(நேற்று மாலை காந்தி ஆய்வு மையம், புதன் புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியது)
30 ஜூலை 2014 அன்று காலை 76 வயதான என் தந்தை இறந்துபோனார்.
அன்று மதியமே அவரை எரியூட்டினோம். அடுத்த நாள் காலை அவரது எலும்புகளைத் தேடி எடுத்துச்
சேகரித்தது ஞாபகம் இருக்கிறது. அவர் உடலை எரித்த அந்த நெருப்புதான் அவர் உடலில் பரவியிருந்த
கேன்சர் செல்களை முற்றிலுமாக அழித்திருக்கும்.
அவருக்கு நான்காண்டுகளுக்குமுன் வயிற்றில் (டுவோடினம்) கேன்சர்.
அவருக்குக் கேன்சர் என்று நாங்கள் கடைசிவரை சொல்லவே இல்லை. வயிற்றில் கட்டி என்று மட்டுமே
சொல்லியிருந்தோம். அதை அறுவை சிகிச்சையில் நீக்கி உலோக கிளிப் போட்டு வயிற்றைச் சுருக்கி,
குடலுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தபிறகு அவர் குணமடைந்துவிட்டார் என்றே நினைத்தோம்.
ஆனால் கேன்சர் அவ்வளவு எளிதான நோயல்ல. வயிற்றை அது பிறகு பாதிக்கவே இல்லை. முதுகுத்தண்டில்
சில பகுதிகளைப் பாதித்து சில துண்டுகளை முழுதாகக் கரைத்திருந்தது. அதனைக் கண்டுபிடிக்க
வெகு நாள்களானது. அவரால் ஒரு கட்டத்தில் நிற்க முடியவில்லை. அப்போதுதான் ஸ்பைனில் ஏதேனும்
பிரச்னையோ என்று பார்க்கப்போய் சிடி ஸ்கேன் தெளிவாக கேன்சர் பரவியிருந்ததைக் காட்டியது.
நல்லவேளையாக, இதைக் கண்டுபிடித்த ஒரு வாரத்துக்குள் அவரது ஆயுள் முடிந்துவிட்டது. முதுகெலும்பு
ஊடாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களை கேன்சர் பாதித்ததால் மூளைக்குச் செல்லும்
ரத்தம் நின்றுபோய் உயிர் போயிருக்கவேண்டும்.
வயிற்றில் புற்றுக் கட்டியை நீக்கியபின் கெமோதெரபி செய்யவேண்டும்
என்று மருத்துவர் சொல்லியிருந்தார். ஆனால் வீட்டில் நாங்கள் எல்லோரும் கலந்துபேசி அது
வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். 72 வயது. அவருடைய சுபாவமே மருந்தைக் கண்டால்
பயந்து ஓடுவது. உடல் உபாதைகளைத் தைரியமாக எதிர்கொள்ள அவரால் முடிந்ததில்லை. கெமோதெரபியை
அவர் கட்டாயம் எதிர்கொண்டிருந்திருக்க மாட்டார்.
***
நம் பலருக்கும் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஓர் உறவினர் இருப்பார்.
மருத்துவ முன்னேற்றம் அதிகமாவதால், ஆயுட்காலம் அதிகமாக அதிகமாக, கேன்சர் ஒன்றுதான்
நம் வாழ்வை முடித்துவைக்கக்கூடிய ஒன்றாக இருக்கப்போகிறது. கேன்சர் பற்றி நாம் அனைவரும்
அறிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.
(1) கேன்சர் என்பது எம்மாதிரியான நோய்?
நம் உடலில் பல ஆயிரம் வகையான செல்கள் உள்ளன. ஒவ்வொரு வகை
செல்லும் தினம் தினம் புதிதாக உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது. ஒரு செல் இரண்டாகப் பிரிந்து,
பின் அவை நான்காகப் பிரிந்து, இப்படியே இவை பெருகுகின்றன. ஆனால் இவை ஒருவிதமாக கொரியோகிராப்
செய்யப்பட்ட ஒழுங்கான நடத்தை கொண்டவை. ரசாயன சிக்னல்கள் இந்த செல்களின் பிரிவைக் கட்டுப்படுத்துகின்றன.
