல்ஹாசனின் அன்புக்குரிய ரசிகர்கள் ஆகியோரும் போட்டி போட்டுக்கொண்டு நெருக்கியடித்தனர்.

முதல் சில வரிசைகளில் திமுக மத்திய மந்திரிகள், ஸ்டாலின், முன்னாள் மாநில மந்திரிகள் பலர், முன்னாள் மேயர் சுப்பிரமணியன் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவின் இல.கணேசன் ஆகியோரும் தென்பட்டனர்.

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது. தமிழக மேடை, அதுவும் முக்கியமாக அரசியல் வாடை கலந்த மேடை என்றாலே மேடையில் உள்ளோரை உச்சபட்சமாக, எதுகை மோனையில் புகழ்வது வாடிக்கையாகிவிட்டது. இந்த துரதிர்ஷ்டமான வழக்கம் ஒரு காலத்தில் மாறக்கூடும் என்று நம்புவோம்.

புத்தகத்தை வெளியிட்டு, வேண்டிய புகைப்படங்கள் எடுக்க அனுமதித்தபின், பத்து வாசகர்கள் ஆளுக்கு ஒரோர் நிமிடம் கதையைப் பற்றிப் பேசுவார்கள் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்கள். ஓரிருவர் தவிர மிகுதி அனைவரும் நன்றாகவே பேசினார்கள். அதன் இறுதி வாசகராக விஜய் டிவி ‘நீயா நானா’ கோபிநாத் தோன்றி ஆச்சரியப்படுத்தினார்.

நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துரையைத் தொடங்கினார். மிகச் சுருக்கமான பேச்சு. ஆனால் நான் எதிர்பார்த்த பஞ்ச் அதில் இல்லை. அடுத்து பேசிய ஜெயகாந்தன் எழுத்தாளர்கள் பயமுறுத்துவதை விடுத்து வாசகர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் எழுதவேண்டும் என்று சொன்னது எனக்கு ஆச்சரியம் தந்தது. மேலும் புவி சூடேற்றம் என்ற கருத்தை ஜெயகாந்தன் நம்பவில்லைபோல இருந்தது அவரது சில வாசகங்கள்.

கருணாநிதி மிக விரிவாக எழுதி அச்சிட்டு எடுத்துவந்திருந்த 32 பக்க ஆய்வுரையைப் படித்தார். அவரது பேச்சுகளைத் தயாரித்துக் கொடுக்க ஆட்கள் இருப்பார்கள் என்றாலும் அதில் அவரது பங்களிப்பு பெருமளவு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அச்சடித்த அந்தக் கையேடு பலருக்கு வழங்கப்பட்டிருந்தது. அது இணையத்தில் விரைவில் காணப்படலாம். நிறையத் தகவல்கள் இருந்தாலும் ஒரு கதையை ஓர் அ-புதினத்தை ஆராயும் முறையிலா ஆராயவேண்டும் என்று தோன்றியது. பக்கம் பக்கமாக அவர் படித்தது இறுதியில் ஓரளவு ஆயாசத்தை எனக்கு ஏற்படுத்தியது. பிறருக்கு எப்படியோ. ஆனால் மிகுந்த உழைப்பு அந்த உரையில் இருந்தது என்பதை ஏற்கவேண்டும். சம்பிரதாயமாக, ‘இந்தப் புத்தகம் சிறந்தது, வாங்கிப் பயனடையுங்கள்’ என்ற மாதிரி இல்லாமல் இருந்தது சந்தோஷம்.

வைரமுத்துவின் உரை எப்போதும்போல ஆணித்தரமாக, சிறப்பாக இருந்தது. ஒரு புத்தகத்தைச் சிறப்பாக வெளியிட்ட திருப்தியும் அந்தப் பேச்சில் இருந்தது. ‘வெற்றித் தமிழர் பேரவை’ என்ற அவரது வாசகர் பேரவையினர்மீதான பெருமிதமும் வெளிப்பட்டது. வைரமுத்துவுக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப் பெரிய வாசகர் கூட்டம் இருக்கிறது. அதில் சிலர் இந்த விழாவுக்கென வந்திருந்தனர். பல இளைஞர்கள் ‘மூன்றாம் உலகப் போர் / வைரமுத்து’ என்று எழுதியிருந்த டி-சட்டைகளை அணிந்து சுற்றியபடி இருந்தனர்.

