சமீபத்திய இட ஒதுக்கீடு மீதான ஒரு வழக்கின் தீர்ப்பு பற்றி அரசியல் கட்சிகள் சில பல கருத்துகளை முன்வைத்துள்ளன.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் சட்டமாக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஒன்று 'இந்திரா சாஹ்னி' வழக்கு (Indira Sawhney and others v. Union of India) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் 16 நவம்பர் 1992-ல் தீர்ப்பு வழங்கியது. எட்டு நீதிபதிகள் ஒருமித்தும், ஒருவர் எதிர்த்தும் தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பில், அரசுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் உள்ளது என்றும் ஆனால் அப்படிப்பட்ட அதிகாரத்தைச் சில கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அந்தக் கட்டுப்பாடுகள்: (1) மொத்த இட ஒதுக்கீடு 50%த் தாண்டக்கூடாது. (2) கிரீமி லேயர் எனப்படுவோர் இட ஒதுக்கீடு பெறுவோர் பட்டியலில் இருக்கக்கூடாது. (அதாவது கிரீமி லேயருக்குள் தான் இல்லை என்று ஒருவர் சான்றிதழ் வாங்கி வைத்திருந்தால்தான் இட ஒதுக்கீடு அவருக்குக் கிடைக்கும். கிரீமி லேயர் என்றால் என்ன என்பதை வரையறுக்க மத்திய, மாநில அரசுகள் குழுக்களை அமைக்கவேண்டும்.)
அத்துடன் இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட மற்றும் ஒரு விஷயம் - இட ஒதுக்கீடு என்பது ஒருவர் படிப்பில் சேரும்போதோ அல்லது வேலையில் சேரும்போதோ கொடுக்கப்படவேண்டும்; அதற்குப் பிறகு மேற்கொண்டு பதவி உயர்வு ஆகியவற்றில் கொடுக்கப்படக்கூடாது.
இந்தத் தீர்ப்பு வரும் வரையில் SC/ST பிரிவினருக்கு கல்வி, வேலை, பதவி உயர்வு ஆகியவற்றுக்கு இட ஒதுக்கீடு இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு, SC/ST பிரிவினருக்குக் கொடுக்கப்பட்டு வந்த பதவி உயர்வை பாதிப்பதாக இருந்ததால் இந்திய அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 77வது சட்டத் திருத்தம் மூலம் Article 16 (4A) என்ற சேர்க்கையைக் கொண்டுவந்தது (1995). இதன்மூலம் SC/ST பிரிவினருக்கு வேலையில் பதவி உயர்வையும் இட ஒதுக்கீடு மூலம் கொடுக்கலாம்.
Amendment of Article 16. - In Article 16 of the Constitution, after clause (4), the following clause shall be inserted, namely:-
(4A) Nothing in this Article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of the State, are not adequately represented in the services under the State.
ஆனால் இதைத் தொடர்ந்து, பதவி உயர்வு கொடுத்தபின்னர் சீனியாரிட்டியை எவ்வாறு கணக்கிடுவது என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதாவது அரசுப் பணியில் ஆரம்ப நிலையில் 1000 பேர் பலப் பல நேரங்களில் சேர்கிறார்கள். அதில் 170 பேர் SC/ST, 830 பேர் பிறர். அடுத்து 100 பேருக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது. இதில் SC/ST வகுப்பினர் 17 பேர், பிறர் 83 பேர். 77வது சட்டத் திருத்தத்தின்படி ஜூனியரான ஒரு SC/ST வகுப்பினரும், அவரைவிட வருட அனுபவர் அதிகம் இருக்கும் பல பொதுவகுப்பினர் இருந்தாலும் பதவி உயர்வு பெறுகிறார். ஆனால் அடுத்த நிலையில் உள்ள 100 பேருக்கு அதற்கடுத்த நிலைக்கான பதவி உயர்வு வரும்போது மீண்டும் அந்நிலையில் உள்ள சீனியாரிட்டி மட்டுமே கவனிக்கப்படுமா அல்லது fast track முறையில் வந்த SC/ST வகுப்பினருக்கு எந்த சீனியாரிட்டி கொடுக்கப்படும் என்று கேள்வி எழுந்தது.