வேண்டிய அளவு செல்கள் உருவானதும் செல் பிரிவு நின்றுவிடும்.
ஆனால் ஜெனிட்டிக் மியூட்டேஷன் காரணமாக சில இடங்களில் தவறுகள்
நிகழ்ந்துவிடுகின்றன. மியூட்டேஷன் பற்றி சற்று விரிவாகப் பின்னர் சொல்கிறேன். இந்தத்
தவறின் காரணமாக, நமக்கு வேண்டாத செல்கள் சில உருவாகின்றன. அதுமட்டுமின்றி இவை படுவேகமாகவும்
கட்டுப்பாடே இன்றியும் பிரிந்து அதிகரிக்கத் தொடங்குகின்றன. விளைவுதான் கேன்சர் எனப்படும்
புற்றுநோய்.
இந்த மியூட்டேஷனை உருவாக்குவது எது? சிலவகை கேன்சர் மியூட்டேஷன்களை
நுண்ணுயிரிகளான வைரஸ்கள் உருவாக்கும். சில கேன்சர் மியூட்டேஷன்கள் நம் முன்னோர்களின்
கொடையாக நம் உடலிலேயே இருப்பவை. ரிசசிவ் ஜீன்களான இவை இரட்டையாக ஓர் உடலில் தோன்றும்போது
கேன்சர் நிகழ ஆரம்பிக்கும். இன்னும் பல நேரங்களில் நுரையீரலில் படியும் சிகரெட் கரி,
தார், வாயில் குதப்பும் புகையிலை, உடலுக்குள் செல்லும் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற கார்சினோஜென்கள்
நம் செல்களில் மியூட்டேஷனை ஏற்படுத்தி கேன்சரை உருவாக்கும்.
(2) கேன்சர் எங்கெல்லாம் வரலாம்?
ரத்தப் புற்றுநோய். தோல் புற்றுநோய். வயிறு, உடலின் உள் உறுப்புகள்,
மார்பகம், புராஸ்டேட், சிறுநீரகம், நுரையீரல், கருப்பை, சினைப்பை, பித்தப்பை, ஈரல்,
ஆசனவாய் என்று பல பகுதிகளிலும் புற்றுநோய் வரும்.
ரத்தத்தில் வரும் புற்றுநோய் மற்றவற்றிலிருந்து வித்தியாசமானது. இங்கு கட்டியாக ஒன்றும் இருக்காது. ரத்த வெள்ளை அணுக்கள் சரமாரியாக அதிகரிக்கத் தொடங்கும். இதனால் உடல் நிறம் வெளுக்கும். லுகேமியா என்று இந்த நோய்க்குப் பெயர். மிக அதிகமாக அதிகரிக்கும் முதிர்ச்சி அடையாத வெள்ளை அணுக்கள் ரத்தத்தின் சமநிலையைக் குலைத்துவிடும்.
பிற கேன்சர்கள் எல்லாம் திட வடிவமானவை. நண்டு போல் கிளை பரப்பிச்
செல்லும் என்பதனால்தான் கேன்சர் என்ற பெயர். கட்டி என்று பொருள்தரும் ‘ஆன்கோ’ என்ற
பெயரும் இதற்கு உண்டு. கரையான் புற்றுபோல் பல்கிக் கிளைப்பதால் இதற்குத் தமிழில் புற்றுநோய்
என்று பெயர் வைத்திருக்கிறோம்போல.
(3) புற்றுநோயிலிருந்து தப்பிக்க முடியுமா, முடியாதா?