விழா முடிந்தபின், வாசலில் புத்தகம் விற்பனை செய்யப்பட்டது. ரூ. 300 விலையான புத்தகம் ரூ. 250-க்குக் கொடுக்கப்பட்டது. மொத்தம் 1,000 புத்தகங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டு, அனைத்தும் விற்றுப்போயினவாம். மேற்கொண்டு வாங்க விரும்பியவர்களை கடைகளுக்கு அனுப்பவேண்டியிருந்ததாம்.

இந்தப் புத்தகங்களை விநியோகிக்கும் இரண்டு நிறுவனங்களில் எங்களது நிறுவனமும் ஒன்று. (மற்றொன்று திருமகள் நிலையம்.) இப்புத்தகம் பெரும் எண்ணிக்கையில் விற்கும் என்று எதிர்பார்க்கிறோம். ப்ரீ-ஆர்டர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்துள்ளன.

புத்தகம் விகடனில் வெளியானபோது எத்தனை லட்சம் வாசகர்கள் இந்தக் கதையைப் படித்து வந்தார்களோ, அத்தனை லட்சம் பேர் இப்போது புத்தக வடிவிலும் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

புத்தகத்தை வாங்க: இணையத்தில்
போன்மூலம்: 94459-01234 (அ) 9445-979797

Wednesday, July 11, 2012

குழந்தையை மூத்திரம் குடிக்க வைத்தது தப்பில்லை - சுவாமி அக்னிவேஷின் உளறல்

நாட்டில் நடக்கும் எக்கச்சக்கமான பிரச்னைகளில் கடந்த சில நாள்களில் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மேற்கு வங்கத்தின் ஷாந்தி நிகேதனில் நடந்த ஒரு சம்பவம்.

ரபீந்திரநாத் தாகூர் உருவாக்கிய பள்ளி/கல்லூரி இது. ஜவாஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியைப் படிக்க அனுப்பிய பள்ளி இது.

படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டாள் என்பதால் பத்து வயதுச் சிறுமியை, அந்தச் சிறுநீரையே நக்கவைத்திருந்தார் அந்த ஹாஸ்டல் வார்டனான உமா போத்தார் என்பவர். விஷயம் பெரிதாகி, அந்த ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் குழந்தையிடம், அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மீண்டும் செல்கிறாயா என்று கேட்டாலே அதிர்ச்சியில் உடல் நடுங்குகிறது என்கின்றன செய்திகள்.

இதற்கிடையில் மிகவும் கௌரவத்துடன் இந்தியா எங்கும் வலம் வரும் சுவாமி அக்னிவேஷ், தன் திருவாய் மலர்ந்தருளி, அந்த ஹாஸ்டல் வார்டன் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். [தி ஹிந்து செய்தி]

அதாவது, அந்த வார்டன் வாயில் சிறுநீரைப் புகட்டவில்லையாம். கழுத்தைப் பிடித்து அழுத்தி சிறுநீரைக் குடி என்று சொல்லவில்லையாம். வெறுமனே வாயால் சொன்னாராம். அந்தக் குழந்தையாக இதனைச் செய்ததாம். பெற்றோர்கள் இந்த விஷயத்தைப் பெரிதாக்குகிறார்களாம்.

இதைக் காலையில் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் இதனை அக்னிவேஷ் defend செய்கிறார் என்று. பிறகு அடுத்த பத்திகள் புரியவைத்தன. அக்னிவேஷும் மொரார்ஜி தேசாய் போன்று தன் சிறுநீரைத் தானே அருந்துவாராம். அவருக்கும் படுக்கையை நனைக்கும் பழக்கம் இருந்து, தன் சிறுநீரைத் தானே அருந்துவதன்மூலம் குறைந்ததாம். எனவே இது நல்ல பழக்கம்தானாம்.