மற்றொரு பிரச்னையும் எழுந்தது. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் SC/ST, பிற்படுத்தப்பட்டோர் இடங்களை நிரப்புவதில் தேவையான ஆள்கள் கிடைக்காவிட்டால் அந்த இடங்கள் அடுத்த வருடத்தில் சேர்க்கப்பட்டன. இப்படிச் சேர்க்கும்போது அடுத்த ஆண்டில் SC/ST, பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் மொத்த இடங்களில் 50% தாண்டின. இந்திரா சாஹ்னி வழக்கு தீர்ப்பில் எந்த ஓர் ஆண்டிலும் இட ஒதுக்கீடு 50%த் தாண்டக்கூடாது என்றதன் காரணமாக SC/ST இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டது.
எனவே அரசியல் அமைப்புச் சட்டத்தில் மற்றொரு திருத்தம் - 81வது சட்டத் திருத்தம் - செய்யப்பட்டது (2000). இது Article 16 (4A)-ல் ஒரு மாற்றத்தையும், Article 16 (4B) என்ற புதிய சேர்க்கையைக் கொண்டுவந்தது.
Amendment of Article 16.-
In Article 16 of the Constitution, in clause (4A), for the words "in matters of promotion to any class", the words "in matters of promotion, with consequential seniority, to any class" shall be substituted.
...
In Article 16 of the Constitution, after clause (4A), the following clause shall be inserted, namely: -
(4B) Nothing in this Article shall prevent the State from considering any unfilled vacancies of a year which are reserved for being filled up in that year in accordance with any provision for reservation made under clause (4) or clause (4A) as a separate class of vacancies to be filled up in any succeeding year or years and such class of vacancies shall not be considered together with the vacancies of the year in which they are being filled up for determining the ceiling of fifty per cent reservation on total number of vacancies of that year.
மற்றுமொரு வழக்கில் (வினோத் குமார் வழக்கு) இட ஒதுக்கீடு தொடர்பான தரக்கட்டுப்பாட்டில் SC/ST பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் குறைவாக இருந்தாலே போதும் என்பது செல்லாது என்றும், இது Article 335-க்கு எதிரானது என்று தீர்ப்பு கிடைத்தது. Article 335 என்ன சொன்னது?
335. Claims of Scheduled Castes and Scheduled Tribes to services and posts.-
The claims of the members of the Scheduled Castes and Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenance of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with the affairs of the Union or of a State.
அதாவது SC/ST பிரிவினருக்குக் கொடுக்கப்படும் எந்த இட ஒதுக்கீடும் அரசு வேலைகளில் எந்தத் தரக்குறைவும் செயல்நேர்த்திக் குறைவும் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதைச் சரிக்கட்ட அரசியல் அமைப்பில் 82-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது (2000).
By the Constitution (Eighty-Second Amendment) Act, 2000, a proviso was inserted at the end of Article 335 of the Constitution which reads as under:
"Provided that nothing in this article shall prevent in making of any provision in favour of the members of the Scheduled Castes and the Scheduled Tribes for relaxation in qualifying marks in any examination or lowering the standards of evaluation, for reservation in matters of promotion to any class or classes of services or posts in connection with the affairs of the Union or of a State."
இப்படியான மூன்று சட்டத் திருத்தங்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே அசைக்கின்றனவா, இம்மாதிரியாக அரசியலமைப்புச் சட்டங்களை மாற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளதா இல்லையா என்பதுதான் நாகராஜ் மற்றும் பிறர் Vs இந்திய யூனியன் வழக்கு, 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கான தீர்ப்புதான் 19 அக்டோபர் 2006 அன்று வெளியானது.
இந்தத் தீர்ப்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச், நாடாளுமன்றத்துக்கு மேற்படி அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர உரிமை உண்டு, இந்தச் சட்டத் திருத்தங்கள் செல்லும் என்றது.
முக்கியமாக, இந்தச் சட்டத் திருத்தங்கள் கீழ்க்கண்ட எவற்றையாவது பாதிக்கிறதா என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்:
(1) the ceiling-limit of 50% (the numerical benchmark)
(2) the principle of creamy layer
(3) the compelling reasons, namely, backwardness, inadequacy of representation
(4) overall administrative efficiency
இந்த நான்கும் மேற்குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களால் பாதிக்கப்படவில்லை என்பதால் சட்டத் திருத்தங்கள் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால் அத்துடன், அவர்கள் கீழ்க்கண்டதையும் சொல்லியுள்ளனர்.
Social justice is concerned with the distribution of benefits and burdens. The basis of distribution is the area of conflict between rights, needs and means. These three criteria can be put under two concepts of equality, namely, "formal equality" and "proportional equality". Formal equality means that law treats everyone equal. Concept of egalitarian equality is the concept of proportional equality and it expects the States to take affirmative action in favour of disadvantaged sections of society within the framework of democratic polity. In Indra Sawhney all the judges except Pandian, J. held that the "means test" should be adopted to exclude the creamy layer from the protected group earmarked for reservation. In Indra Sawhney this Court has, therefore, accepted caste as determinant of backwardness and yet it has struck a balance with the principle of secularism which is the basic feature of the Constitution by bringing in the concept of creamy layer. Views have often been expressed in this Court that caste should not be the determinant of backwardness and that the economic criteria alone should be the determinant of backwardness. As stated above, we are bound by the decision in Indra Sawhney. The question as to the "determinant" of backwardness cannot be gone into by us in view of the binding decision.
பின்தங்கிய வகுப்பு என்பதைத் தீர்மானிக்க ஜாதியை அளவுகோலாக வைக்கலாம் என்பதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆனால் இந்திரா சாஹ்னி வழக்கில் பிற்படுத்தப்பட்டவர் என்றாலும் கிரீமி லேயர் (பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்தாலும் முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு சமமான சமூக, பொருளாதார நிலையை அடைந்துள்ளவர்) எனப்படுவோர் இட ஒதுக்கீடு பெற முடியாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கின் தீர்ப்பாக அனைத்து இட ஒதுக்கீடுகளிலும் 50% உச்சவரம்பு, கிரீமி லேயர் விலக்கு ஆகியவை இருக்கவேண்டும் என்று சொல்லியுள்ளனர். இதுகூட இந்த வழக்கின் தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே 1992-ல் கொடுக்கப்பட்டுள்ள இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பின் மேற்கோள்தான். இந்த வழக்கின் நோக்கமே மத்திய அரசு கொண்டுவந்திருந்த சில சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகுமா ஆகாதா என்பதைக் கண்டறிவது. இதில் மத்திய அரசுக்குச் சாதகமாகத்தாண் தீர்ப்பு வந்துள்ளது.
ஆனால் இதுநாள்வரையில் நடைமுறையில் SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் தவிர்ப்பு என்ற ஒன்று இருந்ததில்லை. 19 அக்டோபர் 2006 தீர்ப்பு இதைப் புதிதாகப் புகுத்தவும் இல்லை. ஆனால் இனி யாரேனும் வழக்கு தொடர்ந்தால், இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு (1992), நாகராஜ் வழக்கின் தீர்ப்பு (19 அக்டோபர் 2006) ஆகியவற்றை வைத்து கிரீமி லேயர் SC/ST பிரிவினருக்கும் செயல்படுத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
இந்த ஒரு கேள்வியை மட்டும் 5 நீதிபதிகள் அடங்கிய மற்றுமொரு அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் ஒன்றுக்கு மத்திய அரசு அனுப்பலாம். அல்லது இந்திரா சாஹ்னி வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமர்ந்திருந்ததால் 9 ஜட்ஜ்கள் அடங்கிய பெஞ்ச் ஒன்றைக் கூட்டலாம். அல்லது மத்திய அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தில் மற்றுமொரு சட்டத்திருத்தம் கொண்டுவரலாம். Article 16 (4A), Article 16 (4B) ஆகியவற்றில் "without a need for creamy layer" என்பதைச் சேர்க்கலாம்.
இதை விடுத்து உச்ச நீதிமன்றம்மீது தேவையின்றிப் பழிகூறுவது, அரசியல் அறிக்கைகளை விடுவது, விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் செய்ய விரும்புவது ஆகியவை தேவையற்றவை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் முழுமையாக இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருந்தால் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் கேட்டால் விளக்கிவிடுவார்கள்.