அடையாறு கேன்சர் மருத்துவமனை வாசலில் உள்ள தட்டியில் “புற்று
நோய் தொற்று நோயல்ல. அதிலிருந்து தப்பிக்கலாம்” என்று எழுதியுள்ளது. இது முற்றிலும்
உண்மையல்ல. முக்கியமாக, ‘புற்று நோய்களுக்கெல்லாம் மருந்து இருக்கிறது, தப்பித்துவிடலாம்’
என்ற பொருள் இதில் வருகிறது. இது உண்மையல்ல.
சிலவகைப் புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால்,
சிகிச்சைக்குப் பின் பல ஆண்டுகள் உயிர் வாழலாம். ஆனால் முற்றி, பரவி, மெடாஸ்டேசிஸ்
ஏற்பட்டுவிட்டால், காப்பாற்ற முடியாது. பலவகைப் புற்று நோய்களை நாம் கண்டுபிடிப்பதற்குள்
காலம் கடந்துவிடும்.
பொதுவாக, புற்றுநோயைத் தீர்த்துக் கட்ட கீழ்க்கண்ட வழிமுறைகள்
உள்ளன.
ரத்தப் புற்றுநோய்க்குப் பெரும்பாலும் கெமோதெரபிதான் சிகிச்சை.
சிலவகை ரத்தப் புற்றுநோய்களின் செயல்பாட்டைத் தடுக்க மாற்று மருந்து உள்ளது (எல்லாவற்றுக்கும்
அல்ல.) இவ்வகை ரத்தப் புற்றுநோய்களில் சில என்சைம்கள் உருவாவதில்லை. எனவேதான் வெள்ளை
அணுக்கள் தாறுமாறாக உருவாகின்றன. எந்த என்சைம் உருவாவதில்லையோ அதனை உடலில் ஏற்படுத்திவிட்டால்
போதும். (கிட்டத்தட்ட டயபெடிஸுக்கு இன்சுலின் போட்டுக்கொள்வதுபோல.) ஆனால் இந்த மருந்தைச்
சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
பிற அனைத்துக் கேன்சரிலும் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவேண்டும்:
1. கட்டியை நீக்க ஆபரேஷன்
2. கெமோதெரப்பி
3. ரேடியோதெரப்பி
2. கெமோதெரப்பி
3. ரேடியோதெரப்பி
கட்டி மிகச் சிறிதாக இருக்கும்போதே கண்டுபிடிக்கப்பட்டால்
அல்லது கட்டியை ஆபரேஷன் செய்ய முடியாத இடமாக இருந்தால் நேராக கெமோதெரப்பிக்குச் செல்லவேண்டியிருக்கும்.
(4) கெமோதெரப்பிக்குமுன் மியூட்டேஷன் என்பதை என்னவென்று பார்த்துவிடலாம்.
அத்துடன் கேன்சர் மியூட்டேஷன்களை.
நம் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் அடிப்படை ஃபார்முலா, டி.என்.ஏ
எனப்படும். இது ஒரு நீண்ட பெரிய ரசாயன மூலக்கூறு. இதில்தான் நம் உடம்புக்குத் தேவையான
பல்வேறு புரதங்களையும் ரசாயனங்களையும் உருவாக்குவதற்கான குறிப்புகள் உள்ளன. இந்தக்
குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு நம் செல்கள் இந்த ரசாயனங்களைத் தயாரிக்கின்றன. ஆனால்
சில நேரங்களில், செல் பிளவு நடக்கும்போது டி.என்.ஏவைப் பிரதி எடுக்கும்போது ஒருசில
தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. இந்தத் தவறுகளை, மாற்றங்களைத்தான் மியூட்டேஷன் என்கிறோம்.
இவ்வாறு ஏற்படும் எல்லா மாற்றங்களும் கேன்சரை உருவாக்கா.
ஒருசில மாற்றங்கள் கேன்சர் ஆவதும் உண்டு.
ஒவ்வொரு செல்லிலும் பல கட்டுப்பாட்டு ரசாயனங்கள் உண்டு. செல்
பிரியவேண்டும் என்ற ஆணையைத் தெரிவிக்க ஒரு குறிப்பிட்ட ரசாயனம் தேவை. செல்கள் பிரிந்து
ஒரு குறிப்பிட்ட அளவு செல்கள் உருவானதும் உடனே இது ஆஃப் ஆகிவிடும். ஆனால் கேன்சர் மியூட்டேஷனில்
இது அடிபட்டுவிடும். ஒவ்வொரு கேன்சர் செல்லும், ‘இன்னும் பிரி, மேலும் பிரி’ என்று
தறிகெட்டு, பிரிந்து பிரிந்து ஒன்று மிகப் பலவாக ஆகும். நம் டி.என்.ஏவில் இருக்கும்
மற்றொரு ஜீன், டியூமர் சப்ரெஸர் ஜீன். இதன் வேலை, செல்கள் கொத்து கொத்தாக உருவாக்காமல்
தடுப்பது. எல்லா செல்களிலும் இருக்கும் இந்த ஜீனின் இரண்டு பிரதிகளும் மியூட்டேஷனில்
அடிபட்டால் அவ்வளவுதான். இந்த இரண்டு மியூட்டேஷன்களும் சேர்ந்து ஏற்பட்டால் கேன்சர்
உருவாகும். அதாவது முதலாவது ‘ஆக்சிலரேட்டர் ஜாம் ஆவது’. இரண்டாவது, ‘பிரேக் செயலிழந்துபோவது.’
இரண்டும் சேர்ந்து காரை ஆக்சிடெண்டில் கொண்டுபோய் விட்டுவிடும்.
(5) கெமோதெரப்பி என்றால் என்ன?
சிலவகை ரசாயனங்கள், செல் பிரிவதைக் கடுமையாகத் தடுக்கக்கூடிய
விஷங்கள். பலவித ஆராய்ச்சிகளின்மூலம் இம்மாதிரியான ரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றை கேன்சர் செல்கள்மீது இயக்கிப் பார்த்ததில் இவை கேன்சர் செல்கள் வேகமாகப் பிளந்து
பரவுவதைத் தடுக்கும் சக்தி கொண்டவை என்று கண்டறியப்பட்டன. ரத்தப் புற்றுநோய், மார்பகப்
புற்றுநோய், இன்னபிற புற்றுநோய்களுக்கு மிக முக்கியமான சிகிச்சை இந்த “விஷங்களே”. இவற்றை
குறிப்பிட்ட டோஸில் உடலுக்குள் செலுத்தினால் படுவேகமாகப் பிளந்து பரவிக்கொண்டிருக்கும்
கேன்சர் செல்களை இவை அழிக்கத் தொடங்குகின்றன. மேற்கொண்டு அவை பிரியாமல், பரவாமல் பார்த்துக்கொள்கின்றன.
ஆனால் அதே நேரம் நல்ல செல்கள் வளர்வதையும் இவை தடை செய்கின்றன.
கெமோதெரப்பி என்பது மிகவும் கடுமையான வைத்தியம். மனித உயிரைக்
கிட்டத்தட்ட அதன் எல்லைக்கே கொண்டுசென்று கேன்சரை மட்டும் அழித்து, உயிரை மீண்டும்
மீட்க உதவும் ஓர் அபாயகரமான சிகிச்சை. இதற்கு ஓரளவுக்கு நல்ல பலன் இருக்கிறது.
ஆனால் இன்றைக்கு கெமோதெரப்பிக்குப் பயன்படும் பல்வேறு மருந்துகளைத்
தாண்டி வளரும் கேன்சர்களும் உண்டு. எப்படி ஆண்டிபயாடிக் மருந்துகளைத் தாண்டிச் செழித்து
வளரும் நுண்ணுயிரிகள் உள்ளனவோ, அதேபோலத்தான் கேன்சருக்கு எதிர்ப்பு கெமோதெரப்பி மருந்துகளையும்
புதிது புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
ரேடியோதெரப்பி என்பது அதிக ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிரியக்கத்தை
கேன்சர் இருக்கும் பகுதிகள்மீது அடிப்பது. ஆரம்பத்தில் கதிரியக்கப் பண்பு கொண்ட ரேடியம்
போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இன்று எக்ஸ் கதிர்கள்தான். கெமோதெரப்பி சில சுற்றுகளை
முடித்தபின் ஒருசில சுற்றுகளுக்கு ரேடியோதெரப்பி நடக்கும்.
(6) கேன்சர் மருந்துகள் என்றால் என்ன? டயாபெட்டீஸ், ரத்த
அழுத்தம் ஆகியவை உடலில் இருக்கும்போது உயிர்வாழ சில மருந்துகளை உட்கொள்வதுபோல மருந்து
சாப்பிட்டே கேன்சரில் பிழைத்துவிட முடியாதா?
ஒரு குறிப்பிட்ட வகையான ரத்தப் புற்றுநோய்க்கு (க்ரோனிக்
மயலோஜீனஸ் லுகேமியா), க்லைவெக் என்ற மருந்து பயன்படுகிறது. இந்த வகைப் புற்றுநோய்,
சில என்சைம்களை ஊக்குவித்து செல் பிளப்பதை அதிகரிக்கிறது. க்லைவெக் மருந்தை உட்கொண்டால்
அது இந்த என்சைம்களைத் தடுத்து, ரத்தப் புற்றுநோயை நிறுத்துகிறது. சிலவகை வயிற்று கேன்சர்
கட்டிகளையும் க்லைவெக் தடுக்கிறது என்கிறார்கள்.
ஆனால் எல்லாவிதமான கேன்சருக்கும் இதுபோன்ற மருந்து இன்னமும்
வரவில்லை. இதுதான் எதிர்கால ஆராய்ச்சியில் நிகழும்.
====
சித்தார்த்தா முகர்ஜியின் புத்தகத்தை உண்மையில் கேன்சர் என்சைக்ளோபீடியா
என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் வறண்ட நடை கொண்டதல்ல. எடுத்தால் புத்தகத்தைக் கீழே
வைக்கமுடியாத அளவுக்கு சுவாரசியமானது.
அமெரிக்காவில் கேன்சர் ஆபரேஷன் செய்யும் ஆன்காலஜிஸ்ட் மருத்துவரான
இவர், தன் நோயாளி ஒருவர் கேட்டுக்கொண்டதன்பேரில் இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்திருக்கிறார்.
என் உடலில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த கேன்சர் என்னதான் செய்கிறது என்ற கேள்விக்கான
பதில் இவ்வளவு அருமையாக நம்மைப்போன்ற சாதாரணர்களும் புரிந்துகொள்ளக்கூடிய புத்தகமாக,
கேன்சரின் “வரலாறாக” ஆகியுள்ளது.
பொ.யு.மு 2500-ல் எகிப்தில் மருத்துவரான இம்ஹோடெப்புக்கு
புற்று நோய் பற்றித் தெரிந்துள்ளது. இதற்கு மருந்து கிடையாது என்பதுடன் அவருடைய சிகிச்சை
முடிந்துவிடுகிறது. பொ.யு.மு 500-ல் கிரேக்க ராணி அட்டோஸாவுக்கு மார்பகப் புற்று நோய்
வந்தது குறித்துப் பதிவுகள் உள்ளன. அதை அவர் தன் அடிமையைக் கொண்டு அறுத்து எடுக்கிறார்.
ஆனால் அதனால் அவரது உயிர் போவதைத் தடுக்க முடியவில்லை.
அடுத்து 18-ம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சைகள் ஆரம்பிக்கின்றன.
எதற்கும் பலன் கிடையாது. ஏனெனில் அறுத்து எறிந்தால் போய்விடப் போகிற நோய் அல்ல இது.
கேன்சர் செல்கள் உடலில் இருக்கும்வரை அவை ரத்தம் மூலம் வேறு இடங்களுக்குப் பரவி உடலை
அப்படியே அழித்துவிடும்.
20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் கெமோதெரப்பியும் ரேடியோதெரப்பியும்
நடைமுறைக்கு வருகின்றன. பின்னர் இந்தச் சிகிச்சை முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு பலரது
உயிர் காப்பாற்றப்படுகிறது. ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது.
இன்று ரத்தப் புற்றுநோயிலிருந்து பெரும்பாலும் ஒருவரைக் காப்பாற்றிவிடலாம்.
பெண்களுக்கு மிக அதிகமாக வருவது மார்பகப் புற்றுநோய். மாம்மோகிராம் மூலமாக இது வருகிறதா
இல்லையா என்பதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால்
கெமோதெரப்பி, ரேடியோதெரப்பி மூலம் சரி செய்துவிடலாம். கொஞ்சம் பரவினாலும் மாஸ்டெக்டமி
என்ற வகையில் மார்பகங்களை வெட்டி, கேன்சர் பரவிய இடங்களையெல்லாம் குடைந்து எடுத்து,
தொடர்ந்து கெமோதெரப்பி, ரேடியோதெரப்பி மூலம் பெரும்பாலும் காப்பாற்றிவிடலாம்.
வயதான ஆண்கள் பலருக்கும் வரும் புரோஸ்டேட் கேன்சர் அதிக அபாயங்கள்
இல்லாதது. பலர் தங்களுக்கு அந்த கேன்சர் இருப்பது தெரியாமலேயே இறந்தும் போகிறார்கள்.
சிகரெட் பிடிப்போருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான
வாய்ப்புகள் மிக அதிகம்.
பிறவகை கேன்சர்கள் எப்படி, யாரைத் தாக்கும் என்பது குறித்து
நமக்கு ஒன்றும் தெரியவில்லை. அது ஓரளவுக்குப் பரவிய பின்னரே நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது.
எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் ஆகியவற்றில் எங்கோ ஒரு மூலையில் உள்ள சிறு
கட்டியைக் கண்டுபிடிப்பது கடினம். கொஞ்சம் பெரிதாக ஆகும்போதுதான் அதைப் பார்க்கவே முடியும்.
அதன்பின் அது எப்படிப்பட்டது என்பதைப் பொருத்து ஆபரேஷன், கெமோதெரப்பி, ரேடியோதெரப்பி
ஆகியவை நிகழும்.
சில்வர் புல்லட்டாக அனைவரும் எதிர்பார்ப்பது க்லைவெக் போன்ற
அரும்பெரும் மருந்தை. அதை விழுங்கினால் அந்த மருந்து போய் மியூட்டேஷனுக்கு மாற்றான
செயலைச் செய்து கேன்சரை இல்லாமல் ஆக்கிவிடும் என்று. ஆனால் அம்மாதிரியான மருந்து நம்
வாழ்நாளுக்குள் சாத்தியமா என்று தெரியவில்லை. ஹியூமன் ஜீனோமை வகை செய்து தொகுத்ததுபோல்
மனித கேன்சர் ஜீனோமை வகைசெய்து தொகுக்கும் வேலையில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இந்த வேலை முடிந்துவிட்டால், குறைந்தபட்சம் ஒருவருக்கு வந்துள்ள கேன்சர் எந்த மியூட்டேஷனில்
வந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்கலாம். அதற்கடுத்து, இவற்றுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால்,
அவற்றைப் பரிந்துரைக்கலாம்.
இன்னும் எதிர்காலத்தில் மியூட்டேஷன் ஆன ஜீன்களை ரிப்பேர்
செய்யும் முறைகள் வரக்கூடும்.
ஆனால் இப்படியெல்லாம் சாவிலிருந்து தப்பித்து என்ன செய்யப்போகிறோம்
என்ற கேள்வியும் உள்ளது. முதுமை என்பதுதான் உள்ளதிலேயே மிக மோசமான நோய்.
***
The Emperor of All Maladies: A Biography of Cancer, Siddhartha Mukherjee