அக்னிவேஷும் மொரார்ஜி தேசாயும் என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டு போகட்டும். ஆனால் இங்கு நடந்தது என்ன? ஒரு குழந்தை மிரட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறுநீரை நக்கவைக்கப்பட்டுள்ளது. அதன் மருத்துவ குணங்கள் (உண்மையிலேயே அப்படி என்றால்!) இங்கு முக்கியமே அல்ல. அந்தக் குழந்தையின் மனம் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே ஹாஸ்டல் வார்டன் அந்தக் குழந்தையின் நன்மை கருதி அதனைச் செய்தார் என்றால் முதலில் குழந்தையில் பெற்றோர்களிடமிருந்து அனுமதி பெற்றுச் செய்திருக்கவேண்டும். பெற்றோர்கள் அனுமதி தந்திருந்தாலும், இந்த யூரின் தெரப்பியை பிறருக்குத் தெரியாவண்ணம் ரகசியமாகச் செய்திருக்கவேண்டும். அப்படியெல்லாம் செய்யாமல், ஒரு குழந்தையைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே இது செய்யப்பட்டிருக்கிறது என்பது குழந்தையின் சொற்களிலிருந்தே தெரியவருகிறது.

அண்ணா ஹஸாரே போராட்டம் சமயத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட அக்னிவேஷ், இப்போது மேலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

Monday, July 09, 2012

கேணி - கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன் ஒரு சந்திப்பு

பத்திரிகையாளர் ஞாநியும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் இணைந்து கேணி என்ற நிகழ்வை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை நடத்திவருகிறார்கள். தொடர்ந்து மூன்றாண்டுகளாக நடந்துவரும் நிகழ்வு இது. நான் இதுவரையில் மூன்றே மூன்று நிகழ்வுகளுக்குத்தான் போயிருக்கிறேன். கே.கே.நகரில் ஞாநியின் வீட்டின் பின்புறம் ஒரு கேணிக்கு அருகில் திறந்த வெளியில் மரங்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடல் நிகழ்ச்சி இது.


நேற்று நடந்த நிகழ்வில், உயிர்மை இதழின் ஆசிரியர், உயிர்மை பதிப்பகத்தின் பதிப்பாளர், கவிஞர் மனுஷ்யபுத்திரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் பேசிய சிலவற்றை மட்டும் நான் சிறு வீடியோ துண்டுகளாக எடுத்தேன். கீழே நீங்கள் காணப்போவது கொஞ்சம் மட்டுமே. அதற்குமேல் பல கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

இதுபோன்ற நிகழ்வுகளை அங்கே நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து வரும் பல நூறு வாசகர்களில் யாரேனும் தொடர்ச்சியாக ஒலி/ஒளிப்பதிவு செய்து இணையத்தில் சேர்க்கலாம். ஆனால் யாரும் செய்வதாகத் தெரியவில்லை.

***

மனுஷ்யபுத்திரனின் அறிமுக உரையிலிருந்து ஒரு பகுதி




நவீன கவிதைகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்விக்கு




எழுத்தாளனுக்கு ஏன் சமூகப் பார்வை இருக்கவேண்டும் என்ற கேள்விக்கு




உங்கள் கவிதைகள் புரிவதில்லையே என்பதற்கான பதில்




எழுத்தாளர் என்பவர் யார் என்ற கிளைக்கேள்விக்கு பதில். ஜெயமோகன்-மனுஷ்யபுத்திரன் மற்றும் சாரு நிவேதிதா-மனுஷ்யபுத்திரன் இடையேயான பிரச்னைகள் பற்றி. எழுத்தாளர்களுக்கான தளம் சுருங்குகிறதா என்பது பற்றி.




எழுத்தாளர்களுக்கான தளம் சுருங்குகிறது என்றால், அதனை எப்படி விரிவாக்குவது? எழுத்தாளர்களுக்கு இடையேயான உறவு.




தமிழ் இலக்கியத்தில் சுஜாதாவின் இடம் எது?




மார்க்ஸியம், கேபிடலிசம் தொடர்பாகப் பேசப்பட்ட பலவற்றை நான் பதிவு செய்யவில்லை.

இறுதியாக, கவிதை வாசிப்பு. ‘நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?’ என்ற கவிதை: